செல்வன்

மேலைநாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவால் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

20ம் நூற்றாண்டில் பின்நவீனத்துவம், மார்க்சிசம் முதலானவை பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தன. விவாகரத்து பெரும் பாவம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் தவறு என்ற கன்சர்வேடிவ் சிந்தனைகள் 60களில் குறையத் துவங்கின. திருமணம் செய்யாமல் கூடிவாழ்ந்து குழந்தை பெறத் துவங்கினார்கள். பணியிடங்களில் ஆணுக்குச் சமமாக பெண்கள் பணிக்கு வந்தார்கள். ஆண் செய்யும் எந்த பணியையும் பெண்ணும் செய்யலாம் எனும் நிலை உருவானது. பிடிக்காத உறவுகள் விலக்கப்பட்டன. விவாகரத்துகள் பெருகின.

ஆனால் அதே சமயம் விசித்திரமான ஒரு நிகழ்வும் நிகழ்ந்தது… வருடா வருடம் ஆண்/பெண் மகிழ்ச்சி விகிதத்தை அளந்து கொண்டுவரும் ஆய்வாளர்கள் 60களுக்குப் பின் பெண்களின் மகிழ்ச்சி வருடா, வருடம் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள். சுதந்திரமும், உரிமைகளும், கடமைகளும் பெருக மகிழ்ச்சி குறைந்தது. ஆண்களின் மகிழ்ச்சி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2009ம் ஆண்டுவரை இதே நிலைதான்

இதுகுறித்து ஆய்வு நிகழ்த்திய பேராசிரியர் பெட்சி ஸ்டீபன்சன் பாலியல் சுதந்திரம், விவாகரத்து, முதலானவை 70களில் துவங்கி பெண்களுக்கு கிடைத்த உரிமைகளாக கூறப்பட்டாலும் இந்த உரிமைகளின் நன்மைகள் அனைத்தும் ஆண்களுக்கேச் சென்று சேர்ந்ததாகக் கூறுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக அவர் கூறுவது பாலியல் சுதந்திரம். 60களுக்கு முன்பு கல்யாணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் உறவுகொன்டால் அவளை திருமணம் செய்தாக வேண்டும் எனும் சமூக நிர்ப்பந்தம் ஆணுக்கு இருந்தது. ஷாட்கன் வெட்டிங்க்ஸ் எனப்படும் துப்பாக்கிமுனை கல்யாணங்கள் அப்போது இதனால் நிகழ்ந்தன. ஆனால் பாலியல் சுதந்திரம் என்றானபின் அத்தகைய சமூக நிர்ப்பந்தங்கள் குறைந்துவிட்டன. ஆக இதன் முழுபலனும் ஆண்களுக்கே சேர்ந்தது என்கிறார் பெட்ஸி

பாலியல் சுதந்திரம், அதிகரிக்கும் மணவிலக்குகள், பணிக்குச் செல்லும் சமூக நிர்ப்பந்தம், இவையே பெண்களின் மகிழ்ச்சி குறையக் காரணம் என பெட்சி ஸ்டிவன்சனின் ஆய்வு தெளிவாகக் கூறுகிறது. முன்பு பணிக்குப் போகாத ஆணுக்கு கல்யாணம் ஆகாது. பெண்கள் வேலைக்கு போகாததைப் பற்றி யாரும் அலட்டிகொண்டது இல்லை. ஆனால் இன்று வேலைக்குப் போகாமல் இருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகாது எனும் நிலைதான். பெண்களும் வேலைக்குப் போகவேன்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் அதிகரித்து உள்ளது.

பாலியல் சுதந்திரத்தின் ஒரு விளைவு அதிகரிக்கும் சிங்கிள் மதர்ஸ் எனப்படும் திருமணம் ஆகாதத் தாய்மார்கள். நம் நாட்டில் முன்பு விதவா விவாகம் மறுக்கப்பட்டதால் விதவைகள் அனுபவித்த துன்பங்களை விட அதிக துன்பங்களை இத்தாய்மார்கள் அனுபவிக்கின்றனர். மேலைநாடுகளில் மறுமணம் பிரச்சனை இல்லையெனினும் 20 வயதில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு மணம் ஆவது அத்தனை எளிது இல்லை. இவர்களில் பலரும் ஏனோ கடைசிவரை திருமணம் செய்யாமலேயே பாய்பிரண்டுகளை மட்டும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுகிறார்கள். ஆய்வுகள் கூறுவது என்னவெனில் சிங்கிள் மதர்களிடம் வளரும் ஆண்குழந்தைகள் அதிக அளவில் சிறைக்குச் செல்வதும், பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் கர்ப்பமாவதும் அதிக அளவில் என்பதுதான்.

இது கட்டாயம் பெண்ணின் குற்றம் மட்டும் அல்ல. ஆணின் குற்றமும் தான். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் இருக்கத் தானே திருமணம் என்ற அமைப்பு உருவானது? அது உடைந்ததன் பாதிப்பு முழுக்க பெண்கள் மேல் அல்லவா விழுகிறது?

கலாசாரம், கற்பு, திருமணம், குடும்பம் அனைத்தும் பெண்கள் நன்மைக்காக ஆண்களை கட்டுக்குள் வைக்க உருவாக்கபட்டவை. இவை ஒழிந்தால் அதன் முழுபலனும் ஆண்களுக்கே சென்று சேரும். ஆணை இமிடேட் செய்வது தான் பெண்ணியம் எனச் சொல்லும் இயக்கங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மேலை நாடுகளில் நிறைவேற்றப்பட்டன. துரதிருஷ்டவசமாக அதன் பலன்கள் முழுவதையும் ஆண்களே அடைகிறார்கள். பெண்கள் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டார்கள். கற்பு, திருமணம், கலாச்சாரம் அனைத்தும் ஆண்களை நெறிப்படுத்த இடப்பட்ட தளைகள். அவை அகற்றப்பட்டால் முழு நன்மையும் ஆண்களுக்கே.

ஆணாதிக்க சமூகங்களில் நிலவிய இன்னொரு அவலம் சிசுக்கொலை. கள்ளிப்பால் ஊற்றி பெண்குழந்தைகள் கொல்லப்படுவதைப் படித்து வேதனைப்படுகிறோம். ஆனால் மேலை நாடுகளில் பல கோடி சிசுக்கள் பெண் உரிமை எனும் பெயரில் அபார்ட் செய்யப்படுகின்றன. சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்துமாத சிசுவை அபார்ஷன் செய்ய தடை விதித்து சட்டம் நிறைவேற்றப்பட இருந்ததை எதிர்த்து பெண்ணுரிமை இயக்கங்கள் கடுமையாகப் போராடின.

பண்டைய சமூகங்களில் பலதாரமணம் எனும் அவலம் இருந்தது. இன்று கற்பு நெறி எனும் முறையே அழிந்ததால் ஆண்கள் பலரும் கள்ள உறவுகளில் மூழ்கித் திளைக்கிறார்கள். சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் அதிபர் கள்ள உறவு வைத்திருக்கும் செய்தி வெளியே வந்ததும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.. பத்திரிக்கைகள் அதைப் பெரிதாகக் கன்டுகொள்ளவில்லை.

ஆக பண்டைய சமூக அவலங்கள் வேறு பெயர்களில், வேறு விதங்களில் பெண்களை இன்னும் பாதிக்கின்றன. இதற்கான தீர்வுகள் எளிமையானவை அல்ல என்பதுதான் இதன் சோகமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *