திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

திருப்பாவை – 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில்
1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. நறுமணத் தூபம் கமழ்கிறது. துயிலணை (படுக்கை) மேல் தோழி கண்வளர்கிறாள்.
தூங்குதல் என்பதைக் கண்வளர்தல் என்பது தமிழ் மரபு. குழந்தைக்குத் தாலாட்டு பாடும்போது கண்வளராய், கண்வளராய் எனப் பாடுவர். இதற்குக் காரணம், கண்மூடுதல் என்பது அமங்கலமானது. கண்வளர்தல் என்கிறபோது அதுவே மங்கலச் சொல்லாகிவிடுகிறது. இந்த மரபைப் பின்பற்றி, ஆண்டாளும் கண்வளர் என்கிறார்.
ஆனால், மாமான் மகள் இன்னும் எழவில்லை என்றதும், சரவெடியாய் வெடிக்கிறார். மாமீ, நீங்களாவது எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? செவிடா? மந்தமானவளா? பெருந்துயில் துயிலுமாறு யாரும் மந்திரித்துவிட்டார்களா? என்றெல்லாம் பொங்குகிறார். வைகுந்தனின் நாமங்களை வாயாரச் சொல்ல அழைக்கிறார்.
இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | சேகர் முத்துராமன் குரலில்
திருப்பாவையின் 9ஆம் பாடல், சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)