-தமிழ்த்தேனீ

எப்போதுமே நேரிடையான தொடர்பு நல்லது. இடைத் தரகர்களை நாடினால் அவர்கள் இஷ்டப்படி நம்மை ஆட்டுவிப்பார்களே தவிர நம் இஷ்டத்துக்கு எதுவும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இது அனுபவ பூர்வமான உண்மை. அதனால் எப்போதுமே நேரிடையான தொடர்புகளையே நான் கொண்டிருக்கிறேன்.

இப்போதைய நிலையில் சமீபத்தில் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன் அந்த இடத்தில் ஒரு பெரிய உயரமான பெட்டி வைத்திருந்தார்கள். அதிலே குறிப்பிட்ட காசைப் போட்டால் அதிலே இருக்கும் கோகா கோலாவோ, அல்லது பெப்சியோ நம் கைக்கு அளிக்கும். அந்த இயந்திரத்தில் காசைப் போட்டுவிட்டு என் பேரன் கேட்ட லிம்கா வேண்டுமென்று பட்டனை அமுக்கினேன். இயந்திரத்தில் உள்ளே ஏதேதோ சத்தம் கடைசியில் கண்ணாடி வழியே ஒரு லிம்கா வருவது தெரிந்தது. சில நொடிகளில் அந்த லிம்கா ஒரு பெட்டியில் வந்து விழுந்தது. அதை எடுக்கக் கையை நீட்டினேன். அங்கே நீல நிறத்தில் இங்கே இருக்கும் பட்டனை அமுக்கவும் என்று அறிவிப்பு வந்தது. அந்த பட்டனை அமுக்கினேன். மீண்டும் சில சத்தங்கள், மறுபடியும் அந்த லிம்கா பாட்டில் வேறொரு பெட்டிக்குள் வந்து விழுந்தது , மீண்டும் கையை நீட்டினேன்; அங்கே ஒரு அறிவிப்பு! வேறு ஒரு பட்டனை அமுக்கும் படி. அது சரி லிம்கா எப்போது என் கைக்கு வரும் என்றே தெரியவில்லை. ஒரு பெட்டிக்குள்ளிருந்து வேறு பெட்டிக்கே மாறிக் கொண்டிருக்கிறது.

கையில் உள்ள காசையும் உள்ளே போட்டாயிற்று. இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கிறேன். நேராக ஒரு கடைக்குப் போய்ப் பணத்தைக் கொடுத்து லிம்கா கேட்டால் உடனே கிடைத்திருக்கும்.  ஆனால் ஒரு வித்யாசம் போலி லிம்காவாகக் கூட இருக்கலாம். தரமான லிம்கா வேண்டுமென்றால் அந்த இயந்திரம் சொல்வதைக் கேட்டு, அது எப்போது தருகிறதோ அப்போது பெறவேண்டும். அதுவரை தண்ணீர் குடித்துச் சமாளிக்கலாம். கள்ள வியாதிகள் வராமலிருக்கும்.

அதே போல்தான் சென்றவருடம் ஜோதிடர் சனிப்பெயர்ச்சி உங்கள் மேஷராசிக்கு  அஷ்டம சனியாக இருக்கிறார்  என்றார். சரி நான் என்ன  செய்யவேண்டும் என்றேன்.  தோஷபரிகாரம் செய்யுங்கள் சரியாகிவிடும் என்றார். சரி செய்வோம் என்ன செய்ய வேண்டும்?  என்றேன்.

ஒரு ஹோமம் நடத்தலாம்  அதற்கு 12 ரூபாய் செலவாகும்  என்றார். சரி, நான் யோசித்து உங்களை அழைக்கிறேன்  என்று சொல்லி அவரை  அனுப்பிவிட்டு  யோசித்தேன்.

ஹோமம் செய்தால் சரியாகலாம். அந்த  ஹோமத்தின் வாயிலாக நாம் சனி பகவானை மகிழ்விக்கப் போகிறோம்.  அவரது கருணையை யாசிக்கப் போகிறோம்; அவ்வளவுதானே  என்று தோன்றியது.  சரி,  தெய்வங்கள் எப்போதுமே உண்மையான பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கும் என்பார்களே வேதமறிந்த பெரியோர்.  ஆகவே  மனப்பூர்வமான பிரார்த்தனையை நாமே செய்யலாமே  என்று தோன்றியது. அன்று முதல்  சனீஸ்வர பகவானே  கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர்  நீர் ஒருவர் மட்டுமே. அப்படிப்பட்ட  பெருமைகொண்ட  நீர்  என்னை ஆசீர்வதியுங்கள். எனக்குக் கருணை காட்டுங்கள், தினமும் உங்களை யாசிக்கிறேன்,   உங்களிடம் சரணடைகிறேன் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு  காலையிலும்  இரவு படுக்கப் போகும் போதும் அவரை வணங்கி  பிரார்த்தனை செய்தேன்.  எனக்குச் சில  கஷ்டங்கள்  வந்தாலும்  அவைகளைச் சமாளிக்க  எனக்கு போதிய  மனவலிமையையும் அளித்தார்  சனீஸ்வரன்.

கடந்த  அஷ்டமச்  சனிக் காலத்தில் இப்படியே  நான் நேரிடையாக சனீஸ்வரரை  வேண்டியே சமாளித்தேன். நம் விதி என்று ஒன்று இருக்கிறது என்ன வேண்டினாலும் ஹோமங்கள் யாகங்கள் செய்தாலும் விதியின் குரூரம் வேண்டுமானால் சற்றே குறையுமே தவிர  முழுவதும் விலகாது. அதையும் தவிரச்  சனிக் கிரகம் அல்லது  சனி பகவான்  நாம் ஏறெகனவே செய்திருக்கும் பாவங்களையும் நம்மை அறியாமலோ  அறிந்தோ இந்த  ஜென்மத்தில் செய்யும் பாவங்களையும் கணக்கிட்டு  அதற்குத் தகுந்தவாறு  நமக்குச் சில சோதனைகளைக் கொடுத்து நம் பாவங்களின் அளவைக் குறைத்து நம்மை சமப்படுத்தும் துலாக்கோல் போல செயல்படுகிறார் என்பார்கள்.

ஆகவே நம் பாவங்களைக் குறைத்து  நம் ஆத்மாவை சமனப்படுத்தும் அவரை வணங்கினாலே போதும். இடைத்தரகர்கள் எல்லாம் தெரிந்தது போல் ஏதேனும் சொல்லி நம்மிடம்  பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க வேண்டாம். நேரிடைத் தொடர்பே எப்போதும் நல்லது  என்பதை உணர்கிறேன். ஆனானப்பட்ட  சர்வேஸ்வரன் சிவனையே சிறிது காலம் பீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு  உள்ளான  சனீஸ்வரர்   சிவனிடம் வந்து நான் இப்போது உங்களைப் பீடிக்கப் போகிறேன்  என்றார்.  அதற்கு சிவன் அது உன்னால் முடியாது என்று சொல்லிவிட்டு ஏதோ ஈரேழு உலகங்களையும் தாண்டி ஒரு பாதாளத்தில் போய் உட்கார்ந்து கொண்டு  இருந்துவிட்டு  சனீஸ்வரர்  பீடிக்க  வேண்டிய காலம் கழிந்ததும்  வெளியே வந்து  என்ன சனீஸ்வரா  என்னைப் பிடிக்க முடியாமல் கஷ்டபட்டாயா  என்றார்.

அதற்குச் சனி பகவான் புன்னகையுடன்  ஈஸ்வரா  கையிலாயத்தில் உங்கள் ஆசனத்தில் பெருமையாக அமரவேண்டிய  நீர்  ஏதோ பாதாளத்தில் போய் இருந்தீரே  அப்போதே தெரியவில்லையா  நான் உம்மையும் பீடித்துவிட்டேன் என்று  என்றார்.

அதனால் நமக்கு  சனீஸ்வரர்  பீடிக்க வேண்டிய  வேளை வந்தால் நம்மால் தப்ப முடியாது; ஆகவே அவரையே  சரணடைவோம்.  அதைவிட முக்கியம் இந்தச் சனிப் பெயர்ச்சி இப்போது வருகிறது.  அதே ஜோதிடர் என்னிடம் வந்து  உங்களுக்கு சனீஸ்வரர்  எட்டாம் இடத்திலிருந்து விலகிவிட்டார்.  அதனால் அஷ்டம சனியின்  பாதிப்புகள் குறைந்துவிடும்  ஆனால் உங்கள் மனைவிக்கும்   இப்போது முதல் அஷ்டம சனி ஆரம்பம் ஆகவே ஹோமம் செய்யலாமா  என்றார். நான் யோசித்துவிட்டு அழைக்கிறேன் என்றதும் அவர் சென்றுவிட்டார்.

கடந்த  அஷ்டம சனிக் காலத்தில்  என்னோடு கூடவே இருந்து என்னைப் பார்த்துக் கொண்ட என் கோபங்களையும்  சமாளித்த  என் துணைவியார் போலவே  இப்போது அவளுக்கு  அஷ்டம சனிக் காலமாகிய இந்தக் காலத்தை  நாம் அவளோடு இருந்து அவளுக்கு உதவியாய் இருக்க வேண்டும்  என்று தீர்மானம் எடுத்து  மீண்டும் சனீஸ்வர  பகவானிடம் வேண்டிக்கொண்டு நல்ல படியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கையில்   காலையிலும் இரவிலும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருக்கிறேன்.

ஆகவே  27  நக்‌ஷத்திரத்திற்குள் ஏதோ ஒரு நக்‌ஷத்திரத்திலே தானே நம் வாழ்க்கைத் துணை பிள்ளைகள்  எல்லோரும் இருக்கிறார்கள். கிரகங்களின் சுழற்சி மாறும்; அதற்கேற்ற பலன்களும் மாறும். கிரக சுழற்சியை மாற்றவோ நிறுத்தவோ நம்மால் முடியாது.  ஆனால் நாம் நேர்மையாக வாழ்ந்து  இறையைத் தொழுது  எல்லாவற்றையும் சமாளிப்போம்; நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையோடு. ஆகவே தீர்மானம் எடுங்கள் இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை. நானும் இறையும் நேரிடையாகவே மனப்பூர்வமாக உரையாடிக் கொள்கிறோம்;  இறையிடம் நாங்கள் நேரிடையாகவே  வேண்டிக் கொள்கிறோம் என்று.

அதற்காக  ஹோமங்களுக்கும் யாகங்களுக்கும் பலனில்லை  என்று நான் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். அவைகளுக்கு உண்டான பலன்கள் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அவற்றை மனப்பூர்வமாகப்  பணத்தின்மேல் குறிக்கோள் இல்லாமல் பக்தியுடன் ஸ்ரத்தையுடன் செய்ய ஆள் கிடைத்தால்  நிச்சயமாக  செய்யலாம். அப்படிப் பணத்தாசை, பேராசை இல்லாத மனிதர் தெய்வத்துக்கு சமானமாவார். அப்போது அவரே  தெய்வமாகிறார் இடைத்தரகராக ஆவதில்லை.

ஆகவே அப்படிப்பட்ட  தெய்வாம்சம் பொருந்திய  மனிதர் கிடைத்தால் நாமும் ஹோமங்கள், யாகங்கள் செய்யலாம்.  நல்ல பலன்கள் கிட்டும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; பேராசை வரும்போது தரகனாகிறான்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.