தண்டனை
க. பாலசுப்பிரமணியன்
நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நேற்றும் இன்றும் காணக்கிடைக்காத காட்சி… உண்மை…. கண்களை அகலமாய் திறந்து பார்த்தாலும் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களோ அல்லது மனிதர்களோ கண்ணில் பட மாட்டார்கள் .. இது பனிமூட்டமல்ல.. புகைமண்டலம்! குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் 1800 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன.
மாலை நேரத்தில் காற்றில் மிதந்துநின்ற கரித்துகள்களும் தூசியும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த கலவைப் பொருள்களும் கீழிறங்கி வந்து புகைமண்டலமாக மனிதர்கள் மூச்சு விடுவதற்கே தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. சுவாசிப்பதில் சாதாரணமாக இருக்கும் மனிதர்களுக்கே இந்த கதியென்றால் ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருப்பவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம்… என்ன கொடுமையிது!
மனிதர்களுடைய அடிப்படைத்தேவையான காற்றே கலப்படமாகி சுவாசிக்க முடியாமல் போனால்.. நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்? இதற்க்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு?
உடனே மத்திய அமைச்சரவை கூடி அபாய மணியை அடித்தது.. டில்லியின் ஆளுநர் மந்திரிசபையின் கூட்டத்தைக் கூட்டினார்.. டில்லியின் முதலமைச்சர் தன்னுடைய மந்திரிசபையைக் கூட்டினார்… இன்னும் சில நாட்களுக்கு கட்டுமானத் தொழில் மற்றும் ஜெனரேட்டர் இயக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டன. இதெல்லாம் சரி.. இவையெல்லாம் எரியும் நெருப்பை அணைக்கும் செயல்கள்தானே? இவற்றிற்கான மூலகாரணங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காரில் ஐந்து நிமிடத்தைக் கடந்த தூரத்தை இன்று கடக்க அரைமணி நேரம் ஆகின்றது.. அத்தனை நெரிசல்.. அலை அலையாகக் கார்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்..
நாம் தேவைகளை அதிகரித்துக்கொண்டு விட்டோம் .. ஆனால் உண்மையில் அவை தேவைகளா? இல்லை பல நேரங்களில் நமது தேவையற்ற ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் நாம் இயற்கையை பயன்படுத்திக்கொண்டும் மாசுபடுத்திக்கொண்டும் இருக்கின்றோமா? சிந்திக்க வேண்டிய நேரம்..
இன்று புதுதில்லியில் நடப்பது நாளை மும்பையில் நடக்கும். இன்னொருநாள் பெங்களூரிலோ அல்லது சென்னையிலோ நடக்கும். இது ஒரு நகரத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல.. இது ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தேக்கத்தையும் பொறுப்பற்றத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
நேற்று விமானத்தில் ஏறும் பொழுது பலர் அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர்.. “இந்த நிலைமைக்கு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. என்ன செய்யப்போகின்றது?” இந்த மாதிரி பேச்சுக்களில் ஏதோ அரசாங்கத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நாம் சிந்திக்கிறோம்… உண்மைதான்.. ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் நல்லபடியாக கண்காணிக்கப்பட்டால் இந்த நிலைமை வாராது இருக்கலாம். ஆனால் இதற்கு முக்கிய காரணம் முழுமையாக சமுதாய நோக்கும் போக்கும்தானே?
இந்த தண்டனை யாருக்கு யார் கொடுத்தது?