என் காளிக்கு..
இசைக்கவி ரமணன்
பச்சைரத்தம் சொட்டச்சொட்டப்
பட்டைநாக்கு பளபளக்கப்
பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ
படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்!
அச்சமஞ்சும் உன்வடிவை
அகம்குலைக்கும் உன்னுருவை
அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன்
அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்!
இச்சைபோன்ற இடரையெலாம்
மிச்சமின்றி விழுங்கிவிடு
என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு,
என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு!
கச்சைக்கட்டிக் கொண்டுவரும்
கவலையைப் பொசுக்கியந்தக்
கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக்
கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1)
இந்த உலகம் நொந்த உலகம்
இவர்மனத்தில் தினம்கலகம்
இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை
இங்கெனக்கு வேலையென்ன புரியவுமில்லை
கந்தனோடு பொய்கையிலே
கவிதைபேசி ஆடியவன்
சந்தையிலே காசும்பையு மின்றி நிற்கிறேன்
சட்டையின்றிச் சவுக்கடிக்காய் என்னை விற்கிறேன்!
எந்தவினை? ஏதுவிதி?
எவரிடத்தில் இந்தச்சதி?
உன்றன்பிள்ளை என்பதையே மறந்துவிட்டாயா? நானே
ஊற்றித்தந்த கள்குடித்துக் கிறங்கிவிட்டாயா?
அந்தமிலா ஓரிருளில்
அந்தகார மாயெழுந்து
வந்துநின்ற காட்சியினை எண்ணிப் பார்க்கிறேன், அந்த
வாய்ப்புதவறிப் போனதென்று வருந்தி யழுகிறேன் (2)
நிலவுநெகிழும் நிசியில் மனதில்
உலவும் மின்ன லமிழ்த மாகக்
குலவியென்றன் உயிரையெல்லாம் கொள்ளை யடிப்பாய்! இந்தக்
குழந்தையிடம் குழந்தையாகச் சள்ளை படிப்பாய்
கலகநடுவில் கண்விழிக்கும்
கவிதையென்றன் காளியென்று
உலகமறிய ஊர்நடுவே உடைத்துக் காட்டிடு! நம்
உண்மையினைச் சந்தியிலே உடைத்துப் போட்டிடு!
திலகமிட்ட சிறுமியாக
சிரித்துக்கொன்ற குமரியாக
திரைநரைத்த கிழவியாக வந்து நின்றனை
திட்டமிட்டுத் திரும்பத்திரும்ப நின்று கொன்றனை
உலகுபோதும் வாழ்வுபோதும்
உறவுபிரிவுத் துயரம்போதும்
உற்றபிள்ளை! பெற்றவளே ஓடி வந்திடு! காளீ
உச்சிமுகர்ந் துன்மகவை உன்னில் சேர்த்திடு! (3)