மேகலா இராமமூர்த்தி

புதுச்சேரி,

12.03.2014

அன்புப் பெயர்த்தி மணிமொழிக்கு,

தாத்தா எழிற்கோ ஆவலோடு எழுதுவது. நீயும், தம்பி மலர்ச்செல்வனும் நலமா? உன் தாய் தந்தையர் நலமா?

அமெரிக்காவில் இருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் பாட்டியும் அடிக்கடித் தொலைபேசியில் பேசுகிறோம்; ’யாஹூ மெசஞ்சர்’, ’ஸ்கைப்’ போன்றவற்றின் வழியாக உரையாடுகின்றோம் என்றாலும் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது மடல் வழியாக மனவுணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதே மணிமொழி; அதனால்தான் இந்த மடல்!

தூயதமிழில் நான் இம்மடலை எழுதுவதன் நோக்கமே நம் தாய்த்தமிழை நன்றாகப் பேசவும், ஓரளவிற்கு எழுதவும் படிக்கவும் கற்றுவைத்துள்ள நீ (சற்றே கடுமையான நடையில் எழுதப்பட்டுள்ள) இம்மடலை எழுத்துக்கூட்டியேனும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணமும், வாசித்துவிடுவாய் என்ற நம்பிக்கையுமே!

நீ நினைக்கலாம்….ஏன் இந்தத் தாத்தா எப்போது பார்த்தாலும் தமிழ்..தமிழ் என்றே புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று. நான் உன் தாத்தா மட்டுமல்ல….ஓய்வுபெற்ற ஓர் தமிழ்ப்பேராசிரியரும் ஆவேன் என்பது நீ அறிந்ததே! அமுதத்தின் சுவை அதனைச் சுவைத்தவனுக்கே தெரியும். அதுபோல் நம் அமுதத் தமிழின் அருஞ்சுவையை நான் நன்கறிவேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லுவார்,

தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத்
தமிழின்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!’ என்று.

மகாகவியும், பன்மொழிப் புலமையாளருமான பாரதியும்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம் என்று வாயூறிப் பேசுவார்.

இப்படிப் பெரும்புலவர்கள் பலரால் போற்றப்படும், ஏற்றப்படும் ஓர் உன்னத மொழி உனக்குத் தாய்மொழியாக அமைந்தது நீ பெற்ற பேறேயல்லவா? ஆம்…மிகவும் உயரிய நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம். சிறந்த இலக்கண இலக்கிய வளமும், தொன்மைச் சிறப்பும், உயர்ந்த கருத்துக்கள் செறிந்த நூல்கள் பலவும் உடையதாய் விளங்குவதாலேயே நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாய் (Classical language) இன்றும் திகழ்கின்றது என்பதை மறவாதே!

மணிமொழி! அயல்நாட்டில் பிறந்து அதையே வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் நீ அங்குள்ள மக்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெறவேண்டியது மிக அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. ‘When in Rome, do as the Romans do!’ என்பது பழமொழி. எனவே அமெரிக்கவாசியான நீ ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறவேண்டும்; அத்தோடு அங்கு பேசப்படும் பிறிதோர் முக்கிய மொழியான ஸ்பானிஷையும் நன்கு கற்றுக்கொள்! பள்ளியில் கற்றுத்தரும் ‘பிரெஞ்சு’ மொழியிலும் தேர்ச்சி கொள்! இன்னும் எத்தனை எத்தனை மொழிகளை உன்னால் கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையையும் கற்றுக்கொள்! அப்போதுதான் ‘Global village’ என்று சொல்லுகின்ற அளவிற்குத் தொலைத்தொடர்பு வசதிகளாலும், கணினிப் பயன்பாடுகளாலும் மிகவும் சுருங்கிவருகின்ற இன்றைய நவீன யுகத்தில் வெற்றி மங்கையாய் உன்னால் வலம்வர முடியும்!

நாம் அறிந்துகொள்கின்ற பல்வேறு மொழிகளும், வாழ்வியல் பண்புகளும் நம் அறிவை விசாலமாக்கவும், உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் உன்னுடைய சிந்தனையும் செயற்பாடுகளும் நம் பண்பாடு மற்றும் நாகரிகம் சார்ந்ததாகவே அமைதல் வேண்டும் என்பதே என் அவா. வளரும் சூழ்நிலையால் நீ அமெரிக்கப் பெண்ணாக இருந்தாலும் பிறப்பால் ஓர் தமிழ்ப்பெண் என்பதை எப்போதும் நினைவில்கொள்! எனவே சிறந்த தமிழ்ப்பெண்ணாக நீ வளரவும் வாழவும் வேண்டுமெனில் நம் பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வையும், அவர்தம் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்குச் சிறந்த வழி…நம் முன்னோர்கள் தந்துவிட்டுச் சென்றுள்ள சங்க இலக்கியப் புதையலையும், திருக்குறள் முதலிய அறநூல்களையும் நீ அறிந்துகொள்வதே!

இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்லவும், தங்கவும் முடிகின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தைத் தவிர வேறிடங்களுக்குச் சென்றறியாத தமிழ்ப் புலவரான கணியன் பூங்குன்றனார் என்பவர்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா…’ எனும் ஒப்பற்ற சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். ’Three principles of French Revolution’ பற்றி உனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். Liberté, Egalité, Fraternité (Liberty, Equality and Fraternity in English) என்பவையே அவை. இதனையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று தமிழில் அழைக்கின்றோம். இதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவத்தையே கணியன் பூங்குன்றனாரின் யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது. எனவே சகோதரத்துவம் எனும் உயரிய கோட்பாட்டை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களே தமிழர்கள்தான் என்பதை நான் உனக்குப் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் மணிமொழி.

பக்குடுக்கை நன்கணியார் எனும் மற்றொரு சங்கப் புலவர்,

’…..இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்ந் தோரே என்கிறார் தன் புறப்பாடலில். ’இவ்வுலகம் மனத்துக்கு இனிமைதராத பல நிகழ்வுகளையும், சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டது; மனிதர்களாகிய நாம் அவற்றைக் கண்டு கலங்காது இன்னாதவற்றையும் இனியவையாகக் காண்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்’ என்பதே இவ்வடிகள் மூலம் அப்புலவர் நமக்கு உணர்த்தும் உண்மை!

இதையேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும், இன்பத்தை விரும்பாதவனாய், துன்பம் இயற்கையானது என்ற தெளிவோடு இருப்பவன் துன்பம் வந்தபோதும் துன்புறுவதில்லை என்கிறார்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்என்பதே அக்குறள். மேலைநாட்டு அறிஞர்களிடம் தேடினாலும் காணக் கிடைக்காத அரிய சிந்தனைகள் இவை!

மற்றொரு இனிய பாடலில் ’நரிவெரூஉத்தலையார்’ என்ற புலவர் பெருந்தகை, ’மனிதர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்யாமலாவது இருங்கள்; அதுதான் எல்லாரும் விரும்புவது; அத்தோடு உங்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் வழியும் அதுவே!’ என்று அன்போடு அறிவுரை அளிக்கிறார்.

பல்சான் றீரே பல்சான் றீரே

…………………………………………………………….

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் அதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.’

(மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல் உனக்கு மிகவும் பரிச்சயமான பாடல்தானே மணிமொழி! சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இப்பாடலை நீ மனப்பாடமாக ஒப்புவித்துப் பரிசுபெற்றது இப்போதும் என் நினைவிலிருக்கின்றது!)

இதுபோன்று இன்னும் எத்தனையோ முத்துக்களும் மணிகளும் நம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. அதனால்தானோ என்னவோ….சங்க நூல்களில் ஒன்றான அகநானூற்றின் ஒரு பகுதிக்கு மணிகள் மற்றும் பவளங்களின் இணைவு என்ற பொருள்தரும் ‘மணிமிடைபவளம்’ என்ற அழகிய பெயரினையும், மற்றொரு பகுதிக்கு ’முத்துமாலை’ எனப் பொருள்தரும் ‘நித்திலக்கோவை’ என்ற இனிய பெயரினையும் சூட்டியிருக்கின்றனர் தமிழ்ச்சான்றோர்; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் தமிழின் சிறப்பை! இவற்றையெல்லாம் நீ கற்று மகிழவேண்டும் அம்மா! அத்தோடு நில்லாமல், உன் தோழர் தோழியர்க்கும் நம் தமிழ்ச்சிந்தனையின் ஆழத்தை, அகலத்தை அறியத்தரவேண்டும். அதற்காகவேனும் நீ செந்தமிழ் இலக்கியங்களைக் கற்கத்தான் வேண்டும்.

மணிமொழி! இப்போது நீ சிறுமி. நான் எழுதுகின்ற செய்திகளையும், அவற்றின் இன்றியமையாமையையும் புரிந்துகொள்ளுகின்ற வயதோ பக்குவமோ உனக்கில்லை என்பதை நானறிவேன். பின்பு ஏன் இப்போதே இவற்றையெல்லாம் உனக்குச் சொல்லுகிறேன் என்றால்…..மனித வாழ்வு நிலையற்றது; நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை என்னும் இயல்புடையது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு என்ற தெய்வப்புலவரின் பொய்யாமொழி புகல்வது வாழ்வின் நிலையாமையையே. எனவே வயதான நான் உனக்குச் சொல்லவேண்டிய அறிவுரைகளையும், அறவுரைகளையும் காலந்தாழ்த்தாமல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சொல்லிவிடுவதே நல்லதல்லவா?

பழைய தலைமுறையினரான நாங்கள் கிணற்றுத் தவளைகளாக – வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவிட்டோம். உன் தலைமுறை அப்படியில்லை. பல்வேறு வண்ணமும், எண்ணமும் கொண்ட மக்களோடு கலந்து பழகும் அரியதோர் வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கின்றது. இதனைச் சரியான வகையில் நீ பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பிற மொழிகளோடு தமிழையும் தவறாது பயில்! நீயே வியக்கும் வகையில் விரைவில் நல்ல தமிழ்ப்புலமை வாய்க்கப்பெறுவாய்!

தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தொலையாமல், அழியாமல் காக்கும் பெரும்பொறுப்பு உன்னைப் போன்ற இளந்தமிழர் கைகளில் இருக்கின்றது மணிமொழி.

எதிர்காலத்தில் நீ சிறந்த தமிழறிஞராய்த் திகழவேண்டும்! உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்யவேண்டும்! அப்போது உன் அன்புப் பாட்டனார் உன்னுடன் இல்லாமல் போகலாம்; ஆயினும் இம்மடல் உனக்கு என்னை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்!

மகாகவியின் பாடல் வரிகளோடு இம்மடலை நிறைவு செய்கின்றேன். (இவ்வரிகளை உனக்காகவே பாரதி எழுதினானோ என்று எனக்குத் தோன்றுகின்றதே……..இஃதென்ன விந்தை!!)

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

……………………………………………………………….

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.’

(பி.கு: என் ஆசைகளையும், விருப்பங்களையும் உன் அன்புப் பாட்டியும் உளப்பூர்வமாக வழிமொழிவதாக உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்.)

உனக்கும், மலர்ச்செல்வனுக்கும் எங்கள் அன்பு முத்தங்கள்!

தமிழ் வாழ்க!

என்றும் உன் நலனையே நாடும்,

தாத்தா எழிற்கோ

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்!

 1. ஆழ்ந்த தாய்மொழிப் பற்றை வெளிப்படுத்தும் கருத்துக்களைப் பெயர்த்திக்கு எழுதும் கடிதம் வாயிலாக வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. உண்மையில் இந்த கருத்து தமிழைப் பாடாய் படுத்தும் அனைவருக்குமே பொருந்தும். வாழ்த்துக்கள்.

 2. படிக்கப் படிக்க இனிமையான உணர்வைத் தருகிறது தங்களின் கடிதம். இளம்தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டிய கடிதம். வாழ்த்துக்கள் சகோதரி.

 3.  பெரியோரின் அனுபவத்தில் தமிழ் என்னும் தேன் கலந்து கொடுத்தால் படிக்க கசக்குமா என்ன ?
  சக்கரை பந்தலில் தேன் மாரிபொழிந்தது போன்று இருந்தது !! 

 4. தமிழின் பெருமைகளையும் தாய்மொழிப்பற்றின் அவசியத்தையும் இளைய சமுதாயம் மனங்கொள்ளத் தக்கவாறு அருமையான நடையில் எடுத்துரைத்த விதம்  மிகவும் சிறப்பு!  பாராட்டுக்கள் மேகலா!

 5. It was awesome, I had tears on my eyes, going to present this in our Tamil Sangam during our Tamll New year celeberation.

  Tons of Thanks .

 6. அருமையான பாராட்டுரைகளை அழகுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்டிருக்கும் திரு. கோபாலன், திரு. சச்சிதானந்தம், திருமதி. மீனாட்சி, திருமதி. கலையரசி, திரு. செங்குட்டுவன் ஆகியோருக்கு என் மனம்நிறைந்த நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

  அன்புடன்,
  மேகலா

 7. Short, Sweet & Instructive.
  வாழ்த்துக்கள்
  இனிமேல் கமெண்டுக்கு வரலாம் போல இருக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *