இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (86)

0

சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் அன்புடன் இணைகிறேன்.

“கலிகாலம்” எனும் இக்காலத்தில் கலாச்சாரம் சீரழியும், உலகில் உறவுமுறைகள் சீர்கெடும், மனித தர்மம் நிலைகுலையும் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கேள்வியுற்றிருக்கிறோம் .

சே என்ன இதெல்லாம் கட்டுக்கதை ! சுத்த ஹம்பக் ! ஏதோ வேலையற்ற முன்னோர்கள் எம்மைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லிப் போன மூடக் கதைகள் என்றெல்லாம் எமது பகுத்தறிவு அடிப்படையில் நாம் அனைத்தையும் தள்ளி வைத்து வாழப் பழகிக் கொண்டோம்.

ஆனால் இன்று நாகாரீக உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை இவ்வாழ்க்கை எங்கே இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது ?

என்னடா? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் ? எனும் எண்ணம் உங்களுக்குள் எழுவது இயற்கை.

நேற்றைய இங்கிலாந்து தொலைக்காட்சிச் செய்திகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று,

கடந்த 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து அதிகதூரம் ஊடுருவும் போட்டியில் வெற்றியீட்டி இங்கிலாந்து நாட்டிற்குப் பதக்கம் வாங்கிக் கொடுத்த “டாம் டேலி((Tom daley)” எனும்19 வயது நிரம்பிய இளவலின் அறிவித்தலாகும்.

அது என்ன அப்படியான அறிவித்தல் ?

ss1தான் மற்றொரு ஆணுடன் காதல் வயப்பட்டிருப்பதான செய்தியே அது. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னனியில் இருத்திய காரணம் என்ன ? எனும் கேள்வி நெஞ்சை உருத்தத்தான் செய்கிறது.

நாட்டின் இளவல்களுக்கு இரு முன்னுதாரணமாக விளங்க வேண்டியவர், மற்றைய இளம் சிறார்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டக்கூடிய ஒருவர் தான் இயற்கைக்குப் புறம்பான ( இதை இயற்கை என்று எண்ணுபவர் என்னை மன்னிக்கவும்) வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பது வளரும் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக அமைந்து விடும் எனும் வாதிடும் சாராரும், இல்லை இவ்வாழ்க்கைமுறை இன்றைய காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகையால் இத்தகைய முன்னனி விளையாட்டுவீரர் வெளிப்படையாக அறிவித்தல் விடுத்தது சரியே என வாதிடுவோருக்கும் இடையிலான கருத்து மோதலை பகிரங்கமாக நடத்தவே இவ்வறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கைக்கு எல்லைக்கோடுகள் மனிததர்மத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்று காட்டப்பட்ட உதாரணங்கள் நம் மத நம்பிக்கைகளின் வழியாக எமது மனங்களிலே மனிதநீதிகளாகக் காட்டப்பட்டன.

இம்மனிதநீதிகளின் அடித்தளத்தில் தான் மானிட சட்டங்கள் இயற்றப்பட்டன.. அதிலிருந்து நழுவி நாம் எப்படியும் வாழலாம் எனும் வழிக்குள் அனைவரும் வந்து விட்டால் பின்னால் மனித தர்மங்களின் நிலைதான் என்ன ? எனும் கேள்வியால் எமது மனங்களை அச்சம் கவ்விக் கொள்ளத்தான் செய்கிறது..

இத்தகைய வாழ்க்கை வழிமுறைகளுக்கு இதனை ஆதரிப்பவர்கள் தமது வாதத்திற்கு துணையாக பகுத்தறிவு எனும் போர்வையில் நாத்திகத்தை துணைக்கிழுப்பதை பார்க்கும் போது மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது.

பெரியாரின் நாத்திகக் கொள்கை என்பது மூடநம்பிக்கைகளின் பெயரில் மனிதர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்ததே தவிர மானிட வாழ்க்கையின் அடிப்படை வாழ்க்கை முறையை மாற்றியமைத்து ஆணும், ஆணும் அன்றிப் பெண்ணும், பெண்ணும் தம்பதிகளாக வாழுவதற்கு நியாயம் கற்பிக்கவில்லை.

இன்று நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இவ்வோரினத் திருமணங்கள் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதிகாரத்திலிருக்கும் கூட்டரசாங்கமும், எதிர்கட்சி ஸ்தானத்திலிருக்கும் தொழில் கட்சியும் இவ்வாழ்க்கை முறைக்குத் தமது பூரண ஆதரவை வழங்கியிருப்பது கட்டுப்பாடற்ற சமுதாய வரம்புகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே உண்மை.

மனித நாகரீகத்தின் அதி உச்சமான வாழ்க்கைமுறை எனும் போர்வையில் இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறைகளைச் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயாரால் ஆதரிப்பது எவ்வகையில் மக்கள் நலனை முன்னேடுப்பதாகும் என்று வாதிடுகிறார்கள் பலர்,

மனிதனை மனிதனாக மதித்து பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே சந்தர்ப்பங்களை வழங்குவதே நாகரீகம் என்பதன் முழு அடையாளமாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மாவை, மம்மி என்றழைப்பதை வேண்டுமானால் நாகரீகமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர மாமி என்றழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நாகரீகம் என்று பெயர் சூட்டிவிட்டு ஜயோ எமது நாட்டில் சட்டம், ஒழுங்கு முறை சீர்குலைந்து விட்டதே என்று புலம்புவதால் என்ன பயன் ?

சட்டம் ஒழுங்கு என்பனவற்றின் அமுலாக்கல் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்தே நடைமுறுத்தப்படுகிறது. அதை விடுத்து சமுதாயத்தில் வெற்றி பெற்றவர்கள் எனபவர்கள் எப்படியும் வாழலாம் எனும் உதாரணத்தை முன்னெடுப்பதன் மூலம் வளரும் தலைமுறையின் மனதில் சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் எவ்வகையான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ? என்பது அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

இது ஒன்றும் புதிதல்ல இத்தகைய உறவுமுறைகள் அன்றைய காலத்திலும் இருந்தன ஆனால் அவை திரைமறைவில் அரங்கேறின என்றொரு வாதம் ஒரு மூலையில் இருந்து ஒலிக்கத்தான் செய்கிறது.

கொலைகள் அன்றும் இன்றும் திரைமரைவில் நிகழ்கின்றன,. அதற்காக கொலையை இயற்கை என்று நாகரீகத்தின் பெயரால் நியாயப்படுத்தி விட்டால் கொலை கூட மனிததர்மமாகி விடுமா?

இதுதான் எம் கண்முன்னால் அரங்கேறும் கலிகால வாழ்க்கைமுறையோ ?

வருங்காலச் சரித்திரம் விடை பகரும் என நம்புவோம்

அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.