சங்கர் சுப்ரமணியன்

அன்புள்ள மணிமொழிக்கு

எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்வி குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனை தேடி பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையட்டு கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களை திறக்கிறது.

நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தக புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும்.

இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்…

மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனை கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணரந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சு காற்றில் கலந்து வரும் உன் உயிர் , தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து கானாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள்.

எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்போழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம் , உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான்.

வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மை கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும்  நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும்,  அழுகையும், கடவுள்  நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு…

எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன  நம் இருவருடைய கண்களும்

வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத் தான் எனக்கு தோன்றியது.  விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்…..

அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான , தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கி போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கி பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள்.

ஒவ்வொறு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில்,  நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து  கிடக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்புள்ள மணிமொழிக்கு

  1. Very deep and tantalizing true story is somehow translated in the mere failing words that can NEVER ever convey even the basic of its pains & pleasures. Time can heal but can never fade.

Leave a Reply

Your email address will not be published.