-முனைவர் இராம. இராமமூர்த்தி

”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”, என்பார் ஔவையார். இறைவன் படைப்புக்களுள் மனிதப்பிறவியே சிறப்புடையது. மனிதன் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன். இத்திறனையே பகுத்தறிவென்றும், ஆறாமறிவென்றுங் கூறுவர். ஏனைய உயிரினங்களினின்றும் மனிதனை வேறுபடுத்துவது இவ்வாறாம் அறிவேயாகும். இதனாலேயே தொல்காப்பியரும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே”, எனக் கூறுவாராயினர். இப்பகுத்தறிவின் பயனால் அமைவதுவே நற்பண்புகள், நற்செயல்கள் எல்லாம். நற்பண்புகளையே மனிதப் பண்புகளெனப் புகழ்ந்துகூறுவர்.

திருக்குறள் பல நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றது. ஒட்டுமொத்தமாகப் ’பண்புடைமை’ என்ற பெயரானேயே நற்பண்பு சுட்டப்பெறுகின்றது. நற்பண்புகளுள் ஒன்றாக நாணம் சுட்டப்பெறுகின்றது. அதுவே ’நாணுடைமை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நாணமென்றால் என்ன? மகளிரின் இயல்பாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென நாற்குணங்களைச் சுட்டுவர். மகளிரின் குணமாகிய நாண் என்பதற்குக் “காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்” என்பர் நச்சினார்க்கினியர்.

ஆனால் நாம் இங்குக் கூறவந்த நாணம் மகளிர்க்கு மட்டும் உரியதன்று; ஆடவர் பெண்டிர் இருவர்தம் நல்வாழ்விற்கும் தேவைப்படுமொன்றாம்.  நாணம் என்ற சொல்லிற்குத் ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யாமை’ என்பர் இளம்பூரணர். இதனையே திருவள்ளுவர் ஈண்டுக் கையாளுகின்றார். நல்லமனிதர் பழிச்செயல்களைச் செய்யப் பெரிதும்  அஞ்சுவர். பழிபாவங்கட்கு நாணுவதே – செய்ய விரும்பாமையே பெரியோர் செயலாகும். மிகப்பெரிய செல்வமே கிடைப்பதாயினும் – ஏன் இவ்வுலகமே தமக்குப் பரிசாகக் கிடைப்பதாயினும் – பழிவருவதற்குக் காரணமான இழிசெயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யமாட்டார். புறநானூற்று அரசப்புலவரான கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, சான்றோரின் இக்குணத்தையே, “புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்” எனக் கூறுவார். ”கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” என்பது ஆவூர் கிழாரின் அமுதமொழி.

பழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். இத்தகைய நாணமே, வள்ளுவர் கூறும் நாணுடைமையில் இடம்பெறுவதாகும். மனிதர்க்குச் சிறப்புத் தருவது அவரணியும் ஆடம்பரமான உடைகளோ, அறுசுவை உணவோ அல்ல. இதனையே நாலடியார்,
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல என அழுந்தக் கூறும். புறத்தில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரத்தால் ஒருவர் சிறப்பெய்துவதில்லை. அவரது நற்பண்பே அவருக்குப் பெருமை தரும். அண்ணல் காந்தியடிகளுக்கு அவரது ஆடை அணிகலன்களாப் புகழைத் தந்தன? அவரை அரைநிர்வாணப் பக்கிரி (half naked fakir) எனக் கேலிமொழி பேசியவர்கள் உண்டு. அண்ணல் காந்தியடிகளின் நயத்தக்க நாகரிகப் பண்பே அவரை மகாத்மாவாக மாற்றியது; உலக உத்தமர் என்ற பாராட்டைப் பெற்றுத்தந்தது.

சாதாரண மனிதனை நாடுபாராட்டும் சான்றோனாக்க நாணுடைமையே – பழியஞ்சும் மனப்பான்மையே – மிகப்பெரிய காரணம் எனத் திருக்குறள் கூறுவது இயல்புதானே?

அதனாற்றான்,
“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
டைந்துசால் பூன்றிய தூண்”, எனக் கூறுமாற்றான் சான்றாண்மைக்குத் தேவைப்படும் நற்பண்புகளுள் நாணுடைமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது.  இதனாலேயே, பண்டைநாளை மன்னர்களும் தவறாது அறச்செயல்களைச் செய்துவந்தனர். மனுநீதிச்சோழன் வரலாறும், பொற்கைப்பாண்டியன் வரலாறும் அம்மன்னர் பெருமக்கள் பழிக்கு அஞ்சித் தன்மகனைத் தேரூர்ந்தமையும், தன்கை குறைத்த செயலையும் எடுத்தியம்புகின்றன அல்லவா? நெடுங்கிள்ளி, போருக்கும் வாராமல் கோட்டையையும் திறவாமல் இருந்த செயலைக்கண்ட புலவர் கோவூர் கிழார், இச்செயல் நாணுத் தகவுடைத்து – நாணத்திற்குரிய செயல் – எனக்கூறி யிடித்துரைக்கவில்லையா?

அது மட்டுமா? திருவிளையாடற் புராணத்தில் “பழியஞ்சின படலம்” என்ற தலைப்பில் ஒரு திருவிளையாடலமைந்துள்ளது. அப்படலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு வரவிருந்த பழியை இறைவன் காத்தருளிய அருட்செயலே எடுத்துரைக்கப்படுகின்றது. அற்றைநாளில், செய்யத்தகாத செயல்களென, பழிதரூஉஞ் செயல்களென ஒருபட்டியலே தரப்பட்டுள்ளது. அவற்றுள், மது உண்ணுதல், புறங்கூறுதல், பொய்ச்சாட்சி கூறல், பிறனில் விழைதல், போரிற் புறமுதுகிட்டோடல் போல்வன சிலவாம். சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய வரந்தரு காதையில் கொள்ளவேண்டியவை, தள்ளவேண்டியவை குறித்து இளங்கோவடிகள் ஒரு நெடிய பட்டியலை யமைத்துள்ளார். ”பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்” என நீளுகின்றது அப்பட்டியல்!

இதனை நோக்க, செய்யத்தக்க செயல்கள், செய்யத்தகாத செயல்களென அவர்கள் பிரித்திருந்த தன்மையை யறியலாம். “செய்தக்க அல்ல செயக் கெடும்” எனத் திருவள்ளுவர் மொழிவதும் இஃதே!

ஆகவே, நல்வாழ்வு வாழ, நற்செயல்களைச் செய்யும் பண்பு வேண்டும்; பழிச்செயல்களைத் தவிர்க்கும் பண்பு அதனினும் வேண்டும் என்பதனைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கறிந்திருந்தனர். அறிந்ததோடமையாமல், அச் செயல்களைத் தம் வாழ்விற் பின்பற்றியும் வாழ்ந்தமையால் வசையின்றி இசையோடு இலங்கியது அவர்தம் வாழ்வு!

எனவே நண்பர்களே! வாழ்வு சிறக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலம் நாணுடைமை எனும் நற்பண்பாகும். அப் பண்பின் பெற்றியை விளக்கும் குறள்மணிகள் சில…

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. (1014)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
(1017)

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.
(1020)

குறள்காட்டும் இச்சீரிய கருத்துக்கள் ஞானச்சுடரை நம்முள் ஏற்றட்டும்! ஞாலம் போற்றும் நல்வாழ்வை நமக்கு நல்கட்டும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.