அனுமன் அறுபது (ஒரு கவிதை மாலை) (6)
க. பாலசுப்பிரமணியன்
ஆறாம் பத்து
சுவைத்து சுவைத்து சுவையை மறக்கும்
சொல்லிடும் சொல்லின் சொந்தத்தைத் தவிர்க்கும்
வல்லினம் மெல்லினம் நல்லினமறியா நாவினில்
சொல்லின் செல்வனே ! வல்லமை தந்திடு !
வித்தகன் சத்தியன் விருப்பங்கள் வென்றவன்
நித்தியம் இராமனை நினைவினில் வைத்தவன்
புத்தியில் பூரணன் சக்தியில் வல்லவன்
பக்தியில் இமயம் பாதங்கள் சரணம் !
விதியின் வலியினைக் குறைக்கும் மருந்து
மதியினைக் காக்கும் அமுதுடை விருந்து
கதியென வந்தோர் களிப்புறும் கரும்பு
இனியிலை கவலை நின்னருள் சிறப்பு !
யோசனை தூரங்கள் எளிதில் கடந்தும்
ஆசனம் தேடா அரும்பெரும் தெய்வம்
யாசகம் கேட்டு உன்னிடம் வந்தேன்
சாகசம் செய்யாது சடுதியில் அருள்வாய் !
பூசைகள் யாகங்கள் புனலும் வேண்டா
புண்ணிய மூர்த்தி புலன்களைக் காப்பாய்
ஆசைகள் அனைத்தையும் அறுத்திட வேண்டி
அடிகள் பணிந்தேன் அன்புடன் அருள்வாய் !
வணங்கிட உன்னை வார்த்தைகள் இல்லை
வாழ்த்திடப் போற்றிட மொழிகள் இல்லை
காற்றினில் உலகைக் கடந்திடும் தேவா
கனிவுடன் முன்னே கைகள் குவித்தேன் !
வரங்கள் ஆயிரம் வேண்டாம் எனக்கு
வரவாய் வேண்டும் உந்தன் அருளே !
வாடிய நேரத்தில் விரைந்தே வருவாய்
வாடா மலராய் நெஞ்சினில் மலர்வாய் !
கூப்பிய கைகள் குவிந்தே நிற்கும்
குலத்தின் நலத்தை விழைந்தே நிற்கும்
கோணிய உறவுகள் நேர்நிலை பெற்று
குவலயம் சிறப்புற குரலினை எழுப்பும் !
நாடினேன் உன்னையே நாசியின் மூச்சாய்
நிறைந்திடு உறைந்திடு உறுதியில் உணர்வினில்
நரம்பினில் தசையினில் நலமுடை நெஞ்சினில்
குருதியில் குடலினில் குறைவின்றி நினைவினில் !
கண்களில் நிற்ப்பாய் கலங்கரை விளக்காய்
காரிருள் நீக்கியே கதிரவன் ஒளியாய்
காலங்கள் வைத்தேன் காலடி முன்னே
காத்திட வருவாய் ! கருணா மூர்த்தி !

