சதீஷ் குமார் டோக்ரா

1098542_10200497743781930_2023689908_n

ஒரு மொழிக்கு இலக்கணத்தின் அவசியம் என்ன என்று ஒருவரிடம்  கேட்டால், அவர் அனேகமாக, “இலக்கணம் மொழியை முறைப்படுத்துகிறது. அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எது சரி, எது பிழையானது என்பதில் வித்தியாசம் காட்டுகிறது” என்பது போல் பதில் கூறுவார்.

இந்தக் கட்டுரையில் இலக்கணத்தைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

எழுத்துகளின் அவசியம்:

மொழி முதன் முதலில் ஒலிகளாகப் பிறந்தது. மொழியின் பயன்பாட்டுத் தேவை, காது கேட்கும் தூரம் வரை இருந்தபோது, மொழி ஒலிகளாகவே நீடித்தது. பிறகு, காது கேட்காத தூரத்திற்குச் செய்தி கொண்டுபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, செய்தியை எழுத்துகள் மூலம் கொண்டுபோகும் அவசியம் உருவானது. எழுத்து வடிவம் தோன்றியது. அந்தந்தப் பொருளையோ, செயலையோ வரைப்படமாக பிரதிநிதித்து அனுப்பினார்கள். இந்த எழுத்துமுறையை நாம் படுகைத் தளக்குறியீடுகள் (hieroglyphics) என்கிறோம்.

படுகைத் தளக்குறியீட்டு வடிவத்தை மொழியின் எழுத்து வடிவமாகப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. எத்தனை பொருட்கள் மற்றும் செயல்களைப் பற்றிப் பேச வேண்டுமோ அத்தனை வரைப்படங்கள் உருவாக்க வேண்டும். இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும் சூழ்நிலைகளும் செயல்களும் ஏராளம். அவை அனைத்தையும் தனித் தனி வரைப்படங்களாக வழங்குவதானால் எண்ணற்ற எழுத்துகள் தேவைப்படுமே!

மேதாவியான நம் முன்னோர்கள் ஒன்றை உணர்ந்தார்கள். நாம் மொழியில் பயன்படுத்தும் ஒலிகள் மிகக் குறைவு. ஆகவே, பொருட்களையும் செயல்களையும் வரைப்படங்களாக வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு ஒலிக்கும் ஓரோர் எழுத்து வைத்துக்கொண்டால் மிகக் குறைவான எழுத்துகளை வைத்துக்கொண்டே ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் தந்துவிடலாம்.

அப்படியே செய்தார்கள்: ஒரு மொழியிலுள்ள ஒவ்வொரு ஒலியைப் பிரதிநிதிக்கும் எழுத்து வடிவம் உருவாகி எழுத்துமுறை வடிவுபெற்றது.

இதற்கும் இலக்கணத்தின் அவசியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள்.

சம்பந்தம் உண்டு.

எவ்வாறு ஒலிகளை எழுத்துகளாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டம் எழுதுவதைச் சுலபமாக்கியதோ, அதே போல இலக்கணமும் மொழியைச் செய்தியறிவிப்புச் சாதனமாகப் பயன்படுத்தும்போது வார்த்தைகளின் தேவையைக் குறைக்கிறது.

எப்படியென்று பார்ப்போம்.

இன்று டில்லி போகிறேன் என்று சொல்லும்போது ‘போகும்‘ செயலைக் குறிக்கிறோம்.

போகும் செயல் இன்று நடக்கலாம், நேற்று நடந்திருக்கலாம், அல்லது நாளைக்கு நடைபெறலாம். இம்மூன்றுக்கும் தனித்தனி வார்த்தைகள் வைத்துக்கொண்டால், 3 வார்த்தைகள் தேவைப்படும். அதனால், நம் முன்னோர்கள் போகும் செயல் ஒன்றுதான் அது வெவ்வேறு காலங்களில் நடைபெறும்போது தனித் தனி வார்த்தைகள் தேவையில்லை. ஒரே வார்த்தையை வடிவம் மாற்றிப் பயன்படுத்திவிடலாம் என்று முடிவு செய்தார்கள். போகிறேன், போனேன், போவேன் என்ற வடிவங்களைத் தோற்றுவித்து வார்த்தைகளின் பெருக்கத்தைத் தவிர்த்தார்கள்.

இன்னும் பல வடிவங்கள் உருவாகின: போய்க்கொண்டிருந்தாரா, போகையில், போகப் போக, வயிற்றுப் போக்கு, பொழுதுபோக்கு என்று எத்தனையோ வடிவங்கள் தோன்றி கூடுதலான வார்த்தைகளைத் தோற்றுவிக்காமலேயே செய்தியறிவிப்பை நடைமுறைபடுத்த உதவின.

யோசித்துப் பாருங்கள், ஒரு வினைச்சொல் வார்த்தையுடன்  கிறேன், -னேன், -வேன், -கொண்டிருந்தார்,  -யிருக்கிறார்  போன்றவற்றைச் சேர்த்து ஒரே வினைச்சொல் வார்த்தையை பல்வேறு சூழ்நிலைகளிலும் காலங்களிலும் நடைபெற்ற செயல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு தனி வார்த்தையைக் கையாள வேண்டி வந்தால் எத்தனை வார்த்தைகள் தேவைப்படும், நினைத்துப் பாருங்கள்!

ஆக, இலக்கணம் செய்தியறிவிப்பிற்காக நாம் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மொழியைச் செய்தியறிவிப்பு சாதனமாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

Grammar expands the range of communication, while reducing the need for words to do so.

ஒரு நியாயமான கேள்வி எழலாம்.

போகிறேன், போனேன், போவேன் ஆகிய வடிவங்களின் மூலமாக ஒரே செயலின் வெவ்வேறு காலங்களைப் பிரதிநிதித்து, மூன்று வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஒரே வார்த்தைக்கு மூன்று வடிவங்கள் அளித்து, வார்த்தைகனின் தேவையைக் குறைக்கிறோம் என்பது சரிதான். ஆனால், போகிறான், போகிறேன், போகிறாள், போகிறார்கள், போகிறது, போகிறீர்கள், போகிறாய் என்று ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்கும் தனித்தனி இலக்கண வடிவங்கள் அமைப்பது அவசியமா? ஏன் ஆங்கிலத்தில் You go, they go, we go என்று வாக்கியங்களில் இருப்பது போல் go என்ற ஒரே வடிவத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு பாலாருக்கும், ஒருமை – பன்மைக்குத் தனித் தனி வடிவங்கள் உருவாக்குவதால் என்ன பயன்?

சாதாரணச் செய்தியறிவிப்புக்கு (day-today-communication) இது போதும்தான். மக்களை நான் போகிறான், நீங்கள் போகிறான், அவர்கள் போகிறான் என்றெல்லாம் பழக்கப்படுத்திவிட்டால் அன்றாட செய்தியறிவிப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. பெரும்பாலான மொழிகளில் இதே முறையில் ஒரே வடிவத்தைப் பயன்படுத்திச் செய்தியறிவிப்புத் தேவையைப் பூர்த்தி செய்வது வாடிக்கை.

ஆனால், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய, பழங்காலத்திலேயே மிகச் சிறந்த இலக்கியங்களை உருவாக்கிய மொழிகளில், மொழி ஒரு அன்றாடச் செய்தியறிவிப்பு சாதனமாக மட்டும் அல்லாமல் சிறந்த இலக்கியத்தை இயற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த முறையில் இலக்கணம், குறைவான வார்த்தைகளில் அதிக அர்த்தங்களைச் சிப்பமிட உதவியது.  கவிதைகளில் அர்த்தத்தின் அடர்த்தி கூட, இலக்கண வடிவங்கள் கை கொடுத்தன.

Multiple forms in the grammars of Sanskrit and Tamil make it possible to densely package into a few words ideas and emotions that, in another language, might require a far greater number of words. 

எப்படி என்பதை இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் பார்ப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மொழியும் இலக்கணமும்

  1. பல நாட்களுக்குப் பிறகு இத்தகைய சிந்தனையில் பிறந்த இலக்கணம் பற்றி படிக்கிறேன். வாழ்த்துக்கள்,திரு. டோக்ரா. மிகவும் சுவையான, அறிவு சார்ந்த கட்டுரை. தமிழ் மொழியை நன்கு கையாளுகிறீர்கள். தமிழனாக பிறந்த எனக்கு, பரிச்சியம் அதிகம் இல்லாததால், தாய்மொழியில் ஆளுமை இல்லை. இப்போது தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். ஒரு சொல் என்னிடமிருந்து: 
    ‘கவிதைகளில் அர்த்தத்தின் அடர்த்தி கூட, இலக்கண வடிவங்கள் கை கொடுத்தன.’
    என்பதை இரு மொழி இலக்கியங்களிலும் மட்டுமல்ல. ஹிந்தியிலும் காண்கிறோம். சான்றாக: ஹரிவம்சராய் பச்சன் அவர்களின் மதுசாலா. ஸூர்யகாந்த் ‘நிராலா’ அவர்களின் சாயா வாத் இலக்கியங்களிலும்.

  2. குறைவான இலக்கண விதிகளை வைத்துக்கொண்டே செய்தியறிவிப்பு (communication) சாத்தியமாக இருக்கும்போது தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் ஏன் பெண்-ஆண் பாலாருக்கும், ஒருமை – பன்மைக்கும் தனித்தனி இலக்கண வடிவங்களை உருவாக்கினார்கள் என்று கேள்விக்கு பதில் தேடுகிறேன். இலக்கிய சாதனமாக வலிமை சேர்க்கத்தான் அவ்வாறு நம் முன்னோர்கள் செய்தார்கள் என்பது என் அபிப்பிராயம். ஆனால், இதை ஆராய்ச்சி செய்து சான்றுகளுடன் நிரூபித்தால்தான் அது சான்றோர்களால் ஏற்கபடும்.

    ஓர் எளிமையான கிராமிய இசை கருவியை வைத்து காதுக்கு தேனாக இசையை உருவாக்க முடியும், அது அக்கருவியை வாசிப்பவரின் திறமையைச் சார்ந்ததாக அமையும். ஆனால், ஒரு நவீன கீ – போர்ட்டின் ஒரு கீயை அமுக்கினாலே பல ஒலிகளை இணைத்து கொடுக்கும் அடர்த்தி அந்தக் கிராமிய கருவிக்கு இருக்காது. ஆக, என் ஆராய்ச்சி மொழிகளின் விஞ்ஞானமுறை பகுப்பாய் இருக்கிறதே தவிர குறிப்பிட்ட இலக்கியங்களின் நயங்களைச் சார்ந்ததல்ல. இலக்கிய நயம் எழுத்தாளரின் மேதாவிதனத்தைச் சார்ந்தது. மொழியியல் என்பது ஒரு விஞ்ஞானம். அது ஒலிகள், வார்த்தைகள், இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர இலக்கிய பகுப்பாய்வின் அடிப்படையில் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *