ஏனடா கவலை…
அன்று தேவன் எழுதிய எழுத்து- அதை
அழித்திட நினைப்பது ஆகுமோ பெண்ணே,
தொன்று நிகழ்ந்ததின் தொடர்ச்சியிவ் வாழ்வு- அதைத்
தொலைத்திடத் திட்டம் தகுமோ கண்ணே..
நாளை நடப்பதை நன்றாய் அறிவான்- அவன்
நம்மைப் படைத்தவன் நன்கறி தம்பி,
காளைப் பருவம் வாழ்வினில் கொஞ்சம்- அதில்
கவலைத் தீயில் கருகிடாய் வெம்பி..
ஆடும் பம்பரம் அகிலம் மீதுநாம்- அதை
ஆட்டும் ஒருவனை அறிவையோ அண்ணா,
நாடும் வீடும் நம்முடன் வருமா-அந்த
நிலையிலா வாழ்வை நினைப்பயோ கண்ணா..
கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!
படத்துக்கு நன்றி
http://www.virginiarowing.com/
//கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!//
மிகவும் அழகான வரிகள். வாழ்த்துக்கள் திரு,செண்பக ஜெகதீசன்.
வாழ்த்துரை வழங்கிய நண்பர் சச்சிதானந்தத்திற்கு
என் நன்றிகள்…!