இவள் பாரதி

 

பசியிலெழுந்து

பக்கம் ஊர்ந்து

உறங்கும் தாயை எழுப்புகிறது

குழந்தை

 

கனவிலிருந்து

பதறியெழுந்து

உன்னைப் பார்க்கிறேன்..

 

நீ என்னருகே

ஊர்ந்து வந்து

’ம்மா’ என்று அழைக்கிறாய்

வாரியணைத்து

முலையூட்டுகிறேன்

 

அருந்திக்கொண்டே உறங்குகிறாய்..

அந்த நள்ளிரவு

எனக்கு அதிகாலையானது.

 

————–

நீ பாலுக்கழும்

தருணங்கள்

துயரானவை

 

நீயழுதும்

முலையூட்ட வாய்க்காத நேரங்கள்

ரணமானவை

 

முலையூட்ட வாய்த்திருந்தும்

நீ மறுக்கும் நேரங்கள்

தவமானவை

 

நீ பாலருந்தும்

தருணங்கள்

வரமானவை

————-

நாளைக்கு

நூறுமுறை

விழுந்தெழுகிறாய்

அதே சிரிப்போடு

எழுந்து தத்துகிறாய்

 

பத்துமுறை விழுந்தாலும்

மீண்டும் நடக்க

முயற்சிக்கிறாய்

 

துவண்டிருந்த என்னை

உற்சாகமூட்டி சிரிக்கச் செய்கிறாய்

நீயென் குரு நிவேதிதா

————-

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிறுகை அளாவிய கூழ் – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *