Category: Featured

Featured

  • சுதந்திர மகளிர் தினம்..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    unnamed

    மகளிர் தினம் …! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் தான் என்ன? மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது என்று சொல்லிக்கொள்கிறோம். இத்தனை வருடங்களாகியும் மாறாத சூழல் இனி வரும் காலங்களில் மாறிவிடுமா?

    சர்வதேச அளவில் கூட  இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் பூரண சுதந்திரம் மகளிருக்கு கிடைத்து விட்டதா என்பது கேள்விக் குறி தான். இது போன்ற எண்ணங்களை நாம் பரவலாக கேட்க முடிகிறது.

    செய்தித் தாளைத் திறந்தால் கூடவே நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , 2 பெண்கள் கொலை, 5 பெண்கள் வன்முறையால் மானபங்கம் என்று பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நீண்டு கொண்டே போகிறது. நாட்டில், ரோட்டில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், மருத்துவமனையில் என்று அதிகப்படியான பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த மிகவும் சிரமப் படவேண்டியிருப்பது தான் நிதர்சன உண்மை. நாளுக்கு நாள் பெரும்பாலான பெண்கள் மனதாலும், உடலாலும் கஷ்டப் படுகிறார்கள். இன்றைய பெண்களுக்கு பாதுகாப்பு என்பது  துளியும் இல்லை என்பது தான் கண்கூடு. இதற்காக இந்த மகளிர் தினம் என்ன செய்யப் போகிறது. அது என்ன ஒரு அமைப்பா..? ஒரு திருநாள். நித்தம் திருவிழா கொண்டாட நினைக்கும் ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தும். சமுதாயத்தில் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட எத்தனையோ பெண்கள் எதுவும் செய்ய இயலாமல் சமூக விலங்குகளால் கைகள், கால்கள், கழுத்து , வாய் என்று பூட்டப்பட்டு இறுகிய நிலையில் இருக்கிறார்களே….அவர்கள் மகளிர் இல்லையா?

    அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, அவர்கள் இந்த மாய மான் தோற்றத்தில் மயங்கி ‘மகளிர் கொடியை உயர்த்திப் பிடித்தால் தெரியும் ‘அவளை அடித்து உரலில் கட்டிப் போட்டு’ விடுவார்கள்.

    சமத்துவம் ஒங்க வேண்டும். சமுதாயச் சீர்கேடுகள் அழிக்கப் பட வேண்டும். ஆண்களைப் பெண்கள் வாழ விட வேண்டும். பெண்களை ஆண்கள் வாழ விட வேண்டும். இதற்கெல்லாம் சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படல் வேண்டும். திருமணச் சந்தையில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் ஒரே சமமான நிலையில் பார்க்கப் பட வேண்டும். இது ஒரு சில இடங்களில் மாறி இருந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளிலும், சின்ன டவுன், மற்றும் பல ஊர்களிலும் பழைய சம்பிரதாயப் படி தான் உயர்வு, தாழ்வு என்னும் கண்ணோட்டத்தோடு நடத்தப் படுவது தவிர்க்கப் பட வேண்டும்.இதற்கும் நாட்டில்  சட்டம் வர வேண்டும்.

    கண்டிப்பாக வரதட்ஷணை முற்றிலுமாக அழிக்கப் பட வேண்டும்.

    பெண்கள் தங்கத்தைத் தவிர்த்திடல் வேண்டும். பல அபாயங்களில் இருந்து அது அவர்களைக் காப்பாற்றும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்.

    சமுதாயத்தில் உயர் தட்டு பெண்டிருக்கு மட்டுமே இந்த மகளிர் தினம் ரோஜாப்பூவாக இருக்கும். மீதமுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களும் கீழ்தட்டு பெண்களும் அதனருகில் இருக்கும் முட்களாகத் தான் இந்த தினத்தை விமரிசிக்கிறார்கள். மாற வேண்டும். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்றவர், தன் பாசமுள்ள மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அவள் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேரும் வரையில் வயிற்றில் புளி கரைத்து கொண்டு தான் உட்கார்ந்திருப்பார்.வெளியில் சென்ற மனைவியோ, மகளோ, பேத்தியோ, வீடு வந்து சேரும் வரை ரோட்டில் அவளுக்கு பாதுகாப்பு என்பது குறைவு என்ற நினைவு அவருள் ஓடிக் கொண்டு தானே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை தான் தொடர்கிறது.

    சமத்துவம் பேசுவதெல்லாம் இங்கே சும்மா.பெண்களின் அதிகப்படியான சுதந்திரத்தை நிர்ணயம் செய்வது அவள் சம்பாதிக்கும் அதிகமான பணம் மட்டும் தான் காரணம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். இருதலைக் கொள்ளி  எறும்பின் நிலை தான் என்றும் பெண்டிரின் நிலை. தான் பிறந்த வீடும் தனக்கு சொந்தமில்லை. தான் புகுந்த வீடும் அவளுக்கு சொந்தமில்லை…என்று எப்போதும் மனதுக்குள் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அவளது வாழ்வு ஆரம்பிக்கப் படுகிறது.

    எத்தனையோ பேர்கள் உடனிருந்து  மிகவும் கஷ்டப்பட்டு பெண்ணுக்கு அளிக்கப்படும் கொடுமையிலும் கொடுமையான ‘சதி’யை  நீக்கினார்கள். பெண் கல்விக்கு கைகொடுத்தனர். முன்னேற்றப் பாதை வகுத்து காண்பித்தனர். பெண்களுக்கு வழி விட்ட நல்லவர் அனைவருக்கும்  இந்த நாளில் நன்றி சொல்லலாம். இன்னும் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது .

    மகளிர் சுதந்திரம் எனும் பெயரில் பெண்கள் செய்யும்  முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய பெரிய நகரங்களில் அவர்களின் அதி மிகுதியான சுதந்திரப் போக்கால் ஏற்படும் குடும்ப இழப்புகள் நீதிமன்றங்களில் கோப்புக் குவியல்கள் சொல்லும்.

    இந்த உலகில் இருப்பது இரண்டு வர்க்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்று வாழும் போது ‘அன்பாக’ அச்சாணி இருந்தால் போதும்.

    அந்த பரஸ்பர நம்பிக்கையை ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.இதை உணர்ந்து உணரச் செய்யுங்கள்.

    மகளிர் தினத்தில் முக்கியமாக  இன்றைய , இளைஞர்  சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதை மாறிப் போகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியல் நியதிகளை கற்றுத் தருவது நமது கடமையும் பொறுப்பும்.நாளைய இந்தியா சிறப்புற இன்றே இவர்களைக் காக்க வேண்டும்.விஞ்ஞானி அப்துல் கலாம் அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்வித்து நல்ல விஷயங்களை மூளைச் சலவை செய்த வண்ணம் இருந்தாலும் தவறில்லை. ஆரோக்கியமான இந்தியா இளைய சமுதாயத்தினரிடமிருந்து  உருவாக இன்றைய மகளிர் ஒவ்வொருவரும் ஆவன செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து மதுவும், புகையும் அடியோடு ஒழிக்க மகளிர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் ஒன்று திரள வேண்டும். அது ஒன்று இல்லாவிட்டால் போதும், எத்தனையோ குடும்பங்கள் புத்துணர்வு பெற்று சுவாசிக்கும்.

    நாளைய இந்தியா, கிராமப் பகுதிகளில் கூட பெண்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.

    சொல்வது போல சமூகத்தில் பல வகையான மனிதர்களை நான்கு பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

    தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு இருப்பவர்.

    தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் இருந்தால் போதும் என்று மகிழ்வில் திளைப்பவர்

    அடுத்தவர் மட்டும் மகிழ்வோடு இருந்தால் போதும் என்றும் நினைப்பவர்

    தானும் சரி, அடுத்தவரும் சரி….மகிழ்வாக இருப்பதையே பிடிக்காதவர். இந்த பிரச்சனை பார்ட்டி.

    இதற்குப்  பின்னால் கதை கூட உண்டு. இதில் நாலாவது வகை முழுதும் முதல் வகையாக மாறி “மகளிர் தினம்” “மானுட தினமாக” மாறி விடும். அதன் பின் யாருக்கும் ‘எந்தத் தினம்மும்” தேவையில்லை. தினம் தினம் ‘திருவிழா’ தானே.

    ‘அக்ஷய திருதியை’ எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.

    மகளிர் தினமும் அப்படி உள்ளே நுழைந்தது தான்.அப்படி நுழைந்த இந்த நாள் ஒட்டுமொத்த மகளிருக்கும்  என்றாவது

    சுதந்திர மனப்பாங்கைப் பரவலாகத்  தந்தால் அன்று  தான் ‘மகளிர் தினம்’.அதுவரை அவளது முகத்திரை தான் அவளுக்கு  முத்திரை.

    Share
  • கண்ணாடிக் கூரை

    ஞா. க​லையரசி

    கண்ணாடிக் கூரை  (GLASS CEILING)

    மகளிர் தினம் நெருங்கும் இந்நாளில், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அடிக்கடிக் கண்ணில் படும் சொற்கள் இவை.

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப்  மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    பெரிய வணிக நிறுவனங்களில் நடுத்தர பதவிகளை வகிக்கும் பெண்கள், எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனை படைத்தவர்களாக இருந்தாலும், ஆண்களுக்கிணையாக மிக உயர்ந்த பதவிகளை எட்ட முடியாமல் தடுக்கும் இந்தக் கூரையை அண்மைக்காலத்தில், பெண்கள் பலர் தகர்த்தெறிந்து சாதனை படைத்து வருகின்றனர்.

    குறிப்பாக நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் தங்களுடன் போட்டியிட்ட ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி, மிக உயர்ந்த பதவிகளைப் பெண்கள் எட்டிப் பிடித்திருக்கின்றனர்.

    ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்துக்கேற்ப வரவு செலவு பண்ணி, பட்ஜெட்டில் துண்டு விழாமல், எத்தகைய நெருக்கடியான சூழலிலும் குடும்பக் கப்பலை வெற்றிகரமாக செலுத்தும் நிதியமைச்சர் குடும்பத்தலைவி தானே?   எனவே நிதி நெருக்கடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுக்கும் திறன்,இவர்கள் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.  மேலும் சிறப்பாகத் திட்டமிட்டுப் பணத்தைச் சேமித்து முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே திறமைசாலிகள் என்பதால் தான்,

    “சேர்த்த பணத்தைச் சிக்கனமா

    செலவு பண்ண பக்குவமா

    அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக் கண்ணு

    அவங்க ஆறுநூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு”

    என்று அன்றே பட்டுக்கோட்டையார் பாடினார்.

    நாடு முழுதும் 15000 கிளைகளைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மனாக, அண்மையில்  பதவியேற்றிருப்பவர் திருமதி அருந்ததி பட்டார்ச்சார்யா.  207 ஆண்டு வரலாறு கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் இவர் தாம்.

    நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி),  சந்தா கோச்சார் (ஐ.சி.ஐ.சி.ஐ),  ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது.

    தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும், பெண்கள் உயர்ந்த பதவிகளை எட்டி வருவதால், இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத் துவங்கியுள்ளது. சாதனை பெண்டிரின் சீரிய முயற்சியால், இது முழுவதுமாக நொறுங்கி விழும் நாள், வெகு தூரத்திலில்லை.

    Share
  • பெண்ணியத்தை ஆண்கள் ஹைஜாக் செய்தது எப்படி?

    செல்வன்

    மேலைநாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவால் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

    20ம் நூற்றாண்டில் பின்நவீனத்துவம், மார்க்சிசம் முதலானவை பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தன. விவாகரத்து பெரும் பாவம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் தவறு என்ற கன்சர்வேடிவ் சிந்தனைகள் 60களில் குறையத் துவங்கின. திருமணம் செய்யாமல் கூடிவாழ்ந்து குழந்தை பெறத் துவங்கினார்கள். பணியிடங்களில் ஆணுக்குச் சமமாக பெண்கள் பணிக்கு வந்தார்கள். ஆண் செய்யும் எந்த பணியையும் பெண்ணும் செய்யலாம் எனும் நிலை உருவானது. பிடிக்காத உறவுகள் விலக்கப்பட்டன. விவாகரத்துகள் பெருகின.

    ஆனால் அதே சமயம் விசித்திரமான ஒரு நிகழ்வும் நிகழ்ந்தது… வருடா வருடம் ஆண்/பெண் மகிழ்ச்சி விகிதத்தை அளந்து கொண்டுவரும் ஆய்வாளர்கள் 60களுக்குப் பின் பெண்களின் மகிழ்ச்சி வருடா, வருடம் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள். சுதந்திரமும், உரிமைகளும், கடமைகளும் பெருக மகிழ்ச்சி குறைந்தது. ஆண்களின் மகிழ்ச்சி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2009ம் ஆண்டுவரை இதே நிலைதான்

    இதுகுறித்து ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் பெட்சி ஸ்டீபன்சன் பாலியல் சுதந்திரம், விவாகரத்து, முதலானவை 70களில் துவங்கி பெண்களுக்கு கிடைத்த உரிமைகளாக கூறப்பட்டாலும் இந்த உரிமைகளின் நன்மைகள் அனைத்தும் ஆண்களுக்கேச் சென்று சேர்ந்ததாகக் கூறுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக அவர் கூறுவது பாலியல் சுதந்திரம். 60களுக்கு முன்பு கல்யாணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் உறவுகொன்டால் அவளை திருமணம் செய்தாக வேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் ஆணுக்கு இருந்தது. ஷாட்கன் வெட்டிங்க்ஸ் எனப்படும் துப்பாக்கிமுனை கல்யாணங்கள் அப்போது இதனால் நிகழ்ந்தன. ஆனால் பாலியல் சுதந்திரம் என்றானபின் அத்தகைய சமூக நிர்ப்பந்தங்கள் குறைந்துவிட்டன. ஆக இதன் முழுபலனும் ஆண்களுக்கே சேர்ந்தது என்கிறார் பெட்ஸி

    பாலியல் சுதந்திரம், அதிகரிக்கும் மணவிலக்குகள், பணிக்குச் செல்லும் சமூக நிர்ப்பந்தம், இவையே பெண்களின் மகிழ்ச்சி குறையக் காரணம் என பெட்சி ஸ்டிவன்சனின் ஆய்வு தெளிவாகக் கூறுகிறது. முன்பு பணிக்குப் போகாத ஆணுக்கு கல்யாணம் ஆகாது. பெண்கள் வேலைக்கு போகாததைப் பற்றி யாரும் அலட்டிகொண்டது இல்லை. ஆனால் இன்று வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது எனும் நிலைதான். பெண்களும் வேலைக்குப் போகவேன்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் அதிகரித்து உள்ளது.

    பாலியல் சுதந்திரத்தின் ஒரு விளைவு அதிகரிக்கும் சிங்கிள் மதர்ஸ் எனப்படும் திருமணம் ஆகாதத் தாய்மார்கள். நம் நாட்டில் முன்பு விதவா விவாகம் மறுக்கப்பட்டதால் விதவைகள் அனுபவித்த துன்பங்களை விட அதிக துன்பங்களை இத்தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். மேலைநாடுகளில் மறுமணம் பிரச்சனை இல்லையெனினும் 20 வயதில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு மணம் ஆவது அத்தனை எளிது இல்லை. இவர்களில் பலரும் ஏனோ கடைசிவரை திருமணம் செய்யாமலேயே பாய்பிரண்டுகளை மட்டும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுகிறார்கள். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் சிங்கிள் மதர்களிடம் வளரும் ஆண்குழந்தைகள் அதிக அளவில் சிறைக்குச் செல்வதும், பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் கர்ப்பமாவதும் அதிக அளவில் என்பதுதான்.

    இது கட்டாயம் பெண்ணின் குற்றம் மட்டும் அல்ல. ஆணின் குற்றமும் தான். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்கத் தானே திருமணம் என்ற அமைப்பு உருவானது? அது உடைந்ததன் பாதிப்பு முழுக்க பெண்கள் மேல் அல்லவா விழுகிறது?

    கலாசாரம், கற்பு, திருமணம், குடும்பம் அனைத்தும் பெண்கள் நன்மைக்காக ஆண்களை கட்டுக்குள் வைக்க உருவாக்கபட்டவை. இவை ஒழிந்தால் அதன் முழுபலனும் ஆண்களுக்கே சென்று சேரும். ஆணை இமிடேட் செய்வது தான் பெண்ணியம் எனச் சொல்லும் இயக்கங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மேலை நாடுகளில் நிறைவேற்றப்பட்டன. துரதிருஷ்டவசமாக அதன் பலன்கள் முழுவதையும் ஆண்களே அடைகிறார்கள். பெண்கள் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டார்கள். கற்பு, திருமணம், கலாச்சாரம் அனைத்தும் ஆண்களை நெறிப்படுத்த இடப்பட்ட தளைகள். அவை அகற்றப்பட்டால் முழு நன்மையும் ஆண்களுக்கே.

    ஆணாதிக்க சமூகங்களில் நிலவிய இன்னொரு அவலம் சிசுக்கொலை. கள்ளிப்பால் ஊற்றி பெண்குழந்தைகள் கொல்லப்படுவதைப் படித்து வேதனைப்படுகிறோம். ஆனால் மேலை நாடுகளில் பல கோடி சிசுக்கள் பெண் உரிமை எனும் பெயரில் அபார்ட் செய்யப்படுகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்துமாத சிசுவை அபார்ஷன் செய்ய தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட இருந்ததை எதிர்த்து பெண்ணுரிமை இயக்கங்கள் கடுமையாகப் போராடின.

    பண்டைய சமூகங்களில் பலதாரமணம் எனும் அவலம் இருந்தது. இன்று கற்பு நெறி எனும் முறையே அழிந்ததால் ஆண்கள் பலரும் கள்ள உறவுகளில் மூழ்கித் திளைக்கிறார்கள். சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் அதிபர் கள்ள உறவு வைத்திருக்கும் செய்தி வெளியே வந்ததும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.. பத்திரிக்கைகள் அதைப் பெரிதாகக் கன்டுகொள்ளவில்லை.

    ஆக பண்டைய சமூக அவலங்கள் வேறு பெயர்களில், வேறு விதங்களில் பெண்களை இன்னும் பாதிக்கின்றன. இதற்கான தீர்வுகள் எளிமையானவை அல்ல என்பதுதான் இதன் சோகமே.

    Share
  • பாட(ல்) பெறாத தலைவிகள்

    ரஞ்சனி நாராயணன்

     

    ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

    மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.

    முதல் அறிமுகம் சாந்தி. நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் இவளும் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வந்தவள். எனது தோழியின் உறவு. தோழியின் தொடர்பு விட்டுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாந்தியுடன் ஆன எனது நட்பு இன்றும் தொடருகிறது – கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக. வியப்பாக இருக்கிறது, இல்லையா?

    எங்கள் நட்பு இத்தனை வருடங்கள் ஆனபின்னும் வலுவாக இருக்கக் காரணம் நிச்சயம் நானில்லை. இந்தப்பெருமை முழுக்க முழுக்க சாந்தியைத்தான் சேரும். முதலில் சாந்தியின் வீடு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. சாந்தி வேலை செய்த பள்ளிக்கூடமும் அருகில் அதனால் ஏறக்குறைய தினமுமே சாந்தி என் வீட்டிற்கு வருவாள். என் குழந்தைகளுக்காக செய்யும் சிற்றுண்டியை சாந்திக்கும் கொடுத்து இருவருமாக காப்பி சாப்பிடுவோம். சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்திற்கு தாய்வீடு செல்லும்வரை மாலைவேளைகளில் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சில மாதங்களில் நாங்கள் வேறு வீட்டிற்கு மாறினோம். சாந்தியும் கணவரின் வேலை காரணமாக போபால் போய்விட  தொடர்பு விட்டுப் போயிற்று. வருடங்கள் கழிந்தன. ஒருநாள் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க – நட்பு தொடர்ந்தது.

    எனக்கு சாந்தியிடம் மிகவும் பிடித்த விஷயம் எதற்கும் துளிக்கூட அலுத்துக் கொள்ள மாட்டாள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போதெல்லாம் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாள். பல மாதங்கள், வருடங்கள் பார்க்கவில்லை என்றாலும் நேற்று பார்த்து பேசியதை இன்று தொடர்வது போல குற்றம் குறை கூறாமல் பேசுவாள். ஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை; ஃபோனாவது செய்யலாமே என்று கேட்கவே மாட்டாள்.

    வாழ்க்கை அவளை நிறையவே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசவே மாட்டாள். என்ன ஒரு அதிசயமான குணம்! குணக்கோளாறான கணவர்; பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டு பக்கமும் எந்தவித ஆதரவும் கிடையாது. சின்னசின்ன பள்ளிகளில் வேலை; கொடுக்கும் சம்பளத்திற்கு மேல் பிழிந்து எடுக்கும் வேலை. ஆனால் இவற்றைப்பற்றி பேசவே மாட்டாள். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனது தோழி சொல்வாள் கதை கதையாக. ஒருவழியாக இப்போது ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் வேலை. பவித்ராவும் படித்து முடித்துவிட்டாள். இனியாவது அவளது வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது தினசரிப் பிரார்த்தனை.

    இரண்டாவது அறிமுகம் நிர்மலா. ஒருமுறை நானும் என் கணவரும் வெளியே போய்விட்டு திரும்பும்போது மழை கொட்டு கொட்டென்று கொட்ட, நாங்கள் அடைக்கலம் புகுந்தது நிர்மலாவின் கடையில். நாங்கள் இருவரும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் கூப்பிட்டு, தலை துடைக்க துண்டு கொடுத்து சுடச்சுட பாதாம் பால் கொடுத்தாள். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. நிர்மலாவும் தமிழ் நாட்டில் பிறந்தவள். திருமணம் ஆகி பெங்களூருக்கு வந்தவள். ஊறுகாய், அப்பளம் விற்கும் கடையை நடத்தி வந்தார்கள் கணவனும் மனைவியும். அத்துடன் பால் விநியோகம். கூடவே காப்பி, டீ, பாதாமி பால் தயாரித்துக் கொடுப்பார்கள். ‘காதலொருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து’ என்ற பாரதியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டியவள் நிர்மலா. விடியற்காலையில் வரும் பால் வண்டியிலிருந்து பால் பொட்டலங்களை எண்ணி வாங்கி இறக்குவதிலிருந்து, மணிக்கணக்கில் கடையில் நின்று கொண்டு வியாபாரத்தை மேற்பார்வையிடுவதும், காப்பி, டீ, பாதம் பால் போன்றவற்றை தானே தயாரிப்பதும் ஆக அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவள். எப்போது போனாலும் சிரித்த முகத்துடன், கடும் உழைப்பின் அயர்ச்சி முகத்தில் தெரியவே தெரியாமல் வரவேற்கும் பக்குவம் எப்படி வந்தது இந்தப் பெண்ணிடம் என்று நான் வியப்பேன். இவளும் தனது குடும்பக் கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்லவே மாட்டாள். இன்று இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து சொந்த வீடும் வாங்கி தனது நிலைமையை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டாள் நிர்மலா.

    மூன்றாவதாக எனது மாணவி வெங்கட்லக்ஷ்மி. அருமையான பெண். எனது வகுப்பில் சேர்ந்தபோது திருமணம் ஆகியிருக்கவில்லை. முதல் நாள் வகுப்பில் மாணவர்களை ‘அவர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ பற்றிப் பேசச் சொன்னேன். லக்ஷ்மி சொன்னாள்: ‘நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. இந்த மாதம் எல்லோருக்கும் சம்பள உயர்வு கொடுத்திருந்தார்கள். எனக்குத் தெரியும் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது என்று. எல்லோருடைய சம்பள உயர்வையும் அறிவித்த எனது நிறுவன முதலாளி எனக்கு நாலாயிரம் ரூபாய் உயர்வு என்று சொன்னாவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன்னுடைய திறமைக்கு நான் கொடுக்கும் பரிசு இது’ என்றார் அவர். இதுதான் மேடம் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ என்றாள். அலுவலக வேலையில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் அவள் திறமையானவள் என்பதற்கு இன்னொரு சம்பவம்:

    லக்ஷ்மி சேர்ந்திருந்த எனது வகுப்பு முடிவடையும் நாள். (வகுப்பு என்று நான் சொல்வது 24 நாட்கள் கொண்டது) கடைசி நாளன்று எங்கேயாவது போகலாம் என்று மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் போய்விட்டு இரவுக்குள் திரும்பிவிட வேண்டும். பலரும் பல யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி வந்தவுடன் எல்லோரும் அவளிடத்தில் யோசனை கேட்டனர். அவள் சொன்னாள்: ‘சிவன சமுத்திரம் போகலாம். மழை பெய்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். சிற்றுண்டி, மதியம் உணவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? போவதற்கு வண்டி? எத்தனை பேர் போகிறோம்? ஒவ்வொருவரும் எத்தனை பணம் கொடுக்க வேண்டும்?’ கிடுகிடுவென்று திட்டம் போட்டு, தொலைபேச வேண்டியவர்களுக்கு பேசி, வண்டி, சிற்றுண்டி, மதிய உணவு, நீர் என்று எல்லா ஏற்பாடுகளும் விரல் சொடுக்கும் வினாடியில் செய்து முடித்தாள். சின்ன பெண் என்ன ஒரு சாமர்த்தியத்துடன்  நிலைமையை கையாளுகிறாள்!

    லக்ஷ்மியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திருப்பவர்கள். தனது தங்கைகளையும் தன்னுடன் பெங்களூருக்குக் கூட்டி வந்து அவர்களைப் படிக்க வைத்தவள் லக்ஷ்மி. தனக்குத் திருமணம் ஆனவுடன் தங்கைகளுக்கும் திருமணம் செய்து சொந்தமாக வீடு கட்டி அலுவலகம், குடும்பம் இரண்டையும் சிறப்பாக நிர்வகித்து வரும் லக்ஷ்மி என்னை வியக்க வைத்ததை என்னவென்று சொல்ல?

    நான் சொன்ன இவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள். ஆனால் நான் இவர்களிடம் கற்றது ஏராளம். சாதிப்பதற்கு என்று எந்தக் களனும் வேண்டாம்; சொந்த வாழ்வில் வெற்றி பெறுவதுதான் நிஜமான சாதனை என்று நிரூபித்த பாட(ல்) பெறாத இந்த தலைவிகளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    Share
  • ” சார் ! சார் ! ஒரு கதை கேளுங்க சார் ! “

    கமலாதேவி அரவிந்தன்

    ” சின்னாங்கு இல்லேலா !
    அல்லாம்மா வேணாம்லா !
    பின் நவீனத்துவம்னா என்னாலா !
    சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா ! ”

    unnamed (2)” இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.”

    டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

    கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது.கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.

    ஸ்வேதா பெண்கள் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தித்துறையைச் சார்ந்தவள் .அதனாலேயே வாழ்க்கையில் பலரையும் சந்தித்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவங்களையெல்லாம் பன்முகப்பரிமாணத்தில் அசராமல் எல்லா இசங்களையும், உயிர்த்துவம் , வாழ்வியல் கூறு, எனப்பல நீட்சிகளில், நேர்காணல்களாகவும், சமயத்தில் கவிதைகள், அவ்வப்போது புனைப்பெயரில் பெண்கள் கட்டுரைகள், ஏன் அரசியல் பார்வையில் கூட சில கட்டுரைகள்கூட எழுதியிருக்கிறாள்.,

    இதனால் கண்டடைந்த வாசகர்களின் நிறைவை மறுப்பதற்கில்லை.ஆனால் அண்மைய காலமாக, பெண்களின் எழுத்து பற்றி பரவலாக வந்த சில கருத்துக்களை ஜீரணிக்கவே முடியவில்லை.

    அதற்குக்காரணம் சில அரைவேக்காடுகளின் தத்துப்பித்து விமர்சனமும், சுய அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டு சில கசடுகள் செய்த பம்மாத்து விமர்சனமும், நேற்று பெய்த மழையில் ஒண்டவந்த ஈசல்கள் கெட்ட கேட்டுக்கு, இவர்கள் வரவுக்குப்பின் தான் உலகமே இந்த மண்ணை திரும்பிப்பார்க்கிறது, என அஜால் குஜால் பேட்டி கொடுப்பதுமாய் , வந்த சில சேதிகளால் சுரணையுள்ள சிலர் கொதித்துப்போயினர். ஸ்வேதா பணிபுரியும் பத்திரிகை ஆசிரியரும் பெண்ணே என்பதால் அவருக்கும் சிலிர்த்துக்கொண்டு வந்தது.. புதுக்கவிதை எழுச்சியைக் கொடுத்தவரும், பின் நவீனத்துவ நாடகங்களால் உலக அரங்கில் பேசப்படவேண்டிய ,சாதனையாளருமான இலக்கியவாதி ,இருக்குமிடம் தெரியாமல் புத்தனாய் அமைதி காக்க ,இந்த அரைகுறைகளின் அலட்டலில் ஸ்வேதாவுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இன்னொரு முக்காத்துண்டு அலட்டல், பெண்எழுத்து என்றாலே முட்டை சம்பாலும் கோழிக்கறியும் தான், அதற்கும் அப்பால் இவர்களால் என்ன சிந்திக்கமுடியும்? என்று தன் பங்குக்கு அம்மண ஜோக் அடித்தது. தெளிவுறவே அறிந்திருந்தால் தானே தெளிவு தர மொழிந்திடமுடியும்?

    ஆனால் ஸ்வேதாவின் பத்திரிகை ஆசிரியர் , இந்த அரைவேக்காடுகளுக்கு பதிலடி கொடுக்கவாவது ஒரு கட்டுரையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியபோது, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்குமே அப்படியே மிளகாயை அரைத்துப் பூசினாற்போல் எரிந்துகொண்டு வந்தது.

    மூத்த பெண்ணிலக்கியவாதிகளின் நேர்காணலுக்கு ஸ்வேதாதான் கட்டுரையாளர் என்று முடிவானபோது, ஸ்வேதா ஒரு அட்சரம் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய குறுக்குவெட்டு என்பதை அவள் அப்போது அறியவில்லை. இலக்கியம் படைத்தல் பற்றி ஸ்வேதாவுக்கென ஒரு கோட்பாடு இருந்தது. புனைவிலக்கியம் படைத்தல் ஒன்றும் வியாழவட்டம் அல்ல. அது ஆத்மாவின் ராகம்.வன்தொடர் குற்றியலுகரத்துக்கும் மென்தொடர் குற்றியலுகரத்துக்குமான வேறுபாடுகூடத் தெரியாமல், முப்பத்தெட்டு இலக்கணப்பிழைகளோடு கதைகள் எழுதிவிட்டு, நாங்கள் மண்வாசனை பொழியப்பொழிய எழுதுகிறோமாக்கும், ‘என்று ஜிஞ்சிண்ணாக்கடி வசனம் பேசுபவர்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் லா, போட்டுப்பேசுவது மட்டுமே சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் என்று, விவஸ்தையே இல்லாமல்,கதையில் வரும் சொல் பிரபஞ்சத்துள் தேவையற்ற இடங்களிலெல்லாம்,” இல்லலா, என்னாலா, வா லா, போ லா, என்றெழுதி, மொழிவெளியையே அசிங்கப்படுத்தும் அனாமத்துக்களை மட்டும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை.இந்த கோரத்தைப்படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்லும்போது, வாங்க லா , ? என்று பேசவந்தவர்களைப் பார்த்து நேசமாக ஒரு வார்த்தை பேசத்தோன்றவில்லை. பாமரர்களின் பேச்சுவழக்கில் லா, உண்டுதான் , ஆனால் கற்றவர்கள் உரையாடும் சபையில் எங்குமே இந்த பம்மாத்து வசனம் கேட்டதில்லை.என்றாலும் கதையாடலின் கட்டுமானம் பற்றிய பிரக்ஞை போலும் தெரியாத மொழிச்சிதைவைக் கொடுக்கும்,கசடுகளின் சுய அட்சதையோ எழுதவே கூசுகிறது.

    யாகம் அல்லவா இலக்கியம் படைத்தல் என்பது.சமகால இலக்கியம் பற்றிய எந்த துணுக்குமே தெரியாவிட்டாலும் ,உள்ளீடின் உருவகமாவது வாசகனைச் சென்றடைய வேண்டாமா?

    வாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக்குறையாமல் , ஒரு துறவியின் ஸ்பரிசம்போல், பட்டும்படாமல் அமானுஷ்யமாய், வாசகனின் உள்ளுறைந்த உணர்வில் , குறைந்த பட்சம் ஈஷிக்கொள்ளவாவது முடியுமென்றால் ஒரு படைப்பாளி பின்னர் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. ஆழ்மன நுணுக்கங்களின் பிரத்யட்சங்களை சுவாரஸ்யமாகக் கூற அனுபவம் எனும் விளை நிலத்தின் துல்லியம் மட்டுமே போதாது, என்பதில் ஸ்வேதாவுக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.

    களப்பணி செய்தும், நேரில் சென்று சந்தித்தும் , போலியின் நிழல்ரேகை இருந்தால் கூட, அதை செம்மைப்படுத்தாமல் அவள் எழுத்து வந்ததில்லை. ஆனால் முழுமூச்சாய் இக்கட்டுரையில் இறங்கியபிறகுதான் மொட்டைப் பாலைவனத்தில் தவிக்கும் ஒட்டகமாய் தகவலுக்கு ஆலாய்ப்பறக்க வேண்டியிருந்தது. ஸ்வேதா இதை எதிர்பார்க்கவேயில்லை. குறிப்பிட்ட ஒருசிலரை மட்டுமே தொலைபேசியில் பிடிக்க முடிந்தது.மகிழ்ச்சியோடு பேசிய சிலர்,ஆய்ந்து ஓய்ந்து

    ” இலக்கியமா? ஹ்ம்ம், இன்னுமா எம்பேரை நினைவு வச்சுக்கிட்டு கூப்பிடறே ? என்று தூங்கி எழுந்தாற்போல் அலுத்துக்கொண்டவரும்,

    “ கதையா? அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு, நம்ப கதையே பெருங்கதையாயிருக்கு, இதிலே என்னா பேசச்சொல்றே ? “ என்று சலித்துக்கொண்டவர்களும்,

    ஆமாம், நான்தான் , இப்ப எதுக்கு அதெல்லாம் ?என்று பட்டென்று போனை வைத்தவர்களுமாக , ஸ்வேதாவுக்கு இவர்களை பேட்டி காண்பதே பெரிய சவாலாக இருந்தது.

    ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, பழைய செய்தியாசிரியராகவே வேலையைத் தொடரலாமா என்று கூடத்தோன்றிவிட்டது.

    ஆனால் அசரீரி கூட ததாஸ்து சொல்லவில்லை. கர்மவினை யாரைவிட்டது? குபுக்கென்று உடம்பு குலுக்கிப்போட்டது. ஏதோ பெரும்பாறை மேல் ஏறி இறங்கினாற்போல் வண்டி சட்டென்று நின்றுவிட்டது. ஸ்வேதாவுக்குக் கவலையாக இருந்தது.சாலையெல்லாம் குண்டும் குழியுமாக,
    இடுங்கி நசுங்கிக் கிடக்கும் ஒரு குற்றுயிராய் தெரிந்த தாமான் வீடுகளும், படுதா போட்ட படிக்கட்டுக்கடைகளுமாக,ஏனோ இந்த ஏரியா மட்டும், அந்த வட்டாரத்துக்கே திருஷ்டிப்பொட்டாய் தெரிந்தது.

    ”கையில் இருந்த முகவரியைப்பார்த்தால் இது தாமானும் அல்ல. கம்போங்கும் அல்ல “ என்றான் டேக்சியோட்டி. அப்படியானால் யாரிடம் தான் கேட்பது ? டேக்ஸி சுற்றிச் சுற்றி வந்தது.

    அட ! யாரோ ஒரு வயதான பெண்மணி , பார்த்தால் இந்திய மாதுபோல் –கைலியும் பாஜுவும் அணிந்து, வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த நீண்ட பெஞ்சில் ஏதோ வைத்து விற்றுக்கொண்டிருந்தார். துணிந்து கேட்டுவிட ஸ்வேதா அருகே செல்ல, முகவரியை வாங்கிப்பார்த்த அந்த பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார்.

    ” இந்த முகவரியில உங்களுக்கு யாரைப் பாக்கணும் ?

    ” சாந்த லெட்சுமி, கதையெல்லாம் கூட எழுதுவாங்களே ”

    ” என்ன சொல்றீங்க ? கொஞ்சம் சத்தமாச்சொல்றீங்களா? ” ,மீண்டும் சத்தமாய் முழங்கியபோதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க,

    தொண்டையின் முழுவீச்சையும் பிரயோகித்து, எம்பியகுரலில் ஸ்வேதா உரத்துக் கத்தினாள்.

    ” அட, என்றவாறே ட்ர்ஷ்ஷ் “ என்று வாய் திறந்து சிரித்தபோது இரண்டு பக்க பற்கள் இல்லை.தலைமுடி சுத்தமாய் நரைத்திருந்தது.

    ” நான் தான் சாந்த லெட்சுமி ! என்ன விஷயம் ! அட ! ? “

    கலர் கைலியும், மேலே இடுப்புவரை நீண்ட அரைக்கை பாஜுவும் அணிந்து தாட்டியாய், கனத்து , யாரோ செங்கோயான் பொம்பள , மாதிரி நின்ற இவரா சாந்தா லெட்சுமி ? நம்பவே முடியவில்லை,.

    35 ஆண்டுகட்கு முன்பு பூங்கொத்தைப்பிடித்துக்கொண்டு, பெரிய பெரிய பூக்களிட்ட ஒரு அழகான புடவையில் மலர்ந்து சிரித்த தோற்றத்தில் சாந்த லெட்சுமி அனுப்பிய புகைப்படம் இன்றும் ஸ்வேதாவின் ஆல்பத்தில் உண்டு. சாந்த லெட்சுமி மட்டுமல்ல. அன்று மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்த , 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்வேதாவுக்கு பேனாத்தோழிகளாக தொடர்பில் இருந்தார்கள். பின் திருமணமாகி அவரவர் வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் , என ஓடிக்கொண்டிருக்க கடிதத்தொடர்பு நீடிக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரிலும் சாந்த லெட்சுமி போன்ற சிலரே தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். சாந்தலெட்சுமியின் எழுத்து பற்றி,பேசவேண்டுமென்றால் இலக்கியத்தின் மூலை முடுக்கில் கூட வைக்கத் தகுதியில்லை, என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர்.அப்படியும் சாந்த லெட்சுமி எழுதுவதை நிறுத்தவில்லை.என் கடன் எழுதுவதே என்பது போல் அவர் கதைகள் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிக்கொண்டுதான் இருந்தன.

    நீ , நீங்க ?

    ” ஸ்வேதா !“

    ”அட, யாரு ? யாரு ? ஸ்வேதா ஓமணக்குட்டனா?? , என்னுடைய பேனாத்தோழி ஸ்வேதாவா !,?
    அப்படியே பாய்ந்துவந்து கட்டிக்கொண்ட சாந்த லெட்சுமியை நிதானத்துக்குக் கொண்டுவர சில நிமிஷங்கள் பிடித்தது

    ” ரெட்டைச்சடைபோட்டு, கருப்புகலர் காலர் வைத்த பனியனில் நீ அனுப்பின படம் இன்னும் கூட எங்கிட்டேஇருக்கு தெரியுமா, ஆமாம், என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கே , “

    விஷயத்தைக் கூறியதும் நாணிக்கண் புதைக்கவில்லையே தவிர அப்படி ஒரு வெட்கம். முகத்தில் பளிச்சிட்ட பிரகாசத்தை மறைக்கத்தெரியவில்லை சாந்த லெட்சுமிக்கு.

    ” பேட்டியா ?என்னையா ? இதுவரை யாருமே என்னை பேட்டி கண்டதேயில்லையே, நான், என்ன பேசப்போறேன் ?பரபரப்பில் குரல் நடுங்கியது

    மொதல்லே கோப்பி கலக்கறேன். ஒரு வா குடிச்சுக்கிட்டே பேசலாமே?

    வரக்கோப்பியை தனக்கு எடுத்துக்கொண்டு, பால் கலந்த காப்பியையும் , மேஜையில் விற்பனைக்கு வைத்திருந்த பலகாரங்களில் சிலதையும் ஒரு தட்டில் வைத்து நீட்டியபோது கைகளில் கறுப்பாய் தழும்பு கிடந்தது.எரிக்கும் இந்த வெயிலில் கொதிக்கும் இந்த காப்பியை எப்படிக்குடிப்பது ?

    அதற்குள் காதில் பொருத்த வேண்டிய கருவியை சாந்த லெட்சுமியின் மகள் வந்து காதில் மாட்டிவிட்டாள். பிறகு கத்திப்பேச வேண்டியிருக்கலை.

    ” என்னா பாக்கறே, ஒடம்பு ரொம்ப வெயிட் போட்டுடுச்சி,.டைபட்டிக் வேற, சதா மனஉளைச்சல் வேற, அதனால்தான் சாப்பாட்டுல கொஞ்சம் கட்டுப்பாடு, ஒரு வரக்கோப்பி நாலு தாவா பிஸ்கட் போதும், முக்கா நாள ஓட்டிடுவேன். என்னா சொல்லச் சொல்றே ?

    கல்யாணம் ஆவும்போதே 34 வயசாயிடுச்சி, ! ஆர்மியில இருக்கற அவர் என்னுடைய வாசகனா கடிதம் போடும்போது சந்தோஷமாத்தான் இருந்திச்சு. பிறகுதான் எங்களுக்குள்ளே காதல் கனிஞ்சது.கல்யாணமாகி மூத்த பையன் பொறக்கற வரைக்கும் பெரிசா பிரச்சினையொண்ணும் இல்லே.அடுத்தடுத்து மூணு பிள்ளைகள் பொறந்தப்புறம் அவரோட குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகமாயிடிச்சு. எப்படியும் அவரால குடிய நிறுத்த முடியல, எல்லாம் பொருளாதாரப் பிரச்சினைதான், வேறென்ன? ஆர்மியிலெருந்து வெளியானப்புறம் எங்கேயுமே சரியான வேலை கிடைக்கலை, ஒரு இடத்தில புல்லு வெட்டற வேலைதான் கிடைச்சது,ஆனா அதுவும் நிலக்கலை.

    அந்த கோவத்திலேயே சதா அடி, சண்ட, ஒரு கட்டத்தில மப்பு தலைக்கேறி,கீழே கிடந்த அல்லூர் சுத்தப்படுத்தற இரும்புக்கழியாலயே போட்டு சாத்திட்டாரு,. மூணு நாளைக்கப்புறம்தான் எனக்கு காது கேக்காமப்போனதே தெரிஞ்சுது.டாக்டர் கிட்டெயெல்லாம் போவலை, விஷயம் தெரிஞ்சதும் என்கையைப் பிடிச்சுக்கிட்டு அப்படி அழுதாரு.

    பிறகு கொஞ்சம் நாள் ஒழுங்காதான் இருந்தாரு. திரும்பவும் ஒரு நாள் குடிச்சுட்டு வந்தப்போ மாதவிடாய் நேரம் பாரு. அசந்து தூங்கிட்டேன். பசியோட வந்தவருக்கு கண்ணு மண்ணு தெரியல,! அவருக்கு குளிக்க வெந்நீர் போட்டிருந்த அடுப்பிலிருந்து ,அப்படியே எரியற கொள்ளிக்கட்டையாலே சூடு போட்டுட்டாரு , போயேன், ! குப்புறப்படுத்துக் கிடந்ததாலே பின்னாலயோட போச்சு. இல்லேன்னா மூஞ்சி, முகறையெல்லாம் வெந்து போயிருக்கும்.. அதுக்கப்புறம் தான்,
    காசுப்பிரச்சினையினாலதானே சண்டை வருதுண்னு நான் வேலைக்குப்போகத்தொடங்கினேன்.

    ஃபேக்டரியில” டாய்லெட் க்ளீனர்” வேலைதான் கிடைச்சது. அந்த கால ஆறாம்வகுப்பு தமிழ் படிச்ச எனக்கு வேறென்ன வேலை கிடைச்சுடும் ? ராத்திரி ஃபேக்டரியில கழிவறை துப்புரவுவேல, காலையில கொஞ்சம் தூங்கிட்டு , இப்படி ஏப்போஏப்போ, , கோரேங் பீசாங் ,னு எனக்குத்தெரிஞ்ச பலகாரங்களையும் செஞ்சு விக்கறேன்.செலவுக்கு பிரச்சினையில்ல. ஏதோ வாழ்க்கை ஓடுது,
    ஆனா இதையெல்லாம் பேட்டியில எழுதிடாதே, இனி இலக்கியம் பற்றி கேள்வி கேளு, நான் சொல்றேன். !

    விதிர்விதிர்த்துப் போயிருந்த ஸ்வேதாவால் பேசவே முடியவில்லை.அடிபட்டு, மொத்துப்பட்டு, ஃபேக்டரியில் இரவுவேலை செய்துகொண்டு, வீட்டுவேலை, அதோடு பலகாரம் செய்து விற்றல் என, குடும்பத்துக்காக ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் இவளுக்கு கதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது ?

    ” ஓ, ! அதுவா, நான் எழுத்தாளினி பாரு, என்னா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாலும் , மனசெல்லாம் ஏதாவது கற்பனையிலேயே தான் மூழ்கிக்கிடக்கும், ஏன் கேட்கறே ? பகலெல்லாம் நேரமே இருக்காதுங்கறது உண்மைதான். இரவு வேலைக்குப் போகும்போது, விடியற்காலை மூணுமணிக்கே வேலை முடிஞ்சுடும் பாரு, அப்புறமா , அங்கிருக்கற நீண்ட கல் பெஞ்சில குப்புறப்படுத்துக்கிட்டு , கொண்டுபோற நோட்டுப்புத்தகத்திலே எழுதுவேன். இடையிலே யாராவது டாய்லெட்டுக்குப் போறவங்க பாத்தாக்கூட சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க, ! பொழுதுவிடியற வரைக்கும் இப்படியே ஓய்வு கிடைக்கற நேரமெல்லாம் எழுதிக்கிட்டே தான் இருப்பேன் ?

    போனமாதம்கூட முத்தாரம் பத்திரிகையில என் சிறுகதை ஒண்ணு பிரசுரமாச்சே, படிச்சியா? யாரோ ஒரு வாசகர் கூட உற்சாகமாக ஒரு வார்த்தை பாராட்டியிருந்தார். அதுதானே ஸ்வேதா ஒரு படைப்பாளிக்கு பெரிய ஊக்கம் ? ”

    ”நிச்சயமா, !அப்படீன்னா, எதிர்வினையை எப்படி எதிர்கொள்ள முடிகிறது ??”

    ” நான் அதைப்பற்றியெல்லாம் ரொம்ப கண்டு கொள்றதில்லை ஸ்வேதா, குசினியில உள்ள கரித்துணி மாதிரியிருக்கே இவுங்க எழுத்து,, சமையல் கட்டுக்கு அப்பால் வெளியுலகை எப்பத்தான் இவுங்க அண்ணாந்து பார்ப்பாங்க, னு ? கூடஒரு குப்பைமேதாவி என்னைப்பற்றி எழுதனான்.படிச்சப்ப கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு ! ஆனால் இந்த இலக்கியம் கூட இல்லன்னா நான் இப்ப உயிரோடயே இருக்கமாட்டேன் தெரியுமா? ஏன் பொய் சொல்லணும் ? ஒருமுறை அப்படித்தான், குடிவெறியில , இந்த மூணு குழந்தைகளும் அவருக்குப்பொறக்கலைன்னு சொல்லிட்டாரு, எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்ட எனக்கு அதை மட்டும் தாங்க முடியலை.

    பொழுது எப்படா விடியும், இவரு வெளியே போனவுடனே போயி ராச்சூன் மருந்தை வாங்கிவந்து குடிச்சிடலாம்னு தான் காத்துக்கிட்டிருந்தேன், அவர் போனவுடனே அவசரம் அவசரமா வெளியே கடைக்குப்போறேன். உங்க கதை வந்திருக்கேம்மா, !ன்னு கடைக்காரர் சிரிக்கறாருன்னா பாரேன். பத்திரிகையை வாங்கிப்பார்த்தா, என்னோட சிறுகதை, –அய்யோ, என்ன சொல்ல, !

    ஸ்வேதா, அன்னைக்குத்தான் முடிவெடுத்தேன் ஸ்வேதா, ! இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, என்ன துன்பமே வந்தாலும் சரி, நான் என் உயிரை மட்டும் மாய்ச்சுக்கவே மாட்டேன், ஏன்னா நான் எழுத்தாளினி பாரு, பேனா புடிச்ச இந்த கையால நான் எழுதிக்கிட்டேதான் இருப்பேன், என்ன சொல்றே ? “

    விம்மிவெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க ஸ்வேதா மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அடிவயிற்றினின்று எழுந்த கேவலை தேம்பதேம்ப அடக்க வேண்டியிருந்தது.ஒரு வார்த்தை கணவர் கடுமையாகப்பேசினாலே ஒரு வாரத்துக்கு நினைத்து நினைத்து அழுபவளுக்கு, சாந்தலெட்சுமி கூறிய தகவல்கேட்டு ,விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது.

    -சூடு போடுவானா ? பிருஷ்டத்தில்லேயே தேய்த்துவிட்டானா ? இரும்புக்கழியால் அடித்து காதை செவிடாக்கிவிட்டானா?

    ஸ்வேதாவைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்தாள் சாந்தலெட்சுமி,

    ” பின் நவீனத்துவம், புதுமைப்புரட்சியாகவெல்லாம் எழுதணும்னு சொல்லிக்கறாங்க, ! ஆனா எனக்கு வாழ்க்கையே போராட்டமாயிருக்கு, ஒவ்வொரு நாளும் காலை நிம்மதியா விடிஞ்சாலே போதும்னு இருக்கு, இருந்தாலும் கற்றுக்கொள்ள ஆசையாத்தான் இருக்கு, யாராச்சும் , இந்த வட்டாரத்திலே, பின்நவீனத்துவம் பற்றி வகுப்பு எடுக்கறதா இருந்தா, உண்மையிலேயே கற்றுக்க ஆசையாதான் இருக்கேன் ஸ்வேதா, ! எங்கேயிருந்தாவது தொடங்கணும் தானே ? , !”

    அதற்குள் ”குவே “வாங்க மலாய்க்கார சிறுமிகள் சிலர் வந்தனர், இரண்டு பெண்மணிகள் கடனுக்கு வாங்கிப்போயினர். வந்தவர்களிடம் சிரித்த முகத்துடனேயே குவே, விற்றுக்கொண்டே சாந்த லெட்சுமி பேசினாள். அது நேர்காணல் மொழியாக இல்லாமல், சடக்கு மேலே வழிந்தோடும் கித்தாப்பால் மொழியாகத்தான் இருந்தது.

    தமிழ்கூறு நல்லுலகில் புதுமையும், போஸ்ட் மோடர்னிஸமும் கொடிகட்டிப் பறக்க, ஒட்டுப்பால் எழுத்தையும் நமக்கு யாராவது அறிமுகம் செய்ய வேண்டாமா? பேச்சிலும் கூட பனிப்புல்லின்மேல் முத்துப்போல் மின்னும் எந்த பளீரிடலும் இல்லை. சில இலக்கியசொகுசுகளுக்கே உரித்தான அலட்டல் நடிப்பும் , வெற்று பந்தாவும் கூட அறியாத அப்பாவியாகத்தான் பேசினாள். இரண்டுமணி நேரம் இடையறாத அருவியாய் பேசினாள்.ஒலிப்பதிவுசெய்வதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், அப்படியே அவளது மொழியிலேயே , ஆனால் பிழையில்லாத தமிழில் தான் பேசினாள்.
    சாந்த லெட்சுமியை பலகோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு , விடை பெறும்போது தயங்கிநின்றவளை அன்பு வழிய வழிய அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ஸ்வேதா.

    ” இந்த முத்துமாலை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு ஸ்வேதா, “ என்று கபடமின்றி சிரித்த சாந்த லெட்சுமியின் கழுத்தில் அப்படியே அந்த முத்துமாலையை, கழற்றிப்போட்டு, மீண்டும் ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டாள். நேர்காணலை அப்பொழுதே எழுதவேண்டும்போல் ஸ்வேதாவுக்கு பதறிக்கொண்டு வந்தது.

    கணினியை மடியில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யத் தொடங்கியபோது, பொலபொலத்துக் கொண்டு வந்தது. சாந்த லெட்சுமிக்கு பின்நவீனத்துவம் தெரியாதுதான், ஏன் சமகால இலக்கியம்பற்றிய பிரக்ஞை கூட இல்லைதான்.ஆனால் தான் கண்டதை, தன்னுடைய சிந்தனையை அகம் புறம் சார்ந்த எந்த நிலையிலும் சாயாமல் ,சுயம் மட்டுமே எழுத்தாய் வாழும் இவள் எழுத்தில் எந்த புதிய சிந்தனையும் கிட்டத்தில் கூட போகவில்லை.

    ஈவிரக்கமற்ற ஆணாதிக்க கொடுமையில் எந்த பிழையுமே காணாமல், ” என்ன இருந்தாலும் அவரு என் கணவர் தானே, இன்னைக்கும் நான் சாந்தலெட்சுமி ஏகாம்பரம் தானே, ”என இயல்பாய் ஏற்றுக்கொண்ட பாங்கே பழங்காலத்து பெண் தெய்வங்களின் நீட்சிதான், அதே பாணிதான் இவளது எழுத்திலும் கூட தொடர்கிறது, .யதார்த்த இலக்கியமோ, இயல்பியல் பார்வையோ, அதன் அரிச்சுவடி கூட இவள் அறிய மாட்டாள்.

    எந்த கலப்படமுமில்லாமல், கூடுமானவரை தன்னுடைய இயல்பிலேயே தான் எழுதுகிறாள்.?
    ஆனால் பின்நவீத்துவத்தின் அவதாரமே நாங்கள் தான் என்று கொஞ்சமும் லஜ்ஜையின்றி, பிறமொழி இலக்கியத்தின் தழுவல்களைத் திருடி தங்கள் பெயரைப் போட்டுக்கொண்டு திரியும், களவாடி ஜம்பங்களுக்கு முன்னால், சாந்த லெட்சுமியின் எழுத்து நிஜத்தின் தரிசனம். ஒருபக்க செவிப்பறையே கிழிந்து டமாரம் ஆன நிலையிலும், பிருஷ்டம் வெந்து பழுத்த நிலையிலும் கை, காலெல்லாம் சூடுபட்டு தழும்பேறிய உடல் கோலத்திலும் ,

    ” என்ன இருந்தாலும் அவரு என் கணவரு பாரு, என்ன செய்ய, வாழ்ந்துதானே ஆகணும்? , ”

    என வாழும் இவளுக்கு பின் நவீனத்துவம் எப்படித்தெரியும்? நிதர்சனத்தின் அச்சு அசலாய முகம் இவளது எழுத்து. நூற்றாண்டு மாறலாம்,மரபுகளும் கூட மரிக்கலாம்..ஆனால் பெண்ணின் இருப்பு அற்ற வாழ்க்கை எங்கேனும் சாத்தியமாகியிருக்கிறதா?

    சுயம் மட்டுமே வாழ்க்கையாய், எழுத்தாய் , இவ்வளவு துக்கத்திலும் உதட்டைக்கடித்து , அழுகையை விழுங்கிக்கொண்டு, ராஜபாட்டையே வந்து எதிரில் நின்றாலும் மண்டியிடாமல், கணவரை விட்டுக்கொடுக்காத, இந்த ஒற்றையடிப்பாதை நடையில் என்ன தவறிருக்கிறது.? துப்புரவு வேலை செய்தும் ,கழிவறைக்கு வெளியே படுத்துக்கொண்டு கிட்டும் சொல்ப நேரத்தில் கதை எழுதும் மாதரசி, நீ எந்த நூற்றாண்டுப்பெண் ?????????

    சாந்த லெட்சுமியை நினைக்க நினைக்க ஸ்வேதாவுக்கு நெஞ்சுடைந்து அழுகை வந்தது. தட்டச்சு செய்ய முடியாமல் மடிக்கணிணியை மூடியபோது, அட !

    அப்பொழுதுதான் ஸ்வேதாவுக்கு ஒரு அரிய விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.அவ்வளவு நேரமும் பேசிய பேச்சில் ஓரிடத்தில் கூட சாந்த லெட்சுமி , லா ‘ , போட்டுப் பேசவில்லை.

    [ முற்றும் ]

    Share
  • மகளிரைப் போற்றுதும்!

    இரா.தீத்தாரப்பன்

    மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர்.

    ” சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.”

    என்ற குறளில் தங்களைக் காத்துக் கொள்வதில் பெண்கள் தலையானவர்கள் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு குறளில்

    “ ஒழுக்கமாக இருந்து பெருமை பெறவேண்டுமென்றால் அதை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்”

    என்று ஆணைப்பார்த்துச் சொல்லுகிறார். அந்தக் குறள்

    ” ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”

    இதுவே! பின்னர் வந்த இளங்கோவடிகள் கண்ணகி வழக்குரைத்த அற்புதத்தை எடுத்துக்காட்டி அவளின் புகழை விண்ணுயரச் செய்தார். அவருக்குப் பின் வந்த கம்பரோ ,

    ” பெருந்தடங்கண் பிறைனுதலார்க் கெலாம்
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் “

    என்று சொல்லுவதிலிருந்து இயற்கையாகவே செல்வமும் கல்வியும் பெண்களிடத்தில் பூத்துக்கிடக்கின்றன என்பது தெளிவு.

    “மனைவி ஒருத்தியை அடிமைப் படுத்த வேண்டித்
    தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
    தாயைப்போல பிள்ளை என்று முன்னோர்
    வாக்குள தன்றோ? பெண்மை அடிமை யுற்றால்
    மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன்றாமோ?”

    என்று நம் மகாகவி பாரதியாரும் கொதிக்கிறார். ஹெலன் கெல்லர் என்ற வாய் பேசமுடியாத, காது கேட்காத, கண்ணால் பார்க்க முடியாத ஒரு பெண்மணி செய்த சாதனையை சமன் செய்த ஆண் உலகில் இல்லை என்பதே உண்மை.

    மகளிரைப் போற்றுவதும் மனிதத்தைப் போற்றுவதும் ஒன்றே!

    Share
  • பெண்ணின் ராஜாங்கம்!

    ஷைலஜா

    தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

    பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

    அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

    ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

    அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

    மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
    வாய் – சுவை மந்திரி
    கண்-காட்சி மந்திரி
    மூக்கு- நுகர்ச்சி மந்திரி
    செவி- கேள்வி மந்திரி

    அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

    அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ‘ சல்சல் ‘ என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

    இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.

    இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?

    கேளுங்கள் அதையும்…..

    நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

    அவள் வரும்போது ‘வருகிறாள்மகாராணி’ என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

    அப்போது “கண்ணே” எனும் குரல்கேட்கிறது.

    உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.

    இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சி மந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

    உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

    அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

    அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

    உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

    அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

    அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

    அப்படியே அவளைக் கட்டிக்கொள்கிறான், உதடுகளைப் பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !:)

    சுவைமந்திரியான வாய் அவர்கள் ‘அதன் சுவை அலாதி ‘எனப்பதிவு செய்கிறார்.

    அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

    உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப் பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.

    நாணத்தை உடைக்கிறது படை.

    பிறகு,,பிறகு…இனிய இரவுதான் விடியும்வரை..

    இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

    இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

    யார் அந்தப்புலவர்?

    அவர்தான் புகழேந்தி!

    யார் அந்த மகாராணி?

    நளனின் மனைவி தமயந்தி!

    ‘இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்

    நாற்குணமும் நாற்படையா
    ஐம்புலனும் நல்லமைச்சா
    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
    வேற்படையும் வாளுமே கண்ணா
    வதன மதிக்குடைக்கீழ்
    ஆளுமே பெண்மை அரசு!’

    Share
  • அத்தத்தா… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி)

    முனைவர். ப. பானுமதி

    வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வார்த்தைகளாக்கி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது சர்வ சாதாரனமாகி விட்டது.

    “அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது”

    சங்கத் தாயின் சந்தோசச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை அத்தத்த்தா…. என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊற கொஞ்சு மொழி பேசுவதைக் கேட்டு மெய்சிலிர்ப்பாள். தேன் போலும் தித்திக்கும் தீஞ்சுவை வாய்ந்தது குழந்தைகளின் வாயூறும் மழலை மொழி. இப்படி கனிந்த மொழி பேசும் குழந்தைகள் வளர் பருவத்தில் பேசாமலோ அல்லது வன்மொழி பேசுபவர்களாகவோ ஆவது எதனால்?

    ஒருவருக்கு இசை பிடிக்கும். அவர் இசையைக் கேட்பதையும் இசையைப் பற்றி பேசுவதையுமே விரும்புவார். ஒருவருக்கு இலக்கியம் பிடிக்கும் என்றால் அதைத் தவிர வேறு விஷயம் பேசும் போது சிறிது நேரத்திற்கு மேல் அவரால் அதில் கவனம் செலுத்த முடியாது. சினிமாவை நேசிப்பவர்களுக்கு அதைத் தவிர வேறு பேசினால் பிடிக்காது. சிலருக்குச்  சமையல் பிடிக்கும். சிலருக்கு அழகுக் கலை பிடிக்கும். சிலருக்கு அரசியல் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு வகையாக இருக்கும்.

    athaகுழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு “விளையாட்டு” என்று கூறுகின்றன. “யாரைப் பிடிக்கும்?” என்று கேட்டால் “இமாம் அண்ணாச்சியை” என்கின்றன. காரணம் அவர் குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதால். ஒருவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. நிகழ்ச்சியில் விரும்பத் தகாதவை ஒன்றிரண்டு இருந்த போதும் அந்தக் குழந்தைகளுக்கு நிகராக, குழந்தை மனோபாவத்துடன் இறங்கும் நிலையே அவரது அந்த நிகழ்ச்சியின் வெற்றி எனலாம்.

    தங்கள் குழந்தையின் மழலைச் சொல்லை  ரசிக்காதவர்கள்தான் குழலையும் யாழையும் இனிமையானது என்பார்கள் என்று சற்று காரசாரமான கருத்தைப் பதிவு செய்வார் திருவள்ளுவர். குட்டிக் குழந்தைகளின் மொழி மழலை மொழியா. இல்லவே இல்லை. மனக் கவலையைப் போக்கும் மந்திர மொழி. இந்த மந்திர மொழியைக் கேட்டல் இனிது. ஆம்,

    “குழவி தளர்நடை காண்டல் இனிதே
    அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே”

    என்று இனியவற்றைப் பட்டியலிடும் இனியவை நாற்பது அமிழ்தினும் இனியதான மழலைச் சொல்லை உண்டு சுவைத்து நமக்கும் எடுத்துக் காட்டுகிறது.,.

    பெற்றவர் உற்றவர் மட்டுமல்ல மற்றவரும் குழந்தையின் இனிய சொற்களைக் கேட்கப் விரும்புவர்.

     “நாவொடு நவிலா நகைபடும் தீம்சொல்

    யாவரும் விழையும் பொலந்தொடிப் புதலவன்”

    என்று கூறும் அகநானூற்றுப் பாடலும், குழந்தைகளின் மழலைச் சொல் எவருக்கும் மயக்குறும் மந்திரமாவதை எடுத்துக் காட்டும்.

    படிப்பு படிப்பு என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்தில் இவ்வளவு இனிய மழலைச் சொல்லைக் கேட்டு ரசிக்க வேண்டிய குழந்தைகளிடம் பேசும் பலர் அக்குழந்தையை முதல் கேள்வியிலேயே முடக்கி விடுகின்றனர். குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் பெயரைக் கூடக் கேட்பதில்லை. குழந்தைகளைப் பார்த்தவுடன் பெரியவர்கள் பலரிடம் எழும் முதல் வினா, ‘என்ன படிக்கிற?’ என்பதுதான். ஏனென்றால் அக்குழந்தையின் பெயர் இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் எடுத்த எடுப்பிலேயே படிப்பைப் பற்றி ஆரம்பித்து விடுவார்கள். வேண்டா வெறுப்பாக அக்குழந்தை, தான் படிக்கும் வகுப்பைச் சொல்லும். அதோடு விடுவதில்லை சிலர். அடுத்த வினாவாக ‘நல்லா படிப்பியா?’ என்று கேட்டு விடுவர்.

    பெண்கள் இருவர் பேச ஆரம்பித்தாலே “உங்க பொண்ணு எப்படி படிக்கிறா? என் பெண் படிக்கவே மாட்டேங்கறா. ஹோம் ஒர்க்கெல்லாம் உங்க பொண்ணு அவளே முடிச்சிடறாளா? என் பொண்ணு நான் உக்காந்த்தாத்தான் முடிக்கிறாள்” என்று படிப்பில் தொடங்கி படிப்பிலேயே முடிகிறது.

    இது ஒரு புறம். ஆண் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், “எப்ப பார்த்தாலும் விளையாட்டு விளையாட்டு, படிக்க மட்டும் மாட்டேங்கறான். உங்க பையன் எப்படி? என்று ஒருவர்.

    “மாசத்துக்கு இரண்டு முறையாவது அவங்க மேடம் கூப்பிட்டு விட்டுடறாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை” இது மற்றொருவர்.

    இது போன்ற உரையாடலைத்தான் கேட்க முடிகிறது. குழந்தையைப் பற்றி பேச்சு எடுத்தாலே பெற்றோருக்கும் அந்தப் பேச்சின் ஆரம்பம் படிப்பாகத்தான் இருந்து தொலைகிறது.

    பசுவின் வலி பறவைக்குத் தெரியுமா? நன்றாகப் படிப்பாயா என்று வினா எழுப்பினால், அந்தக் குழந்தை என்ன செய்யும். நன்றாகப் படிக்க வில்லை என்றால் “நான் நன்றாகப் படிக்க மாட்டேன்” என்றா சொல்லும். நன்றாகப் படிப்பேன் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி அங்கே பொய் சொல்லும் சூழலுக்கு அக்குழந்தையைக் கடத்தி விடுகிறார்கள் இந்தப் பெரியவர்கள். நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தாலும்கூட எல்லா நேரத்திலும் படிப்பைப் பற்றிச் சிந்திக்க விரும்புவதில்லை அவை. உரையாடல் படிப்பில் தொடங்கினாலே குழந்தைகள் சுருங்கி விடும். அதற்கு மேல் அவை பேச விரும்புவதே இல்லை.

    குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் உலகத்திற்குப் பெரியவர்கள் செல்ல வேண்டும் எடுத்த எடுப்பிலேயே நீ என்ன படிக்கிற? எப்படி படிப்பே? எத்தனையாவது ரேங்க் என்றெல்லாம் கேட்கும் கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இப்படி வினாக்கள் தொடுக்கும்போது மிக மிக நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தால் ஒரு உற்சாகத்துடன் பதில் அளிக்கலாம். அவை கூட பள்ளியைத் தவிர பிற இடங்களில் படிப்பு, பாடம் இவற்றைப் பற்றி பேச விரும்புவதில்லை. அவ்வளவாகப் படிக்காத குழந்தைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவை இது போன்ற வினாக்களை அறவே விரும்புவதில்லை. ஒன்று குழந்தைகள் இப்படிப் பட்டவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து விடுகின்றன. இல்லாவிட்டால் குழந்தைகள் மனத்தில் மூண்டெழும் சினம் ‘சொல்ல முடியாது போ’ ‘உங்கள எனக்குப் பிடிக்கல.. நீ ஒன் வீட்டுக்குப் போ’ என்று கூற ஆரம்பித்து விடுகின்றன.  இது போன்ற வினாக்கள் எழுப்பிய கோபத்தின் உச்சம் சில சமயங்களில்  ‘போடா’, ‘போடி’, போன்ற சொற்களும் குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. அமுத மொழி பேசும் குழந்தைகளின் மலர் போன்ற மென்மையான வாயிலிருந்து நஞ்சு போன்ற கொடுஞ்சொற்கள் உமிழப் படுவதற்குப் பல நேரங்களில் பெரியவர்களே காரணமாகி விடுகின்றனர் என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.

    மழலையரிடம் பேசும்போது பேச்சு விளையாட்டில் தொடங்கலாம். உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும். உன் நண்பர்கள் யார்? யாரோட இந்த விளையாட்டு விளையாடுவ? என்று தொடங்கி விளையாட்டு, நட்பு பற்றியெல்லாம் பேசலாம். பின்பு உணவில் தொடர்ந்து, உனக்கு சாப்பிட எது பிடிக்கும்? ஐஸ் கிரீமா? நூடுல்ஸா தோசையா நூடுல்ஸ் எப்படி இருக்கும்? ஐஸ்கிரீம் எப்படி இருக்கும்? என்றெல்லாம் பேசலாம். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைப் பற்றி பேசும் போது ஒரு கல்லில் இரு மாங்காய். எல்லோரிடமும் அன்பாகப் பழகும் மனநிலையை உருவாக்கலாம். மற்றும் குழந்தைகளிடம் சுவைகளை, வடிவங்களை, நிறங்களைப் பிரித்தறியும் திறனையும் வளர்க்கலாம்.

    பழைய காலத்தில் குழந்தைகள் விளையாட்டில்,

    “பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்

    எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?

    ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம்

    எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?

    டிசம்பர் பூவைப் பறிக்கிறோம் டிசம்பர் பூவைப் பறிக்கிறோம்

    யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?

    கார்த்திகை பூவை விட்டுப் பறிக்கிறோம் கார்த்திகை பூவை விட்டுப் பறிக்கிறோம்”

    என்று ஒரே நேரத்தில் தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், பூக்கள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டனர்.

    இக்காலத்துக் குழந்தைகளின் உலகம் வேறுபட்டது, வியப்பானது, விந்தையானது.. அக்காலத்தை விட நூறு மடங்கு அறிவானதும் ஆக்கப் பூர்வமானதும் கூட. “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது” என்று வள்ளுவர் கூறுவது போல, அக்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்போது பன்மடங்கு அறிவுத்திறன் வளர்க்கும் விளையாட்டுகள் கணினியிலும், கைப்பேசியிலும் கூகுல், முகநூல்  நிறுவனத்தாரால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. ஏழை பணக்காரர் என்னும் வேறுபாடு இல்லாமல் குழந்தைகள் எல்லோரும் இவ்விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.

    குழந்தைகளோடு பேசப் போகும் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் அந்த விளையாட்டுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாமே. அவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளைப் பற்றி பேசினால் குழந்தைகள் அதிகம் ஈடுபாடோடு பேசுவர். ஆகவே குழந்தைகளோடு பழகும் பெரியவர்கள் குழந்தைகள் விரும்பும் இக்கால உணவு வகைகள், விளையாட்டு வகைகள் முதலிய அவர்களின் உலகையும் அறிந்திருத்தல் அவசியத் தேவையாகின்றது. அத்துடன் கோபமில்லாமல், கடினமான அதிகாரக் குரல் இல்லாமல், குழந்தை மொழியில் பேசும் மழலை மனத்தோடு அவர்களின் உலகத்திற்குள் நுழைதல் தேவையாக இருக்கிறது. வன்மொழி பேசாது நன்மொழி பேசும் குழந்தைகளை உருவாக்குவது பெற்றோர்களின் மற்றும் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் பெரியவர்களின் கடமை. பெரியவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சு மொழியும் கெஞ்சு மொழியும் பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…98

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் மனதிலிருப்பவற்றில் உறுத்துவதை பகிர்ந்து கொள்ளும் வேளையிது.

    இந்தப் பிரபஞ்சம் எதற்காக எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றியும் அதன் கூர்ப்பானது இயற்கையினால் ஆனது இதற்கும் எவருக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்பது பலவகையிலான விவாதங்கள் இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது.

    அதைப்பற்றிய அலசலுக்குரிய ஞானம் எனக்கில்லை அதைப்பற்ரி அலசுவது எனது நோக்கமுமல்ல .

    அப்புறம் எதற்கு இந்தப் பீடிகை எனும் உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது

    எது எப்படியாக இருப்பினும் இன்று நாம் வாழும் காலகட்டத்திலே எமது வாழ்க்கைக்கும் இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.

    தனிமனிதனாக இயங்கத் தொடங்கிய மனிதன் குழுக்களாகி சமுதாயமாகி விட்ட பின்பு அப்படியான பல சமுதாயங்களை இணைத்து எழுந்த நாட்டின் நலன்களை அத்துணை சமுதாயங்களின் சார்பிலும் நிர்வகிக்க வேண்டிய தேவையின் நிமித்தமே ஒரு நாட்டின் அரசியல் சூழல் உருவாகியது.

    அவ்வரசியல் சூழலில் தாம் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்காக அச்சமூகங்களின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தவர்கள் பலரின் கூட்டமைப்பே அரசாங்கம் என்று கோலோச்சுகிறது.

    அப்படிப்பட்ட சமூகங்களில் பல வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான வடிவங்களில் வியாபித்திருப்பதனாலும், அச்சமூகங்களிடையே உள்ளவர்களிடையே அந்தஸ்து வித்தியாசங்கள் காணப்படுவதாலும் அவற்றினால் உருவாகும் வேறுபாடுகளிடையே காணப்படும் ஒருமித்த காரணிகளை வளர்த்து அச்சமூகங்களை ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லுவதுமே இவ்வரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலையாய நோக்கமாக இருந்தது.

    அரசன் எனும் ஒரு தனிப்பட்ட தலைவன் தன்னிச்சையாக தனது விருப்பு,வெறுப்புகளை தனது கருத்துக்களை தனது குடிமக்கள் மீது திணிக்கும் முறையை மாற்றி மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நாட்டின் தலைவர்களை உருவாக்குவதே அரசியலமைப்புகளின் முக்கிய செயற்பாடாக இருந்தது.
    ஒரு நாட்டில் உள்ள பல சமூகங்களில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்கள் எதுவித அச்சமுமின்றி தமது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு (அது அடுத்தோருவரின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்காத வரையில்) வாழ்வதர்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அடிப்படை ஜனநாயகமாகிறது.

    ஆனால் இன்று 2014ம் ஆண்டு விஞ்ஞான வளர்ச்சியின் அது உச்ச காலத்தில், உலகமயமாக்கல் எனும் நிலைப்பாட்டின் அதியுயர் கட்டத்தில், நாடுகள் பொருளாதார சுபீட்சத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,

    இந்த ஜனநாயக அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?

    இக்கேள்விக்கு பதிலைத் தேடும் போது எமது மனம் சிறிது அச்சத்தினால் அதிருகிறது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி ஆடம்பரமான தேவைகளுக்காய் நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அன்று முக்கிய இடத்தை வகித்த சமுதாய, சமூக உணர்வுகள் எத்தகைய பங்கு வகிக்கின்றன எனும் கேள்விக்கு பதிலை என்னும் தேடிக் கொண்டே . . . . .

    உழைப்பு மனித வாழ்க்கையின் ஒரு உன்னதமான அங்கம். வாழ்க்கையில் தமது நிலையை உஅயர்த்திக் கொள்ள எண்ணி நீதியான, நியாயமான வகையில் உழைத்து முன்னேற எடுத்துக் கொள்ளும் லட்சியக் கனவு அத்தியாவசியமான ஒன்றே.

    மனிதனுடைய தேவைகளும் அத்தேவைகளுக்கான தேடல்களுல் இல்லாதிருந்திருந்தால் இன்றைய அகிலத்தில் விஞான வளர்ச்சி இத்தனை தூரம் முன்னேறியிருக்காது.

    ஆனால் இவற்றின் விலையாக மனிதாபிமானம் கொடுக்கப்படுமேயானால் அதன் விளைவு கவலைக்குரியதே !

    பக்தியின் பெயரால் எடுக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகளின் வழி ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்த ஆன்மீக உணர்வுகளையே ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்டதாய் மாறியதே மிகவும் கவலைக்குரியதான ஒரு “முன்னேற்றமாகிறது” .

    இன்று பல சமயங்களில் நான் இறையுணர்வு கொண்டவன், ஆன்மீகத்தை மதிப்பவன் என்று சொல்லிவதையே பலர் தவிர்க்கும் ஒரு சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்பதே உண்மை.

    இத்தகையதோர் பின்னனியில் தான் இன்றைய மேற்குலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்கும் இனத்துவேஷம் தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பு எனும் போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொண்டே எழுகிறதோ எனும் உணர்வு தலைதூக்காமலில்லை.

    இத்தகைய ஒரு உணர்வு அலையினால் உந்தப்பட்டு இன்றைய ஜனநாயக அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் பதவிகளைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வுணர்வு அலைகளில் தமது அரசியல் படகை ஓட்டுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுவதில் எவ்வித வியப்புமில்லை.

    இன்று பலநாடுகளில் பல்லின மக்கள் அந்நாட்டு குடிமக்களோடு தம்மை இணைத்துக் கொண்ட புலம்பெயர்ந்த அந்நாடுகளையே தமது நாடுகளாக எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

    அதைத்தவிர அத்தகைய மக்களின் அடுத்த சந்ததியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துமே அவர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளின் வசமே !

    இந்தச் சூழலில் இன்றைய ஜனநாயக அரசியல் . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..

    கவிஞர் காவிரி மைந்தன்

    · பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் இயற்றிய பாடலிது. வரிகள் எல்லாம் வசந்த விழா எடுத்து.. தாய்மையை வரவேற்கும் தலைவனையும் ..

    · தாய்மையைச் சுமக்கும் தலைவியையும் திரையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்தம் பண்பட்ட நடிப்பில் பூத்த நந்தவனம் இந்தப் பாடல். செந்தில்நாதன் இயக்கத்தில்

    · உருவான இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது.

    · கணவன் மனைவி தாம்பத்ய வாழ்வில் மிக முக்கிய கட்டமான தாய்மைப்பேறு நிலையில் இருவரின் அன்பு பரிமாற்றங்களை அழகாக அற்புதமாக படம் பிடித்து காட்டியமைக்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    · கண்ணைக் கவரும் குளிர்ந்த காட்சிப்படுத்தியமைக்காக ராஜ ராஜனும் (ஒளிப்பதிவாளர் ) கவனத்திற்கு வருகிறார்.

    · ஒவ்வொரு வரியிலும் உன்னத சொற்களைப் பயன்படுத்தி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ள கங்கை அமரன் .. எழுதிய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடல் என்று இதனைச் சொல்லலாம்.

    · இசை ஞானி என்று ஏன் அழைக்கிறோம் என்றால் .. இது தான் இசை.. இதுதான் இதயத்தை தொடும் இசை.. என்று இப்படம் முழுவதும் ஆறு பாடல்களிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கும் இளையராஜா இசையின் ராஜாவாகத் தெரிகிறார்.

    · மொத்தத்தில் இந்தப் பாடல் என்றைக்கும் சுகம் தரும் ரகம் .. ராகம்.. இதை தனது காந்தர்வ குரலில் வழங்கியிருக்கும் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா குரல்கள் ஒரு புதுவித அனுபவத்தை தருகின்றன என்றால் அது மிகையில்லை.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
    கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

    அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
    அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
    இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

    மெல்லிய நூலிடை வாடியதேன்
    மன்மத காவியம் மூடியதேன்
    அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
    கீர்த்தனை பாடியதேன்.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
    சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

    காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
    என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

    வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
    எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
    என் மகன் காவிய நாயகனே!
    என் உயிர் தேசத்து காவலனே!

    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
    மானிடம் என் மகனே

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    படம்: பூந்தோட்ட காவல்காரன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

     

    Sinthiya venmani from Poonthotha Kaavalkaran
    Share
  • தமிழில் அது ஒரு இனிய கலை

    கவிஞர் காவிரி மைந்தன்

    தமிழில் அது ஒரு இனிய கலை – சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்

    காதல் பாடல்கள் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்! மனித ஜாதியின் மகத்துவம் காதலிலே புதைந்து கிடக்கிறது என்பதும் காதலைப் பற்றி எழுதத் தொடங்கும்போதுதானே கவிஞனே பிறப்பெடுக்கிறான் என்பதும் உண்மைதானே!

    இதமான சங்கதிகளை பதமாக சொல்லிடவே
    நிதந்தோறும் நீ வேண்டுமே!!
    இளமாலைத் தென்றலுடன் சுகராகம்தினம்பாட
    மகராணி உனை நாடுவேன்!!
    கனவோடு பலநாட்கள் கழிந்தாலும் கவலையில்லை
    கவிதைக்கு உணவாகிறேன்!!
    நனவோடு நாம்வாழும் நாட்கள்தான் வரவேண்டும்
    நங்கையிடம் நான் கேட்கிறேன்!!
    அன்போடு நடைபோடும் அவளுக்குத் தெரியாதா
    என்பாடு என்ன என்பது?
    கண்ணோடு கண்வைத்து காதலைச் சொல்லுவது
    கன்னிக்குத் தெரியாததா?
    உன்னோடு உறவாடும் உள்ளத்தின் நிலைபற்றி
    உனக்கிங்கு நான் சொல்வதா?
    பழகத்தான் துடிக்கின்ற பாசத்தின் தவிப்பென்ன
    பாவை நீ அறியாததா?
    பண்ணோடு இசைபோல பாவை உனைப்பற்றி
    பருவத்தில் பல ராகங்கள்!
    என்னோடு இணைந்தபடி என்தோளில் சாய்ந்தபடி
    என்றைக்கு வரும் கீதங்கள்?

    கண்ணதாசன் கவிதைகளிலும் திரைப்பாடல்களிலும் மூழ்கிய நமக்கே இப்படி எழுத வருகிறதென்றால்.. கவியரசு கண்ணதாசன் எழுதிய மற்றுமொரு காதல் பாடலிது.. இசை அமைத்திருக்கிறார்.. தென்னகத்து நெளஷத்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்பாடலைக் கேட்பதற்கும் தனிமை வேண்டும்! இருகுயில்கள் பாடியது போல் டி.எம்.எஸ்.. பி.சுசீலா இணைந்து தந்திருக்கும் இந்த அமுதத்தை அள்ளிப் பருகுங்கள்.. இனிய செவிகளால்.. அகமெல்லாம் நிறைந்துவிடும் ஆனந்தத்தால்!

    தமிழில் அது ஒரு இனிய கலை..
    சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்
    டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா – ப.நீலகண்டன் – எம்.ஜி.ஆர் – லட்சுமி

    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
    அழகில்நீ ஒரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை.. தமிழில்

    பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
    ஒரு பெண்ணாக உருவானதோ.. ( 2 )
    பூமீது விளையாடும் பொன் வண்டுகள் – உன்
    கண்ணாக உருவானதோ.. (2)
    அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள்
    எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ.. (2) தமிழில்

    பாராத பார்வைக்கு பரிசல்லவோ – உந்தன்
    மார்போடு நான் வந்தது (2)
    பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
    நல்ல நாள் பார்த்து நான் வந்தது (2) தமிழில்

    நெய்வாசக் குழல்மீது கைபோட்டு விளையாடும்
    கலையுந்தன் கலையல்லவோ (2)
    நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
    நீ தந்த விலையல்லவோ (2) தமிழில்

    தமிழில் அது ஒரு இனியகலை-Thamizhil adhu oru iniaya kalai

    Share
  • கூகிளாண்டவரின் அசரீரி!…

    இன்னம்பூரான்

    கூகிளாண்டவரின் அசரீரி!

    doodle_for_google_India_past_winners

    தேர்தல் வரும்பின்னே ! ஆருடங்கள் வரும் முன்னே!

    கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் எடுத்துரைப்பதாவது:

    இணைய வாசிகள் இந்திய அரசியலை பற்றி நுட்பங்களும், நாட்டு நடப்பும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். வரும் தேசீய தேர்தலில், தலைவர்களின் மோதல் மட்டுமில்லை; கட்சிகளின் கோட்பாடுகளும், உகந்த/கூடாநட்புகளும் பற்றியும், ராகுல் காந்தி vs நரேந்திர மோடி என்ற ஜடுகுடு பற்றியும் அறிய விழைகிறார்கள். மேலும், ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளக்கின்றன.

    2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து ஆகியவை பற்றி கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை. ராகுலரின் மஹாத்மியங்களும், ‘ஆம்’ ஆத்மி ‘இல்லை’ ஆன விவகாரமும் எங்கும் பேச்சு. 1984 & 2002 கலவரங்களும் வரலாற்று நோக்கில் மீள்பார்வையில் உளன.

    முதற்கண்ணாக லஞ்ச லாவண்யமும் லோக்பால் பிரச்னையும் தலைமை வகிக்கின்றன.

    இன்றைய பார்வை லோக்பால் பிரச்னை பற்றியது. சர்வ விசாரணை வல்ல லோக் பால் என்ற சூப்பர் தணிக்கையாளனை கண்டெடுப்பது பற்றி. மஹாராஜ ராஜ ஶ்ரீ அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி தன் தலையிலேயே அபிஷேகம் செய்து கொண்டு, கண்டெடுப்பு கமிட்டியில் அமர ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும் மறுத்ததால் எமக்கு இக்கட்டு இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் சொன்னதற்கு பதில் இல்லை. (அ-து) கண்டெடுப்பு கமிட்டி சிபாரிக்குமாம். அப்பறம் பிரதமர் தலைமையில், எதிர் கட்சி தலைவர் உட்பட்ட உப்பரிகை கமிட்டி பெரும்பான்மை முடிவு எடுக்குமாம்?

    இந்தியா! நீ எங்கே செல்கிறாய்?

    Image Credit: http://cdn.ndtv.com/tech/images/doodle_for_google_India_past_winners.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 110 (03..03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     
    கவுந்தியின் மறுமொழி

    கவுந்தியடிகளும் இங்ஙனம் மறுமொழி பகன்றார்:
    “இவர்கள் எம்முடைய மக்கள்;
    நீங்கள் கூறியது போல்
    மன்மதனோ ரதியோ அல்லர்.
    நீண்ட வழி நடந்து வந்து
    மிகவும் களைப்புற்று இருக்கின்றனர்.
    தொந்தரவு செய்யாமல்
    இவர்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.”

    காமுகர்கள் பழிப்புரை

    அதற்கு பதில்கூறுமுகமாய்,
    “ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவர்
    கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது என்பது
    நீர் கற்ற எந்த நூலிலும் உள்ளதோ?”
    என்று கேலி பேசினர் அந்தக் காமுகர்கள்.

    கவுந்தியடிகள் சாபம்

    இத்தீய மொழிகளைக் கேட்ட கண்ணகி
    தன் செவிகள் மூடிக் கொண்டு
    தன் கணவன் முன்னே நடுநடுங்கி நின்றாள்.

    “பூமாலை போன்ற என் கண்ணகியை
    இவர்கள் கேலி பேசுகிறார்களே…
    இவர்கள் முள் நிறைந்த காட்டில்
    முதுநரிகளாகத் திரிந்து அலைவார்களாக”
    எனச் சாபமிட்டார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  225 – 232

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    நபிதாஸ்

    அன்புள்ள மணிமொழிக்கு,

    அன்பு தந்தையின் அன்பான அறிவுரைகள்.

    மகளே !

    அன்று செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை வென்று மனித நடைமுறை வாழ்க்கையில் ஏக்கம்; தேக்கம்.

    அன்று, இன; மொழி; நிறம்; இடம் வேறுபாடற்று ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம்.

    இன்று, இனத்திலும்; மொழியிலும்; நிறத்திலும்; இடத்திலும் வேற்றுமை விதைகளைத் தூவி வேற்றுமை உணர்வுகளை செழிக்கச் செய்து வருகின்றனர்.

    மகளே ! வாழ்க்கையே இன்று யுத்தக் களம். போரிடுவோர்கள் ஒருவரல்ல பலர்.

    அமைதியும் அன்பும் மனிதருள் தழைத்து இன்பமுடன் செழித்து வாழ அன்று போதிக்கப்பட்டது. பின்னால் அது மதம் என்று முத்திரைக் குத்தப்பட்டது.

    ஒவ்வொருக் காலக் கட்டத்திலும், வேறுபட்ட ஒவ்வொரு இடத்திலும் நுண்ணறிவுஜீவிகளால் மனித நல் வாழ்வு அமைய அவ்வாறு ஆங்காகே போதனைகள் வகுத்துத் தரப்பட்டன.மனிதர்களைப்பிரிப்பதற்கன்று மாறாக புனிதர்களாகப் பக்குவப்படுத்தப்படவே.

    அந்த நுண்ணறிவு ஜீவிகள் தாங்கள் புகழப்பட வேண்டும் என்றோ, அல்லது தமக்கு முன் வாழ்ந்த நுண்ணறிவு ஜீவிகள் அல்லது மற்ற நுண்ணறிவு ஜீவிகள் அவர்களால்வகுத்துத் தந்த வழிமுறையை விட்டு தன் வழிமுறைகள் வேறுப்பட்டுக் காணப்பட வேண்டும் என்றோ எண்ணியதில்லை. அந்தந்தக் கலக்காட்டம் இடம் சூழல் இதற்கேற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துத் தந்தனர்.

    அறிவு போதனைகள் தந்த அவர்கள் பெயர்களால் அல்லது போதனையின் மையக் கருவின் பொருளால் அல்லது இடத்தால் அவ்வழிமுறைகள்  பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டு அமைதியும், அன்பும் போதிக்கப்பட்டே வந்தன; வருகின்றன.

    பின்னாளில் காலத்தாலும், இடத்தாலும் தோன்றிய இம்மனித நல்வாழ்வுப் போதனைகளில்,அதஅதனைப் பின்பற்றுபவர்கள்

    • அவர்களின் அறிவு தெளிவிற்கு ஏற்ப ஆழமான நுண்ணறிவுகளை சில அனுஷ்ட்டானங்களில் அமைத்து இறைச் சிந்தனையுடன் வகுத்துத் தந்ததனால் அதனில் தெளிவடையாதனாலும், அப்போதனையின் நோக்கம் உலகில் மனிதனின் அமைதி, அன்பு என்பதை அறியாமாலும், புரிந்துக்கொள்ள முடியாமைனாலும்,

    (தான் பின்பற்றும் வழிமுறைகளில் விளங்கிக்கொள்ளாமல் ஊறிப் போனதாலும்,)

    • அனுஷ்ட்டானத்தின் தெளிவுகள் பின்னாளில் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளால் இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மக்களின் அறிவுப்பரிணாம வளர்ச்சி இதற்கேற்பவும், பழமையும் காத்துஅக்கால மனித நல்வாழ்வு போதனைகளை அமைத்துத் தந்த அதனை,பழமையின் தொடர்வாகப் புரிந்துக்கொள்ள முடியாமையினாலும்,

    அல்லது இறைச் சிந்தனையுடன் தான் ஏற்ற போதனைகள் பின்னப்பட்டதால் தெய்வக் குற்றம் என்றாகி உண்டாகி விடுமோ என்று பின் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளின் தெளிவுப் பரிணாமங்களை புரிந்துக் கொள்ளமுடியாமையினாலும்,

    (அல்லது அவைகளை ஒன்றிணைத்து வழிகாட்டப்பட்டவைகளை புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாமையினாலும்)

    • இதுபோல அந்நுண்ணறிவு ஜீவிகளான அம்மகான்களின் நிலையை இவர்களால் எட்ட முடியாமையினாலும்,
    • அவ்வழிமுறைகளில் புனித நிலையடைந்தவர்கள்; தெளிவடைந்தவர்கள் இவ்வறிவில் பெரும்பான்மையான பாமரநிலை மக்கள் மனதில் தங்கள் வழிமுறை மீதுக் கொண்ட பற்று சிதைந்து விடாமல் இருப்பதற்காகவும்,

    அமைதி; அன்பு இதனை உலகில் நிலைக்க வேண்டிச் செய்த நல்வழிகளை, அவ்வழிகளிலேயே இவ்வாறான நிலைகளினால் வேறு வேறாகப் பிரித்துப் பிரித்தே இனம் காட்டி, பிரிவினைகளை வளர்த்து உலகில் மனிதனின்அமைதி; அன்பு இவைகளைத் தான் அறியாமலே சிதைக்கின்றனர். இவர்கள் ஒருவகை வகையானப் போராளிகள்.

    தான் ஏற்று நம்பிய வழியின் மூலம்போதனைப் பெற்றவர்கள்வழித் தலைமுறையில் பின்னாளில், இதுவரை ஏற்று வந்த அப்போதனைகளை அவர்கள் தன்சுய (த்தெளிவில்லா அல்லது தெளிவை அடைய முடிய) அறிவுக் கண்ணோட்டத்தினால் அவ்வழிமுறைகளிலே பிரிவினைக் கொண்டு; கண்டு அமைதியும், அன்பும் அதற்கு வேறுச் சுய அர்த்தங்களை கொண்டு; கற்பித்துப் பிரிவினைகளை தன் மதத்துக்குள்ளே ஏற்படுத்தினார்கள்.நாங்கள் கூறுவதுதான் சரியான ஆதாரப்பூர்வ உண்மையான நல் வழிகாட்டல்கள் என்றும் கூறுகின்றனர்.

    இவ்வாறு ஒவ்வொரு மதத்தினுள்ளும் அமைதியும்; அன்பும் அதனை தாம் அழிக்கின்றோம் என்பதை அறியாமலே அவர்களுக்குள்ளும் அமைதி; அன்பு அதனை அழிக்கின்றானர்.எங்கள் வழியே உயர்ந்தது; சிறந்தது. அதிலே அமைதியும்; அன்பும் கொண்டு வாழலாம் என்று சமூகத்தில் நிலைக்கவேண்டிய அமைதியையும்; அன்பையும் பிரிவினையால் குலைக்கின்றார்கள்.இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    மகளே ! இவைகள் மனித வாழ்வியல் கொள்கையை வைத்துப் பிரிவினைகள் ஆக்கியவைகள்; ஆக்கியுள்ளனர். இதோடல்லாமல் இன்னும் பலப் போராளிகள் உள்ளனர். அவர்களையும் நீ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    அன்று, அமைதியும்; அன்பும் நிலைக்க, மக்கள் இனிமையாக வாழ,’என்னிடமே அல்லது என் தலைமையின் கீழே நல்ல நிர்வாக ஆட்சி அமைப்பு உள்ளது’, என்ற எண்ணத்தில், ஆளுமையில் ஆசைக்கொண்டு,நாங்களே சிறந்த திறமையுள்ளவர்கள் என்று, இம்மாதரியான இந்த குணத்தைக் கொண்டுமனிதனின்அமைதி; அன்பு இவைதான் முக்கியம் என்பதை அறியாமலும்; உணராமலும் தன் சுய நலத்திற்காகஅடுத்த நாட்டுடன் போரிட்டு மனிதர்களை அழித்தார்கள்.

    இன்று சமூகத்தில் பல கருத்துக்களில் பிரிவினைகளைத் தூவி அல்லது புதிதாக ஒன்றைக் கிளப்பி அதில் பிரிவினையைத் தடவித் தூவி எங்களுக்கே ஆதரவுத் தாருங்கள் என்று தன் சுய நலத்திற்காக அமைதியையும், அன்பையும் மக்கள் வாழ்வில்அழித்து; குலைத்து, (மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி) ஆட்சி பீடத்தில் உட்காரத் துடிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    அமைதியும், அன்பும் அதனை,’நான் தலைவனாகி என்கீழ்தான் கொண்டு வரமுடியும், நல்லாட்சி தரமுடியும்’, என்று அந்த ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அக்கட்சியில் உள்ள சிலர் தான் தலைவனாக ஆசைப்பட்டு அக்கட்சியை உடைத்துப் புதுப்புது எண்ணிறைந்த கட்சிகளையும் ஏற்படுத்தி, அமைதியும்; அன்பும் ஒரு குறிப்பிட்ட தன் இன மக்களிடம் மட்டும் என்ற இலக்கணத்திலாக்கி பொது மனிதஅமைதியையும், அன்பையும் அழிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    மகளே ! இதுமட்டுமல்ல ! இதோ இவர்களையும் தெரிந்துக்கொள்.

    அமைதியும், அன்பும் நாங்கள் பேசும் மொழி இனத்தார்களுக்குள் மட்டும் தான் உண்டு என்று அமைதியையும், அன்பையும் மொழிக்குள்ளே அடைத்து மொழிவாரி அமைதியையும், அன்பையும் அழிக்கின்றானர். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    அமைதியும், அன்பும் இன்று குடும்பம்வாரியாக, தெருவாரியாக, ஊர்வாரியாக, மாநிலம்வாரியாக, நாடுகள்வாரியாக, கண்டங்கள்வாரியாக சுருக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் உணமைப் பொருளை அழித்து வழிகாட்டப்படுகின்றன; வழிகாட்டப்படுகின்றனர். இவ்வாறான இவர்களும் ஒருவகை வகையானப் போராளிகள்.

    அறியாமையை அகற்றாமல் கற்றவர்கள்; கல்லாதவர்கள், உயர்ந்தவன்; தாழ்ந்தவன் என்றும் இனம் பிரிக்கப்பட்டு அமைதியையும், அன்பையும் அழித்தும்அறியாமையால் அறிவாக்கப்படுகிறது. இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

    இவ்வாறு ஏதாவது ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைதியும், அன்பும் அழிக்கப்படுகிறது மகளே !

    நீ இதற்கெல்லாம் அடிமைப்படாது தன்னைப் போலவே அனைவரையும்; அனைத்தையும் கருதி, அதுதான் உண்மை, அதனை உணர்ந்து நேசித்துவாழ்ந்தால் அமைதியும்; அன்பும், தழைக்கும்; செழிக்கும்,உன்னிடமும்; உன்மூலம்.

    அப்போதும் உன்னைத் தெய்வப் பிறவி என்று பிரிக்கத்தான் இவர்கள் பார்ப்பார்கள். உன் அளவிற்கு அனைவரும் உயர நீ வேறுபாடுப் பிரிவினைகளைக் காட்டாவிட்டாலும், உன் அறிவளவிற்கு இவர்கள் உயரச்சிந்திக்க மாட்டார்கள். உன் கண்ணியம்; புனிதம் புரியாமாட்டார்கள். ஆனால், அங்குமட்டும் சமத்துவம் கண்டு சக மனிதன் என்றுக் கூறி, உன்னை அவர்கள் அறிவுக்கு தாழ்த்திப் பேசுவார்கள். அல்லது”தான்; நான்” என்ற அகம்பாவத்தால் உன் புனித நிலையை மறக்கடித்து தன் பெயரை நிலைநாட்டப்பேச்சில் மட்டும் அமைதி; அன்பு என்றும் பேசுவார்கள். இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

    இந்த வகை வகையானப் போராளிகளினால்தான் அன்றும் செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை ஓரளவு வென்றாலும் மனித நடைமுறை வாழ்க்கையில் அமைதி; அன்பு இல்லாமல் ஏக்கம்; தேக்கம்.

    கவனம் மகளே ! அமைதியும், அன்புடனுமே நீ வாழ் வேண்டும்.

    அமைதியும், அன்பும் தழைக்க, செழிக்க விரும்பும்

    தந்தை.

    நபிதாஸ்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (26)

    26. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பங்கர் ஹோட்டல் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    எனது கடந்த அருங்காட்சியகத் தொடர் பதிவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    நீங்கள் என்னுடன் வரத் தயார்தானே?

    ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வருடத்திற்கு ஒரு முறை மார்ச் மாத மத்தியில் அருங்காட்சியக இரவு என்னும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி மறு நாள் காலை மூன்று மணி வரை ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் நாம் சென்று பார்த்து வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அருங்காட்சியகப் பிரியர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வசதியாக அன்று பேருந்துகள் இலவசமாக செலுத்தப்படும். ஒருவர் 15 யூரோ கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறும் போது நமக்கு ஒரு விளக்கக் கையேடு கொடுக்கப்படும். அதில் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை வகைப்படுத்தி, குழுக்களில் அமைத்து, பேருந்துகள் ஒரு அருங்காட்சியக வாசலிலிருந்து மறு அருங்காட்சியகம் செல்லும் வகையில் ஏற்பாடு அமைந்திருக்கும்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நான் இந்த அருங்காட்சியக பயணத்தில் பங்கு கொண்டு நான் வசிக்கும் நகரின் அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகங்களைப் பார்த்து வருகிறேன். மாலை ஐந்திலிருந்து பயணித்தாலும் ஒரு அருங்காட்சியக தினத்தில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து அருங்காட்சியகங்களை மட்டுமே காண முடியும். அப்படி ஒரு முறை பயணித்த போது ஸ்டுட்கார்ட் மத்தியில் அமைந்திருக்கும் நிலத்திற்குக் கீழே உள்ள ஒரு அருங்காட்சியகம் செல்லும் ஆச்சரியம் மிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றேன். விளக்கக் கையேட்டினை வாசித்து எங்கே இருக்கின்றது என இந்த அருங்காட்சியகத்தைத் தேடிக் கொண்டு ஸ்டுட்கார்ட் மார்க்கெட்ப்ளேஸ் (Marktplatz) சென்று சேர்ந்தோம். வெறும் தரை. ஆனால் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மனிதர்கள் கீழே நோக்கிச் செல்வதைப் பார்த்த எனக்கு நிலத்தின் அடியில் இருக்கும் அருங்காட்சியகம் செல்கின்றோம் என்று அறிந்ததும் ஒரு தனி குதூகலம் ஏற்பட்டது. அதே வேளை உள்ளே சென்றவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

    நுழைவாயில் பகுதி 1940களில்
    நுழைவாயில் பகுதி 1940களில்

    எங்களின் வாய்ப்பு வர நாங்களும் மேல் தரைப் பகுதியிலிருந்து அன்று மட்டுமே பிரத்தியேகமாக திறக்கப்பட்ட பாறை கற்களுக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த படிகளில் இறங்கி உள்ளே நடந்து சென்றோம்.

    1940ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் இன்றும் மிகப் பிரபலமாக விளங்கிய Breuninger வர்த்தக நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள், வணிகர்கள் தங்குவதற்கு ஒரு தங்கும் விடுதி தேவைப்பட்டது. இந்த வர்த்தக நிறுவனம் இன்றும் அருகாமையிலேயே இயங்கி வருகின்றது. மிகப் பெரியதொரு அங்காடி விற்பனை நிலையம் இது.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய Breuninger வர்த்தக நிறுவனம் இப் பகுதியில் சற்றே தள்ளி தரைக்கடியில் உள்ள நிலத்தில் பாதுகாப்பை மையமாகக் கருதி ஒரு தங்கும் விடுதியை அமைக்க திட்டம் தீட்டி, வரைபடத்தையும் தயார் செய்து கட்டுமாண வேலைகளையும் தொடங்கியது. இந்த நிலத்துக்கு அடியில் அமைந்த தங்கும் விடுதியோடு இணைந்தார் போல வாகன நிறுத்துமிடம், பிறகு அதிலிருந்து மேல் நோக்கி வரும் வகையிலான ஒரு பாதை என்பதையும் இந்த கட்டுமானம் கொண்டிருந்தது.

    இந்த நிலத்துக்கு அடியிலான கட்டுமானம் என்பது அக்கால கட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தம், பின்னர் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் ஆகியனவற்றை முக்கியமாக மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே. இங்கு ஸ்டுட்கார்ட் மட்டுமல்லாது, ஜெர்மனியின் பல ஊர்களில் நிலத்துக்கடியில் தங்கும் வீடுகள், மறைவிடங்கள், தொழிற் சாலைகள், சந்திப்புக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்றே!

    இப்படி நிலத்திற்கு அடியில் இயங்கிய வாழ்விடங்களின் உதாரணங்களாக இதுவரை ஸ்டுட்கார்ட் நகரில் ஒன்றும், என் இல்லத்திற்கு அருகாமையில் ஃபெல்பாஹ் நகரில் ஒரு நிலத்திற்கடியிலான இரவு கேளிக்கை விடுதியையும் நான் நேரில் சென்று பார்த்து வந்திருக்கின்றேன். இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவமே தனி தான்.

    இந்த ஸ்டுட்கார்ட் பங்கர் ஹோட்டல் யுத்த காலத்தில் வணிகம் தடைபடாமல் இருப்பதற்கும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே இருந்தது. எதிர்பார்த்தது போலவே 1944ம் ஆண்டு ஜூலை 25-26ம் தேதிகளில் ஸ்டுட்கார்ட் பகுதியில் வெடி குண்டுகள் தாக்கியதில் பல கட்டிடங்கள் சேதத்துக்குள்ளாயின. அந்த சமயத்தில் இந்த பங்கர் ஹோட்டலில் பலர் ஒளிந்துகொண்டு தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொண்டனர்.

    ஒரே சமயத்தில் இந்த நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியில் பலரும் இருப்பது என்பது எளிதான காரியமல்ல. மூச்சு விட போதிய ஆக்ஸிஜன் போதாமையினாலும் காற்று அழுத்தக் குறைவினாலும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டே தம் உயிரை இந்த மக்கள் தற்காத்துக் கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு  போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்
    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்

    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1979ம் ஆண்டில் இந்த பங்கர் ஹோட்டல் பொது மக்களின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் பொறுப்பின் கீழ் வந்தது. அதே காலகட்டத்திலும் பின்னரும் ஜெர்மனியில் பல இடங்களில் இப்படி நிலத்துக்கடியில் இயங்கிய சில மறைவிடங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த ஹோட்டல் மத்திய அமைச்சின் பொறுப்பில் சிலகாலங்கள் என இருந்தாலும் அதன் பின்னர் பராமரிப்பில் படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ, பின்னர் மீண்டும் ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் கீழ் வந்தது.

    அதன் பின்னர் அருங்காட்சியக இரவு நாட்களில் பொது மக்கள் பார்வையிட வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிலத்தின் அடியில் இருக்கும் ஹோட்டல் மாநகராட்சியின் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்படுகின்றது.

    அறைகள் வரிசையாக
    அறைகள் வரிசையாக

    உள்ளே நுழைந்தால் வரிசை வரிசையான அறைகள் இருப்பதை முதலில் காணலாம். ஒவ்வொரு அறையிலும் பல அடுக்குகளினாலான கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் கேளிக்கை பகுதி என அமைத்து அங்கே ரேடியோ, அலங்காரப் பொருட்கள் என வைத்திருக்கின்ரனர். தொடர்ந்து நீளமான பாதையில் நடந்து சென்றால் ஓரிடத்தில் தனி சமையலறை பகுதி இருக்கின்றது.

    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்
    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்

    ஹோட்டலின் நிலை பிரத்தியேகமாக புதுப்பிக்கப்படாமல் எந்த மாறுபாடுகளும் இன்றி அப்படியே 1940களில் இருந்த வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றது.

    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி
    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி

    இந்த பங்கர் ஹோட்டல் தற்சமயம் மக்கள் புழக்கத்தில் இல்லாமையால் இது அருங்காட்சியகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஸ்டுட்கார்ட் நகர அருங்காட்சியகப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நேரில் வந்து இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள் ஜெர்மனிக்கு மார்ச் மாதம் 13 – 30ம் தேதிக்குள் உங்கள் வருகை இருப்பதாக திட்டமிட வேண்டும். இந்த குறிப்பிட்ட வேளையில் அமைகின்ற ஒரு சனிக்கிழமையே ஒவ்வொரு ஆண்டும் ஸ்டுட்கார்ட் நகரின் அருங்காட்சியக நிகழ்வு நடைபெறும்.

    சரி.. நிலத்திற்கடியில் இந்தப் புழுக்கத்தில் எவ்வளவு நேரம் நாம் நிற்பது?

    வாருங்கள்.. உங்களை மற்றொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்..

    சுபா

     

    Share