சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 1
மேகலா இராமமூர்த்தி
கருணை மறவன்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நின்றுவிட்ட ஓர் ஒப்பற்ற காப்பியமாகும். பண்டைத் தமிழர்தம் பண்பட்ட வாழ்க்கை முறையினையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வதற்கு ஓர் சிறந்த இலக்கியச் சான்றாகவும் இக்காப்பியம் விளங்கிவருகின்றது.
அக்கால வழக்கத்தையொட்டி எழுதப்பட்ட மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
அதுமட்டுமல்லாமல் தம்முடைய காப்பியத் தலைவனைக் குணத்திலே குன்றாகவும், குறைகளற்ற கோமகனாகவும் படைத்திடாமல் அதிலும் வேறுபட்டவராய்க் குற்றம் குறைகள் நிறைந்த சாதாரண மனிதனாகவே அவனைப் படைத்திருப்பதும் புதுமையே. ஆம்.. கோவலனின் வாழ்க்கைமுறை பற்றிப் புகார்க் காண்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அவனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு எதனையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இதனைக் காணும்போது நற்குடிப் பிறப்பாளனான கோவலன் நற்செயல்கள் எதனையுமே செய்யவில்லையா? கட்டிய மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு வாழ்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றானே…இஃது அவனுடைய ஒழுக்கக் குறைவைக் காட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது! என்றெல்லாம் நாம் சிந்திக்கத் தலைப்படுகின்றோம்.
கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே கணிகையர் குலத்தில் பிறந்தும் கற்புக்கரசியாக வாழ்ந்த மாதவி நல்லாளுடன் கோவலன் நடத்திய இல்வாழ்க்கையைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அதிகம் அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பமே நமக்கு வாய்க்கவில்லை. அதனால்தானோ என்னவோ..அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம். கோவலன் செய்த அறச் செயல்களுக்கும் ஓர் அளவில்லை என்பதனை மதுரைக் காண்டத்திலேதான் (அவன் கொலை செய்யப்படுவதற்குச் சற்றுமுன்பு) நமக்கு அறியத் தருகின்றார் காப்பிய உத்திகளை அமைப்பதில் கைதேர்ந்தவரான இளங்கோவடிகள்!
கோவலனின் கருணை உள்ளத்தையும், எளியோர்மாட்டு அவன் காட்டும் பேரன்பையும் நாம் அறிந்து மகிழும் வகையில் அவற்றைப் பற்றிய செய்திகளை ’அடைக்கலக் காதை’ எனும் பகுதியில் வைத்துள்ளார் ஆசிரியர். நமக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் விளங்கும் கோவலனின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்குமுரிய மறுபக்கம் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகின்றது.
பூம்புகாருக்கு அருகிலுள்ள ’தலைச்செங்காடு’ என்னும் ஊரில் வசித்துவரும் கோவலனின் நெருங்கிய நண்பனான, நான்கு மறைகளையும் நன்குணர்ந்த, அந்தண குலத்தைச் சேர்ந்த ’மாடலன்’ என்பவன் தன் திருத்தல யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரையை ஒட்டிய பகுதியில் சமணத் துறவியான கவுந்தியடிகளுடன் (சமணப் பள்ளியில்) தங்கியிருக்கும் கோவலனையும், கண்ணகியையும் சந்திக்கின்றான்.
கோவலனின் உருவழிந்த, வாடிய தோற்றத்தைக் கண்டு வருந்திக் கோவலன் மதுரை வந்த காரணம் என்ன? என்று மாடலன் வினவ, பொருளினை இழந்து வறுமையுற்றிருக்கும் தன் நிலையை மாற்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் ஈட்டவே தாம் அங்கு வந்ததாகக் கோவலன் கூறுகின்றான். அதுகேட்டு அவனுடைய முந்தைய வளமான வாழ்வையும், இன்றைய அவல நிலையையும் நினைந்து மட்டிலா மனவேதனை அடைகின்றான் மாடலன். அவ்வேதனையினூடே வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குக் கோவலனின் கடந்த காலத்தை, அவனுடைய அரிய குணங்களைப் புலனாக்கி நம்மையும் அவனிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொள்ளவைக்கின்றன.
மாடலன் கோவலனைப் பற்றி அப்படி என்னதான் சொல்லியிருப்பான் என்ற ஆவல் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பொங்குகின்றதல்லவா? கோவலனுடைய கடந்த காலத்திற்கு நாமும் சற்றுச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்வோமா?
கோவலனும், மன்னனிடம் ’தலைக்கோல்’ பெற்ற (சிறந்த நாட்டிய நங்கைக்கு மன்னனால் செய்யப்படும் சிறப்பு) புகழ்மிக்க மாதவியும் மகிழ்வோடு நடத்திய இல்லறத்தின் பயனாய் அருஞ்சாதனைகளைப் புரிவதற்கென்றே தோன்றியது ஓர் ஒப்பற்ற பெண் மகவு. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று மாதவியின் குலத்தைச் சேர்ந்த கணிகையர் அனைவரும் யோசித்திருக்கும் வேளையில் கோவலன் ஓர் சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்கின்றான்; அப்பெயரைத் தான் தேர்ந்தெடுத்த காரணத்தையும் அனைவருக்கும் அறியத் தருகின்றான்.
”முன்பொரு காலத்தில் எம்குல முன்னோனான வணிகன் ஒருவன் கடற்பயணம் செய்தபோது அவனுடைய மரக்கலம் பேரலைகளினால் தாக்கப்பட்டு உடைய, கரையை அடையமுடியாமல் அவன் துயருற்றான். அப்போது அவன்முன் தோன்றிய ’மணிமேகலா தெய்வம்’ என்ற பெண்தெய்வம் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவனைக் காத்துக் கரை சேர்த்தது. அத்தெய்வமே எங்கள் குலதெய்வம் ஆகும். அத்தெய்வத்தின் பெயரையே என் மகளுக்குச் சூட்டுக” என்கின்றான் கோவலன்.
அதுகேட்டு, அங்குக் கூடியிருந்த ஆயிரம் கணிகையரும் (ஆயிரம் பேர் என்பது கவிச்சுவைக்கான மிகைப்படுத்தலாயிருக்கலாம்) அக்குழந்தைக்கு “மணிமேகலை” என்ற அழகிய பெயரைச் சூட்டி வாழ்த்தினர். இதனை இளங்கோவடிகள்,
“அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்,
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று” (அடைக்கலக் காதை: 38-39) எனக் குறிப்பிடுகின்றார்.
மகிழ்ச்சி நிறைந்திருந்த அவ்வேளையிலே அழகிய மடந்தையாகிய மாதவியோடு சேர்ந்து செம்பொன்னைத் தானம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்றான் கோவலன்.
அப்போது அங்கே அச்சம் தரத்தக்க ஓர் காட்சி தென்படுகின்றது. நிறைந்த ஞானத்தையுடைய வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கையில் கோலூன்றியபடித் தானம் பெறுவதற்காகக் கோவலன் இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார். கோவலன் இல்லத்தில் குழுமியிருந்த அனைவரும் அம்முதியவரையே அச்சத்தோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்…அவருக்கு ஏதேனும் ஆபத்து நெருங்குகிறதோ? நம் யூகம் சரியே! தள்ளாடியபடியே நடந்துவரும் அப்பெரியவரைப் பாகனிடமிருந்து தப்பித்த மதம் கொண்ட யானை ஒன்று துரத்தி வருகின்றது; அத்தோடு நில்லாமல் அவரைத் தன் துதிக்கையில் பற்றியும் கொண்டுவிட்டது. அதனைக் கண்டோர் அனைவரும் செய்வதறியாது பயத்துடன் திகைத்து நிற்க, அதுகண்ட கோவலன் பாய்ந்துசென்று ’ஒய்’யென்ற (யானையைத் திட்டும் ஆரிய மொழி) ஒலி எழுப்பியபடியே மின்னல் வேகத்தில் அந்த முதிர்ந்த அந்தணரை யானையின் பிடியினின்றும் விடுவித்து அவர் உயிரைக் காக்கின்றான்; அத்தோடு நிறுத்தவில்லை. அந்த யானையின் வளைந்த துதிக்கையின் இடையே புகுந்து அதன் மதத்தையும் அடக்கிக் ’கருணை மறவனாக’த் திகழ்கின்றான். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ’கருணை மறவன்’ என்ற சொல்லாட்சிப் புதியதாகவும், சுவையாகவும் இருக்கக் காண்கிறோம்.
அந்த முதிய அந்தணர் மீது கொண்ட கருணையால்தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து ’மறவனாக’ மாறி மதயானையை அடக்கி வீரனாகத் திகழ்கின்றான் கோவலன். ஆகவே ’அருள்வீரன்’ என்னும் பொருள்பட அமைந்த ’கருணை மறவன்’ என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருத்தமானதுதானே?
”…………………………உயர்பிறப் பாளனைக்
கையகத்து ஒழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி,
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” (அடைக்கலக் காதை: 48-53) என்பவை மேற்சொன்ன நிகழ்வை விளக்கும் இனிய வரிகள்.
இவ்வாறு அளவற்ற அருளாளனாகத் திகழும் கோவலன் ஓர் அபலைப் பெண்ணுக்கு அரிய உதவி ஒன்றைச் செய்து அவள் வாழ்வைக் காக்கின்றான். அது என்ன?
(தொடரும்)
கோவலனின் மறுபக்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இதுவரை எனக்குத் தோன்றியதே இல்லை. உங்கள் கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்கிறேன், தொடருங்கள் மேகலா.
அன்புடன்
….. தேமொழி
கோவலனின் கொடையும் கருணையும் அழகாக கூறப்பட்டுள்ளது. தங்களது விளக்கத்திற்கு நன்றி திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே!
இதில் குறிப்பிடப்பட்டுள்ள “மணிமேகலா” தெய்வம்தான் “கொற்றவை” என்று கருதுகிறேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.
கொடையும் வீரமும் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக கொடையும் கருணையும் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.
’கொற்றவை’ எனும் தெய்வம் பற்றிய செய்திகள் மற்ற நூல்களைக் காட்டிலும் சிலம்பில் அதிகமாகவே பேசப்படுகின்றது. வெற்றித் தெய்வமாகவும், ஆறலைக் கள்வர்கள், மறவர்கள் போன்றோரின் வழிபடு தெய்வமாகவும் அவள் காட்டப்படுகிறாள். கானமர் செல்வியாகவும், காடு கிழாளாகவும், பாய்கலைப் பாவையாகவும் குறிக்கப்படுபவளும் அவளே.
கோவலன் குறிப்பிடுகின்ற அவன் குலத் தெய்வமான ‘மணிமேகலா தெய்வம்’ கொற்றவை என்று கொள்வதற்குச் சான்றுகள் ஏதுமில்லை.
கொற்றவையினின்று பெரிதும் வேறுபட்ட ஓர் (சிறு) தெய்வமாகவே அவளை நாம் கருத முடிகின்றது. மணிமேகலா தெய்வம், தீவத் திலகை போன்ற பல பெண் தெய்வங்கள் பற்றிய செய்திகளை மணிமேகலைக் காப்பியம் விரிவாகப் பேசுகின்றது.
வணக்கம் தோழி
இது என் முதல் வருகை. கோவலனை பற்றி எதுவும் இதுவரை அறிந்ததில்லை.
எதுவும் பேசப்படவில்லை தான். மறுபக்கம் மதிப்பளிக்கும் வகையில் இருப்பதை எடுத்துரைத்தது சிறப்பே. தொடருங்கள் தோழி அருமை
வாழ்த்துக்கள்….! தொடர்கிறேன்.
என் ஐயம் நீக்கிய தங்கள் விளக்கத்திற்கு நன்றி சகோதரி!
வல்லமை இதழுக்குத் தாங்கள் வருகை தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி இனியா.
தங்களின் இனிய கவிதையைத் தோழி தேமொழியின் வண்ணத் தூரிகையோடு கண்டு மகிழ்ந்தேன்; நன்று!
என் கட்டுரை குறித்த தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி!
சிலப்பதிகார நாயகன் கோவலனின் இனிய பண்புகள் நிறைந்த மறுபக்கம் நம் தமிழ் மக்கள் அதிகம் அறியாத ஒன்றாகவே என் மனத்திற்குப்பட்டது. அதனை வெளிப்படுத்தவே என் கட்டுரை முயற்சி.
தங்கள் வாசிப்பிற்கு மீண்டும் என் நன்றி!
கோவலன் குழுவினர் மதுரை நோக்கிப் பயணிக்கும் வழியில் கள்வர் பயம் உண்டெனக் கூறி கள்வரின் குணங்கள் பற்றி குறிப்பிடும் சிலம்பின் வரிகளை எடுத்துரைத்து உதவ முடியுமா?