Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
    துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
    புறமும் உலவிப் பெருகும் பலவாம்
    இறைவன் அறிவே இவள்….

    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–

    170921 Mahalaya 03-Maa Brahmacharini -watercolour -papyrus- lr

    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….!

    இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
    அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
    பக்தித் துறையவள் முக்தி அறையவள்
    சக்தியுறை பாதம் சரண்….!

    முதிர்ந்த தவத்தோர் மரத்தில் இருந்து
    உதிர்ந்த சருகுகளை உண்பர்: -புதிரிவளோ,
    உண்ணா மலையாய், உறுதியுடன் நின்றடைந்தாள்
    பின்நாள் அபர்ணா பெயர்….!

    வெண்பா அல்ல வேறு….!
    ——————————————–
    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே (OR)தோழி எனஅவளே….கிரேசி மோகன்….!

    அம்பாள் பஞ்சகம்
    (க்ரேஸி மோகன்)
    —————————————————————————————————————————

    மதியது கொண்டவனின் – மரகத
    மங்கைக்கடியவன் முன்
    விதியது வீழ்ந்திடுமே ! – வெவ்விய
    வினையது சாய்ந்திடுமே !
    கதிர் முன் பனி போலே – கவலைகள்
    கரைந்து போகுது பார் !
    எதிர் வரும் துன்பெமெலாம் -என்னிடம்
    என்னிடம் ஏவல் செய்யுது பார்! (1)

    கருமயிலே, பரமன் -கபாலி
    கணவருடன் அழகாய்த்
    திருமயிலாப் புரியில் -திகழும்
    தேவி பராசக்தீ !
    ஒரு பொழுதும் மறவேன் -உமையே
    ஓமெனும் மந்திரமாய்
    உறைபவளே வருவாய் -உலகில்
    உழலுமெனக் கருள்வாய் (2)
    அம்மா என்றுனையே -அடியேன்
    ஆசை மனம் கொண்டு
    இம்மா புவியினிலே -இயம்ப
    இமயக் கரு முகிலே
    சும்மா நிற்பதுவும் -சரியோ
    சொல்வாய் சிவ சக்தீ !
    பெம்மான் சொக்கருடன் -பிடியே
    பிள்ளை என் முன் வருவாய் ! (3)

    பச்சை நிறத்தவளே -பதியின்
    பாகம் கொண்டவளே
    அச்சை ஒடித்திடுமோர் -அழகன்
    ஆனை முகன் தாயே !
    மெச்சத் தகும் ஊராம் -மயிலை
    மாது மஹா காளி !
    பிச்சை அளித்திடுவாய் -பரமே
    பக்குவ மனமதனை ! (4)

    வள்ளிக் குறுதுணையாய் -வேலன்
    வளர்ந்த தொரு மலையாம்
    வெள்ளிப் பனி மலையில் -வாழும்
    வேந்தற் குரியவளே !
    உள்ளக் கோவிலதில் -உனை நான்
    உறங்க வைத்திடுவேன்
    தெள்ளத் தமிழ முதால் -தாயுனைத்
    தாலாட் டிடுவேனே ! (5)

    *********************************************************************

    Share
  • சூரி நாகம்மாள்….ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….!

     

    ’’ஈருபத்து கைகளால் ஈசன்கை லாஸத்தை
    தாருபத்(து) அணிந்தவர் தூக்கிட, -வீறுகொண்டு
    வீழ்த்தினன் கட்டை விரலால் அவன்கர்வம்:
    வாழ்த்துமப்பர்(வாழ்த்துப் பண்பாடும் அப்பர் பதிகம்) பாடலின் வேட்கையால் -தாழ்த்தினர்
    நாள்நிறைய, தப்புணர்ந்த நாடகக் காரனவர்,
    தாள்மறைக் காட்டில் தடார்(திறப்பு)’’….கிரேசி மோகன்….!

    ஈருபத்து -இருபது….
    தாரு பத்து -மாலை பத்து(பத்து தலை, பத்து கழுத்து, 10 மாலை) இராவணர்….
    நாள் நிறைய -லேட்டாக…
    வாழ்த்துமப்பர் -வாழ்த்தும் அப்பர்….
    தாள் மறைக்காடு -வேதாரண்யக் கோவில் கதவு….

    Share
  • தினமலரில் கிரேசி!

    இன்றைய ‘’தினமலரில்’’ வெளியான அடியேன் பேட்டி….!கிரேசி மோகன்….!

    17_09_2017_007_005

    Share
  • வேலையத்தவன் வெண்பா

     

    ’’சூடான சாதம் சிலீரென் றகட்டி
    ஏடான சீமைத் தயிருடன் -மேடாக்கி
    ஊறுகாய் தொட்டுஉண்டு ஓரமாய் மெத்தையில்
    ஊருவேலை பாக்க உறங்கு’’….!

    ’’பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
    ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
    சாத்தமுது சாதம் சுவையா னநீர்மோர்
    ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’’….!

    “வத்தக் குழம்பை வயிறார உண்டுநிதம்
    செத்த பிணம்போல சாய்ந்தபடி- மெத்தையில் ,
    மல்லாந்(து)ஆ ராய்தல் மிகப்பெறும்வீண், பாரதியார்
    சொல்லாழ்ந்(து) அனுபவிசத் சித்”….கிரேசி மோகன்….

    Share
  • கைவல்ய நவநீதம்….

    கிரேசி மோகன்

    கடவுள் காப்புக்கு பதிலாக எழுத்தறிவித்த என் நண்பனுக்கு நன்றி….
    ———————————————————————————–

    “கைவல் யநவநீதக் கட்டுரை யாப்பெனது
    கைவரப் பெற்றதற்கு காரணம்கேள், -தைவர
    தோன்றும் வழிபோலத் தோன்றிய நண்பனாம்,
    சான்றோன் ரவிசகவா சம்”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் (1)….நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….
    குரு வந்தனம்….அவரது குரு ஸ்ரீவேங்கடேச முகுந்தரை தியானித்து….
    ——————————————————————————————

    ‘’ஆகாச சாட்சியாய், ஐம்புலன்கள் வாயிலாய்
    தேகான்ம பாவமாய், தத்துவமாய்,-ஏகாந்த
    நன்நிலமாய் நெஞ்சத்தில் நின்று மனமேழ்வாழ்
    செந்நிலவு சூர்யா சரண்’’….(1)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 2….
    ———————————————————
    “ஆழிஆ னந்தத்தில் ஆதவனாய்த் தோன்றிடும்,
    கோழிகூ வாதந்த கோளுணர்வே , -வாழிய;
    விஷ்ணு பிரம்மா விரிசடை யோனாகும்
    உஷ்ணமே என்னுள் உதி”….(2)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 3….
    ———————————————-
    “தேசிகன் பாதம் தொழுது தெளிவடைந்தேன்
    பாசி உலகம் படர்வதால், -வாசிநான்,
    பொய்யென்(று) அறிந்தேன் ,புகுந்தீர் மனச்சுவரில்
    அய்யநீர் ஆகாச அன்பு”….(3)

    கைவல்ய நவநீதம்”….ஸ்லோகம் 4….குரு வந்தனம்...
    ———————————————————–

    “புத்திமன தேகம் புலனைந்தும் போக்கத்த
    சக்தியெனச் சொன்ன சதாசிவவி, -ரக்தியே,
    மூடுபனி ஆதித்தன் முன்னோடல் போல்வந்து
    வீடுதந்தீர் வாடகையாய் வாழ்த்து”….(4)

    கைவல்ய நவநீதம்….சுலோகம் 5….
    ———————————————-

    நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….

    “அடிமுடி மத்தியில்லா ஆகாச ஆசான்
    அடிபணிந்து சொல்கிறேன், ஆன்ம,-மடிபுகுந்த
    வித்தகம், பேத விடுதலையை, வேதாந்த
    புத்தகப் போதில்லாத பேர்க்கு”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 6….
    ———————————————

    பண்டைநாள் வேதாந்த பாத்திரங் கள்தளும்பா(து)
    உண்டபால் தன்னை உருக்கியபின், -சுண்டிடக்
    காய்ச்சி அளிக்கின்றேன் ,கைவல்ய வெண்ணையிதை
    ஆய்ச்சியர்க்கு கண்ணன் அளிப்பு”….(6)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 7….
    ——————————————-

    ‘’சுகந்த சுதந்திர ஸ்ரீவேங்க டேச
    முகுந்தகுரு என்னுள் திகழ்ந்து -உகந்ததிதை,
    பாகமிரண் டாக்கி, பரம்முதலில் பின்னெழும்சந்,
    தேகம் இரண்டில், தெளிவு’’….(7)
    —————————————————————————————————————————
    பாகம்-ஒன்று
    —————

    The Exposition Of The Truth
    ————————————–
    மெய்யுணர்வு
    —————

    ஸ்லோகம்-8
    —————-

    ‘’விடுதலை வேட்கை, விசார விவேகம்
    விடுதளை விட்டேத்தி வாழ்க்கை,-படுதலை
    வைத்தாறு பண்புகளில், வேதாந் திகள்நான்கை
    தைத்தார்கள் மெய்யுணர்வ தற்கு’’….கிரேசி மோகன்….(8)….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3467
    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல

    நரவேஷம் இட்டாய்கண் ணர்முன் -வரவர்ஷம்(வர மழை)

    அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட

    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)….!

    KEY -SOLYUTION….!

     

    கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்

    சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்

    உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க

    குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்….

     

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது

    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று

    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா

    எந்தனை வேறுவடி வாக்கு….

     

    பிறந்து புவியில் பிருந்தா வனத்து

    விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்

    எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்

    மந்தை வெளியிலிரு வந்து….!

     

     

     
    Share
  • ’’அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்’’….!

     

    ”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
    கோடி மதயானை கும்பிட -ஓடும்
    வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
    வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கிருஷ்ண ஜெயந்தி சிந்தனைகள்

     

    கிரேசி மோகன்
    —————————————————————

    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதருக்காய் -தாலத்தில்(தட்டில்)
    பக்ஷணத்தை ஏந்திநின்றால், பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டார் தபஸ்….!

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்(யமன்)
    கொய்யா(து) இருப்பானா கூறு….!

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….கிரேசி மோகன்….!

    Share
  • வெண்பூ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்
    ————————————————–
    துங்கா நதிக்கரைச் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….(25)

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….(26)

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….(27)

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….கிரேசி மோகன்….!

     

    Share
  • வெண்பூ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்
    ———————————————–

     
    காளிதாச கம்ப குமர குருபரர்கள்
    தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
    கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
    கைக்குட்டை யாய்கையில் கட்டு….(17)

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….(19)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….(20)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….கிரேசி மோகன்….!

    Share
  • ஜீவான்மன்

     
    ஆடு நனைய அழுகின்ற ஓநாய்
    வாடும் மனமாம் வெறும்தாளில் –
    கூடாம் உடலில் உயிரைக் கொடுத்த
    மடலோ வியனே கடவுள்காண்….!

    ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
    போர்வை மனமோ நார்நாராம்
    கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
    புந்தியை ஈசா பிழிந்திடுவாய்….!

    கைலாஸங்கள் வைகுண்டங்கள்
    காண்போர் கண்ணுக்கு மெய்யாகும்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….

    மதங்கள் நூறு ஜாதிகள் கோடி
    ஆதி அந்தமும் ஒன்றல்லோ
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை…!

    பூரணத்தைப் பரிபூரணமாக
    ஜீரணம் செய்யும் சூரணமே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….(தொடரலாம்….!)

    Share
  • ’’ஜீவான்மன்’’….!

    கிரேசி மோகன்

     
    தாளமது வேதாளமாகினால்
    முருங்கையின் உச்சியில் விக்ரமனே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….

    கண்ணனின் உன்னத கீதையினாலே
    குருஷேத்ரமே கலங்கியதே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    சொப்பனம், ஜாக்ரத்,சுஷூப்தி மூன்றுக்(கு)
    அப்பால் உள்ளது அது துரியம்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

    கனவினில் கொண்ட தாகம் தீர்க்கும்
    கனவுநீரது கானல் நீர்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    கனவுக்கும் நனவுக்கும் உள்ள வித்யாசக்
    கடுகளவைப் போய் கடலளவாய்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

    காண்போன், காண்பது, காட்சிகள் யாவையும்
    வீண்போம் விழித்து எழுந்தக்கால்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    எதுதான் கனவு எதுதான் நனவு
    யாரறிவார் இவ்வியனுலகில்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

     

     

    Share
  • ‘’நந்தனார்’’….!

     

    இன்று ‘’நந்தனார்’’ சினிமா பார்த்தேன்….அடடா க்ளைமாக்ஸ் ஆடடா என்றிவர் பாட ,நடராசர், உமையாளொடு ஆட அட்டகாசம்….மெய்சிலிர்ப்பு….அதனால் அம்பலவாணரே ‘’ஆட வருகவே’’…..!

    ஆட வருகவே….
    ———————–

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)….கிரேசி மோகன்….!
    ————————————————————

    Share
  • ’’வெண்பூ வெண்பாக்கள்’’….!

     

    ’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
    ———————————————————————————————————————
    நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(1)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(3)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(4)

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள வா’’….(5)

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    FullSizeRender

    ———————————————————–

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு….!

    அகந்தை இறக்குமங்(கு) ஆன்மா பிறக்கும்
    புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும் -மகிழ்ந்திருப்போம்
    ஆரா அமுதத்தில் ஆனந்த சாகரத்தில்
    நாரா யணஓம் நம….!
    நமநம என்றவனை நச்சரிப்பாய் நாமம்
    கமகமக்கும் நாவால் கணமும் -எமனெதிர்
    வந்தாலும் அச்சமின்றி நந்தமகன் அச்சுதன்
    சொந்தம் நமக்கென்று சொல்….

    கொட்டுது தேளின் கொடுக்காய்ப் புலனைந்தும்
    பட்டது போதும் பரந்தாமா -சட்டென
    வந்தெனக்குச் சத்துவ வாழ்வை அளித்திடுவாய்
    நந்தலாலா இந்தநாளே நீ….!

    நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது….!

    அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்

    Share