எஸ் வி வேணுகோபாலன்

4db55585-58f7-4be0-943e-c1e7e8d2b75a
வெயிலால் வெயிலுக்காக
வெயிலே நடத்துகிறது
கோடையின் ஆட்சியை

எந்த உடை அணிந்தாலும்
வெயில் போர்த்தி
வழியனுப்பி வைக்கிறது வீடு

எந்தப் பொருள் வாங்கப் போனாலும்
மறவாது
வெயில் வாங்கித் திரும்புகிறாள் இல்லத்தரசி

எங்கிருந்து புறப்பட்டு எங்கெங்கோ அலைந்து
எங்காவது நிறைவு செய்யப்படும்
எல்லாப் பயணங்களுக்கும்
இலவச பாதுகாப்பு அளிக்கிறது வெயில்

தனக்கு எதிராக
விரியும் குடைகளிடம்
மான அவமானம் எல்லாம் பாராது
வாய்க்கிற பகுதிக்கெல்லாம்
சூடு போட்டுக் கடமை ஆற்றுகிறது வெயில்

ஓட்டமாய்ப் பறக்கும் குழந்தையோடு
ஓடோடிச் சென்று
நழுவாது உடலைப் பற்றிக் கொள்ளும் வெயில்
விழுந்தாலும் ஏந்தி
விரைந்து நிமிர்த்தியும் கொடுக்கிறது

தகதகக்கும் சாலையில்
சேலைத் தலைப்பால் குழந்தைகளைத்
தற்காத்துக் கொண்டே தவித்தபடி செல்லும்
தாயின் பாதங்களை
முத்தமிட்டுக் கொண்டே போகிறது வெயில்

வறண்டு போகும் நாவிலும்
இடுங்கும் கண்களிலும்
பதுங்க இடம் கிடைக்காது
நடுங்கி நகரும் உடல்களிலும்
நனைந்து ஒட்டிக் கொள்ளும் மேலுடையிலும்
வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கிறது வெயில்

செடி கொடிகளைக் களைந்து
மரங்களை அழித்து
நிழல்களைத் தொலைத்து
எழுப்பிய வளர்ச்சி மாநகரங்களை
உளமார வாழ்த்தி அருள்கிறது வெயில்

பெருமழை நாளில்
நனைந்தும் மிதந்தும் மூழ்கியும் போன நகரத்தைப்
பிழிந்து உலர்த்திக்
காயப் போட்டுக் கொண்டிருக்கிறது வெயில்

வெயிலை வரவேற்று
வெயிலின் முன்னிலையில்
வெயிலைக் கொண்டாடும்
வாய்ப்புக்கு நன்றி பாராட்டி
விடை பெறவைக்கிறது வெயில்

*****************

 

நன்றி : தீக்கதிர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க