ஞா. க​லையரசி

கண்ணாடிக் கூரை  (GLASS CEILING)

மகளிர் தினம் நெருங்கும் இந்நாளில், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அடிக்கடிக் கண்ணில் படும் சொற்கள் இவை.

1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப்  மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

பெரிய வணிக நிறுவனங்களில் நடுத்தர பதவிகளை வகிக்கும் பெண்கள், எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், சாதனை படைத்தவர்களாக இருந்தாலும், ஆண்களுக்கிணையாக மிக உயர்ந்த பதவிகளை எட்ட முடியாமல் தடுக்கும் இந்தக் கூரையை அண்மைக்காலத்தில், பெண்கள் பலர் தகர்த்தெறிந்து சாதனை படைத்து வருகின்றனர்.

குறிப்பாக நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் தங்களுடன் போட்டியிட்ட ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி, மிக உயர்ந்த பதவிகளைப் பெண்கள் எட்டிப் பிடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்துக்கேற்ப வரவு செலவு பண்ணி, பட்ஜெட்டில் துண்டு விழாமல், எத்தகைய நெருக்கடியான சூழலிலும் குடும்பக் கப்பலை வெற்றிகரமாக செலுத்தும் நிதியமைச்சர் குடும்பத்தலைவி தானே?   எனவே நிதி நெருக்கடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுக்கும் திறன்,இவர்கள் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.  மேலும் சிறப்பாகத் திட்டமிட்டுப் பணத்தைச் சேமித்து முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே திறமைசாலிகள் என்பதால் தான்,

“சேர்த்த பணத்தைச் சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக் கண்ணு

அவங்க ஆறுநூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு”

என்று அன்றே பட்டுக்கோட்டையார் பாடினார்.

நாடு முழுதும் 15000 கிளைகளைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மனாக, அண்மையில்  பதவியேற்றிருப்பவர் திருமதி அருந்ததி பட்டார்ச்சார்யா.  207 ஆண்டு வரலாறு கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் சேர்மன் இவர் தாம்.

நைனா லால் கித்வை, (ஹெச்.எஸ்.பி.சி),  சந்தா கோச்சார் (ஐ.சி.ஐ.சி.ஐ),  ஷிகா ஷர்மா (ஆக்சிஸ் வங்கி), விஜயலஷ்மி ஐயர் (பாங்க் ஆப் இந்தியா) அர்ச்சனா பார்கவ் (யுனைடெட் பாங்க்) என வங்கிகளில் மிகப் பெரிய பொறுப்பு வகிக்கும், பெண்களின் பட்டியல் நீள்கிறது.

தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய வர்த்தக நிறுவனங்களிலும், பெண்கள் உயர்ந்த பதவிகளை எட்டி வருவதால், இக்கண்ணாடிக் கூரையில் விரிசல் விழத் துவங்கியுள்ளது. சாதனை பெண்டிரின் சீரிய முயற்சியால், இது முழுவதுமாக நொறுங்கி விழும் நாள், வெகு தூரத்திலில்லை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க