சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் மனதிலிருப்பவற்றில் உறுத்துவதை பகிர்ந்து கொள்ளும் வேளையிது.

இந்தப் பிரபஞ்சம் எதற்காக எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றியும் அதன் கூர்ப்பானது இயற்கையினால் ஆனது இதற்கும் எவருக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்பது பலவகையிலான விவாதங்கள் இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது.

அதைப்பற்றிய அலசலுக்குரிய ஞானம் எனக்கில்லை அதைப்பற்ரி அலசுவது எனது நோக்கமுமல்ல .

அப்புறம் எதற்கு இந்தப் பீடிகை எனும் உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது

எது எப்படியாக இருப்பினும் இன்று நாம் வாழும் காலகட்டத்திலே எமது வாழ்க்கைக்கும் இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.

தனிமனிதனாக இயங்கத் தொடங்கிய மனிதன் குழுக்களாகி சமுதாயமாகி விட்ட பின்பு அப்படியான பல சமுதாயங்களை இணைத்து எழுந்த நாட்டின் நலன்களை அத்துணை சமுதாயங்களின் சார்பிலும் நிர்வகிக்க வேண்டிய தேவையின் நிமித்தமே ஒரு நாட்டின் அரசியல் சூழல் உருவாகியது.

அவ்வரசியல் சூழலில் தாம் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்காக அச்சமூகங்களின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தவர்கள் பலரின் கூட்டமைப்பே அரசாங்கம் என்று கோலோச்சுகிறது.

அப்படிப்பட்ட சமூகங்களில் பல வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான வடிவங்களில் வியாபித்திருப்பதனாலும், அச்சமூகங்களிடையே உள்ளவர்களிடையே அந்தஸ்து வித்தியாசங்கள் காணப்படுவதாலும் அவற்றினால் உருவாகும் வேறுபாடுகளிடையே காணப்படும் ஒருமித்த காரணிகளை வளர்த்து அச்சமூகங்களை ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லுவதுமே இவ்வரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலையாய நோக்கமாக இருந்தது.

அரசன் எனும் ஒரு தனிப்பட்ட தலைவன் தன்னிச்சையாக தனது விருப்பு,வெறுப்புகளை தனது கருத்துக்களை தனது குடிமக்கள் மீது திணிக்கும் முறையை மாற்றி மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நாட்டின் தலைவர்களை உருவாக்குவதே அரசியலமைப்புகளின் முக்கிய செயற்பாடாக இருந்தது.
ஒரு நாட்டில் உள்ள பல சமூகங்களில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்கள் எதுவித அச்சமுமின்றி தமது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு (அது அடுத்தோருவரின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்காத வரையில்) வாழ்வதர்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அடிப்படை ஜனநாயகமாகிறது.

ஆனால் இன்று 2014ம் ஆண்டு விஞ்ஞான வளர்ச்சியின் அது உச்ச காலத்தில், உலகமயமாக்கல் எனும் நிலைப்பாட்டின் அதியுயர் கட்டத்தில், நாடுகள் பொருளாதார சுபீட்சத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,

இந்த ஜனநாயக அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?

இக்கேள்விக்கு பதிலைத் தேடும் போது எமது மனம் சிறிது அச்சத்தினால் அதிருகிறது.

வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி ஆடம்பரமான தேவைகளுக்காய் நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அன்று முக்கிய இடத்தை வகித்த சமுதாய, சமூக உணர்வுகள் எத்தகைய பங்கு வகிக்கின்றன எனும் கேள்விக்கு பதிலை என்னும் தேடிக் கொண்டே . . . . .

உழைப்பு மனித வாழ்க்கையின் ஒரு உன்னதமான அங்கம். வாழ்க்கையில் தமது நிலையை உஅயர்த்திக் கொள்ள எண்ணி நீதியான, நியாயமான வகையில் உழைத்து முன்னேற எடுத்துக் கொள்ளும் லட்சியக் கனவு அத்தியாவசியமான ஒன்றே.

மனிதனுடைய தேவைகளும் அத்தேவைகளுக்கான தேடல்களுல் இல்லாதிருந்திருந்தால் இன்றைய அகிலத்தில் விஞான வளர்ச்சி இத்தனை தூரம் முன்னேறியிருக்காது.

ஆனால் இவற்றின் விலையாக மனிதாபிமானம் கொடுக்கப்படுமேயானால் அதன் விளைவு கவலைக்குரியதே !

பக்தியின் பெயரால் எடுக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகளின் வழி ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்த ஆன்மீக உணர்வுகளையே ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்டதாய் மாறியதே மிகவும் கவலைக்குரியதான ஒரு “முன்னேற்றமாகிறது” .

இன்று பல சமயங்களில் நான் இறையுணர்வு கொண்டவன், ஆன்மீகத்தை மதிப்பவன் என்று சொல்லிவதையே பலர் தவிர்க்கும் ஒரு சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்பதே உண்மை.

இத்தகையதோர் பின்னனியில் தான் இன்றைய மேற்குலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்கும் இனத்துவேஷம் தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பு எனும் போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொண்டே எழுகிறதோ எனும் உணர்வு தலைதூக்காமலில்லை.

இத்தகைய ஒரு உணர்வு அலையினால் உந்தப்பட்டு இன்றைய ஜனநாயக அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் பதவிகளைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வுணர்வு அலைகளில் தமது அரசியல் படகை ஓட்டுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுவதில் எவ்வித வியப்புமில்லை.

இன்று பலநாடுகளில் பல்லின மக்கள் அந்நாட்டு குடிமக்களோடு தம்மை இணைத்துக் கொண்ட புலம்பெயர்ந்த அந்நாடுகளையே தமது நாடுகளாக எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அதைத்தவிர அத்தகைய மக்களின் அடுத்த சந்ததியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துமே அவர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளின் வசமே !

இந்தச் சூழலில் இன்றைய ஜனநாயக அரசியல் . . . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *