நலம் … நலமறிய ஆவல் ..! (3)
நிர்மலா ராகவன்
பழைய மாமியார்-மருமகள் கதைதான்!
‘என் மருமகள் கல்யாணமான புதிதில் எப்படி இருந்தாள்! இப்போது மகன் வீட்டுக்குப் போனால், நான் சொல்வது எதையும் கேட்பது கிடையாது!’ அரற்றிய பெண்மணிக்கு மகள் கிடையாது. மருமகள் `அம்மா’ என்று தன்னை அழைத்ததும் பூரித்துப்போய், அவள் பின்னாலேயே போய், ஒவ்வொரு காரியத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஓயாது நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள்.
`அம்மா’ என்று அழைப்பவர்களெல்லாம் நாம் பெற்ற குழந்தைகளாகிவிட முடியுமா?
அவர்கள் கேளாமலேயே அறிவுரைகளைத் தாராளமாக வழங்கிக்கொண்டிருக்க முடியுமா?
அம்மா என்றால் சிறு வயதில் குளிப்பாட்டி, இரவெல்லாம் கண்விழித்து மருந்து புகட்டி, உடன் விளையாடுகிறவர்கள் கேலி செய்து அழவிட்டபோது அணைத்துச் சமாதானப்படுத்தி, `அசக்காதேடி!’ என்று முதுகில் ஓர் அறைவிட்டபடி தலைவாரிப் பின்னிவிட்டு.. இப்படி என்னென்னவோ செய்திருக்க வேண்டும்.
பெற்ற மகனுடன் இவளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறதே என்று தனக்கே புரியாத குழப்பத்துடன், மருமகளிடம் அன்பைப் பொழிவதுபோல் பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக அவள் தான் செய்வதுபோலவே, தான் விரும்புவதுபோலவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.
`மாமியார்தான் இனிமேல் உனக்கு அம்மா. அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கணும்!’ கல்யாணமானதும், இளம்பெண்களுக்குப் பிறந்த வீட்டினர் வழங்கும் அறிவுரை.
தன் கணவனுடன் தனிக்குடித்தனம் செய்யும் பெண்ணுக்கோ, `இது என் வீடு. என் விருப்பப்படி செய்யலாம்!’ என்ற உணர்வு உண்டாகும். இதில் மாமியார் குறுக்கிட்டால் ஆத்திரம் வராது என்ன செய்யும்? சிலருக்கு ஏமாற்றம் பெருகி, அது கோபமாக மாற, அப்பாவிக் கணவன்மேல் அது திரும்பலாம். மாமியாரைத் தட்டிக்கேட்க முடியுமா?
பெற்ற மகளாக இருந்தால், இப்படி `நச்சு நச்சு’ என்று பிடுங்கும் தாயிடம் உரிமையுடன், `சும்மா போரடிக்காதேம்மா!’ என்று சிரித்தபடி சொல்லலாம்.
மகனிடம் அவன் மனைவியைக் குறை கூறினால், அவன் எந்தப் பக்கம் சாய்வான், பாவம்!
`அம்மா ஓரிரு மாதங்கள் வந்து தங்கிவிட்டுப் போய்விடுவாள். நான்தானே இவளுடன் ஆயுள் பூராவும் கழிக்கவேண்டும்!’ என்று மகன் மனைவிக்குப் பரிந்தால் போயிற்று. `மகன் பெண்டாட்டிதாசனாக ஆகிவிட்டானே!’ என்று புலம்புவாள் தாய்.
எப்படியோ அவர்கள் தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமாக நடப்பதைக் கண்டு திருப்தி அடைந்தால்தான் இருதரப்பினருக்கும் நிம்மதி. அனாவசிய குறுக்கீடு எதற்கு?
தொடருவோம்