தி. சுபாஷிணி

தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?

கோவை ஞானி

New Doc 1 (1)

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்கங்கள் கூடின. புவனேஷ்வர் தமிழ்ச்சங்கம், ஷிமோகா தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், கல்லிடக்குறிச்சி தமிழ்ச் சங்கம், விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கம் மற்றும் திருச்சியிலுள்ள செண்பகராமன் இலக்கிய சங்கம், கோயம்புத்தூரிலுள்ள சிற்றிதழ்களின் சங்கம், மேலும் ஓர் இலக்கிய வட்டம் என, ஹிந்துஸ்தான் கலையியல் கல்லூரியில் கூடி, ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி தங்கள் படைப்புகளையும், சங்கங்களின் பணிகளையும் பகிர்ந்து கொண்டன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கத்திற்கு, சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு அக்கல்லூரி தாளாளர் தலைமை வகித்தார். அக்கல்லூரியின் தமிழ்த் துறையினர் விழா ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக கவனித்தார்கள். அவ்விழாவிற்கு திருப்பூரிலுள்ள திரு. நாகேஸ்வரன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் தம் வாழ்நாள் பணியே, எல்லாத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒருவொருக்கொருவர் உதவி புரிந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்பதுதான். அவர் என்னை அவ்விழாவிற்கு அழைத்து, என் படைப்புகளை ஏனையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக நான் கோவை சென்றபோது திரு. ‘கோவை ஞானி’ அவர்களைச் சந்தித்தேன். அப்போது எனக்கு, ‘தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது.  முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா?  என்ற அச்சம். ஆனால் படிக்க படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

“கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் நிறைய பேசி வரும் தமிழ் நாகரிகம், தமிழர் நாகரிகம் இவற்றின் கூறுகளை வரையறுத்துக் கொள்ளலாம்” என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறார் கோவை ஞானி.

“5,000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், மேன்மையும் கொண்ட தமிழ் மொழி, ஏனைய கிரேக்க இலத்தீன், ரபிரேயம், சீனம் ஆகிய மொழிகளின் தொன்மையையும், இலக்கிய, இலக்கண, பண்பாடு மேன்மையும் கொண்டது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மருத்துவம் முதலிய எத்தனையோ துறைகளில் தமிழ் மக்களின் சாதனைகள் சிறப்பானவை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமே என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. கடல் வாணிபத்தில் தொன்மைக் காலம் முதலே தமிழ் மக்கள் பெற்றிருந்த சிறப்பை இன்று அயல்நாட்டவரும் ஒப்புக்கொள்கின்றனர். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழர் நாகரிகம் ஆழமாகப் பரவியிருந்தது என்பதற்கும் உறுதியான சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளின் பரவல் என்பது ஜப்பான் வரை சென்று இருக்கின்றது.  தமிழ் மன்னர்கள் பேரரசுகளைப் படைத்திருக்கிறார்கள். நீர்ப்பாசனத்திட்டங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், மாபெரும் கட்டடங்கள் முதலியவற்றை உருவாக்குவதற்குத் தேவையான பொறியியல், கணிதம் முதலிய அறிவுத் துறையிலும், தமிழர்கள் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  தமிழிசைதான் வட இந்திய இசைக்கும், மேற்கத்திய இசைக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதை இசைத்தமிழ் அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்கள்.

தொல்காப்பியரின் தினைக்கோட்பாடு உலக அளவில் தனித்துவமிக்கது. இலக்கியத்தின் உச்சம் சங்க இலக்கியம், உன்னதம் பக்தி இலக்கியம், சாரம் சித்தர் இலக்கியம்.

தமிழ் அறம் என்பது சமத்துவம், சமதர்மம் என்பதை திருக்குறளும், தொல்காப்பியமும், சிலம்பும் கூறுகின்றன.  சாதி, மதம், சடங்குகள் என்பன தமிழச் சமூகத்திலும் இடம் பெற்றிருந்தன. இவற்றின் ஆதிக்கத்திற்கு இடம் தராமல் உணர்வோடு வாழும் வாழ்க்கைதான் தமிழறத்திற்கு ஒத்தது என்பது வரலாறு கூறும் உண்மை. மனித மேன்மைதான் தெய்வம் என்று படைக்கப்பட்டது. படைத்தது மனிதன்தான்.

தமிழர் நாகரிகத்திற்கு இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் உச்ச அளவிலானவை. இவைகளில் முதன்மையானவை வடக்கிலிருந்து வந்த ஆரியத்தின் தாக்குதல்தாம்.

இரண்டாவது, மைய அரசுக்குத் தமிழக அரசு தன்னை விட்டு கொடுத்ததன் மூலம் இந்தியை தடுக்க முடியாதது, மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழியாய் இல்லாதது, நான்காவது, உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பன.  இறுதியாக, தமிழின் தொன்மையைப் பற்றியும், இலக்கிய மேன்மையைப்பற்றியும் பேசினாலும் தமிழை ஆழமாக கற்கவும் இல்லை. தமிழன் என்கிற உணர்கிற இல்லை.

இவ்வாறு இருக்கையில், தமிழ் நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனதா?.

முதலில் மைய அரசு அறிவித்த செம்மொழியாம் தமிழ் மொழியை நாம் சீரிய வகையில் வளர்க்க பல்துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இருப்பதால், ஏனைய மொழிகளுடனும், மாநிலங்களுடனும் தொடர்பு கொண்டு, பல ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தி அவர்களுடன் நம் உறவை பலப்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ் மொழியில் தேவையான மனித நேயம், மெய்யியல், பண்பாடு, இலக்கியம் முதலியவற்றைத் தமிழ் தன்னுள் தாங்கிக்கொண்டுச் செம்மொழியாய் நிற்கின்றது. மனித வாழ்வின் ஆதாரமாகிய சமத்துவம், சமதர்மம், அன்பு ஆகியவற்றின் குரலாகத்தான் தமிழ்க்குரல் இருக்கின்றது.  இதை தமிழன் உணர்ந்து உலகுக்கும் காட்ட வேண்டும். மேலும் ஆதிக்க அரசியலைத் தவிர்த்தல் நலம். தமிழ் நமக்கு ஒரு பேராற்றல். இதைத்தமிழன் கண்டறிய தமிழ்க் கல்வி அவசியம். தமிழ் என்பது அன்பு, அறம், ஆண்மை, பெண்மை, தாய்மை, அழகு, கலை, தவம், இவ்வகையில்தான் நம் வாழ்வின் உயிராகிறது, மெய்யியல்ஆகிறது. இந்தவகையில் தான் தமிழ் கற்க வேண்டும். தமிழைக் கற்பிக்க வேண்டும்.

மேலும், எந்த அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கமாக கொள்ளவில்லையோ அந்த அரசியல், அரசுதான் தமிழ் தேசியமாகவும், அதன் வழியாக தமிழர் நாகரிகத்தை வளர்ப்பதாகவும் இருக்கும். மேலும் பண்பாட்டு ஆதிக்கமும் தமிழர் நாகரிகத்திற்கு இடையூறாகத்தான் இருக்கும். தமிழ் வரலாற்றோடு, தமிழ் வாழ்வோடு, தமிழ் மக்களோடு, தமிழ் மக்களின் மேம்பாட்டோடு நம்மை இணைக்கிற இயக்கம் என்கிற முறையில் தமிழ் தேசிய இயக்கத்தின் முன் பல கடமைகள் உள்ளன. அவை: ஆதிக்கத்தை மறுக்கும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும். மார்க்ஸியமும் பெரியாரியமும் இணைகின்ற போழ்து, தலித்தியமும் பெண்ணியமும் உறவுகொள்ள ஏதுவாகிறது. இது தமிழ் தேசியமாக மலர்ந்து தமிழர் நாகரிகத்தைக் காப்பாற்ற இயல்கிறது. இதனால் இயற்கையைக் காப்பாற்றும் தமிழ் வேளாண்மை, தமிழ் மருத்துவம், தமிழ் சார்ந்த மரபு தொழில்கள், சிற்பக்கலை போன்றவை ஆதரிக்கப்பட்டுவிடும். தமிழ் தாய்ப் பள்ளிகள் அரசு உதவியோடு தொடங்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கம், தம் கிளைகள் என்ற முறையில் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உழவர்கள், நெசவாளர்கள், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் ஒரு கிளை முறைணை உருவாக்கி செயல்பட வேண்டும். இறுதியாக அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து, வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், பாரதிதாசனும் நமக்குள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட கட்டுரையைத் தன் ‘தமிழ் நேயம்’ பத்திரிகையில் வெளியிட்டு, அதற்கு எதிர்வினையாக வந்த 27 கட்டுரைகளையும் தொகுத்து இந்த நூலை அளித்திருக்கிறார் கோவை ஞானி.

முதல் கட்டுரையாக, பேராசிரியர் ம.இலெ.தங்கப்பரவல் கட்டுரை அமைகிறது. அதில் “தமிழ் மக்கள் தாங்கள் யார்?  தங்கள் நாகரிகம் எத்தகையது? என்பதை அறியாமல் உறங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் விழித்தெழவில்லை என்பதைத் தவிர வேறு எல்லா நலக்கூறுகளும் அவர்கட்கு உண்டு. இன்று இனவுணர்வற்று உறங்கிக் கிடக்கும் தமிழர் இன உணர்வு பெற்று விழித்தெழச் செய்ய வேண்டும், செய்தால்போதும்” என தன் கருத்தை முதன்மைப்படுத்துகிறார்.

“பாரதி வாழ்ந்த காலத்திலேயே நூலகமொழியாகத் தமிழ்வளம் பெறுவதற்கான வழியை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி கூறியிருக்கின்றார். எனவே தமிழ் நூலக மொழியாக இடம்பெற வேண்டும்” என்பது மருத்துவர் கோபியின் கருத்து.

தமிழோசை கு.முத்துக்குமார், “மண்ணையும் மக்களையும் பிரித்து தமிழை மட்டும் வளர்த்தெடுக்க முடியாது” என்று ஆணித்தரமான அடிப்படையான கருத்தை முன்வைக்கின்றார்.

“தமிழர் வரலாறு, பண்பாடுகள், தமிழ் மொழி மேன்மை என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் வேலைக்கான கவலையிலும், வீணான பொழுதுபோக்குகளிலும், மலிவான திரைப்பட நுகர்வு& பேச்சிலும்& தமிழில் என்ன இருக்கின்றது என்று அரைகுறை தாங்கிய பயிற்சி அளவிலேயே அறியாமை வெளிப்படப் பிதற்றித் திரிவதிலும்& குறிக்கோளோ நோக்கமோ அற்று, இணைய வலையத்து விளிம்புகளில் தொற்றித் தொங்கும் & இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்தை இன்று எழுபதும் எழுபதுக்குமேலுமென மூத்த வயதுடைய தமிழ் தேசியர்கள் எப்படி மாற்ற முடியும்? என்ற வினாவை எழுப்புகிறார் கவிஞர் தமிழன்பன்.

முனைவர் சு.வேணுகோபால் கவலைப்படுவதும், ஆதங்கப்படுவதும் முந்தையக் கருத்தையொட்டித்தான் இருக்கின்றது.

“சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களான தெ.பொ.மீ., வ.சுபா மாணிக்கனார், வையாபுரி பிள்ளை, வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசனார் போன்றோர்கள் வணங்கத்தக்கவர்கள்.  இன்று 50 வயதை நெருங்கத்தக்கவர்களில் எத்தனைபேர் தமிழறிஞர்கள்? எத்தனைபேர் தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்?  தன் பிள்ளை, தன் “தமிழ் மாணவர்”களாக உருவாவார்கள். இவர்களின் மாணவர் தான் பிற்காலத்தில் எப்படியும் ஆசிரியப் பயிற்சி முடித்தோ, இளநிலை முனைவர் முடித்தோ, பணம் சேர்க்க வேலை தேடுவார்கள். தமிழ் உருப்படுமா?”

சாத்தூர் சேகரன் தன் கட்டுரையில் “தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை முனை” என்கிறார். “சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள். இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டி விட்டால் எளிதில் கிடைப்பது வெற்றியாகும், பெரு வெற்றியாகும்.

சமீபத்தில் மறைந்த சேலம் தமிழ் நாடன் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக கோவை ஞானி கருதியிருக்கிறார்.

“தமிழ் தேசியம், தமிழர் நாகரிகம்”&இவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது. தன் சிந்தனைகளை நூலக வடித்து நமக்கு அளித்த கோவை ஞானி அவர்களின் தமிழ் உணர்வும், சமுதாயத்தின்பால் உள்ள அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது.

தலைப்பு & தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? 

தொகுப்பாசிரியர்    & கோவை ஞானி

வெளியீடு                     & புதுப்புனல், பாத்திமா டவர், 117 திருவல்லிக்கேணி

                                                  நெடுஞ்சாலை, சென்னை & 5

பக்கம்                               & 160

விலை                             & ரூ.120

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *