நினைவு நல்லது வேண்டும்! (2)

முனைவர் நா. சங்கரராமன்

2. உறவுகளைப் பேணுங்கள்

Man on top of mountain. Conceptual design.
Man on top of mountain. Conceptual design.

“சார் எங்க இருக்கீங்க. ஒரு பெரியவரு உங்கள பாக்கணும் சொல்றாரு. அழுதுகிட்டே நிக்குறாரு. எதுவும் சொல்ல மாட்டேங்குறாரு. கஷ்டமா இருக்கு” கல்லூரி அலுவலர் ஒருவர் அலைபேசியில் அழைத்தபோது நான் ஊரில் இருந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“அலைபேசியை பெரியவரிடம் கொடுங்க ” என்று சொல்லிவிட்டு பேசினால் எதிர்முனையில் இருந்து விம்மல் சத்தம் மட்டுமே கேட்டது. அப்படியே அவருக்கு நான் ஊரில் இருக்கும் விஷயத்தையும் மறுநாள் வந்துவிடுவேன் வாருங்கள் என்றும் சொல்லிவிட்டு அழைப்பினை துண்டித்தேன். என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை. அழகிரிசாமி அவர்களின் விடியுமா கதையில் வருவது போன்ற ஒரு பயணத்தில் மறுநாள் கல்லூரி வந்ததும் என்னை வாசலிலே காத்திருந்து கட்டியனணைத்தார் பெரியவர் ஒருவர். எனது புகைப்படம் மற்றும் நெற்றி நாம அடையாளங்களை முதன் நாள் வாங்கிச் சென்றது பின்னரே தெரிய வந்தது. மாணவர்கள் மத்தியில் திடீரென ஒரு பெரியவர் கட்டி அணைத்ததும் என்னவென்றே புரியாத நிலை ஆனால் மனம் இனம்புரியாத ஒரு கனத்தோடு… அவரை அழைத்து கல்லூரி உணவு விடுதியில் அமர வைத்து அவரின் அழுகை நின்றதும் தேநீர் பருகச் சொல்லிவிட்டு விசாரித்தேன் . “தம்பி நான் பல்லக்கா பாளையம். எனக்கு ரெண்டு பசங்க கல்யாணம் பன்னி வச்சேன். சந்தோசமா இருக்காங்க. கெழவி செத்ததும் கொஞ்சம் இருந்த நிலத்தையும் வித்துடு பா. நாங்க பாத்துக்கிறோம் சொன்ன பசங்கள நம்பி எல்லாத்தையும் வித்திட்டு அவங்களோட போயிட்டேன். கொஞ்ச நாளுல ரெண்டு பேருமே என்னை பாரமா நெனைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு நா முன்னாடி சண்டை பெரிசா வந்து “எங்காவது போய் சாக வேண்டியதுதானே ? ஏன் உசிர வாங்குறேனு திட்டிட்டாங்க. கோபமா வெளியே வந்து சாப்பிடக்கூட வழியில்லாம சாகலாம்னு முடிவெடுத்து குவார்ட்டர் வாங்கி அதில விஷம் குடிச்சு கதய முடிக்கலாம்னு இருந்தேன். டீக்கடைல இருக்கும் போது உங்க பேச்சு “தற்கொலை வேண்டாமே “அப்படினு உங்க காலேஜ் (எஸ் .எஸ் .எம் ) எப்.எம்ல கேட்டேன். நல்லா இருந்தது. இருவது நிமிஷம் பேசினீங்க. எனக்கு பேசுன மாதிரியே இருந்தது. அப்படியே பாட்டில தூக்கி போட்டுட்டு உக்காந்தேன்.கொஞ்ச நேரத்துல என் பசங்க வந்து மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. அவங்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது.நீ சொல்ல வேணாம் வருத்தப்படுவாங்க வேற எங்காவது சொல்லணும் தோணினா சொல்லு எனக்கு சந்தோசம் . உன்ன பாத்து கட்டி அணைச்சுக்கணும்னு தோணிச்சு அதான் நேத்து வந்தேன். இப்ப எனக்கு சந்தோசம்யா …நீ நல்லா இருக்கணும் ” என்று வாழ்த்தி விட்டு விடை பெற்றார்.

என் கண்ணில் நீர் சொரிய ஆரம்பித்தது.

இது நடந்தது 2012ம் வருடம். நம்பிக்கை கதைகளையும் நம்பிக்கை சார்ந்த செய்திகளையும் போடுவதற்கும் பேசுவதற்கும் இந்நிகழ்வு ஒரு காரணம். அவ்வப்போது பேசி அவர் கடந்த மாதம் உடல் உபாதையினால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவர் இறுதிச் சடங்கில் நான் யாரென்றே சொல்லாமல் நெருடலில்லாமல் பங்கேற்று மகன்களுக்கு ஆறுதல் சொல்லி வெளியேறினேன்.. யாரையும் மாற்றுவதற்காக எழுத வேண்டும் நம்பிக்கையோடு எழுதுவோம் யாரோ ஒருவர் உங்கள் எழுத்துக்களுக்காக காத்திருப்பார்.

நம்பிக்கையோடு பேசுங்கள்
யாரோ ஒருவர் உங்கள் பேச்சுக்காக காத்திருப்பார்
நம்பிக்கையோடு …

நம்மிடம் நம்முடைய பெற்றோர்களும் உறவுகளும் எதிர்பார்ப்பது அன்பான வார்த்தைகளையும் ஆறுதல்களையுமே ஆகும் . அவர்களை மதிக்க தொடங்கும்போதே நாம் உயர ஆரம்பித்து விடுகிறோம் . ஒவ்வொரு முறையும் நம்முடைய உயர்வுக்கும் நன்மைக்குமே போராடும் அவர்களை நாம் நம்முடைய இதயத்திலே வைத்து அன்பு பாராட்ட வேண்டும் . அவர்களை நாம் பார்த்துக்கொள்வதை நம்முடைய குழந்தைகள் பார்க்கும் . உண்மையிலே நம்முடைய சிறந்த பண்புகளை நமக்குப்பின்னர் வரும் நம்முடைய சந்ததியினருக்கு பரப்ப வேண்டும்

அன்பால் வெல்வோம் உலகை ….

சதா பாரதி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க