அமெரிக்காவில் என்று தணியும் சாமான் வாங்கும் மோகம்?

0

நாகேஸ்வரி அண்ணாமலை

பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் நான் அமெரிக்க நன்றி தெரிவிக்கும் பண்டிகை (Thanksgiving) பற்றி எழுதியிருக்கிறேன்.  இந்த வருஷம் அதில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் பற்றி இப்போது எழுதுகிறேன்.

இந்தியாவில் பல காரணங்களுக்காக விடிய விடிய விழித்திருந்திருக்கிறோம்.  முதலாவதாக இறைவனைப் பற்றிச் சதாகாலமும் சிந்தித்து அவனைத் தொழுவதற்காக சிவராத்திரி அன்று விழித்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அடுத்ததாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பெண்கள் இரவெல்லாம் விழித்திருந்து பலகாரங்கள் செய்வார்கள்.  பலகாரங்கள் செய்யும் வேலையை இரவில் முடித்துவிட்டுத் தீபாவளி அன்று பகல் கொஞ்சம் ஓய்வு எடுப்பதோடு சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளிலும் காலம் கழிப்பார்கள்.  அடுத்து பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் இரவெல்லாம் விழித்திருந்து விழுந்து விழுந்து படிப்பார்கள்.  அந்தக் காலத்தில் கிராமங்களில் நாடகங்கள் நடத்தும்போது இரவு முழுவதும் ஊர் ஜனங்கள் விழித்திருந்து அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு சாமான்கள் வாங்குவதற்குப் பலர் இரவு விழித்திருந்திருக்கிறார்கள்.  ஐரோப்பியக் குடியேறிகள் முதன் முதலில் அமெரிக்காவிற்கு வந்தபோது அப்போது அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் அவர்களை வரவேற்று நிறைய உதவிகள் புரிந்தார்கள்.  ஒரு ஆண்டு கழிந்த பிறகு குடியேறிகள் தாங்கள் புது இடத்தில் உயிர்பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.  இப்படி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் பண்டிகையாக வளர்ந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்தப் பண்டிகையை நவம்பர் மாதக் கடைசி வியாழனன்று கொண்டாடும் பண்டிகையாக சட்டபூர்வமாக்கினார்.  இருபதாம் நூற்றாண்டில் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் நவம்பர் மாத நாலாவது வியாழக் கிழமையன்று அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.  நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாளிலிருந்து கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் வாங்கும் வழக்கம் இருந்ததால் பரிசுகள் வாங்குவதற்கு நிறைய நாட்கள் இருந்திருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!.   அப்போதே சாமான்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் அமெரிக்கர்களிடம் இருந்திருக்கும்போலும்.

நாளடைவில் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்குவது  எல்லோரும் பின்பற்றும் செயலாக மாறியது.  இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட வணிக நிறுவனங்கள் அன்று பெரிய அளவில் பொருள்களின் விலையில் தள்ளுபடி கொடுத்து அவற்றை விற்க முற்பட்டார்கள்.  அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட சாமான்கள் ஒரு சிலவே கடைகளில் இருக்கும்.  ஆனால் அவற்றை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் உள்ள பொருள்கள் தீர்ந்து போய்விட்டாலும் மற்றப் பொருள்களை வாங்குவார்கள்.  இதற்காகவே கடைகளையும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் அதிகாலையிலேயே திறந்துவிடுவார்கள்.  அந்த வெள்ளிக்கிழமையை  கறுப்பு வெள்ளி (Black Friday) – ‘அதாவது வரவு வரும் நாள்’ – என்று அழைப்பார்கள்.  வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகத்தில் நஷ்டம் வந்தால் சிவப்பு மையில் கோடிடுவார்களாம்.  இந்த வெள்ளியன்று லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் இதைக் கறுப்பு வெள்ளி என்கிறார்கள்.

முதலில் கறுப்பு வெள்ளியன்று காலையில் எட்டு மணிக்குக் கடை திறக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள்.  இதுவே காலை ஐந்து மணிக்கே திறக்க ஆரம்பிக்கும் பழக்கமாக உருவெடுத்தது.  ஒரு கடை எட்டு மணிக்குத் திறந்தால் அதற்குப் போட்டியான கடை ஏழு மணிக்கே திறக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு இன்னொரு கடை ஆறு மணிக்கே திறக்க ஆரம்பித்து, பின் எல்லாக் கடைகளும் காலை ஐந்து மணிக்கே திறக்கும் பழக்கத்தை ஆரம்பித்தன.

வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்கக் கடைக்கு வரவழைப்பதில் கடைகளுக்குள் பலத்த போட்டி இருப்பதால் நன்றி தெரிவிக்கும் பண்டிகை அன்றே கடைகளைத் திறக்கும் பழக்கத்தை சில கடைகள் மேற்கொள்ளத் தொடங்கின.  அன்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மூன்று மணியிலிருந்து நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்து ஆறு மணிக்கு வான்கோழியோடு கூடிய பெரிய விருந்தை உண்ண ஆரம்பிப்பார்கள்.  மதுபானங்களைத் தாராளமாக அருந்தும் இந்த விருந்து முடிய இரவு வெகு நேரம் ஆகும்.  அதனால் அன்று அத்தியாவசிய சேவைகள் புரியும் மருத்துவமனைகள், போக்குவரத்து போன்றவை தவிர எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை.  இதில் டிபார்ட்மெண்ட் கடைகளும் அடக்கம்.  ஆனால் கடைகளுக்கிடையே போட்டிகள் வலுத்து வருவதால் போன வருடம் வியாழக் கிழமை அன்றே விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கடைகளைத் திறந்துவிடும் பழக்கத்தை ஓரிரண்டு கடைகள் ஆரம்பித்தன.

இந்த வருடம் இது வரை செய்திருந்த சாதனைகளை எல்லாம் முறியடிப்பது போல் எல்லா கடைகளும் வியாழக் கிழமை இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் செய்துகொண்டிருந்தன.  (ஓரிரண்டு டிபார்ட்மெண்ட் கடைகள் மற்ற நாட்களைப்போல் வியாழன் காலையிலேயே திறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.  அடுத்த வருடம் எல்லாக் கடைகளும் இதைப் பின்பற்றலாம்.)  வாடிக்கையாளர்களும் இரவு முழுவதும் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  கடை ஊழியர்களும் அவசர அவசரமாக விருந்தை முடித்துக்கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட மறுநாள் வெள்ளியன்று கடைகளை காலையில் சீக்கிரமே திறந்தாலும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான வியாழனன்று எல்லா நிறுவனங்களும் மூடியிருக்குமாதலால் எப்போதும் கார்கள் நிறைந்து காணப்படும் அமெரிக்கச் சாலைகள் அன்று ஒரு சில கார்கள் தவிர – இந்தக் கார்களில் செல்லுபவர்களும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையைக் கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் – வெறிச்சோடிப் போயிருக்கும்.  அன்று வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த சாலைகளைப் பார்ப்பதற்காகவென்றே நான் கொஞ்ச தூரம் வெளியே செல்வதுண்டு.  ‘இன்று ஒரு நாள் எல்லோரும் வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள்’ என்ற ஒரு நினைப்பே எனக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும்.  இனி அதெல்லாம் கிடையாது போலும்.

இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்வதால் அவர்களுடைய பண்டிகைகளுக்கெல்லாம் விடுமுறை உண்டு.  வருடத்தில் இருபது நாட்களாவது விடுமுறை நாட்களாக இருக்கும்.  அமெரிக்காவில் மிகக் குறைந்த நாட்களே விடுமுறை நாட்கள்.  ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை நாள், கிருஸ்துமஸ் பண்டிகை நாள் ஆகியவையே.  டிபார்ட்மெண்ட் கடைகள் ஈஸ்டர், நன்றி தெரிவிக்கும் பண்டிகை,கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களுக்கு மட்டும் மூடியிருக்கும்.  மற்ற விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு விடுமுறையாதலால் அன்று சாமான்கள் வாங்க வருவார்கள் என்று டிபார்ட்மெண்ட் கடைகள் திறந்திருக்கும்.  ஈஸ்டருக்கு மூடுவதைப் பல கடைகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மூடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.  இப்போது நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மூடுவதையும் மெதுவாகவிட்டுவிடுவார்கள் போலும்.  எதற்காக?  சாமான்களை வாங்கிக் குவிப்பதற்காக.

சிகாகோவில் பிரபல சாக்கலேட் விற்கும் கடை ஒன்று அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து மறு நாள் வெள்ளி காலை ஒன்பது மணி வரை தள்ளுபடி விற்பனை செய்தது.  இந்த நேரத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டின் விலை இருபத்தைந்து காசுகள்.  அந்த நேரத்திற்குப் பிறகு போனால் ஒன்றின் விலை நாற்பது காசுகள்.நூற்றுக் கணக்கில் சாக்கலேட் வாங்கும்போது தள்ளுபடி விற்பனைக்கும் தள்ளுபடி அல்லாத விற்பனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.  டி.வி. போன்ற விலையுயர்ந்த சாமான்கள் வாங்கினால் நிறையப் பணம் மிச்சம் செய்யலாம்.  இருப்பினும் ஆற அமர விருந்துண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய சமயத்தில் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு மால்களுக்குஓடி வர வேண்டுமா?

கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் தங்கள் சாமான்களை வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்குப் பல வகையாக விளம்பரம் செய்தனர்.  பிறருக்குக் கொடுப்பதற்குப் பரிசுகள் வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த வருஷம் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள்,தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டியசாமான்கள் ஆகியவற்றைக் கூட தள்ளுபடி விற்பனையில் இடம் பெறச் செய்தார்கள்.  ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து ஒன்றைப் பரிசுக்காக வாங்கினால் இன்னொன்றைத் தங்களுக்காக வாங்கிக்கொள்ளும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பொருள்கள் வாங்கும் வெறியை வளர்த்துவிட்டார்கள்.

ஒரு இருபத்தைந்து வயது வடிக்கையாளர் முதலில் நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து கடை கடையாகச் சென்று அறுபது அங்குல டி.வி., ஐபாட்(iPod), குக்கர் என்று சாமான்களாக வாங்கித் தள்ளியிருக்கிறார்.  இதெல்லாம் அவருக்காகவும் அவருடைய மனைவிக்காகவும் மட்டுமே.

இதெல்லாம் போக ஆன்லைனில் பொருள்கள் வாங்கியவர்கள் பட்டியல் வேறு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போகிறது.  இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகமாம். இதில் கால் பங்கு செல்போன் மூலம் வாங்கப்பட்டதாம்.

அமெரிக்காவில் தயாராகும் பொருள்களை வாங்குங்கள் என்று ஒரு சாரார் விளம்பரம் செய்கிறார்கள்.  ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாம் இவர்கள் ‘designer goods’ என்று அழைக்கும் விலையுயர்ந்த அணிகலன்கள், உடைகள், காலணிகள்.  இவற்றிற்கு அமெரிக்கர்கள் நிறையப் பணம் கொடுக்க வேண்டும்.  மேலும் அமெரிக்காவில் தயாராகும் எந்தப் பொருளுக்கும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.  ஏனெனில் வெளிநாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் சம்பளம் அமெரிக்கத் தொழிலாளிகளுக் கொடுக்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு.  வளர்ந்துவரும் நாடுகளில் தொழிலாளர்கள் பாதுக்காப்பிற்கு இந்தக் கம்பெனிகள் செய்ய வேண்டியவற்றை அந்தந்த நாட்டு அரசுகள் சரியாகக் கண்காணிப்பதில்லை.  பங்களா தேஷில் போன வருடம் நடந்த ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை பகிஷ்கரிக்கும் எண்ணம் அமெரிக்கர்களுக்கு வந்தபாடில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாம்.  டிபார்ட்மெண்ட் கடைகளில் நடக்கும் விற்பனை ஒவ்வொரு வருடத்திற்கும் கூடிக்கொண்டே போக வேண்டுமாம்.  அப்போதுதான் அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்குமாம்.  என்ன பொருளாதாரமோ.  நுகர்வோர்களை உருவாக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாலும் முடியவில்லை.  இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.