தஞ்சை வெ.கோபாலன்

வைகாவூர் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அங்குள்ள சிவன் கோயிலையொட்டி இருந்த வடக்கு மடவளாகத் தெருவில் பத்துப் பதினைந்து வீடுகள், அவை அத்தனையும் இன்றோ நாளையோ கீழே விழத் தயாராக இருப்பது போல காட்சி தந்து கொண்டிருக்கிறன. அதில் ஒரு வீட்டின் திண்ணையில் பொழுது விடிந்து சூரியன் சுள்ளென்று சுடும் வரை வாயில் திண்ணையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த வைத்தா என அழைக்கப்படும் வைத்தியநாதன் அப்போதுதான் கண் விழித்து எழுந்தான்.

இந்த வைத்தாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். இவனுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கலாம். சரியாக அவனுக்கும் தெரியாது, அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரியாது. அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது. அவனுக்குச் சுமார் பத்து வயதிருக்கும்போது அவனுக்கு உறவு என்று இருந்த அவன் அம்மாவும் காலமாகிவிட்டாள். அவனுக்கென்று அந்த பாழடைந்த வீட்டைத் தவிர வேறு சொத்து பத்து என்று எதுவும் கிடையாது. அந்த வீடும் திண்ணையும் அதன் உட்புறம் அமைந்துள்ள ரேழி, காமரா உள் தவிர வீட்டின் மற்ற பகுதிகள் கூடம் தாழ்வாரம் அனைத்தும் கீழே விழுந்து ஓடுகள் சரிந்து பாழடைந்து போய் கிடந்தது. அதை எடுத்து திரும்ப கட்ட பணத்துக்கு எங்கே போவது? அவன் பிழைப்பே அன்றாடம் கையேந்திப் பிழைக்கும் பிழைப்பு.

அவன் பள்ளிக்கூடம் போனதாகவோ, படித்ததாகவோ அவனுக்கே நினைவில்லை. அம்மா இருந்தவரை அவள் யார் வீட்டுக்காவது சமையல் வேலைக்குப் போவாள். அருகிலுள்ள டவுனுக்கு அந்த அம்மாள் அடிக்கடி கல்யாணம், கார்த்தி, தெவசம் என்று எங்கெல்லாம் கூப்பிடுகிறார்களோ அங்கெல்லாம் போய் சமையல் வேலை செய்து சம்பாதித்து மகனைக் காப்பாற்றி வந்தாள். பள்ளிக்கூடம் போகாமல் அம்மாவோடு சமையல் வேலைக்கு உதவி செய்து கொண்டு இவனது பால பருவம் ஓடிவிட்டது. அந்த அம்மாள் இறந்து போன பிறகு இவன் டவுனில் உள்ள கல்யாண காண்ட்டிராக்ட் சமையல்காரர்கள் விசேஷ தினங்களில் பரிமாறுவதற்கென்று ஆட்களைக் கொண்டு வருவார்கள். அப்படி பரிமாறுவதற்காகச் சென்று வரும் பரிஜாரகக் கோஷ்டியில் வைத்தாவும் ஒருவனாக இருந்து பிழைப்பு நடத்தி வந்தான்.

கல்யாண முகூர்த்த நாட்கள் அனைத்திலும் அவனுக்கு வேலை இருக்கும். வெளியூர்களுக்கெல்லாம் சென்று வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு சாப்பாட்டுக் கவலை இல்லை. ஆடி மாதமும், மற்ற மாதங்களில் முகூர்த்தம் இல்லாத நாட்களிலும் யார் வீட்டில் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு அவர்கள் வீட்டிலேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு அவனுடைய பூர்வீக இடிந்த வீட்டின் திண்ணைக்கு வந்துவிடுவான் படுத்துறங்க.

இன்று அவனுக்கு வேலை இல்லை, ஆகையால் நிதானமாக உறங்கி எழுந்தான். திண்ணையைவிட்டு கீழே இறங்கி ஒரு முறை சோம்பர் முறித்தான். அப்போது மிராசுதார் சாமா ஐயர் வந்து கொண்டிருந்தவர் இவன் இந்த நேரத்தில் இங்கு இருந்தால் வேலை கிடையாது என்று அர்த்தம் என்பதைப் புரிந்து கொண்டு, “எலே! வைத்தா, நம்மாத்துல மாமி மச்சுலேர்ந்து பித்தளை சாமான்களையெல்லாம் கீழே இறக்கி சுத்தம் செய்யணும்னு சொல்லிண்டுருக்கா, போய் பார்த்து அதுக்கு உதவி பண்ணு. அப்படியே மத்தியானம் நம்மாத்துலேயே சாப்பிட்டுக்கோ” என்று சொன்னார்.

“சரி மாமா! நான் போய் பார்த்துக்கறேன்” என்று இன்றைய பிரச்சனை முடிந்தது என்று மனதுக்குள் மகிழ்ந்தான்.

அப்போது அந்த ஊர் வாத்தியார் சுப்பிரமணியன் வந்து வைத்தாவிடம், “என்னடா வைத்தா! இன்னிக்கு வேலை இல்லியா?” என்றார்.

“பரிஜாரக வேலை இல்லை, சாமா ஐயராத்துல பாத்திரம் இறக்கணும் போகணும்” என்றான்.

“சரி சரி, நீ என்னவோ காசிக்கு போகணும்னு சொல்லிண்டு இருந்தியே, எப்போ போகப்போறே?” என்றார் சுப்பிரமணியன்.

“நீங்க சொல்லிட்டேள். என்னால உங்களை மாதிரியெல்லாம் நெனச்ச உடனே காசிக்குப் போகணும்னா முடியுமா? எத்தனை ஏற்பாடுகள் பண்ணனும். முதல்ல பணம் காசு வேணும். அப்புறம் அங்க எனக்கு யாரைத் தெரியும், போனா அங்கே தங்க ஏற்பாடு பண்ணணும். எத்தனை வேலை இருக்கு” என்றான் வைத்தா.

“டேய் வைத்தா! உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு. கோடியாத்துல பார்வதி பாட்டி இருக்காளோல்லியோ? அந்த பாட்டி காசிக்குப் போறாளாம். துணைக்கு யாராவது இருந்தா தேவலாம்னு சொல்லிண்டு இருக்கா. போயி அந்தப் பாட்டிய பாரு. அவகிட்ட நெறைய பணம் காசு இருக்கு உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடுவா. காசிக்கு போனா, அங்கே அந்த பாட்டிகூடவே நீயும் தங்கிக்கலாம். ஒரு வயசான கிழவிக்கு உதவினா மாதிரியும் இருக்கும், உன்னோட காசியாத்திரை முடிஞ்ச மாதிரியும் இருக்கும்” என்றார் சுப்பிரமணியன்.

அப்போது அந்தத் தெரு இளைஞர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்தாவிடம் சுப்பிரமணியன் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் சுப்பிரமணியனிடம் கேட்டான் “என்ன சார், வைத்தா காசிக்கு போறானா?” என்று.

“ஆமாம்” என்றார் சுப்பிரமணியன்.

“போகட்டும், அங்கேதான் நரேந்திர மோடி இந்த தேர்தல்ல போட்டி போடப்போறாராம். வைத்தா போனா அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்யலாம், நிறைய பணமும் கிடைக்கும், இரண்டு மாசம் பொழப்பும் நடக்கும். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். காசி யாத்திரையும் நிறைவேறும், மோடிக்கு உதவி செஞ்சா இவனுக்கு நல்ல பணமும் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அவர்கள் போனபிறகு வைத்தா சாமா ஐயர் வீட்டுக்குப் போய் அந்த வீட்டு அம்மாள் சொன்ன வேலைகளையெல்லாம் செய்துவிட்டு, அவர்கள் வீட்டு கிணற்றடியிலேயே இரண்டு வாளி இறைத்துத் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு அன்றைய சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.

மறுநாள் செய்தித் தாள்களில் எல்லாம் செய்தியொன்று வெளியாகியிருந்தது. வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தமிழ்நாட்டிலிருந்து வைகாவூர் வைத்தா என்பவர் காசி போகிறார்” என்பது செய்தி. தெருவில் பலரும் செய்தித் தாள்களோடு வந்து வைத்தாவை குசலம் விசாரித்தனர்.

“என்னடா வைத்தா இது. ஆனானப்பட்ட மோடியை எதிர்த்து நீ தேர்தல்ல நிக்கப் போறியாமே. அதுவும் காசில போய். இதெல்லாம் என்னடா கூத்து?” என்றனர் ஊரார்.

வைத்தா திகைத்துப் போய் வாயடைத்து நின்றான். என்ன ஆயிற்று? யார் செய்த வேலை இது. நேற்று வந்த பசங்கதான் ஏதோ விஷமம் பண்ணியிருக்கான்கள் என்று அவர்களில் ஒருவனை அழைத்து “என்னடா இது நீங்க ஏதாவது சொல்லி தொலைச்சீங்களா, இப்படி பேப்பர்ல வந்திருக்கே” என்று கேட்டான்.

அவன் சொன்னான், அவர்களில் ஒருவனுடைய உறவுக்காரன் பக்கத்து டவுனில் பத்திரிகை நிருபராம். அவனிடம் விளையாட்டா எங்க ஊர்லேருந்து வைத்தா காசிக்குப் போறான். அங்கே எலக்ஷனுக்கு நிக்கற மோடிக்கு எதிரா நாமினேஷன் போடப்போறான் என்று சொன்னான். அதை அவன் நியூசா போட்டுட்டான் போல இருக்கு” என்றான்.

சரி நடப்பது நடக்கட்டும் என்று வைத்தா கோயில் திருக்குளத்துக்குக் குளிக்கப் போய்விட்டான். குளித்து முடித்துவிட்டு இடுப்பில் மடித்துக் கட்டிய ஈர வேட்டியும், தலைக்கு மேலே விரித்த குடைபோல துண்டை காயவைத்துக் கொண்டு மடவளாகத் தெரு திரும்பினான், அங்கே அவன் கண்ட காட்சி அவன் கண்களை நம்பவே முடியவில்லை.

அவன் வீட்டுக்கு எதிரில் நாலைந்து வேன்கள் மோட்டார் பைக்குகள் வீட்டு வாசலில் காமிரா, மைக் சகிதமாக ஏழெட்டு பேர் நிற்பதையும் கண்டான். போச்சு, இன்னிக்கு என்ன ஆகப்போகுதோ, எவனோ போய் என்னவோ கொளுத்திப் போட இப்போ இத்தனை பேர் என்னை தேடி வந்துட்டாங்களா? என்ன பதில் சொல்லுவது என்று கவலையடைந்தான் வைத்தா.

வைத்தா வீட்டை நெருங்கவும், நிருபர்கள் கூட்டம் மைக்கை நீட்டிக் கொண்டு அவனை மொய்த்துக் கொண்டார்கள்.

“சார்! நீங்கதானே வைகாவூர் வைத்தா? வாரணாசில மோடியை எதிர்த்து தேர்தல்ல நிக்கப் போறீங்களாமே?”

“எந்த கட்சி சார்புலசார் நிக்கப் போறீங்க”

“மோடிக்கு எதிரா நின்னா, ஏராளமா செலவு செய்ய வேணுமே, உங்களால முடியுமா சார்”

“அங்கெல்லாம் இந்திதான் பேசுவாங்க. உங்களுக்கு இந்தி தெரியுமா சார்”

இப்படி மூச்சு விடாம நிருபர்கள் கேள்வி அம்புகளை வீச, வைத்தா ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். சரி, கடவுள் நமக்கு ஏதோ வழி காட்டத்தான் இப்படியொரு அக்கப்போர்ல நம்ம சிக்க வைச்சிருக்கார். இந்த மனிதர்கள் தள்ளுகிற பாதையில் போய்த்தான் பார்க்கலாமே என்ன நடக்குதுன்னு என்று மனதை திடப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் வைத்தா.

“எல்லோரும் கேளுங்க! நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே பதில்ல எல்லாத்தையும் சொல்றேன். நான் காசிக்குப் போறது வாஸ்தவம். அங்கே மொடி தேர்தல்ல நின்னா, அவருக்கு எதிரா நான் நாமினேஷன் ஃபைல் பண்ணப் போறேன். சுயேச்சையாதான் நிப்பேன். எனக்கு பணம் கொடுத்து எல்லா ஒத்தாசையும் பண்றேன்னு அங்க சில பணக்காரா பிராமிஸ் பண்ணியிருக்கா. அதனால அங்கே போகப்போறேன். அங்க நம்ம தமிழ் நாட்டுக்காரா நெறய பேர் இருக்காங்களாம். அவுங்க ஓட்டு எல்லாம் எனக்குத்தான் விழும். அது தவிர மோடியை எதிர்த்துத் தோத்தாலும், அதிலயும் எனக்கு பேர் கிடைக்குமில்லையா. இந்த சின்ன வைகாவூர்ல இருந்துண்டு பரிஜாரகனா வேலை பார்க்கறதைக் காட்டிலும் ஒரு பெரிய தலைவரை எதிர்த்து நின்னா நானும் பிரபலமாயிடுவேன். அப்புறம் சாதாரண கல்யாணத்துக்கு எல்லாம் போயி பரிஜாரகனா வேலை செய்யறதை விட்டுட்டு கோடீஸ்வரன் வீட்ல நடக்கற விசேஷங்கள்ள யூனிபாரம் போட்டுணு பரிஜாரகம் பண்ணுவேன்” என்றான் பெருமையோடு வைத்தா.

எல்லோரும் அவனை புகைப்படம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மறுநாள் எல்ல செய்தித் தாட்களிலும், தொலைக்காட்சிகளிலும் வைத்தா பற்றிய செய்திதான். ஊர் பேர் தெரியாம வைகாவூர் மடவளாகத் தெருவில் முடங்கிக் கிடந்த வைத்தா இன்று நாடு முழுக்கவும் தெரிந்த வி.ஐ.பி.யாக மாறிவிட்டான். எல்லா பத்திரிகையில் கட்டுரைகள், தலைப்புச் செய்திகள். ஒரு தமிழ்நாட்டு பிராமண பரிஜாரகன் மோடியை எதிர்த்துப் போட்டியாம். வைத்தாவுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி.

இதற்கடுத்த சில நாட்கள் கழிந்து கொடிகட்டிய பெரிய கார்கள் சில வைகாவூர் மடவளாகத்துள் நுழைந்தது. கண்ணில் தென்பட்டவர்களிடம் அந்தக் காரில் வந்தவர்கள் இங்கே யார் வைத்தா என்பது என்று விசாரித்தார்கள். ஊர் பெரியவர்கள் வந்தவர்களை அழைத்துச் சென்று, அவன் நேற்றே கோடிவீட்டு பார்வதி பாட்டியோடு காசிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான் என்று செய்தி சொன்னார்கள். வந்தவர்கள் ஏதோவொரு அரசியல் கட்சிக்காரர்கள் போலிருக்கிறது. இவனைப் பற்றி முழுவதும் விசாரித்துவிட்டு அலட்சியமாக இவனெல்லாம் என்ன செய்துவிட முடியும் என்று போய்விட்டார்கள்.

பார்வதி பாட்டியோடு வாரணாசியில் போய் இறங்கிய வைத்தாவுக்கு அங்கு மக்கள் பேசும் மொழி புரியவில்லை. அங்கு உலாவும் மக்கள் தோற்றத்திலும் மொழியிலும் மாறுபட்டவர்களாக இருந்தார்கள். ஒரு டோங்கா வண்டியை பாட்டி பிடித்து ஹனுமான் காட் போகச்சொன்னாள். டோங்கா அங்கு காமாட்சி அம்மன் கோயில் எதிரில் இருந்த ஒரு சாஸ்திரிகள் வீட்டு வாசலில் போய் நின்றது. தமிழ் நாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு தேவைப்பட்ட காரியங்கள் செய்து கொடுக்க அங்கு தமிழ்நாட்டு சாஸ்திரிகள் பலர் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர் வீட்டில் பார்வதி பாட்டி தங்க ஏற்பாடு செய்திருந்தாள்.

அன்று மாலை அந்த வீட்டின் சாஸ்திரிகளின் மகன் வந்து வைத்தாவிடம் “நம்ம ஊர்லேர்ந்து யாரோ ஒருத்தர் வைகாவூர் வைத்தாவாம் இங்கே போட்டியிடும் நரேந்திர மோடிக்கு எதிரா எலக்ஷன்ல நிக்கப்போறாராம், இங்கே பேப்பர்ல சேதி வந்திருக்கு” என்றான்.

அதற்கு வைத்தா, “வைகாவூர் வைத்தாங்கறது நாந்தான். அப்படி யாரோ நம்ம ஊர்ல கிளப்பி விட்டிருக்காங்க. அது இந்த ஊர் வரையில செய்தி வந்தாச்சா, சரிதான்” என்று சொல்லவும், அந்த இளைஞர் வெளியே ஓடிவிட்டான். சற்று நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வாயில் வந்து நின்றது.

கூட்டத்தினர் வைகாவூர் வைத்தாவைப் பார்க்க வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். வைத்தா பயந்து கொண்டே போய் வாசலில் நிற்கவும், கூட்டத்தில் ஒருவர் வந்து ஒரு காந்தி குல்லாயை வைத்தாவின் தலையில் கவிழ்த்துவிட்டு “வைகாவூர் வைத்தா ஜிந்தாபாத்” என்று குரலெழுப்பினார். கூட்டத்தினரும் கோஷமிட அங்கு சாஸ்திரிகள் வீடு களைகட்டிவிட்டது.

சிறிது நேரத்தில் மோடி கட்சியினர் கூட்டங்கூட்டமாக வந்து வாசலில் குழுமத் தொடங்கினர். இவர்களெல்லாம் மோடி கட்சிக்காரர்கள். எதிர்த்து போட்டி போட வந்திருக்கும் வைத்தாவைப் பார்க்கணுமாம் என்று அந்த வீட்டுப் பையன் சொன்னான். சாஸ்திரிகள் வீட்டில் இருப்பவர்கள் கதிகலங்கிப் போயிருந்தனர். இது என்ன சங்கடம். பார்வதியம்மா, உங்களுக்கு இடம் கொடுத்தா, இப்படியொரு ஆளையும் எதுக்குக் கூடவே கூட்டிண்டு வந்தீங்க, இப்ப பாருங்க, கூட்டம் வாசலில் வந்து நிக்கறத. இங்க ஏதாவது ஏடாகூடமா நடந்துட்டா நாங்க என்ன செய்யறது. நாங்களே பொழைக்க வந்தவா, அரசியல், தேர்தல் இதெல்லாம் நமக்கு எதுக்கு, நீங்க எதுக்கும் வேற இடம் பார்த்துண்டு போறது நல்லது” என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

தலையில் கவிழ்த்த காந்தி குல்லாயோடு வெளியே போனான் வைத்தா. வெளியில் நின்றிருந்த கூட்டம் அவனை அப்படியே மொய்த்துக் கொள்ள, கூட்டத்தில் வைத்தாவையும் காணோம், அவன் போட்டிருந்த குல்லாவையும் காணோம். சிறிது நேரம் நடந்த கசமுசா தள்ளுமுள்ளுவை அடுத்து தெருவில் கூட்டம் கலைந்து வெரிச்சோடியது. வைத்தாவை வீட்டின் உள்ளேயும் காணோம், வெளியேயும் காணோம். அப்போது கங்கையில் தண்ணீர் மிகக் குறைவாக ஓடிக் கொண்டிருந்தது. அனுமான் காட்டிலிருந்து சற்று தொலைவில் தண்ணிரிலிருந்து மெல்ல வெளியே வந்த வைத்தா கையை நீட்டிக் கொண்டு, “ஐயா, என்னை யாராவது காப்பாத்துங்களேன். தண்ணீல போட்டு முக்கி முக்கி எடுத்துட்டாங்க. மூச்சு முட்டுது. எனக்கு தேர்தலும் வாணாம், காசி யாத்திரையும் வாணாம். எங்க ஊருக்கே போயிடறேன். அங்க உள்ள பரிஜாரக வேலையே பொதும், என்ன காப்பாத்துங்க ஐயா” என்று அலறிக் கொண்டிருந்தான்.

தமிழ் தெரிந்த ஒரு சிலர் அவனது பரிதாப நிலையைப் பார்த்து ஓடிவந்து அவனைக் கரையேற்றி, மாற்று உடைகொடுத்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்து, சென்னைக்கு ரயிலேற்றி விட்டுவிட்டுச் சொன்னார்கள் “தம்பி வைத்தா, இனிமே இதுபோல அசட்டுக் காரியம் எதையும் பண்ணி வைக்காதே. ஊருக்குப் போயி ஒழுங்கா உன் சமையல் தொழிலை கவனி. விரலுக்குத் தக்கபடிதான் வீங்கணும். புலியப் பாத்து பூனை கோடு போட்டுண்ட புலியாயிடுமா என்ன? அது தவிர இதெல்லாம் உன்னைப் போலவங்களுக்கு எதுக்குப்பா, வேளா வேளைக்கு வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றதுன்னு பாத்துகிட்டு இருக்கற இடத்துல இரு. இப்படி வந்து இனிமே எங்கேயும் மாட்டிக்காதே. ஏதோ உங்க அம்மா செஞ்ச புண்ணியம், உசுரோடு திரும்பறே. ஜாக்கிரதை என்ன சரியா?” என்று புத்திமதி சொல்லி ஊருக்குத் திருப்பி அனுப்பினார்கள். காசிக்குப் போன வைத்தா கைகால்களோடு முழுசா ஊருக்குத் திரும்பினான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *