பட்டினத்தடிகளின் பாடல்கள் – 20ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

முதல்வன் முறையீடு.

மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது.

கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா,
அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா
பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா,
தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா
மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா
மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்குகிறண்டா. 1.

மதுரையம்பதி மேவிய சிவபெருமானே, சிவபெருமானே! ஆன்மாக்கள் எங்கிருந்து பிறந்தன, எங்குபோய் முடிகின்றன என்பதை உணர்ந்தேனில்லை. இப்பூவுலகில் வாழ்க்கையின் ஊடே கணக்கற்ற துன்பங்கள் வந்து சேர்ந்து துயரத்துள் ஆழ்த்துகின்றன. வாழ்க்கையில் இன்பம் எது, துன்பம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறியாமையாம் மலம் அறிவை மூடிவிட்ட காரணத்தால் அறிவு முதல் அனைத்தும் கெட்டுத் தொலைந்தது. முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எனைத் துரத்தி வந்ததனால் மனம் பித்துப் பிடித்துப் போனது. ‘தனுவாதிய நான்கும்’ அதாவது தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இப்பூவுலக வாழ்வின் தத்துவங்களில் மூழ்கித் தவித்து மனம் மயங்கி, மறைக்கும் மாயத் தொழிலைப் புரியும் ‘திரோதான’ சக்தியுள் ஆட்பட்டுவிட்டேன். உலகமும் அதன் உட்பொருளும், மறையும் பாங்கினதால் அவை மாயை எனப்படும். அந்த மா மாயை எனும் பெரும் மாயக் காட்டினுள் வழியறியாது அலைந்து திரிகின்றேன், இப்பிறவியும் வாழ்வும் மாயை எனும் உண்மை புரிவதால், உளம் கலங்குகிறேன். (இதில் கண்டுள்ள சில சொற்களும் கருத்துக்களும் சைவ சித்தாந்தம், யோகம் பயின்றவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதல் நலம்)

கன்னிவனநாதா, கன்னிவனநாதா,
மண்ணாசை பட்டேனை மண் உண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை பேர்கேனே என்குதே
மக்கள் சுற்றத்தாசை மறக்கேனே என்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே
வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே
மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே
கட்டு வர்க்கத்தாசை கழலேனே என்குதே
செட்டு தனில் ஆசை சிதையேனே என்குதே
மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
சோற்றுக் குழியும் இன்னும் தூரேனே என்குதே 2.

கன்னிவனமாம் மதுரயம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே! மண் மீது ஆசை கொண்டு மேன்மேலும் நிலம் வாங்கி மகிழ்ந்திருந்தேன், அந்த மண்ணே இந்த உடலைத் தின்றுவிட்டதே. பொன் மீதும், பொன் நகை மீதும் கொண்ட ஆசையும், பெண்ணாசையும் என்னைவிட்டுப் போகமாட்டேன் என்கிறதே. பெண்டு, பிள்ளைகள், உறவுகள் என்று நான் கொண்ட ஆசைகள் எதனையும் மனம் மறக்க மாட்டேன் என்கிறதே, எட்டு திசைகளையும் கட்டியாள வேண்டுமென நான் கொண்ட ஆசையும் தீரமாட்டேன் என்கிறதே; பற்பல வித்தைகள், அறுபத்தினாலு கலைகள் மேன்மேலும் கற்கவேண்டும் என்கிற மனத்தாசையை விட்டொழிக்க இயலவில்லையே, அட்டமாசித்திகளை எப்படியும் அடைதல் வேண்டுமென்ற எண்ணமும் நீங்கவில்லையே; மந்திரங்கள் செய்யும் மாயங்கள் அனைத்தையும் கற்றல் வேண்டுமென நினைப்பது மறக்கவில்லையே, பிறர் பார்க்க அழகொழுக இருக்க நினைப்பதும் துறக்க முடியவில்லையே; வியாபாரம் செய்து அதில் லாபம் அடையவேண்டுமென்ற ஆசை சிதைய மறுக்கின்றதே (செட்டு = வியாபாரம்), வேளைதோறும் சலவை செய்த ஆடை அணியும் ஆசை மறக்கமாட்டேன் என்கிறதெ, சொற்றினைக் கொள்ளும் வயிறும் நிரம்பி விட்டது போதும் எனும் நிலையை அடையமாட்டேன் என்கிறதே.

கன்னிவனநாதா கன்னிவனநாதா
ஐந்து புலனும் அடங்கேனே என்குதே
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே
காமக் குரோதம் கடக்கேன் என்குதே
நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
கைச்சு மின்னுமானம் கழலேனே என்குதே
நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயிர் ஆசை அழியேனே என்குதே
கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும்
எண்ணும் திரமா இருப்போமென்று எண்ணுதே
அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரவா எண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
நரகக் குழியும் இன்னும் நான் புசிப்பேன் என்குதே
உரகப்படத்து அல்குல் உனைக் கெடுப்பேன் என்குதே
குரும்பை முலையும் குடிகெடுப்பேன் என்குதே
அரும்பு விழியும் என்றன் ஆவி உண்பேன் என்குதே
மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
ஆதரவும் அற்றிங்கு அரக்காய் உருகிறண்டா
கந்தனை ஈன்றருளும் கன்னிவனநாதா
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா 3.

என் ஐம்பொறிகளும் அடங்கமாட்டேன் என்கின்றனவே, அவற்றல் வரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றைத் தேடுகின்றதே. எதையெதையோ எண்ணி மனம் சஞ்சலப்படுவது நின்று, தெளிய மாட்டேன் என்கிறதே. காமமும் குரோதமும் தணிய மறுக்கின்றதே, நானே ராஜா நமக்கு நிகர் எவருமில்லை என்கிற ஆணவம் தினந்தோறும் தோன்றுதே. அச்சமும், ஆங்காரமும் அடங்க மறுக்கின்றதே, அனைத்தையும் ஒழித்தாலும் மனம் மட்டும் குரங்குபோல் தாவுவது நிற்கவில்லையே. நீர்க்குமிழி போன்ற நிரந்தரமற்ற இந்த உடலை சாச்வதமானது என்று மனம் எண்ணுகின்றதே, உயிர்மேல் இருக்கும் ஆசை அழியமாட்டேன் என்கிறதே. கண்ணெதிரே மாண்டவர் பிணம் கட்டையில் எரிவது கண்டும், நாம் மட்டும் நிரந்தரமாய் இருப்போம் என்று எண்ணம் இருக்கிறதே. நிரந்தரமில்லாததை நிரந்தரம் என்று எண்ணுகிறதே, சுற்றிலுமுள்ள ஆர்ப்பாட்டங்களிலிருந்து தனித்து இருக்க மறுக்குதே, மனம் அனைத்திலும் விடுபட்டு இருக்கவும் முடியலையே. இடுகாட்டில் மரணக் குழியோ உன்னை நான் உண்டு தீர்ப்பேன் என்கிறதே, பெண்ணுறவின் மீதான ஆசை உன்னைக் கெடுத்தே தீருவேன் என்கிறதே. தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன் குடியைக் கெடுப்பேன் என்று கச்சைகட்டி நிற்கின்றதே, அழகிகளின் அம்பு விழிகள் என் ஆவியைக் குடித்தே தீருவேன் என்கிறதே. எமனோ பெண்ணுருவத்தில் வந்து என்னை மோசம் செய்ய எண்ணுகிறான், என்னைத் தேற்றி ஆதரவு தர எவருமின்றி நான் அரக்கைப் போல உருகுகின்றேனடா. கந்தவேளாம் முருகக் கடவுளைப் பெற்றெடுத்த மதுரையம்பதிவாழ் சிவனே, எந்த விதத்தில் நான் நினது திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்?

கன்னிவனநாதா கன்னி வனநாதா
புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாவோ
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாவோ
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ
நீர்யாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ
வேதனை செய்தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ
அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாதோ
தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ
நோய் உண்ணவே மெலிந்து நொந்தநாள் போதாதோ
பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ
ஊனவுடல் கூன் குருடாய் உற்றநாள் போதாதோ
ஈனப் புசிப்பில் இளைத்த நாள் போதாதோ
பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
கெட்டநாள் கெட்டேன் என்று கெட்டநாள் போதாதோ
நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ
எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ
நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ
உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ
வருத்தம் அறிந்தையிலை வாவென்றழைத்தயிலை.

கன்னிவனமாம் மதுரையம்பதிவாழ் சோமசுந்தரனே! சிவபெருமானே!! எத்தனை பிறவிகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை துன்பங்கள். புல்லாகவும், பூண்டாகவும் பிறந்து வாடிய காலம் போதாவோ, கல்லாகவும் மரமாகவும் கிடந்த காலம் போதாவோ. கீரியாகவும், புழுவாகவும் பிறந்து நொந்த காலம் போதாவோ நீர்வாழ் ஜந்துவாகவும், மண்ணில் ஊரும் உயிராகவும் இருந்தநாள் போதாவோ. பூதமுமாய், தேவனுமாய்ப் பிறந்து கிடந்த நாள் போதாவோ, பிறருக்குத் துன்பங்களைக் கொடுத்து வாழ்ந்த நாள் போதாவோ. அன்னையின் கர்ப்பத்தில் அடைபட்டுக் கிடந்தநாள் போதாவோ, மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள் போதாவோ. தாயாகவும், மனைவியாகவும் தாழ்ந்து கிடந்த நாள் போதாவோ, சேயாய், புருஷனாய் சென்ற நாள் போதாவோ. நோய் மலிந்து மெலிந்த நாள் போதாவோ, பேய்களுக்கு உணவாக ஆன பேயாகப் பிறந்த நாள் போதாவோ. பிறப்பெடுத்த நாள் முதலாய் கூன், குருடு, முடமாகத் துன்பம் அடைந்த நாள் போதாவோ, உண்ண உணவின்றி வாடி மெலிந்த நாள் போதாவோ. பிறப்பினால் களைப்பும், பரிதவிப்பும் அடைந்த நாள் போதாவோ, இருக்கின்ற காலமும் கெட்டதோடு, மேலும் கெட்டவனாக ஆனதும் போதாவோ. இந்த பாழ் பிறவி நிலையில்லை என்பது தெரிந்து வருந்தியது போதாவோ, என் வினையால் மற்றவர்கள் பாரம் சுமந்ததும் போதாவோ. காமன் கண்வீச்சால் கடைப்பட்டுப் போனதும் போதாவோ, எமன் கரங்களால் இடிபட்டடும் போதாவோ. பிரம்மனின் தலையெழுத்தால் வதையுண்டது போதாதோ, தேன்சொரியும் துளசிமாலை அணிந்த பெருமாளின் சக்கரத்தால் பட்டவினை போதாவோ. உருத்திராட்சம் அணிந்த சிவன் சம்ஹாரம் செய்ததால் துன்பப்பட்டது போதாவோ, என் வருத்தத்தை உணரவில்லை, போதும் பட்டது இனி முடியாது, வந்துவிடு என்னிடம் என்று அழைத்தாயில்லை, என் செய்வேன்.

(கன்னிவனநாதரிடம் முறையீடு இன்னும் வரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க