Category: காணொலி

  • திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
    இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

    மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்ற அவரது அடியொற்றியே இன்றும் நாம் மரபையும் நவீனத்தையும் ஒருசேர இணைத்துக் காண்கிறோம். அப்படி இணைந்திருப்பதை விரும்புகிறோம்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பரஞ்சோதியாம் சிவபெருமானைப் போற்றுவோம். திருவாசகத்தின் 9ஆவது பாடல் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளைப் பின்னைப் புதுமைகள் பல மேவிய டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் பாடுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

    திருப்பாவை – 9

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில்

    1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. நறுமணத் தூபம் கமழ்கிறது. துயிலணை (படுக்கை) மேல் தோழி கண்வளர்கிறாள்.

    தூங்குதல் என்பதைக் கண்வளர்தல் என்பது தமிழ் மரபு. குழந்தைக்குத் தாலாட்டு பாடும்போது கண்வளராய், கண்வளராய் எனப் பாடுவர். இதற்குக் காரணம், கண்மூடுதல் என்பது அமங்கலமானது. கண்வளர்தல் என்கிறபோது அதுவே மங்கலச் சொல்லாகிவிடுகிறது. இந்த மரபைப் பின்பற்றி, ஆண்டாளும் கண்வளர் என்கிறார்.

    ஆனால், மாமான் மகள் இன்னும் எழவில்லை என்றதும், சரவெடியாய் வெடிக்கிறார். மாமீ, நீங்களாவது எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? செவிடா? மந்தமானவளா? பெருந்துயில் துயிலுமாறு யாரும் மந்திரித்துவிட்டார்களா? என்றெல்லாம் பொங்குகிறார். வைகுந்தனின் நாமங்களை வாயாரச் சொல்ல அழைக்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | சேகர் முத்துராமன் குரலில்

    திருப்பாவையின் 9ஆம் பாடல், சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8

    கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார்.

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஒப்பற்ற ஒளிப்பிழம்பை, நிகரற்ற கருணையை உடைய சிவபெருமானின் இணையற்ற புகழைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க, இது என்ன உறக்கமோ? வாய்திறந்து பேசு என்கிறார். இது என்ன உறக்கமோ எனக் குட்டுவதற்கு முன், வாழ்க என வாழ்த்துகிறார்.

    உறங்குவது போலும் சாக்காடு என வள்ளுவர் சொல்கிறார். எனவே உறங்குவோரை, உறங்கச் செல்வோரை, உறங்கி விழிப்போரை நாம் எப்போதும் வாழ்த்தியே தொடங்க வேண்டும். அது நல்லதிர்வுகளைத் தோற்றுவிக்கும். இதுபோல், விடைபெற்றுச் செல்வோரை, வெளியே புறப்படுபவரை, புதிய செயல் செய்யத் தொடங்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் நாம் வாழ்த்த வேண்டும்.

    திருவெம்பாவையின் இந்த நயமான பாடலை, ஸ்ருதி நடராஜன் (டெக்சாஸ்) குரலில் கேளுங்கள்.

     

    படத்துக்கு நன்றி விக்கிப்பீடியா

    https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Gods_AS.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8

    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில்

    எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில்

    குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள  –कौतूहल–கௌ1தூஹல–  என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம்  — कौतुक–கௌ1து1க1— என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.

     

    ஓவியத்திற்கு நன்றி – ஷ்யாம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன் காணொலிகள் 10

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    சண்டைச் சேவலின் கூவலும் எதிர்க்கூவலும்

    செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்திற்கு நேற்று சென்றேன். அழகிய காட்சிகள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்தச் சண்டைச் சேவல் கூவ, பதிலுக்கு எங்கிருந்தோ வேறொரு சேவல் கூவியது. வழக்கமாக, நாய் ஒன்று குரைக்க, பல இடங்களில் உள்ள நாய்கள் குரைக்கும். இங்கே சேவல்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றன.

    தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன்

    திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் பாடப்படுகிறது. இந்த 7ஆம் நாளை ஆனைச்சாத்தன் நாள் (The day of Black Drongo) எனக் கொண்டாடினால் என்ன? 

    ஆண்டாள் பாடிய ஆனைச்சாத்தன் குருவிகளில் சில, நம் வீட்டருகே குடியிருக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் அமரும். முன்பு வாழையிலையில் அமர்ந்ததைப் பகிர்ந்தேன். தென்னங்கீற்றில் அமர்ந்த கோலம் இங்கே.

    பொன்வண்டு| Jewel Beetle | Ponvandu

    செங்கல்பட்டு அருகே நென்மேலி கிராமத்தில் இந்தப் பொன்வண்டைப் படம் பிடித்தேன்.

    இரைதேடும் நத்தை குத்தி நாரை

    நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில் நத்தை குத்தி நாரை, இன்று காலை இரைதேடியது. பின்னர் சிறகடித்துப் பறந்து, அருகில் உள்ள மதிலில் அமர்ந்தது. இந்த அழகான காட்சியைப் பாருங்கள்.

    Asian Openbill Stork On Air

    நத்தை குத்தி நாரை / அகலவாயன் / Anastomus oscitans / Asian openbill / Asian openbill stork

     

    Kingfisher – 2 | மீன்கொத்தி – 2

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணித மேதை ராமானுஜன் 133ஆவது பிறந்த நாள்

    கணித மேதை ராமானுஜன் 133ஆவது பிறந்த நாள்

    இன்று கணித மேதை ராமானுஜனின் 133ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

     படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    By India Post, Government of India – [1] [2], GODL-India, https://commons.wikimedia.org/w/index.php?curid=74857228

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை நான் பல முறைகள் பதிவு செய்துள்ளேன். ஆனைச்சாத்தனின் குரலை இங்கே கேளுங்கள்.

    ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தனின் கீசுகீசு எனும் குரல் இங்கே

    ஆண்டாள் ரசித்த ஆனைச்சாத்தன் பறவைக்காகவே தனி இழை தொடங்கியுள்ளேன். இதில் 18 பதிவுகள் உள்ளன. பார்த்து மகிழுங்கள்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில்

    அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | சேகர் முத்துராமன் குரலில்

    நாயகப் பெண்பிள்ளாய்! எனத் தோழியரை ஆண்டாள் அழைத்தாலும் அந்த விளி, அவருக்கே அழகாகப் பொருந்துகிறது. இந்தப் பாடலில் தேசமுடையாய் என ஆண்டாள் சொல்வது, இந்தக் காலப் பொருளில் இல்லை. தேசு என்ற சொல்லுக்கு ஒளி, அழகு எனப் பொருள்கள் உண்டு. ஒளி பொருந்திய பெண்ணே என்ற பொருளிலேயே தேசமுடையாய் என அழைக்கிறார். கீசுகீசு என்றெங்கும் என்ற 7ஆவது பாடலை இப்போது சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

    2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இடர்கள் தீருமா? மகிழ்ச்சி கிட்டுமா? நினைத்தது நடக்குமா? 2021ஆம் வருடத்துக்கான ஆண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒஹாயோ பறவைகள்

    ஒஹாயோ பறவைகள்

    அமெரிக்காவின் பல பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. ஒஹாயோ மாகாணத்தின் பனி படர்ந்த ஏரிக்கரையில், பறவைக் கூட்டம் ஒரே தாளகதியில் கீழிறங்குவதும் சிறகடித்து மேலேறிப் பறப்பதும் மிக ரம்மியமாக இருக்கிறது. இந்த வசீகரக் காட்சியை ஒஹாயோவிலிருந்து படமெடுத்து அனுப்பியிருக்கும் திலகா சுந்தருக்கு நம் நன்றிகள்.

     

    Share
  • திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி.

    திருவெம்பாவை பாடல் 6
    இயற்றியவர்: மாணிக்கவாசகர்
    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ், அமெரிக்கா
    ராகம்: கமாஸ்

    மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண்

    திருப்பாவை 6

    புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | ஸ்வேதா குரலில்

    மார்கழியின் குளிரை நாம் அறிவோம். திருப்பாவையில் ஆண்டாள், இரண்டு இடங்களில் குளிர் பற்றிப் பேசுகிறார். 6ஆவது பாடலில் அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். 27ஆவது பாடலில் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். இரண்டுமே உள்ளம் குளிர்தலைப் பற்றியது. இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். கேட்டு உள்ளம் குளிருங்கள், இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | சேகர் முத்துராமன் குரலில்

    சேகர் முத்துராமன் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். ராகம் – சங்கராபரணம். வாயினால் பாடி, மனத்தினால் சிந்தியுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில்

    ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில்

    ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    ஓவியத்திற்கு நன்றி: SIRI DRAWS

    Share
  • திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை - 4
    
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா | லட்சுமிப்பிரியா குரலில்

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, அருட்செல்வி ஆண்டாளின் அமுதத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இதோ, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில். கேட்டு மகிழுங்கள்.

    திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில்

    மழையின் அறிவியல், மணிவண்ணனின் அழகியல், பக்தியின் செவ்வியல், கவித்துவம் மின்னும் பாட்டியல் ஆகிய இவை அனைத்தையும் ஒரே பாட்டில் எட்டுகின்ற ஒப்பற்ற தமிழ்ச்செல்வி, ஓங்குபுகழ் திருச்செல்வி ஆண்டாளின் வண்ணத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இந்தப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (சுஜாதா தேசிகனின் திருப்பாவை விளக்க நூலின் அட்டைப் படத்தில் உள்ள ஆண்டாள் ஓவியத்தை இங்கே பயன்படுத்தியுள்ளோம். இதற்கு அனுமதி அளித்த சுஜாதா தேசிகன் அவர்களுக்கு நம் நன்றி.)

    Image courtesy: https://freetamilebooks.com/wp-content/uploads/2014/02/Untitled.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | லட்சுமிப்பிரியா குரலில்

    மதுரகவிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, திருப்பாவை. இது, சொல்லினிமையும் பொருளிமையும் ஒருங்கே அமைந்தது. வாய்விட்டுப் பாடுவதற்கு ஏற்றது. இசையுடன் இணைந்து பரிமளிப்பது. ஓங்கி உலகளந்த எனத் தொடங்கும் மூன்றாவது பாடலில், ஓங்கி என்று எடுக்கும்போதே திருமாலின் பேருருவம் நம் மனக்கண்முன் தோன்றிவிடும். வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்ற வரி, எண்ணி எண்ணி மகிழத்தக்கது. தமிழ்க் குலம் பெற்ற நீங்காத செல்வம் அன்னை ஆண்டாளின் மூன்றாவது பாடலைச் செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | ஸ்வேதா குரலில்

    எம்பாவாய், எம்பாவாய் என்று நம்பாவையரை நாவினிக்க அழைத்து, பாவை நோன்பிருந்து, உத்தமன் பேர்பாடி உய்யுங்கள் என வழிகாட்டுகிறார், ஆண்டாள். ஓங்கி உலகளந்த என்ற மூன்றாவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share