இலக்கியம்சிறுகதைகள்

ஏழையின் பசி!

நந்திதா

ஏய்..கோவாலு… அடி வயிற்றிலிருந்து ஒரு அதட்டலுடன் தன் மகனைக் கூப்பிட்டாள் முனியம்மா. அன்றாடக் காச்சியில் அல்லலுறும் இந்தியப் பிரஜை. கிராமத்தில் உறவுகளை விட்டு, புலம் பெயர்ந்து கணவனுடன் நகரத்தை நோக்கி நடை போட்டு வந்தவள்.  சும்மா சொல்லக்கூடாது. கூலி வேலை செய்து மனைவியைக் கண் கலங்காமல் காப்பாற்றி வந்தான் முனியம்மாவின் கணவன் வேலுச்சாமி. இவர்களின் இன்ப வாழ்க்கையின் இலக்காக கோபால் பிறந்தான். அப்பனும் ஆத்தாளும் உச்சி குளுந்து மகிழ்ந்தனர். ஏழைகளுக்கு இன்பம் நீடிக்க இயற்கைக்கு எப்பொழுதும் விருப்பம் இருக்காது போலும். கோபாலை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு  ஒரு காச்சலில் நிரந்தரமாக ஓய்வு பெற்று உலகை விட்டுச் சென்றுவிட்டான், வேலுச்சாமி. கோபாலை பள்ளியில் சேர்த்தும் படிப்பு ஏறவில்லை. ஆகவே அம்மாவுடன் சின்னச் சின்ன வேலை செய்து வந்தான். முனியம்மா வீட்டு வேலை செய்வாள். மாலையில் இட்லி, வடை செய்து விற்றும் வந்தாள். அவள் வசிக்கும் இடத்தில் அவளுக்கும் சில வாடிக்கைக்காரர்கள் இருந்தனர்.

அவர்களின் வீடு ஒரு பெரிய கட்டடத்தின் பக்கவாட்டின் சுவரை ஒட்டியது. சுவர் ஒரு பக்கம். அதில் இரண்டு பக்கம் ஆணி அடித்து கயிறு கட்டி அதில் பழைய பாய், பிளாஸ்டிமக் திரை என்ற பெயரில் ஒரு சுவர். எத்தைனையோ குடும்பங்களில் இவர்களும் ஒருவர்.  பெரிய மழை வந்தால், கட்டிடத்தின் வாட்ச் மேன் கருணையில் வராண்டாவில் ஒதுங்க இடம் கிடைக்கும். எப்படியாவது கோபாலு டிரைவர் ஆகி விட்டால் இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும். அதுவரை கஷ்டம் தான்.இது முனியம்மாவின் கனவு.

அந்தக் கட்டடத்தில் அவ்வப் போது ஏதாவது ஒரு கூட்டம் நடைபெறும். அப்பொழுது முனியம்மா ஏதாவது தின் பண்டம் செய்து விற்பாள். வியாபாரமும் நன்றாக ஓடும். அவளுடன் போட்டி போட புது புது தின்பண்டக் கடைகள் முளைக்கும். முதல் நாளே வாட்ச் மேன் சொல்லிவிடுவார். நாளைக்கு விழா நடக்கப் போகிறது  என்று. அன்றும் அப்படித்தான் கூற முனியம்மா சிறிது அதிகமாகவே மசால் வடை சுட்டு தன் மகனிடம் கொடுத்து அனுப்பினாள். வேலையை முடித்துவிட்டு அவளும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கலானாள். இலவசமாக வடை கிடைப்பதால் ஒரு நல்ல இடமாகவே முனியம்மாவிற்கு கொடுப்பார் வாட்ச் மேன்.

இன்னைக்கு யார் வருவாக என்று கேட்டாள் முனியம்மா. இன்னிக்கு பெரிய பெரிய ஆட்கள், மேலதிகாரிகள், பெரிய படிப்பு படிச்சவங்க, பேப்பர்லே போட வீடியோகாரங்க, யாரோ புத்சா ஒரு சினிமா நடிகை, இதற்காக போலிஸ் எல்லாம் வருது புள்ளே.  முனியம்மா தொடர்ந்தாள். காரணம் இன்னும் நிறைய நேரம் இருந்தது. …ஆமா என்னத்தை செய்வாகளாம்.. அட நீ ஒண்ணு..உனக்கு படிக்கத் தெரியாது, சொன்னாலும் புரியாது… சரி சொல்றேன்..கேட்டுக்க.. இப்போ விலைவாசி எல்லாம் ஒசந்துகிட்டே போகுது இல்லே, ஏழைகளெல்லாரும் கஸ்டப் படறாங்களாம்… அதற்கு இவக கூட்டம் போட்டு எப்படி இதே தீர்க்கலாம்னு ரோசனை செய்யப் போராங்களாம்…என்று சொல்லி விட்டு கேட் வாசலில் நிற்கச் சென்றார்.  ஏதோ நாட்டுலே நல்லது நடந்தா சரி என்று ஒதுங்கி நின்றாள் வேடிக்கைப் பார்க்க.

முதலில் ஒரு வேன் நுழைய.. அதில் மாலைகளும் தோரணங்களும் இறங்கின. அதைத் தொடர்ந்து ஆட்களும் இறங்கி வாசலை அலங்கரித்தனர். இவர்களுக்குப் பின் 5 நட்சத்திர ஹோட்டலிலிருந்து வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு பண்டங்கள் உள்ளே சென்றன. கூட்டமும் வர ஆரம்பித்தது. பெரிய கார்களில் செல்வ செழிப்பில் மிதக்கும் பல அதிகாரிகள், பெண்கள் அவர்களைத்தொடர்ந்து காவல் அதிகாரிகள், ரிப்போர்டர்கள்.. எல்லாரும் கட்டடத்தின் உள்ளே செல்ல.. ஒரு கார் வந்ததும் பொது மக்களின் கூச்சலுடன் ஒரு நடிகை இறங்கி உள்ளே சென்றாள். முனியம்மாவும் எம்பி பார்த்தாள்.  அவள் மனதில் இன்று பூரா வடையும் வித்துப் போகும் என்று. ஏன் என்றால், உள்ளே போனவர்கள் வெளியே வருவதற்குள் வந்த ஜனங்களுக்கு பசிக்குமே. ஜனங்கள் வடையை வாங்கிச் சாப்பிடுவாங்க….

வெளியில் வாலிபக்கூட்டத்தை போலிஸ் கட்டுக்குள் வைத்திருந்தது. இதைக் கண்ட முனியம்மாவிற்கு மனசுக்குள் காத்தாடி சுழல ஆரம்பித்தது. வந்த அத்தினி ஆளும் நல்லா படிச்சவங்களாக தெரியறாங்க, என்னை மாதிரி விவரம் கெட்டவங்க இல்லே.. அவுக ஏறி வந்த அத்தினி காரும், அவுக போட்டுக்கிட்டு இருக்கிற துணியும் ரொம்ப விலை உசந்ததாக இருக்கு,, ஆமா.. இத்தினி படிச்சவக மத்தியிலே இந்த சினிமா நடிகை எதுக்கு வந்தாங்களோ,,, சரி எல்லாம் முடிஞ்சபொறகு வாட்ச் மேன் அண்ணே சொல்வாரு அப்ப தெரியுஞ்சுக்கலாம்… இப்படி ஏதோ ஏதோ எண்ணங்களுடன் கால் கடுக்க நின்றிருந்தாள்.

வெளியில் வந்தக் கூட்டத்திற்கும் உள்ளே நடக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை, அவர்கள் வந்தது நடிகைக்காகத்தான். நேரம் ஓடி ஒரு வழியாக மூடியிருந்த கதவுகள் திறக்கப் பட்டன. உள்ளே ஏ.சி,யில் இருந்துவிட்டு வநதவுடனே வெய்யிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் முகத்தை சுருக்கி கொண்டு வந்தனர் அதிகாரிகள். சிலருக்கு நன்றாக சாப்பிட்டு உடனே நடக்க முடியவில்லை போலும். ஆடி ஆடி நடந்து வர, அவர்களின் கார் டிரைவர்கள் அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து காரின் கதவைத் திறந்து விட, எஜமானர்கள் ஏறிச் சென்றனர். பத்து நிமிடத்தில் கட்டடம் காலியானது, நடிகை வெளிவர கூட்டத்திலிருந்து விசில், சத்தம், வாழ்க வாழ்க எனும் சத்தம். எப்படி காருக்குள் ஏறிச் சென்றாள் என்பது ஒருவருக்குமே புரியவில்லை. அப்படி ஒரு மின்னல் வேகம். எல்லோரும் சென்ற பின்னர் உணவு எடுத்து வந்த ஹோட்டல் சிப்பந்தினர், அவர்களின் பாத்திரங்களுடன், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா நிறைய எச்சல் பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் நிறைந்த குப்பைகளை கேட்டின் வாசலில் கொட்டிவிட்டு அவர்களின் வேனில் பறந்தனர்.

அவ்வளவுதான் இதற்காகக் காத்திருந்தது போல் ஒரு கும்பல் அந்தக் குப்பையை நோக்கி ஓடியது. ஹோட்டல் ஆட்கள் மிஞ்சிய உணவையும் குப்பையுடன் கொட்டிவிட்டுச் சென்றது, இந்தக் கும்பலுக்கு அன்று தீபாவளிதான். எச்சல் உணவை எடுத்துச் சாப்பிட அங்கேயும் ஒரு கூச்சல், சண்டை. இதில் தினமும் குப்பைத் தொட்டையிலிருந்து பிளாஸ்டிக் பைகளை எடுக்கும் சிறுவர்கள், பெண்கள், பிச்சைக் காரர்கள் இவர்களுடன் தெரு நாய்களும் “எல்லா இனமும் ஓர் இனம்” என்றவாறு சாப்பிட்டனர். கூட்டத்தை விரட்ட வாட்ச் மேன் கம்புடன் ஓடினார். இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முனியம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

வறுமையை எப்படி ஒழிப்பது என்பதை பேசவந்தவர்களுக்குப் பசியின் கொடுமை என்ன என்பது எப்படித் தெரியும். அவர்களின் சொகுசு காரும், உடையும் பார்த்தால் பசியில் ஒரு வேளை கூட இவர்கள் இருந்து இருக்கமாட்டார்கள். சில மணி நேரத்திற்கு இத்தனை தீனியா. அதை ஒருவரும் சரியாக சாப்பிடாமல் எறிந்துவிட்டு போய் இருக்கிறார்கள்.

முனியம்மாவிற்கு மனது கொதித்தது. அரிசி விக்கிற விலையில் இப்படியா சோத்தைக் கொட்டுவாக… சாப்பிடாட்டியும் பரவாயில்லை.. இந்த பாவி ஹோட்டல் ஆளுக இந்த ஏழை சனங்களுக்கு கையிலே கொடுத்துருக்கலாம்மிலே….  இருட்டில் காலி ஐஸ்கீரீம் டப்பாவிலிருந்து கையைவிட்டு ஒரு சிறுமி துழாவி நக்கிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட முனியம்மாவின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது…நெசமாகவே முனியம்மாவிற்கு இந்த மீட்டிங்க் போட்டவர்கள் எப்படி ஏழையின் பசியைத் தீர்ப்பார்கள் என்று புரியவில்லை!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க