நவராத்திரி நாயகியர் (4)
க. பாலசுப்பிரமணியன்
கன்னியாகுமரி தேவி குமரி அம்மன்
நீலக்கடலோரும் நிற்கின்ற நீலியே குமரியே !
நிலமகளும் அலைமகளும் கலைகொடுத்த செல்வியே
நிலவோடு கதிரும் எழுந்திடுமே நின்விழியிலே !
நிழலான வாழ்விற்கு நிஜம்காட்டும் மாயே!
அலையோசை கடலோரம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க
அரியணைகள் துறந்தோர் அடைக்கலமாய் காத்திருக்க
அகத்தினையும் செகத்தினையும் வென்றிடவே வழிகாட்டி
அருளாட்சி செய்கின்ற எழில்ராணி அபிராமி !
கடல்காற்றின் கானத்திற்கு காதணிகள் அசைந்திருக்க
களையான மூக்குத்தி கலங்கரை ஒளிபெருக்க
கருங்குழலை அன்றலர்ந்த மலர்கள் அலங்கரிக்க
கன்னிகையே! காலமெல்லாம் காலடியில் கண்விழிப்பேன் !
கேரளத்து இளநீரால் நித்தம் நீராட்டி
கார்மேக ஊஞ்சலிலே உன்னைத் தாலாட்டி
கன்னித்தமிழ் சொல்லால் உன்னைப் பாராட்டி
கண்மணியே! கண்ணிமைக்குள் நித்தம் காத்திருப்பேன் !
பரமனைத் துறந்த துறவியே பார்வதியே !
பக்தர்கள் குரலுக்குப் பணிந்திடும் பாரதியே !
பாரெல்லாம் படைத்தாளும் பவானி பகவதியே !
பாணனை அழித்திட்ட பரமேஸ்வரி பயங்கரியே !
குமரியாய் நிற்கின்ற குலமகள் செல்லமே
குவிந்திடும் நிலமெல்லாம் காலடி சரணமே
கோலங்கள் பலகொண்டு கூடிய பெண்மையே
கொலுவிருக்க வருவாயே! குறைவின்றி அருள்வாயே !