சு. ​கோபாலன்

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே அய்யப்பன் சீசன் ஆரம்பமாகிவிடும். அய்யப்ப பக்தர்கள் எங்கும் தென்படுவார்கள். அய்யப்ப கோஷங்கள் எங்கும் கேட்கும். எனக்கும் அய்யப்பன் மேல் ஒரு கவிதை மாலை தொடுக்க உற்சாகம் பிறந்தது.

அய்யப்பன் வரலாறு

a_1

பந்தளம் எனும் கேரள நாட்டின் அரசன் ராஜசேகர பாண்டியன்

சந்தான பாக்கியம் இன்றி ஈசனை அரசியுடன் உளமுருக வேண்டினான்.

வனத்துள் ஒரு நாள் வேட்டை ஆடச் சென்ற மன்னன்

மனத்தைக் கவரும் அழகுமிகு குழந்தை ஒன்றைக் கண்டான்.

மணிமாலை கழுத்தில் அணிந்து தோன்றிய அத்தெய்வீகக் குழந்தைக்கு

மணிகண்டன் எனும் பெயரைச் சூட்டினார் அங்கு வந்த முனிவர் ஒருவர்.

சிந்தை மகிழ்ந்த அரசனும் அரசியும் சீராட்டி வளர்த்த மணிகண்டன்

விந்தை பல புரிந்து யாவரையும் வியப்பில் ஆழ்த்தினானே!

குருகுலம் சென்று கலைகள் வித்தைகள் யாவும் சிறப்பாய் கற்றபின்னர்

குருதட்சணையாய் அவர் மகன் இழந்த பார்வை பேச்சை மீட்டுக் கொடுத்தானே!

பின்னர் தானே ஒரு அழகிய ஆண் குழந்தையை ஈன்று மகிழ்ந்த அரசி

மன்னர் மணிகண்டனுக்கு மகுடம் சூட்ட விழைவதை அறிந்து அச்சமுற்று

மந்திரி, மருத்துவன்  இருவருடன் கூடி சதிசெய்தாள் மணிகண்டனை விரட்டிட.

தந்திரமாய் தனது போலித் தலைவலி தீரப் புலிப்பால் தேவையென நம்பச்செய்தாள்

காட்டுக்கு புலிப்பால் தேடிச்சென்ற மணிகண்டன் மகிஷி எனும் அரக்கியை அழித்து

நாட்டுக்கு புலிமேல் அமர்ந்து பெரும் புலிக் கூட்டத்துடன் திரும்பினானே!

பன்னிரு வயது முடிந்த மணிகண்டன் தான் தெய்வப்பிறவி அய்யப்பன் என உணர்த்தி

தன்னுடைய அவதார நோக்கம் முடிந்ததால் வானுலகம் செல்வதாய் அறிவித்தான்.

பந்தள மன்னனும், தவறை உணர்ந்த அரசியும் மற்றும் கூடினின்ற குடிமக்களும்

தங்கள் உடனேயே தங்கிவிடும்படி உள்ளன்போடு அய்யப்பனை வேண்டினரே!

ஆலயம் ஒன்று கட்டிக் கொடுத்தால் அங்கு கலியுகம் முழுவது தவமிருப்பதாய் கூறிட

சாலவும் சிறந்த அன்புக் கட்டளையாய் சிரமேல் ஏற்று மன்னனும் அகமகிழ்ந்தானே!

அம்பை வில்லிலிருந்து எய்து அது விழும் இடத்தில் கோயில் கட்ட அய்யப்பன் அருளிட

பம்பை நதிக்கரையில் சபரிமலையில் அம்பு சென்று விழுந்த இடத்தில் அரசன்

படிகள் பதினெட்டுக் கொண்ட கோவிலை அகத்தியரின் ஆலோசனையுன் கட்டிமுடித்திட

அடியவர்கள் தரிசித்து வழிபட அழகிய அய்யப்ப விக்ரகத்தை பரசுராமன் ஸ்தாபித்தாரே!

அமர்ந்த நிலையில் தவ யோக கோலத்தில் காட்சி தரும் அய்யப்பனை அடியவர்கள்

மிகுந்த பக்தியுடன் தரிசித்து வழிபட்டு அருள் பெற்று வருகின்றனரே அன்னாள் முதலே!

அய்யப்பன் வழிபாடு

சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்திட கார்த்திகை முதல் நாள் முதலே

அபரிமித சிரத்தையுடன் ஆயத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவரே அடியவர்கள்

மாலை (துளசிமணி அல்லது உத்திராட்சம்) ஒன்றை குருசாமி மூலம் அணிந்து

நேம நிஷ்டையுடன் ஒரு மண்டலம் (41 நாட்கள்) கடும் விரதம் காப்பரே!

இருமுடி எனும் பையில் பூஜை மற்றும் பயணப் பொருட்களை நிரப்பித் தலையில் தாங்கி

கருனிற உடையுடுத்தி கோயிலில் வழிபட்டுத் தம் புனிதப் பயணத்தைத் தொடங்குவரே!

பம்பா நதியின் குளிர்ந்த நீரில் குளித்து உடலும் உள்ளமும் தூய்மையாகிட

தெம்பாய் ‘சாமியே சரணம் அய்யப்பா’ போன்ற சரண கோஷம் எழுப்பி

வெறும் அடியுடன் வெகு தூரம் கடினமான காட்டு வழியில் நடந்து சென்று ஐயன்

திருவடி வணங்கி திவ்ய தரிசனம் செய்திட அலை மோதுமே அடியவர் கூட்டம்.

மசூதி ஒன்று வாவர் என்பவரின் நினைவாய் ஆலயம் அருகில் உண்டு

விபூதி அங்கு பெற்றுக் கொண்ட பின்னர் அடியவர்கள் ஆலயத்தை அடைந்திடுவர்.

பக்திப் பரவசத்தில் மூழ்கி சரண கோஷமெழுப்பி பக்தர்கள் பதினெட்டுப் படிகளேறி

சக்திமிகு கலியுகக் கண்கண்ட கடவுள் அய்யப்பனின் அற்புத தரிசனம் பெற்றிடுவரே!

நெய் அபிஷேகம் அய்யப்பனுக்கு மிக உகந்த ஒன்றாம் அது செய்யும் நேரத்தில்

மெய் சிலிர்த்து நின்று கண்ணாரக் கண்டு மகிழ்வர் பேறு பெற்ற மெய்யடியவர்.

ஐயப்பா உன்னருள் செய்யப்பா என வேண்டும் அடியவரை உய்விப்பான்

ஐயமில்லையிப்பா இதில் அணுவளவும் பக்தர்கள் உணரும் மெய்யப்பா இது

படத்திற்கு நன்றி: http://www.swamysharanam.org/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க