Category: Featured

Featured

  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்வி குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனை தேடி பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையட்டு கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களை திறக்கிறது.

    நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தக புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும்.

    இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்…

    மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனை கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணரந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சு காற்றில் கலந்து வரும் உன் உயிர் , தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து கானாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள்.

    எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்போழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம் , உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான்.

    வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மை கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும்  நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும்,  அழுகையும், கடவுள்  நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு…

    எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன  நம் இருவருடைய கண்களும்

    வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத் தான் எனக்கு தோன்றியது.  விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்…..

    அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான , தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கி போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கி பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள்.

    ஒவ்வொறு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில்,  நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து  கிடக்கிறது.

    Share
  • குப்பாச்சுலு VS கோடபட்ரி-நாடகம் கிரேசி மோகன்….

    கிரேசி மோகன்

    மறைந்த அமரர். எழுத்தாளர் திரு.’’கோமல் ஸ்வாமிநாதன்’’(இவரது ‘’தண்ணீர் தண்ணீர்’’ நாடகத்தால் மேடை மேதையாய் ஆயிற்று…) அவர்கள் ‘’குங்கும்’’ ஆசிரியராய் இருந்த சமயத்தில் ஃபோனில் என்னை அழைத்து’’ வழக்கமான அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்றில்லாமல் , வித்தியாசமான நாடகம் ஒன்று எழுதித் தாயேன்’’ என்று அன்புக் கட்டளையிட்டார்….எனக்குத் தெரிந்து கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து மாறாது இருப்பது சினிமா, டிராமா, பத்திரிகைக் கதைகள்தான்….என்ன…களம் வேறுபட்டு, நடையில் நவீனம் காட்ட கதையும் புதுசாகத் தோன்றுகிறது….இப்படி யோசித்துக் கொண்டிருந்த எனக்கு ஏன் ‘’கல்தோன்றி மந்தோன்றா’ காலத்தைக் களமாக வைத்து, இன்றுவரை பிரபலமான ‘’மாமியார்-மாட்டுப்பெண்’’ யுத்தத்தை, எழுதக் கூடாது! என்று விபரீதமாகத் தோன்றியது….அதன் விளைவே இந்த நாடகம் ‘’குப்பாச்சுலு vs கோடபட்ரி’’….குங்குமத்தில் வந்ததை சிலபல மாற்றங்களோடு பகிர்ந்துள்ளேன்….கிரேசி மோகன்
    ————————————————————————————————————————–

    குப்பாச்சுலுvsகோடபட்ரி

     —————————— 

    மாமியாரும்-மருமகளும் 

    ——————————

     பிற மொழி நாடகம்
    மூலம்-மூதாதையன் ”இன்கமோ சிரேகி”
    தமிழில்-”கிரேசி” மோகன்….

    காட்சி 1 :

    காலம் : பாறாங்கற்காலம் (கற்காலத்திற்கும் முந்திய காலம்.)

    இடம் : மிருக நடமாட்டமே இல்லாத பயங்கரமான காட்டின் ஒரு பகுதி. (மிருக நடமாட்டம் இல்லாததற்குக் காரணம்… இங்கு அவைகளைவிட பயங்கரமான நமது மூதாதையர்கள் இருந்தார்கள்.)

    பாத்திரங்கள் : கதாநாயகி ‘பிடாரி’யின் தந்தை ‘இடும்பன் காட்டேரி, ‘கதாநாயகியை ஐம்பது மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற (நமது மூதாதையர்கள் நம்மைவிட எதிலும் ஐந்து மடங்கு அதிகமாகவே இருந்தார்கள்.) தாய் ‘இருளச்சி,’ மற்றும் அக்கம்பக்கத்து காட்டு மிராண்டிகள். இது தவிர இவர்கள் செல்லமாக வளர்க்கும் யானை, மலைப்பாம்பு, காண்டாமிருகம், டயனாசரஸ் போன்ற மிருகங்கள் அங்கு சுவாதீனமாக அலைந்து கொண்டிருந்தன.

    கதாநாயகியின் தந்தை ‘இடும்பன் காட்டேரி’ தாழ்வான ஒரு மரக்கிளையில் கன்னத்தில் கைவைத்தபடி தலைகீழாகத் தொங்கிக்கொண்டு முன்னும் பின்னும் சோகமாக ஆடிக் கொண்டிருக்கிறான்.

    தனது எஜமானரின் சோகமான மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத, ஐந்தறிவு படைத்த நீர்யானை ஒன்று அப்போது அங்குவந்து ‘இடும்பன்காட்டேரி’யை விளையாட்டாகச் சீண்டிவிட, அதனால் கோபமுற்ற இடும்பன் காட்டேரி நீர்யானையின் கன்னத்தில் பளாரென்று அறைய நீர் யானை அழுதுகொண்டே கண்ணீர் யானையாக மாறி ஓட்டம் பிடித்தது.

    கணவனுக்காக ஆசையாக ஒரு முழு காட்டெருமையை அலட்சியமாகக் கொம்பைப் பிடித்தவண்ணம் காட்டுத் தீயில் ‘ரோஸ்ட்’ செய்து கொண்டிருந்த இடும்பன் காட்டேரயின் மனைவி இருளச்சி – நீர்யானையின் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறாள்.

    இருளச்சி : (பூமி அதிர ஓடி வந்து) இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி காலைலேந்து சிடுசிடுனு இருக்கீங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்கள்ளாம் தப்பா நெனைச்சுக்கப்போறாங்க… (என்று அவளால் முடிந்த வரையில் தாழ்வான
    குரலில் கேட்க, அந்த சத்தத்திற்குப் பயந்தே பறவைகள் எல்லாம் சிறகடித்து கூட்டுக்குள் ஒளிந்தன.)

    இடும்பன் காட்டேரி : என்னை ஒண்ணும் கேக்காத. எனக்கு மனசு சரியில்லை! (என்று கோபமாகக்  கூறிவிட்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தவன் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் முன்னும் பின்னும் வெறித்தனமாக ஊஞ்சலாட அவனது ஆட்டத்தைத்தாங்க முடியாமல் அந்த பிரும்மாண்டமான ஆலமரம் வேரோடு பிடுங்கிக் கொண்டு கீழே சாய்ந்தது.)

    இருளச்சி : கீழே விழுந்த ஆலமரத்தை ‘நாளை அடுப்பெரிக்க உதவும்’ என்ற எண்ணத்தில் அதை நான்காக உடைத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கீழே விழுந்ததால் கணவனின் உடம்பில் படிந்த புழுதியைத் தட்டிவிட்டவண்ணம்) உங்களுக்கு மனசு சரியில்லேன்னு எனக்கு அப்பவே தெரியும்…

    இடும்பன் காட்டேரி : எப்படி? (என்று உரத்த குரலில் கர்ஜிக்க,)

    இருளச்சி : (கணவனின் கூச்சல் தாங்காமல் தனது இரு செவிகளிலும் உடைந்த ஆலமரக் கிளையை நுழைத்துக்கொண்டு) சேச்சேச்சே… ஏன் இப்படி காட்டுமிராண்டியாட்டம் கத்தறீங்க?  உங்க கவலை என்ன? மொதல்ல அதைச் சொல்லுங்க.

    இடும்பன் காட்டேரி : என்ன இருள்… ( இருளச்சியை செல்லமாக இருள் என்று சந்தோஷத்தில் அழைப்பது வழக்கம்) நீயும் புரியாம பேசற… வர வைகாசியோட நம்ப பொண்ணு பிடாரிக்கு (கதாநாயகி) நூத்து ஐம்பது வயசு முடியறது. அவளை பொறுப்பா ஒத்தன்கிட்ட கல்யாணம் கட்டிவச்சுட்டா நானும் மீதி இருக்கிற சொச்சநச்ச இருநூறு வருஷத்தைத் தள்ளிட்டு கண்ணை மூடலாம்னு பாத்தா, பிடாரிக்கு ஒரு வழி பொறக்க மாட்டேங்குதே, அதான் கவலையாயிருக்கு…

    இருளச்சி : பூ… இவ்வளவுதானா (என்று கூறி காரித் துப்புகிறாள். அப்பொழுது அவள் துப்பிய உமிழ் நீர் அங்கு ஒரு ஓடையாக மாறி ஓடுகிறது.

    அப்பொழுது கதாநாயகி பிடாரி தனது இரு கைகளாலும் ஒரு காட்டு யானையின் தும்பிக்கையைப் பிடித்து கரகரவென்று தட்டாமாலை சுற்றிக்கொண்டே வருகிறாள்.

    பிடாரி, மாதா பிதாவைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த யானையின் தும்பிக்கையை விட, யானை எட்டு மைல் தள்ளி அதே வேகத்தில் போய் விழுகிறது.)

    இடும்பன் காட்டேரி : என்னம்மா பிடாரி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி விளையாட்டுப்  பொண்ணா இருக்கப் போற… உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒத்தன் கைல ஒப்படைச்சுடறதா நானும் உங்கம்மாவும் முடிவு பண்ணியிருக்கோம். நீ என்ன சொல்ற?

    பிடாரி : போப்பா… எனக்கு வெக்கமா இருக்கு. (ஏற்கனவே அட்டைக்கரியாய் இருந்த அவள் முகம் நாணத்தால் மேலும் கருக்க, தனக்குத் திருமணம் என்று பெற்றோர்கள் தன் எதிரிலேயே குறிப்பிட்டதால் உண்டான கூச்சத்தில் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள்.)

    இடும்பன் காட்டேரி : ம்… பாவம் அறியாப்பொண்ணா இருக்கா நம்ம பிடாரி. நாளைக்கு புருஷன் வீட்டுல போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போறாளோ! ம்… (என்று கூறி பெருமூச்சுவிட, அவன் நாசியிலிருந்து புறப்பட்ட சுவாசக்காற்று அங்கு தற்காலிகப் புயலாகச் சில நிமிடங்கள் வீசுகிறது.)

    இருளச்சி : ஏண்ணா… உங்க பிரண்டு ஒத்தர் பக்கத்து காட்டுல இருக்காரே அவர் பேர் என்ன?

    இடும்பன் காட்டேரி : யாரைச் சொல்ற? (குழப்பத்தால் தனது பரட்டைத் தலையை அவன் சொரிந்து கொள்ள, தலைமுடிக் கொத்திலிருந்து பல்லி, தேள், கரப்பான்பூச்சி போன்ற சிறு சிறு ஜந்துக்கள்  குதித்து ஓடுகின்றன்.)

    இருளச்சி : அதாங்க… ஆளுகூட குள்ளமா முப்பது அடி உசரத்துக்கு தக்கூனூண்டுக்கு இருப்பாரே….

    இடும்பன் காட்டேரி : யாருடி நம்ப பிரம்மராட்சஸனை சொல்றியா?

    இருளச்சி : அவரேதான். அவர் பையன்கூட கோரஸ்வரூபன்கற பேருக்கேத்த மாதிரி பாக்க லட்சணமா இருக்கான். மத்த பசங்க மாதிரி தறுதலையா இல்லாம சமத்தா தினமும் வேட்டையாடி கைநெறைய புலி, சிங்கம், கரடினு சம்பாதிக்கறான். நம்ப பிடாரியை அவனுக்கு கட்டி வச்சா பொருத்தமா இருக்கும்.

    இடும்பன் காட்டேரி : நீ சொன்னா சரிதான். தோ இப்பவே போய் பிரம்மராட்சஸனைப் பாத்து கல்யாணம் பேசி  முடிச்சுடறேன். சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க… (என்று கூறிவிட்டு இருந்த இடத்திலிருந்தே ஒரு குதி குதித்து இடும்பன் காட்டேரி பக்கத்துக் காட்டிற்குத் தாவுகிறான்.)

    காட்சி – 2

    இடம் : உயரமான ஒரு ஆலமரத்தின் உச்சியில் பிரம்மராட்சஸனின் வீடு.

    பாத்திரங்கள் : பிரம்மராட்சஸன், அவன் மனைவி அசுரபுஷ்டி நாயகி, இடும்பன் காட்டேரி.
    (திருமணப் பேச்சு வார்த்தை நடக்கிறது.)

    இடும்பன் காட்டேரி : முடிவா நீங்க என்ன சொல்றேள்?

    அசுரபுஷ்டிநாயகி : தோ பாருங்கோ, உங்க பொண்ணுக்கு என் பையனை தரதுல எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீங்க வரதட்சணையா நாப்பத்துரெண்டு யானை, முப்பத்துநாலு புலி தரணும். இது தவிர கல்யாணத்துக்கு எம் புள்ளையோட பிரண்ட்ஸ்லாம் வருவா. அவாளுக்கு மட்டும் எப்படியாவது முகூர்த்தத்தும்போது தனியா பந்திபோட்டு ‘நரமாமிசம்’ போட்டுடுங்கோ. ஜான்வாசம் ரத்தவிளாரி அம்மன் கோவில்லேந்து வச்சுக்கறதா இருக்கோம். ஜான்வாச ஊர்வலம்னா மெதுவாகத்தான் நகரணும். எப்படியாவது சிரமப்பட்டு கடல் ஆமையை ஊர்வலத்துக்கு அழைச்சிண்டு வந்துடுங்கோ.

    இடும்பன் காட்டேரி : நீங்க சொன்னதெல்லாம் எப்படியாவது தலையை அடமானம் வச்சாவது தந்துடறேன். அந்த வரதட்சணையை மட்டும் நீங்க குறைச்சுக்கணும். இப்ப இருக்கற வெலைவாசில இருபத்தி நாலு புலி கொஞ்சம் கஷ்டம்னு எனக்குப் படறது. நானும் எம் பொண்ணு கல்யாணத்துக்காக எப்படியோ கஷ்டப்பட்டு வேட்டையாடி நீங்க சொன்ன யானை, சிங்கம்லாம் சேர்த்து வச்சுட்டேன். புலி வேட்டை இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா போயிடுத்து உங்க புருஷனுக்கே தெரியும். என்கிட்ட இப்பசத்திக்கு இருபது புலி இருக்கு. மீதி நாலு புலிக்கு பதிலா எட்டு காட்டுப் பூனையை தந்துடறேன். பாக்க புலிமாதிரியே இருக்கும்.

    அசுரபுஷ்டிநாயகி : அதாவது சுத்தி வளைச்சு அசல் புலிக்கு பதிலா எவர்சில்வர் புலியை என் தலைல கட்டப்
    பாக்கறீங்க, இல்லியா. தோ பாருங்கோ, நான் சொன்னதெல்லாம் கொடுக்கற பட்சத்துல
    நாம மேற்கொண்டு கல்யாணத்தைப்பத்தி பேசலாம். அப்புறம் உங்க இஷ்டம். (தனது
    கோபத்தைக் காட்ட பல்லை நரநரவென்று கடித்து ஒஸிபிஸா சத்தம் உண்டாக்குகிறாள்.)

    இடும்பன் காட்டேரி : மன்னிச்சுக்கணும். தெரியாம பேசிட்டேன். எப்படியாவது இருபத்துநாலு புலியை
    கல்யாணத்துக்குள்ள தேத்திடறேன்! (என்று கூறிவிட்டு தாழ்வான குரலில் தனக்கு மட்டும்
    கேட்கும்படி பேசுகிறார். சேத்தரி… என்னிக்குத்தான் இந்த வரதட்சணைக் கொடுமை
    ஒழியுமோ!

    காட்சி – 3

    இடம் : வசதி படைத்தவர்கள் மட்டும் திருமணம் நடத்தும் ‘பாழும் குகைச் சத்திரம்’.

    பாத்திரங்கள் : மணமக்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் அண்டை அசல் காட்டிலிருந்து
    திருமணத்திற்கு வந்துள்ள காட்டு மிராண்டிப் பெரியவர்கள்…

    பிடாரி-கோரஸ்வரூபன் திருமணம் நடக்கிறது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள் சக்திக்கேற்ப ஆடு, மாடு, புலி, கரடி என்று மணமக்களுக்கு பரிசாக ‘மொய்’ எழுதுகிறார்கள்.

    மணமகள் பிடாரியின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போடும் சமயத்தில் மணமகன் கோரஸ்வரூபன் மூன்றாவது முடிச்சை சுபாவமான வெறியில் இறுக்கமாகப் போட, அதனால் மூச்சுத் திணறிய பிடாரி ‘குய்யோ முறையோ’ என்று மங்களமாகக் கூவுகிறாள்.

    காட்சி – 4

    இடம் : கோரஸ்வரூபன் வீடு.

    பாத்திரங்கள் : கோரஸ்வரூபன், புது மனைவி பிடாரி, பிடாரியின் மாமியார்க்காரி அசுரபுஷ்டி நாயகி.(கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட மாமியார்-மாட்டுப்பெண் மோதல்இங்கும் அவர்களுக்கே உரிய பாணியில் நடக்கிறது.

    கோரஸ்வரூபன், அறையின் நடுவில் கோடரியால் வெட்டப்பட்டவனின் மரண ஓலம் போல பயங்கரமான சப்தத்தோடு குறட்டை விட்டவண்ணம் ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறான். அப்போது அவனது தாய் அசுரபுஷ்டிநாயகி தலைவிரிகோலமாக ஓடி வந்து தனது மகனை ஒரு உதை உதைத்து எழுப்புகிறாள்.)

    அசுரபுஷ்டிநாயகி : அடேய் கோரஸ்வரூபா! உம் பொண்டாட்டி செஞ்ச காரியத்தை பாத்தியா… என் தலைல குட்டிட்டாடா! (தலையைக் காட்டுகிறாள். பிடாரி குட்டிய இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடுகிறது.)

    பிடாரி : (ஓடிவந்து) ஒண்ணுமில்லை. நான் லேசா குட்டினதுக்கே உங்கம்மா இப்படி அமக்களம் பண்ணறாளே! இவங்க செஞ்ச சில்மிஷத்தை பாருங்கோ! (என்று கூறி உள்ளங்கையைக் காட்டுகிறாள். அதில் பிடாரியின் அறுந்த காது இருக்கிறது.) உங்கம்மா என் காதை அறுத்துட்டாண்ணா! (என்று கூறி ஓலம் இடுகிறாள்.)

    அசுரபுஷ்டிநாயகி : நான் என்ன வேணும்னா இவ காதை அறுத்தேன். எம் முதுகுல இவ கத்தியால குத்திட்டாடா.

    பிடாரி : நம்பாதீங்கோ. உங்கம்மா பொய் சொல்றா.

    அசுரபுஷ்டிநாயகி : எனக்குத் தெரியும். நீ இப்படிச் சொல்லுவேன்னுதான் நான் முதுகுல குத்தின கத்தியை எடுக்காம அப்படியே வச்சிருக்கேன். நீயே பாரு! (என்று கூறி முதுகைக்காட்ட அங்கு மூன்று அங்குல ஆழத்திற்கு ஒரு பிச்சுவா பதிந்திருக்கிறது.)

    கோரஸ்வரூபன் : சேச்சே…. பொழுது விடிஞ்சு பொழுது போனா எப்பப் பாரு உங்க சண்டையைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கோம். இதெல்லாம் பாக்கறச்சே பேசாம ‘ஆபீசே’ கதின்னு அங்கயே பழியா கிடந்துடலாம் போலருக்கு.

    அசுரபுஷ்டிநாயகி, பிடாரி (இருவரும் ஒரே சமயத்தில்) ஆபீசா! அப்படீன்னா என்ன அர்த்தம்?

    கோரஸ்வரூபன் : எவனுக்குத் தெரியும் அர்த்தம். ஏதோ விரக்தில சொல்லணும்னு தோணித்து சொன்னேன்.

    பின்குறிப்பு – கோரஸ்வரூபன், மாமியார் – மாட்டுப்பெண் சண்டையால் வெறுத்து உச்சரித்த ‘ஆபீஸ்’ என்ற வார்த்தை நாளடைவில் பிரபலமாகி பலராலும் பேசப்பட்டது. வீட்டில் பிடுங்கல் காரண்மாக நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவித்த மனிதன் அன்று முதல் வெளியில் ‘ஆபீஸ்’ என்ற பெயரில் ஒரு ரம்மியமான இடத்தைத் தோற்றுவித்து பகல் நேரங்களில்
    செளக்கியமாகத் தூங்க ஆரம்பித்தான்.

    (முடிவு)
    ——————————————————————————————————————————

    Share
  • காலமகள் கண் திறப்பாள் சின்னையா..

    கவிஞர் காவிரி மைந்தன்

    காலமகள் கண் திறப்பாள் சின்னையா.. – ஆனந்த ஜோதிக்காக கவியரசு கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்த இசையில் பி.சுசீலாவின் குரலில்..

    ஆனந்த ஜோதிக்காக கவியரசு கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்த இசையில் பாடல்கள் அனைத்தும் தேனாமிர்தம்! தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டும் ஒருதாய் மக்கள் நாம் என்போம்.. நினைப்பு என்பது இருக்கும் வரை மனதில் இருக்கும் பாடலாக.. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? கவிதை என்பதே பொய்யானது என்னும் கூற்றுக்கு மாற்றுசொல்ல.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.. காதல் நதியில் காலமெல்லாம் பயணம் செல்ல.. பனியில்லாத மார்கழியா.. என்று படையெடுத்துவரும் பாடல்களுக்கு மத்தியில் மனதிற்கு மிக மிக நெருக்கமாக.. உருக்கமாக.. உள்ளத்தில் உள்ள காயங்களுக்கு மருந்திடும் வகையில் அமைந்த ஒரு பாடலும் இப்படத்தில் உண்டு. இந்தப் பாடலில் தேவிகாவுடன் உலக நாயகன் கமலஹாசன் (சிறுவயதில்) இணைந்து நடிக்க.. பி.சுசீலாவின் குரலில் என்ன இருக்கிறது .. மனதை வருடிக்கொடுக்கும் சுபபந்துவராளி ராகத்தில் கானமாக வருகிறது கேளுங்கள்..

    மனதில் சுமையிருந்தால் இறக்கி வையுங்கள்.. இப்பாடலைக் கேளுங்கள்.. நிம்மதியின் சன்னதி திறக்கும்! கவலையைப் பற்றிய கவலைக்கு கொஞ்சம் விடுமுறை தாருங்கள்.. காலம் கனியும் என்று காத்திருங்கள்.. நம்பிக்கைதரும் வரிகளை மனனம் செய்யுங்கள்..

    கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
    கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
    நெல்லுக்குள்ளே மணியை நெருப்பிலே ஒளியை
    உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
    தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா

    பாடல் : காலமகள் கண் திறப்பாள் சின்னையா..
    படம் : ஆனந்தஜோதி
    எழுதியவர் : கண்ணதாசன்
    இசை ; விஸ்வநாதன் ராமமூர்த்தி
    கால மகள் கண்திறப்பாள் சின்னையா

    நாம் கண்கலங்கி .. கவலைப்பட்டே என்னையா
    நாலு பக்கம் வாசல் உண்டு நில்லையா
    அதில் நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லையா
    சின்னச்சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
    ஆவதெல்லாம் அகட்டுமே அமைதிகொள்ளடா
    ஒரு பொழுதில் துன்பம் வரும் மறுபொழுதில் இன்பம் வரும்
    இருளிலும் ஒளி இருக்கும் ஏக்கம் ஏனடா
    தம்பி தூக்கம் கொள்ளடா
    தம்பி தூக்கம் கொள்ளடா ..( காலமகள்)

    கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
    கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
    நெல்லுக்குள்ளே மணியை நெருப்பிலே ஒளியை
    உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
    தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா
    (காலமகள்)
    ஆ ஆஆ ஆஆ ஆ… ஆ அ அ ஆ …
    ஆ அ அ ஆஆ.. ஆ அ அ ஆஆ…

    Share
  • அணு உலை எதிர்ப்பாளி ஞாநி ​ சங்கரன்​ பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு எனது பதில்

    சி. ஜெய பாரதன்
     

    கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்கத்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு ஊரில் அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உலகநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

    இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன.  அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டி களுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும்.

    இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.

     

    கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்

    எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவறாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!  இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப்பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள்தான்.

    கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.

     

    ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்

    1. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

    எனது விளக்கம்:

    செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.

    விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான்கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.

    2. ஞாநியின் கருத்து:

    பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

    எனது விளக்கம்:

    நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

    விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

    3. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

    எனது விளக்கம்:

    அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

    4. ஞாநியின் கருத்து:

    கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!

    எனது விளக்கம்:

    அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!

    மீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

    1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

    2.  http://www.npcil.nic.in/

    செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

    1.  ஞாநியின் கருத்து

    மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.

    எனது விளக்கம்

    http://www.npcil.nic.in/ இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது

    2.  ஞாநியின் கருத்து

    வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.

    எனது விளக்கம்.

    இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.

    3.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனது விளக்கம்

    இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனால் யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.

    4.  ஞாநியின் கருத்து

    கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].

    எனது விளக்கம்.

    கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல !

    இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

    இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

    இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதி

    ​ ​

    களையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது. 

    அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

    கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை.

    கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

    கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

    நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

    ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

    கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

     

    அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

    உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்

    ​ ​

    களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 

    தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்

    ​ ​

    சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார். 

    ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.

    நான் 45 ஆண்டுகளுக்கு மேல் இந்திய & கனடா அணுமின் உலைகளில் நேரடியாக வேலை செய்து அனுபவன் பெற்றவன்.  எனது இரண்டாவது புதல்வி கனடாவில் உள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்து வருகிறாள்.  அவளது கணவரும் அருகில் உள்ள டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  அவருக்குப் புதல்வர் இருவர்.  அணு உலையில் வேலை பார்த்து வந்த எங்களில் யாருக்கும் இதுவரை ஆறாவது விரல் முளைக்க வில்லை.  கதிரியக்கத்தால் புற்று நோயோ, மற்ற நோயோ எங்களைத் தாக்க வில்லை !  அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டு காலம் வசித்து, அங்குள்ள சூழ்வெளிக் காற்றைச் சுவாசித்து, நீரைக் குடித்து, உண்டு, உறங்கி, உறவாடி நலமுடன் வாழ்ந்து வருகிறோம்.  எங்களைப் போல் ஆயிரக் கணக்கான மாந்தர் இந்தியாவிலும், கனடாவிலும் அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டுகள் பாதுகாப்பாக ஆரோக்கியமாய் வசித்து வருகிறார்.
    ++++++++++++++

    தகவல்:
    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03)

    இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

    1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

    2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

    3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

    4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

    4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

    5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003]http://www.dae.gov.in/gc/gc2003.htm

    6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

    7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

    12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

    14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

    [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

    15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

    [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]

    16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)

    17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

    ​ [Revised]​
    Share
  • “தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

    தொகுப்பு: எஸ். வி. வேணுகோபாலன்

    முனைவர் ம. திருமலை,

    துணைவேந்தர்,

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    “கிராமத்தில் மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் நடத்தப்பட்டுவந்த  பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்த என்னை சோழவந்தான் உயர்நிலைப் பள்ளியில் கொண்டுவந்து போட்டார்கள். இங்கே சொல்லத் தக்க மதிப்பெண்கள் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. நான் தேற மாட்டேன் என்றார்கள். எனினும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டேன். முழுக்க முழுக்கத் தாய்மொழிவழியிலேயே கல்வி பயின்றவன். இப்போது உங்கள் முன் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தராக நிற்கிறேன்…..எனவே பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன்… மதிப்பெண்களை வைத்துக் குழந்தைகளை எடை போடாதீர்கள்… குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் நல்ல சாதனையாளர்களாக வர வாய்ப்பு உண்டு.

    “காலனி ஆதிக்கம் இருந்த நாட்களில், அர்பட்நாட் என்ற ஆங்கிலேயர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகப் போனபோது, அவரது வங்கியில்  பணம் போட்டிருந்தவர்கள் பட்ட பாடுகளை மகாகவி பாரதி தமது கட்டுரையில் எழுதினார். நாமே ஒரு சுதேசி வங்கி தொடங்கினால் என்ன என்று அவர் விடுத்த வேண்டுகோளில் இருந்து பிறந்ததுதான் இந்தியன் வங்கி. பின்னர் அதே அர்பட்நாட்டின் கட்ட்டடத்தையும் வாங்கி அங்கேயே இந்த வங்கி இயங்கத் தொடங்கியது. அதன் ஊழியர்கள் எங்களுக்குச் சமூக அக்கறை உண்டு என்று கம்பீரமாக நடத்தும் இந்தத் தொழிற்சங்க சேவை போற்றுதலுக்குரியது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துதலுக்கு உரியவர்கள்.

    இங்கே தலைமை ஆசிரியை வாசித்த ஆண்டறிக்கையில், இந்தப் பள்ளியில்  பிரம்படி இல்லை. ரேங்க் கார்டு இல்லை என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேங்க் கார்டு கொடுத்ததும் இந்த அம்மாக்கள் உடனே அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஒப்பிடுவார்கள். இது எங்கே கொண்டுபோய் விடும் தெரியுமா? முதல் முறை அடிபட்ட  பிள்ளை, அடுத்த முறை  அப்பா கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டுபோய்விடுவான். பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உண்டு.  ஒரே வீட்டில் அண்ணனும், தம்பியும் இருப்பார்கள். ஒருவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருப்பான். அவன் தனது ரேங்க் கார்டைப் பெற்றோரிடம் கொண்டு காட்டுவான். அடுத்தவன் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனால் அப்படிக்காட்ட முடியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மிக்க் கவனமாகவும் திறமையாகவும் செயற்படவேண்டும். இருவரையும்  பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    முனைவர் ம. திருமலை, துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
    முனைவர் ம. திருமலை,
    துணைவேந்தர்,
    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ஒருமுறை நான் விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனக்குப் பின்புற வரிசையில் செப்புச் சிலை போல் ஒரு பெண் குழந்தை. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோர் அந்தக் குழந்தையை அவள் சரியாகப் படிப்பதில்லை என்று யார் யாரோடோ ஒப்பிட்டவண்ணம் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தனர். என்னிடம் கொடுத்தால் அந்தக் குழந்தையை மடிமீது ஏந்திக் கொண்டாடி இருப்பேன். அவ்வளவு உயர்கல்வி படித்திருந்தும் அந்தப் பெற்றோர் இப்படி மூடத்தனமாகக் குழந்தையை நடத்தும் விதம் என்னை மிகவும் பாதித்தது.

    பெற்றோரே, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்குகின்றனர் என்பதை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களிடம் காணும் திறன்களை ஊக்குவித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களைப் பள்ளியில் பெற்ற  குழந்தைகள் சிலர் மேற்படிப்பில் சமாளிக்க முடியாமல் நொறுங்குவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ மனிதர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் அதிகம் மதிப்பெண் பெறாதவர்கள் என்பதை அன்பு கூர்ந்து கவனியுங்கள்.

    பள்ளிக்கூடப் படிப்பில், எங்களுக்குக் கணக்குப் பாடம், கணக்கு ஆசிரியர்  என்றாலே வயிற்றைக் கலக்கும். ஆனால் அவர் வராத அன்றைக்கு, கருப்பையா வாத்தியார் என்பவரை அந்த பாட வேளையில் ஏதாவது சொல்லிக் கொடு என்று எங்கள் வகுப்புக்கு அனுப்பி வைப்பார்கள். அவர் படித்தவர் இல்லை. கைநாட்டு மனிதர்தான். ஆனால் அவர் வந்தால் அப்படி உற்சாகம் கொள்ளும் வகுப்பறை. பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வார். நல்ல சுவாரசியமாகக் கதை போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு,இடுப்பிலிருந்து மூக்குப்பொடிப் பட்டையை எடுத்து அதில் ஒரு சிட்டிகை எடுத்து நிதானமாகப் பொடியை உறிஞ்சுவதில் ஈடுபடுவார். நாங்களோ கதையின் அடுத்த கட்டம் என்ன என்று அறியத் துடிப்போம். இப்படியாக எங்களை வசீகரித்து, வாழ்க்கை குறித்த புரிதல்களையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தவர் அவர். பள்ளிக் கல்வியைக் காட்டிலும் கருப்பையா கற்றுக் கொடுத்த நுட்பங்களே வாழ்க்கையில் சோதனைக் காலங்களில் – சவாலான தருணங்களில் பிரச்சினைகளைத் துணிவோடு சந்திக்கும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கிறது.

    இன்றைக்கு இப்படியான சூழல் இல்லாததால், மாணவர்கள் எப்படித் திணறுகின்றனர் என்று பார்க்கிறோம். ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்கள் வழிமறித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. இன்னொரு மாணவர் ஒரு பெண் ஆசிரியரையே குத்திக் கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளதைப் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

    கற்றலின் இனிமை பற்றிக் குறிப்பிட்டார்களே… மாணவர்-ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்க வேண்டும். தாய்மொழியைக் கேவலமாக நினைக்காதீர்கள்…உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீன மொழி.  ஆங்கிலம் அல்ல. ஆங்கில மோகம் கொண்டு அலைவது தேவையற்றது. மகாகவி பாரதியே,ஆங்கிலக் கல்வி பற்றி வருத்தமுற்றுத் தனது சுயசரிதையில், “செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது” என்று சொல்வார். இதனால் ஓர் எள்ளின் முனையளவு  நலமும் பெற முடியவில்லை என்றார். இதை எந்தக் கோயிலிலும் வந்து சத்தியம் செய்வேன் என்றும் சொன்னார். நானும் தமிழ் வழிக் கல்வி படித்துத்தான் இன்று துணைவேந்தராக உயர்ந்திருக்கிறேன். ஒன்றும் விளங்காமல் எல்லாம் போய்விடவில்லை. தமிழ் கற்றால் நல்ல நிலை ஏற்படும் என்பதற்கு வேறு ஒரு நிரூபணம் தேவையில்லை.

    இந்தப் பள்ளி தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவது அருமையான விஷயம். 6சதவீதம் பேர் பேசும் ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம். நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்..

    இந்தப் பள்ளி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..”

    (இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நடத்திவரும் ஐ பி இ ஏ பள்ளியில்  பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற 12ஆவது ஆண்டுவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து…)

    நன்றி: வண்ணக்கதிர்

    Share
  • மாற்றம் ஏற்படவேண்டும்!

    எம்.ஜெயராமசர்மா

    திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது. பைபிளும் வந்தது. பகவத்கீதையும் வந்தது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை ஆன்மீகத் தலைவர்களும், அறிஞர்களும் — மனித குலம், மண்ணில் நல்லவண்ணம் வாழ, எண்ணில்லாதவற்றை எல்லாம் – பாட்டாகவும், பயனாகவும் சொன்னார்கள். சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியபடி இருக்க — மற்றவர்களோ மனம்போனபோக்கிலே தாம் விரும்பியபடியே போய்க்கொண்டு இருப்பதையே இப்போது காணமுடிகின்றது.

    மனித வாழ்வில் மாற்றம் அதாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் எல்லாம் வந்தார்கள்.அறிவுரைகளை எல்லாம் தந்தார்கள்.அவர்கள் எண்ணிய மாற்றம் ஏற்பட்டதா என்றால் அது – கேள்விக்குறியாகவே இன்று அமைந்து விட்டது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? மனிதனை புனிதனாக்குவது சமயம் என்றும், ஒழுக்க நெறியுடன் வாழப் பழக்குவது சமயம் என்றும், சமத்துவ மனப்பங்கை வளர்ப்பது சமயம் என்றும்,இறை உணர்வோடு அன்புமயமாக வாழவைப்பது சமயம் என்றும், சமயத்துக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

    ஆனால் சமயம் என்பது தன்னிலை இழந்து நிற்பதையே எங்கும் காணமுடிகிறது. சமயத்தை ” மதம் ” என்றும் அழைத்தனர். அதாவது மனிதனிடம் நான் என்னும் ஆணவமதம் பிடிக்காது அவனை நல்வழிப்படுத்தும் காரணத்தால் தான் மதம் என்று பெயரிட்டு அழைத்தனர். இந்தச் சொல் மிகப் பொருத்தமாக அமைந்து விட்டதென்றே சொல்லலாம்.ஆனால் அதனை எடுத்துக் கொண்டவர்களோ அர்த்தம் புரியாது, தமக்கேற்றபடி மாற்றிக்கொண்டு மதவெறியர்களாகவே மாறிநிற்பதைக் காண்கிறோம்.

    இந்த மதவெறியால் எத்தனை கலவரங்கள் ? எத்தனை உயிர்கள் மடிந்தன? எவ்வளவு சொத்துக்கள் அழிந்தன? எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் இல்லாது போயின? சாந்தி, சமாதானம், அனைத்தும் செல்லாக் காசுகளாகி நிற்கின்றன்!

    மதத்தின் பெயரால் நூறு ஆண்டுகள் உலகில் நடைபெற்ற சிலுவைப் போரை வரலாற்றிலிருந்து எடுத்துவிட முடியாது. எத்தனை கோரத்தனங்கள் அதனால் உலகில் ஏற்பட்டது என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளுவார்கள்.

    இதன் பின்பும் மதவெறி அடங்கியதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது.உலகினெங்கோ ஒரு பகுதியில் இன்றும் மதத்தின் பெயரால் கோரங்கள் அரங்கேறிய படியேதான் இருக்கிறது.

    மதத்தோடு சண்டை நின்ற பாடில்லை.மொழிக்காகவும் பல இடங்களில் பல சண்டைகள். இதனாலும் பல கோரங்கள்.

    மதமும் ,மொழியும், கலவரங்களுக்கு வித்திட்டதென்ற வகையில்,  இனத்தாலும் பல கோரங்கள் நிகழ்ந்து விட்டன. இன்றும் நிகழ்ந்த வண்ணமே இருப்பதையும் காணமுடிகிறது.

    இவற்றை உற்று நோக்கும் பொழுது — இனமும், மதமும், மொழியும், தேவையா? என்கின்ற வினா எழுகிறதல்லவா? இவை மூன்றும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் வாழவே முடியாதவன் ஆகிவிடுவானா? இவை கட்டாயம் மனித வாழ்வுக்குத் தேவைதானா?

    சிக்கலானதும் சிந்திக்க வேண்டிய விடயமுமாக இருக்கிறதல்லவா? மதமும் பாதுகாக்கப் படவேண்டும். மொழியும் பாது காக்கப்பட வேண்டும். அதே வேளை இனமும் பாதுகாக்கப் படவேண்டும்.

    என்ன ஆச்சரியமாகப் படுகிறதா?ஆம்! இம் மூன்றும் இல்லை என்றால் மனித இனம் இருந்தென்ன இல்லா விட்டால் என்ன? இவை இல்லையேல் மனித இனம் விலங்கினத்தோடுதான் சேரும் கட்டாயம் வந்துவிடும்.

    புத்தர், ஜேசு, சங்கரர், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, இவர்களின் வருகையும், இவர்களின் உபதேச மொழிகளும் எங்கே? அவை என்னவாயின? நாம் அனைவரும் எம்முள்ளே கேட்க வேண்டிய கேள்வியாகும்!

    புத்தரின் போதிமரத்தின் அடியிலேயே அவரின் கொள்கைகள் புதைக்கப்படுகிறது. ஜேசு போதித்த நெறி நீத்துப் போவதைப் பார்க்கின்றோம்.காந்தியின் அஹிம்சை படும்பாடோ சொல்ல முடியாத நிலை! ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், எம்மத்தியிலா வாழ்ந்தார்கள்? என்று எண்ணும் நிலைதான் காணப்படுகிறது.

    கீதை , உபநிடதம், அதற்கான பல விளக்க உரைகள், வேதங்கள், மந்திரங்கள் , தத்துவ சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் இருக்கின்றனவா? என்ற சந்தேகமே ஏற்படுகிறது.அந்த அளவுக்கு விபரீதங்கள் நடப்பதை கண்கூடாக காண்கின்றோமல்லவா?

    ஆண்டவநின் சன்னிதானமான கோவில்களிலே சண்டைகள். அறிவினை ஊட்டும் கல்விக்கூடங்களில் எல்லாம் அறிவினைப் புறந்தள்ளி விட்டு விட்டு பணத்தை பிடிங்கி விடும் நிலையங்கள் ஆகிவிட்ட கொடுமை. உயிர் காக்கும் என்று எண்ணி நிற்கும் வைத்திய நிலையங்களோ உயிர் பற்றிய கரிசனையை விட்டு விட்டு காசை எவ்வளவு கறக்கலாம் என்று நிற்பதையும் காண்கின்றோம். அரசியல் பற்றி நினைக்கவே அருவருக்கிறது. ஊழல்களின் உறைவிடமாகி விட்டது. எங்கும் கலப்படம். எதைப் பார்த்தாலும் பயப்பட வேண்டிய நிலை.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெளியில் செல்லவே அஞ்சும் நிலை. நாட்டில் இருகிறோமா? அல்லது அடர்ந்த காட்டில் கொடிய விலங்குகளின் மத்தியில் இருக்கிறோமா என்று எண்ணும் பயங்கரம்!

    இவை தேவைதானா? இதற்காகவா எமது முன்னோர் பலர் பல தியாகங்களைச் செய்தார்கள்? இதற்காகவா எமது வழிகாட்டிகளான் பெரியவர்கள் பல் அறிவுரைகளை விட்டுச்சென்றார்கள்?

    ” கற்றதனால் ஆய பயன்தான் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டாமா?

    குறளும், குரானும், பைபிளும் . பகவத்கீதையும் சொல்லியதை விட வேறு எதுவுமே எதையும் சொல்லிவிட முடியாது.

    அவற்றை எல்லாம் நாம் வைத்திருந்தும் — எம்மிடத்து நல்ல மாற்றம் ஏற்படாது இருப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் அனைவரும் கட்டாயம் உணரவேண்டும்.

    எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நல்லவற்றை  மனத்திருத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

    அற்புதமான அமிர்தம் போன்ற இந்தப் பொக்கிஷங்களை நல்ல முறையில் பயன் படுத்தினால் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்வும் வளம் பெறுவதோடு மண்ணில் நல்ல வண்ணமும் வாழலாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 112 (17.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உறையூர் சென்று சேர்தல்

    சாப விமோசனம் தந்தபின்
    தவத்தில் சிறந்த கவுந்தியடிகளும்
    கோவலனும் கண்ணகியும்
    அச்சோலையை விட்டுப் புறப்பட்டனர்.

    முன்பு ஒரு முறை
    முறம் போன்ற காதையுடைய யானை ஒன்றைப்
    போரிட்டு வென்ற கோழியின் பெயரைத் தாங்கி,
    கோழியூர் எனவும் அழைக்கப்பட்ட
    உறையூருக்குள் சென்றனர்.

    கட்டுரை

    முடியுடை வேந்தர் மூவருள்
    வீரவளை அணிந்த பெரிய கைகளையுடைய
    சோழமரபில் பிறந்தவர்கள்,
    அறம், மறம், ஆற்றல் மற்றும்
    அவர் பழம் பெரும் புகாரின் பண்பு,
    இந்திரவிழாச் சிறப்பு, விண்ணவர் வரவு,
    குடிமக்களின் மாண்பு, உணவுப்பொருள் பெருக்கம்,
    தெய்வத்தை ஒத்த காவிரி நீரின் சிறப்பு,

    பொய்க்காத வானம், புனல் பொழியும் சிறப்பு,
    ஆடலரங்கின் அமைப்பு,
    தூக்கு, வரி, பதினோரு வகை ஆடல்கள்,
    திணைநிலை வரி, இணைநிலை வரி..இவற்றின் தன்மை
    இவை எல்லாம் பொருந்த அமைந்த யாழின் இயல்பு,
    அவற்றுள் சிறந்த பதினான்கு வகை
    இசைக்கோவையாகிய யாழின் சிறப்பு,
    இடைநிலைப் பாலைப்பண்ணின் சிறப்பு,
    அதன் வழித் தோன்றிய இசையின் ஆக்கம்,
    புகாரின் பொலிவு, ஒளியுடைப்பாணி

    மேலும் இங்கு சொல்லப்படாத
    இன்னும் பல சிறப்புகளுடன்
    ஒருமித்துப் பொருந்தி விளங்கும்
    புகார்க் காண்டம் முற்றிற்று.

    வெண்பா

    கடலை வேலியெனக் கொண்டமைந்ததும்
    இப்பூமிமகள் தன் நெஞ்சில் அணிந்த
    முத்துமாலை போன்றதுமான
    புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம்…

    காலை நேரம் உதித்து ஒளிபரப்பும் சூரியன் போலவும்
    மாலை நேரம் உதித்து வளரும் இயல்புடைய திங்கள் போலவும்
    வாழ்வாங்கு வாழ்வதாக!

    புகார்க் காண்டம் முற்றிற்று.
    அடுத்து வருவது  மதுரைக் காண்டம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  245 – 271

    Share
  • குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    “என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? “

    “எனக்கு அந்த பொம்மை வேணும்.”

    நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.

    எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

    அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம்.

    ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

    இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

    அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

    இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்.”  குட் டச் ”  “பேட்  டச் ” என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்.

    அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.

    ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

    பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

    “good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

    பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.

    Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

    உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    link  www.youtube.com/watch?v=4xQCauzPzY4‎

    காணொளி  நன்றி: Child Line Foundation India.

    Share
  • நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

    கவிஞர் காவிரி மைந்தன்

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது.

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. சங்க காலப் புலவர்களும் சளைக்காமல் இதுபற்றிப் பாடிக் குவித்துள்ளார்கள். அகவியல் சார்ந்த காதலில் உறவது தருவது இனிமையென்றால் பிரிவது தருவது கொடுமையன்றோ?

    விதவிதமாக விளக்கங்கள், புதுவிதமான கற்பனைகள், கவிஞர்களுக்கு கைகொடுத்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கான வரவேற்பும் பொது மக்களிடம் என்றுமே குறைவதில்லை. அண்மையில் கவிஞர் யுகபாரதி அவர்களுடன் ஏற்பட்ட சத்திப்பின்போது.. கவிதை.. இலக்கியம் பற்றி உரையாடியபோது.. அவர் குறிப்பிட்ட சேதியில்தான் எத்தனை உண்மைகள் உறைந்திருந்தன தெரியுமா?

    ஆம்.. இதுவரை.. உலகின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற இலக்கியங்கள் எவை தெரியுமா? Romance or Pathos அதாவது.. காதலின்பம் அல்லது சோகம் இவை தழுவி எழுதப்படாத எந்த ஒரு படைப்பும் அல்லது நூலும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்றார்.

    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்

    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

    வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
    கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

    சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
    சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
    மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
    மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

    படம்: உயர்ந்த மனிதன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: வாலி
    பாடியவர்: பி.சுசீலா

    பாடலைப் பாடிய திருமதி.பி.சுசீலாவிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல். காதலில் பிரிவும் கூட துன்பமான இன்பமானது என்பதைச் சொல்லும் பாடல். மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உயர்ந்த மனிதன் பாடல் இது!

    Share
  • 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]

     
     

    Pluto

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html

    (கட்டுரை -3)


    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    பூதக்கோள்
    வியாழனைச் சுற்றி
    ஈர்ப்பு வீச்சில்
    வேகம் மிகையாகி
    விரைவாய் உளவப் போகுது
    புளுடோ வையும்
    சேரன் என்னும்
    துணைக் கோளையும் !
    முதலிரு வாயேஜர்
    விண் கப்பல்கள் காணாத
    புதுமைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை
    உளவச் செல்லும் !
    வால்மீன் மந்தை தோற்ற
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே அடுத்த
    புதிய மைல் கல்
    நடும் நாசாவின்
    அதிசயத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு  உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சேரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங்களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    New Horizon Approac to Pluto

    குள்ளக் கோள் புளுடோவில் கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியம் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2014] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளைத் தாண்டப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜனவரியில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15  புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

     

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்தியதோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

     

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

     

     

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

     

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல்களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

     

    Current position of spacecraft

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

     

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

     

     

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

     

     

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html (Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2019)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    15.  http://en.wikipedia.org/wiki/New_Horizons  [March 12, 2014]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 15, 2014

    Launch of NASA’s New Horizons Spacecraft

    ScienceCasts: Countdown to Pluto

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்!

    மேகலா இராமமூர்த்தி

    புதுச்சேரி,

    12.03.2014

    அன்புப் பெயர்த்தி மணிமொழிக்கு,

    தாத்தா எழிற்கோ ஆவலோடு எழுதுவது. நீயும், தம்பி மலர்ச்செல்வனும் நலமா? உன் தாய் தந்தையர் நலமா?

    அமெரிக்காவில் இருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் பாட்டியும் அடிக்கடித் தொலைபேசியில் பேசுகிறோம்; ’யாஹூ மெசஞ்சர்’, ’ஸ்கைப்’ போன்றவற்றின் வழியாக உரையாடுகின்றோம் என்றாலும் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது மடல் வழியாக மனவுணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதே மணிமொழி; அதனால்தான் இந்த மடல்!

    தூயதமிழில் நான் இம்மடலை எழுதுவதன் நோக்கமே நம் தாய்த்தமிழை நன்றாகப் பேசவும், ஓரளவிற்கு எழுதவும் படிக்கவும் கற்றுவைத்துள்ள நீ (சற்றே கடுமையான நடையில் எழுதப்பட்டுள்ள) இம்மடலை எழுத்துக்கூட்டியேனும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணமும், வாசித்துவிடுவாய் என்ற நம்பிக்கையுமே!

    நீ நினைக்கலாம்….ஏன் இந்தத் தாத்தா எப்போது பார்த்தாலும் தமிழ்..தமிழ் என்றே புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று. நான் உன் தாத்தா மட்டுமல்ல….ஓய்வுபெற்ற ஓர் தமிழ்ப்பேராசிரியரும் ஆவேன் என்பது நீ அறிந்ததே! அமுதத்தின் சுவை அதனைச் சுவைத்தவனுக்கே தெரியும். அதுபோல் நம் அமுதத் தமிழின் அருஞ்சுவையை நான் நன்கறிவேன்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லுவார்,

    ’தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத்
    தமிழின்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!’ என்று.

    மகாகவியும், பன்மொழிப் புலமையாளருமான பாரதியும்,

    ’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்’ என்று வாயூறிப் பேசுவார்.

    இப்படிப் பெரும்புலவர்கள் பலரால் போற்றப்படும், ஏற்றப்படும் ஓர் உன்னத மொழி உனக்குத் தாய்மொழியாக அமைந்தது நீ பெற்ற பேறேயல்லவா? ஆம்…மிகவும் உயரிய நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம். சிறந்த இலக்கண இலக்கிய வளமும், தொன்மைச் சிறப்பும், உயர்ந்த கருத்துக்கள் செறிந்த நூல்கள் பலவும் உடையதாய் விளங்குவதாலேயே நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாய் (Classical language) இன்றும் திகழ்கின்றது என்பதை மறவாதே!

    மணிமொழி! அயல்நாட்டில் பிறந்து அதையே வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் நீ அங்குள்ள மக்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெறவேண்டியது மிக அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. ‘When in Rome, do as the Romans do!’ என்பது பழமொழி. எனவே அமெரிக்கவாசியான நீ ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறவேண்டும்; அத்தோடு அங்கு பேசப்படும் பிறிதோர் முக்கிய மொழியான ஸ்பானிஷையும் நன்கு கற்றுக்கொள்! பள்ளியில் கற்றுத்தரும் ‘பிரெஞ்சு’ மொழியிலும் தேர்ச்சி கொள்! இன்னும் எத்தனை எத்தனை மொழிகளை உன்னால் கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையையும் கற்றுக்கொள்! அப்போதுதான் ‘Global village’ என்று சொல்லுகின்ற அளவிற்குத் தொலைத்தொடர்பு வசதிகளாலும், கணினிப் பயன்பாடுகளாலும் மிகவும் சுருங்கிவருகின்ற இன்றைய நவீன யுகத்தில் வெற்றி மங்கையாய் உன்னால் வலம்வர முடியும்!

    நாம் அறிந்துகொள்கின்ற பல்வேறு மொழிகளும், வாழ்வியல் பண்புகளும் நம் அறிவை விசாலமாக்கவும், உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் உன்னுடைய சிந்தனையும் செயற்பாடுகளும் நம் பண்பாடு மற்றும் நாகரிகம் சார்ந்ததாகவே அமைதல் வேண்டும் என்பதே என் அவா. வளரும் சூழ்நிலையால் நீ அமெரிக்கப் பெண்ணாக இருந்தாலும் பிறப்பால் ஓர் தமிழ்ப்பெண் என்பதை எப்போதும் நினைவில்கொள்! எனவே சிறந்த தமிழ்ப்பெண்ணாக நீ வளரவும் வாழவும் வேண்டுமெனில் நம் பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வையும், அவர்தம் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்குச் சிறந்த வழி…நம் முன்னோர்கள் தந்துவிட்டுச் சென்றுள்ள சங்க இலக்கியப் புதையலையும், திருக்குறள் முதலிய அறநூல்களையும் நீ அறிந்துகொள்வதே!

    இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்லவும், தங்கவும் முடிகின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தைத் தவிர வேறிடங்களுக்குச் சென்றறியாத தமிழ்ப் புலவரான கணியன் பூங்குன்றனார் என்பவர்,

    ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’

    தீதும் நன்றும் பிறர்தர வாரா…’ எனும் ஒப்பற்ற சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். ’Three principles of French Revolution’ பற்றி உனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். Liberté, Egalité, Fraternité (Liberty, Equality and Fraternity in English) என்பவையே அவை. இதனையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று தமிழில் அழைக்கின்றோம். இதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவத்தையே கணியன் பூங்குன்றனாரின் ’யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது. எனவே சகோதரத்துவம் எனும் உயரிய கோட்பாட்டை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களே தமிழர்கள்தான் என்பதை நான் உனக்குப் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் மணிமொழி.

    பக்குடுக்கை நன்கணியார் எனும் மற்றொரு சங்கப் புலவர்,

    ’…..இன்னா தம்மஇவ் வுலகம்
    இனிய காண்கித னியல்புணர்ந் தோரே’ என்கிறார் தன் புறப்பாடலில். ’இவ்வுலகம் மனத்துக்கு இனிமைதராத பல நிகழ்வுகளையும், சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டது; மனிதர்களாகிய நாம் அவற்றைக் கண்டு கலங்காது இன்னாதவற்றையும் இனியவையாகக் காண்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்’ என்பதே இவ்வடிகள் மூலம் அப்புலவர் நமக்கு உணர்த்தும் உண்மை!

    இதையேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும், இன்பத்தை விரும்பாதவனாய், துன்பம் இயற்கையானது என்ற தெளிவோடு இருப்பவன் துன்பம் வந்தபோதும் துன்புறுவதில்லை என்கிறார்.

    ‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

    துன்பம் உறுதல் இலன்’ என்பதே அக்குறள். மேலைநாட்டு அறிஞர்களிடம் தேடினாலும் காணக் கிடைக்காத அரிய சிந்தனைகள் இவை!

    மற்றொரு இனிய பாடலில் ’நரிவெரூஉத்தலையார்’ என்ற புலவர் பெருந்தகை, ’மனிதர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்யாமலாவது இருங்கள்; அதுதான் எல்லாரும் விரும்புவது; அத்தோடு உங்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் வழியும் அதுவே!’ என்று அன்போடு அறிவுரை அளிக்கிறார்.

    ’பல்சான் றீரே பல்சான் றீரே

    …………………………………………………………….

    நல்லது செய்த லாற்றீ ராயினும்
    அல்லது செய்த லோம்புமின் அதுதான்
    எல்லாரு முவப்ப தன்றியும்
    நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.’

    (மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல் உனக்கு மிகவும் பரிச்சயமான பாடல்தானே மணிமொழி! சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இப்பாடலை நீ மனப்பாடமாக ஒப்புவித்துப் பரிசுபெற்றது இப்போதும் என் நினைவிலிருக்கின்றது!)

    இதுபோன்று இன்னும் எத்தனையோ முத்துக்களும் மணிகளும் நம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. அதனால்தானோ என்னவோ….சங்க நூல்களில் ஒன்றான அகநானூற்றின் ஒரு பகுதிக்கு மணிகள் மற்றும் பவளங்களின் இணைவு என்ற பொருள்தரும் ‘மணிமிடைபவளம்’ என்ற அழகிய பெயரினையும், மற்றொரு பகுதிக்கு ’முத்துமாலை’ எனப் பொருள்தரும் ‘நித்திலக்கோவை’ என்ற இனிய பெயரினையும் சூட்டியிருக்கின்றனர் தமிழ்ச்சான்றோர்; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் தமிழின் சிறப்பை! இவற்றையெல்லாம் நீ கற்று மகிழவேண்டும் அம்மா! அத்தோடு நில்லாமல், உன் தோழர் தோழியர்க்கும் நம் தமிழ்ச்சிந்தனையின் ஆழத்தை, அகலத்தை அறியத்தரவேண்டும். அதற்காகவேனும் நீ செந்தமிழ் இலக்கியங்களைக் கற்கத்தான் வேண்டும்.

    மணிமொழி! இப்போது நீ சிறுமி. நான் எழுதுகின்ற செய்திகளையும், அவற்றின் இன்றியமையாமையையும் புரிந்துகொள்ளுகின்ற வயதோ பக்குவமோ உனக்கில்லை என்பதை நானறிவேன். பின்பு ஏன் இப்போதே இவற்றையெல்லாம் உனக்குச் சொல்லுகிறேன் என்றால்…..மனித வாழ்வு நிலையற்றது; நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை என்னும் இயல்புடையது.

    ’நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு’ என்ற தெய்வப்புலவரின் பொய்யாமொழி புகல்வது வாழ்வின் நிலையாமையையே. எனவே வயதான நான் உனக்குச் சொல்லவேண்டிய அறிவுரைகளையும், அறவுரைகளையும் காலந்தாழ்த்தாமல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சொல்லிவிடுவதே நல்லதல்லவா?

    பழைய தலைமுறையினரான நாங்கள் கிணற்றுத் தவளைகளாக – வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவிட்டோம். உன் தலைமுறை அப்படியில்லை. பல்வேறு வண்ணமும், எண்ணமும் கொண்ட மக்களோடு கலந்து பழகும் அரியதோர் வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கின்றது. இதனைச் சரியான வகையில் நீ பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பிற மொழிகளோடு தமிழையும் தவறாது பயில்! நீயே வியக்கும் வகையில் விரைவில் நல்ல தமிழ்ப்புலமை வாய்க்கப்பெறுவாய்!

    தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தொலையாமல், அழியாமல் காக்கும் பெரும்பொறுப்பு உன்னைப் போன்ற இளந்தமிழர் கைகளில் இருக்கின்றது மணிமொழி.

    எதிர்காலத்தில் நீ சிறந்த தமிழறிஞராய்த் திகழவேண்டும்! உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்யவேண்டும்! அப்போது உன் அன்புப் பாட்டனார் உன்னுடன் இல்லாமல் போகலாம்; ஆயினும் இம்மடல் உனக்கு என்னை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்!

    மகாகவியின் பாடல் வரிகளோடு இம்மடலை நிறைவு செய்கின்றேன். (இவ்வரிகளை உனக்காகவே பாரதி எழுதினானோ என்று எனக்குத் தோன்றுகின்றதே……..இஃதென்ன விந்தை!!)

    ’தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்

    ……………………………………………………………….

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை யில்லை
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.’

    (பி.கு: என் ஆசைகளையும், விருப்பங்களையும் உன் அன்புப் பாட்டியும் உளப்பூர்வமாக வழிமொழிவதாக உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்.)

    உனக்கும், மலர்ச்செல்வனுக்கும் எங்கள் அன்பு முத்தங்கள்!

    தமிழ் வாழ்க!

    என்றும் உன் நலனையே நாடும்,

    தாத்தா எழிற்கோ

    Share
  • அன்புள்ள மணிமொழி!…

     

    மணிமொழி ! நீ என்னை மறந்து விடு ! (விலகிப்போனவனின் ஒரு கடிதம் )

    அன்புள்ள மணிமொழிக்கு

    நீ நிரம்ப நேசிக்கிற ராஜாதான் எழுதுகிறேன்.

    ஆமாம் ! ராசியில்லா ராஜாவேதான்.

    கைபேசிகளின் சாம்ராஜியத்தில் பூஜ்யமாகிப்போன கடிதமா என்று யோசிக்கிறாயா. நேருக்கு நேராக போசுகிற திறனும் பேசுதற்கான சொற்களும் சிக்காத போது இன்னும் நமக்கு மிச்சமிருப்பது இந்த கடிதங்கள்தாம். கடிதங்களுக்கிருக்கும் மகத்தான சக்தி இன்னும் அழிந்து போய் விட்டதாக நான் கருதவில்லை.

    மணிமொழி ..
    இந்த கடிதம் உன் கைகளுக்கு கிடைக்கிறபோது இந்ததேசத்தின் இன்னொரு மூலைக்கு நான் நகர்ந்திருப்பேன். அதிர்ச்சியுற வேண்டாம். ஆழ்ந்து ஆய்ந்தெடுத்த முடிவுதான். கடந்த காலங்களைப்போல அவசரப்பட்டு விடவில்லை .ஒருவேளை என்னை கண்டறிய நீயோ வேறு எவரோ முயற்சித்தால் . . . வேண்டாம் ! அது தோல்வியில்தான் முடியக்கூடும்.

    மணிமொழி !
    நான் வாழ்ந்த வளர்ந்த வடச்சேரி வலிவலம் கிராமத்தை ஒட்டிய ஒரு பகுதிதான். வலிவலமும் வடச்சேரியும் அரசு நிர்வாக வரைபடத்தில் இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இரண்டும் எப்போதுமே இரு வேறு துருவங்கள் என்பதை மறந்துவிடமுடியாது.வலிவலம் கிராமத்தின் கிழக்கு எல்லையோரம் உதிர்ந்து கிடப்பது வடச்சேரி. இரண்டுக்கும் இடையே பௌதீக அளவில் அப்படியொன்றும் வெகுதூரமில்லை. ஆனால் இந்த மண்ணின் மறபு வழியில் ஏற்பட்டுவிட்ட மேற் சாதி கீழ்சாதி என்ற சூத்திரத்தில் சிக்குண்டு தீண்டத்தகாத தூரத்தில் அமைந்து விட்டது. காலங்காலமாக மேற்சாதி கீழ்ச்சாதி என்று பழகிப்போன கட்டமைப்பில் ஒருவருக்கொருவர் எப்போதும் விலகியே நின்றனர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும்கூட இவர்களுக்கு இருவேறு நீர்நிலைகள் தனித்தனியாகத்தான் இருந்தது. இருந்தபோதும் அவர்கள் தங்கள் தங்கள் உயரங்களை வெகு நன்றாகவே உணர்ந்திருந்தனர். பெரும்பாலும் அவரவர் வாழ்க்கை அவரவர் போக்கில்தான் போனது. மேலத்தெரு ஈஸ்வரன் கோயிலில் வடச்சேரி மக்கள் நுழைய அரசு ஒத்துக்கொண்டாலும் இவர்கள் அந்த ஈஸ்வரனை நேருக்கு நேர் காண என்றைக்குமே முயர்ச்சித்ததில்லை.. மேலத்தெரு வாசிகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களை தடுக்க நேர்ந்ததுமில்லை..

    அதனால் வலிவலத்தின் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லை.

    ஆனால் என்ன ஆயிற்று இந்த வலிவலத்துக்கு..
    இந்த இரண்டு மாதத்தில் நடக்கக்கூடாத எத்தனையோ காரியங்கள் நடந்து விட்டது.
    எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் பதருகிறது.
    இத்தனைக்கும் நீயும் நானும்தான் காரணமா. என்ன வேடிக்கை. வயதுக்கு வந்த ஒரு ஆணும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் இந்த மண்ணில் காதல் புரிதல் ஆண்டுக்கு ஆண்டு காதல் தினங்கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் ஒரு மாபாதகச் செயலா.
    ஆனால் அப்படியல்லவா எடுத்துக்கொண்டார்கள்.
    இந்த நாடு விடுதலையுற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்துக்குமேற்பட்ட ஐந்தாண்டுத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றிவிட்டோம். கல்வியிலும் பொருளாதாரத்திலும்கூட கணிசமாக முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். பின் எப்படி இந்த வெறியாட்டம்.. நாம் பெற்ற கல்வி ஒரு நல்ல சமூகத்துக்கு வேண்டிய பண்புகளை போதிக்கத்தவறிற்றா.
    இந்த கொலைவெறிக்கு இரண்டு இளம் கன்றுகள் வேலிதாண்டி வாழ முயற்சித்தது மட்டுமே காரணமா..
    ச்சே ! மனுஷனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டாமா.

    மணிமொழி ..
    ரெண்டு வருஷத்துக்கு முன்னால் கல்லூரி இலக்கியவிழா கூட்டமொன்றில் உன்னை நான் சந்தித்தபோது நீ வலிவலம் மேலத்தெரு பாபுத்தேவர் மகளென்று அறிந்திருக்கவில்லை. பின்னால் நாமிருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய நேர்ந்தபோது நம்மிடையே எதார்த்தமாக துளிர் விட்ட நேசம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.
    வடச்சேரியைச் சேர்ந்த மிகமிக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த என்மேல் உனக்கேற்பட்டுவிட்ட நேசம் நமது கிராமத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்ற உறவு என்பதை நான் நன்கு அறிவேன். இதன் விளைவுகள் பெரும் விபரீதமாகக்கூடும் என்பதையும் அப்போதே உணர்ந்திருந்தேன்.
    இருந்தபோதும் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த காதலுணர்வு அதுமட்டுமல்லாமல் என் இளம்வயது அறியாமை இவையெல்லாம் என் கண்களை மறைத்துவிட்டது. தனிப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட ஒரு காதலுக்கு இந்த ஜாதீய பிசாசுகள் ஒரு வளர்ந்து வரும் நல்ல கிராமத்தையே கசக்கி சின்னா பின்னமாக்கி விட்டனவே ..
    நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது..
    நாளுக்கு நாள் நம்மிடையே மலர்ந்த நேசம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தபோது வலிவலம் விழித்துக்கொண்டது.
    இத்தனை நாளாக நீருபூத்த நெருப்பாக மூடிக்கிடந்த வர்கவேறுபாடு , ஜாதீய வெறி தலைதூக்கித்தாண்டவமாட நாம் காரணமாகி விட்டோம்.
    நடந்தது என்ன.
    சம்பிரதாயங்களின் வார்ப்படங்களாக இறுகிப்போயிருந்த இந்த மக்களின் ஆழ்மனங்கள் சீண்டப்பட்டபோது வலிவலம் எத்தனை கொலை வெறிக்கு உள்ளாயிற்று. இந்த மக்களிடையே உள்ளுக்குள் எத்தனை குரோதம். எத்தனை வன்மம்.
    அடுத்தடுத்த கணமே அருவாளும் கடப்பாறையும் அல்லவா அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன .பொழுது சாய்ந்தால் சாராயக்கடையில் சங்கமம் ஆகும் மேலத்தெரு தங்கப்ப நாய்க்கரும் வடச்சேரி காத்தானும் இன்று கோடாலியும் கடப்பாரையுமாக எதிர் கொள்ளவேண்டிய ஒரு சூழல்.
    குடிக்கும் நீரிலேயே விஷத்தை கலந்தார்கள் என்றால் எப்படியொரு அகங்காரம். .
    மேலத்தெருவிலும் வடச்சேரியிலும் பத்துக்குமேற்பட்ட பலிகள் நடந்ததே. முப்பதுக்கு மேற்பட்டோர் இருக்கும் இடம் இல்லாமல் போயிற்றே..ஒரு மாதத்துக்கு மேலாக வலிவலம் கிராமமே இரவு பகலாக போலீசாரின் பிடியில் அல்லவா முடங்கிக்கிடக்கிறது. குழந்தை குட்டிகள் கசங்கிபோயிற்றே.ஆடு மாடுகள் சிதைந்து எம் மக்களுக்கு எத்தனை நஷ்டம்.
    . ஒன்றை நினைத்துப்பார்க்கிறேன்.
    சமூக நீதி பேசுகின்ற அரசியல் இயக்கங்கள் அத்தனையுமே இன்னும் சாதிகளை மையமாக கொண்டே இயங்குகிறது. வர்க பேதம் களைய வேறு வழியில்லாமல் அரசு கூட இன்னும் ஜாதீய விபரங்களை பதிவு செய்வதை தவிர்த்துவிடவில்லை. அலுவலகங்களிலும் தொழிற்கூடங்களிலும் இணைந்து இயங்கும் நாம் சுயவாழ்வென்று வரும்போது தத்தம் சாதிகளைத்தானே தேடி ஓடுகிறோம்.
    .
    இலக்கியம் பேசுபவர்களும் சமூக நெறியாளர்களும் ஏன் ஆளுகிற போலீசும்கூட நம் காதலுக்கு துணையாக நிற்கலாம். ஊடகங்கள் நாலுபேரை வைத்து நமக்கு ஆதரவாக நான்கு நாட்களுக்கு தொடர் விவாதங்கள் நிகழ்த்தலாம்.புது கவிஞர்கள் அச்சு ஊடகங்களில் மெய்யுருக கவி புனையலாம்.நவீன ஓவியர்கள் நம் அவலங்களை வண்ணத்தில் வடித்து காட்சிகளில் வைக்கலாம்.
    ஆனால் இவையெல்லாம் போதுமா. .
    ஒரு முறை பாவேந்தரிடம் பாரதி சொன்னானாம்
    ‘ சுப்பு ! எனக்கொரு ஆசை. எனக்குத்தெரியாமல் என்மகள் ஒரு அரிஜன இளைஞனை இழுத்துக்கொண்டு ஓடி ரகசியதிருமணம் செய்து கொண்ட தகவல் எனக்கு வரவேண்டும். நான் சந்தோஷமாக உயர்ந்து கர்ஜிக்கவேண்டும். ஐயரு மகளே அரிஜனனோட சம்பந்தம் வைச்சிட்டாரேண்ணு எல்லா சாதியினரும் மாறமாட்டாங்களா.. ’
    ஐயா பாரதி உன் ஆசை நிறைவேற நாங்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளை கடந்தாக வேண்டும்..இந்த இனம் எத்தனை பலிகளை கொடுத்தாகவேண்டும்.
    தாங்காதய்யா . . தாங்காது !
    உன் ரத்தம் என் ரெத்தம் எல்லாம் ஒன்றுதான் என்று இந்த சமூகம் உணர்வதர்க்கு கல்வி உதவும் என்றிருந்தோம்.ஆனால் சாதி மதங்களுக்கு சாமரம் வீசுகிற பணியைத்தான் இன்றைய கல்வி செய்திருக்கிறது.
    காலம் தொடர்ந்து மாறும்போது மட்டுமே காதல் ஜெயிக்கும்.

    மணிமொழி !
    ஒருவேளை நீயும் நானும் பொருநகரங்களில் இருந்திருப்போமேயானால் நம்முடைய காதல் நம் குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சனையாகியிருக்கக்கூடும். இப்படியொரு தேசிய முக்கியத்துவத்தை இன்று வலிவலம் கிராமம் பெற்றிருக்க முடியாது.
    காலங்காலமாக சாதீய கட்டமைப்புகளை சுமந்து வளைந்து கொடுக்காமல் உடையக்கூடிய வார்ப்புகளாக வாழ்ந்த உன் தந்தையை நீ இழந்திருக்க வேண்டாம்.. தான் பெற்ற மகள் தன்கண்ணெதிறே நெடுங்காலமாக அனைத்திலும் காலடியில் கிடந்த ஒரு சமூகத்தில் சம்பந்தம் கொள்வதா..
    . .என்று எல்லாருக்கும் இயல்பாக ஏற்படுகிற மனப்பான்மைதானே அந்த உயர்ந்த மனிதரை தற்கொலைக்கு தூண்டியது .அவருக்கேற்பட்ட அந்த வலி அவரவர்க்கு வரும்போதுதான் உணர்வர். அது கடந்தகாலங்களில் ஊட்டி வளர்த்த சிந்தனை. காலஓட்டங்கள் மட்டுமே அழிக்ககூடியது.
    பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து தன் உதிரத்தை உணவாக ஊட்டி வளர்த்த ஒரு தாயின் கனவுகளை உதறிவிட்டு ஒரு நொடியில் வெகுதூரம் ஒடுவது எத்தனை துரோகம்.
    மரபுகளின் குழிகளில் வார்ப்பாக வார்கப்பட்ட உன் தந்தை வெட்கமுற்று கூனிக்குறுகி தற்கொலை செய்து கொண்ட அவலம்
    தலைவிரி கோலமாக கையறு நிலையில் நின்ற உன்தாயின் தோற்றம்
    இவை இரண்டுமே என்னை இன்று வெகுதூரம் விரட்டிற்று.. அவர்களை நினைத்த ஒவ்வொரு கணமும் என் முகங்களில் யாரோ மாறிமாறி அறைவதை உணர்கிறேன்.
    இத்தனையையும் இழந்து விட்டு இந்த காதலில் நாம் எதை சாதிக்கப்போகிறோம்.

    மை டியர் பிரண்ட்
    நான் என்ன செய்யவேண்டுமென்பதை முடிவெடுத்து விட்டேன். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
    கடந்து போனவற்றை கனவென்று கருதி மறந்துவிடு.
    நாம் பெற்றிருக்கும் மனிதப்பிறவி பல்வேறு பக்கங்களை உள்ளடக்கியது. அதில் கல்வி ஒரு முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பயிற்சி ! காதல் ஒரு நல்ல குடும்பத்துக்கான முயற்சி.!
    இவை எல்லாமே மனிதவாழ்வில் ஒரு சில அத்தியாயங்கள்தான்.. அவை வாழும் நிலைகளை பெரும்பாலும் வசீகரமாக்கக்கூடும். ஆனால் அவையே வழ்க்கையின் ஆதார சூத்திரமல்ல. அவை இல்லாமலும் பயனுள்ள வாழ்வை வாழலாம். காதலையும் கல்வியையும் கடந்து நீதி நேர்மை அன்பு பண்பு பாசம் பரிவு என்று இன்னும் எத்தனையோ உண்டு. இந்த இளம் வயதில் அவைகளெல்லாம் நம் கண்களுக்குப்புலப்படுவதேயில்லை. ஏன் நீ நேசிக்கும் ராஜாவே அதில் ஒரு அங்கம்தான்.. எல்லாமே நமக்கு நாமே சீராக வாழ ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகள்தாம்.. ஒன்றுக்காக நேசித்த இன்னொன்றை பிடிவாதமாக பலியிடுவது பண்பல்ல.

    மணிமொழி ! நீ அடிக்கடி சொல்லுவாயே
    இந்த கிராமத்தின் சீரழிவுக்கு இனி அரசை நம்பி பயனில்லை.நான் டாக்டராகி இந்த வலிவலம் கிராமத்தை சீரழிக்கும் நோய் நொடிகளை அடியோடு ஒழிப்பதுதான் எனக்குள்ள ஆசை

    அந்த நோக்கம் மட்டுமே இப்போது உனக்காக காத்திருக்கிறது. அதுதான் மணிமொழி. . . கண்களை மட்டுமல்ல.. மனதையும் துடைத்துக்கொண்டு காத்திருக்கும் காரியங்களை கவனி. தடைபட்ட கல்வியில் முயன்று மருத்துவராகும் உன் அறிய கனவை நிஜமாக்கு.எஞ்சியிருக்கும் உன் தாயை காப்பாற்று.
    உன் மருத்துவத்தில் இந்த வர்கபேதம் ஒருபோதும் குறுக்கே வராது. சாதிபேதம் எந்த சங்கடத்தையும் தராது. வலிவலத்தோடு வடச்சேரி மக்களும் விலகி வாழட்டும்.
    உன் மருத்துவத்தின் நெடி என் நாசிகளுக்கு எட்டும்போது நான் வருவேன்.
    இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

    மணிமொழி நீ என்னை மறந்துவிடு !

    அவ்ளவுதான் . . .
    ராஜா
    நெடுந்தொலைவிலிருந்து . . .

    பாண்டியன் ஜி     ( வில்லவன் கோதை )

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…99

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றுமொரு வாரத்தில் மற்றுமொரு மடலுடன் மாற்றமில்லா மனதுடன் உங்களுடன் என் மனக்கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்றுமோர் இனிமையான தருணம்.

    வித்தியாசமான மனிதர்கள் , வித்தியாசமான பார்வைகள், வித்தியாசமான கோணக்கள் இவைகளின் உறைவிடம் தான் இவ்வகிலம்.

    என்றோ? யாருக்கோ? எப்போதோ? ஒவ்வாதவன் எனும் ஒரு மனிதன் தன் மறைவுக்குப் பின்னால் அவனைத் தூற்றியவர்களினாலேயே போற்றப்படும் நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    இது இன்று நேற்றல்ல காலம் காலமாக இவ்வகிலத்தில் நடைபெற்றும் சாதாரண நிகழ்வுகளே !

    உதாரணமாக எமது பார் புகழும் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்று அவரது புரட்சிகரமான கருத்துக்களைப் பைத்தியக்காரத்தனம் என்று ஒதுக்கிய அதே சமூகம் இன்று பாரதியார் இல்லாத காலத்தில் அவருக்காக மணிமாளிகைகளைக் கட்டி வைத்துப் போற்றிப் புகழ்ந்திருக்கவில்லையா?

    பாரதியாருடைய இறுதிச்சடங்கில் வந்திருந்த மக்களை விட அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஓரிடத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன்.

    என்னடா இவனின் இந்த மடல் எம்மை எத்திசை நோக்கி இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் அன்பு உள்ளங்களில் எழுவதில் வியப்பொன்றுமில்லை.

    சில தினக்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் தொழிற்சங்ககங்களில் பலம் வாய்ந்ததும் , பெரியதுமான “ஆர்.எம்.டி(RMT)” எனும் தொழிற்சங்கத்தின் தலைவரான ” பொப் குறோ(Bob Crow)” என்பவர் மாரடைப்பினால் தனது 52வது வயதில் காலமானார்.

    அது சரி அவரைப் பற்றிக் குரிப்பிடுமளவிர்கு அவரிடம் உள்ள சிறப்பம்சம் என்ன? எனும் கேள்வி எழுவது இயற்கை.

    தனது திழிலாளர் யூனியம் அதாவது முக்கியமாக லண்டன் நிலக்கீழ் புகையிரதம் (Underground) சார்பான தொழிலாளர்களின் நலன்களை முன்வைத்துப் போராடியதில் இவர் தனித்துவம் பெற்றவர்.

    இங்கிலாந்தின் லேபர் கட்சி அதாவது இங்குள்ள மிகப்பெரிய அரசியல் கட்ச்சிகளில் ஒன்றின் ஆரம்பம் தொழிலாளர் யூனியன்களின் பங்களிப்பினாலேயே ஏற்பட்டது.

    அதனால் எப்போது லேபர் கட்ச்சி அரசமைத்தாலும் அவ்வர்சாங்கத்தில் தொழிலாளர் யூனியன்கள் பெரும் பங்கு வகிப்பதுண்டு.

    ஆனால் டோனி பிளேயர் அவர்களின் லேபர் அரசாங்கம் இதனை மாற்றியமைத்தது. தொழிலாளர்களுடன் மட்டுமில்லாமல் பெரிய ஆலை முதலாளிகளுடனும் தமது உறவைப் பேணுவதே தற்ல அரசியலின் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் பெரிய வியாபார முதலாளிகளிடன் நெருக்க,மானார்கள்.

    அடிப்படையில் இடதுசார்பான சோசலிஸ்ட் கொள்கைகளைப் பின்பற்றிய லேபர் கட்ச்சி தமது டைத்தளத்திலிருந்து விலகி வலது சார்பாகிறார்கள் எனும் வாதத்தை முன் வைப்பதில் முன்னனி வகித்தவர் பொப் குறோ.

    பாரம்பரியமாக கன்சர்வேடிவ் அரசாங்கத்தை எதிர்த்து வந்த தொழிலாளர் யூனியன்களில் பொப் குறோ மாரு பட்டார் அவர் டோனி பிளேயர் தலையிலான லேபர் கட்ச்சியுடனும் இருந்து கொள்கைரீதியில் பிளவு பட்டிருந்தார்.

    தனது அங்கத்தினர்களின் கோரிக்கைகளை முவைத்து பல வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து தமது அங்கத்தினர்களின் நலன்களை தனது இறுதிக்காலம் வரை பாதுகாத்து வந்தார்.

    எந்தவொரு அரசாங்கம் ஆகட்டும் பொப் குறோ அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

    தொழிலாளர் நலன்கள் மட்டுமின்றி நிலக்கீழ் சுரங்க ரயில்வே திணைகளம் ஆட்குறைப்புச் செய்வது பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை எதுவித தடங்களுமின்றி ஊடகங்கள் மத்தியில் முன்வைத்தார்.

    அவருடைய கம்யூனிசம் மர்ரும் அதிதீவிர சோசலிஸ்ட் கொள்கைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாது இருந்தாலும் தான் தெரிவு செய்யப்பட்டிருந்த தனது யூனியன் தலைவர் பதிவியின் பொறுப்பை தத்ரூபமாக உணர்ந்து அதைச் செயல்படுத்திய சொற்பமானவர்களில் இவரும் ஒருவர்.

    இவர் உயிரோடிருக்கும் போது நாட்டு நலன்களின் முதலாவது எதிரி இவர் என்பது போல பேசிய பல முன்னனித் தலைவர்கள் இன்று அவர் மறைந்ததும். இவரைப் போல கொள்கையில் ஆத்மார்த்தமான் ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை என்பது போல பேசி வருவது எம்மைத் திகைக்க வைக்கிறது.

    ஒ ! இதுதான் உலகமா ? இதுதான் நாட்டு நடப்போ ?

    அடடா ! எனக்குத்தான் புரியவில்லை போலும். . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    அவருடைய நேர்காணலுக்கான காணொளி
    http://www.youtube.com/watch?v=aiUVsky6Obg

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வாசிப்புகளின் வாசலில்… (2)

    தி. சுபாஷிணி

    தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?

    கோவை ஞானி

    New Doc 1 (1)

    சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்கங்கள் கூடின. புவனேஷ்வர் தமிழ்ச்சங்கம், ஷிமோகா தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், கல்லிடக்குறிச்சி தமிழ்ச் சங்கம், விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கம் மற்றும் திருச்சியிலுள்ள செண்பகராமன் இலக்கிய சங்கம், கோயம்புத்தூரிலுள்ள சிற்றிதழ்களின் சங்கம், மேலும் ஓர் இலக்கிய வட்டம் என, ஹிந்துஸ்தான் கலையியல் கல்லூரியில் கூடி, ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி தங்கள் படைப்புகளையும், சங்கங்களின் பணிகளையும் பகிர்ந்து கொண்டன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கத்திற்கு, சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு அக்கல்லூரி தாளாளர் தலைமை வகித்தார். அக்கல்லூரியின் தமிழ்த் துறையினர் விழா ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக கவனித்தார்கள். அவ்விழாவிற்கு திருப்பூரிலுள்ள திரு. நாகேஸ்வரன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் தம் வாழ்நாள் பணியே, எல்லாத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒருவொருக்கொருவர் உதவி புரிந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்பதுதான். அவர் என்னை அவ்விழாவிற்கு அழைத்து, என் படைப்புகளை ஏனையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக நான் கோவை சென்றபோது திரு. ‘கோவை ஞானி’ அவர்களைச் சந்தித்தேன். அப்போது எனக்கு, ‘தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது.  முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா?  என்ற அச்சம். ஆனால் படிக்க படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

    “கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் நிறைய பேசி வரும் தமிழ் நாகரிகம், தமிழர் நாகரிகம் இவற்றின் கூறுகளை வரையறுத்துக் கொள்ளலாம்” என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறார் கோவை ஞானி.

    “5,000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், மேன்மையும் கொண்ட தமிழ் மொழி, ஏனைய கிரேக்க இலத்தீன், ரபிரேயம், சீனம் ஆகிய மொழிகளின் தொன்மையையும், இலக்கிய, இலக்கண, பண்பாடு மேன்மையும் கொண்டது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மருத்துவம் முதலிய எத்தனையோ துறைகளில் தமிழ் மக்களின் சாதனைகள் சிறப்பானவை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமே என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. கடல் வாணிபத்தில் தொன்மைக் காலம் முதலே தமிழ் மக்கள் பெற்றிருந்த சிறப்பை இன்று அயல்நாட்டவரும் ஒப்புக்கொள்கின்றனர். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழர் நாகரிகம் ஆழமாகப் பரவியிருந்தது என்பதற்கும் உறுதியான சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளின் பரவல் என்பது ஜப்பான் வரை சென்று இருக்கின்றது.  தமிழ் மன்னர்கள் பேரரசுகளைப் படைத்திருக்கிறார்கள். நீர்ப்பாசனத்திட்டங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், மாபெரும் கட்டடங்கள் முதலியவற்றை உருவாக்குவதற்குத் தேவையான பொறியியல், கணிதம் முதலிய அறிவுத் துறையிலும், தமிழர்கள் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  தமிழிசைதான் வட இந்திய இசைக்கும், மேற்கத்திய இசைக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதை இசைத்தமிழ் அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்கள்.

    தொல்காப்பியரின் தினைக்கோட்பாடு உலக அளவில் தனித்துவமிக்கது. இலக்கியத்தின் உச்சம் சங்க இலக்கியம், உன்னதம் பக்தி இலக்கியம், சாரம் சித்தர் இலக்கியம்.

    தமிழ் அறம் என்பது சமத்துவம், சமதர்மம் என்பதை திருக்குறளும், தொல்காப்பியமும், சிலம்பும் கூறுகின்றன.  சாதி, மதம், சடங்குகள் என்பன தமிழச் சமூகத்திலும் இடம் பெற்றிருந்தன. இவற்றின் ஆதிக்கத்திற்கு இடம் தராமல் உணர்வோடு வாழும் வாழ்க்கைதான் தமிழறத்திற்கு ஒத்தது என்பது வரலாறு கூறும் உண்மை. மனித மேன்மைதான் தெய்வம் என்று படைக்கப்பட்டது. படைத்தது மனிதன்தான்.

    தமிழர் நாகரிகத்திற்கு இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் உச்ச அளவிலானவை. இவைகளில் முதன்மையானவை வடக்கிலிருந்து வந்த ஆரியத்தின் தாக்குதல்தாம்.

    இரண்டாவது, மைய அரசுக்குத் தமிழக அரசு தன்னை விட்டு கொடுத்ததன் மூலம் இந்தியை தடுக்க முடியாதது, மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழியாய் இல்லாதது, நான்காவது, உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பன.  இறுதியாக, தமிழின் தொன்மையைப் பற்றியும், இலக்கிய மேன்மையைப்பற்றியும் பேசினாலும் தமிழை ஆழமாக கற்கவும் இல்லை. தமிழன் என்கிற உணர்கிற இல்லை.

    இவ்வாறு இருக்கையில், தமிழ் நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனதா?.

    முதலில் மைய அரசு அறிவித்த செம்மொழியாம் தமிழ் மொழியை நாம் சீரிய வகையில் வளர்க்க பல்துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இருப்பதால், ஏனைய மொழிகளுடனும், மாநிலங்களுடனும் தொடர்பு கொண்டு, பல ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தி அவர்களுடன் நம் உறவை பலப்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ் மொழியில் தேவையான மனித நேயம், மெய்யியல், பண்பாடு, இலக்கியம் முதலியவற்றைத் தமிழ் தன்னுள் தாங்கிக்கொண்டுச் செம்மொழியாய் நிற்கின்றது. மனித வாழ்வின் ஆதாரமாகிய சமத்துவம், சமதர்மம், அன்பு ஆகியவற்றின் குரலாகத்தான் தமிழ்க்குரல் இருக்கின்றது.  இதை தமிழன் உணர்ந்து உலகுக்கும் காட்ட வேண்டும். மேலும் ஆதிக்க அரசியலைத் தவிர்த்தல் நலம். தமிழ் நமக்கு ஒரு பேராற்றல். இதைத்தமிழன் கண்டறிய தமிழ்க் கல்வி அவசியம். தமிழ் என்பது அன்பு, அறம், ஆண்மை, பெண்மை, தாய்மை, அழகு, கலை, தவம், இவ்வகையில்தான் நம் வாழ்வின் உயிராகிறது, மெய்யியல்ஆகிறது. இந்தவகையில் தான் தமிழ் கற்க வேண்டும். தமிழைக் கற்பிக்க வேண்டும்.

    மேலும், எந்த அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கமாக கொள்ளவில்லையோ அந்த அரசியல், அரசுதான் தமிழ் தேசியமாகவும், அதன் வழியாக தமிழர் நாகரிகத்தை வளர்ப்பதாகவும் இருக்கும். மேலும் பண்பாட்டு ஆதிக்கமும் தமிழர் நாகரிகத்திற்கு இடையூறாகத்தான் இருக்கும். தமிழ் வரலாற்றோடு, தமிழ் வாழ்வோடு, தமிழ் மக்களோடு, தமிழ் மக்களின் மேம்பாட்டோடு நம்மை இணைக்கிற இயக்கம் என்கிற முறையில் தமிழ் தேசிய இயக்கத்தின் முன் பல கடமைகள் உள்ளன. அவை: ஆதிக்கத்தை மறுக்கும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும். மார்க்ஸியமும் பெரியாரியமும் இணைகின்ற போழ்து, தலித்தியமும் பெண்ணியமும் உறவுகொள்ள ஏதுவாகிறது. இது தமிழ் தேசியமாக மலர்ந்து தமிழர் நாகரிகத்தைக் காப்பாற்ற இயல்கிறது. இதனால் இயற்கையைக் காப்பாற்றும் தமிழ் வேளாண்மை, தமிழ் மருத்துவம், தமிழ் சார்ந்த மரபு தொழில்கள், சிற்பக்கலை போன்றவை ஆதரிக்கப்பட்டுவிடும். தமிழ் தாய்ப் பள்ளிகள் அரசு உதவியோடு தொடங்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கம், தம் கிளைகள் என்ற முறையில் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உழவர்கள், நெசவாளர்கள், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் ஒரு கிளை முறைணை உருவாக்கி செயல்பட வேண்டும். இறுதியாக அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து, வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், பாரதிதாசனும் நமக்குள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.

    மேலே குறிப்பிட்ட கட்டுரையைத் தன் ‘தமிழ் நேயம்’ பத்திரிகையில் வெளியிட்டு, அதற்கு எதிர்வினையாக வந்த 27 கட்டுரைகளையும் தொகுத்து இந்த நூலை அளித்திருக்கிறார் கோவை ஞானி.

    முதல் கட்டுரையாக, பேராசிரியர் ம.இலெ.தங்கப்பரவல் கட்டுரை அமைகிறது. அதில் “தமிழ் மக்கள் தாங்கள் யார்?  தங்கள் நாகரிகம் எத்தகையது? என்பதை அறியாமல் உறங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் விழித்தெழவில்லை என்பதைத் தவிர வேறு எல்லா நலக்கூறுகளும் அவர்கட்கு உண்டு. இன்று இனவுணர்வற்று உறங்கிக் கிடக்கும் தமிழர் இன உணர்வு பெற்று விழித்தெழச் செய்ய வேண்டும், செய்தால்போதும்” என தன் கருத்தை முதன்மைப்படுத்துகிறார்.

    “பாரதி வாழ்ந்த காலத்திலேயே நூலகமொழியாகத் தமிழ்வளம் பெறுவதற்கான வழியை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி கூறியிருக்கின்றார். எனவே தமிழ் நூலக மொழியாக இடம்பெற வேண்டும்” என்பது மருத்துவர் கோபியின் கருத்து.

    தமிழோசை கு.முத்துக்குமார், “மண்ணையும் மக்களையும் பிரித்து தமிழை மட்டும் வளர்த்தெடுக்க முடியாது” என்று ஆணித்தரமான அடிப்படையான கருத்தை முன்வைக்கின்றார்.

    “தமிழர் வரலாறு, பண்பாடுகள், தமிழ் மொழி மேன்மை என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் வேலைக்கான கவலையிலும், வீணான பொழுதுபோக்குகளிலும், மலிவான திரைப்பட நுகர்வு& பேச்சிலும்& தமிழில் என்ன இருக்கின்றது என்று அரைகுறை தாங்கிய பயிற்சி அளவிலேயே அறியாமை வெளிப்படப் பிதற்றித் திரிவதிலும்& குறிக்கோளோ நோக்கமோ அற்று, இணைய வலையத்து விளிம்புகளில் தொற்றித் தொங்கும் & இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்தை இன்று எழுபதும் எழுபதுக்குமேலுமென மூத்த வயதுடைய தமிழ் தேசியர்கள் எப்படி மாற்ற முடியும்? என்ற வினாவை எழுப்புகிறார் கவிஞர் தமிழன்பன்.

    முனைவர் சு.வேணுகோபால் கவலைப்படுவதும், ஆதங்கப்படுவதும் முந்தையக் கருத்தையொட்டித்தான் இருக்கின்றது.

    “சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களான தெ.பொ.மீ., வ.சுபா மாணிக்கனார், வையாபுரி பிள்ளை, வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசனார் போன்றோர்கள் வணங்கத்தக்கவர்கள்.  இன்று 50 வயதை நெருங்கத்தக்கவர்களில் எத்தனைபேர் தமிழறிஞர்கள்? எத்தனைபேர் தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்?  தன் பிள்ளை, தன் “தமிழ் மாணவர்”களாக உருவாவார்கள். இவர்களின் மாணவர் தான் பிற்காலத்தில் எப்படியும் ஆசிரியப் பயிற்சி முடித்தோ, இளநிலை முனைவர் முடித்தோ, பணம் சேர்க்க வேலை தேடுவார்கள். தமிழ் உருப்படுமா?”

    சாத்தூர் சேகரன் தன் கட்டுரையில் “தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை முனை” என்கிறார். “சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள். இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டி விட்டால் எளிதில் கிடைப்பது வெற்றியாகும், பெரு வெற்றியாகும்.

    சமீபத்தில் மறைந்த சேலம் தமிழ் நாடன் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக கோவை ஞானி கருதியிருக்கிறார்.

    “தமிழ் தேசியம், தமிழர் நாகரிகம்”&இவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது. தன் சிந்தனைகளை நூலக வடித்து நமக்கு அளித்த கோவை ஞானி அவர்களின் தமிழ் உணர்வும், சமுதாயத்தின்பால் உள்ள அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது.

    தலைப்பு & தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? 

    தொகுப்பாசிரியர்    & கோவை ஞானி

    வெளியீடு                     & புதுப்புனல், பாத்திமா டவர், 117 திருவல்லிக்கேணி

                                                      நெடுஞ்சாலை, சென்னை & 5

    பக்கம்                               & 160

    விலை                             & ரூ.120

    Share
  • வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞர்கா.மு.ஷெரீப்

    · எத்தனையோ திரைப்பாடல்கள் நம் மனதைத் தொடுகின்றன. இன்னும் சில பாடல்கள் மனதில் நிறைகின்றன. தொடுகின்ற பாடல்களில் வரிகள் சுகமாயிருக்கும்! நிறைகின்ற பாடல்களில் அர்த்தங்கள் நிரம்பக்கிடைக்கும்!

    · வெறும் கற்பனைப் பூக்களை விற்பனை செய்யாமல், கருத்து முத்துக்களை அள்ளிவழங்கிய பெருமையை இந்த ஒற்றைப்பாடலில் ஒருவர் தட்டிச்செல்கிறார்.

    · அட.. விவரிக்க வேண்டியிராத வைரங்களைச் சொற்களாக்கி, எதார்த்தமான வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகின்ற கவிஞர்! இப்பாடல் எழுதிய காலம் சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்குப் பின்னரும் இன்றைக்கும் பொருந்துகின்ற ஜீவாம்சம் தெரிகிறது பாருங்கள்!

    · எளியவார்த்தைகளைமட்டும் பயன்படுத்தி இன்னும் சொல்லப்போனால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைவைத்து இவர் பட்டியலிட்டுள்ள அனுபவப்பதிவுகள் மானுடவாழ்விற்கு என்றைக்கும் தேவைப்படுகின்றன!

    · வாழ்ந்தாலும்ஏசும்தாழ்ந்தாலும்ஏசும்

    வையகம்இதுதானடா..

    வாழ்ந்தாரைக்கண்டால்மனதுக்குள்வெறுக்கும்
    வீழ்ந்தாரைக்கண்டால்வாய்விட்டுச்சிரிக்கும்
    இல்லாதுகேட்டால்ஏளனம்செய்யும்
    இருப்பவன்கேட்டால்நடிப்பெனமறுக்கும் (வாழ்ந்தாலும்ஏசும்..)

    பண்பாடுஇன்றிபாதகம்செய்யும்
    பணத்தாசையாலேபகைத்திடநினைக்கும்
    குணத்தோடுவாழும்குடும்பத்தைஅழிக்கும்
    குணம்மாறிநடந்தேகொடுமையைவிளைக்கும்

    (வாழ்ந்தாலும்ஏசும்..)

     

    · படம் : நான்பெற்றசெல்வம் இசை : ஜி. ராமனாதன்

    · பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன் பாடலாசிரியர்: கா.மு.செரிப்

    · கவிஞர் கா.மு.ஷெரீப் என்னும் கவியுள்ளத்திலிருந்து உருகிய வெள்ளமிது! எக்காலத்திற்கும் ஏற்றபாடலாய் – கேட்டு ரசித்த பாடலாய் நில்லாமல் மெய்யுணர்வால் மேனிசிலிர்த்த பாட்டு! ஜி.இராமனாதன் இசையில் இது நான் பெற்ற செல்வத்திற்காக விளைந்த பாடல்! ஏழிசைவேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரலில் நம் இதயங்களில் நிறைந்த பாடல்!

    Share