தேர்தலும் வாக்குறுதிகளும்!

0

-மேகலா இராமமூர்த்தி

வந்துவிட்டது மற்றுமொரு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கு! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்தத் தேர்தல், மக்கள்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது தளர்ச்சியை ஏற்படுத்துமா? என்பது தேர்தலில் வெல்லும் கட்சியின் கையில்தான் இருக்கின்றது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உலகில் முடியாட்சியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் குடியாட்சி குதூகலத்தோடு எழுந்தபோது மக்கள் மனம் மகிழ்ந்தனர். எதேச்சாதிகாரமும், வாரிசுரிமையும் ஒழியும்; ஆண்டான் அடிமை எனுங்கொடுமை அழியும், மானுடம் வெல்லும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தனர். என்ன ஏமாற்றம்? குடியாட்சி அத்தகைய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.

ஆட்சியுரிமை யார் கைக்குப் போகின்றதோ அவருடைய வாரிசுகளே அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு உரியவராயினர் குடியாட்சியிலும்! குடும்ப ஆட்சிமுறையே குடியாட்சி என்ற பெயரிலும் கோலோச்சியதுகண்டு மனம் வெதும்பினர் மாந்தர். அம்மட்டோ? குடியாட்சி என்பது குடிகளின் ஆட்சி என்ற பொருள்மாறி அது குடி(அரக்கனின்)ஆட்சியாகவும் மாறிப்போன பேரவலத்தையும் சமீபகாலங்களில் காணக்கூடிய இழிநிலை நமக்கு வாய்த்திருக்கின்றது. பள்ளிக்குச் சென்று ’பாஸ்மார்க்’ வாங்கி வாழ்வில் முன்னேறவேண்டிய இளைய சமுதாயம், ‘டாஸ்மாக்’ முன்னால் கால்கடுக்கத் தவங்கிடப்பதும், தவத்தின் பலனாய்க் கையிலும் பையிலும் மதுப்புட்டிகளோடு மதிமயங்கி அலைவதும் நல்லோரை நடுங்கவைக்கின்றது; நாணவைக்கின்றது!


party chartஇந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகைசூடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதில் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவிவருகின்றது. அதற்கு அவை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது ’தேர்தல் வாக்குறுதிகளையே.’ ’மலை அகழ்க்குவம்; கடல் தூர்க்குவம்; வான் வீழ்க்குவம்; வளி மாற்றுவம்’ என்று கட்சித்தலைமைகள் தம் தகுதிக்குச் சற்றும் பொருத்தமிலா வகையில், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டும், வாக்காளப் ’பெருங்குடி’ மக்களுக்குத் தாம் அன்னையைப் போல, தந்தையைப் போல என்றெல்லாம், நகைக்கத்தக்க வகையில், உறவுமுறை கொண்டாடிக்கொண்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றன. வாக்களித்தோரின் ஆட்காட்டிவிரல் ’மை’ காய்வதற்குள் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதே உண்’மை’!

இந்த வேடிக்கையை எண்ணும்போது, அரசியலார் வாக்குறுதியளிக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த ஆவூர் மூலங்கிழாரின் புறப்பாட்டொன்று நம் நினைவுக்கு வருகின்றது.

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் இன்றியும் புரப்போர்
புகழ்குறை படூம் வாயில்… (புறம் – 196)

”தம்மால் இயலக்கூடியதை இயலுமென்றும், இயலாததை இயலாதென்றும் சொல்வதே தாளாண்மையுடையோர்க்கு நன்மை பயப்பதாகும்; அதைவிடுத்து இயலாததை இயலுமென்றும், இயலுவதை இயலாதென்றும் மாற்றிப்பேசுவது இரப்போரை  ஏமாற்றுவதோடு, புரப்போரின் புகழையும் கெடுக்கும் செயல்கள் என்கிறார் புலவர். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் பாண்டிய மன்னனுக்குச் சொல்லப்பட்ட இவ்வறிவுரை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும் அதிசயத்தை என்னென்பது!

மக்கள்தொண்டினை அடிப்படையாகக் கொண்டதே அரசியல். ஆனால் பொதுமக்களுக்குத் தொண்டுசெய்து சிறப்பதினும், தம் மக்களுக்குத் (பிள்ளைகளுக்கு) ’துட்டு’ சேர்த்துச் செழிப்பதிலேயே அரசியல் தலைவர்களின் உள்ளம் ஈடுபாடு காட்டுவது கொடுமையன்றோ?

அதனினும் கொடுமை, கட்சித்தலைவர்கள் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஆம், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தச் சாதியின் கை ஓங்கியிருக்கின்றதோ அல்லது எந்தச் சாதியின் எண்ணிக்கை அதிகமோ அந்தச் சாதியைச் சேர்ந்த, பணம்படைத்த பெரும்புள்ளிதான் அங்கே வேட்பாளராய் நிறுத்தப்படுவார். இது நடைமுறையில் (பல காலமாயுள்ள) எழுதப்படாத சட்டம்! இங்கே கல்வித் தகுதிக்கோ, தனிமனித ஒழுக்கத்துக்கோ, மக்கள் முன்னேற்றச் சிந்தனைகளுக்கோ இடமேயில்லை.

அரசியல்களத்தில் ஒருகாலத்தில் இருந்து, இன்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காததாய்க் காணமற்போய்விட்ட நற்பண்புகளில் ஒன்று ’அவை நாகரிகம்’. அன்றைய அரசியல்தலைவர்கள் பொதுமேடைகளில் ஒருவரையொருவர் தரக்குறைவாக ஏசுவதற்குக் கூசினர். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர், வெவ்வேறு சித்தாந்தங்களைக் கைக்கொண்டிருந்தோர் நட்புபாராட்டிய காலமும் இருந்ததுண்டு!! இவையெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன இன்று!

ஒவ்வொரு கட்சியும் தம் ’எதிர்’க்கட்சியைக் ’எதிரி’க்கட்சியாகவே பாவித்து, ஒருவரை ஒருவர் அருவருக்கத்தக்க மொழிகளிலும், வழிகளிலும் விமரிசித்துக் கொள்(ல்)வதும், வசைமாரிப் பொழிவதும், ஒருவர்செய்த ஊழலை மற்றவர் புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்துவதும், பெரியதிரையில் ’மார்க்கெட்’ போன நடிக, நடிகையரை அழைத்துவந்து தத்தம் கட்சிக்காகக் குரல்கொடுக்க வைப்பதும்,  தேர்தல் காலங்களில் வீதிதோறும் அரங்கேறும் விநோதங்கள்!!

நன்னடத்தையாலும் நல்லாட்சியாலும் மக்கள் மனங்களை வெல்ல முயலாது, விலையில்லா வீட்டு உபயோகப்பொருட்களைத் தந்து மக்களை விலைக்குவாங்க முயலும் மலிவான வியாபாரமும் இன்றைய அரசியலில் சகஜம்!

இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கண்டு நொந்துநூலாகிப்போன பொதுஜனமோ, ’கறை’படியாத இந்த உத்தமர்களில்(!) யாருக்கு வாக்களிப்பது? யாரை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது? என்று ’திருதிரு’வென விழிக்கின்றது!

மாண்புமிகு அரசியல்வாதிகளே! சொல்வதைச் செய்வதோடு சொல்லாததையும் சேர்த்தே செய்யக் காத்திருக்கும் கனவான்களே! இத்தருணத்தில் (பாவப்பட்ட) பொதுஜனத்தின் சார்பாக உங்களோடு சில வார்த்தைகள்…

நீங்கள் தேர்தலில் நில்லுங்கள்; வெல்லுங்கள்…வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மக்களை அவர்களின் பொருள்சார்ந்த பலவீனங்களைப் பயன்படுத்தி முட்டாளாக்க முயலாதீர்கள். விலையில்லா வீட்டுசாதனப் பொருட்களைத் தருவதை/தந்ததையெல்லாம் உங்கள் சாதனைகளாகப் பட்டியல் போடாதீர்கள். அவையெல்லாம் மக்களின் உழைக்கும்திறனை உறிஞ்சி, அவர்களைச் சோம்பேறிகளாக்குவதைத் தவிர வேறெதெற்கும் பயன்படப்போவதில்லை. அதைவிடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிக அளவில் உருவாக்கி, அவர்களைச் சொந்த உழைப்பில் முன்னேறவிடுங்கள்!

சாதிசார் வோட்டுக்களை இழந்துவிடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’(!) நாட்டில் பற்றியெரியும் சா’தீ’ வன்முறைகளைக் கண்டும் காணாமலிருக்கும் கயமையை ஒழியுங்கள்! ’இளைதாக முள்மரம் கொல்க’ என்ற பொதுமறை ஆசிரியரின் வாக்கிற்கிணங்க, வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்! சாதிப்பகையற்ற சமூகத்தை உருவாக்குவதே உங்கள் சாதனையாகட்டும்!

சாராயக்கடைகளை திறந்து தமிழ்க்குடிமக்களை முதலில் ’தண்ணீரில்’ மிதக்கவிட்டது யார்? என்று பட்டிமன்றம் நடாத்துவதில் காலங்கடத்தாமல், அவற்றைமூடி, காலனிடமிருந்து தமிழ்க்குடிகளை முதலில் மீட்கப்போவது யார்? என்பதை மக்களுக்கு அறியத்தாருங்கள்! பேச்சோடு நில்லாமல் செயலிலும் அதனை முழுவீச்சில் காட்டுங்கள்!

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை ஒழித்தால் மட்டும் போதாது! அவர்களுக்கு எதிராக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெருகிவரும் வன்கொடுமைகளுக்கும் வாய்க்கரிசி போடவேண்டிய கடமை அரசியலார்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

’தமிழ்நாட்டில் தமிழ்தானில்லை’ என்று குமுறினார் பாவேந்தர். அந்த அவலம் இன்றும் வலம்வரும் நிலையை முற்றாய் நீக்கித் தமிழ்க்குழந்தைகள் தாய்த்தமிழ் கற்கவும், மெல்லத்தமிழ் நம் கண்ணெதிரிலேயே சாகாதிருக்கவும் வகைசெய்யுங்கள்!

ஈதொப்ப, நீங்கள் ஆற்றவேண்டிய அருஞ்செயல்கள் ஏராளம்! ஏராளம்!

ஆட்சிக்கட்டிலில் ஏறும் ஆசைக்கனவில் மிதப்போரே…!

மேற்கண்டவற்றில் சிலவற்றையேனும் (உங்களில் ஆட்சியமைப்போர்) நிறைவேற்றுவீர்களேயானால் தமிழகம் வளம் பெறும்; தமிழர் நலம் பெறுவர்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *