குப்பாச்சுலு VS கோடபட்ரி-நாடகம் கிரேசி மோகன்….

கிரேசி மோகன்

மறைந்த அமரர். எழுத்தாளர் திரு.’’கோமல் ஸ்வாமிநாதன்’’(இவரது ‘’தண்ணீர் தண்ணீர்’’ நாடகத்தால் மேடை மேதையாய் ஆயிற்று…) அவர்கள் ‘’குங்கும்’’ ஆசிரியராய் இருந்த சமயத்தில் ஃபோனில் என்னை அழைத்து’’ வழக்கமான அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்றில்லாமல் , வித்தியாசமான நாடகம் ஒன்று எழுதித் தாயேன்’’ என்று அன்புக் கட்டளையிட்டார்….எனக்குத் தெரிந்து கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து மாறாது இருப்பது சினிமா, டிராமா, பத்திரிகைக் கதைகள்தான்….என்ன…களம் வேறுபட்டு, நடையில் நவீனம் காட்ட கதையும் புதுசாகத் தோன்றுகிறது….இப்படி யோசித்துக் கொண்டிருந்த எனக்கு ஏன் ‘’கல்தோன்றி மந்தோன்றா’ காலத்தைக் களமாக வைத்து, இன்றுவரை பிரபலமான ‘’மாமியார்-மாட்டுப்பெண்’’ யுத்தத்தை, எழுதக் கூடாது! என்று விபரீதமாகத் தோன்றியது….அதன் விளைவே இந்த நாடகம் ‘’குப்பாச்சுலு vs கோடபட்ரி’’….குங்குமத்தில் வந்ததை சிலபல மாற்றங்களோடு பகிர்ந்துள்ளேன்….கிரேசி மோகன்
————————————————————————————————————————–

குப்பாச்சுலுvsகோடபட்ரி

 —————————— 

மாமியாரும்-மருமகளும் 

——————————

 பிற மொழி நாடகம்
மூலம்-மூதாதையன் ”இன்கமோ சிரேகி”
தமிழில்-”கிரேசி” மோகன்….

காட்சி 1 :

காலம் : பாறாங்கற்காலம் (கற்காலத்திற்கும் முந்திய காலம்.)

இடம் : மிருக நடமாட்டமே இல்லாத பயங்கரமான காட்டின் ஒரு பகுதி. (மிருக நடமாட்டம் இல்லாததற்குக் காரணம்… இங்கு அவைகளைவிட பயங்கரமான நமது மூதாதையர்கள் இருந்தார்கள்.)

பாத்திரங்கள் : கதாநாயகி ‘பிடாரி’யின் தந்தை ‘இடும்பன் காட்டேரி, ‘கதாநாயகியை ஐம்பது மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற (நமது மூதாதையர்கள் நம்மைவிட எதிலும் ஐந்து மடங்கு அதிகமாகவே இருந்தார்கள்.) தாய் ‘இருளச்சி,’ மற்றும் அக்கம்பக்கத்து காட்டு மிராண்டிகள். இது தவிர இவர்கள் செல்லமாக வளர்க்கும் யானை, மலைப்பாம்பு, காண்டாமிருகம், டயனாசரஸ் போன்ற மிருகங்கள் அங்கு சுவாதீனமாக அலைந்து கொண்டிருந்தன.

கதாநாயகியின் தந்தை ‘இடும்பன் காட்டேரி’ தாழ்வான ஒரு மரக்கிளையில் கன்னத்தில் கைவைத்தபடி தலைகீழாகத் தொங்கிக்கொண்டு முன்னும் பின்னும் சோகமாக ஆடிக் கொண்டிருக்கிறான்.

தனது எஜமானரின் சோகமான மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத, ஐந்தறிவு படைத்த நீர்யானை ஒன்று அப்போது அங்குவந்து ‘இடும்பன்காட்டேரி’யை விளையாட்டாகச் சீண்டிவிட, அதனால் கோபமுற்ற இடும்பன் காட்டேரி நீர்யானையின் கன்னத்தில் பளாரென்று அறைய நீர் யானை அழுதுகொண்டே கண்ணீர் யானையாக மாறி ஓட்டம் பிடித்தது.

கணவனுக்காக ஆசையாக ஒரு முழு காட்டெருமையை அலட்சியமாகக் கொம்பைப் பிடித்தவண்ணம் காட்டுத் தீயில் ‘ரோஸ்ட்’ செய்து கொண்டிருந்த இடும்பன் காட்டேரயின் மனைவி இருளச்சி – நீர்யானையின் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறாள்.

இருளச்சி : (பூமி அதிர ஓடி வந்து) இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி காலைலேந்து சிடுசிடுனு இருக்கீங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்கள்ளாம் தப்பா நெனைச்சுக்கப்போறாங்க… (என்று அவளால் முடிந்த வரையில் தாழ்வான
குரலில் கேட்க, அந்த சத்தத்திற்குப் பயந்தே பறவைகள் எல்லாம் சிறகடித்து கூட்டுக்குள் ஒளிந்தன.)

இடும்பன் காட்டேரி : என்னை ஒண்ணும் கேக்காத. எனக்கு மனசு சரியில்லை! (என்று கோபமாகக்  கூறிவிட்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தவன் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் முன்னும் பின்னும் வெறித்தனமாக ஊஞ்சலாட அவனது ஆட்டத்தைத்தாங்க முடியாமல் அந்த பிரும்மாண்டமான ஆலமரம் வேரோடு பிடுங்கிக் கொண்டு கீழே சாய்ந்தது.)

இருளச்சி : கீழே விழுந்த ஆலமரத்தை ‘நாளை அடுப்பெரிக்க உதவும்’ என்ற எண்ணத்தில் அதை நான்காக உடைத்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கீழே விழுந்ததால் கணவனின் உடம்பில் படிந்த புழுதியைத் தட்டிவிட்டவண்ணம்) உங்களுக்கு மனசு சரியில்லேன்னு எனக்கு அப்பவே தெரியும்…

இடும்பன் காட்டேரி : எப்படி? (என்று உரத்த குரலில் கர்ஜிக்க,)

இருளச்சி : (கணவனின் கூச்சல் தாங்காமல் தனது இரு செவிகளிலும் உடைந்த ஆலமரக் கிளையை நுழைத்துக்கொண்டு) சேச்சேச்சே… ஏன் இப்படி காட்டுமிராண்டியாட்டம் கத்தறீங்க?  உங்க கவலை என்ன? மொதல்ல அதைச் சொல்லுங்க.

இடும்பன் காட்டேரி : என்ன இருள்… ( இருளச்சியை செல்லமாக இருள் என்று சந்தோஷத்தில் அழைப்பது வழக்கம்) நீயும் புரியாம பேசற… வர வைகாசியோட நம்ப பொண்ணு பிடாரிக்கு (கதாநாயகி) நூத்து ஐம்பது வயசு முடியறது. அவளை பொறுப்பா ஒத்தன்கிட்ட கல்யாணம் கட்டிவச்சுட்டா நானும் மீதி இருக்கிற சொச்சநச்ச இருநூறு வருஷத்தைத் தள்ளிட்டு கண்ணை மூடலாம்னு பாத்தா, பிடாரிக்கு ஒரு வழி பொறக்க மாட்டேங்குதே, அதான் கவலையாயிருக்கு…

இருளச்சி : பூ… இவ்வளவுதானா (என்று கூறி காரித் துப்புகிறாள். அப்பொழுது அவள் துப்பிய உமிழ் நீர் அங்கு ஒரு ஓடையாக மாறி ஓடுகிறது.

அப்பொழுது கதாநாயகி பிடாரி தனது இரு கைகளாலும் ஒரு காட்டு யானையின் தும்பிக்கையைப் பிடித்து கரகரவென்று தட்டாமாலை சுற்றிக்கொண்டே வருகிறாள்.

பிடாரி, மாதா பிதாவைப் பார்த்த சந்தோஷத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த யானையின் தும்பிக்கையை விட, யானை எட்டு மைல் தள்ளி அதே வேகத்தில் போய் விழுகிறது.)

இடும்பன் காட்டேரி : என்னம்மா பிடாரி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி விளையாட்டுப்  பொண்ணா இருக்கப் போற… உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒத்தன் கைல ஒப்படைச்சுடறதா நானும் உங்கம்மாவும் முடிவு பண்ணியிருக்கோம். நீ என்ன சொல்ற?

பிடாரி : போப்பா… எனக்கு வெக்கமா இருக்கு. (ஏற்கனவே அட்டைக்கரியாய் இருந்த அவள் முகம் நாணத்தால் மேலும் கருக்க, தனக்குத் திருமணம் என்று பெற்றோர்கள் தன் எதிரிலேயே குறிப்பிட்டதால் உண்டான கூச்சத்தில் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள்.)

இடும்பன் காட்டேரி : ம்… பாவம் அறியாப்பொண்ணா இருக்கா நம்ம பிடாரி. நாளைக்கு புருஷன் வீட்டுல போய் எப்படித்தான் குப்பை கொட்டப் போறாளோ! ம்… (என்று கூறி பெருமூச்சுவிட, அவன் நாசியிலிருந்து புறப்பட்ட சுவாசக்காற்று அங்கு தற்காலிகப் புயலாகச் சில நிமிடங்கள் வீசுகிறது.)

இருளச்சி : ஏண்ணா… உங்க பிரண்டு ஒத்தர் பக்கத்து காட்டுல இருக்காரே அவர் பேர் என்ன?

இடும்பன் காட்டேரி : யாரைச் சொல்ற? (குழப்பத்தால் தனது பரட்டைத் தலையை அவன் சொரிந்து கொள்ள, தலைமுடிக் கொத்திலிருந்து பல்லி, தேள், கரப்பான்பூச்சி போன்ற சிறு சிறு ஜந்துக்கள்  குதித்து ஓடுகின்றன்.)

இருளச்சி : அதாங்க… ஆளுகூட குள்ளமா முப்பது அடி உசரத்துக்கு தக்கூனூண்டுக்கு இருப்பாரே….

இடும்பன் காட்டேரி : யாருடி நம்ப பிரம்மராட்சஸனை சொல்றியா?

இருளச்சி : அவரேதான். அவர் பையன்கூட கோரஸ்வரூபன்கற பேருக்கேத்த மாதிரி பாக்க லட்சணமா இருக்கான். மத்த பசங்க மாதிரி தறுதலையா இல்லாம சமத்தா தினமும் வேட்டையாடி கைநெறைய புலி, சிங்கம், கரடினு சம்பாதிக்கறான். நம்ப பிடாரியை அவனுக்கு கட்டி வச்சா பொருத்தமா இருக்கும்.

இடும்பன் காட்டேரி : நீ சொன்னா சரிதான். தோ இப்பவே போய் பிரம்மராட்சஸனைப் பாத்து கல்யாணம் பேசி  முடிச்சுடறேன். சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க… (என்று கூறிவிட்டு இருந்த இடத்திலிருந்தே ஒரு குதி குதித்து இடும்பன் காட்டேரி பக்கத்துக் காட்டிற்குத் தாவுகிறான்.)

காட்சி – 2

இடம் : உயரமான ஒரு ஆலமரத்தின் உச்சியில் பிரம்மராட்சஸனின் வீடு.

பாத்திரங்கள் : பிரம்மராட்சஸன், அவன் மனைவி அசுரபுஷ்டி நாயகி, இடும்பன் காட்டேரி.
(திருமணப் பேச்சு வார்த்தை நடக்கிறது.)

இடும்பன் காட்டேரி : முடிவா நீங்க என்ன சொல்றேள்?

அசுரபுஷ்டிநாயகி : தோ பாருங்கோ, உங்க பொண்ணுக்கு என் பையனை தரதுல எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீங்க வரதட்சணையா நாப்பத்துரெண்டு யானை, முப்பத்துநாலு புலி தரணும். இது தவிர கல்யாணத்துக்கு எம் புள்ளையோட பிரண்ட்ஸ்லாம் வருவா. அவாளுக்கு மட்டும் எப்படியாவது முகூர்த்தத்தும்போது தனியா பந்திபோட்டு ‘நரமாமிசம்’ போட்டுடுங்கோ. ஜான்வாசம் ரத்தவிளாரி அம்மன் கோவில்லேந்து வச்சுக்கறதா இருக்கோம். ஜான்வாச ஊர்வலம்னா மெதுவாகத்தான் நகரணும். எப்படியாவது சிரமப்பட்டு கடல் ஆமையை ஊர்வலத்துக்கு அழைச்சிண்டு வந்துடுங்கோ.

இடும்பன் காட்டேரி : நீங்க சொன்னதெல்லாம் எப்படியாவது தலையை அடமானம் வச்சாவது தந்துடறேன். அந்த வரதட்சணையை மட்டும் நீங்க குறைச்சுக்கணும். இப்ப இருக்கற வெலைவாசில இருபத்தி நாலு புலி கொஞ்சம் கஷ்டம்னு எனக்குப் படறது. நானும் எம் பொண்ணு கல்யாணத்துக்காக எப்படியோ கஷ்டப்பட்டு வேட்டையாடி நீங்க சொன்ன யானை, சிங்கம்லாம் சேர்த்து வச்சுட்டேன். புலி வேட்டை இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா போயிடுத்து உங்க புருஷனுக்கே தெரியும். என்கிட்ட இப்பசத்திக்கு இருபது புலி இருக்கு. மீதி நாலு புலிக்கு பதிலா எட்டு காட்டுப் பூனையை தந்துடறேன். பாக்க புலிமாதிரியே இருக்கும்.

அசுரபுஷ்டிநாயகி : அதாவது சுத்தி வளைச்சு அசல் புலிக்கு பதிலா எவர்சில்வர் புலியை என் தலைல கட்டப்
பாக்கறீங்க, இல்லியா. தோ பாருங்கோ, நான் சொன்னதெல்லாம் கொடுக்கற பட்சத்துல
நாம மேற்கொண்டு கல்யாணத்தைப்பத்தி பேசலாம். அப்புறம் உங்க இஷ்டம். (தனது
கோபத்தைக் காட்ட பல்லை நரநரவென்று கடித்து ஒஸிபிஸா சத்தம் உண்டாக்குகிறாள்.)

இடும்பன் காட்டேரி : மன்னிச்சுக்கணும். தெரியாம பேசிட்டேன். எப்படியாவது இருபத்துநாலு புலியை
கல்யாணத்துக்குள்ள தேத்திடறேன்! (என்று கூறிவிட்டு தாழ்வான குரலில் தனக்கு மட்டும்
கேட்கும்படி பேசுகிறார். சேத்தரி… என்னிக்குத்தான் இந்த வரதட்சணைக் கொடுமை
ஒழியுமோ!

காட்சி – 3

இடம் : வசதி படைத்தவர்கள் மட்டும் திருமணம் நடத்தும் ‘பாழும் குகைச் சத்திரம்’.

பாத்திரங்கள் : மணமக்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் அண்டை அசல் காட்டிலிருந்து
திருமணத்திற்கு வந்துள்ள காட்டு மிராண்டிப் பெரியவர்கள்…

பிடாரி-கோரஸ்வரூபன் திருமணம் நடக்கிறது. வந்தவர்கள் எல்லோரும் தங்கள் சக்திக்கேற்ப ஆடு, மாடு, புலி, கரடி என்று மணமக்களுக்கு பரிசாக ‘மொய்’ எழுதுகிறார்கள்.

மணமகள் பிடாரியின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போடும் சமயத்தில் மணமகன் கோரஸ்வரூபன் மூன்றாவது முடிச்சை சுபாவமான வெறியில் இறுக்கமாகப் போட, அதனால் மூச்சுத் திணறிய பிடாரி ‘குய்யோ முறையோ’ என்று மங்களமாகக் கூவுகிறாள்.

காட்சி – 4

இடம் : கோரஸ்வரூபன் வீடு.

பாத்திரங்கள் : கோரஸ்வரூபன், புது மனைவி பிடாரி, பிடாரியின் மாமியார்க்காரி அசுரபுஷ்டி நாயகி.(கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட மாமியார்-மாட்டுப்பெண் மோதல்இங்கும் அவர்களுக்கே உரிய பாணியில் நடக்கிறது.

கோரஸ்வரூபன், அறையின் நடுவில் கோடரியால் வெட்டப்பட்டவனின் மரண ஓலம் போல பயங்கரமான சப்தத்தோடு குறட்டை விட்டவண்ணம் ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறான். அப்போது அவனது தாய் அசுரபுஷ்டிநாயகி தலைவிரிகோலமாக ஓடி வந்து தனது மகனை ஒரு உதை உதைத்து எழுப்புகிறாள்.)

அசுரபுஷ்டிநாயகி : அடேய் கோரஸ்வரூபா! உம் பொண்டாட்டி செஞ்ச காரியத்தை பாத்தியா… என் தலைல குட்டிட்டாடா! (தலையைக் காட்டுகிறாள். பிடாரி குட்டிய இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடுகிறது.)

பிடாரி : (ஓடிவந்து) ஒண்ணுமில்லை. நான் லேசா குட்டினதுக்கே உங்கம்மா இப்படி அமக்களம் பண்ணறாளே! இவங்க செஞ்ச சில்மிஷத்தை பாருங்கோ! (என்று கூறி உள்ளங்கையைக் காட்டுகிறாள். அதில் பிடாரியின் அறுந்த காது இருக்கிறது.) உங்கம்மா என் காதை அறுத்துட்டாண்ணா! (என்று கூறி ஓலம் இடுகிறாள்.)

அசுரபுஷ்டிநாயகி : நான் என்ன வேணும்னா இவ காதை அறுத்தேன். எம் முதுகுல இவ கத்தியால குத்திட்டாடா.

பிடாரி : நம்பாதீங்கோ. உங்கம்மா பொய் சொல்றா.

அசுரபுஷ்டிநாயகி : எனக்குத் தெரியும். நீ இப்படிச் சொல்லுவேன்னுதான் நான் முதுகுல குத்தின கத்தியை எடுக்காம அப்படியே வச்சிருக்கேன். நீயே பாரு! (என்று கூறி முதுகைக்காட்ட அங்கு மூன்று அங்குல ஆழத்திற்கு ஒரு பிச்சுவா பதிந்திருக்கிறது.)

கோரஸ்வரூபன் : சேச்சே…. பொழுது விடிஞ்சு பொழுது போனா எப்பப் பாரு உங்க சண்டையைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கோம். இதெல்லாம் பாக்கறச்சே பேசாம ‘ஆபீசே’ கதின்னு அங்கயே பழியா கிடந்துடலாம் போலருக்கு.

அசுரபுஷ்டிநாயகி, பிடாரி (இருவரும் ஒரே சமயத்தில்) ஆபீசா! அப்படீன்னா என்ன அர்த்தம்?

கோரஸ்வரூபன் : எவனுக்குத் தெரியும் அர்த்தம். ஏதோ விரக்தில சொல்லணும்னு தோணித்து சொன்னேன்.

பின்குறிப்பு – கோரஸ்வரூபன், மாமியார் – மாட்டுப்பெண் சண்டையால் வெறுத்து உச்சரித்த ‘ஆபீஸ்’ என்ற வார்த்தை நாளடைவில் பிரபலமாகி பலராலும் பேசப்பட்டது. வீட்டில் பிடுங்கல் காரண்மாக நிம்மதியாகத் தூங்க முடியாமல் தவித்த மனிதன் அன்று முதல் வெளியில் ‘ஆபீஸ்’ என்ற பெயரில் ஒரு ரம்மியமான இடத்தைத் தோற்றுவித்து பகல் நேரங்களில்
செளக்கியமாகத் தூங்க ஆரம்பித்தான்.

(முடிவு)
——————————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.