Category: வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்

வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர் (272)

    நா. கணேசன்

    இந்த வார வல்லமையாளராகத்  திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு.

    இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. பெர்க்கிலியிலும், ஹார்வர்டிலும் நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் போல, தென் மாநிலம் ஆகிய டெக்சாஸின் பெருநகர் ஹூஸ்டன் பல்கலையிலும் தமிழ்ப்பீடம் அமைக்க இருப்பதற்கான முயற்சித் தொடக்கத்தை ‘சாம்’ சொ. கண்ணப்பன் அறிவித்தார். முனைவர் நா. கணேசன் “தமிழ்த்தாய் கொலுவிருக்கும் கல்விச்சாலைகள் எங்குமிருக்கலாம். ஆனால் அவ்வன்னையின் திசை தென்திசை. அங்கே ஹூஸ்டனில் தமிழ்த்தாய் அமர்ந்து ஆய்வுகளை அலங்கரிக்க உதவுங்கள்” என்றார்.

    மேலைநாடுகளில் 20+ தமிழ்ப் பீடங்கள் உயர்பல்கலைக் கழகங்களில் அமையும்போழ்து தமிழகப் பேராசிரியன்மார் வந்து ஆய்வுகளைக் கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு ஏற்படும்; அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் வமிசாவளியினர் தமிழ், திராவிட மொழியியல், கலாச்சாரம், தொல்லியல், கலைவரலாறு, மாந்தவியல், சமூகவியல், நிகழ்த்துகலைகள்… எனப் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களாய் புதிய பார்வை தரும் நூல்களை வாழையடி வாழையென வருங்காலத் தலைமுறையினர் எழுதத் துணை செய்யும். அமெரிக்க இளந்தமிழர்:

    இவற்றை எல்லாம் உணர்ந்தே மனோன்மணீயம் பெ. சுந்தரனார் மேற்குலக – கிழக்குலக ஆய்வுகள் காரணமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தந்தார். இன்று தமிழ்நாட்டிலும், அரசாங்க விழாக்களிலும் உலகெங்கும் தமிழ்ப் பள்ளிகளிலும், தமிழ் மன்றங்களிலும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது.

    பெட்னா திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து:

    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

    இந்த வார வல்லமையாளர்: திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப (I.A.S)

    ஃபெட்னா விழாவில் அனைவர் மனத்தையும் கவர்ந்தது இந்திய ஆட்சியாளர் பதவியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றிய கோ. பாலச்சந்திரன். இனிமையாகப் பழகும் அவர் தமிழ்மரபில் ஆழங்கால் பட்டவர்.  சிவகாசியைச் சார்ந்த இவர் ஹார்வர்ட் தமிழ்ப்பீடத்திற்கு அமெரிக்க டாலர் 50000-க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரன் சொற்பொழிவுகளை யுட்யூப் போன்ற தளங்களில் கேட்டு மகிழலாம். https://www.youtube.com/watch?v=ciS3Rg3XI5A&

    ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் திரு. பாலச்சந்திரனை அழைத்தோம். “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். பின்னர், ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் $-ல் தமிழ்ப் பல்கலை அமைக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் பல்கலை உயர் அதிகாரிகள், Academic Dean Dr. Tillis போன்றவர்களோடு பேசக் கலந்துகொண்டார். பியர்லாந்து நகர மேயர், டாம் ரீட் கலந்துகொண்டு பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.

    தமிழ் தொடர்பான, அதன் ஆய்வுகள் கல்வி உலகிலும், இணைய உலகிலும் வேரூன்ற திரு கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. என்றும் உதவ வேண்டும் என வாழ்த்தி அன்னாரை இந்த வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை மின்னிதழ் பெருமை அடைகிறது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (271)

    நா. கணேசன்

     

    இந்த வார வல்லமையாளராக ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    ’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார்  யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாழ்வின் முதல் பாகத்தில் ஐரோப்பியரிடம் பணியாற்றிய பின்னர், உரைநடை எழுதுவதற்கான பயிற்சியைப் பெற்று, சைவ சமயத்தினையும், தமிழ் இலக்கண நூல்களையும் நல்ல உரைநடையில் நாவலர் பெருமான் தமிழுக்குத் தந்தார். நல்ல அச்சகங்களும், பள்ளிகளும் அமைத்தார். இலங்கைத் தீவில் நாவலரின் தொண்டினால், சைவம் பிழைத்தது, இந்தியாவுக்கு வெளியே நாவலர் வழியில் சிவத்தொண்டு செய்வோர் பலராவர்.

    இந்நாளில், மரபுக் கவிதை இயற்றும் பயிற்சி குறைந்துகொண்டு வருகிறது. மரபுச் செய்யுள் இலக்கணத்தைக் கற்று, ஐயங்களைக் களைந்துகொள்ள நல்ல குழுமமாக ‘சந்தவசந்தம்’ குழு பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கவிமாமணி இலந்தை சு. இராமசாமி, அதன் தலைவர். அக்குழுவில் ஏராளமான சைவபரமான, திருமுறைகளை ஒத்த பாடல்களை இயற்றி அளிப்பவர், ‘சிவசிவா’ சுப்பிரமணியன் ஆவர். இவர் பொறியியலும், பின்னர் மேலாண்மைப் பட்டமும் (MBA, IIM) பெற்று நியூ ஜெர்சியில் பல ஆண்டுகளாகக் கணித்தொழில் நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவ சிந்தனையில் மரபுச் செய்யுள்களைச் செய்து தருகிறார். அவரது வலைத்தளம்: http://madhisudi.blogspot.com .

    ஏராளமான விருத்தங்களும், நிறையத் திருப்புகழை ஒத்த சந்தப் பாட்டுகளும், சில அந்தாதிகளும் இயற்றியுள்ளார். யாப்பிலக்கணத்திலும், சைவம் பற்றியும் கேள்விகள் கேட்டால் ஆழ்ந்த அறிவுபூர்வமான விடைகளை அளிக்கும் விடையவன், இந்த வார வல்லமையாளர்.

    இந்த வாரத்தில் மூவலூர் மீது விருத்தங்கள் எழுதிவருகிறார். எடுத்துக்காட்டாக,

    காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
    சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
    தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
    மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே

    நகைச்சுவையாக,

    சிவனுக்கும் இட்டலிக்கும் சிலேடை:

    பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்
    வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே
    ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி
    ஆகுலம்தீர் ஈசன் அறி.

    ஏழை என்ற சொல்லை வைத்த மடக்கணிச் செய்யுள்:

    ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!
    ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை
    இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்
    இடமிருக்கும் இங்குமுண்டு இன்பு!

    தமிழர்களிடையே என்றும் பெருஞ்சமயமாய் சைவம் இலங்குகிறது. 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தி இலக்கியம் பிரவாகமாய் தமிழ் இலக்கியங்களில் உருவாகியுள்ளது. அம்மரபின் தொடர்ச்சிக்கு, இந்தக் கணினி இணையக் காலத்தில் ‘சிவசிவா’ சுப்பிரமணியன் போன்றோர் உதவுகிறனர். சிவசிவாவைப் பாராட்டி மகிழ்கிறோம். அவருடனும் ஏனை சந்தவசந்தக் கவிகளிடமும் மரபுக்கவிதை கற்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com,  vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (270)

    இவ்வார வல்லமையாளராக அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    டொனால்ட் டிரம்ப் வடகொரியாவில் அமைதியை ஏற்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என ஊடகங்களில் கூறப்படுகிறது. அத்துடன் வடகொரியாவில் மாட்டியிருந்த மூன்று அமெரிக்கர்களையும் விடுதலை செய்து அனைவராலும் பாராட்டுபெற்றார். இவரது உலக அமைதிக்கான முயற்சிகளுக்காக இவரை வாழ்த்தி, இவ்விருதை வல்லமை வழங்குகிறது

    அமெரிக்காவின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் ஏழை எளிய மக்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார். குறிப்பாக மிச்சிகன், விஸ்கான்ஸின், பென்சில்வேனியா, வடவர்ஜினியா, கென்டக்கி
    போன்ற உற்பத்திதொழில் சார்ந்த மாநிலங்களில் ப்ளூகாலர் எனும் உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவே இவரை “சுதந்திர உலகின் தலைவர்” என அழைக்கபடும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்த்தியது.

    ஒரு பணக்காரரை போல இவர் சிந்திக்காமல் ஒரு அமெரிக்க குடிமகனாக சிந்தித்தார். அமெரிக்க தொழிற்சாலை வேலைகள் வேறுநாடுகளுக்கு செல்வதை கண்டித்தார். சுதந்திர பொருளாதாரம் எனும் பெயரால் நடக்கும் மோசடி வேலைகளை எதிர்த்தார். நிலக்கரி சுரங்க தொழிலாளருக்காக குரல் கொடுத்தார். ப்ரைமரியில் இவரை எதிர்த்த 16 ரிபப்ளிக்கன்களும் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் பெருச்சாளிகள். கோடி, கோடியாக பணம் வைத்திருந்தவர்கள். அனைவரையும் அனாசயமாக ஊதித்தள்ளி ஜெயித்தார். அதன்பின் இலரி க்ளின்டன் அம்மையாரை பொதுத்தேர்தலில் சந்தித்தார்.

    இலரி முதல் பெண் வேட்பாளர் என்பதாலும், அவரது அரசியல் அனுபவத்தாலும், பில் க்ளின்டனின் மனைவி, முன்னாள் முதல் பெண்மணி, முன்னாள் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் (வெளியுறவுத்துறை அமைச்சர்) என்பதாலும் எளிதில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கபட்டது. ஓபாமா, ஆலிவுட் நடிகர்கள், வாரன் பப்பட், பில்கேட்ஸ் போன்ற கோடீசுவரர்கள், கூகிள், பேஸ்புக் போன்ற பெரும் கம்பனிகள், நடிகர்கள், ஊடகங்கள் என அதிகாரவர்க்கம் முழுக்க இலரி க்ளின்டன் பக்கம் நின்றது. ஆயிரம் பேய்களை ஒற்றை வேப்பிலையால் அடித்து விரட்டும் மாரியம்மன் கோயில் பூசாரி போல ட்விட்டர் எனும் ஒற்றை ஆயுதம் கொண்டு அனைவரையும் வீழ்த்தி, மாபெரும் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தார் வெற்றித்திருமகன் டொனால்ட் டிரம்ப்.

    Image result for donald trump thumbs up

    ஆட்சியை பிடித்தபின் மக்கள் நலனே முக்கியம் என கருதி இவர் நடத்திய நல்லாட்சியின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்து, வரிகள் குறைந்து, தொழில் செய்ய இருக்கும் கட்டுப்பாடுகள் குறைந்து பெண்கள், சிறுபான்மையினர் நலன் மேம்பட்டு நாடு வளமாக இருந்து வருகிறது.

    இவரை போல ஆட்சிபொறுப்புக்கு வந்து உலக அமைதிக்கு பாடுபட இளைஞர்களுக்கு இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (269)

    இவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்

    1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

    அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்

    . கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது

    நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

    (நன்றி: விக்கிபிடியா)

    பரிந்துரை செய்த பேராசியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (268)

    இந்த வார வல்லமையாளர்! 

     

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.

    இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …

    ‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.

    இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்

    சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது

    “————————————பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)

    இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

    மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

    இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

    திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

    சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்

    அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (267)

    இவ்வார வல்லமையாளராக நாட்டுப்புற பாடல் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    இன்று ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் அம்மா விஜயலட்சுமி அவர்கள்

    விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.

    மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சூழ்நிலை பாரதம்’ என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பச்சைக்கோயில்’ என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.

    தமிழ் நாட்டுப்புறகலைகளுக்கு அளிக்கபட்ட சிறப்பாக வல்லமை இவரது விருதை கருதுகிறது. இவரை போல நம் மக்களின் கலைகளை பாதுகாப்பதில் அனைவரும் ஊக்கமுடம் செயல்பட வல்லமை விரும்புகிறது

    வல்லமையாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    Thanks:

    Tamil wikipedia

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (266)

    இந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்

    போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்கள் செய்த ஒரு தவறுக்காக சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.

    நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.

    இந்த வீடியோ பதிவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

    விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.

    ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் ‘பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்’ என்று கூறியுள்ளனர்.

    ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் ‘பரவாயில்லை சார்’ என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.

    பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

    ஆனாலும் காவலர் பாபு, ‘நான் செய்தது தவறுதான், அவர்களை அடித்திருக்கக் கூடாது’ என்று கூற, ‘நாங்கள் தான் சார் தவறு செய்துவிட்டோம் என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

    இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் அறிவுரை வழங்கினார். பின்னர், காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

    காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

    இந்த நல்ல மாற்றம் நாடெங்கும் தொடர கமிஷனர் விஸ்வநாதன் அவர்களின் முன்னுதாரணம் உதவும் எனும் நோக்கில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (265)

    இவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம்.

    இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இயங்க துவங்கியுள்ள இந்த நிறுவனம் திரைத்துறை பெண்களுக்கு குரல் கொடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. இதன் தலைவி வைஷாலி சுப்பிரமணியன்

    பெண்கள் பாலியல் ரீதியாக பணியிடங்களில் துன்புறுத்தப்படும் விகிதம் மிக அதிகம் எனில் திரைத்துறையில் இது மிக அதிகம் எனும் குற்ற்சாட்டு உண்டு. செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடிப்பை விட்டுவிட்டு ஓடிய நடிகையர் ஏராளம். அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக இது உருவெடுத்துள்ளதாக வைஷாலி கூறுகிறார்

    நடிகையர் என மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் துணைநடிகையர், பூக்களை கட்டி சினிமா கம்பனிக்கு விற்கும் பாட்டி, சினிமா கம்பனியில் பாத்திரம் கழுவும் பெண்கள் என அனைத்து மட்ட பெண்களுக்கும் குரல் கொடுக்கவும், நியாயமான ஊதியம் வழங்க கோரியும் போராட இருப்பதாக கூறுகின்றனர் இவர்கள்.

    பல படப்பிடிப்பு மையங்களில் நடிகையருக்கு போதுமான கழிப்பிடம், பாதுகாப்பு ஆகியவையே இல்லை என்றும் இரவு நேர ஷூட்டிங் முடிந்து பாதுகாப்பாக திரும்புவதே கடினம் என்றும் சினிமா படம் எடுக்கையில் உடல் உபாதை, மாதவிடாய், பேறுகால சிரமங்களுக்கு கூட எந்த தீர்வும் இல்லை என ஆதங்கபடுகின்றனர்

    பல சினிமா பிரபலங்கள் இவர்களின் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். “சினிமா நடிகையர் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது” எனும் போர்க்குரலை எழுப்பி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் இவ்வமைப்பினரை பாராட்டி இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து துறைகளிலும் வரவேண்டும் எனும் நோக்கில் இவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (264)

    இந்த வார வல்லமையாளராக சூப்பர்ஸ்டார் என மக்களால் அன்புடன் அழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    கர்நாடகாவில் பிறந்த மராட்டியர். வசிப்பது சென்னையில், மணமுடித்தது தமிழச்சியை. இப்படி மாநில எல்லைகளை தாண்டி மக்களால் சொந்தம் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி. இந்தியாவெங்கும் படங்களின் வெற்றி, தோல்வியை தாண்டி தன் நடிப்புக்காக ரசிக்கபடுபவர். கண்டக்டர் வேலையில் இருந்து சூப்பர்ஸ்டார் ஆக உயர்ந்தவர். அத்துடன் நிறுத்திக்கொண்டிருந்தாலே அது வாழ்நாள் சாதனையாக அமையும். ஆனால் அதையும் தாண்டி 1996ல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அதன்பின் தற்போது அரசியலிலும் நுழைந்துவிட்டார். இவ்வாரம் இவரது காலா டீசர் வெளியாகி, இவரது அரசியல் நுழைவின் முதல் அடியும் எடுத்து வைக்கபட்டிருப்பதால் செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திரையுலகில் சூப்பர்ஸ்டாராக மட்டுமே இவரை இன்றைய தலைமுறை அறியும் என்றாலும் இவரது நடிப்பாற்றலை எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நாம் கண்டோம். முரட்டுக்காளையில் தனக்கென ஒரு தனிப்பாதை அமைத்து மேலேறியவர் அதன்பின் அடுத்த 30 ஆண்டுகளில் அதை ராஜபாட்டையாக அமைத்து சூப்பர்ஸ்டாராக பரிணமித்தார். கபாலியில் அந்த பழைய ரஜினியை மீண்டும் கண்டோம். அதே ரஜினியை மீண்டும் காலாவில் காண இருக்கிறோம். அத்துடன் அரசியல்வாதி எனும் அவரது புதிய பரிணாமத்தையும் காண இருக்கிறோம்.

    அவரது அரசியலுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் அல்ல இது. ஆனால் அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதுகையில் இதை குறிப்பிடாமல் எழுத முடியாது அல்லவா?

    எம்ஜிஆர், சாவித்திரி, சிவாஜிக்கு பின் திரிசூலங்களாக தமிழ் திரையுலகிற்கு கிடைத்தவர்கள் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவர். மூவரும் நடிப்பில் புகழின் உச்சியை எட்டிய நிலையில் அதன் அடுத்தகட்டமாக கமலும், ரஜினியும் அரசியலில் புகுந்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி என இதற்கு முந்தைய தலைமுறையின் இரு சூப்பர்ஸ்டார்களும் ஒரே சமயத்தில் அரசியலில் இருந்தும் அதில் எம்ஜிஆர் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. இம்முறையும் அதுவே நிகழுமா அல்லது இருவருமே ஜொலிக்காமல் போவது நிகழுமா என்பது வழக்கம் போல மக்களின் கையில் தான் உள்ளது.

    நம்மளவில் தன் நடிப்புலக வாழ்வின் உச்சத்தையும், அரசியல்வாழ்வின் முதல்படியிலும் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியை வருங்கால தலைமுறைக்கு ஆதர்சமாக இருப்பவர் எனும் நோக்கில் பாராட்டி வல்லமையாளர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (263)

    1970களில் எம்ஜிஆர், சிவாஜி அலை ஓயும் சமயம் மூன்று இளம் நட்சத்திரங்கள் அறிமுகம் ஆகினர். ரஜினி, கமல், ஸ்ரீ தேவி. மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் போட்டி போட்டு நடித்து மூவரும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்திய திரையுலகில் தமக்கென ஒரு இடம் பிடித்தனர். இதில் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லக்கூடிய அளவு உயர்ந்தவர் ஸ்ரீ தேவி.

    இவருக்கு முன் எந்த பெண்ணும் திரையுலகில் இத்தனை உயரத்தை அடைந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு மொழியினரும் இவர் தம் மொழி நடிகை என சொந்தம் கொண்டாடும் அளவு இவரை தவிர வேறு யாரும் இருப்பார்களா என்பது கேள்விக்குரியது

    இவரது சொந்த ஊர் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி. ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.

    தமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.

    ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.

    16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.

    தமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார்.

    மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.

    மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்

    “அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண்களின் மனதில் பெண் தேவதையாக ஸ்ரீதேவி உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார் தேவிபாரதி.

    ஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

    “ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு” என்கிறார் ராஜசேகர்.

    ஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி – கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.

    தெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார்.

    “அது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகம். அவரது உடல்கூட தமிழகத்திற்கு வராது என்பது இன்னும் பெரிய வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் தேவிபாரதி.

    ஸ்ரீ தேவிக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்கள், 70களின் ஸ்ரீ தேவியை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Thanks: BBC

    Share
  • இந்த வார வல்லமையாளர் (262)

    இவ்வார வல்லமையாள்ர்களாக விஞ்ஞானி சுமிதா மித்ராவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இவர் அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தின் பாராட்டுக்கும், அங்கிக்காரத்துக்கும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்

    சுமிதா மித்ரா நானோபார்ட்டிகிள்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்சொத்தைகளை அடைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். இது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு மேம்பட்டதாகவும், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது

    3எம் எனும் கம்பனியில் வேலை செய்தபோது இதை கண்டுபிடித்த்து இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இது பலனளித்துள்ளது.

    இது தவிர பல்சொத்தைகளை அடைக்கும் பசைகள், நானோகாம்பொசிட் வகை தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சுமிதா மித்ரா கண்டுபிடித்துள்ளார். 3எம் கம்பனியில் இருந்து ஓய்வுபெற்று சொந்தமாக தொழில்நுட்ப கம்பனி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்

    இவர் அமெரிக்காவில் வசித்தாலும் இவரது சொந்த ஊர் கல்கத்தா ஆகும். கல்கத்தா ரெசிடென்ஸி கல்லூரி மாணவி ஆவார். இவரது கணவர் சாம் மித்ரா ஆவார். தன் கணவருடன் இணைந்து தான் வசிக்கும் மின்னியபொலிஸ்- செயிண்ட்பால் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் குறித்து உரை நிகழ்த்துவதில் தன் விடுமுறைகளை இவர் செலவிடுகிறார்

    அறிவியல், மாணவர் மேல் கொண்ட அன்பு, உழைப்பு, ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுமிதா மித்ராவை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வல்லமையாளர் சுமித்ரா மித்ராவுக்கு நம் நல்வாழ்த்துகள்

    இவரை பரிந்துரைத்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு நம் நன்றி

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (261)

    டிராபிக் ராமசாமி (அகவை 82) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச்சேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

    டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.

    1

    ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
    2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்..இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    10 மார்ச் 2015ஆம் நாளன்று, சென்னை, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளிக்கும் போது, வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் டிராபிக் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    வயது முதிர்வு காரணமாக தற்போது இவர் குழப்பமான மனநிலையில் சில போரட்டங்களை அறிவித்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். சில சமயம் எல்லை மீறி போராட்டங்களை அறிவிப்பதும் உண்டு. ஆனால் “எங்கே எவனுக்கு எது நடந்தால் எனக்கென்ன” என்ற சமூக அக்கறையற்ற சமுதாயத்தில் இவரை போன்ற மக்கள் நலத்தொண்டர்கள் அவசியம் எனும் நோக்கில் இந்த பெரியவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை உவகை கொள்கிறது

    (தகவல் உதவி: நன்றி தமிழ் விக்கிபிடியா)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (260)

    இவ்வார வல்லமையாளராக பேராசிரியர் கண்மணி அவர்களை அறிவிக்கிறோம்.

    நாம் அனைவரும் “பழைய சோறு” என அறியும் உணவு இவரால் “ஐஸ் பிரியாணி” என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    அரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.
    எதனால் இந்த திடீர் மாற்றம்?
    என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.
    வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு இப்போது என் நினைவே இல்லாமல் போய் விட்டதே !? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.

    வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
    பச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
    ஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.
    ஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!

    என்னோடு சேர்த்து வைத்துச் சுவைத்த பக்கஉணவுகள் —-அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
    மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே —ஒரு ராஜபாளையம் சப்பட்டை —தோல் சீவி துண்டு போட்டால் —இந்த இணைக்கு ஈடு எது?
    பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத் தகுதியான வேறு உணவு எது?
    சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.—உரித்து விட்டு என்னோடு கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
    எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி

    சைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ….அசராமல் ஈடு கொடுத்தேன்.
    ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்…பானை சோறும் காலி.
    இன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ……
    “மையூன் தெரிந்த நெய்”யில் வெடித்து வேகத் தொடங்கும் …..வெடிகறி
    இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
    நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.
    என்னோடு போட்டி போட …..ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் …..இன்னும் என்னென்ன …..
    பருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித் தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்…….குழந்தைக் கூட்டம் என்று ….
    ஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ……கொடுமை …கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
    உஷ்ஷ் ….எழுத்து கத்தக் கூடாது .
    அமைதி …அமைதி ……அமைதி ”

    மையூன் புழுக்கல் எனும் சங்கத்தமிழ் சொல்லாடலுக்கும் மிக புதுமையான, ஆனால் ஏற்கும் வண்ணம் புழுக்கல் என்பது அரிசி அல்ல, இறைச்சி புழுக்கலே எனும் விளக்கமும் அளித்தார். “உரை ஆசிரியர்களின் உரை என்பது விளக்கு கம்பம் போல, அதை ஒரு பாதைகாட்டியாக தான் பயன்படுத்தவேண்டுமே ஒழிய, அதையே சாசுவதமாக பிடித்து நின்றுவிடகூடாது” எனும் சிறப்பான வழியும் காட்டுகிறார்.

    இவரது தமிழின் மேன்மையை பாராட்டி இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (259)

    இவ்வார வல்லமையாளராக தகடூர் கோபி அவர்களை அறிவிக்கிறோம்.

    இவர் தமிழ் மேலும் கணிணி மேலும் அயராத ஆர்வம் கொன்டவர்., இவரது ஹை கோபி தட்டச்சுபலகை தமிழ்தட்டாச்சு அதிகம் பரவாத 2000களின் துவக்கத்தில் பல பயனர்களுக்கு உதவி, தமிழில் தட்டச்ச உதவியது.

    இவர் கணிணிபொறியாளராக பல நிறுவனங்களில் பணியாற்றி இறுதியாக சிங்கபூரில் பணியாற்றினார். திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தவர்.

    1

    இவர் நேற்று மாரடைப்பில் காலமானார். இவரது மறைவு குறித்து வல்லமை நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்

    “தமிழ்க் கணிமைக்கு முக்கியப் பங்காற்றிய தகடூர் கோபி, மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரடைகிறேன். அவர் உருவாக்கிய தகடூர் எழுதியில் அவருக்கு இரங்கல் செய்தியை எழுதுகிறேன். சுமார் 15 ஆண்டுகளாக நட்பு, தமிழ்க் கணிமைக் கூட்டங்கள் சிலவற்றில் சந்திப்பு, இணையம் வழியாக நீடித்த உறவு என எங்கள் தொடர்பு நீண்டது. எங்கள் வல்லமை மின்னிதழில் உள்ள தட்டச்சுப் பக்கத்தில் அவரது தகடூர் தட்டெழுத்துச் செயலியை அமைத்துள்ளோம். அதில் உள்ள புதிய தட்டெழுத்துத் தெரிவில் என்னால் மிக விரைவில் தட்டி எழுத முடியும். வேறு எந்த எழுதியிலும் இதே விசையமைப்பு இல்லை. எனவே, அங்கங்கே நிறுத்தி நிறுத்தி எழுத வேண்டி வரும். எனவே, இந்தத் தகடூர் எழுதியை இதர எழுதிகளைப் போல், தனியே தரவிறக்கி, எந்தச் செயலியிலும் தட்டும் வசதியைக் கொண்டு வாருங்கள் என நீண்ட காலமாகக் கேட்டு வந்தேன். நேரம் அமையாததால் செய்ய முடியவில்லை என்று வருந்தி வந்தார். இளம் வயதில் மிகப் பெரிய உயரங்களை எட்டிய தகடூர் கோபி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.”

    வல்லமையாளர் தகடூர் கோபியின் வழியில் தமிழ்ப்பணியாற்ற உறுதிகொள்வோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (257)

    இவ்வார வல்லமையாளராக பைக் பந்தய வீராங்கனை சைபி அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    சைபி… சாதனைகள் பல செய்திருக்கும் ஸ்டாண்டிங் பைக் ரைடர். டெய்லரிங் கடை, அவினாசி அத்திக்கடவு திட்டத் தன்னார்வலர் என இவருக்கு வேறு முகங்களும் உண்டு. கல்லூரி மாணவரான மகன் ரித்தின், ப்ளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்மேரி ஆகியோருக்கு இவர் சிங்கிள் பேரன்ட்.  தன்னைச் சூழ்ந்த பிரச்னைகளை உதறி, நிமிர்ந்தெழுந்த கதையைச் சொல்கிறார் சைபி.

    “நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கிற மண்வயல் கிராமத்துல ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா மேத்யூ, அன்பின் உருவம். அம்மா மேரி தன்னம்பிக்கை மனுஷி. எனக்கு ரெண்டு தம்பிகள், ஒரு தங்கை. வளர்ப்பில் எந்தப் பாலினப் பாரபட்சமும் காட்டாமல் எல்லோரையும் தைரியமா வளர்த்தாங்க. லீவு நாள்கள்ல மலைப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்துக்குப் போயிட்டு வர்றதுக்காக, அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அந்த மலையில சும்மா சல்லு சல்லுனு சைக்கிள்ல பறப்பேன். விமானத்துல போற மாதிரி இருக்கும்’’ என்கிற சைபி, பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

    “அதுக்கப்புறம் வீட்டில் திருமணம் செஞ்சுவெச்சாங்க. ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. அந்தக் காலகட்டத்தில ஆக்கிரமிப்பு காரணமா எங்க நிலத்துல பாதியை இழந்துட்டோம். விவசாயமும் கைகொடுக்கலை.  நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாச்சு. நான் குடும்பத்தை நடத்த டெய்லரிங் கத்துக்கிட்டேன். என் கணவர், ஒருநாள் குடும்பத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டார். ரெண்டு குழந்தைங்களோட தனிமனுஷியா நின்னப்போ, அந்தத் துயரமே எனக்குத் தூண்டுகோலா இருந்தது. அவினாசி வந்து டெய்லரிங் கடை ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு நேர்த்தியா தைச்சுக்கொடுத்ததால நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. குடும்பம் நடத்தவும் வழி கிடைச்சது’’ என்பவர் தன் பைக் சாகசங்கள் பற்றிப் பகிர்கிறார்.

    ‘`மலை ரோட்டுல சைக்கிள் ஓட்டின ஆர்வமோ என்னமோ தெரியலை… பைக் ஓட்ட ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து மெள்ள மெள்ள கார், ஆட்டோ, ஜீப்னு கிடைக்கிற வாகனங்களையெல்லாம் ஓட்டிப் பழகினேன். முதல்ல பழகினதே `டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்’தான். அப்புறம் `டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்’ வாங்கினேன். அவினாசியிலிருந்து ஊட்டியில இருக்கிற அம்மாவைப் பார்க்கப்போறதுக்குக்கூட பைக்லதான்னு ஆகிடுச்சு. பைக் ஓட்டுறப்போ கெத்தா இருக்கும்.

    ‘ஒரு பொம்பளை பைக் ஓட்டுறதா’னு சாலைகளில் என்னை ஓவர்டேக் செய்யற ஆண்களுக்கு ஒரு சாதனை உணர்வு இருக்கும். நமக்குத் தேவை, பாதுகாப்பான டிரைவிங். அதனால அதையெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. டென்ஷனா இருக்கும்போது ஒரு ரவுண்டு பைக்ல போயிட்டு வருவேன். இப்படித்தான் பைக் என்னில் பாதியானது’’ என்பவர், அதையே சாதனைக்களமாக மாற்றிய அனுபவத்தையும் சொல்கிறார்.

    “பைக் ஓட்டுறதுல ஏதாவது சாதனை பண்ணலாம்னு யூடியூப்ல தேடினேன். நிறைய பெண்கள் பைக்ல கிலோமீட்டர் கணக்குல டிராவல் பண்ணித்தான் சாதனை பண்ணியிருந்தாங்க. ஸ்டாண்டிங்லேயே பைக் ஓட்டுற சாதனை பண்ணலாமேனு நினைச்சு, அதுக்காகப் பயிற்சியெடுக்க ஆரம்பிச்சேன். தினமும் டெய்லரிங் ஷாப் வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நம்பிக்கை வந்ததும் ‘யூஆர்எல் வேர்ல்டு ரெக்கார்ட்’ஸுக்கு விண்ணப்பிச்சேன். அதுக்காக ஆர்வமுமா தயாரானேன்.

    ‘பொம்பளைக்கு எதுக்கு இந்த வேலை?’, ‘என்னது… நின்னுட்டே பைக் ஓட்டப்போறியா?’னு பலரும் என்னைக் கேவலமா பார்த்தாங்க. நான் அதையெல்லாம் பொருட்படுத்தலை. பல்சர் மாதிரியான பைக் என்றால் இன்னும் நிறைய சாகசங்கள் பண்ண முடியும். என்னோட பைக்ல இதெல்லாம் செய்றது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும், நான் முயற்சியைக் கைவிடலை. என் பையனும் பொண்ணும், ‘உன்னால நிச்சயம் முடியும்மா’ன்னு, எனக்காக அதிகாலை மூணு மணிக்கெல்லாம் அலாரம் வெச்சுடுவாங்க. நான் எழுந்து பைக் ஓட்டிப்பழகுவேன். அந்தப் பயிற்சி எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. `யுஆர்எல்’ அமைப்பிடம் 500 கிலோமீட்டர் ஓட்டறதா விண்ணப்பிச்சிருந்தேன். அவங்க,

    200 கிலோமீட்டர் போதும்னு சொல்லிட்டாங்க. இப்போ அந்த ரெக்கார்டை முடிச்சாச்சு. என் சாதனையை முறியடிக்க இன்னும் மூணு வருஷமாச்சும் ஆகும்’’ எனக் கூறுகையில் பெருமையும் பரவசமும் விரிகிறது சைபிக்கு.

    ‘`என்ன இருந்தாலும் என் சாகசத்தைப் புரிஞ்சிக்கிற அளவுக்குச் சமூகம் இல்லை. என்னைத் தட்டிக்கொடுக்கக்கூட ஆள் இல்லை. ஆனாலும், என் குழந்தைகள் என்னைப் பாராட்டினாலே போதும்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். பைக் டிரைவிங் சாதனைக்காக ஓவர் டைம்தான் பார்க்க வேண்டியிருக்கு. சமாளிக்கிறது பெரும்பாடுதான். இருந்தாலும், அட்வான்ஸ்டு டைப் பைக் வாங்கணும், கின்னஸ்ல இடம் பிடிக்கணும்னு ஆசை.

    பைக் மேல நின்னுட்டு ஓட்றது, படுத்துட்டே ஓட்றதுனு இப்போ பல புதிய முயற்சிகளை ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நிறைய சாகசங்கள், சாதனைகள் பண்ணப்போறேன். வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டுட்டேன். இந்த சாகச வெற்றி, அந்தக் காயங்களையெல்லாம் மறந்துபோகச் செய்யுது. என் பொண்ணுக்கும் ரேஸ் பைக் ஓட்டுறதுதான் லட்சியம். என் பையன், ‘உன்னை மாதிரி ஏதாச்சும் சாதனை பண்ணணும்மா’னு சொல்றான். பணம் இல்லைன்னாலும் வாழ்க்கையில இந்த சந்தோஷம் நிறைய கிடைச்சிருக்கு (நன்றி: விகடன்)

     

    வல்லமையாளர் சைபிக்கு நம் நல்வாழ்த்துகள்

     

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share