இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (212)
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல, கோடையும், வசந்தமும் மாறி மாறி வருவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது போலத்தான் அரசியல் உலக மாற்றங்களும்.
அரசியல் என்றால் என்ன? ஏதோ நாம் அறியாத எமக்குப் புரியாத ஒரு மந்திரமா? அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் என்ன அதற்காகவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுக் கையில் தாம் நினைத்தவுடன் அனைத்தையும் சரிசெய்துவிடும் மந்திரக்கோலைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டவர்களா?
இல்லையே!
அவர்களும் எம்மைப் போன்ற சாதாரண ஆசாபாசங்களுக்கும், உலக பந்தங்களுக்கும் ஆட்பட்ட மனிதர்களே! சமூகசேவை, மனிதர்களின் மேம்பாடு, மக்கள் சேவை என்பவற்றின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கான மாற்றமாக அரசியலைத் தேர்ந்தெடுத்து மக்கள்முன்னால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே அரசியல்வாதிகள். ஆனால் இன்றைய அரசியல் உலகில் இடம்பெறும் பல அநாகரிகமான செயல்கள் இவற்றையெல்லாம் கொச்சைப்படுத்துவதுபோலத் தம்முடைய சொந்தவாழ்வைக் குறுக்குவழியில் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் சிலர் அரசியலில் குதிக்கிறார்களோ என எம்மை எண்ணத்தோன்ற வைக்கிறது எனலாம். ஆனால் அரசியல் உலகில் இத்தகையோர் சிறுபான்மையினர் எனும் உண்மை எமது மனதில் ஓரளவு மன அமைதி கொள்ள வைக்கிறது.
சுமார் நூறு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்து மக்கள் தமது வாழ்வை, தமது எதிர்காலத்தை முற்றாக மாற்றியமைக்கப் போகும் ஒரு முக்கியத் தீர்மானத்தை எடுத்தார்கள். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி நடந்த சர்வஜன வாக்கெடுப்பு சரித்திரப் பிரசித்தி பெற்றது. 41 வருடகாலமாக ஜக்கிய இராச்சியத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்த “ஜரோப்பிய ஒன்றிய”அமைப்பிலிருந்து தம்மை வெளியேற்றுக் கொள்ளும் முடிவினைப் பெரும்பான்மை பலத்தினால் இங்கிலாந்து மக்கள் எடுத்தனர். அதன்மூலம் அவர்கள் ஆட்சியிலிருக்கும் தமது அரசுக்கொரு கட்டளையிட்டனர். “ஜரோப்பிய ஒன்றியத்தின் “தொடர்ந்த அங்கத்துவம் தம்மைப் பாதிக்கக்கூடிய செயலாதலால் அதனின்றும் வெளியேறும் நடவடிக்கையை எடுக்கும் அதிகாரத்தைக் கட்டளை மூலம் வழங்கினார்கள்.
சீட்டாட்டக் கட்டுகளினால் கட்டப்பட்ட மாளிகை ஒரு காற்றடித்ததும் அடுக்கடுக்காய்ச் சரிந்து விழுவது போல முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்திலும் படுவேகமான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என சுமார் 53% விகித மக்கள் வாக்களித்தாலும் 47%ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் நிலைப்பதை விரும்பினார்கள். நாடு ஏறத்தாழ கருத்தளவில் சரிபாதியாகப் பிரிந்து நின்றது. இந்நிலையில் சரியான, முறையான அரசியல்வாதிகளின் முக்கிய நகர்வு எதுவாக இருக்க வேண்டும்? பிளவுப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதே! ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெற வேண்டும் என்று வாதிட்ட அப்போதைய பிரதம மந்திரி டேவிட் கமரன் அவர்கள் மிகவும் கெளரவமாகத் தன் வாதத்தில் தோல்வியுற்றதற்காக மட்டுமல்லாது அவ்வாதத்தோல்வி கொடுத்த மாற்றங்களை ஏற்படுத்தும் தகுதி தனக்குக் கிடையாது எனும் காரணத்தினால் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நிலையோ இதற்கு முற்றும் முரணானது. அவரது கட்சியைச் சேர்ந்த 170 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் அறியத்தந்தும் தனது பதவியை அழுங்குப்பிடியாகப் பிடித்து விட்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் நான் இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எமது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களினால் , பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்ல என்பதுவே. விளைவு? கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சிக்குள் ஒரு தலைவர் போட்டிக்கான தேர்தல் முடுக்கி விடப்பட்டு அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதே ஒரு எதிர்க்கட்சியின் முக்கிய கடமை என்பதினின்றும் விலகித் தமக்குள்ளே ஓர் உட்கட்சிப் போரில் ஈடுபட்டார்கள். மறுபடியும் அதே ஜெர்மி கோபன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பார்த்தீர்களா? முன்னைவிட அதிக வாக்கு வித்தியாசத்தினால் இம்முறை வெற்றி பெற்றது எனக்கு அடிமட்டத் தொண்டர்களிடையே இருக்கும் ஆதரவைக் காட்டவில்லையா? என்று மார்தட்டிக் கொள்கிறார். அவருக்கு எதிரானோர் தம்முடைய ஆதரவாளர்களின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சியமைக்க முடியாது; மற்றைய கட்சிகளின் வாக்காளர்களைக் கவரக்கூடியவகையில் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அத்தகைமை அவருக்கு இல்லை. அதனால் தாம் அரசமைப்பது என்பது இத்தலைவர் இருக்குமட்டும் முடியாத காரியம் என்கிறார்கள்.
இத்தகைய ஓர் அரசியல் சூழலில் இங்கிலாந்து மக்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை “ப்ரெக்ஸிட் (Brexit)” எனப்படும் ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் அம்சமே! வெளியேறும்போது ஜக்கிய இராச்சியம் எத்தகைய ஒரு உடன்படிக்கையை ஜரோப்பிய ஒன்றியத்தின் “வியாபாரச் சந்தையுடன்” ஏற்படுத்திக் கொள்ளப்போகிறது? ஏனெனில் அவ்வுடன்படிக்கையின் அடிப்படையே தொடர்ந்த வெளிநாட்டு முதலீடுகளை உறுதிசெய்யும் என்பது ஓர் மறுக்க முடியாத உண்மை. இத்தகையதோர் பாரிய மாற்றம் ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது. ஆனால் அதன் தாக்கத்தை மென்மைப்படுத்த அரசின் நடவடிக்கைகள் எதுவாக இருக்கப் போகிறது? ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் ஜக்கிய இராச்சியம் ஒரு தன்னுரிமை பெற்ற, ஜரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்குள் கட்டுபட்டு நடக்க வேண்டிய அவசியமில்லாத நாடாகத் துலங்கப் போகிறது எனும் வாதத்தைப் பல தேசியவாதத் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெறும் கோஷங்கள் எனும் நிலையிலேயே இருக்கின்றன. இதன் உண்மையான தாத்பரியம் அதனைச் செயலாக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. அதற்குரிய மனத்தைரியமும், இவற்றின் அடிக்கோடாக மறைந்து நிற்கும் இனத்துவேஷத்தை அடியோடு அறுத்தெறியும் வல்லமை புதிய பிரதமர் திரேசா மே அவர்களுக்கு உண்டா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.
அக்டோபர் மாதம் அனைத்து அரசியல் கட்சிகளினது மகாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. லேபர் கட்சி தனது பிரபல்யமான மிதவாத இடதுசாரக் கட்சிக் கொள்கைளினின்றும் விலகித் தீவிர சோஷலிசக் கட்சியாகத் தன்னை இனம்காட்டி நிற்கிறது. வெறும் கோஷங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் அது வேண்டுமானால் சுவையாகத் தென்படலாம் ஆனால் நடைமுறையில் இத்தகைய தீவிர இடதுசாரக் கொள்கையுடைய கட்சி இன்றைய ஜக்கிய இராச்சியத்தில் அரசமைக்கும் அளவுக்கு தேர்தல் பலம் பெறுவதென்பது மிகவும் சந்தேகத்துக்குரிய விடயமே!
அதேநேரம் லேபர் கட்சியினால் கைவிடைப்பட்ட இந்த மிதவாத இடத்தைத் தமது மிதவாத வலதுசாரக் கொள்கையின் மூலம் கைப்பற்ற அரசாங்கத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி முனைகிறது. கடைசியாக நடந்துமுடிந்த அவர்களது மகாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் குறிப்பாகப் பிரதம மந்திரி திரேசா மே அவர்களின் உரை இதனை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கிறது.பாரம்பரியமாக லேபர் கட்சிக்கு வாக்களித்த வட இங்கிலாந்து தொழிலாளர்களின் வாக்குகளைத் தமது பக்கம் இழுப்பதற்கான சகல கொள்கை முழக்கங்களையும் அவர்கள் செய்கிறார்கள்.லேபர் கட்சி எதிர்க்கட்சியின் கடமைகளை மறந்து தமது சோஷலிசக் கொள்கைகளை இறுகப்பற்றி உட்கட்சிப்பூசலில் ஈடுபட்டிருக்கும்வரை கன்சர்வெடிவ் கட்சியின் காட்டில்தான் மழை.
மக்களுக்காக அரசியலா? அரசியலுக்காக மக்களா?அதேகேள்வி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் எதிரொலிக்கிறது. அரசியல்வாதிகளின் உள்ளத்தில் எதிரொலிக்கிறதா? பொறுத்திருந்து பார்ப்பதுதான் இதற்கு விடையோ?
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்