வானமா மலையில் பூக்கும் சிறுவானி,

தூயகா விரியில் இணையும் பூவானி,

பாயுமாப் பொதிகைப் பொருநை தண்வானி,

போலவே குளிரும் ஈசன் திருமேனி!                                    17

 

சுற்றும் விண்ணோடு சுழலும் சிவனின்,

முக்கண் என்பதன் மெய்ப்பொரு ளறிந்தால்,

முத்தண் ணாறுகள் முறையாய்க் கூடும்,

பித்த வாதகபம் பரம்பொரு ளாகும்!                                   18

 

புங்கன் மர நிழலைப் போல,

அங்கம் அது குளிர்ந்தவன் நீயே,

பொங்கும் சுடர் நுதற்கண்ணோடு, குளிர்

திங்கள் தனைச் சுமப்பவன் நீயே!                                     19

 

இரு வேறு துருவங் களையும்,

அரு கருகே அமைபவன் நீயே,

திரு வோடு சுமப்பவர் களையும்,

பரி வோடு அணைப்பவன் நீயே!                                                                           20

 

பெண் சுமந்த பாகத்தான், பிட்டுக்கு,

மண் சுமந்த தேகத்தான், இன்னும்

என் சுமக்கச் சொன்னாலும் சுமந்திடுவான்,

தன் பண் சுமந்த பக்தனுக்காய்!                                                                          21

 

அட்ட மா சித்திகளைப் பெற்றவரும்,

சுட்ட மா வறுமையினை உற்றவரும்,

நட்ட மாடு முன்னைக் கண்டறிந்தால்,

கட்டி மா மனமதனை ஆண்டிடலாம்!                                                                   22

 

மதுவேந்தும் மலர்களை ஏந்திடும் மார்பினனை,

மழுவேந்தும் கைகளுடை தீஞ்சுடர் மேனியனை,

விழுதேந்தும் மண்ணாக மனதினில் ஏந்தி,

பழுதேதும் இல்லாமல் பணிவுடன் வாழ்வோம்                                     23

 

வெற்றுடம்பை வாட்டும் குளிர் காற்றாய்,

வெட்டிரும்பை வார்க்கும் அனல் காற்றாய்,

வெப்பமுமிழ் கண்ணின் அருள் காற்று,

வட்டமிட்டு வாழ்வை வளமாக் கும்!                                                                24

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *