Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 19ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

உடற்கூற்று வண்ணம்.

ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும்
அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
ஊறுசுரோணித மீது கலந்து 1.

பனியிலொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்துபுகுந்து
திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவி கால்கைகளென்ற 2.

உருவமுமாகி உயிர்வளர் மாதம் ஒன்பதுமொன்றி
நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து 3.

மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட வுந்தி
உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி
ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து 4.

பேதைகள் இருவர் ஆணும் பெண்ணுமாய் இனிமை தரும் சுகானுபவத்தில் திளைத்திருக்க, அன்பு பெருக, உணர்வு மயங்கி, கலவியின் பயனாய் ஆண்மகன் சுக்கிலம் தலைவியின் சுரோணிததில் கலந்ததும்;

இவ்விரு கலப்பில் சுக்கிலம் பனித்துளியின் பாதியளவில் சுரோணிதச் சேர்க்கையால், தாமரை மொட்டைப் போலவும் பின் ஆமை வடிவம் கொண்டும் வளர்ந்து பெரிதாகி கண், காது, மூக்கு, கால், கைகள் இவைகளெல்லாம் சிறிது சிறிதாகப் பிரிந்து வளர்ந்து;

சிசுவின் உருவம் வளர்ந்து ஒன்பதும் ஒன்றுமாய் மாதங்கள் முடிந்ததும், தலைவி வேதனையுற, வருந்தியந்த சிசுவும் மண்ணில் விழ, கூடியிருந்த சுற்றம் அந்த சிசுவிற்கு நாள், நட்சத்திரம் கோள்களைக் கணித்திட;

கூடியிருந்த மாதரார் கூட்டம் குழந்தையை எடுத்துச் சீராட்டி தூளியிலிட்டுத் தாலாட்ட, சிறுகச் சிறுக அந்தச் சிசு கால் கைகளை உந்தி விளையாடிப் புரண்டு படுத்து தவழ்ந்து, தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் அருந்தி ஓரறிவு, ஈரறிவு என வளர்ந்து வரும் காலத்தில்;

ஒளிநகையூற இதழ் மடவாரும் உவந்து முகந்திட
வந்து தவழ்ந்து மடியிலிருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப; 5.

உடை மணியாடை அரைவடமாட உண்பவர்
தின்பவர் தங்களொடு உண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே 6.

உயர்தரு ஞான குரு உபதேசமும் தமிழின் கலையும்
கரைகண்டு, வளர் பிறையென்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து 7.

மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
கொண்டை புனைந்து, மணி பொனிலங்கு பணிகளணிந்து
மாகதர் போகதர் கூடி வணங்க 8.

சின்னஞ் சிறியதாய் மல்லிகை மொட்டாய் பற்கள் வெளிவர, மெல்லிய இதழில் மடவார் முகர்ந்து முத்தமிட, குழந்தையும் மகிழ்ந்து அவர்பால் செல்ல, தாய்மடியேறி மழலைகள் மொழிய, ‘வா’ எனவும் ‘போ’ எனவும் சொற்களைப் பேசித் தொடர்ந்து ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் கொஞ்சி அழைக்க;

பட்டாடைகளும், பன்மணி மாலையும், தங்கத்தில் அரைஞாண் இடையினில் ஆட, உண்பவர், தின்பவர் செயலைப் பார்த்துத் தானும் உண்டும், பருகியும், தெருவில் ஓடி, புழுதியில் அளைந்து, தன்வயதொத்த பாலரைத் தேடி ஓடி விளையாடி, ஐந்து வயதாக ஆன பிறகு;

தகுதியுள்ள குருவிடம் சேர்ந்து, ஞானோபதேசமும் நல்ல தமிழ்க் கல்வியும், சாத்திர நீதியும் கசடறக் கற்று, நூல் பல தேர்ந்து நன்கு பயின்று, வளர்பிறை போலவே நாளும் வளர்ந்து, பதினாறு வயதினை அடையும் போதினில்:

நீண்ட கூந்தலைச் சீவி முடிந்து கொண்டைகள் இட்டு, ஆறு கால் கொண்ட நீலநிற வண்டுகள் மொய்க்கும் நல்ல மலரில் மாலைகள் கட்டி அணிந்து, மணிகள் பொதிந்த பொன் அணிகளை அணிந்து பார்ப்பவர் அனைவரும் கூடிநின்று பாராட்டி நிற்க;

மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு
திரண்டு, வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு; 9.

மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவ மயங்கி இதழமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி; 10.

ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
வம்பில் இழந்து,மதன சுகந்த விதனமிது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து; 11.

வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரை திரை வந்து
வாத விரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே 12.

மன்மதனையொத்த அழகுடையவனாக இவன் இருக்கிறானே என மோகங் கொண்ட மங்கையர்கள் மனம் மயங்கி, செவ்வரி படர்ந்த கண்களால் பார்த்து மருண்டு அழகிய மயில்கள் பவனி செல்வது போல போகும் அவர்கள் செல்லும் காட்சியும்;

தன்னைப் பார்த்து மயம் மயங்கிச் செல்லும் அந்த மாதைப் பின்பற்றிச் சென்று, அவளது கொங்கைகள் தன் மார்போடு இழைய மருவிக் கொண்டு, இதழோடு இதழ் வைத்து இன்பம் தேடி, அவள் விரும்பியவாறு இன்பமளித்து;

முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்களையெல்லாம் திரட்டி, தான் சேர்த்தவற்றையும் இப்படி இன்ப நாட்டத்தில் கொண்டு செலுத்தி, மதன சுகங்களின் மிகையால் செல்வம் கரைந்து, உடலும் மெலிந்து வாலிபத் தோற்றம் மாறி கிழத்தனம் எய்தி, மிகுந்த சுகத்தின் பலன் இது என பிறர் பரிகசிக்க;

செல்வம் அழிந்து, இளமை ஒழிந்து, பற்கள் விழுந்து, கண்கள் இருண்டு, வயதின் முதிர்ச்சியால் தலை நரை படர்ந்து, தோல் சுருங்கி, ஆத்திரமும், பொறாமை குணங்களும் பெற்று நடுங்கும் கரங்களில் ஒரு தடியையும் ஊன்றிக் கொண்டு;

வருவது போவது ஒரு முதுகூனுமந்தி யெனும்படி
குந்தி நடந்து, மதியும் அழிந்து, செவி திமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து; 13.

துயில் வரு நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு; 14

கலியுக மீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர்
சஞ்சலம் மிஞ்ச, கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து; 15

தெளிவுமிரா உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு, தடமும் உலனிது மிகவும் மலைந்து
தேறி நல்லாதர வேதென நொந்து; 16

கிழக்குரங்கொன்று தன் கூன் முதுகைச் சாய்த்துக் கொண்டு அங்கும் இங்குமாய் திரிகின்ற காட்சிபோலவும், அறிவு கெட்டு, காதும் செவிடாகி அடைத்துக் கொண்டும், அடுத்தவர் சொல்வதைக் கேட்க முடியாமலும், வாயில் வந்ததையெல்லாம் விடாமல் உளறிக் கொட்டிக் கொண்டு;

இரவு ஆனதும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகின்ற நேரம்; அந்த நேரம் பார்த்து விடாமல் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும்; தொண்டையும், நெஞ்சும் இருமியதால் வறண்டு போகும், தூக்கத்தில் துகில் போன இடம் தெரியாமல் விலகிக் கிடக்கும்; இவற்றைக் கண்டு பெண்டிர் வருந்துவர், இளையோர் ஏகடியம் பேசுவர்;

இது கலியுகம். யுகதர்மங்கள் மாறுபடும். இந்த யுகத்தில் இதுபோன்ற நிலைமையை அடைந்தவர்களைக் கண்டு பரிதாபப் படமாட்டார்கள், பெரிசு படும் பாட்டைப் பாருங்கள் என்பர், மனது வருத்தப்படும், நம்மை அறியாமலே நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மலமும், சலமும் தானே கழிந்து பார்ப்பவர் முகம் சுளிக்க வைத்துவிடும்’

மனத்தில் தெளிவு இல்லாமையால் பேசும் சொற்களிலும் தெளிவு இருக்காமல் வார்த்தை தடுமாறும்; சிந்தை வரண்டு விடும், நெஞ்சம் உரைந்துவிடும், மனோதிடமும் குலைந்துவிடும், நமக்கு இனி உறுதுணை யார் என்பதை மனம் எண்ணத் துவங்கிவிடும்.

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம்
ஏதினி வாழ்வு நில்லாது இனி நின்ற; 17.

கடன்முறை பேசும் என உரை நாவு முழங்கி விழுந்து
கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமு நாலு சுவாசமும் நின்று –
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே. 18.

வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச, மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போய் யம தூதர்கள் வந்து; 19

வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்து அழ நொந்து, மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து 20

படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் எழுதிய பிரம்ம லிபியின் படி வாழ்க்கையில் எத்தனை கண்டங்களொ அத்தனையும் நினைந்து, இனியும் கண்டங்கள் உண்டோ, விதியின் நியதிப்படி என்னென்ன நேருமோ, இனி வாழ்வு என்ன வாகுமோ, நிலைக்குமோ என்றெல்லாம் சிந்தித்து;

வாழ்க்கை லட்சியங்கள், கடமைகள் என்றெல்லாம் வாழும் முறைகளை வக்கணையாய்ப் பேசுகின்ற நாவு சோர்ந்து வீழ்ந்து பேசமுடியாமல் போய்; கைகளால் சைகை செய்து பிறருக்கு உணர்த்தி, கடின சோறு உண்ண முடியாமையால் கஞ்சி குடித்து, குடித்த கஞ்சியும் கடைவாய் வழியே தவறிச் சிந்தி வழிய, உள்செல்லும் பிராணவாயு குறைய, சப்த நாடிகளும் ஒடுங்கிக் கிடக்க, பேசமுடியாமல், மூச்சு விடவும் முடியாமல் மனம் கலங்கிடும் காலத்தில்;

வளர்பிறைச் சந்திரனையொத்த கடைவாய்க் கோரைப் பற்களோடும், தீப்பற்றி எரிவதைப் குத்திட்டு நிற்கும் செம்பட்டைத் தலைமுடியும், அதில் சடைகள் நிரம்பியிருக்கவும், கடுத்த மனமும், இருள் போல விளங்கும் கருத்த மேனியும், பெரிய மலைபோன்ற சரீரமும் கொண்ட எம தூதர்கள் வந்து;

பாசக் கயிற்றை வீசி உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போகும்போது, பிள்ளைகள் வந்து ஐயோ போயினரே என்று கதறி அழுது வருந்த, மடியில் விழுந்து மனைவி புலம்ப, ஏனையோர் அந்த துக்க சூழ்நிலைக்கேற்ப வருந்தி நிற்கின்ற நேரத்தில்;

பழையவர் காணும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்தவே
பிணம் வேக விசாரியும் என்று; 21.

பலரையும் ஏவி முதியவர் தாம் இருந்த சவம் கழுவும்
சிலரென்று, பணி துகில் தொங்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை; 22.

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வு எ(ன்)ன வாழ்வென நொந்து; 23.

விறகிடமூடி அழல்கொடுபோட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 24.

நெடுநாளைய மனிதன் இவன் என்று பேசிக் கொண்டு அண்டை அயலார் ஓடிவந்து பார்த்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து வருபவர்கள் உட்கார பந்தல் போடுங்கள், பறை ஓசை எழுப்ப ஆட்களைக் கூப்பிடுங்கள், பிணத்தைக் கொண்டுபோய் எரித்திட ஆவன செய்யுங்கள் என்று சொல்லி;

பலபேருக்குச் சொல்லி அனுப்பி, பெரியவர்கள் பிணத்துக்கு எண்ணெயி இட்டுக் காப்புச் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி, பொன்னால் ஆன அணிகலன், புதிய துணி, பூமாலை, வாசனைப் பொடி அத்தனையும் போட்டுத் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, நாற்றமெடுக்கக் கூடிய இந்த சரீரத்தை;

செய்ய வேண்டிய முறைப்படி காரியங்களைச் செய்து பிணத்தை எடுங்கள் என்று பெரியவர்கள் சொல்ல, நல்ல உடல்வாகு கொண்ட நால்வர் வந்து எடுத்துத் தங்கள் தோள் மீது சுமந்து, வேகமாய் நடந்து, சுடுகாட்டை அடைந்து, “என்னடா மனித வாழ்க்கை’ என்று அப்போது தோன்றிய சுடுகாட்டு வைராக்கியம் எனும் ஞானத்தால் மனம் நொந்து கூறி;

நல்ல காய்ந்த விறகு, மாட்டுச் சாணத்தால் ஆன விராட்டி இவைகளைக் கொண்டு வந்து அடுக்கி, அதன் மீதில் பிணத்தைக் கிடத்தி, அதன் நெஞ்சில் தீமூட்டி, பிணம் எரிந்து வெந்திடும் போது அதன் தசைகளும் கொழுப்பும் சரிந்து விழுந்ததை பிணம் எரிப்போன் மீண்டுமெடுத்து எரித்தும், எலும்புகள் கருகிப் பின் சுட்ட சாம்பலாய்ப் போய் ஒருப்டிக்குள் அடங்கிடும் வண்ணம் அமைந்த இந்த அரிய சரீரத்தை மாண்புடையது என்று பெரும் பொருட்டாக எண்ணி இறுமாந்திருந்த இந்த அடிமையை இப்போதாவது கனிவு கொண்டு ஆண்டு அருளவேண்டும் ஐயனே!!

(இன்னும் வரும்)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க