வீழ்ச்சியை மாற்றி எழுச்சியுறும் திறனாளிகள்!
பவள சங்கரி
தலையங்கம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளையோ, அல்லது இடையில் விபத்தினால் ஏற்படும் குறைபாடுகளையோ எண்ணிக்கொண்டு காலம் முழுவதும் முடங்கிக் கிடப்பவரின் எண்ணிக்கை இன்று கனிசமாகக் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பத்தில் ஒரு குழந்தையோ அல்லது மொத்த குழந்தைகள் மக்கள் தொகையில் 3% குழந்தைகளோ மாற்றுத் திறனாளிகளாக இருக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாகவும், வேலையில் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு இருப்பது போல தனியார் நிறுவனங்களும் அதை கட்டாயமாகக் கடைபிடித்தால் இந்தப் பிரச்சனை பெருமளவில் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும். மாற்றுத் திறனாளிகளின் நிலை மாறி வர வேண்டும் என்பதற்காக நம் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். வேலை வாய்ப்புகள், பேருந்து, தொடர் வண்டிகளில் அவர்களுக்காக தனிப்பட்ட இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் அளிப்பது பாராட்டிற்குரியது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மாதாந்திர நிதியுதவியை ரூ. 500-லிருந்து ரூ.1,000-ம் ஆக உயர்த்தவும். மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் தனி பல்கலைக்கழகம் நிறுவுவது, தொழில் வரி, சொத்து வரியில் விதிவிலக்கு அளிப்பது போன்ற சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, இவர்களுடைய போராட்டங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளதும் வேதனைக்குரிய விசயம். இன்று பொது கழிப்பிடங்கள், பொது அரசு கட்டிடங்கள், மற்றும் சில தனியார் நிறுவனங்கள் போன்றவைகள் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட கட்டிட அமைப்பை மாற்றி வருவதும் வரவேற்பிற்குரிய செயலாகும். நம் சக மனிதர்களை ஏதோ ஒரு சில குறைபாடுகளுக்காக அவர்கள் மீது தேவையற்ற பரிதாபத்தையோ அல்லது புறக்கணிப்பையோ செய்து அவர்களை ஒதுக்குவதைவிட, அவர்களும் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்து, அவர்கள் முன்னேற அவரவர்களால் முடிந்த உதவியை மனமுவந்து செய்வதே மனிதாபிமானமாகும். பெரும்பாலும் கிராமப் புறங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான எந்த ஒரு தனிப்பட்ட வசதி வாய்ப்பும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நம் இந்தியாவின் இன்றைய நிலை.
மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு தனித்திறன் மறைந்திருப்பது கண்கூடு. கண் பார்வையற்ற பலர் மிக இனிமையான குரல் வளம் உடையவர்களாக இருக்கக் காண்கிறோம். பெத்தோவன் (Ludwig Van Beethoven) தன் 32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் முழுவதுமாக காது கேட்காத நிலையை அடைந்தும், சங்கீதத்தில் அவர் படைத்த இசைக் காவியங்கள் அனைத்தும், தம் 46ஆவது வயதிற்குப் பிறகு இவர் படைத்தவையே. உலகம் போற்றும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், வின்செண்ட் வேன்கோவ், சர்.ஐசக் நியூட்டன், நெப்போலியன், அகதா கிரிஸ்டி, ஸ்டீபன் ஹாகிங், அலெக்ஸாண்டர், சார்லஸ் டிக்கன்ஸ், ஜூலியஸ் சீசர், அரிஸ்டாட்டில் போன்ற பல மேதைகள் ஏதோ ஒரு பாதிப்புடன் போராடிக்கொண்டுதான் சாதனை படைத்துள்ளார்கள் என்பது நம் வரலாறு சொல்லும் உண்மை. இப்படி ஊனத்தை வென்று சாதனைப் படைத்தவர் பட்டியல் மிக, மிக நீளம்.
இன்றும், குண்டு எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும், போலியோவினால் பாதிக்கப்பட்ட காலுடன் இருக்கும் விருதுநகர் ஜெயக்கொடியும், ஒரு விபத்தில் வலது கால் துண்டானபோதும், சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன், இமயமலையின், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை புரிந்துள்ள, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்கா, தர்மபுரியைச் சேர்ந்த இரு கைகளையும் இழந்தும், தம் தன்னம்பிக்கையை இழக்காமல், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களையும், இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை புரிந்துள்ள வெங்கடேசன் என்று இவர்களைப் போன்ற பலர் முன்னுதாரணங்களாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஊக்கமும், உற்சாகமும், மற்றும் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவதும்தான் சரியான செயலாக இருக்குமேயன்றி, இவர்கள் மீது தேவையில்லாமல் காட்டப்படும் பரிதாப உணர்ச்சியும், இரக்கமும் அல்ல. ஊனம் ஒரு பலவீனம் இல்லை. அதையும் தாண்டி மனிதன் வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் பல இருக்கிறது என்பதை உணராதவர்கள் இல்லை. ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு ஒரு மாற்றுத் திறன் இருப்பதாலேயே இவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம்.
–