கற்றல் ஒரு ஆற்றல்  55

-க. பாலசுப்ரமணியம்

வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் (3)

education

இது ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி. மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற ஒரு மாணவன் அன்று பள்ளி முடிந்ததும் தனது மாதாந்திர மதிப்பீட்டிற்கான பதிவேட்டினை (Progress report) தனது தாயிடம் அளிக்கிறான். அதைக் கவனித்த அவன் தாய் “கணக்கிலே வெறும் 85 மார்க்குகள்தானா? இப்படி எடுத்தால் எப்படி உருப்படுவாய்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே உனக்கு இடம் கிடைக்கும்?” என்று கேட்கிறாள்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் மகன் பொறுமையாக “அம்மா, எனக்கு அறிவியலில் 100 மார்க்குகள் கிடைத்துள்ளன. ஆங்கிலத்திலே 97 மார்க்குகள், சமூக இயலில் 93 மார்க்குகள் கிடைத்திருக்கின்றன” எனப் பதிலளிக்கிறான்”. உடனே தாய் “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. கணக்கில் ஏன் மார்க்குகள் குறைந்தன? உங்க அப்பாவுக்கு யார் பதில் சொல்றது? நீயே உன் அப்பாவிடம் பேசிக்கொள்” என்று சொல்லி அலுவலகத்தில் இருக்கும் தனது கணவரிடம் அலைபேசியில் “உங்க பையனை நீங்களே கேட்டுக் கொள்ளூங்கள்” என்று அவன் கையில் அலைபேசியைக் கொடுத்து விடுகிறாள்.

”என்னடா ஆச்சு உனக்கு…. ஏன் இவ்வளவு கம்மி மார்க்? என்று கேட்கும் தந்தையிடம் மகன் கூறுகிறான், “அப்பா, எனக்கு அறிவியலில் 100 மார்க் கிடைத்திருக்கின்றதே” என்று சொல்ல, “அதேபோலக் கணக்கிலே ஏன் வாங்கவில்லை?” என்று தந்தை வினவ,” அப்பா, நான் முயற்சிக்கிறேன்.” என்று மகன் சொல்லுகிறான்.

அடுத்த பரிட்சையில் கணக்கிலே 100 வாங்குவேன் என்று உறுதிசொல்லுவாயா?”என்று தந்தை கேட்க முடியாதுப்பா. நான் முயற்சிதான் செய்ய முடியும். கிடைப்பதும் கிடைக்காததும் என் கையில் இல்லை என்று அழகாகப் பதில் கூறுகின்றான்.

“எப்பொழுது 100 கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லுவாய்?” என்று அவர் மீண்டும் கேட்க, எப்பொழுதுமே என்னால் சொல்ல முடியாது. என்னால் எப்பொழுதும் முயற்சிக்கத்தான் முடியும். நான் எவ்வளவு முயற்சி இப்போது செய்கிறேனோ அதைவிட அதிகமாக முயற்சிப்பேன்.

100 மார்க் வாங்குவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு முயற்சிப்பேன்.” என்று பதிலளிக்க, தாய்க்கும் தந்தைக்கும் ஒரே வருத்தம். ஆனால் இதைவிட ஒரு தர்க்கரீதியான, புத்திசாலித்தனமான பதிலை யாரும் கொடுத்திருக்க முடியாது. அதுவும் மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற ஒரு மாணவன்!

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் ஏதாவது சிறப்பாகச் செய்யும்பொழுது அதைப் பாராட்டுவதில்லை. பதிலாக, குறைகளையே முன்னிறுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தாயின் அடுத்த கவலை, இவனை நூறு மார்க்குகள் வாங்க வைக்க என்ன செய்யலாம்? இவனுக்குத் தனியான டியூஷன் ஏதாவது வைக்கலாமா என்று!

பொதுவாக வீடுகளில் குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்புவது ஒரு பெருமைக்குரிய  விசயமாக ஆகிவிட்டது. என் குழந்தை கணக்குக்கு டியூஷன் போறான்; இங்கிலீஷுக்கு டியூஷன் போறான். அதைத்
தவிர மியூசிக், டென்னிஸ் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுவது தற்காலத்திய வாழ்க்கை முறையில் ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இவை குழந்தைகளுக்குத் தேவைதானா என்பதை யோசித்துச் செய்தல் நலம்.

“எங்களுக்கு அவனோடு உட்கார நேரமில்லை” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் பலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கில் டியூஷனில் செலவிடுவதைவிட ஒருசில மணித்துளிகள் அவர்களுடன் கூட அமர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுதல் சிறப்பானது.

அண்மையில் வெளிவந்த “அம்மா கணக்கு ” என்ற திரைப்படத்தில் தன் மகளுக்காகத் தாயும் கூட அமர்ந்து கற்றுக்கொள்ளுவது மிகச்சிறப்பான கருத்து. பொதுவாகப் பெற்றோர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது, ஆகையால் கருத்துக்களை தாங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று நினைப்பதே ஒரு தவறான கருத்து. முயற்சி திருவினையாக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.

டியூஷன் படிப்பதால் மட்டும் குழந்தைகள் சிறப்பாகச் செய்வார்கள் என்ற கருத்து மிகத் தவறானது. இதனால் நிச்சயமாகச் சற்று முன்னேற்றம் ஏற்படலாம், மற்றவர்களுடைய அணுகுமுறைகளை அறிந்துகொள்ளலாம், தவிர இவைகளைத் தவிர்க்க முடியாததாகப் பெற்றோர்கள் கருதக்கூடாது. சில நேரங்களில் இந்த நேரத்தை அவர்கள் மற்ற திறன்களை மேம்படுத்தவோ அல்லது மூளைக்கு ஓய்வு கொடுக்கவோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக இந்த இடங்களில் மாணவர்களை ஒரு யந்திரமாக்கி அவர்களின் மனப்பாடத்திறமைகளை வளர்த்துப் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்குத் தயார் செய்யப் படுகிறார்கள். சற்றே சிந்தித்தால் நமது அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு நம்மால் குழந்தைகளுக்கு அதிக நேரத்தை தர முடியும். முயற்சிக்கலாமே?

(தொடரும்)

About க. பாலசுப்பிரமணியன்

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க