Category: Featured

Featured

  • மண்டேலா, ஓ எங்கள் கறுப்புக் குயிலே….

    எஸ் வி வேணுகோபாலன் 

    mandela

    ஆதிக்கத்தைப் புறம்தள்ளும் சிரிக்கும் கண்கள்
    காலம் ஏற்றிக் கொடுத்த
    வரைகோடுகளும் அழகு சேர்க்கும் முகம்
    கறுப்பின் உரிமைக்காய்ப் போராடியே
    வெளுத்துப் பூத்த தலை
    எப்படி விடைகொடுப்போம் உயிர்ப்பின் உருவகத்திற்கு!

    சிறைக்குள் விரிந்த வானத்தில்
    பறந்து கொண்டிருந்த பறவையே!
    இளமையின் கனவுகள், காதல், வேகம்
    எந்த இயல்பான உணர்ச்சிக்காகவும்
    இழக்கத் தயாரில்லை சுதந்திரத்தின் மாண்பை
    விடுதலை நேரத்தில் வெளியேறிய பெருமூச்சில்
    வெளிப்படவில்லை பழி தீர்க்கும் உணர்ச்சி
    மன்னிப்பின் தீப்பொறியே சுடர்விட்டது
    ‘அவர் நாண நன்னயம் செய்தது’
    உனது புதிய அரசியல் நாகரீகம்
    எப்படி வழியனுப்புவோம் உயிர்த்துடிப்பின் உட்கருவை!

    தொண்டு செய்து பழுத்த
    எங்கள் இன்னொரு பழமே !
    அதிகாரத்தின் இரண்டு முனைகளையும்
    ருசித்தவன் நீ
    ஆளுமையின் அடையாளம் அதிகாரத்தில் அல்ல,
    கழற்றி உதறினாலும்
    அது அகலாதது என்பதைக்
    கற்றது உலகம் உன்னிடமிருந்து
    எப்படி அஞ்சலி செலுத்துவோம் எங்கேயும் நிறைந்த வெளிச்சத்திற்கு !

    கறுப்பா வெளுப்பா
    ஆதிக்கக் குரலிடையே
    வேறுபாடு இல்லை உனது அகராதியில்
    சமத்துவ சமூகத்திற்கான உனது தீபம்
    மாசற்று எரிகிறது மகத்தான குன்று ஒன்றின்மீது
    பாட்டன் பூட்டனுக்கும்
    கொள்ளுப் பேரன்களின் கொள்ளுப் பேரன்களுக்கும் கூட
    தந்தையாக நிரந்தரமானது உனது பிம்பம்
    உறுதியின் உயிர்மூச்சுக்கு எப்படி நடத்துவோம் இறுதி யாத்திரையை!

    மண்டேலா ஓ எங்கள் கறுப்புக் குயிலே !
    ஒடுக்கப்படுவோர்க்கு நெஞ்சுரம் புகட்டும் பெயர்ச்சொல்லே !
    உலகளாவிய விடுதலை கீதத்தின் குறியீடே !
    நம்பிக்கை கை விளக்கே!
    அடங்க மறுத்தலை
    அமைதியாகவே காட்டத் தெரிந்திருந்த அற்புதக் கனலே !
    செவ்வணக்கம் தோழா உனது புகழார்ந்த வாழ்க்கைக்கு!

    ************

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 20ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    முதல்வன் முறையீடு.

    மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது.

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மூலமறியேன், முடியும் முடிவறியேன்
    ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா,
    அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா
    பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா,
    தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா
    மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா
    மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
    தாமாயுலகனைத்தும் தாது கலங்குகிறண்டா. 1.

    மதுரையம்பதி மேவிய சிவபெருமானே, சிவபெருமானே! ஆன்மாக்கள் எங்கிருந்து பிறந்தன, எங்குபோய் முடிகின்றன என்பதை உணர்ந்தேனில்லை. இப்பூவுலகில் வாழ்க்கையின் ஊடே கணக்கற்ற துன்பங்கள் வந்து சேர்ந்து துயரத்துள் ஆழ்த்துகின்றன. வாழ்க்கையில் இன்பம் எது, துன்பம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறியாமையாம் மலம் அறிவை மூடிவிட்ட காரணத்தால் அறிவு முதல் அனைத்தும் கெட்டுத் தொலைந்தது. முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எனைத் துரத்தி வந்ததனால் மனம் பித்துப் பிடித்துப் போனது. ‘தனுவாதிய நான்கும்’ அதாவது தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இப்பூவுலக வாழ்வின் தத்துவங்களில் மூழ்கித் தவித்து மனம் மயங்கி, மறைக்கும் மாயத் தொழிலைப் புரியும் ‘திரோதான’ சக்தியுள் ஆட்பட்டுவிட்டேன். உலகமும் அதன் உட்பொருளும், மறையும் பாங்கினதால் அவை மாயை எனப்படும். அந்த மா மாயை எனும் பெரும் மாயக் காட்டினுள் வழியறியாது அலைந்து திரிகின்றேன், இப்பிறவியும் வாழ்வும் மாயை எனும் உண்மை புரிவதால், உளம் கலங்குகிறேன். (இதில் கண்டுள்ள சில சொற்களும் கருத்துக்களும் சைவ சித்தாந்தம், யோகம் பயின்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதல் நலம்)

    கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
    மண்ணாசை பட்டேனை மண் உண்டு போட்டதடா
    பொன்னாசை பெண்ணாசை பேர்கேனே என்குதே
    மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே
    திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே
    வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
    சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே
    மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
    சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே
    கட்டு வர்க்கத்தாசை கழலேனே என்குதே
    செட்டு தனில் ஆசை சிதையேனே என்குதே
    மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
    சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே 2.

    கன்னிவனமாம் மதுரயம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே! மண் மீது ஆசை கொண்டு மேன்மேலும் நிலம் வாங்கி மகிழ்ந்திருந்தேன், அந்த மண்ணே இந்த உடலைத் தின்றுவிட்டதே. பொன் மீதும், பொன் நகை மீதும் கொண்ட ஆசையும், பெண்ணாசையும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்கிறதே. பெண்டு, பிள்ளைகள், உறவுகள் என்று நான் கொண்ட ஆசைகள் எதனையும் மனம் மறக்க மாட்டேன் என்கிறதே, எட்டு திசைகளையும் கட்டியாள வேண்டுமென நான் கொண்ட ஆசையும் தீரமாட்டேன் என்கிறதே; பற்பல வித்தைகள், அறுபத்தினாலு கலைகள் மேன்மேலும் கற்கவேண்டும் என்கிற மனத்தாசையை விட்டொழிக்க இயலவில்லையே, அட்டமாசித்திகளை எப்படியும் அடைதல் வேண்டுமென்ற எண்ணமும் நீங்கவில்லையே; மந்திரங்கள் செய்யும் மாயங்கள் அனைத்தையும் கற்றல் வேண்டுமென நினைப்பது மறக்கவில்லையே, பிறர் பார்க்க அழகொழுக இருக்க நினைப்பதும் துறக்க முடியவில்லையே; வியாபாரம் செய்து அதில் லாபம் அடையவேண்டுமென்ற ஆசை சிதைய மறுக்கின்றதே (செட்டு = வியாபாரம்), வேளைதோறும் சலவை செய்த ஆடை அணியும் ஆசை மறக்கமாட்டேன் என்கிறதெ, சொற்றினைக் கொள்ளும் வயிறும் நிரம்பி விட்டது போதும் எனும் நிலையை அடையமாட்டேன் என்கிறதே.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    ஐந்து புலனும் அடங்கேனே என்குதே
    சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே
    காமக் குரோதம் கடக்கேன் என்குதே
    நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே
    அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
    கைச்சு மின்னுமானம் கழலேனே என்குதே
    நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே
    ஆர்க்கும் உயிர் ஆசை அழியேனே என்குதே
    கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும்
    எண்ணும் திரமா இருப்போமென்று எண்ணுதே
    அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரவா எண்ணுதே
    தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
    நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
    உரகப்படத்து அல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே
    குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே
    அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே
    மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
    ஆதரவும் அற்றிங்கு அரக்காய் உருகிறண்டா
    கந்தனை ஈன்றருளும் கன்னிவனநாதா
    எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா 3.

    என் ஐம்பொறிகளும் அடங்கமாட்டேன் என்கின்றனவே, அவற்றல் வரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றைத் தேடுகின்றதே. எதையெதையோ எண்ணி மனம் சஞ்சலப்படுவது நின்று, தெளிய மாட்டேன் என்கிறதே. காமமும் குரோதமும் தணிய மறுக்கின்றதே, நானே ராஜா நமக்கு நிகர் எவருமில்லை என்கிற ஆணவம் தினந்தோறும் தோன்றுதே. அச்சமும், ஆங்காரமும் அடங்க மறுக்கின்றதே, அனைத்தையும் ஒழித்தாலும் மனம் மட்டும் குரங்குபோல் தாவுவது நிற்கவில்லையே. நீர்க்குமிழி போன்ற நிரந்தரமற்ற இந்த உடலை சாச்வதமானது என்று மனம் எண்ணுகின்றதே, உயிர்மேல் இருக்கும் ஆசை அழியமாட்டேன் என்கிறதே. கண்ணெதிரே மாண்டவர் பிணம் கட்டையில் எரிவது கண்டும், நாம் மட்டும் நிரந்தரமாய் இருப்போம் என்று எண்ணம் இருக்கிறதே. நிரந்தரமில்லாததை நிரந்தரம் என்று எண்ணுகிறதே, சுற்றிலுமுள்ள ஆர்ப்பாட்டங்களிலிருந்து தனித்து இருக்க மறுக்குதே, மனம் அனைத்திலும் விடுபட்டு இருக்கவும் முடியலையே. இடுகாட்டில் மரணக் குழியோ உன்னை நான் உண்டு தீர்ப்பேன் என்கிறதே, பெண்ணுறவின் மீதான ஆசை உன்னைக் கெடுத்தே தீருவேன் என்கிறதே. தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன் குடியைக் கெடுப்பேன் என்று கச்சைகட்டி நிற்கின்றதே, அழகிகளின் அம்பு விழிகள் என் ஆவியைக் குடித்தே தீருவேன் என்கிறதே. எமனோ பெண்ணுருவத்தில் வந்து என்னை மோசம் செய்ய எண்ணுகிறான், என்னைத் தேற்றி ஆதரவு தர எவருமின்றி நான் அரக்கைப் போல உருகுகின்றேனடா. கந்தவேளாம் முருகக் கடவுளைப் பெற்றெடுத்த மதுரையம்பதிவாழ் சிவனே, எந்த விதத்தில் நான் நினது திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்?

    கன்னிவனநாதா கன்னி வனநாதா
    புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாவோ
    கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாவோ
    கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ
    நீர்யாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ
    பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ
    வேதனை செய்தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ
    அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ
    மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ
    தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ
    சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ
    நோய் உண்ணவே மெலிந்து நொந்தநாள் போதாதோ
    பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ
    ஊனவுடல் கூன் குருடாய் உற்றநாள் போதாதோ
    ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ
    பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
    கெட்டநாள் கெட்டேன் என்று கெட்டநாள் போதாதோ
    நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ
    எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ
    காமன் கணையால் கடைபட்டல் போதாதோ
    ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ
    நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
    தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ
    உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ
    வருத்தம் அறிந்தையிலை வாவென்றழைத்தயிலை.

    கன்னிவனமாம் மதுரையம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே!! எத்தனை பிறவிகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை துன்பங்கள். புல்லாகவும், பூண்டாகவும் பிறந்து வாடிய காலம் போதாவோ, கல்லாகவும் மரமாகவும் கிடந்த காலம் போதாவோ. கீரியாகவும், புழுவாகவும் பிறந்து நொந்த காலம் போதாவோ நீர்வாழ் ஜந்துவாகவும், மண்ணில் ஊரும் உயிராகவும் இருந்தநாள் போதாவோ. பூதமுமாய், தேவனுமாய்ப் பிறந்து கிடந்த நாள் போதாவோ, பிறருக்குத் துன்பங்களைக் கொடுத்து வாழ்ந்த நாள் போதாவோ. அன்னையின் கர்ப்பத்தில் அடைபட்டுக் கிடந்தநாள் போதாவோ, மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாவோ. தாயாகவும், மனைவியாகவும் தாழ்ந்து கிடந்த நாள் போதாவோ, சேயாய், புருஷனாய் சென்ற நாள் போதாவோ. நோய் மலிந்து மெலிந்த நாள் போதாவோ, பேய்களுக்கு உணவாக ஆன பேயாகப் பிறந்த நாள் போதாவோ. பிறப்பெடுத்த நாள் முதலாய் கூன், குருடு, முடமாகத் துன்பம் அடைந்த நாள் போதாவோ, உண்ண உணவின்றி வாடி மெலிந்த நாள் போதாவோ. பிறப்பினால் களைப்பும், பரிதவிப்பும் அடைந்த நாள் போதாவோ, இருக்கின்ற காலமும் கெட்டதோடு, மேலும் கெட்டவனாக ஆனதும் போதாவோ. இந்த பாழ் பிறவி நிலையில்லை என்பது தெரிந்து வருந்தியது போதாவோ, என் வினையால் மற்றவர்கள் பாரம் சுமந்ததும் போதாவோ. காமன் கண்வீச்சால் கடைப்பட்டுப் போனதும் போதாவோ, எமன் கரங்களால் இடிபட்டடும் போதாவோ. பிரம்மனின் தலையெழுத்தால் வதையுண்டது போதாதோ, தேன்சொரியும் துளசிமாலை அணிந்த பெருமாளின் சக்கரத்தால் பட்டவினை போதாவோ. உருத்திராட்சம் அணிந்த சிவன் சம்ஹாரம் செய்ததால் துன்பப்பட்டது போதாவோ, என் வருத்தத்தை உணரவில்லை, போதும் பட்டது இனி முடியாது, வந்துவிடு என்னிடம் என்று அழைத்தாயில்லை, என் செய்வேன்.

    (கன்னிவனநாதரிடம் முறையீடு இன்னும் வரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (86)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் அன்புடன் இணைகிறேன்.

    “கலிகாலம்” எனும் இக்காலத்தில் கலாச்சாரம் சீரழியும், உலகில் உறவுமுறைகள் சீர்கெடும், மனித தர்மம் நிலைகுலையும் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கேள்வியுற்றிருக்கிறோம் .

    சே என்ன இதெல்லாம் கட்டுக்கதை ! சுத்த ஹம்பக் ! ஏதோ வேலையற்ற முன்னோர்கள் எம்மைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லிப் போன மூடக் கதைகள் என்றெல்லாம் எமது பகுத்தறிவு அடிப்படையில் நாம் அனைத்தையும் தள்ளி வைத்து வாழப் பழகிக் கொண்டோம்.

    ஆனால் இன்று நாகாரீக உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை இவ்வாழ்க்கை எங்கே இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது ?

    என்னடா? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் ? எனும் எண்ணம் உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நேற்றைய இங்கிலாந்து தொலைக்காட்சிச் செய்திகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று,

    கடந்த 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து அதிகதூரம் ஊடுருவும் போட்டியில் வெற்றியீட்டி இங்கிலாந்து நாட்டிற்குப் பதக்கம் வாங்கிக் கொடுத்த “டாம் டேலி((Tom daley)” எனும்19 வயது நிரம்பிய இளவலின் அறிவித்தலாகும்.

    அது என்ன அப்படியான அறிவித்தல் ?

    ss1தான் மற்றொரு ஆணுடன் காதல் வயப்பட்டிருப்பதான செய்தியே அது. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னனியில் இருத்திய காரணம் என்ன ? எனும் கேள்வி நெஞ்சை உருத்தத்தான் செய்கிறது.

    நாட்டின் இளவல்களுக்கு இரு முன்னுதாரணமாக விளங்க வேண்டியவர், மற்றைய இளம் சிறார்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டக்கூடிய ஒருவர் தான் இயற்கைக்குப் புறம்பான ( இதை இயற்கை என்று எண்ணுபவர் என்னை மன்னிக்கவும்) வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பது வளரும் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும் எனும் வாதிடும் சாராரும், இல்லை இவ்வாழ்க்கைமுறை இன்றைய காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகையால் இத்தகைய முன்னனி விளையாட்டுவீரர் வெளிப்படையாக அறிவித்தல் விடுத்தது சரியே என வாதிடுவோருக்கும் இடையிலான கருத்து மோதலை பகிரங்கமாக நடத்தவே இவ்வறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு எல்லைக்கோடுகள் மனிததர்மத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்று காட்டப்பட்ட உதாரணங்கள் நம் மத நம்பிக்கைகளின் வழியாக எமது மனங்களிலே மனிதநீதிகளாகக் காட்டப்பட்டன.

    இம்மனிதநீதிகளின் அடித்தளத்தில் தான் மானிட சட்டங்கள் இயற்றப்பட்டன.. அதிலிருந்து நழுவி நாம் எப்படியும் வாழலாம் எனும் வழிக்குள் அனைவரும் வந்து விட்டால் பின்னால் மனித தர்மங்களின் நிலைதான் என்ன ? எனும் கேள்வியால் எமது மனங்களை அச்சம் கவ்விக் கொள்ளத்தான் செய்கிறது..

    இத்தகைய வாழ்க்கை வழிமுறைகளுக்கு இதனை ஆதரிப்பவர்கள் தமது வாதத்திற்கு துணையாக பகுத்தறிவு எனும் போர்வையில் நாத்திகத்தை துணைக்கிழுப்பதை பார்க்கும் போது மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது.

    பெரியாரின் நாத்திகக் கொள்கை என்பது மூடநம்பிக்கைகளின் பெயரில் மனிதர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்ததே தவிர மானிட வாழ்க்கையின் அடிப்படை வாழ்க்கை முறையை மாற்றியமைத்து ஆணும், ஆணும் அன்றிப் பெண்ணும், பெண்ணும் தம்பதிகளாக வாழுவதற்கு நியாயம் கற்பிக்கவில்லை.

    இன்று நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இவ்வோரினத் திருமணங்கள் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அதிகாரத்திலிருக்கும் கூட்டரசாங்கமும், எதிர்கட்சி ஸ்தானத்திலிருக்கும் தொழில் கட்சியும் இவ்வாழ்க்கை முறைக்குத் தமது பூரண ஆதரவை வழங்கியிருப்பது கட்டுப்பாடற்ற சமுதாய வரம்புகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே உண்மை.

    மனித நாகரீகத்தின் அதி உச்சமான வாழ்க்கைமுறை எனும் போர்வையில் இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறைகளைச் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயாரால் ஆதரிப்பது எவ்வகையில் மக்கள் நலனை முன்னேடுப்பதாகும் என்று வாதிடுகிறார்கள் பலர்,

    மனிதனை மனிதனாக மதித்து பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே சந்தர்ப்பங்களை வழங்குவதே நாகரீகம் என்பதன் முழு அடையாளமாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மாவை, மம்மி என்றழைப்பதை வேண்டுமானால் நாகரீகமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர மாமி என்றழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

    அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நாகரீகம் என்று பெயர் சூட்டிவிட்டு ஜயோ எமது நாட்டில் சட்டம், ஒழுங்கு முறை சீர்குலைந்து விட்டதே என்று புலம்புவதால் என்ன பயன் ?

    சட்டம் ஒழுங்கு என்பனவற்றின் அமுலாக்கல் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்தே நடைமுறுத்தப்படுகிறது. அதை விடுத்து சமுதாயத்தில் வெற்றி பெற்றவர்கள் எனபவர்கள் எப்படியும் வாழலாம் எனும் உதாரணத்தை முன்னெடுப்பதன் மூலம் வளரும் தலைமுறையின் மனதில் சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் எவ்வகையான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ? என்பது அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

    இது ஒன்றும் புதிதல்ல இத்தகைய உறவுமுறைகள் அன்றைய காலத்திலும் இருந்தன ஆனால் அவை திரைமறைவில் அரங்கேறின என்றொரு வாதம் ஒரு மூலையில் இருந்து ஒலிக்கத்தான் செய்கிறது.

    கொலைகள் அன்றும் இன்றும் திரைமரைவில் நிகழ்கின்றன,. அதற்காக கொலையை இயற்கை என்று நாகரீகத்தின் பெயரால் நியாயப்படுத்தி விட்டால் கொலை கூட மனிததர்மமாகி விடுமா?

    இதுதான் எம் கண்முன்னால் அரங்கேறும் கலிகால வாழ்க்கைமுறையோ ?

    வருங்காலச் சரித்திரம் விடை பகரும் என நம்புவோம்

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 1

    மேகலா இராமமூர்த்தி

    கருணை மறவன்

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நின்றுவிட்ட ஓர் ஒப்பற்ற காப்பியமாகும். பண்டைத் தமிழர்தம் பண்பட்ட வாழ்க்கை முறையினையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வதற்கு ஓர் சிறந்த இலக்கியச் சான்றாகவும் இக்காப்பியம் விளங்கிவருகின்றது.

    அக்கால வழக்கத்தையொட்டி எழுதப்பட்ட மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

     Puhar-ILangoஇளங்கோவடிகள்

    அதுமட்டுமல்லாமல் தம்முடைய காப்பியத் தலைவனைக் குணத்திலே குன்றாகவும், குறைகளற்ற கோமகனாகவும் படைத்திடாமல் அதிலும் வேறுபட்டவராய்க் குற்றம் குறைகள் நிறைந்த சாதாரண மனிதனாகவே அவனைப் படைத்திருப்பதும் புதுமையே. ஆம்.. கோவலனின் வாழ்க்கைமுறை பற்றிப் புகார்க் காண்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அவனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு எதனையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

    இதனைக் காணும்போது நற்குடிப் பிறப்பாளனான கோவலன் நற்செயல்கள் எதனையுமே செய்யவில்லையா? கட்டிய மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு வாழ்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றானே…இஃது அவனுடைய ஒழுக்கக் குறைவைக் காட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது! என்றெல்லாம் நாம் சிந்திக்கத் தலைப்படுகின்றோம்.

    கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே கணிகையர் குலத்தில் பிறந்தும் கற்புக்கரசியாக வாழ்ந்த மாதவி நல்லாளுடன் கோவலன் நடத்திய இல்வாழ்க்கையைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அதிகம் அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பமே நமக்கு வாய்க்கவில்லை. அதனால்தானோ என்னவோ..அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம். கோவலன் செய்த அறச் செயல்களுக்கும் ஓர் அளவில்லை என்பதனை மதுரைக் காண்டத்திலேதான் (அவன் கொலை செய்யப்படுவதற்குச் சற்றுமுன்பு) நமக்கு அறியத் தருகின்றார் காப்பிய உத்திகளை அமைப்பதில் கைதேர்ந்தவரான இளங்கோவடிகள்!

    கோவலனின் கருணை உள்ளத்தையும், எளியோர்மாட்டு அவன் காட்டும் பேரன்பையும் நாம் அறிந்து மகிழும் வகையில் அவற்றைப் பற்றிய செய்திகளை ’அடைக்கலக் காதை’ எனும் பகுதியில் வைத்துள்ளார் ஆசிரியர். நமக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் விளங்கும் கோவலனின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்குமுரிய மறுபக்கம் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகின்றது.

    பூம்புகாருக்கு அருகிலுள்ள ’தலைச்செங்காடு’ என்னும் ஊரில் வசித்துவரும் கோவலனின் நெருங்கிய நண்பனான, நான்கு மறைகளையும் நன்குணர்ந்த, அந்தண குலத்தைச் சேர்ந்த ’மாடலன்’ என்பவன் தன் திருத்தல யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரையை ஒட்டிய பகுதியில் சமணத் துறவியான கவுந்தியடிகளுடன் (சமணப் பள்ளியில்) தங்கியிருக்கும் கோவலனையும், கண்ணகியையும் சந்திக்கின்றான்.

    கோவலனின் உருவழிந்த, வாடிய தோற்றத்தைக் கண்டு வருந்திக் கோவலன் மதுரை வந்த காரணம் என்ன? என்று மாடலன் வினவ, பொருளினை இழந்து வறுமையுற்றிருக்கும் தன் நிலையை மாற்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் ஈட்டவே தாம் அங்கு வந்ததாகக் கோவலன் கூறுகின்றான். அதுகேட்டு அவனுடைய முந்தைய வளமான வாழ்வையும், இன்றைய அவல நிலையையும் நினைந்து மட்டிலா மனவேதனை அடைகின்றான் மாடலன். அவ்வேதனையினூடே வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குக் கோவலனின் கடந்த காலத்தை, அவனுடைய அரிய குணங்களைப் புலனாக்கி நம்மையும் அவனிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொள்ளவைக்கின்றன.

    மாடலன் கோவலனைப் பற்றி அப்படி என்னதான் சொல்லியிருப்பான் என்ற ஆவல் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பொங்குகின்றதல்லவா? கோவலனுடைய கடந்த காலத்திற்கு நாமும் சற்றுச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்வோமா?

    கோவலனும், மன்னனிடம் ’தலைக்கோல்’ பெற்ற (சிறந்த நாட்டிய நங்கைக்கு மன்னனால் செய்யப்படும் சிறப்பு) புகழ்மிக்க மாதவியும் மகிழ்வோடு நடத்திய இல்லறத்தின் பயனாய் அருஞ்சாதனைகளைப் புரிவதற்கென்றே தோன்றியது ஓர் ஒப்பற்ற பெண் மகவு. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று மாதவியின் குலத்தைச் சேர்ந்த கணிகையர் அனைவரும் யோசித்திருக்கும் வேளையில் கோவலன் ஓர் சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்கின்றான்; அப்பெயரைத் தான் தேர்ந்தெடுத்த காரணத்தையும் அனைவருக்கும் அறியத் தருகின்றான்.

    ”முன்பொரு காலத்தில் எம்குல முன்னோனான வணிகன் ஒருவன் கடற்பயணம் செய்தபோது அவனுடைய மரக்கலம் பேரலைகளினால் தாக்கப்பட்டு உடைய, கரையை அடையமுடியாமல் அவன் துயருற்றான். அப்போது அவன்முன் தோன்றிய ’மணிமேகலா தெய்வம்’ என்ற பெண்தெய்வம் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவனைக் காத்துக் கரை சேர்த்தது. அத்தெய்வமே எங்கள் குலதெய்வம் ஆகும். அத்தெய்வத்தின் பெயரையே என் மகளுக்குச் சூட்டுக” என்கின்றான் கோவலன்.

    அதுகேட்டு, அங்குக் கூடியிருந்த ஆயிரம் கணிகையரும் (ஆயிரம் பேர் என்பது கவிச்சுவைக்கான மிகைப்படுத்தலாயிருக்கலாம்) அக்குழந்தைக்கு “மணிமேகலை” என்ற அழகிய பெயரைச் சூட்டி வாழ்த்தினர். இதனை இளங்கோவடிகள்,

        “அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்,
    மணிமே கலையென வாழ்த்திய ஞான்று” (அடைக்கலக் காதை: 38-39) எனக் குறிப்பிடுகின்றார்.

    மகிழ்ச்சி நிறைந்திருந்த அவ்வேளையிலே அழகிய மடந்தையாகிய மாதவியோடு சேர்ந்து செம்பொன்னைத் தானம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்றான் கோவலன்.

    அப்போது அங்கே அச்சம் தரத்தக்க ஓர் காட்சி தென்படுகின்றது. நிறைந்த ஞானத்தையுடைய வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கையில் கோலூன்றியபடித் தானம் பெறுவதற்காகக் கோவலன் இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார். கோவலன் இல்லத்தில் குழுமியிருந்த அனைவரும் அம்முதியவரையே அச்சத்தோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்…அவருக்கு ஏதேனும் ஆபத்து நெருங்குகிறதோ? நம் யூகம் சரியே! தள்ளாடியபடியே நடந்துவரும் அப்பெரியவரைப் பாகனிடமிருந்து தப்பித்த மதம் கொண்ட யானை ஒன்று துரத்தி வருகின்றது; அத்தோடு நில்லாமல் அவரைத் தன் துதிக்கையில் பற்றியும் கொண்டுவிட்டது. அதனைக் கண்டோர் அனைவரும் செய்வதறியாது பயத்துடன் திகைத்து நிற்க, அதுகண்ட கோவலன் பாய்ந்துசென்று ’ஒய்’யென்ற (யானையைத் திட்டும் ஆரிய மொழி) ஒலி எழுப்பியபடியே மின்னல் வேகத்தில் அந்த முதிர்ந்த அந்தணரை யானையின் பிடியினின்றும் விடுவித்து அவர் உயிரைக் காக்கின்றான்; அத்தோடு நிறுத்தவில்லை. அந்த யானையின் வளைந்த துதிக்கையின் இடையே புகுந்து அதன் மதத்தையும் அடக்கிக் ’கருணை மறவனாக’த் திகழ்கின்றான். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ’கருணை மறவன்’ என்ற சொல்லாட்சிப் புதியதாகவும், சுவையாகவும் இருக்கக் காண்கிறோம்.

    அந்த முதிய அந்தணர் மீது கொண்ட கருணையால்தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து ’மறவனாக’ மாறி மதயானையை அடக்கி வீரனாகத் திகழ்கின்றான் கோவலன். ஆகவே ’அருள்வீரன்’ என்னும் பொருள்பட அமைந்த ’கருணை மறவன்’ என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருத்தமானதுதானே?

    ”…………………………உயர்பிறப் பாளனைக்
    கையகத்து ஒழித்ததன் கையகம் புக்குப்
    பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி,
    மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
    பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!”  (அடைக்கலக் காதை: 48-53) என்பவை மேற்சொன்ன நிகழ்வை விளக்கும் இனிய வரிகள்.

    இவ்வாறு அளவற்ற அருளாளனாகத் திகழும் கோவலன் ஓர் அபலைப் பெண்ணுக்கு அரிய உதவி ஒன்றைச் செய்து அவள் வாழ்வைக் காக்கின்றான். அது என்ன?

    (தொடரும்)

    Share
  • அமெரிக்காவில் என்று தணியும் சாமான் வாங்கும் மோகம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் நான் அமெரிக்க நன்றி தெரிவிக்கும் பண்டிகை (Thanksgiving) பற்றி எழுதியிருக்கிறேன்.  இந்த வருஷம் அதில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் பற்றி இப்போது எழுதுகிறேன்.

    இந்தியாவில் பல காரணங்களுக்காக விடிய விடிய விழித்திருந்திருக்கிறோம்.  முதலாவதாக இறைவனைப் பற்றிச் சதாகாலமும் சிந்தித்து அவனைத் தொழுவதற்காக சிவராத்திரி அன்று விழித்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அடுத்ததாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பெண்கள் இரவெல்லாம் விழித்திருந்து பலகாரங்கள் செய்வார்கள்.  பலகாரங்கள் செய்யும் வேலையை இரவில் முடித்துவிட்டுத் தீபாவளி அன்று பகல் கொஞ்சம் ஓய்வு எடுப்பதோடு சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளிலும் காலம் கழிப்பார்கள்.  அடுத்து பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் இரவெல்லாம் விழித்திருந்து விழுந்து விழுந்து படிப்பார்கள்.  அந்தக் காலத்தில் கிராமங்களில் நாடகங்கள் நடத்தும்போது இரவு முழுவதும் ஊர் ஜனங்கள் விழித்திருந்து அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள்.

    ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு சாமான்கள் வாங்குவதற்குப் பலர் இரவு விழித்திருந்திருக்கிறார்கள்.  ஐரோப்பியக் குடியேறிகள் முதன் முதலில் அமெரிக்காவிற்கு வந்தபோது அப்போது அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் அவர்களை வரவேற்று நிறைய உதவிகள் புரிந்தார்கள்.  ஒரு ஆண்டு கழிந்த பிறகு குடியேறிகள் தாங்கள் புது இடத்தில் உயிர்பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.  இப்படி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் பண்டிகையாக வளர்ந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்தப் பண்டிகையை நவம்பர் மாதக் கடைசி வியாழனன்று கொண்டாடும் பண்டிகையாக சட்டபூர்வமாக்கினார்.  இருபதாம் நூற்றாண்டில் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் நவம்பர் மாத நாலாவது வியாழக் கிழமையன்று அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாளிலிருந்து கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் வாங்கும் வழக்கம் இருந்ததால் பரிசுகள் வாங்குவதற்கு நிறைய நாட்கள் இருந்திருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!.   அப்போதே சாமான்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் அமெரிக்கர்களிடம் இருந்திருக்கும்போலும்.

    நாளடைவில் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்குவது  எல்லோரும் பின்பற்றும் செயலாக மாறியது.  இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட வணிக நிறுவனங்கள் அன்று பெரிய அளவில் பொருள்களின் விலையில் தள்ளுபடி கொடுத்து அவற்றை விற்க முற்பட்டார்கள்.  அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட சாமான்கள் ஒரு சிலவே கடைகளில் இருக்கும்.  ஆனால் அவற்றை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் உள்ள பொருள்கள் தீர்ந்து போய்விட்டாலும் மற்றப் பொருள்களை வாங்குவார்கள்.  இதற்காகவே கடைகளையும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் அதிகாலையிலேயே திறந்துவிடுவார்கள்.  அந்த வெள்ளிக்கிழமையை  கறுப்பு வெள்ளி (Black Friday) – ‘அதாவது வரவு வரும் நாள்’ – என்று அழைப்பார்கள்.  வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகத்தில் நஷ்டம் வந்தால் சிவப்பு மையில் கோடிடுவார்களாம்.  இந்த வெள்ளியன்று லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் இதைக் கறுப்பு வெள்ளி என்கிறார்கள்.

    முதலில் கறுப்பு வெள்ளியன்று காலையில் எட்டு மணிக்குக் கடை திறக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள்.  இதுவே காலை ஐந்து மணிக்கே திறக்க ஆரம்பிக்கும் பழக்கமாக உருவெடுத்தது.  ஒரு கடை எட்டு மணிக்குத் திறந்தால் அதற்குப் போட்டியான கடை ஏழு மணிக்கே திறக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு இன்னொரு கடை ஆறு மணிக்கே திறக்க ஆரம்பித்து, பின் எல்லாக் கடைகளும் காலை ஐந்து மணிக்கே திறக்கும் பழக்கத்தை ஆரம்பித்தன.

    வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்கக் கடைக்கு வரவழைப்பதில் கடைகளுக்குள் பலத்த போட்டி இருப்பதால் நன்றி தெரிவிக்கும் பண்டிகை அன்றே கடைகளைத் திறக்கும் பழக்கத்தை சில கடைகள் மேற்கொள்ளத் தொடங்கின.  அன்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மூன்று மணியிலிருந்து நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்து ஆறு மணிக்கு வான்கோழியோடு கூடிய பெரிய விருந்தை உண்ண ஆரம்பிப்பார்கள்.  மதுபானங்களைத் தாராளமாக அருந்தும் இந்த விருந்து முடிய இரவு வெகு நேரம் ஆகும்.  அதனால் அன்று அத்தியாவசிய சேவைகள் புரியும் மருத்துவமனைகள், போக்குவரத்து போன்றவை தவிர எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை.  இதில் டிபார்ட்மெண்ட் கடைகளும் அடக்கம்.  ஆனால் கடைகளுக்கிடையே போட்டிகள் வலுத்து வருவதால் போன வருடம் வியாழக் கிழமை அன்றே விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கடைகளைத் திறந்துவிடும் பழக்கத்தை ஓரிரண்டு கடைகள் ஆரம்பித்தன.

    இந்த வருடம் இது வரை செய்திருந்த சாதனைகளை எல்லாம் முறியடிப்பது போல் எல்லா கடைகளும் வியாழக் கிழமை இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் செய்துகொண்டிருந்தன.  (ஓரிரண்டு டிபார்ட்மெண்ட் கடைகள் மற்ற நாட்களைப்போல் வியாழன் காலையிலேயே திறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.  அடுத்த வருடம் எல்லாக் கடைகளும் இதைப் பின்பற்றலாம்.)  வாடிக்கையாளர்களும் இரவு முழுவதும் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  கடை ஊழியர்களும் அவசர அவசரமாக விருந்தை முடித்துக்கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட மறுநாள் வெள்ளியன்று கடைகளை காலையில் சீக்கிரமே திறந்தாலும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான வியாழனன்று எல்லா நிறுவனங்களும் மூடியிருக்குமாதலால் எப்போதும் கார்கள் நிறைந்து காணப்படும் அமெரிக்கச் சாலைகள் அன்று ஒரு சில கார்கள் தவிர – இந்தக் கார்களில் செல்லுபவர்களும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையைக் கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் – வெறிச்சோடிப் போயிருக்கும்.  அன்று வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த சாலைகளைப் பார்ப்பதற்காகவென்றே நான் கொஞ்ச தூரம் வெளியே செல்வதுண்டு.  ‘இன்று ஒரு நாள் எல்லோரும் வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள்’ என்ற ஒரு நினைப்பே எனக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும்.  இனி அதெல்லாம் கிடையாது போலும்.

    இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்வதால் அவர்களுடைய பண்டிகைகளுக்கெல்லாம் விடுமுறை உண்டு.  வருடத்தில் இருபது நாட்களாவது விடுமுறை நாட்களாக இருக்கும்.  அமெரிக்காவில் மிகக் குறைந்த நாட்களே விடுமுறை நாட்கள்.  ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை நாள், கிருஸ்துமஸ் பண்டிகை நாள் ஆகியவையே.  டிபார்ட்மெண்ட் கடைகள் ஈஸ்டர், நன்றி தெரிவிக்கும் பண்டிகை,கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களுக்கு மட்டும் மூடியிருக்கும்.  மற்ற விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு விடுமுறையாதலால் அன்று சாமான்கள் வாங்க வருவார்கள் என்று டிபார்ட்மெண்ட் கடைகள் திறந்திருக்கும்.  ஈஸ்டருக்கு மூடுவதைப் பல கடைகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மூடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.  இப்போது நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மூடுவதையும் மெதுவாகவிட்டுவிடுவார்கள் போலும்.  எதற்காக?  சாமான்களை வாங்கிக் குவிப்பதற்காக.

    சிகாகோவில் பிரபல சாக்கலேட் விற்கும் கடை ஒன்று அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து மறு நாள் வெள்ளி காலை ஒன்பது மணி வரை தள்ளுபடி விற்பனை செய்தது.  இந்த நேரத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டின் விலை இருபத்தைந்து காசுகள்.  அந்த நேரத்திற்குப் பிறகு போனால் ஒன்றின் விலை நாற்பது காசுகள்.நூற்றுக் கணக்கில் சாக்கலேட் வாங்கும்போது தள்ளுபடி விற்பனைக்கும் தள்ளுபடி அல்லாத விற்பனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.  டி.வி. போன்ற விலையுயர்ந்த சாமான்கள் வாங்கினால் நிறையப் பணம் மிச்சம் செய்யலாம்.  இருப்பினும் ஆற அமர விருந்துண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய சமயத்தில் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு மால்களுக்குஓடி வர வேண்டுமா?

    கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் தங்கள் சாமான்களை வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்குப் பல வகையாக விளம்பரம் செய்தனர்.  பிறருக்குக் கொடுப்பதற்குப் பரிசுகள் வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த வருஷம் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள்,தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டியசாமான்கள் ஆகியவற்றைக் கூட தள்ளுபடி விற்பனையில் இடம் பெறச் செய்தார்கள்.  ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து ஒன்றைப் பரிசுக்காக வாங்கினால் இன்னொன்றைத் தங்களுக்காக வாங்கிக்கொள்ளும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பொருள்கள் வாங்கும் வெறியை வளர்த்துவிட்டார்கள்.

    ஒரு இருபத்தைந்து வயது வடிக்கையாளர் முதலில் நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து கடை கடையாகச் சென்று அறுபது அங்குல டி.வி., ஐபாட்(iPod), குக்கர் என்று சாமான்களாக வாங்கித் தள்ளியிருக்கிறார்.  இதெல்லாம் அவருக்காகவும் அவருடைய மனைவிக்காகவும் மட்டுமே.

    இதெல்லாம் போக ஆன்லைனில் பொருள்கள் வாங்கியவர்கள் பட்டியல் வேறு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போகிறது.  இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகமாம். இதில் கால் பங்கு செல்போன் மூலம் வாங்கப்பட்டதாம்.

    அமெரிக்காவில் தயாராகும் பொருள்களை வாங்குங்கள் என்று ஒரு சாரார் விளம்பரம் செய்கிறார்கள்.  ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாம் இவர்கள் ‘designer goods’ என்று அழைக்கும் விலையுயர்ந்த அணிகலன்கள், உடைகள், காலணிகள்.  இவற்றிற்கு அமெரிக்கர்கள் நிறையப் பணம் கொடுக்க வேண்டும்.  மேலும் அமெரிக்காவில் தயாராகும் எந்தப் பொருளுக்கும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  ஏனெனில் வெளிநாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் சம்பளம் அமெரிக்கத் தொழிலாளிகளுக் கொடுக்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு.  வளர்ந்துவரும் நாடுகளில் தொழிலாளர்கள் பாதுக்காப்பிற்கு இந்தக் கம்பெனிகள் செய்ய வேண்டியவற்றை அந்தந்த நாட்டு அரசுகள் சரியாகக் கண்காணிப்பதில்லை.  பங்களா தேஷில் போன வருடம் நடந்த ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை பகிஷ்கரிக்கும் எண்ணம் அமெரிக்கர்களுக்கு வந்தபாடில்லை.

    அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாம்.  டிபார்ட்மெண்ட் கடைகளில் நடக்கும் விற்பனை ஒவ்வொரு வருடத்திற்கும் கூடிக்கொண்டே போக வேண்டுமாம்.  அப்போதுதான் அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்குமாம்.  என்ன பொருளாதாரமோ.  நுகர்வோர்களை உருவாக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாலும் முடியவில்லை.  இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர் காவிரிமைந்தன்

    நாளை முதல் குடிக்க மாட்டேன்…

    கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 2002ஆம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக ராகப்ராவகம் சுந்தர் அவர்களது இல்லத்திற்கு சென்றபோது.. அங்கே இருந்த விருந்தினர் இருவர் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிவசு எனப்படும் சிவசுப்பிரமணியன் அவர். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்பது கிடைத்த தகவல்.

    சந்தித்த சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். ஆம். கவிஞரின் பிறந்தநாளில் இடம் பெற வேண்டிய வணக்கம் தமிழகம் பகுதியில் கவிஞரின் உதவியாளர் திரு. இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பநியாகும். கொட்டும் மழையிலும் என்னுடன் இணைந்து வந்த நண்பர்.. கண்ணதாசனின் பக்தர் வேலுமணி அவர்களின் மூலம். எதோ ஒரு சில காரணங்களால் இது போன்ற பேட்டிகளைத் தவிர்த்து வந்த திரு இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்தது இனிய செய்தியாகும்.

    மேலும் சிவசு அவர்களிடம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அழைப்பிதழின் மேலுறையில் இடபெற்றிருந்த கவியரசின் உருவப்படத்தைப் பார்த்து கவிஞரைப் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள்.. இமயமென உயர்ந்து எங்கள் மனதில் என்றும் நிலைக்கத் தக்கவை. ஆம். இந்த உலகில் நான் இவரைத்தான் மிகவும் நேசிக்கிறேன். ஒருவர் அன்னை தெரசா .. அடுத்து கவிஞர் கண்ணதாசன். ஏன் என்பதற்கும் அவரே தந்த விளக்கம் அசர வைத்தது. அன்னை தெரசா பற்றி அகிலம் அறியும். ஆனால் கண்ணதாசனைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா?

    உலகம்போற்றும் உத்தமர் காந்தியடிகள் தனது சத்தியசோதனையில் தன்னைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தான் செய்த சில தவறுகளையும் பதிவு செய்து மக்கள் மனதில் உயர்ந்தார். அதைவிட பல மடங்கு.. ஏன் தன் வாழ்க்கை முழுவதையுமே தான் செய்த தவறுகளையெல்லாம் முழுக்க முழுக்க பேச்சிலும் ஏட்டிலும் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாய் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன் மட்டுமே. ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றிய நல்ல குணாதிசயங்களை மட்டுமே இவ்வுலகம் அறியச் செய்வது இயல்பு. எந்த வேளையிலும் எந்த ஒரு தனி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல! வாழும் இந்த உலகில் சிவசு அவர்களின் கணிப்பு எங்களைச் சிந்திக்க வைத்தது! இவற்றையும் தாண்டி கவிஞரின் புகழ் நிரந்தரமாக்க எப்படி முடிந்தது? தமிழ் அல்லவா கவிஞரை இன்றும் நம்மோடு இணைத்து வைத்துள்ளது?

    என்னைப்போல் வாழாதீர்கள்.. நான் எழுதியது போல் வாழுங்கள் என்பது தானே கண்ணதாசன் செப்பு மொழி!

    ‘நீதி’ என்கிற திரைப்படத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்ட கதாநாயகன் பாடுன்கின்ற பாடல் ஒன்று இடம் பெற வேண்டிய நிலையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்து கவிஞருக்காக காத்திருந்தபோது.. தனக்கு தோன்றிய பல்லவியை வைத்து இசை அமைப்பில் இணைத்திருந்தார். கவிஞர் அங்கே வந்தவுடன்.. தான் வைத்திருந்த பல்லவியையும் இணைத்து கவிஞரிடம் காட்ட.. கதாநாயகன் .. இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வதாக காட்சி..

    இன்று முதல் குடிக்க மாட்டேன் – சத்தியமடி தங்கம் என்கிற பல்லவியை பார்த்து கண்ணதாசன் மெல்லிசை மன்னரிடம் தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து உன் பல்லவிக்கான சந்மனமிது. ஆனால் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய மாட்டான். எனவே, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றி படலை எழுதித் தந்த வரலாறு இப்பாடலுக்கு உண்டு
    .
    ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் .. என்கிற வைர வரிக்காக கண்ணதாசனை உளமாரப் பாராட்டத் தோன்றுகிறது
    .
    கவியரசே உன்னால் மட்டுமே படைத்தவன் மேல் இப்படி பகிரங்க குற்றம் சாட்ட முடிந்திருக்கிறது. இதிலிருந்து தப்ப.. முடியாமல் பரமனும்.. பிரம்மனும் அல்லவா சங்கடப் படுவது போல் தோன்றுகிறது..

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

     

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

    கருத்துக்களை வரவேற்கிறேன்.. கவிஞரைப் பற்றிய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய புளித்துப்போன .. உதவாத கேள்விகளைத் தவிர்த்து அவர்தம் பாடல்களில் உள்ள சுவைதனை, தமிழினை.. இன்னுமின்னும் இன்பம் வாசகர்கள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..

    காவிரிமைந்தன்

    Share
  • ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கரிகாலன் விருது

    ’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    jeyanthi

    தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது.

    2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார்.

    அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

    விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.

    நா. ஆண்டியப்பன்
    தலைவர்
    சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

    தேர்வுக்குழு அறிக்கை

    மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 16 – லூவ்ரெ அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ், ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம்.   இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற  ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.

     Lovre_Suba1

    லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)

    652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி.  http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.

    லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான்  பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக  மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

     Lovre_Suba2

    நுழைவாயிற்பகுதி (2010)

    லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.

    இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

    லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார்.  இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.

    அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.  நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன.  ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார்.  மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!

     Lovre_Suba3

    அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம்  (2010)

    பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.

     தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக  ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.

    முதலில்  நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான்  டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.

    தொடரும்…!

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 19ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    உடற்கூற்று வண்ணம்.

    ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும்
    அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
    ஊறுசுரோணித மீது கலந்து 1.

    பனியிலொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்துபுகுந்து
    திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
    பார்வை மெய்வாய் செவி கால்கைகளென்ற 2.

    உருவமுமாகி உயிர்வளர் மாதம் ஒன்பதுமொன்றி
    நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து
    யோகமும் வாரமும் நாளும் அறிந்து 3.

    மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட வுந்தி
    உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி
    ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து 4.

    பேதைகள் இருவர் ஆணும் பெண்ணுமாய் இனிமை தரும் சுகானுபவத்தில் திளைத்திருக்க, அன்பு பெருக, உணர்வு மயங்கி, கலவியின் பயனாய் ஆண்மகன் சுக்கிலம் தலைவியின் சுரோணிததில் கலந்ததும்;

    இவ்விரு கலப்பில் சுக்கிலம் பனித்துளியின் பாதியளவில் சுரோணிதச் சேர்க்கையால், தாமரை மொட்டைப் போலவும் பின் ஆமை வடிவம் கொண்டும் வளர்ந்து பெரிதாகி கண், காது, மூக்கு, கால், கைகள் இவைகளெல்லாம் சிறிது சிறிதாகப் பிரிந்து வளர்ந்து;

    சிசுவின் உருவம் வளர்ந்து ஒன்பதும் ஒன்றுமாய் மாதங்கள் முடிந்ததும், தலைவி வேதனையுற, வருந்தியந்த சிசுவும் மண்ணில் விழ, கூடியிருந்த சுற்றம் அந்த சிசுவிற்கு நாள், நட்சத்திரம் கோள்களைக் கணித்திட;

    கூடியிருந்த மாதரார் கூட்டம் குழந்தையை எடுத்துச் சீராட்டி தூளியிலிட்டுத் தாலாட்ட, சிறுகச் சிறுக அந்தச் சிசு கால் கைகளை உந்தி விளையாடிப் புரண்டு படுத்து தவழ்ந்து, தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் அருந்தி ஓரறிவு, ஈரறிவு என வளர்ந்து வரும் காலத்தில்;

    ஒளிநகையூற இதழ் மடவாரும் உவந்து முகந்திட
    வந்து தவழ்ந்து மடியிலிருந்து மழலை மொழிந்து
    வா இரு போ என நாமம் விளம்ப; 5.

    உடை மணியாடை அரைவடமாட உண்பவர்
    தின்பவர் தங்களொடு உண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
    தேடிய பாலரொடோடி நடந்து
    அஞ்சு வயதாகி விளையாடியே 6.

    உயர்தரு ஞான குரு உபதேசமும் தமிழின் கலையும்
    கரைகண்டு, வளர் பிறையென்று பலரும் விளம்ப
    வாழ் பதினாறு பிராயமும் வந்து 7.

    மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
    கொண்டை புனைந்து, மணி பொனிலங்கு பணிகளணிந்து
    மாகதர் போகதர் கூடி வணங்க 8.

    சின்னஞ் சிறியதாய் மல்லிகை மொட்டாய் பற்கள் வெளிவர, மெல்லிய இதழில் மடவார் முகர்ந்து முத்தமிட, குழந்தையும் மகிழ்ந்து அவர்பால் செல்ல, தாய்மடியேறி மழலைகள் மொழிய, ‘வா’ எனவும் ‘போ’ எனவும் சொற்களைப் பேசித் தொடர்ந்து ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் கொஞ்சி அழைக்க;

    பட்டாடைகளும், பன்மணி மாலையும், தங்கத்தில் அரைஞாண் இடையினில் ஆட, உண்பவர், தின்பவர் செயலைப் பார்த்துத் தானும் உண்டும், பருகியும், தெருவில் ஓடி, புழுதியில் அளைந்து, தன்வயதொத்த பாலரைத் தேடி ஓடி விளையாடி, ஐந்து வயதாக ஆன பிறகு;

    தகுதியுள்ள குருவிடம் சேர்ந்து, ஞானோபதேசமும் நல்ல தமிழ்க் கல்வியும், சாத்திர நீதியும் கசடறக் கற்று, நூல் பல தேர்ந்து நன்கு பயின்று, வளர்பிறை போலவே நாளும் வளர்ந்து, பதினாறு வயதினை அடையும் போதினில்:

    நீண்ட கூந்தலைச் சீவி முடிந்து கொண்டைகள் இட்டு, ஆறு கால் கொண்ட நீலநிற வண்டுகள் மொய்க்கும் நல்ல மலரில் மாலைகள் கட்டி அணிந்து, மணிகள் பொதிந்த பொன் அணிகளை அணிந்து பார்ப்பவர் அனைவரும் கூடிநின்று பாராட்டி நிற்க;

    மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு
    திரண்டு, வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
    மாமயில் போல் அவர் போவது கண்டு; 9.

    மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
    சந்திகழ் கொங்கை மருவ மயங்கி இதழமுதுண்டு
    தேடிய மாமுதல் சேரவழங்கி; 10.

    ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
    வம்பில் இழந்து,மதன சுகந்த விதனமிது என்று
    வாலிப கோலமும் வேறு பிரிந்து; 11.

    வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திரு
    கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரை திரை வந்து
    வாத விரோத குரோதம் அடைந்து
    செங்கையினில் ஓர் தடியுமாகியே 12.

    மன்மதனையொத்த அழகுடையவனாக இவன் இருக்கிறானே என மோகங் கொண்ட மங்கையர்கள் மனம் மயங்கி, செவ்வரி படர்ந்த கண்களால் பார்த்து மருண்டு அழகிய மயில்கள் பவனி செல்வது போல போகும் அவர்கள் செல்லும் காட்சியும்;

    தன்னைப் பார்த்து மயம் மயங்கிச் செல்லும் அந்த மாதைப் பின்பற்றிச் சென்று, அவளது கொங்கைகள் தன் மார்போடு இழைய மருவிக் கொண்டு, இதழோடு இதழ் வைத்து இன்பம் தேடி, அவள் விரும்பியவாறு இன்பமளித்து;

    முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்களையெல்லாம் திரட்டி, தான் சேர்த்தவற்றையும் இப்படி இன்ப நாட்டத்தில் கொண்டு செலுத்தி, மதன சுகங்களின் மிகையால் செல்வம் கரைந்து, உடலும் மெலிந்து வாலிபத் தோற்றம் மாறி கிழத்தனம் எய்தி, மிகுந்த சுகத்தின் பலன் இது என பிறர் பரிகசிக்க;

    செல்வம் அழிந்து, இளமை ஒழிந்து, பற்கள் விழுந்து, கண்கள் இருண்டு, வயதின் முதிர்ச்சியால் தலை நரை படர்ந்து, தோல் சுருங்கி, ஆத்திரமும், பொறாமை குணங்களும் பெற்று நடுங்கும் கரங்களில் ஒரு தடியையும் ஊன்றிக் கொண்டு;

    வருவது போவது ஒரு முதுகூனுமந்தி யெனும்படி
    குந்தி நடந்து, மதியும் அழிந்து, செவி திமிர் வந்து
    வாயறியாமல் விடாமல் மொழிந்து; 13.

    துயில் வரு நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும்
    உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
    தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு; 14

    கலியுக மீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர்
    சஞ்சலம் மிஞ்ச, கலகலவென்று மலசலம் வந்து
    கால்வழி மேல்வழி சார நடந்து; 15

    தெளிவுமிரா உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
    உலைந்து மருண்டு, தடமும் உலனிது மிகவும் மலைந்து
    தேறி நல்லாதர வேதென நொந்து; 16

    கிழக்குரங்கொன்று தன் கூன் முதுகைச் சாய்த்துக் கொண்டு அங்கும் இங்குமாய் திரிகின்ற காட்சிபோலவும், அறிவு கெட்டு, காதும் செவிடாகி அடைத்துக் கொண்டும், அடுத்தவர் சொல்வதைக் கேட்க முடியாமலும், வாயில் வந்ததையெல்லாம் விடாமல் உளறிக் கொட்டிக் கொண்டு;

    இரவு ஆனதும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகின்ற நேரம்; அந்த நேரம் பார்த்து விடாமல் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும்; தொண்டையும், நெஞ்சும் இருமியதால் வறண்டு போகும், தூக்கத்தில் துகில் போன இடம் தெரியாமல் விலகிக் கிடக்கும்; இவற்றைக் கண்டு பெண்டிர் வருந்துவர், இளையோர் ஏகடியம் பேசுவர்;

    இது கலியுகம். யுகதர்மங்கள் மாறுபடும். இந்த யுகத்தில் இதுபோன்ற நிலைமையை அடைந்தவர்களைக் கண்டு பரிதாபப் படமாட்டார்கள், பெரிசு படும் பாட்டைப் பாருங்கள் என்பர், மனது வருத்தப்படும், நம்மை அறியாமலே நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மலமும், சலமும் தானே கழிந்து பார்ப்பவர் முகம் சுளிக்க வைத்துவிடும்’

    மனத்தில் தெளிவு இல்லாமையால் பேசும் சொற்களிலும் தெளிவு இருக்காமல் வார்த்தை தடுமாறும்; சிந்தை வரண்டு விடும், நெஞ்சம் உரைந்துவிடும், மனோதிடமும் குலைந்துவிடும், நமக்கு இனி உறுதுணை யார் என்பதை மனம் எண்ணத் துவங்கிவிடும்.

    மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
    என்று தெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம்
    ஏதினி வாழ்வு நில்லாது இனி நின்ற; 17.

    கடன்முறை பேசும் என உரை நாவு முழங்கி விழுந்து
    கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
    பூதமு நாலு சுவாசமும் நின்று –
    நெஞ்சு தடுமாறி வரும் நேரமே. 18.

    வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
    குஞ்சியும் விஞ்ச, மனதும் இருண்ட வடிவும் இலங்க
    மாமலை போய் யம தூதர்கள் வந்து; 19

    வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
    குனிந்து அழ நொந்து, மடியில் விழுந்து மனைவி புலம்ப
    மாழ்கினரே இவர் காலமறிந்து 20

    படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் எழுதிய பிரம்ம லிபியின் படி வாழ்க்கையில் எத்தனை கண்டங்களொ அத்தனையும் நினைந்து, இனியும் கண்டங்கள் உண்டோ, விதியின் நியதிப்படி என்னென்ன நேருமோ, இனி வாழ்வு என்ன வாகுமோ, நிலைக்குமோ என்றெல்லாம் சிந்தித்து;

    வாழ்க்கை லட்சியங்கள், கடமைகள் என்றெல்லாம் வாழும் முறைகளை வக்கணையாய்ப் பேசுகின்ற நாவு சோர்ந்து வீழ்ந்து பேசமுடியாமல் போய்; கைகளால் சைகை செய்து பிறருக்கு உணர்த்தி, கடின சோறு உண்ண முடியாமையால் கஞ்சி குடித்து, குடித்த கஞ்சியும் கடைவாய் வழியே தவறிச் சிந்தி வழிய, உள்செல்லும் பிராணவாயு குறைய, சப்த நாடிகளும் ஒடுங்கிக் கிடக்க, பேசமுடியாமல், மூச்சு விடவும் முடியாமல் மனம் கலங்கிடும் காலத்தில்;

    வளர்பிறைச் சந்திரனையொத்த கடைவாய்க் கோரைப் பற்களோடும், தீப்பற்றி எரிவதைப் குத்திட்டு நிற்கும் செம்பட்டைத் தலைமுடியும், அதில் சடைகள் நிரம்பியிருக்கவும், கடுத்த மனமும், இருள் போல விளங்கும் கருத்த மேனியும், பெரிய மலைபோன்ற சரீரமும் கொண்ட எம தூதர்கள் வந்து;

    பாசக் கயிற்றை வீசி உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போகும்போது, பிள்ளைகள் வந்து ஐயோ போயினரே என்று கதறி அழுது வருந்த, மடியில் விழுந்து மனைவி புலம்ப, ஏனையோர் அந்த துக்க சூழ்நிலைக்கேற்ப வருந்தி நிற்கின்ற நேரத்தில்;

    பழையவர் காணும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட
    நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்தவே
    பிணம் வேக விசாரியும் என்று; 21.

    பலரையும் ஏவி முதியவர் தாம் இருந்த சவம் கழுவும்
    சிலரென்று, பணி துகில் தொங்கல் களபம் அணிந்து
    பாவகமே செய்து நாறும் உடம்பை; 22.

    வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
    குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
    மானிட வாழ்வு எ(ன்)ன வாழ்வென நொந்து; 23.

    விறகிடமூடி அழல்கொடுபோட வெந்து விழுந்து
    முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
    ஓர்பிடி நீறுமிலாத உடம்பை
    நம்பும் அடியேனை இனி ஆளுமே. 24.

    நெடுநாளைய மனிதன் இவன் என்று பேசிக் கொண்டு அண்டை அயலார் ஓடிவந்து பார்த்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து வருபவர்கள் உட்கார பந்தல் போடுங்கள், பறை ஓசை எழுப்ப ஆட்களைக் கூப்பிடுங்கள், பிணத்தைக் கொண்டுபோய் எரித்திட ஆவன செய்யுங்கள் என்று சொல்லி;

    பலபேருக்குச் சொல்லி அனுப்பி, பெரியவர்கள் பிணத்துக்கு எண்ணெயி இட்டுக் காப்புச் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி, பொன்னால் ஆன அணிகலன், புதிய துணி, பூமாலை, வாசனைப் பொடி அத்தனையும் போட்டுத் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, நாற்றமெடுக்கக் கூடிய இந்த சரீரத்தை;

    செய்ய வேண்டிய முறைப்படி காரியங்களைச் செய்து பிணத்தை எடுங்கள் என்று பெரியவர்கள் சொல்ல, நல்ல உடல்வாகு கொண்ட நால்வர் வந்து எடுத்துத் தங்கள் தோள் மீது சுமந்து, வேகமாய் நடந்து, சுடுகாட்டை அடைந்து, “என்னடா மனித வாழ்க்கை’ என்று அப்போது தோன்றிய சுடுகாட்டு வைராக்கியம் எனும் ஞானத்தால் மனம் நொந்து கூறி;

    நல்ல காய்ந்த விறகு, மாட்டுச் சாணத்தால் ஆன விராட்டி இவைகளைக் கொண்டு வந்து அடுக்கி, அதன் மீதில் பிணத்தைக் கிடத்தி, அதன் நெஞ்சில் தீமூட்டி, பிணம் எரிந்து வெந்திடும் போது அதன் தசைகளும் கொழுப்பும் சரிந்து விழுந்ததை பிணம் எரிப்போன் மீண்டுமெடுத்து எரித்தும், எலும்புகள் கருகிப் பின் சுட்ட சாம்பலாய்ப் போய் ஒருப்டிக்குள் அடங்கிடும் வண்ணம் அமைந்த இந்த அரிய சரீரத்தை மாண்புடையது என்று பெரும் பொருட்டாக எண்ணி இறுமாந்திருந்த இந்த அடிமையை இப்போதாவது கனிவு கொண்டு ஆண்டு அருளவேண்டும் ஐயனே!!

    (இன்னும் வரும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 99

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    வயல்களில் களை பறிப்பவர்கள்

    குவளை மலர்ச்செடிகளைக்

    களைகளெனப் பறித்து

    வரப்பு வழிகளில் போட்டிருப்பர்.

     

    அப்பூகளின் தேனை உண்டு

    சோர்வுற்று மயங்கி

    அப்பூகளுக்குள்ளேயே கிடக்கும் வண்டுகள்

    நாம் நடக்கையில் நம் பாதங்களில் மிதிபட்டு

    இறக்கவும் நேரிடும்.

     

    ஓங்கி அலை வீசும்

    வாய்க்கால் வழியாகச் செல்லலாம் என்றாலோ

    ஆங்கே

    அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய

    நண்டுகளும் நத்தைகளும்

    சிக்கிச் சிதைய நேரிடும்.

     

    நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.

    அதனால் நமக்குக் கொலைப்பாவம் நேரிடும்.

    அப்பாவத்தைத் தாங்குவது

    நமக்கு மிகவும் அரிதாகும்.

     

    வயல்வழி, சோலைவழி தவிர

    மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.

    நெளிந்த கரிய தலைமுடியை உடைய கோவலனே!

    நீ உன்னை விரும்பிய அன்பு மனைவியுடன்

    செல்லும் போது

    எதிர்ப்படும் இடர்களைக்

    குறிப்பால் உணர்ந்து

    அக்குற்றங்கள் நேராத வண்ணம்

    அவளைப் பாதுகாப்பாயாக!

    என்று கவுந்தியடிகள் கூறினார்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 86- 97
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு

    Manavaalan.pmd

    ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

    தாரிணி பதிப்பகம்,
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

    என்னுரை

     ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

    ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

     பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

    வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

    புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

    மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

    அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

     மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

     சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

     மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    வல்லமை இணைய இதழ்.

    Share
  • சூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானது

     

    Comet Ison did not Survive

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பரிதியைச் சுற்றி உரசி வந்த

    பெரிய வால்மீன் ஐசான்

    தீக்குளித்துச்

    சின்னா பின்ன மானதா ?

    செத்துப் போனதா ?

    சிதைந்து சிறிதாய் மீண்டதா ?

    எரிந்து ஆவியாகிப்

    பொன்னொளி வீசிப் புத்துயிர்

    பெற்றதா ?

    இன்னும் ஓர் நாளில் தெரியும் !

    பூதக்கோள் வியாழனைச் சுற்றுவது

    ஒற்றை வளையம்  !

    வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில்

    விழுந்த

    வால்மீன் சூமேக்கர்-லெவி

    தூள், தூளாகி

    நீர்க் களஞ்சியம் சிதறிப் போய்

    வேர்வை ஆவியானது !

    வெடிப்பு முறித்தது

    வியாழக் கோள் வளையத்தை !

    ++++++++

    2013 டிசம்பர் முதல் தேதி அண்மைக் கால அறிவிப்பு: 

    2013 நவம்பர் 28 இல் சூரியத் தணலில் தீக்குளித்த வால்மீன் ஐசான் உயிரோடு மீளவே வில்லை !   வால்மீனின் முக்கால் மைல் வடிவத் தலை முழுதும், முறிந்து, எரிந்து ஆவியாகிப் போய், முடிவில் முகில் மூட்டம் மட்டும் வெளிவருவது  நாசாவின் ஸோஹா [SOHO]] விண்ணுளவிக் காமிராவில் தெரிகிறது.  வால்மீன் ஐசான் மீண்டெழுந்து புத்துயிர் பெற்று வரும் என்ற உலக விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு பெருத்த ஏமாற்றத்தில் முடிந்தது !

    ​++++++++++++++++++++

     

    Comet Ison on Nov 22 2013

    http://www.youtube.com/watch?v=mpPSDe1fk8Y&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=q03I1B_yrPg

    https://www.youtube.com/watch?v=A1yH_DuC88M&feature=player_embedded

    [Comet ISON, which will round the sun on Nov. 28, 2013, at a distance of just 730,000 miles from the sun,
    is what’s known as a sungrazing comet, due to its close approach.]
    Image Credit: NASA/Goddard Space Flight Center

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MLXArWXiQEo

    [The Fate of Comet Ison, passing close to the Sun] 

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=svSAj98imp0

    [What to expect on November 28, 2013 for the Comet Ison -C/2012 S1]

    http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9

    [Comet Shoemaker Levy colliding with Jupiter]

     

    Comet Ison -1

    நாசாவின் பரிதி இயக்க ஆய்வகம் [SDO  (Solar Dynamics Laboratory)] நோக்கி வந்த வால்மீன் ஐசான்

    2013 ஆண்டு நவம்பர் 28 இல் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் வால்மீன் ஐசானைப் பரிதித் தீப்பிழம்புகள் தாக்கிச் சிதைத்து விட்டதா, அல்லது வால்மீன் பிழைத்துக் கொண்டதா என்பது இதுவரை தெரிந்தும், தெரியாமல் உள்ளது.  வால்மீன் ஓரளவு சிதைந்து, பேரளவு தப்பிக் கொண்டதாய் நாசாவின் ஒரு செய்தி மூலம் தெரிய வருகிறது.   அது உறுதி செய்யப்பட இன்னும் ஒரு நாள் ஆகலாம் என்று அந்த அறிவிப்பு மூலம் அறிய முடிகிறது.  வால்மீன் ஐசானைத் தொடர்ந்து நாசாவின் [SDO – Solar Dynamic Observatory)]  பரிதி இயக்க ஆய்வகமும், ஈசாவின் [ESA – (European Space Agency) SOHO -(Solar Heliospheric Observatory)]  பரிதிக் கோள ஆய்வகமும் கண்காணித்து வருகின்றன.  தப்பித் தணலிலிருந்து வெளி வந்த ஐசான் வால்மீன் முன்னை விட ஒளி மிக்கதாய்க் காணப் பட்டது என்று ஒரு தகவல் கூறுகிறது.  அதற்குக் காரணம், வால்மீனில் போதிய பிராண வாயும், இரும்பும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.   ஆயினும் தீக்குளித்த வால்மீன் ஐசானின் வடிவம் சிதையாமல் முழுதாய் உள்ளதா அல்லது சிதறித் துண்டங்களாகிச் சின்னஞ் சிறு வால்மீன் குஞ்சுகளாக மாறி விட்டனவா என்பது இன்னும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

    ஓராண்டுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்ட வால்மீன் ஐசான் “சூரியனை உரசும் வால்மீன்” [Sun-Grazing Comet] என்று முத்திரை இடப் பட்டது.   அதாவது பரிதிக்கு 850,000 மைல் தூரத்தில் சுற்றி நகரும் வால்மீன்கள் இவ்விதம் அழைக்கப் படும்.   வால்மீன் ஐசான் 730,000 மைல் [1170000 கி.மீ.]  தூரக் குற்று ஆரத்தில்  [Perihelion] சூரியனைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தது.   இந்த வால்மீன் தப்பிப் பிழைத்தாலும் மீண்டும் சூரியனைச் சுற்றத் திரும்பாது விரிந்த சுற்றியக்கத்தில் விண்வெளியில் வெகு தூரம் சென்று விடும்.   இவ்விதம் சூரியனுக்கு வெகு நெருக்கத்தில் உரசிச் செல்லும் வால்மீன்கள் தீப்பிழம்பில் வெந்து முற்றிலும் தகர்ந்து ஆவியாகப் போகலாம்.   அல்லது ஓரளவு சிதையலாம்.  அல்லது துண்டு துண்டாகிச் சிறு வால்மீன்களாய் மீளலாம்.

    Comet Shoemaker-Levi

    சூரியனை உரசும் வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுவீதிக்கு “கிரியூட்ஸ் சுற்றுவீதி” [Kreutz Path] என்று பெயரிடப் பட்டுள்ளது.   சோஹோ [SOHO] விண்ணுளவி 85% சூரியனை உரசும் வால்மீன்களையே பெரும்பாலும் கண்காணித்து வருகிறது.

    2013 நவம்பர் 28 இல் வால்மீன் ஐசான் பரிதிக்கு அருகில் 730,000 மைல் குற்று ஆரத் தூரத்தில் [Perihelion] சுற்றிச் சென்றது.   அது சூரியனைச் சுற்றித் திசை மாறும்போது அதன் பளு நெம்பு வேகம் [Momentum MV (Mass X Velocity)] பரிதி ஈர்ப்பு விசையால் உந்தப் பட்டு மிகையாகிச் சூரிய மண்டலத்தை விட்டே நழுவிச் செல்லும்.   அப்போது வால்மீன் பூமியிலிருந்து 40 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து விரைந்து செல்லும்.    அந்த நாள் டிசம்பர் 26, 2013 என்று கணிக்கப் படுகிறது.

    வால்மீன் ஐசான் சாதாரண வால்மீன் பளுவுக்குச் சுமார் பாதி வடிவே.  அதைக் கண்டுபிடித்தது : ரஷ்யக் குழுவினர்.  வால்மீன் ஐசானின் பெரு விட்டம் : சுமார் 0.75 மைல் [1.2 கி.மீ.].  கண்டு பிடித்த காலம் : 2012 செப்டம்பர்.   வால்மீனின்  உடம்பில் உள்ள பெரும்பான்மைப் பண்டம்  அடிப்படை மூலக்கூறான உறைந்த கார்பன் டையாக்சைடு.

    Anatomy of Comet Ison -1

    பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மண்டலத்தில் சுமார் 10 மைல் உயரத்தில் உள்ள ஸ்டிராடஸ்ஃபியரில் [Stratosphere]  தற்போது தெரியும் நீர் மூட்டம், 1994 இல் வியாழன் அருகில் முறிந்து மோதிய வால்மீன் “சூமேக்கர்-லெவி 9” [Shoemaker-Levi 9] சுமந்து கொட்டிய நீர்தான் என்பது இப்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    கோரான் பில்பிராட் [Herschel Project Scientist, ESA] 

    தாக்கிய பளு மிக்க வால்மீன் சூமேக்கர்-லெவியின் குப்பைகள்  வியாழக் கோள் வளையத்தைச் சிதைத்ததையும், அதன் முறிவுத் தூசிகளையும், நீரையும் விஞ்ஞானிகள் விண்ணோக்கியில் முதன்முறை காண முடிந்தது.

    ஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்

    SOHO watching the comets

    சூரிய மண்டலத்தில் அப்பால் இருக்கும் நான்கு பூதப்  புறக்கோள்களின் [வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்]  சூழ்வெளியில் நீர்மை ஆவி காணப் படுகிறது.   அவற்றுக்கு நான்கு வித விளக்கங்கள் இருக்கலாம்.   பூதக் கோள் வியாழனில் 1994 இல் தோன்றிய நீரின் மூலம், வால்மீன் சூமேக்கர்-லெவியே.  மற்ற முறைகளிலும் சிறிதளவு நீர் வியாழன் பெற்றிருக்கலாம்.

    டாக்டர் காவலி  [Astronomy & Astrophysics Scholar] 

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளியில் உள்ள  நீர்த் தோரணப் புதிரை, நமது நேரடிப் பார்வையில் 1994 இல் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகத் தீர்வு செய்துள்ளது.

    கோரன் பில்பிராட்  [ ESA Herschel Project Scientist]

    Comet Levy 9

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி வியாழச் சூழ்வெளியில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

    2013 ஏப்ரல் மாதத்தில் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை [European Space Agency]  அனுப்பிய ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம்  [ESA Herschel Space Observatory]  தற்போது பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி  மேற்தளத்தில் நீர் இருப்புக் காரணம் பற்றிய   நீண்ட காலப் புதிர் ஒன்றை விடுவித்ததாக அறிவித்துள்ளது.    அதாவது 1994 ஜூலை மாதம் வியாழனில் மோதிய  சூமேக்கர்-லெவி வால்மீனே காரணம் என்பதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது.  வியாழனின் தென் கோளப் பகுதியில் ஒரு வாரமாய் நேர்ந்த ஒளிமயமான வெடிப்பு முறிவில் 21 எண்ணிக்கை யுள்ள துண்டுகள் சங்கிலித் தொடர்போல் வால்மீனி லிருந்து வெளியேறி விழுந்தன !   முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன !   விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி !   வால்மீன் வீழ்ச்சியால் தென் கோள வியாழனில் நீர்மைத் தோரணம் தெரிந்தது என்பதும் முதன்முதல் நிரூபிக்கப் பட்டது.

    இவற்றுக்குப் பேருதவி செய்த விண்ணோக்கிகள் இரண்டு, விண் வெளியில் சுற்றி வரும் நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி, அடுத்து ஈசாவின் இசா ஆய்வகம் [ESA Infrared Space Observatory] [ISA].  ஈசாவின் இசா ஆய்வகம் 1995 இல் பூதக்கோள் வியாழனின் மேற்தளச் சூழ்வெளியை ஆராய்வதற்கு ஏவப் பட்டது.  வால்மீன் சூமேக்கர்-லெவி மோதியதால் வியாழச் சூழ்வெளியில் நீர் வெள்ளம் கொட்டி இருக்கலாம் என்றோர் ஊகிப்பு இருந்தாலும், 1995 இல் அது உறுதியாக நிரூபிக்கப் படவில்லை.  20 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப் படுத்த ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி உதவி செய்தது.

    ESA Herschel Telescope

    வியாழக் கோள் சூழ்வெளியில் தோன்றிய நீர்த் தோரணம் எதனால் எழுந்தது ?

    1.   முதலில் பூதக்கோள் வியாழனின் ஆழ்ந்த உட்தளத்திலிருந்து நீர்த் தோரணம் எழுதிருக்க முடியும் என்னும் ஊகிப்பு தவிர்க்கப் பட்டது.  ஏனெனில் அவ்வித உட்தள ஊற்று நீர் “குளிர் அடைப்பு”  [Cold Trap] அரணிலிருந்து மீறி மேற்தளத்துக்கு வர முடியாது.   ஆகவே வெளிப்புறத்தி லிருந்துதான் நீர் விழுந்திருக்க வேண்டும்.  மோதல் நேர்ந்து 15 ஆண்டுகள் கடந்தும், அந்தப் புதிர் விடிவிக்கப் படாமலே நீடித்தது.  2009 இல் ஈசா ஏவிய ஹெர்ச்செல் உட்சிவப்பு  நுணுக்கக் கண்ணே [Herschel Space Infrared Observatory Eye]  வியாழனின் சூழ்வெளியின் செங்குத்து, மட்ட நிலை நீர் ரசாயன அமைப்பைத் தெளிவாகக் காட்டி நிரூபித்தது.

    2.  ஹெர்ச்செல் உட்சிவப்பு நோக்கத்தின் கணிப்புப்படி பூதக்கோள் வியாழனின்  தென்பகுதியில், வடபகுதியை விட 2 அல்லது 3 மடங்கு நீரளவு காணப் பட்டது.   அதுவும் அந்த நீர்த் தோரணம் வால்மீன் சூமேக்கர்-லெவி 1994 இல் விழுந்த இடத்துக்கு அருகிலே தெரிந்தது.

    3.  மூன்றாவது யூகிப்பு, வியாழக் கோளில் காணப்படும் நீர்த் தோரணம், அங்கே படிந்த விட்ட  அகில வெளித் தூசிகளாய் இருக்கலாம் என்பது.  அப்படி யானால் அந்தத் தூசிகள் வியாழக் கோள் பூராவும் சூழ்வெளியில் ஒரே சீராகப்  பரவி இருக்க வேண்டும்.    தணிந்த மட்ட உயரங்களில் வடிகட்டப் பட்டிருக்க வேண்டும்.    அதனால் அந்த யூகிப்பும் தவிர்க்கப் படுகிறது.

    4.  வியாழக் கோளின் பனிமூட்டம் உள்ள ஒரு துணைக்கோளிலிருந்து “பூத நீர்மை வளையம்”  [Giant Vapour Torus] போல் விழுந்து பரவி இருக்கலாம்.   இது போல் சனிக்கோளில் அதன் துணைக்கோள் என்ஸிலாடஸிலிருந்து பனிநீர் வளையம் விழுந்துள்ளதை ஹெர்ச்செல் விண்ணோக்கி காட்டியுள்ளது.  அந்தக் கோட்பாடும் தவிர்க்கப் படுகிறது .  காரணம் அவ்விதம் நேர வெகு அருகில் வியாழனக்குத் துணைகோள் எதுவும் கிடையாது.

    5.  முடிவாக 2009 – 2010  ஆண்டுகளில் நேர்ந்த சிறு மோதல்கள், அவற்றின் விளைவுகளும், உஷ்ண மாற்ற விளைவுகளும் நீக்கப் படுகின்றன.

    6.  ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளி நீர்த் தோரணப் புதிரை, வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு செய்துள்ளது.

    Fig 5 Two Comets Orbiting the Sun

    வால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது !

    1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல்  முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது.  சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி  வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை.   அவை எல்லாம் தூசிகளே.   அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது.    மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது,  புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டு கள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  விண்கப்பல் வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம்  150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்ப தாகக் காட்டியது.   வியாழன் வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ)  குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது.   வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக் கோளிலிருந்து  [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.    அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்தி ருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    வால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9]  பூதக்கோள் மீது விழுந்தது.

    புறக்கோளின் வளையங்களை  பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர்  [Mark Showalter] சனிக்கோளின் வளையங் களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார்.   சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங் களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார்.   1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங் களை நோக்கினார்.   அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார்.   அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Oscillation Length]  கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார்.   அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டு களில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார்.   வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டு பிடிக்கப் பட்டது.   1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது.    அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது.   ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.

     

    Cosmic Crash

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html

    21. BBC News – Milky Way’s Sweetness Throughout [Nov 25, 2008]

    22 BBC News – Genesis Faulty Battery Probed

    23. Sky & Telescope Magazine – Genesis Finding- Earth Has a Problem (Sep 8, 2004)

    24. BBC News – (Genesis) Crashed Probe  Yields Sun’s Secrets (Mar 15, 2006)

    25 New Scientist – Crashed Genesis Probe Delivers Solar Wind Dust – Genesis Space Probe Mission (Mar 15, 2006).

    26. Wikipedea – Genesis Spacecraft [Dec 2, 2008]

    27 Science Magazine – Genesis Search for Origin -The Sun Under Lock & Key By : Bob Silberg [Updated Nov 14, 2008]

    28. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]

    29 The Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Singnal Underground Water & Microbial Life [Nov 29, 2008]

    30 The Daily Galaxy on Biological Universe – “Super Cells” that Eat Radiation, Generate Electricity & Cure Cancer -A Galaxy Classic [Nov 14, 2008]

    31 BBC News – Earth Could Seed Titan with Life By : Paul Rincon 33 Wikipedia – Extra-terrestrial Life

    34 Space Science Reference Guide : Europa & Titan : Oceans in the Outer Solar System By : Walter S. Kiefer Lunar & Planetary Institute, Houston, Texas. [2003]

    35 The Daily Galaxy -Non-Carbon Species : Will We Fail to Detect Extra-terresstrial Life ? [Dec 3, 2008]

    36.http://www.thinnai.com/module=displaystory&story_id=40407085&format=html

    (Cassini-Huygens Space Probe Mission) (July 8, 2004)

    Origin of Jupiter’s Water Solved –The Massive 1994 Comet Bombardment

    40.http://www.spacedaily.com/reports/Herschel_links_water_in_Jupiters_stratosphere_to_1994_comet_impact_999.html [April 25, 2013]

    41.  http://www.nasa.gov/content/goddard/timeline-of-comet-ison-s-dangerous-journey/  [July 16, 2013]

    42.  http://www.cbc.ca/news/technology/comet-ison-likely-didn-t-survive-sun-encounter-1.2443504  [Nov 28, 2013]

    43.  http://thewatchers.adorraeli.com/2013/11/28/comet-ison-vs-the-sun/  [November 29, 2013]

    44.  http://abcnews.go.com/Technology/comet-ison-live/story?id=21053068 [November 29, 2013]

    45.  http://www.skyandtelescope.com/observing/highlights/193909261.html  [November 29, 2013]

    46.  http://en.wikipedia.org/wiki/Solar_Dynamics_Observatory   [November 30, 2013]

    47.http://en.wikipedia.org/wiki/Solar_and_Heliospheric_Observatory   [SOHO]  (SOlar Heliospheric Observatory)

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [November 30, 2013]

    http://jayabarathan.wordpress.com

    48. 

     ​ ​

    http://waitingforison.wordpress.com/updates-december-2013-1/  [Latest Update of Ison Comet] [December 1, 1023]

     
    YouTube – Videos from this email
    Share
  • மொழியும் இலக்கணமும்

    சதீஷ் குமார் டோக்ரா

    1098542_10200497743781930_2023689908_n

    ஒரு மொழிக்கு இலக்கணத்தின் அவசியம் என்ன என்று ஒருவரிடம்  கேட்டால், அவர் அனேகமாக, “இலக்கணம் மொழியை முறைப்படுத்துகிறது. அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எது சரி, எது பிழையானது என்பதில் வித்தியாசம் காட்டுகிறது” என்பது போல் பதில் கூறுவார்.

    இந்தக் கட்டுரையில் இலக்கணத்தைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

    எழுத்துகளின் அவசியம்:

    மொழி முதன் முதலில் ஒலிகளாகப் பிறந்தது. மொழியின் பயன்பாட்டுத் தேவை, காது கேட்கும் தூரம் வரை இருந்தபோது, மொழி ஒலிகளாகவே நீடித்தது. பிறகு, காது கேட்காத தூரத்திற்குச் செய்தி கொண்டுபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, செய்தியை எழுத்துகள் மூலம் கொண்டுபோகும் அவசியம் உருவானது. எழுத்து வடிவம் தோன்றியது. அந்தந்தப் பொருளையோ, செயலையோ வரைப்படமாக பிரதிநிதித்து அனுப்பினார்கள். இந்த எழுத்துமுறையை நாம் படுகைத் தளக்குறியீடுகள் (hieroglyphics) என்கிறோம்.

    படுகைத் தளக்குறியீட்டு வடிவத்தை மொழியின் எழுத்து வடிவமாகப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. எத்தனை பொருட்கள் மற்றும் செயல்களைப் பற்றிப் பேச வேண்டுமோ அத்தனை வரைப்படங்கள் உருவாக்க வேண்டும். இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும் சூழ்நிலைகளும் செயல்களும் ஏராளம். அவை அனைத்தையும் தனித் தனி வரைப்படங்களாக வழங்குவதானால் எண்ணற்ற எழுத்துகள் தேவைப்படுமே!

    மேதாவியான நம் முன்னோர்கள் ஒன்றை உணர்ந்தார்கள். நாம் மொழியில் பயன்படுத்தும் ஒலிகள் மிகக் குறைவு. ஆகவே, பொருட்களையும் செயல்களையும் வரைப்படங்களாக வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு ஒலிக்கும் ஓரோர் எழுத்து வைத்துக்கொண்டால் மிகக் குறைவான எழுத்துகளை வைத்துக்கொண்டே ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் தந்துவிடலாம்.

    அப்படியே செய்தார்கள்: ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு ஒலியைப் பிரதிநிதிக்கும் எழுத்து வடிவம் உருவாகி எழுத்துமுறை வடிவுபெற்றது.

    இதற்கும் இலக்கணத்தின் அவசியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள்.

    சம்பந்தம் உண்டு.

    எவ்வாறு ஒலிகளை எழுத்துகளாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டம் எழுதுவதைச் சுலபமாக்கியதோ, அதே போல இலக்கணமும் மொழியைச் செய்தியறிவிப்புச் சாதனமாகப் பயன்படுத்தும்போது வார்த்தைகளின் தேவையைக் குறைக்கிறது.

    எப்படியென்று பார்ப்போம்.

    இன்று டில்லி போகிறேன் என்று சொல்லும்போது ‘போகும்‘ செயலைக் குறிக்கிறோம்.

    போகும் செயல் இன்று நடக்கலாம், நேற்று நடந்திருக்கலாம், அல்லது நாளைக்கு நடைபெறலாம். இம்மூன்றுக்கும் தனித்தனி வார்த்தைகள் வைத்துக்கொண்டால், 3 வார்த்தைகள் தேவைப்படும். அதனால், நம் முன்னோர்கள் போகும் செயல் ஒன்றுதான் அது வெவ்வேறு காலங்களில் நடைபெறும்போது தனித் தனி வார்த்தைகள் தேவையில்லை. ஒரே வார்த்தையை வடிவம் மாற்றிப் பயன்படுத்திவிடலாம் என்று முடிவு செய்தார்கள். போகிறேன், போனேன், போவேன் என்ற வடிவங்களைத் தோற்றுவித்து வார்த்தைகளின் பெருக்கத்தைத் தவிர்த்தார்கள்.

    இன்னும் பல வடிவங்கள் உருவாகின: போய்க்கொண்டிருந்தாரா, போகையில், போகப் போக, வயிற்றுப் போக்கு, பொழுதுபோக்கு என்று எத்தனையோ வடிவங்கள் தோன்றி கூடுதலான வார்த்தைகளைத் தோற்றுவிக்காமலேயே செய்தியறிவிப்பை நடைமுறைபடுத்த உதவின.

    யோசித்துப் பாருங்கள், ஒரு வினைச்சொல் வார்த்தையுடன்  –கிறேன், -னேன், -வேன், -கொண்டிருந்தார்,  -யிருக்கிறார்  போன்றவற்றைச் சேர்த்து ஒரே வினைச்சொல் வார்த்தையை பல்வேறு சூழ்நிலைகளிலும் காலங்களிலும் நடைபெற்ற செயல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு தனி வார்த்தையைக் கையாள வேண்டி வந்தால் எத்தனை வார்த்தைகள் தேவைப்படும், நினைத்துப் பாருங்கள்!

    ஆக, இலக்கணம் செய்தியறிவிப்பிற்காக நாம் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மொழியைச் செய்தியறிவிப்பு சாதனமாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

    Grammar expands the range of communication, while reducing the need for words to do so.

    ஒரு நியாயமான கேள்வி எழலாம்.

    போகிறேன், போனேன், போவேன் ஆகிய வடிவங்களின் மூலமாக ஒரே செயலின் வெவ்வேறு காலங்களைப் பிரதிநிதித்து, மூன்று வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஒரே வார்த்தைக்கு மூன்று வடிவங்கள் அளித்து, வார்த்தைகனின் தேவையைக் குறைக்கிறோம் என்பது சரிதான். ஆனால், போகிறான், போகிறேன், போகிறாள், போகிறார்கள், போகிறது, போகிறீர்கள், போகிறாய் என்று ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்கும் தனித்தனி இலக்கண வடிவங்கள் அமைப்பது அவசியமா? ஏன் ஆங்கிலத்தில் You go, they go, we go என்று வாக்கியங்களில் இருப்பது போல் go என்ற ஒரே வடிவத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்குத் தனித் தனி வடிவங்கள் உருவாக்குவதால் என்ன பயன்?

    சாதாரணச் செய்தியறிவிப்புக்கு (day-today-communication) இது போதும்தான். மக்களை நான் போகிறான், நீங்கள் போகிறான், அவர்கள் போகிறான் என்றெல்லாம் பழக்கப்படுத்திவிட்டால் அன்றாட செய்தியறிவிப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. பெரும்பாலான மொழிகளில் இதே முறையில் ஒரே வடிவத்தைப் பயன்படுத்திச் செய்தியறிவிப்புத் தேவையைப் பூர்த்தி செய்வது வாடிக்கை.

    ஆனால், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய, பழங்காலத்திலேயே மிகச் சிறந்த இலக்கியங்களை உருவாக்கிய மொழிகளில், மொழி ஒரு அன்றாடச் செய்தியறிவிப்பு சாதனமாக மட்டும் அல்லாமல் சிறந்த இலக்கியத்தை இயற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த முறையில் இலக்கணம், குறைவான வார்த்தைகளில் அதிக அர்த்தங்களைச் சிப்பமிட உதவியது.  கவிதைகளில் அர்த்தத்தின் அடர்த்தி கூட, இலக்கண வடிவங்கள் கை கொடுத்தன.

    Multiple forms in the grammars of Sanskrit and Tamil make it possible to densely package into a few words ideas and emotions that, in another language, might require a far greater number of words. 

    எப்படி என்பதை இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் பார்ப்போம்.

    Share
  • ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?

    சு. ​​கோதண்டராமன்

    விதியா, மதியா?  இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

    சூழினும் தான் முந்துறும்      

    என்று விதியின் வலிமை பேசிய அவர்

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழாது உஞற்றுபவர் 

    என்று முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

                    இது பற்றிப் பாரதியின் கருத்து என்ன? அவரது பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம்.

                    பாரதப் போராகிய பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் எல்லோருமே பலி ஆகிறார்கள். பாண்டவரைச் சூதாட அழைக்கப் போகிறேன் என்றும் அதற்குத் தந்தை இணங்காவிட்டால் உயிர் விடுவேன் என்றும் துரியோதனன் மிரட்டுகிறான். பிள்ளை மீதுள்ள பாசத்தால் அவனுடைய சதித் திட்டத்திற்கு வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க நேர்ந்த போது திருதராட்டிரன் கூறுகிறான்,

    bharathiyar‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு

    வேறு செய்வார் புவிமீ துளரோ?

    …………

    ‘விதி! விதி! விதி! மகனே! –இனி

    வேறெது சொல்லுவன் அட மகனே!

    கதியுறுங் கால னன்றோ-இந்தக்

    கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?

    கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்

    கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;

    வதியுறு மனை செல்வாய்,’ –என்று

    வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.

     

                    விதுரனுக்கு வருங்காலம் தெரிகிறது. ஆனால் அவனாலும் துரியோதனனின் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அவனுடைய ஆலோசனைகள் நலம் பயப்பவை என்று அறிந்தும் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் திருதராட்டிரனின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதை உணர்ந்து, திருதராட்டிரன் கூறுகிறான்,

    என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
    ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
    ‘சென்று வருகுதி, தம்பி இனிமேல்
    சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
    வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
    மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
    அன்று விதித்ததை இன்று தடுத்தல்
    யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.

                    அண்ணன் கூறியபடி விதுரன் துரியோதனனுடைய அழைப்பில் சூழ்ச்சி உள்ளது என்பதைத் தருமனுக்குத் தெரிவிக்கிறான். தருமனோ, ஆபத்து வரும் என்று அறிந்தும், தந்தை அழைத்திருக்கும் போது போகாமல் இருப்பது தவறு என நினைக்கிறான். தந்தையே சூழ்ச்சி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தும், தம்பிகள் தடுத்தும் தருமன் தன் மனதை மாற்றிக் கொள்ள வில்லை. துன்பம் வரும் என்ற அச்சத்தால் கொள்கை தவறுவது சான்றாண்மை ஆகாது என்று கருதுகிறான். இது விதியின் செயல் என்று அழைப்பை ஏற்றுக் கொள்கிறான்.

    ‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி
    ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
    வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
    ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
    சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
    சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
    மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
    வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

    ………

                                                                    ……..நெஞ்சில்
    ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
    உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
    போன்று நடக்கும் உலகென்றே-கடன்
    போற்றி ஒழுகுவர் சான்றவர்.

                    ஊரை விட்டுப் பாண்டவர் தங்கள் துன்பக் களம் நோக்கிச் செல்கையில் கவிக் கூற்றாக வருவது விதியின் வலிமை பற்றிய இக்கருத்து.

    நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ

    நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

     

    நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

    நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;

    வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;

    வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;

    கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

    கீழ்மேலாம், மேல் கீழாம்; கிழக்கு மேற்காம்;

    புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

    போற்றிடுவார், விதிவகுத்த போழ்தி னன்றே.

                    சூதாட்டத்தில் தான் தோற்று விடுவோம் என்பது தருமனுக்குத் தெரிகிறது. என்றாலும் சூதாட அழைக்கப்படும்போது மன்னர்கள் மறுக்கக் கூடாது என்ற மரபை அவன் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வேறு வழியின்றி சூதாட அவன் இணங்குகிறான்.

    வெய்ய தான் விதியை நினைந்தான்
    விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;

                    இவ்வாறு பாஞ்சாலி சபதக் கதை முழுவதும் அறிஞர்கள், நல்லவர்கள் பலர் வர இருக்கும் பேரழிவை உணர்ந்தும், உணர்த்தியும் தடுக்க முடியாமல், ஒவ்வொரு நிலையிலும் போரை நோக்கிக் கதை நகர்வதைக் காணும்போது விதியின் வெல்லவொண்ணா வலிமை புலப்படுகிறது.

                    இதைக் கொண்டு பாரதி விதியை நம்பினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது வியாசர் கூறியதன் மொழிபெயர்ப்பே என்று முன்னுரையில் அவரே கூறுவதால் இது வியாசருடைய கருத்தே அன்றிப் பாரதியின் கருத்து அல்ல என்று அறியலாம்.

                    ஆனால் தன் சுய சரிதையில் ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ? என்று அவர் கேட்கும்போது விதி வலியது, வெல்ல முடியாதது என்று அவர் நம்பியதை உணர முடிகிறது.

                    ஆம். பாரதி விதியின் வலிமையை உணர்ந்திருந்தார். அது இறைவனின் மந்திரி என்று அவர் கூறுகிறார். கண்ணனைத் தந்தையாக உருவகித்த பாடலில்,

                                                    – ஒரு
    மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
    முன்பு விதித்த தனையே – பின்பு
    முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

                    செய்த தவறுக்குத் தண்டனையாகத் துன்பத்தை தனது மந்திரியாகிய விதி தரும்போது இறைவன் குறுக்கிடுவதில்லை.

    நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

    நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

                    ஆனால் பாரதி பாடிய பாடல்களில் விதிக்குக் கட்டுப்பட்டு வாளா இராமல் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கஞ்சி குடிப்பதற்கிலாத நிலையில் அதன் காரணங்களை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபடாத எளியோரைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார். துன்பம் வரும்போது இது விதிவசத்தால் வந்தது, எது வரினும் அனுபவித்தே தீருவேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருத்தல் தகாது என்பதைக் காட்டும் அறிவுரைகள் பல அவருடைய ஆத்திசூடியில் உள்ளன.

    கொடுமையை எதிர்த்து நில்.

    சீறுவோர்ச் சீறு.

    செய்வது துணிந்து செய். 

    சௌரியந் தவறேல்.

    ஞமலிபோல் வாழேல்.

    தேசத்தைக் காத்தல்செய்.

    நாளெலாம் வினைசெய்.

    பணத்தினைப் பெருக்கு.

    மிடிமையில் அழிந்திடேல்.

    மீளுமாறு உணர்ந்துகொள்.

    முனையிலே முகத்து நில்.

    யவனர்போல் முயற்சிகொள்.

    ராஜஸம் பயில்.

    ரௌத்திரம் பழகு.

    லௌகிகம் ஆற்று.

    வீரியம் பெருக்கு.

    வெடிப்புறப் பேசு.

    வையத் தலைமைகொள்

                    பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி தெருவில் இழுத்துச் செல்லப்படும்போது மக்கள் அதைத் தடுக்க முயலாமல் புலம்பினர் என்று அவர்களை இகழ்கிறார்.

    ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?

    வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன்

    தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே,

    பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்

    நெட்டை மரங்களென நின்று புலம்பினார்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ”?

                    விதியின் பேரில் பழியைப் போட்டு விட்டு முயற்சியின்றி இருப்பவர்களை இறைவன் இகழ்வான் என்றும் அன்பு செய்தால், அதாவது பிறர் துயர் நீக்க முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குப் பலன் கொடுப்பான் என்றும் கூறுகிறார்.

    துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்
    தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
    அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம்
    அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

                    விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

    காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்

    காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

                    ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நியமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

    வெற்றி செயலுக்குண்டு, விதியின் நியமம் என்று

    கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ?

                    ஆனால் சில சமயங்களில் முயற்சி பலன் தராமல் போவதும் உண்டு.

                                                    ………..     கிணற்றினுள்ளே

    மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்

    முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும்

    ஏழ்கடல் ஓடியுமோர் பயன்

    எய்திட வழியின்றி இருப்பதுவும்

    உண்டு.

                    அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி என்பதால் இறைவனைச் சரணடைக என்கிறார் பாரதி. இறைவனிடம் பக்தி செய்தால் நிச்சயம் பலனுண்டு. உண்மையான பக்தியின் மூலம் துன்பங்கள் யாவும் நீங்கும். முன்னைத் தீய வினைப் பயன்கள் இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் என்று வேண்டினால் திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம். கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை. அதற்கு அடிப்படையாக கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

                    அப்படியும் துன்பம் தொடருமானால், சக்தி சோதனை செய்கிறாள் என்று உணர்க. பொறுமையுடன் இரு. நம்பிக்கை இழந்து பக்தியை விட்டு விடாதே. அவள் நிச்சயம் காப்பாள் என்ற சொல்லே துயர் போக்கும்.

    சக்தி சில சோதனைகள் செய்தால்  அவள்

    தண்ணருள் என்றே மனது தேறு

     

    பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன்

    வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்

     

    வையகத்துக்கில்லை, மனமே, நினக்கு நலம்

    செய்யக் கருதி இவை செப்புவேன்- பொய்யில்லை

    எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற

    சொல்லால் அழியும் துயர்

                    பாரதியின் இவ்வழி வேதத்தையும் கீதையையும் ஆதாரமாகக் கொண்டது. பக்தி நெறி வேத நெறிக்கு விரோதமானது அல்ல. அறியாதார் சிலர் வேதம் என்பது வேள்வி முறையை மட்டுமே கொண்டதென்றும் பக்தி என்பது வேதச் சார்பு இல்லாத வழி என்றும் கூறுவர். இவர்களுக்குப் பாரதி பதில் கூறுகிறார்.

                    வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது, விக்கிரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது, அத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. ….சரணாகதியே வழி. வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

                    கீதையில் கண்ணனின் உபதேசமாகப் பாரதி கூறுகிறார், பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான், பக்தி பண்ணிப் பிழைக்கச் சொன்னான்.

                    இவ்வாறு விதி வலியது என்பதை உணர்ந்தாலும், பக்தியின் மூலமும் முயற்சியின் மூலமும் அதைப் புறங்காண முடியும்  என்று நம்புவதே வாழும் நெறி என்று பாரதி வழிகாட்டுகிறார்.

                    இந்தப் பக்தி நெறியே பாரதியின் பாடல்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…85

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இங்கிலாந்து குளிர்காலம் எனும் உறைபனிக் காலத்திற்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலே உள்ளம் கதகதப்பாக உங்களுடன் மடல் மூலம் ஒரு உரையாடல்.

    இன்றைய காலை தொலைக்காட்சிச் செய்தியிலே கேட்ட ஒரு தகவல் என் நெஞ்சை உறைய வைத்தது.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிருவர்களுக்கான திகாரியை பி.பி.சி காலநேர நிகழ்ச்சியில் பேட்டி கண்ட பழுது அவர் கூறினார் இங்கிலாந்தின் ஒரு கணக்கெடுப்பின் படி இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கும் அதிக அளவில் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள் என்று.

    அப்போது அவ்ரைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் கேட்ட கேள்வி , சிறுவர்கள் கணிணியில் இவ்விணையத்தளங்களைப் பார்வையிடுகிறார்கள் என்றால் பெற்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே !

    காலம் மாறுகிறது, காலாச்சார அடையாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது, தகவல் தொழில் நுட்ப பரிமாற்றங்கள் துரித அள்வில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து எமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது யதார்த்தத் தேவையாகிறது.

    ஆனாலும் ,

    மனிதர்மத்தின் அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட முடியுமா? விஞ்ஞானம் த்தனை தூரம் முன்னேறினாலும், காலம் எத்துணை அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், நாகரீகம் எவ்வளவோ வகையில் மாறியிருந்தாலும், தாய் தாய் என்பதும், தந்தை தந்தை என்பதும், தாரம் தாரம் என்பதும், சகோதரர்கள் சகோதரர்கள் என்பதும் மாற்றம் கண்டிட முடியுமா?

    நாம் எமது மனதின் கட்டுப்பாட்டை மனித தர்மத்தின் தார்மீக எல்லைகளைக் கடக்க அனுமதித்து விட்டு அதற்கு காலத்தின் மாற்றத்தைக் காரணமாகக் கூறி நியாயம் கற்பிக்க முயல்வது நகைக்கப்பட வேண்டிய விடயமாகும்.

    குழந்தைகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டதும் எமது கடமைகள் முடிந்து போய் விடுகின்றனவா?

    இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தப் போகும் தூண்கள். அவர்கள் மனிதன் எனும் தர்மத்தின் அடிப்படை நியாயங்களைக் கற்ரிருந்தால் தான் அமைதியான ஒரு அகிலத்திற்கு அவர்களால் துணை போக முடியும்.

    இன்றைய இந்த அவசரமான காலகட்டத்திலே நாமனைவரும் வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எம்மை பணம் சம்பாதிப்பதன் வழிகளுக்குள் முழுமையாகப் புதைத்துக் கொண்டுள்ளோம்..

    நவீன கால தேவைகளின் அடிப்படியில் வாழ்வில் வசதிகளைப் பெருக்கிக் க்லொள்கிரோம் எனும் பெயரில் பெருகும் வசதிகளை அனுபவிக்கக்கூட முடியாத வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    வருங்காலத் தலைமுறைகளுடன் வாழ்வின் முக்கிய தார்மீக விதிகளை விளக்ககூடிய வகையில் எமது நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் பெரும்பான்மையான்வர்கள் தமது குழந்தைகளுடன் தாம் விரும்பிய அளவில் நேரத்தைச் செலவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இத்தகைய சீழலில் தற்காலக் குழந்தைகளின் கைகளில் கணிணிஎன்பது ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டது. பதின்ம வயதுகளில் தாம் ஒரு மடிக்கணனிக்கோ அல்லது கயடக்கக் கணணிக்கோ சொந்தக்காரர்கள் இல்லையென்றால் அது ஏதோ தாம் குறைவானவர்கள் என்று கருதுமளவிற்கு இவைகள் அவர்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.

    பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இது அவர்களது அறிவை விஸ்தரிப்பதற்கு பயன்பட்டால் கூட அவர்களின் பாவனையைத் தொடர்ந்து கண்காணிக்குமளவிற்கு அதிகமான பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை.

    இத்தகைய சூழலினால் இக்கணிணிகளின் மூலம் தவரான இணையத்தளங்களை தற்செயலாகவோ அன்றி வேண்டுமென்றோ பதின்ம வயதுச் சிறுவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது..

    எமது நாடுகளின் வருங்கால வரலாற்றைச் சிறப்பு மிக்கதானதாக மாற்றுவதில் எமது சந்ததியும் பங்குபெற வேண்டுமானால் மனித வாழ்கையின் தார்மீக பொறுப்புகளின் பெருமைகளை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சரியான வாழி முறையை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும்..

    பாடசாலைகளுக்கு ஒழுங்காகப் போகிறார்கள் தானே ஒழுக்கத்தின் போதனையை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கவனயீனமாக இருந்து விட்டுப் பின்னால் புலம்புவதால் எவ்விதப் பயனுமில்லை

    இன்றைய உலகில் தமிழர்களாகிய நாம் பரந்து பட்டு உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறோம். தாம் வாழும் நாடுகளில் எமது இளைய தலைமுறை பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்குட்பட்ட பல்வேறு இனத்தினருடன் பழக வேண்டிடி ஏற்படுகிறது. இந்தச் சந்திப்புகளில் எமது அடிப்படை வாழ்க்கைத் தார்ர்மீக நெறிகள் தொலைந்து போய்விடாமல் இருப்பதர்கான பொருப்பு பெற்றவர்கள் வசமே இருக்கிறது.

    கலாச்சாரம், பழகும் பண்பு, ஒழுக்கமான வாழ்க்கை என்பவனவற்றை முன்னேற்ரத்து தடையான கால்விலங்காக மாற்றாமல் உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தை சரியான திசையில் செலுத்தக்கூடிய ஒரு கடிவாளமாக்குவது ஒன்றே எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வை உயர்ந்ததாக்கும்.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share