மாற்றம் ஏற்படவேண்டும்!

எம்.ஜெயராமசர்மா

திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது. பைபிளும் வந்தது. பகவத்கீதையும் வந்தது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை ஆன்மீகத் தலைவர்களும், அறிஞர்களும் — மனித குலம், மண்ணில் நல்லவண்ணம் வாழ, எண்ணில்லாதவற்றை எல்லாம் – பாட்டாகவும், பயனாகவும் சொன்னார்கள். சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியபடி இருக்க — மற்றவர்களோ மனம்போனபோக்கிலே தாம் விரும்பியபடியே போய்க்கொண்டு இருப்பதையே இப்போது காணமுடிகின்றது.

மனித வாழ்வில் மாற்றம் அதாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் எல்லாம் வந்தார்கள்.அறிவுரைகளை எல்லாம் தந்தார்கள்.அவர்கள் எண்ணிய மாற்றம் ஏற்பட்டதா என்றால் அது – கேள்விக்குறியாகவே இன்று அமைந்து விட்டது எனலாம்.

சமயம் என்றால் என்ன? மனிதனை புனிதனாக்குவது சமயம் என்றும், ஒழுக்க நெறியுடன் வாழப் பழக்குவது சமயம் என்றும், சமத்துவ மனப்பங்கை வளர்ப்பது சமயம் என்றும்,இறை உணர்வோடு அன்புமயமாக வாழவைப்பது சமயம் என்றும், சமயத்துக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால் சமயம் என்பது தன்னிலை இழந்து நிற்பதையே எங்கும் காணமுடிகிறது. சமயத்தை ” மதம் ” என்றும் அழைத்தனர். அதாவது மனிதனிடம் நான் என்னும் ஆணவமதம் பிடிக்காது அவனை நல்வழிப்படுத்தும் காரணத்தால் தான் மதம் என்று பெயரிட்டு அழைத்தனர். இந்தச் சொல் மிகப் பொருத்தமாக அமைந்து விட்டதென்றே சொல்லலாம்.ஆனால் அதனை எடுத்துக் கொண்டவர்களோ அர்த்தம் புரியாது, தமக்கேற்றபடி மாற்றிக்கொண்டு மதவெறியர்களாகவே மாறிநிற்பதைக் காண்கிறோம்.

இந்த மதவெறியால் எத்தனை கலவரங்கள் ? எத்தனை உயிர்கள் மடிந்தன? எவ்வளவு சொத்துக்கள் அழிந்தன? எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் இல்லாது போயின? சாந்தி, சமாதானம், அனைத்தும் செல்லாக் காசுகளாகி நிற்கின்றன்!

மதத்தின் பெயரால் நூறு ஆண்டுகள் உலகில் நடைபெற்ற சிலுவைப் போரை வரலாற்றிலிருந்து எடுத்துவிட முடியாது. எத்தனை கோரத்தனங்கள் அதனால் உலகில் ஏற்பட்டது என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளுவார்கள்.

இதன் பின்பும் மதவெறி அடங்கியதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது.உலகினெங்கோ ஒரு பகுதியில் இன்றும் மதத்தின் பெயரால் கோரங்கள் அரங்கேறிய படியேதான் இருக்கிறது.

மதத்தோடு சண்டை நின்ற பாடில்லை.மொழிக்காகவும் பல இடங்களில் பல சண்டைகள். இதனாலும் பல கோரங்கள்.

மதமும் ,மொழியும், கலவரங்களுக்கு வித்திட்டதென்ற வகையில்,  இனத்தாலும் பல கோரங்கள் நிகழ்ந்து விட்டன. இன்றும் நிகழ்ந்த வண்ணமே இருப்பதையும் காணமுடிகிறது.

இவற்றை உற்று நோக்கும் பொழுது — இனமும், மதமும், மொழியும், தேவையா? என்கின்ற வினா எழுகிறதல்லவா? இவை மூன்றும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் வாழவே முடியாதவன் ஆகிவிடுவானா? இவை கட்டாயம் மனித வாழ்வுக்குத் தேவைதானா?

சிக்கலானதும் சிந்திக்க வேண்டிய விடயமுமாக இருக்கிறதல்லவா? மதமும் பாதுகாக்கப் படவேண்டும். மொழியும் பாது காக்கப்பட வேண்டும். அதே வேளை இனமும் பாதுகாக்கப் படவேண்டும்.

என்ன ஆச்சரியமாகப் படுகிறதா?ஆம்! இம் மூன்றும் இல்லை என்றால் மனித இனம் இருந்தென்ன இல்லா விட்டால் என்ன? இவை இல்லையேல் மனித இனம் விலங்கினத்தோடுதான் சேரும் கட்டாயம் வந்துவிடும்.

புத்தர், ஜேசு, சங்கரர், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, இவர்களின் வருகையும், இவர்களின் உபதேச மொழிகளும் எங்கே? அவை என்னவாயின? நாம் அனைவரும் எம்முள்ளே கேட்க வேண்டிய கேள்வியாகும்!

புத்தரின் போதிமரத்தின் அடியிலேயே அவரின் கொள்கைகள் புதைக்கப்படுகிறது. ஜேசு போதித்த நெறி நீத்துப் போவதைப் பார்க்கின்றோம்.காந்தியின் அஹிம்சை படும்பாடோ சொல்ல முடியாத நிலை! ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், எம்மத்தியிலா வாழ்ந்தார்கள்? என்று எண்ணும் நிலைதான் காணப்படுகிறது.

கீதை , உபநிடதம், அதற்கான பல விளக்க உரைகள், வேதங்கள், மந்திரங்கள் , தத்துவ சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் இருக்கின்றனவா? என்ற சந்தேகமே ஏற்படுகிறது.அந்த அளவுக்கு விபரீதங்கள் நடப்பதை கண்கூடாக காண்கின்றோமல்லவா?

ஆண்டவநின் சன்னிதானமான கோவில்களிலே சண்டைகள். அறிவினை ஊட்டும் கல்விக்கூடங்களில் எல்லாம் அறிவினைப் புறந்தள்ளி விட்டு விட்டு பணத்தை பிடிங்கி விடும் நிலையங்கள் ஆகிவிட்ட கொடுமை. உயிர் காக்கும் என்று எண்ணி நிற்கும் வைத்திய நிலையங்களோ உயிர் பற்றிய கரிசனையை விட்டு விட்டு காசை எவ்வளவு கறக்கலாம் என்று நிற்பதையும் காண்கின்றோம். அரசியல் பற்றி நினைக்கவே அருவருக்கிறது. ஊழல்களின் உறைவிடமாகி விட்டது. எங்கும் கலப்படம். எதைப் பார்த்தாலும் பயப்பட வேண்டிய நிலை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெளியில் செல்லவே அஞ்சும் நிலை. நாட்டில் இருகிறோமா? அல்லது அடர்ந்த காட்டில் கொடிய விலங்குகளின் மத்தியில் இருக்கிறோமா என்று எண்ணும் பயங்கரம்!

இவை தேவைதானா? இதற்காகவா எமது முன்னோர் பலர் பல தியாகங்களைச் செய்தார்கள்? இதற்காகவா எமது வழிகாட்டிகளான் பெரியவர்கள் பல் அறிவுரைகளை விட்டுச்சென்றார்கள்?

” கற்றதனால் ஆய பயன்தான் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டாமா?

குறளும், குரானும், பைபிளும் . பகவத்கீதையும் சொல்லியதை விட வேறு எதுவுமே எதையும் சொல்லிவிட முடியாது.

அவற்றை எல்லாம் நாம் வைத்திருந்தும் — எம்மிடத்து நல்ல மாற்றம் ஏற்படாது இருப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் அனைவரும் கட்டாயம் உணரவேண்டும்.

எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நல்லவற்றை  மனத்திருத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

அற்புதமான அமிர்தம் போன்ற இந்தப் பொக்கிஷங்களை நல்ல முறையில் பயன் படுத்தினால் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்வும் வளம் பெறுவதோடு மண்ணில் நல்ல வண்ணமும் வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published.