Category: பொது

  • BIT COIN – பிட் காயின்

    பவள சங்கரி

    மத்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!. – BIT COIN – பிட் காயினை நம்பாதீர்கள். பிட் காயின் என்பது உரூபாயோ, டாலரோ அல்ல. இது ஆன்லைனில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தக்கூடியது. இன்று பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கிறோம்பிட் காயினை எந்த நாடும், ரிசர்வ் வங்கியும் அங்கீகாரம் செய்யவில்லை. நம் ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. பல இலட்சம் கோடிகள் இழப்பதற்கு முன்பு விழித்துக்கொள்வது அவசியம்..

    Share
  • மாதச்செலவுத் திட்டம்

    பவள சங்கரி

    மாதச்செலவுத் திட்டம் போடும்போது செலவுக் கணக்கை மட்டும் எழுதாமல் எந்தப் பொருள் எங்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் உளுந்து பற்றி பார்ப்போம். 1 கிலோ உளுந்தின் விற்பனை விலை  ₹ 96. பர்மா உளுந்து ₹ 76. மொத்த விற்பனை மண்டியில் வாங்கினால் 1 கிலோ உளுந்து ₹ 120 க்கு வாங்கலாம். பெரிய மால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று போனால் ₹ 140. சின்ன மளிகைக் கடையில் குறைந்தபட்சம் ₹ 150. அதுவும் நோட்டு போட்டு மாசக் கடனுக்கு வாங்குபவர்களுக்கு கடைக்காரர் போடுவதுதான் விலை.. ஆக கிட்டத்தட்ட இரண்டு பங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அரசு தலையிட்டு, தர நிர்ணயம், விலைக் கட்டுப்பாடு கொண்டுவந்தால் மத்தியதர மக்கள், ஏழை எளியவர்களுக்கு பயன்படும்.

    Share
  • இதுதான் அரசியல்!

    பவள சங்கரி

    Biden-awarded-presidential-Medal-of-Freedom

    அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பொறுப்பிலிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் அடுக்கு மாடிக்குடியிருப்பில் இன்று குடிபுகுந்துள்ளார். அவருடைய துணை ஜனாதிபதி, ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்தவர் இவர். தான் குடியிருப்பதற்கு வைத்திருந்த ஒரே வீட்டையும் விற்று அட்வகேட் ஜெனரலாக இருந்த தன்னுடைய மகனின் வைத்திய செலவிற்கு பயன்படுத்தியும் அந்த மகனும் இறந்த அவலத்தில் இருக்கிறார். இன்று வாடகை வீட்டிற்கு தம் மனைவியுடன் குடிபுகுந்துள்ளார். அவருடைய நேர்மையையும், செயல் திறனையும் பாராட்டி அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான விருதான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது யாருக்கு வழங்கப்படுகிறது என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் முன்பு மேடைக்கு வந்த ஒபாமா அந்த விருதுக்குரியவராக துணை ஜனாதிபதி ஜோ பிடன் பெயரை அறிவித்தபோது ஆச்சரியத்தில் கண்ணீர் மல்க விருதைப் பெற்றார் ஜோ பிடன். ஆனால் நம் நாட்டின் நகராட்சி உறுப்பினர்கள் கூட இதைவிட பன்மடங்கு உயரத்தில் இருப்பவர்கள் என்பது எத்தனை பெருமைக்குரிய விசயம்.. நாங்கள் இந்தியர்களாக்கும்.. !
     
    நம் அரசியல் தலைவர்களும் கொஞ்சம் கருணை வைத்தால் நலம்.. 🙁
    Share
  • ஆற்றல்மிகு இயங்கு நகரம்!

    பவள சங்கரி

    உலகில் உள்ள சிறந்த 140 நகரங்களில் முதலாவதாக ஆற்றல்மிகு இயங்கு நிலை நகரங்களில் முதலாவதாக பெங்களூரூ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நகரத்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு வந்துள்ள பெங்களுரூ நகரத்திற்கு வாழ்த்துகள். தொழில் துறை வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட், போன்ற அனைத்துத் துறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சென்னை 17 வது இடத்திலும், மும்பை, தில்லி 23, 25 வது இடத்திலும் உள்ளன. இந்த 140 நகரங்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சீனாவை இந்தியா பின் தள்ளியுள்ளது.

    Share
  • வேதனையின் உச்சம்!

    பவள சங்கரி

    இந்தியாவில் மொத்த பெண்கள் தொகை 40 கோடி. இதில் 40% பெண்கள் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலங்களும் கிடையாது. அதனால் இவர்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரமோ அல்லது அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைப்பதில்லை.

    Share
  • உழவர் திருநாள் நற்செய்தி!

    பவள சங்கரி

     

    விவசாயிகளின் துயர் துடைக்க செயற்கை மழையை வரவழைத்து பயிர்செய்ய வழிவகுக்க அரசு ஏன் முயலவில்லை? சீனாவின் மஞ்சள் நதி பிரதேசத்தில் வறட்சி ஏற்பட்டபோது ஆண்டொன்றிற்கு 55 பில்லியன் டன் செயற்கை மழையின் மூலமாக நீர் வரவழைத்து விவசாயம் தழைக்கச் செய்துள்ளனர். இன்று 55 பில்லியன் என்ற அளவை நான்கு மடங்காக அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 55 பில்லியன் என்பது 4 காவேரி நீர் வரத்திற்கு இணையாகும்..
     
    100 மி.மீ மழை மட்டுமே பெய்யக்கூடிய துபாய் நாட்டில் அமெரிக்காவின் துணையோடு செயற்கை மழை பெய்வித்துள்ளனர்.
     
    உழவர் திருநாளான இன்று விவசாயப் பெருமக்களின் துயர் துடைக்கும் அளவில் இதுபோன்று நல்ல திட்டங்களை செயல்படுத்த அரசு முன் வரவேண்டும். பொது மக்களின் வாழ்வாதாரமும் இதில்தான் அடங்கியுள்ளது என்பதையும் அரசு உணர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
     
    2013 ஆம் ஆண்டிலேயே சீனர்கள் இந்த செயற்கை மழைத் திட்டத்தை செயல்படுத்திவிட்டனர். இனிமேலாவது நாமும் விழித்துக்கொள்ளாவிட்டால் தமிழகமே பாலைவனம் ஆகும்.. பஞ்சம் தலைவிரித்தாடும்!
    Share
  • சுய மரியாதை!

    பவள சங்கரி

    kiran-bedi

    புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான தோற்றமும் அவர் 61 வயதைக்கடந்தவர் என்று அறியும்போது ஆச்சரியம் கொள்ளவைக்கும். ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் என்பவர் இவரைப் பற்றி, “யெஸ், மேடம் சார்” என்ற ஆவணப்படம் உருவாக்கியிருக்கிறார் .

    சமீபத்தில் திருமணமான ஒரு இளம் இணையர் இவரிடம் ஆசிகள் பெறுவதற்காக காலில் விழுந்திருக்கின்றனர். அவர் உடனே அதைத்தடுத்து காலில் ஏன் விழுகிறீர்கள் என்று கூறிவிட்டு தானும் அவர்கள் காலில் விழுந்துள்ளார். இனியொருவர் இதுபோன்று சக மனிதர் காலில் விழவேண்டியதில்லை என்ற சுய மரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்!

    Share
  • வன்முறை தடுப்புச்சட்டம்!

    பவள சங்கரி

    சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதில், 2013 – 2015 வரையிலான காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது மிக அதிகமான தாக்குதல் நடைபெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் பீகார் இந்த வன்முறையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது. தமிழகம் இதில் ஒன்பதாவது இடத்தில் (5,131 வழக்குகள் பதிவு) இருக்கிறது. 14 மாநிலங்களில் வன்முறை தடுப்புச்சட்டத்தைச் செயல்படுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வன்முறை தடுப்புச்சட்டத்தின் 14வது பிரிவின்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தனி நீதி மன்றங்களை அமைக்க வழிவகுக்கிறது. 8 மாநிலங்களில் ஒற்றைப்படை இலக்கங்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 7.6%, தமிழ்நாடு, தெலுங்கானாவில் 7.5%, குஜராத்தில் 3.1% மேற்கு வங்கத்தில் மிகக்குறைவாக 3% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.  சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் இவை.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  55

    -க. பாலசுப்ரமணியம்

    வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் (3)

    education

    இது ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி. மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற ஒரு மாணவன் அன்று பள்ளி முடிந்ததும் தனது மாதாந்திர மதிப்பீட்டிற்கான பதிவேட்டினை (Progress report) தனது தாயிடம் அளிக்கிறான். அதைக் கவனித்த அவன் தாய் “கணக்கிலே வெறும் 85 மார்க்குகள்தானா? இப்படி எடுத்தால் எப்படி உருப்படுவாய்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே உனக்கு இடம் கிடைக்கும்?” என்று கேட்கிறாள்.

    அதற்குப் பதிலளிக்கும் வகையில் மகன் பொறுமையாக “அம்மா, எனக்கு அறிவியலில் 100 மார்க்குகள் கிடைத்துள்ளன. ஆங்கிலத்திலே 97 மார்க்குகள், சமூக இயலில் 93 மார்க்குகள் கிடைத்திருக்கின்றன” எனப் பதிலளிக்கிறான்”. உடனே தாய் “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. கணக்கில் ஏன் மார்க்குகள் குறைந்தன? உங்க அப்பாவுக்கு யார் பதில் சொல்றது? நீயே உன் அப்பாவிடம் பேசிக்கொள்” என்று சொல்லி அலுவலகத்தில் இருக்கும் தனது கணவரிடம் அலைபேசியில் “உங்க பையனை நீங்களே கேட்டுக் கொள்ளூங்கள்” என்று அவன் கையில் அலைபேசியைக் கொடுத்து விடுகிறாள்.

    ”என்னடா ஆச்சு உனக்கு…. ஏன் இவ்வளவு கம்மி மார்க்? என்று கேட்கும் தந்தையிடம் மகன் கூறுகிறான், “அப்பா, எனக்கு அறிவியலில் 100 மார்க் கிடைத்திருக்கின்றதே” என்று சொல்ல, “அதேபோலக் கணக்கிலே ஏன் வாங்கவில்லை?” என்று தந்தை வினவ,” அப்பா, நான் முயற்சிக்கிறேன்.” என்று மகன் சொல்லுகிறான்.

    அடுத்த பரிட்சையில் கணக்கிலே 100 வாங்குவேன் என்று உறுதிசொல்லுவாயா?”என்று தந்தை கேட்க முடியாதுப்பா. நான் முயற்சிதான் செய்ய முடியும். கிடைப்பதும் கிடைக்காததும் என் கையில் இல்லை என்று அழகாகப் பதில் கூறுகின்றான்.

    “எப்பொழுது 100 கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லுவாய்?” என்று அவர் மீண்டும் கேட்க, எப்பொழுதுமே என்னால் சொல்ல முடியாது. என்னால் எப்பொழுதும் முயற்சிக்கத்தான் முடியும். நான் எவ்வளவு முயற்சி இப்போது செய்கிறேனோ அதைவிட அதிகமாக முயற்சிப்பேன்.

    100 மார்க் வாங்குவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு முயற்சிப்பேன்.” என்று பதிலளிக்க, தாய்க்கும் தந்தைக்கும் ஒரே வருத்தம். ஆனால் இதைவிட ஒரு தர்க்கரீதியான, புத்திசாலித்தனமான பதிலை யாரும் கொடுத்திருக்க முடியாது. அதுவும் மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற ஒரு மாணவன்!

    பொதுவாக வீடுகளில் குழந்தைகள் ஏதாவது சிறப்பாகச் செய்யும்பொழுது அதைப் பாராட்டுவதில்லை. பதிலாக, குறைகளையே முன்னிறுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தாயின் அடுத்த கவலை, இவனை நூறு மார்க்குகள் வாங்க வைக்க என்ன செய்யலாம்? இவனுக்குத் தனியான டியூஷன் ஏதாவது வைக்கலாமா என்று!

    பொதுவாக வீடுகளில் குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்புவது ஒரு பெருமைக்குரிய  விசயமாக ஆகிவிட்டது. என் குழந்தை கணக்குக்கு டியூஷன் போறான்; இங்கிலீஷுக்கு டியூஷன் போறான். அதைத்
    தவிர மியூசிக், டென்னிஸ் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுவது தற்காலத்திய வாழ்க்கை முறையில் ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இவை குழந்தைகளுக்குத் தேவைதானா என்பதை யோசித்துச் செய்தல் நலம்.

    “எங்களுக்கு அவனோடு உட்கார நேரமில்லை” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் பலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கில் டியூஷனில் செலவிடுவதைவிட ஒருசில மணித்துளிகள் அவர்களுடன் கூட அமர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுதல் சிறப்பானது.

    அண்மையில் வெளிவந்த “அம்மா கணக்கு ” என்ற திரைப்படத்தில் தன் மகளுக்காகத் தாயும் கூட அமர்ந்து கற்றுக்கொள்ளுவது மிகச்சிறப்பான கருத்து. பொதுவாகப் பெற்றோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது, ஆகையால் கருத்துக்களை தாங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று நினைப்பதே ஒரு தவறான கருத்து. முயற்சி திருவினையாக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.

    டியூஷன் படிப்பதால் மட்டும் குழந்தைகள் சிறப்பாகச் செய்வார்கள் என்ற கருத்து மிகத் தவறானது. இதனால் நிச்சயமாகச் சற்று முன்னேற்றம் ஏற்படலாம், மற்றவர்களுடைய அணுகுமுறைகளை அறிந்துகொள்ளலாம், தவிர இவைகளைத் தவிர்க்க முடியாததாகப் பெற்றோர்கள் கருதக்கூடாது. சில நேரங்களில் இந்த நேரத்தை அவர்கள் மற்ற திறன்களை மேம்படுத்தவோ அல்லது மூளைக்கு ஓய்வு கொடுக்கவோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

    பொதுவாக இந்த இடங்களில் மாணவர்களை ஒரு யந்திரமாக்கி அவர்களின் மனப்பாடத்திறமைகளை வளர்த்துப் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்குத் தயார் செய்யப் படுகிறார்கள். சற்றே சிந்தித்தால் நமது அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு நம்மால் குழந்தைகளுக்கு அதிக நேரத்தை தர முடியும். முயற்சிக்கலாமே?

    (தொடரும்)

    Share
  • வான்கோழிகளின் தியாகத் திருநாள்!

    -மேகலா இராமமூர்த்தி

    நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை நன்றியறிதல்நாளாக (Thanksgiving Day) அமெரிக்கர்கள் கொண்டாடுவது வழக்கம். அமெரிக்க உள்நாட்டுப்போர் (American Civil War) நடந்துகொண்டிருந்த காலகட்டமான 1863-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அவ்வாண்டின்  நவம்பர் 26-ஆம் நாள், நன்றியறிதல்நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர் அந்நடைமுறை இன்றுவரைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அமெரிக்காவில்!

    நன்றியறிதல்நாள் தற்போது கனடா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவது இவ்விழாவின்மீது உலகமக்களுக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றது. இந்நன்றியறிதல்நாள் விழாவில் மக்களின் விருந்துணவில் முக்கிய இடம்பிடிப்பது வான்கோழி இறைச்சி.

    வான்கோழி என்றதும் கானமயிலும் உடனே நம் நினைவுக்கு வந்துவிடுகின்றது. மயிலோடு போட்டியிடும் வான்கோழி குறித்து அறிவுசால் நங்கையாம் அவ்வை மொழிந்திருக்கும் மூதுரை வரிகள் மறக்க இயலாதவை!

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானு
    மதுவாகப் பாவித்துத்–தானுந்தன்
    பொல்லாச்
    சிறகைவிரித் தாடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி.

    turkey_and_peacock”எதனையும் முறையாகக் கல்லாத ஒருவன், கசடறக்கற்றவன் ஒருவன் கவிபாடுதல் கண்டு தானும் கவிபாடுதல், கானமயில் தன் அழகிய தோகையை விரித்தாடுதல் கண்ட வான்கோழி, தானும் தன் அழகில்லாச் சிறகை விரித்தாடுதல் போன்று  நகைப்புக்கிடமானது” என்கிறார் அவ்வை.

    அழகுக்குப் போட்டிவைத்தால் அனைவரின் வோட்டும் மயிலுக்குத்தான் விழும்; வான்கோழி ’டெபாசிட்’ இழக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இறைச்சிச்சுவை என்று வரும்போது வான்கோழியைக் குறைத்து மதிப்பிட இயலாது; சுவையில் அது மயிலை வென்றுவிடும் தகுதி படைத்தது என்கிறார்கள் அசைவப் பிரியர்கள்!

    பெரிய உருவமும் விசிறிபோன்ற இறகுகளும் கொண்ட வான்கோழி, அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையாயிருந்தும், அதற்கு Turkey என்ற ஆங்கிலப்பெயர் வந்தது எப்படி என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு. அந்த அமெரிக்கப் பறவை துருக்கியப் பறவையாக ஆனதெப்படி என்பதற்குக் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் மரியோ பை (Mario pei) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்:

    ஐரோப்பியர்கள் முதன்முதலில் வான்கோழியைக் கண்டதென்னவோ அமெரிக்காவில்தான்; ஆயினும், அப்பறவையை மேற்கு ஆப்பிரிக்காவின் கினி பகுதியைச் சேர்ந்த கோழிவகை (Guinea fowl) என்று அவர்கள் தவறாக எண்ணிக்கொண்டார்கள். அது, துருக்கிய வணிகர்களால் கான்ஸ்டாண்டிநோபில் (Constantinople – it’s modern name is Istanbul) நகரின் வழியாக ஐரோப்பாவுக்கு அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்டதைக் கண்ட அவர்கள் அப்பறவைக்குத் துருக்கியக் கோழி (turkey fowl) என்று பெயர்சூட்டியிருக்கிறார்கள். இதுவே பின்னாளில் Turkey என்று சுருங்கிவிட்டது என்கிறார் அப்பேராசிரியர்.

    வான்கோழி விருந்து நன்றியறிதல்நாளில் நுழைந்தது எப்படி?

    turkeyஇங்கிலாந்து நாட்டுக் கிறித்தவம் தந்த நெருக்கடிகளையும் கடுமையான சட்டதிட்டங்களையும் விஷமென வெறுத்த சுதந்திரச் சிந்தனைகொண்ட வெள்ளையர்கள் சிலர் (they are popularly known as pilgrims) அங்கிருந்து கிளம்பி, மே மலர் (Mayflower) எனும் சிறிய படகில் புறப்பட்டு, புயலிலும் கடுங்குளிரிலும் 65 நாட்கள் நெடும் கடற்பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் மசாசுசெட்ஸிலுள்ள (Massachusetts) ஒரு துறைமுகப்பகுதியை 1620-இல் வந்தடைந்திருக்கின்றனர். அவர்கள் அப்பகுதிக்கு இட்டபெயர் ப்ளைமவுத் (Plymouth) என்பதாகும். பசிக்கொடுமையாலும் குளிரின் கடுமையாலும் வந்தர்களில் பாதிப்பேர் பரிதாபமாக இறந்துபோயினர்!

    எஞ்சியிருந்த வெள்ளையருக்கு ப்ளைமவுத் பகுதியை ஒட்டிய காடுகளில் வசித்துவந்த அமெரிக்கப் பழங்குடியினரோடு பழக்கம் ஏற்பட்டது. கள்ளமற்ற உள்ளம் படைத்த அந்தப் பழங்குடிமக்கள், புதிதாக வந்தவர்களுக்கு உணவு தந்து உபசரித்ததோடு, குடியிருப்புக்களை உருவாக்கிக்கொள்ளவும், சோளம், பரங்கி முதலியவற்றைப் பயிரிடவும், நன்னீரில் மீன்பிடித்தலையும் புதியவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனர். அதன்பயனாக, அடுத்த ஆண்டே, அதாவது 1621-இல், தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சலைக் கண்ட வெள்ளையர்கள் அதற்கு இறைவனுக்கு நன்றிதெரிவிக்கும் முகமாக நன்றியறிதல்நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். உணவுப்பொருள்களை விளைவிக்கக் கற்றுத்தந்த இப்பழங்குடியினருக்கும் அந்நன்னாளில் விருந்தளித்து உபசரித்திருக்கின்றனர்.

    அந்த நன்றியறிதல்நாள் விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட்டன என்ற தகவலை அவ்விருந்தைத் தயாரித்த சமையற்காரர்கள் பதிவுசெய்யாததால், அதில் வான்கோழி இடம்பிடித்திருந்ததா இல்லையா எனும் கேள்விக்கு நம்மால்  துல்லியமாகப் பதில்சொல்ல இயலவில்லை.

    ஆயினும் வான்கோழிகளின் தொடக்ககாலப் பயன்பாடுகளை ஆராய்ந்தவர்கள் அவை ஆரம்பத்தில் உணவுக்காகப் பயன்படுத்தப்படவில்லையென்றும், அவற்றின் சிறகுகள் மட்டுமே கால்மிதிகள், போர்வைகள் முதலியவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறுகிறார்கள். பின்னர், அவற்றின் இறைச்சியையும் ருசிபார்த்த மக்கள் அதன்சுவையில் ஈடுபட்டிருக்கவேண்டும். அந்த இறைச்சியைத் தங்களுடைய நன்றியறிதல்நாள் விழாவின் சிறப்புணவாக அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

    வான்கோழி இவ்விழாவில் இடம்பிடித்ததற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான போரில் ஸ்பெயின் ஈடுபட்டபோது ஸ்பெயினின் கப்பலொன்று விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கிவிட்டதாம். அதனையறிந்த இங்கிலாந்து மகாராணியார் முதலாம் எலிசபெத், வான்கோழிக்கறியை உண்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாராம். அந்த அடிப்படையில்தான் மகிழ்ச்சித் திருநாளான நன்றியதல்நாளையும் அவ்வாறே வான்கோழியோடு கொண்டாடுவது எனும் வழக்கம் ஏற்பட்டதாம். (மாற்றானின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிகொண்டு ஆனந்தக்களியாடும் அநாகரிக வழக்கத்தை மானுடம் என்றுதான் நிறுத்தப்போகிறதோ தெரியவில்லை!)

    அறுவடைத் திருநாளே நன்றியறிதல்நாளாக மலர்ந்திருக்கின்றது எனும்போது, அவற்றைக் கொண்டாடும் நாடுகள், அங்கே புதிதாக அறுவடையான உணவுப்பொருள்களையும், தானியங்களையும் கொண்டு உணவுசமைத்து உண்பதே பொருத்தமுடையதாக இருக்கும். அதைவிடுத்து, வான்கோழிகளைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்து இந்நாளில் புசிப்பது எதற்காக? எத்தனை வான்கோழிகள் மக்களின் அற்ப மகிழ்ச்சிக்காகவும் பாரம்பரிய வழக்கத்துக்காகவும் இந்நன்னாளில் தம் இன்னுயிரைத் தியாகம் செய்கின்றன என எண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகின்றது.

    நன்றியறிதல்நாள் என்றும் அறுவடைத் திருநாள் என்றும் சம்பிரதாயமாக இந்நாளை அழைப்பதைக் காட்டிலும் ’வான்கோழிகளின் தியாகத் திருநாள்’ என்று அழைப்பதுதான் சாலப்பொருத்தமாக இருக்குமோ?

    Share
  • தண்டனை

    க. பாலசுப்பிரமணியன்

    நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நேற்றும் இன்றும் காணக்கிடைக்காத காட்சி… உண்மை…. கண்களை அகலமாய் திறந்து பார்த்தாலும் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களோ அல்லது மனிதர்களோ  கண்ணில் பட மாட்டார்கள் .. இது பனிமூட்டமல்ல.. புகைமண்டலம்! குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் 1800 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன.

    மாலை நேரத்தில் காற்றில் மிதந்துநின்ற கரித்துகள்களும் தூசியும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த கலவைப் பொருள்களும் கீழிறங்கி வந்து புகைமண்டலமாக மனிதர்கள் மூச்சு விடுவதற்கே தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. சுவாசிப்பதில் சாதாரணமாக இருக்கும் மனிதர்களுக்கே இந்த கதியென்றால் ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருப்பவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம்… என்ன கொடுமையிது!

    மனிதர்களுடைய அடிப்படைத்தேவையான காற்றே கலப்படமாகி சுவாசிக்க முடியாமல் போனால்.. நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்? இதற்க்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு?

    உடனே மத்திய அமைச்சரவை கூடி அபாய மணியை அடித்தது.. டில்லியின் ஆளுநர் மந்திரிசபையின் கூட்டத்தைக் கூட்டினார்.. டில்லியின் முதலமைச்சர் தன்னுடைய மந்திரிசபையைக் கூட்டினார்… இன்னும் சில நாட்களுக்கு கட்டுமானத் தொழில் மற்றும் ஜெனரேட்டர் இயக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டன. இதெல்லாம் சரி.. இவையெல்லாம் எரியும் நெருப்பை அணைக்கும் செயல்கள்தானே? இவற்றிற்கான மூலகாரணங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

    சில ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு காரில் ஐந்து நிமிடத்தைக் கடந்த தூரத்தை இன்று கடக்க அரைமணி நேரம் ஆகின்றது.. அத்தனை நெரிசல்.. அலை அலையாகக் கார்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்..

    நாம் தேவைகளை அதிகரித்துக்கொண்டு விட்டோம் .. ஆனால் உண்மையில் அவை தேவைகளா? இல்லை பல நேரங்களில் நமது தேவையற்ற ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் நாம் இயற்கையை பயன்படுத்திக்கொண்டும் மாசுபடுத்திக்கொண்டும் இருக்கின்றோமா?  சிந்திக்க வேண்டிய நேரம்..

    இன்று புதுதில்லியில் நடப்பது நாளை மும்பையில் நடக்கும். இன்னொருநாள் பெங்களூரிலோ அல்லது சென்னையிலோ நடக்கும். இது ஒரு நகரத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல.. இது ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தேக்கத்தையும் பொறுப்பற்றத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

    நேற்று விமானத்தில் ஏறும் பொழுது பலர் அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர்.. “இந்த நிலைமைக்கு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. என்ன செய்யப்போகின்றது?” இந்த மாதிரி பேச்சுக்களில் ஏதோ அரசாங்கத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நாம் சிந்திக்கிறோம்… உண்மைதான்.. ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் நல்லபடியாக கண்காணிக்கப்பட்டால் இந்த நிலைமை வாராது இருக்கலாம். ஆனால் இதற்கு முக்கிய காரணம் முழுமையாக சமுதாய நோக்கும் போக்கும்தானே?

    இந்த தண்டனை யாருக்கு யார் கொடுத்தது?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (216)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாம் வாழும்காலம் மட்டும் உடல்நலக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் உரிமை ஒரே விதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நிலையும் வித்தியாசப்படுவது இயற்கையே. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் வைத்திய வசதிகள் அவர்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பது இந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வா?

    எமது பின்புல நாடுகளில் பணமிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தமது வசதிகளுக்கேற்ப நவீன வசதியுடன் சிகிச்சைகளைப் பெறுவதும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அரசாங்க வைத்தியமனைகளில் கிடைக்கக்கூடிய சிகிச்சையை மட்டுமே பெறும் நிலை காணப்படுவது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இங்கிலாந்தில் இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று 1946ஆம் ஆண்டு முதல் கோஷம் முன்வைக்கப்பட்டது. சிகிச்சையைப் பொறுத்தஅளவில் பொருளாதாரத்தில் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் சிகிச்சை பெறுமிடத்தில் ஒரே தராதரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதன் விளைவாக 1948ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது. அதன் விளைவே இன்று நாம் இங்கிலாந்தில் அனுபவிக்கும் சிகிச்சை வழிகள். இந்த அரசாங்க அமைப்பு “தேசியச் சுகாதார சேவை ( National Health Service – NHS) என்றழைக்கப்படுகிறது.

    பணிபுரியும் அனைவருடமிருந்தும் அவர்களது ஊதியத்தில் ஒரு சிறுஅளவு அரசாங்கத்தினால் தேசியப் பாதுகாப்பு நிதிக்காக அளவிடப்படுகிறது. அதன் காரணமாக நாட்டிலுள்ள அனைவருமே இலவச சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்போது பல கேள்விகள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சிக்கலான காலகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இலவசச் சுகாதரச் சேவையைத் தொடர முடியும்? என்பது பொதுவான ஒரு கேள்வியாகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்துக்கும் இன்றைய இங்கிலாந்துக்கும் இடையில் பல வேறுபாடுகளுண்டு. ஜனத்தொகையின் பெருக்கம் பல மடங்காகியுள்ளது. அது மட்டுமின்றி பல நவீன மருந்துகளினால் மனிதர்களின் வாழ்க்கைக் காலம் நீட்சியடைந்துள்ளது. அதிகமான முதியவர்கள் தமது 90 வயதுகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வைத்தியத் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் இச்சுகாதாரச் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல வைத்தியசாலைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குன்றிப்போயுள்ளதாக பல புகார்கள் வந்த வண்ணமுள்ளது. டாக்டர்கள், தாதிமார்கள் மற்றைய பணியாளர்களின் ஊதியம் பலகாலமாக மிகவும் குறைந்த அளவிலான வீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளில் பணிபுரிவோர் அதிக அளவில் பணிகளுக்காக அந்நியநாடுகளுக்குச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இத்தகைய ஒரு சூழலில் இப்போது ஒரு பிரச்சனை பூதாகரகமாகக் கிளம்பியுள்ளது. இதுவரைக் காலமும் யாராவது இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சையும் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில வருடங்க:ளுக்கு முன்னால் அரசாங்கம் இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாகவோ அன்றி உறவினர்களைப் பார்ப்பதற்காகவோ வரும் எவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாக அன்றி இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்களாக இல்லாதவிடத்து வைத்தியச் செலவுகள் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும் எனும் சட்டம் இயற்றியது. ஆனால் இன்றுவரை இந்தச் சட்டம் முழுமையாக அமுல் நடத்தப்படுவதில்லை என்றும் ஏறத்தாழ 250 மில்லியன் வரையிலான இங்கிலாந்து பவுண்ட்ஸை இங்கிலாந்து வைத்தியத்துறை வருடமொன்றுக்கு இழக்கிறது என்றும் ஒருதரப்பினால் கணிக்கப்பட்டுக் கூறப்படுகிறது.

    இதுபற்றிய செய்தி ஒன்றுக்கு இங்கிலாந்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இங்கிலாந்தின் ஒரு முன்னணி வானொலி ஊடகமான எல்.பி.சி. எனும் வானொலி நிலையத்தின் நிகழ்வொன்றை நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலநேரம் திரு. நிக் வெராரி என்பவரால் நடத்தப்படும் ஒரு நேயர்களுடனான சம்பாஷணை நிகழ்வாகும். அப்போது ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட அந்தச் செய்தி ” ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்  நைஜீரியா நாட்டிலிருந்து விருந்தினராக இங்கிலாந்துக்கு வந்திருக்கும்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். அவருக்கான பிரசவ வைத்தியம் இங்கிலாந்து வைத்தியர்களினால் இலவசமாகச் சகல வசதிகளுடனும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு 146000 இங்கிலாந்துப் பவுண்ட்ஸ்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பணம் ஏன் அவரிடமிருந்து அறவிடப்படவில்லை?” என்பதுதான் ஊடகங்களின் கேள்வியும் குற்றச்சாட்டும்.

    அதுபற்றிய தொடர்ந்த தொலைபேசிச் சம்பாஷணையில் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்ட நைஜீரியப் பின்புலத்தைக் கொண்ட ஒரு நேயர் “நைஜீரியாவைப் பின்புலமாகக் கொண்ட பலர் இந்நாட்டில் சட்டபூர்வமாகப் பணிபுரிந்து அரசாங்கத்துக்கு வரி செலுத்தி வருகிறார்கள், பின் எதற்காக நீங்கள் நைஜீரிய மக்களைப் பற்றிக் குறைவாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான நிக் வெராரியிடம் கேட்டார். அதற்கு அவர் மிக அமைதியாக “ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் எது முக்கியச் செய்தியாகிறதோ அதை அலசுவதே எனது பணி. இம்முக்கியச் செய்தியின் சாரம் அப்பணத்தை அறவிடாத நிர்வாகக் குறையைச் சுட்டிக் காட்டுவதேயன்றி அந்த நைஜீரியப் பெண்மணியின் மீது குற்றம் கூறுவதல்ல. இச்செய்தியில் சம்பந்தப்பட்டவர் நைஜீரியப் பென்மணி அல்லாது ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணியாக இருப்பினும் விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உங்களைப் போலவே நானும் இந்நாட்டில் சட்டபூர்வமாக வரி செலுத்தி வாழும் பல நைஜீரிய பிரித்தானிய பிரஜைகளை அறிவேன். எனவே தயவுசெய்து இது நைஜீரிய நாட்டினருக்கெதிரான ஒரு விமர்சனம் என்று பார்க்காதீர்கள்”என்றார்.

    இந்நிகழ்வினைக் கேட்டதும் என் மனத்திலும் சிந்தனைகள் பறக்கத் தொடங்கின. இந்நாட்டில் சிறுபான்மையினர் எனும் எண்ணத்தோடு நாம் வாழும்வரைச் செய்திகளில் எம்மவர்கள் சம்பந்தப்பட்டால் அது எம்மீது தொடுக்கப்பட்ட ஒரு கெளரவப்பிரச்சனையாகச் சிந்திக்காமலே முடிவெடுத்து விடுகிறோமோ எனும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. இந்நாடு நம் அனைவருக்கும் பொதுவானது. இந்நாட்டின்வளர்ச்சியும், தாழ்ச்சியும் எம்மையும், எமது சந்ததியையும் தான் பாதிக்கப்போகிறது. இந்நாட்டின் நிர்வாகம் சரியாக நடத்தப்படாததையிட்டு நாமும்தான் வருந்த வேண்டும். ஆனால் அதில் எம்மைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏனோ அதனுள் இருக்கும் உண்மையான செய்திகளை மனம் உள்வாங்கிக் கொள்ள மறுப்பது எமது தனிமனிதக் குறைபாடா? இல்லை ஒட்டுமொத்தமாக எமது கலாசாரக் குறைபாடா?

    மீண்டும் அடுத்த மடலில்…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • தாய்மொழி!

    பவள சங்கரி

    உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு 45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்… பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

    பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மழலைப்பள்ளியில் படித்துவிட்டு வரும் வசதியான குழந்தைகள் 3000 வார்த்தைகள் கற்று வருகிறார்கள். ஆனால் வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் முதல் வகுப்பில் சேரும்போது 500 வார்த்தைகள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே இவர்களின் போராட்டம் ஆரம்பித்து விடுவதால் இரண்டாம் மொழி கற்பதில் இவர்களுக்கு பெரும் போராட்டம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..

    பொதுவாக ஒருவர் ஒரு நொடிக்கு ஒரு வார்த்தை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். வெளி வட்டாரம் அல்லது செயல்பாட்டு வாசகர்கள் என்றால் 1.5 நொடியில் ஒரு வார்த்தை வாசிக்க வேண்டும். இதைவிட மெதுவாக வாசிக்கும்போது இறுதியாகப் படித்து முடிக்கும் அந்த பத்தியின் முதல் வரியை மறந்தவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள் புதிய மொழி எழுத்துகளின் குறியீடுகளை அறிவதில் சிரமப்படுகிறார்கள். அவர்களால் போதிய விரைவில் வாசிக்க முடியாவிட்டால் அவர்கள் கவனம் முழுவதும் அந்தக் குறியீடுகளிலேயே நிலைத்துவிடுவதால் அந்தப் பத்தியின் கருத்துகளை உள்வாங்குவதில் கவனம் சிதறிப்போய்விடுகிறது. விரைவாக வாசிக்க முடியாத குழந்தையால், பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தையோ அல்லது ஆசிரியர் கற்பிப்பதையோ உள்வாங்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகளை வெகு எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகின்றன பள்ளிகள். எட்டு ஆண்டுகள் பள்ளியில் படிக்கும் குழந்தையை மக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இந்நிலை நம் இந்தியாவில்தான் மிகப்பரவலாக இருக்கிறதாம். உலக ஆய்வறிக்கை சொல்லும் வருத்தமான செய்தி இது…

    மழலைமாறா இளம் சிறார்களுக்கு ஆங்கிலம் போன்ற இரண்டாம் மொழியை முதலில் கற்பிப்பதனால் அக்குழந்தை தம் தாய் மொழியில் தேவையான அளவு வேகமாக வாசிப்பதற்கு தடை ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மிகவும் இன்றியமையாதது. இரண்டாம் வகுப்பில் சரளமாக வாசிக்க இயலாத குழந்தைகள் உயர் வகுப்புகளில் சக மாணவர்களுக்கு நிகராக நன்கு வாசிக்கும் திறன் கொண்டிருப்பது சாத்தியமே இல்லாமலும் போகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (212)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல, கோடையும், வசந்தமும் மாறி மாறி வருவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது போலத்தான் அரசியல் உலக மாற்றங்களும். 

    அரசியல் என்றால் என்ன? ஏதோ நாம் அறியாத எமக்குப் புரியாத ஒரு மந்திரமா? அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் என்ன அதற்காகவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுக் கையில் தாம் நினைத்தவுடன் அனைத்தையும் சரிசெய்துவிடும் மந்திரக்கோலைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டவர்களா?

    இல்லையே!

    அவர்களும் எம்மைப் போன்ற சாதாரண ஆசாபாசங்களுக்கும், உலக பந்தங்களுக்கும் ஆட்பட்ட மனிதர்களே! சமூகசேவை, மனிதர்களின் மேம்பாடு, மக்கள் சேவை என்பவற்றின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கான மாற்றமாக அரசியலைத் தேர்ந்தெடுத்து மக்கள்முன்னால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே அரசியல்வாதிகள். ஆனால் இன்றைய அரசியல் உலகில் இடம்பெறும் பல அநாகரிகமான செயல்கள் இவற்றையெல்லாம் கொச்சைப்படுத்துவதுபோலத் தம்முடைய சொந்தவாழ்வைக் குறுக்குவழியில் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் சிலர் அரசியலில் குதிக்கிறார்களோ என எம்மை எண்ணத்தோன்ற வைக்கிறது எனலாம். ஆனால் அரசியல் உலகில் இத்தகையோர் சிறுபான்மையினர் எனும் உண்மை எமது மனதில் ஓரளவு மன அமைதி கொள்ள வைக்கிறது.

    சுமார் நூறு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்து மக்கள் தமது வாழ்வை, தமது எதிர்காலத்தை முற்றாக மாற்றியமைக்கப் போகும் ஒரு முக்கியத் தீர்மானத்தை எடுத்தார்கள். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி நடந்த சர்வஜன வாக்கெடுப்பு சரித்திரப் பிரசித்தி பெற்றது. 41 வருடகாலமாக ஜக்கிய இராச்சியத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்த “ஜரோப்பிய ஒன்றிய”அமைப்பிலிருந்து தம்மை வெளியேற்றுக் கொள்ளும் முடிவினைப் பெரும்பான்மை பலத்தினால் இங்கிலாந்து மக்கள் எடுத்தனர். அதன்மூலம் அவர்கள் ஆட்சியிலிருக்கும் தமது அரசுக்கொரு கட்டளையிட்டனர். “ஜரோப்பிய ஒன்றியத்தின் “தொடர்ந்த அங்கத்துவம் தம்மைப் பாதிக்கக்கூடிய செயலாதலால் அதனின்றும் வெளியேறும் நடவடிக்கையை எடுக்கும் அதிகாரத்தைக் கட்டளை மூலம் வழங்கினார்கள்.

    சீட்டாட்டக் கட்டுகளினால் கட்டப்பட்ட மாளிகை ஒரு காற்றடித்ததும் அடுக்கடுக்காய்ச் சரிந்து விழுவது போல முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்திலும் படுவேகமான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என சுமார் 53% விகித மக்கள் வாக்களித்தாலும் 47%ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் நிலைப்பதை விரும்பினார்கள். நாடு ஏறத்தாழ கருத்தளவில் சரிபாதியாகப் பிரிந்து நின்றது. இந்நிலையில் சரியான, முறையான அரசியல்வாதிகளின் முக்கிய நகர்வு எதுவாக இருக்க வேண்டும்? பிளவுப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதே! ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெற வேண்டும் என்று வாதிட்ட அப்போதைய பிரதம மந்திரி டேவிட் கமரன் அவர்கள் மிகவும் கெளரவமாகத் தன் வாதத்தில் தோல்வியுற்றதற்காக மட்டுமல்லாது அவ்வாதத்தோல்வி கொடுத்த மாற்றங்களை ஏற்படுத்தும் தகுதி தனக்குக் கிடையாது எனும் காரணத்தினால் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.

    எதிர்க்கட்சித் தலைவரின் நிலையோ இதற்கு முற்றும் முரணானது. அவரது கட்சியைச் சேர்ந்த 170 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் அறியத்தந்தும் தனது பதவியை அழுங்குப்பிடியாகப் பிடித்து விட்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் நான் இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எமது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களினால் , பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்ல என்பதுவே. விளைவு? கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சிக்குள் ஒரு தலைவர் போட்டிக்கான தேர்தல் முடுக்கி விடப்பட்டு அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதே ஒரு எதிர்க்கட்சியின் முக்கிய கடமை என்பதினின்றும் விலகித் தமக்குள்ளே ஓர் உட்கட்சிப் போரில் ஈடுபட்டார்கள். மறுபடியும் அதே ஜெர்மி கோபன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பார்த்தீர்களா? முன்னைவிட அதிக வாக்கு வித்தியாசத்தினால் இம்முறை வெற்றி பெற்றது எனக்கு அடிமட்டத் தொண்டர்களிடையே இருக்கும் ஆதரவைக் காட்டவில்லையா? என்று மார்தட்டிக் கொள்கிறார். அவருக்கு எதிரானோர் தம்முடைய ஆதரவாளர்களின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சியமைக்க முடியாது; மற்றைய கட்சிகளின் வாக்காளர்களைக் கவரக்கூடியவகையில் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அத்தகைமை அவருக்கு இல்லை. அதனால் தாம் அரசமைப்பது என்பது இத்தலைவர் இருக்குமட்டும் முடியாத காரியம் என்கிறார்கள்.

    இத்தகைய ஓர் அரசியல் சூழலில் இங்கிலாந்து மக்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை “ப்ரெக்ஸிட் (Brexit)” எனப்படும் ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் அம்சமே! வெளியேறும்போது ஜக்கிய இராச்சியம் எத்தகைய ஒரு உடன்படிக்கையை ஜரோப்பிய ஒன்றியத்தின் “வியாபாரச் சந்தையுடன்” ஏற்படுத்திக் கொள்ளப்போகிறது? ஏனெனில் அவ்வுடன்படிக்கையின் அடிப்படையே தொடர்ந்த வெளிநாட்டு முதலீடுகளை உறுதிசெய்யும் என்பது ஓர் மறுக்க முடியாத உண்மை. இத்தகையதோர் பாரிய மாற்றம் ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது. ஆனால் அதன் தாக்கத்தை மென்மைப்படுத்த அரசின் நடவடிக்கைகள் எதுவாக இருக்கப் போகிறது? ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் ஜக்கிய இராச்சியம் ஒரு தன்னுரிமை பெற்ற, ஜரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்குள் கட்டுபட்டு நடக்க வேண்டிய அவசியமில்லாத நாடாகத் துலங்கப் போகிறது எனும் வாதத்தைப் பல தேசியவாதத் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெறும் கோஷங்கள் எனும் நிலையிலேயே இருக்கின்றன. இதன் உண்மையான தாத்பரியம் அதனைச் செயலாக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. அதற்குரிய மனத்தைரியமும், இவற்றின் அடிக்கோடாக மறைந்து நிற்கும் இனத்துவேஷத்தை அடியோடு அறுத்தெறியும் வல்லமை புதிய பிரதமர் திரேசா மே அவர்களுக்கு உண்டா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.

    அக்டோபர் மாதம் அனைத்து அரசியல் கட்சிகளினது மகாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. லேபர் கட்சி தனது பிரபல்யமான மிதவாத இடதுசாரக் கட்சிக் கொள்கைளினின்றும் விலகித் தீவிர சோஷலிசக் கட்சியாகத் தன்னை இனம்காட்டி நிற்கிறது. வெறும் கோஷங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் அது வேண்டுமானால் சுவையாகத் தென்படலாம் ஆனால் நடைமுறையில் இத்தகைய தீவிர இடதுசாரக் கொள்கையுடைய கட்சி இன்றைய ஜக்கிய இராச்சியத்தில் அரசமைக்கும் அளவுக்கு தேர்தல் பலம் பெறுவதென்பது மிகவும் சந்தேகத்துக்குரிய விடயமே!

    அதேநேரம் லேபர் கட்சியினால் கைவிடைப்பட்ட இந்த மிதவாத இடத்தைத் தமது மிதவாத வலதுசாரக் கொள்கையின் மூலம் கைப்பற்ற அரசாங்கத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி முனைகிறது. கடைசியாக நடந்துமுடிந்த அவர்களது மகாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் குறிப்பாகப் பிரதம மந்திரி திரேசா மே அவர்களின் உரை இதனை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கிறது.பாரம்பரியமாக லேபர் கட்சிக்கு வாக்களித்த வட இங்கிலாந்து தொழிலாளர்களின் வாக்குகளைத் தமது பக்கம் இழுப்பதற்கான சகல கொள்கை முழக்கங்களையும் அவர்கள் செய்கிறார்கள்.லேபர் கட்சி எதிர்க்கட்சியின் கடமைகளை மறந்து தமது சோஷலிசக் கொள்கைகளை இறுகப்பற்றி உட்கட்சிப்பூசலில் ஈடுபட்டிருக்கும்வரை கன்சர்வெடிவ் கட்சியின் காட்டில்தான் மழை.

    மக்களுக்காக அரசியலா? அரசியலுக்காக மக்களா?அதேகேள்வி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் எதிரொலிக்கிறது. அரசியல்வாதிகளின் உள்ளத்தில் எதிரொலிக்கிறதா? பொறுத்திருந்து பார்ப்பதுதான் இதற்கு விடையோ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • என் காளிக்கு..

    இசைக்கவி ரமணன்

     

    kali

    பச்சைரத்தம் சொட்டச்சொட்டப்
    பட்டைநாக்கு பளபளக்கப்
    பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ
    படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்!

    அச்சமஞ்சும் உன்வடிவை
    அகம்குலைக்கும் உன்னுருவை
    அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன்
    அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்!

    இச்சைபோன்ற இடரையெலாம்
    மிச்சமின்றி விழுங்கிவிடு
    என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு,
    என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு!

    கச்சைக்கட்டிக் கொண்டுவரும்
    கவலையைப் பொசுக்கியந்தக்
    கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக்
    கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1)

    இந்த உலகம் நொந்த உலகம்
    இவர்மனத்தில் தினம்கலகம்
    இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை
    இங்கெனக்கு வேலையென்ன புரியவுமில்லை

    கந்தனோடு பொய்கையிலே
    கவிதைபேசி ஆடியவன்
    சந்தையிலே காசும்பையு மின்றி நிற்கிறேன்
    சட்டையின்றிச் சவுக்கடிக்காய் என்னை விற்கிறேன்!

    எந்தவினை? ஏதுவிதி?
    எவரிடத்தில் இந்தச்சதி?
    உன்றன்பிள்ளை என்பதையே மறந்துவிட்டாயா? நானே
    ஊற்றித்தந்த கள்குடித்துக் கிறங்கிவிட்டாயா?

    அந்தமிலா ஓரிருளில்
    அந்தகார மாயெழுந்து
    வந்துநின்ற காட்சியினை எண்ணிப் பார்க்கிறேன், அந்த
    வாய்ப்புதவறிப் போனதென்று வருந்தி யழுகிறேன் (2)

    நிலவுநெகிழும் நிசியில் மனதில்
    உலவும் மின்ன லமிழ்த மாகக்
    குலவியென்றன் உயிரையெல்லாம் கொள்ளை யடிப்பாய்! இந்தக்
    குழந்தையிடம் குழந்தையாகச் சள்ளை படிப்பாய்

    கலகநடுவில் கண்விழிக்கும்
    கவிதையென்றன் காளியென்று
    உலகமறிய ஊர்நடுவே உடைத்துக் காட்டிடு! நம்
    உண்மையினைச் சந்தியிலே உடைத்துப் போட்டிடு!

    திலகமிட்ட சிறுமியாக
    சிரித்துக்கொன்ற குமரியாக
    திரைநரைத்த கிழவியாக வந்து நின்றனை
    திட்டமிட்டுத் திரும்பத்திரும்ப நின்று கொன்றனை

    உலகுபோதும் வாழ்வுபோதும்
    உறவுபிரிவுத் துயரம்போதும்
    உற்றபிள்ளை! பெற்றவளே ஓடி வந்திடு! காளீ
    உச்சிமுகர்ந் துன்மகவை உன்னில் சேர்த்திடு! (3)

    Share