ஷைலஜா

தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
வாய் – சுவை மந்திரி
கண்-காட்சி மந்திரி
மூக்கு- நுகர்ச்சி மந்திரி
செவி- கேள்வி மந்திரி

அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ‘ சல்சல் ‘ என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.

இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?

கேளுங்கள் அதையும்…..

நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

அவள் வரும்போது ‘வருகிறாள்மகாராணி’ என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

அப்போது “கண்ணே” எனும் குரல்கேட்கிறது.

உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.

இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சி மந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

அப்படியே அவளைக் கட்டிக்கொள்கிறான், உதடுகளைப் பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !:)

சுவைமந்திரியான வாய் அவர்கள் ‘அதன் சுவை அலாதி ‘எனப்பதிவு செய்கிறார்.

அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப் பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.

நாணத்தை உடைக்கிறது படை.

பிறகு,,பிறகு…இனிய இரவுதான் விடியும்வரை..

இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

யார் அந்தப்புலவர்?

அவர்தான் புகழேந்தி!

யார் அந்த மகாராணி?

நளனின் மனைவி தமயந்தி!

‘இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!’

6 thoughts on “பெண்ணின் ராஜாங்கம்!

 1. மிகவும் கவனமாக ….வம்பு தும்பு எதிலும் மாட்டாத வகையில் ராஜாங்கம் எப்படி நடக்கிறது என்பதை விவரித்துவிட்டீர்கள் ஷைலஜா. திறமைசாலிதான்.

 2. //// நாற்குணமும் நாற்படையா
  ஐம்புலனும் நல்லமைச்சா
  ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
  வேற்படையும் வாளுமே கண்ணா
  வதன மதிக்குடைக்கீழ்
  ஆளுமே பெண்மை அரசு!’ ////

  ஷைலஜா ஆண்டாளின் மறுபிறப்பு. இது என் கருத்து.  நல்லதோர் விளக்கம்.

  நாற்குணமும் நாற்படையா ? ஐம்புலனும் நல்லமைச்சா ?
  ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா ? – வேற்படையும்
  வாளுமே கண்ணா ? வதன மதிக்குடைக்கீழ்
  ஆளுமே பெண்மை அரசு. 

  வெண்பாப் புகழேந்தி இப்படி எழுதிய வெண்பா அல்லவா ? 

  இந்த அழகிய பெண்பா தன்னைக் கண்பார்க்க வைத்தற்குப் பாராட்டுகள் ஷைலஜா.

  சி. ஜெயபாரதன்.

 3. பார்வதி தேமொழி ரஞ்சனி ஆதிரா  ஆகியோருக்கு மிக்க நன்றி. அன்பின் மிகுதியில் ஆண்டாளோடு என்னை  ஒப்பிடும்  திரு ஜெயபாரதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி.

  பயணத்தில் இருந்ததால் தாமதமாக  நன்றி மடலை எழுதுகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க