திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

திருப்பாவை – 8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில்
எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.
திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில்
குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள –कौतूहल–கௌ1தூஹல– என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம் — कौतुक–கௌ1து1க1— என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.
ஓவியத்திற்கு நன்றி – ஷ்யாம்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)