ரஞ்சனி நாராயணன்

 

ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.

முதல் அறிமுகம் சாந்தி. நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் இவளும் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வந்தவள். எனது தோழியின் உறவு. தோழியின் தொடர்பு விட்டுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாந்தியுடன் ஆன எனது நட்பு இன்றும் தொடருகிறது – கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக. வியப்பாக இருக்கிறது, இல்லையா?

எங்கள் நட்பு இத்தனை வருடங்கள் ஆனபின்னும் வலுவாக இருக்கக் காரணம் நிச்சயம் நானில்லை. இந்தப்பெருமை முழுக்க முழுக்க சாந்தியைத்தான் சேரும். முதலில் சாந்தியின் வீடு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. சாந்தி வேலை செய்த பள்ளிக்கூடமும் அருகில் அதனால் ஏறக்குறைய தினமுமே சாந்தி என் வீட்டிற்கு வருவாள். என் குழந்தைகளுக்காக செய்யும் சிற்றுண்டியை சாந்திக்கும் கொடுத்து இருவருமாக காப்பி சாப்பிடுவோம். சில மாதங்களில் அவள் கருவுற்றாள். பிரசவத்திற்கு தாய்வீடு செல்லும்வரை மாலைவேளைகளில் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சில மாதங்களில் நாங்கள் வேறு வீட்டிற்கு மாறினோம். சாந்தியும் கணவரின் வேலை காரணமாக போபால் போய்விட  தொடர்பு விட்டுப் போயிற்று. வருடங்கள் கழிந்தன. ஒருநாள் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க – நட்பு தொடர்ந்தது.

எனக்கு சாந்தியிடம் மிகவும் பிடித்த விஷயம் எதற்கும் துளிக்கூட அலுத்துக் கொள்ள மாட்டாள். எங்கள் வீட்டுப் பக்கம் வரும்போதெல்லாம் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாள். பல மாதங்கள், வருடங்கள் பார்க்கவில்லை என்றாலும் நேற்று பார்த்து பேசியதை இன்று தொடர்வது போல குற்றம் குறை கூறாமல் பேசுவாள். ஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை; ஃபோனாவது செய்யலாமே என்று கேட்கவே மாட்டாள்.

வாழ்க்கை அவளை நிறையவே புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசவே மாட்டாள். என்ன ஒரு அதிசயமான குணம்! குணக்கோளாறான கணவர்; பிறந்தவீடு புகுந்த வீடு இரண்டு பக்கமும் எந்தவித ஆதரவும் கிடையாது. சின்னசின்ன பள்ளிகளில் வேலை; கொடுக்கும் சம்பளத்திற்கு மேல் பிழிந்து எடுக்கும் வேலை. ஆனால் இவற்றைப்பற்றி பேசவே மாட்டாள். எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனது தோழி சொல்வாள் கதை கதையாக. ஒருவழியாக இப்போது ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் வேலை. பவித்ராவும் படித்து முடித்துவிட்டாள். இனியாவது அவளது வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது தினசரிப் பிரார்த்தனை.

இரண்டாவது அறிமுகம் நிர்மலா. ஒருமுறை நானும் என் கணவரும் வெளியே போய்விட்டு திரும்பும்போது மழை கொட்டு கொட்டென்று கொட்ட, நாங்கள் அடைக்கலம் புகுந்தது நிர்மலாவின் கடையில். நாங்கள் இருவரும் தமிழில் பேசுவதைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் கூப்பிட்டு, தலை துடைக்க துண்டு கொடுத்து சுடச்சுட பாதாம் பால் கொடுத்தாள். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. நிர்மலாவும் தமிழ் நாட்டில் பிறந்தவள். திருமணம் ஆகி பெங்களூருக்கு வந்தவள். ஊறுகாய், அப்பளம் விற்கும் கடையை நடத்தி வந்தார்கள் கணவனும் மனைவியும். அத்துடன் பால் விநியோகம். கூடவே காப்பி, டீ, பாதாமி பால் தயாரித்துக் கொடுப்பார்கள். ‘காதலொருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து’ என்ற பாரதியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டியவள் நிர்மலா. விடியற்காலையில் வரும் பால் வண்டியிலிருந்து பால் பொட்டலங்களை எண்ணி வாங்கி இறக்குவதிலிருந்து, மணிக்கணக்கில் கடையில் நின்று கொண்டு வியாபாரத்தை மேற்பார்வையிடுவதும், காப்பி, டீ, பாதம் பால் போன்றவற்றை தானே தயாரிப்பதும் ஆக அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவள். எப்போது போனாலும் சிரித்த முகத்துடன், கடும் உழைப்பின் அயர்ச்சி முகத்தில் தெரியவே தெரியாமல் வரவேற்கும் பக்குவம் எப்படி வந்தது இந்தப் பெண்ணிடம் என்று நான் வியப்பேன். இவளும் தனது குடும்பக் கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்லவே மாட்டாள். இன்று இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து சொந்த வீடும் வாங்கி தனது நிலைமையை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டாள் நிர்மலா.

மூன்றாவதாக எனது மாணவி வெங்கட்லக்ஷ்மி. அருமையான பெண். எனது வகுப்பில் சேர்ந்தபோது திருமணம் ஆகியிருக்கவில்லை. முதல் நாள் வகுப்பில் மாணவர்களை ‘அவர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ பற்றிப் பேசச் சொன்னேன். லக்ஷ்மி சொன்னாள்: ‘நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. இந்த மாதம் எல்லோருக்கும் சம்பள உயர்வு கொடுத்திருந்தார்கள். எனக்குத் தெரியும் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது என்று. எல்லோருடைய சம்பள உயர்வையும் அறிவித்த எனது நிறுவன முதலாளி எனக்கு நாலாயிரம் ரூபாய் உயர்வு என்று சொன்னாவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன்னுடைய திறமைக்கு நான் கொடுக்கும் பரிசு இது’ என்றார் அவர். இதுதான் மேடம் என்னை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்’ என்றாள். அலுவலக வேலையில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் அவள் திறமையானவள் என்பதற்கு இன்னொரு சம்பவம்:

லக்ஷ்மி சேர்ந்திருந்த எனது வகுப்பு முடிவடையும் நாள். (வகுப்பு என்று நான் சொல்வது 24 நாட்கள் கொண்டது) கடைசி நாளன்று எங்கேயாவது போகலாம் என்று மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் போய்விட்டு இரவுக்குள் திரும்பிவிட வேண்டும். பலரும் பல யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி வந்தவுடன் எல்லோரும் அவளிடத்தில் யோசனை கேட்டனர். அவள் சொன்னாள்: ‘சிவன சமுத்திரம் போகலாம். மழை பெய்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். சிற்றுண்டி, மதியம் உணவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? போவதற்கு வண்டி? எத்தனை பேர் போகிறோம்? ஒவ்வொருவரும் எத்தனை பணம் கொடுக்க வேண்டும்?’ கிடுகிடுவென்று திட்டம் போட்டு, தொலைபேச வேண்டியவர்களுக்கு பேசி, வண்டி, சிற்றுண்டி, மதிய உணவு, நீர் என்று எல்லா ஏற்பாடுகளும் விரல் சொடுக்கும் வினாடியில் செய்து முடித்தாள். சின்ன பெண் என்ன ஒரு சாமர்த்தியத்துடன்  நிலைமையை கையாளுகிறாள்!

லக்ஷ்மியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திருப்பவர்கள். தனது தங்கைகளையும் தன்னுடன் பெங்களூருக்குக் கூட்டி வந்து அவர்களைப் படிக்க வைத்தவள் லக்ஷ்மி. தனக்குத் திருமணம் ஆனவுடன் தங்கைகளுக்கும் திருமணம் செய்து சொந்தமாக வீடு கட்டி அலுவலகம், குடும்பம் இரண்டையும் சிறப்பாக நிர்வகித்து வரும் லக்ஷ்மி என்னை வியக்க வைத்ததை என்னவென்று சொல்ல?

நான் சொன்ன இவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள். ஆனால் நான் இவர்களிடம் கற்றது ஏராளம். சாதிப்பதற்கு என்று எந்தக் களனும் வேண்டாம்; சொந்த வாழ்வில் வெற்றி பெறுவதுதான் நிஜமான சாதனை என்று நிரூபித்த பாட(ல்) பெறாத இந்த தலைவிகளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பாட(ல்) பெறாத தலைவிகள்

  1. வாழ்த்துகள் ரஞ்சனி.  அருமையான அறிமுகங்களைச் செய்திருக்கிறீர்கள். 

  2. ரொம்ப அற்புதமான பகிர்வு ரஞ்சனிம்மா!..உங்கள் அறிமுகங்களோடு, திறமை கண்ட இடத்தில் ஊக்கப்படுத்தும் குணமுடைய உங்களையும் சேர்த்தே பாராட்ட வேண்டும்.!!

  3. சாந்தி, நிர்மலா, லக்ஷ்மி போன்ற தன்னம்பிக்கை நிறைந்த இளைய தலைமுறையினர் நல்லதொரு நம்பிக்கையைத் தருகிறார்கள். அவர்களை மகளிர் தினமன்று நினைவுகூர்ந்தது மிகவும் சிறப்பு, பாராட்டுகள், நல்ல கட்டுரை ரஞ்சனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.