மகளிரைப் போற்றுதும்!
இரா.தீத்தாரப்பன்
மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர்.
” சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.”
என்ற குறளில் தங்களைக் காத்துக் கொள்வதில் பெண்கள் தலையானவர்கள் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு குறளில்
“ ஒழுக்கமாக இருந்து பெருமை பெறவேண்டுமென்றால் அதை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்”
என்று ஆணைப்பார்த்துச் சொல்லுகிறார். அந்தக் குறள்
” ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”
இதுவே! பின்னர் வந்த இளங்கோவடிகள் கண்ணகி வழக்குரைத்த அற்புதத்தை எடுத்துக்காட்டி அவளின் புகழை விண்ணுயரச் செய்தார். அவருக்குப் பின் வந்த கம்பரோ ,
” பெருந்தடங்கண் பிறைனுதலார்க் கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் “
என்று சொல்லுவதிலிருந்து இயற்கையாகவே செல்வமும் கல்வியும் பெண்களிடத்தில் பூத்துக்கிடக்கின்றன என்பது தெளிவு.
“மனைவி ஒருத்தியை அடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
தாயைப்போல பிள்ளை என்று முன்னோர்
வாக்குள தன்றோ? பெண்மை அடிமை யுற்றால்
மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன்றாமோ?”
என்று நம் மகாகவி பாரதியாரும் கொதிக்கிறார். ஹெலன் கெல்லர் என்ற வாய் பேசமுடியாத, காது கேட்காத, கண்ணால் பார்க்க முடியாத ஒரு பெண்மணி செய்த சாதனையை சமன் செய்த ஆண் உலகில் இல்லை என்பதே உண்மை.
மகளிரைப் போற்றுவதும் மனிதத்தைப் போற்றுவதும் ஒன்றே!