சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு
கவிஞர் காவிரிமைந்தன்
நாளை முதல் குடிக்க மாட்டேன்…
கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 2002ஆம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக ராகப்ராவகம் சுந்தர் அவர்களது இல்லத்திற்கு சென்றபோது.. அங்கே இருந்த விருந்தினர் இருவர் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிவசு எனப்படும் சிவசுப்பிரமணியன் அவர். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்பது கிடைத்த தகவல்.
சந்தித்த சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். ஆம். கவிஞரின் பிறந்தநாளில் இடம் பெற வேண்டிய வணக்கம் தமிழகம் பகுதியில் கவிஞரின் உதவியாளர் திரு. இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பநியாகும். கொட்டும் மழையிலும் என்னுடன் இணைந்து வந்த நண்பர்.. கண்ணதாசனின் பக்தர் வேலுமணி அவர்களின் மூலம். எதோ ஒரு சில காரணங்களால் இது போன்ற பேட்டிகளைத் தவிர்த்து வந்த திரு இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்தது இனிய செய்தியாகும்.
மேலும் சிவசு அவர்களிடம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அழைப்பிதழின் மேலுறையில் இடபெற்றிருந்த கவியரசின் உருவப்படத்தைப் பார்த்து கவிஞரைப் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள்.. இமயமென உயர்ந்து எங்கள் மனதில் என்றும் நிலைக்கத் தக்கவை. ஆம். இந்த உலகில் நான் இவரைத்தான் மிகவும் நேசிக்கிறேன். ஒருவர் அன்னை தெரசா .. அடுத்து கவிஞர் கண்ணதாசன். ஏன் என்பதற்கும் அவரே தந்த விளக்கம் அசர வைத்தது. அன்னை தெரசா பற்றி அகிலம் அறியும். ஆனால் கண்ணதாசனைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா?
உலகம்போற்றும் உத்தமர் காந்தியடிகள் தனது சத்தியசோதனையில் தன்னைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தான் செய்த சில தவறுகளையும் பதிவு செய்து மக்கள் மனதில் உயர்ந்தார். அதைவிட பல மடங்கு.. ஏன் தன் வாழ்க்கை முழுவதையுமே தான் செய்த தவறுகளையெல்லாம் முழுக்க முழுக்க பேச்சிலும் ஏட்டிலும் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாய் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன் மட்டுமே. ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றிய நல்ல குணாதிசயங்களை மட்டுமே இவ்வுலகம் அறியச் செய்வது இயல்பு. எந்த வேளையிலும் எந்த ஒரு தனி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல! வாழும் இந்த உலகில் சிவசு அவர்களின் கணிப்பு எங்களைச் சிந்திக்க வைத்தது! இவற்றையும் தாண்டி கவிஞரின் புகழ் நிரந்தரமாக்க எப்படி முடிந்தது? தமிழ் அல்லவா கவிஞரை இன்றும் நம்மோடு இணைத்து வைத்துள்ளது?
என்னைப்போல் வாழாதீர்கள்.. நான் எழுதியது போல் வாழுங்கள் என்பது தானே கண்ணதாசன் செப்பு மொழி!
‘நீதி’ என்கிற திரைப்படத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்ட கதாநாயகன் பாடுன்கின்ற பாடல் ஒன்று இடம் பெற வேண்டிய நிலையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்து கவிஞருக்காக காத்திருந்தபோது.. தனக்கு தோன்றிய பல்லவியை வைத்து இசை அமைப்பில் இணைத்திருந்தார். கவிஞர் அங்கே வந்தவுடன்.. தான் வைத்திருந்த பல்லவியையும் இணைத்து கவிஞரிடம் காட்ட.. கதாநாயகன் .. இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வதாக காட்சி..
இன்று முதல் குடிக்க மாட்டேன் – சத்தியமடி தங்கம் என்கிற பல்லவியை பார்த்து கண்ணதாசன் மெல்லிசை மன்னரிடம் தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து உன் பல்லவிக்கான சந்மனமிது. ஆனால் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய மாட்டான். எனவே, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றி படலை எழுதித் தந்த வரலாறு இப்பாடலுக்கு உண்டு
.
ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் .. என்கிற வைர வரிக்காக கண்ணதாசனை உளமாரப் பாராட்டத் தோன்றுகிறது
.
கவியரசே உன்னால் மட்டுமே படைத்தவன் மேல் இப்படி பகிரங்க குற்றம் சாட்ட முடிந்திருக்கிறது. இதிலிருந்து தப்ப.. முடியாமல் பரமனும்.. பிரம்மனும் அல்லவா சங்கடப் படுவது போல் தோன்றுகிறது..
http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk
http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk
கருத்துக்களை வரவேற்கிறேன்.. கவிஞரைப் பற்றிய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய புளித்துப்போன .. உதவாத கேள்விகளைத் தவிர்த்து அவர்தம் பாடல்களில் உள்ள சுவைதனை, தமிழினை.. இன்னுமின்னும் இன்பம் வாசகர்கள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..
காவிரிமைந்தன்