குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

ராஜலக்ஷ்மி பரமசிவம்

“என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? “

“எனக்கு அந்த பொம்மை வேணும்.”

நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.

எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம்.

ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்.”  குட் டச் ”  “பேட்  டச் ” என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்.

அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.

ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

“good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.

Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

link  www.youtube.com/watch?v=4xQCauzPzY4

காணொளி  நன்றி: Child Line Foundation India.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.