Category: Featured

Featured

  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 18ம் பகுதி

    தஞ்​சை​ வெ. ​கோபாலன்

    திருவிடைமருதூர்:
    மென்று விழுங்கி விடாய் கழிக்க நீர்தேடல்
    என்று விடியும் எனக்கு என்கோவே – நன்றி
    கருதார் புரம் மூன்றும் கட்டழலாற் செற்ற
    மருதா உன் சந்நிதிக்கே வந்து. 1.

    நன்றி கொன்ற அரக்கர்களையும், அவர்தம் புரம் மூன்றையும் மூண்ட செந்தழலாற் எரித்த மருதூர் வாழ் அண்ணலே! சதா காலமும் வயிற்றுக்கு உணவையும், உண்டபின் விடாய் தீர நீர்தேடி ஓடும் இந்த நீச வாழ்க்கை என்று தீரும், என்று நான் உன் சந்நிதிக்கு வந்து உனக்கே ஆளாவேன் சொல்லுவீர் எனை ஆளும் என் அரசே!

    திருவொற்றியூர்:
    கண்டங் கரியதாம் கண் மூன்று உடையதாம்
    அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
    உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுக ழொற்றிக்
    கடலருகே நிற்கும் கரும்பு. 2.

    ஆலகால விடமுண்ட காரணத்தால் நீலநிறம் பாய்ந்த கண்டமும், முகத்தில் மூன்று நயனங்களும், இந்த அண்டசராசரங்களைப் போல அழகும் படைத்த தொண்டர்கள் உடலும் உள்ளமும் உருகவைக்கும் இனிமை பொருந்திய கரும்பே! கீழைக் கடற்கரையோரம் திருவொற்றியூர் அமர்ந்த பெருமானே.

    ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு
    இடுமருந்த யான் அறிந்து கொண்டேன் – கடுவருந்தும்
    தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
    போவார் அடியிற் பொடி. 3.

    சீவடியும் புண்போன்ற ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடலுக்கு இடவேண்டிய மருந்தை நான் அறிந்து கொண்டேன். அந்த மருந்து யாதெனின், (கடு + அருந்தும் = ஆலகாலவிடத்தை உண்ட) தேவாதி தேவனான திருவொற்றியூரானின் அடியவர்கள் தினந்தினம் நடந்த பூமியில் கிடக்கும் பாததூளியே இப்பிணிக்குச் சரியான மருந்து. (இக்கருத்தையொட்டியே சில ஆலயங்களில் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அடியார்கள் நடந்த பாததூளி உடலில் பட்டுப் புனிதமடைதற்காக என்பது கருத்து)

    வாவி யெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு
    காவணங்களெல்லாம் கணநாதர் – பூவுலகில்
    ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
    ஓதும் திருவொற்றி ஊர். 4.

    மெய்யான தவம் புரிந்த புனிதர்கள் எல்லோரும் போற்றுகின்ற திருத்தலமாம் திருவொற்றியூரில் அமைந்துள்ள நீர்நிலைகள் அனைத்துமே சிவ புண்ணிய தீர்த்தங்களாம்; அந்நகர் எங்கும் பரவிக் கிடக்கும் மணல் யாவும் அவன் அணியும் திருநீறு; மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள் அனைத்துமே சிவகணங்களாகும்.

    திருவாரூர்:
    ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று
    ஊரூர்கள் தோறும் முழலுவீர் – நேரே
    உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
    விளக்கிருக்கக் தீத்தேடு வீர். 5.

    திருவாரூர் தியாகேசர் இங்கே இருக்க, எந்தெந்த ஊரிலோ திருநாள் என்று ஊரெங்கும் பறையறைவீர். அட பேதையர்களே! சித்தத்தில் உறையும் அறிவான தெய்வத்தை உணராமல், ஊமைகளே! யாராவது விளக்கு எரிந்து கொண்டிருக்க தீக்காக அலைவார்களா?

    திருக்காளத்தி:
    பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி
    ஐயரை எண்ணாய், அறம் செய்யாய் – வெய்ய
    சினமே ஒழியாய், திருவெழுத்து ஐந்து ஓதாய்,
    மனமே உனக்கென்ன மாண்பு. 6.

    நெஞ்சே! பொய் பேசுவதை நீ விட்டபாடில்லை; மாமிச உணவுகளை உண்பதை விட்டபாடில்லை; காளத்திநாதனை நினைக்கவில்லை; தான தர்மங்களையும் செய்தபாடில்லை; துன்பம் தரும் கோபத்தையும் விட்டபாடில்லை; அதெல்லாமிருக்கட்டும் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதும் இல்லை, இவைகளையெல்லாம் கடைபிடிக்காமல் உனக்கென்ன அத்தனை கர்வம்.

    காஞ்சிபுரம்:
    எத்தனை ஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள்
    எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் – நித்தம்
    எனக்குக் களையாற்றா ஏகம்பா கம்பா
    உனக்குத் திருவிளையாட் டோ. 7.

    ஏ கம்பநாதா, எகம்பநாதனே! எனக்குத்தான் எத்தனை பிறவி, அவை அத்தனையிலும் எத்தனை ஊர், எத்தனை வீடு, என்னைப் பெற்ற அன்னையர்கள் எத்தனை பேர், எனக்கிட்டழைக்க எத்தனை பெயர்கள் ஏன் என சிந்தித்தேன், ஏகம்பநாதரே! இவை அத்தனைக்கும் நான் ஆளாவது எதனால், இதெல்லாம் உனது திருவிளையாடலோ?

    திருவிருப்பையூர்:
    மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
    இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாராமற் கா. 8.

    இருப்பையூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! எனக்குத்தான் எத்தனை தாயார்கள் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பெற்று மனம் சலித்தார்கள்; தீவினைகள் செய்ய அத்தனை பிறவிகளிலும் ஓடியாடியதால் நானும் கால் சலித்துப் போனேன்; என்னை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைத்து அந்த பிரம்மனாம் நான்முகனும் கைசலித்துப் போனான்; ஐயனே! இனியும் ஒரு முறை நான் கருப்பையூர் சென்று வாசஞ் செய்து மீண்டும் பிறக்காமல் வரமருள்வாயே.

    திருக்காரோணம்:
    அத்தி முதல் எறும்பு ஈரான உயிர் அத்தனைக்கும்
    சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்
    பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
    இசிக்குதையா காரோண ரே. 9.

    திருநாகைக் காரோணப் பெருமானே! யானை முதல் எறும்பு வரையிலான பலகோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்துக் காக்கும் பரமேச்வரா! ஞானத்தைத் தேடி அலையும் எனக்கும் வயிறு உண்டு, பசி உண்டு என்பதை அறியாமல் இருந்தேனே; பசிக்கொடுமை தாங்கமுடியவில்லை, அடியவனின் பாழ்வயிற்றைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறதே ஐயனே.

    திருக்குற்றாலம்:
    காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
    பாலுண் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்தே
    உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானையே கூறு. 10.

    என் பாழும் உயிரை எடுத்தேக எமன் வருவதற்கு முன்பாக, கண்கள் பஞ்சடைந்து பார்வை மங்குமுன்பாக, வாயில் ஊற்றிய பால் உள்ளே இறங்காமல் கடைவாயில் வழிந்தோடுதற்கு முன்பாக, உயிர்போன என் உடல் மீது உறவும் சுற்றமும் விழுந்து அழுமுன்னே, அந்தப் பாழுடலை ஊரார் எடுத்துச் சென்று தீயிட்டுச் சுடுமுன்னே, ஓ நெஞ்சமே, திருக்குறாலநாதனை நினைத்துப் போற்றிடுவாய்.

    (இன்னும் வரும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நாடகம் என்பது நிச்சயமாக கேளிக்கைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ நடத்தப்படுவதில்லை என்பதை ஆதிகாலம் முதலே நம் முன்னோர்கள் தெரியப்படுத்தி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்மன் தன் நாடகங்கள் மூலம் சமூகத்தின், மதங்களின் சீர்கேட்டை விமர்சித்து எழுதி அந்த நாடகங்கள் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன. முத்தமிழின் முக்கியமான பகுதி கூட நாடகத்தமிழ்தான். தேசங்களில் அநீதியான ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் அவர்களின் நீசத்தனத்தை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களின் போக்கை நீக்கவும் வீதி நாடகங்கள் பெரிதும் பயன்பட்டுவந்தன என்பதை எத்தனையோ இலக்கிய சரித்திர ஆதாரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

    காலப்போக்கில் நாடகம் நடத்தும் முறையிலும் அதை அரங்கேற்றும் முறையிலும் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டாலும் அதன் அடிப்படைக் கருத்தானது அதாவது பாமரமக்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல கருத்துகள் எந்நாளும் மாறப்போவதில்லைதான். மிக நாகரீகமாகவும் மிக நவீன வசதியிலும் வாழும் இந்தக் கால கட்டத்திலும், எத்தனைதான் தொலைக்காட்சியும், திரைப்படமும் நம் வாழும் முனறையிலேயே வந்து நம் பொழுதைப் போக்கினாலும் நாடகத்துக்கென ஒரு பங்கு நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

    நாடகநடிகர்களின் வாழ்க்கை முழுவதையும் நாம் சாதாரணமாக அலசிப்பார்த்தால் மேடைதான் அவர்கள் உலகம். மேடையில் அவர்கள் அன்றைக்குத் தோன்றும் கதாபாத்திரங்கள்தான் அவர்கள் வாழ்க்கை, மேடையில் நேரடியாகக் கிடைக்கும் ரசிகர்களின் பெருத்த கரகோஷம்தான் அவர்கள் மூச்சுக்காற்றுக்குத் தேவைப்படும் பிராணவாயு. இவர்களுக்கு குடும்பம், வயிற்றுக்கு சாப்பாடு இவையெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான். மேடை வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக உணர்கிறார்கள், இவர்கள்.

    y. g. Mahendranராஜபார்ட் ரங்கதுரை என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ஒரு கூத்தாடியின் கதை அது. சிவாஜி கூத்தாடியாக நடித்து கலக்கியிருப்பார். அதைப் போலவே நாடகமேடையில் இன்றைய வாரம் ஒரு நாடகத்தினைக் காண நேர்ந்தது. நாடகத்தையே லட்சியமாகக் கொண்டு தன் வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் நாடக நடிகனின் கதை. நாடகத்தின் பெயரே ‘நாடகம்’ என்று வைத்திருக்கிறார் திரு ஒய்.ஜி.மகேந்திரா. நாடகம் முன்னேறவும் இடர் வந்தபோதும் கைவிடாமல் நாடகத்தை நடத்திக் காட்டும் நாடகக் கலைஞராக வந்து அந்த நாடக நடிகனின் பாத்திரத்திலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார் திரு ஒய்.ஜி. மகேந்திரா. அவருக்கு நாடகத் திலகம் என்று பட்டம் உண்டு. அந்தப் பட்டத்தின் பெயருக்கு ஏற்றவாறு நாடகத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை சமூகத்துக்கு உணர்த்துகிறார்.

    நாடகங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எதிர்காலத்திலும் வளம்பெற வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் சமுதாயத்துக்கு இருக்கிறது. நாளைய தலைமுறை அப்படியே ரோபோ’வுக்கு மாறினாலும் கூட அந்தப் புதுமைக்கேற்ப நாடகங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழுக்கு அழிவில்லை என்பது உண்மையானால் அந்தத் தமிழின் ஒரு அங்கமான நாடகத்துக்கும் அழிவில்லைதானே.

    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருந்து, ஒன்றாய்க் கலந்து, அதனோடே வாழ்ந்துகொண்டிருக்கும் நாடகத் திலகம் திரு ஒய்.ஜி.மகேந்திராவை வல்லமை இந்த வார வல்லமையாளராகக் கௌரவிப்பதில் மகிழ்ச்சியோடு பெருமையும் கொள்கிறது. நாடகங்களை நாம் எல்லோரும் போற்றவேண்டும்,என்ற கோரிக்கையோடு, எங்கள் வாழ்த்துகளையும் திரு ஒய்.ஜி.எம் க்கு வழங்கி மகிழ்கிறோம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 15 – ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு வெகு தூரமான ஒரு நாட்டிற்கு நாம் இப்போது செல்லப்போவதில்லை. ஸ்பெயினின் எல்லை நாடான ப்ரான்ஸுக்குத் தான் உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன். 🙂

    ப்ரான்ஸில் இருக்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் பார்ப்பதென்றால் அதற்கு நமக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். அவ்வளவு அருங்காட்சியகங்கள் நிறைந்த ஒரு நாடு ப்ரான்ஸ். ப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் நகரங்களான ஆவியோன், லியோன், நீட்ஸா, தூலூஸ், காண்ட், க்ராஸ், தலநகரமான பாரிஸ் என இந்த நகரங்களெல்லாம் வரலாற்று பழமை வாய்ந்த  நகரங்கள். ஐரோப்பாவின் முழுமைக்கும் ப்ரெஞ்சு  தாக்கம் என்பது மிக விரிவானது. ஐரோப்பாவுடன் நின்று விடாமல் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டம் வரை தனது ஆளுமையை விரிவாக்கியது ப்ரான்ஸ்.

    paris3

    ப்ரான்ஸ் என்றதுமே பலருக்கும் அறிமுகமாக மனதில் தோன்றுவது பாரிஸ் நகரம் தான். பாரிஸின் பெயரைக் கேட்டதுமே ப்ரமாண்ட கட்டிடங்களும், புதுமை உலகமும், கேளிக்கைகள் நிரம்பிய சொர்க்கபுரி என்பதுமாக நமது மனம் கற்பனையில் சிறகடிக்கும். இந்த தோற்றத்தின் இடையே பாரிஸின் உண்மையான வரலாற்று முகம் மறைந்தும் கூட போகலாம். ஆனால் ஒரு வகையில் பாரிஸை விட்டு தூரம் சென்று ப்ரான்ஸின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றோமேயானால் ப்ரான்ஸின் விரிவான அறிமுகத்தை நாம் நன்கு பெற முடியும். பாரிஸின் தற்போதைய சூழலில் அதன் பண்டைய வரலாற்று சிறப்புக்களையும் விட இன்றைய பொருளாதார சூழல், அதனால் மக்கள் நிறைந்து வழியும் இந்த நகரத்தின் சீர்குலையும் நிலை தான் பெரும்பாலும் கண்களுக்குத் தென்படுவதாக இருக்கின்றது. பாரிஸை பார்த்து விட்டு இது தான் ப்ரான்ஸ் என நம்பிக் கொண்டிருந்தோமேயானால் உண்மையான ப்ரான்ஸின் முழு வடிவத்தை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை ப்ரான்ஸின் ஏனைய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும் வாய்ப்பு அமைந்தமையினால் நான் நேரடியாக அதனை உணரும் வாய்ப்பு பெற்று அறிந்து கொண்டேன். இதனால் ஓரளவிற்கு ப்ரான்ஸ் அதன் பண்டைய சிறப்புக்களும், பொருளாதார வளமும், மக்களின் வாழ்வியலும் என்ற ரீதியில் எனக்கு ஓரளவு அறிமுகமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

    ஐரோப்பாவிற்கு நான் வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1999ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் தமிழ் இலக்கிய சந்திப்புக்களின் போது எனக்கு அறிமுகமான, பாரிஸில் இருந்த சில நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வகையில் திரு.அரவிந்தன்,  மறைந்த திரு.புஷ்பராஜா, மறைந்த திரு.கலைச்செல்வன் ஆகியோரையும் ஏனைய சில நண்பர்களையும் சந்திக்க என் நான் சில முறை பாரிஸ் சென்று வந்துள்ளேன். இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவும் ஒரு முறை தமிழ் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றவும் சென்று வந்திருக்கின்றேன். பாரிஸின் சரவணபவனில் இந்திய உணவை சுவைத்ததும் மறு நாள் வரை எனது குளிர் ஜாக்கெட் எல்லாம் இந்திய உணவின் வாசனை நிறைந்து இருந்ததும் கூட இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது.

    paris5பாரிஸ் – லா செப்பல் வீதியில் (2010)

    மற்றொரு முறை, 2002ம் ஆண்டு வாக்கில், எனது கார் விபத்துக்குள்ளாகிவிட ஜெர்மனியில் அதனை ஓப்பல் விற்பனையாளரிடம் கொடுத்து சரி செய்வதை விட பாரிஸில் பாதி குறைந்த விலையில் சீராக்கலாம் என நண்பர் புஷ்பராஜா சொல்ல 500கிமீ தூரம் பாரிஸுக்கு காரை ஓட்டிச் சென்று காரை சரி செய்து விட்டு தமிழ் நண்பர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். அப்படி செல்லும் போது அந்த நண்பர்களின் துணையுடன் எனக்கு பாரிஸ் கொஞ்சம் அறிமுகமானது. அப்போது பாரிஸில் தமிழர்கள் நிறைந்திருக்கும் வணிகப்பகுதியான லா செப்பல் பகுதியில் தமிழ்க்கடைகளையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். தமிழ்க்கடைகளில் கிடைக்கும் கொத்து ரொட்டி, தோசை என சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். அதன் பின்னர் பல முறை எனது தொழில் சார்ந்த பயணங்களாக பாரிஸுக்கும், க்ரனோபலுக்கும் செல்வது ஏற்பட்டது. அத்தகைய பயணங்களில் நான் பாரிஸில் சில அருங்காட்சியகங்களைக் காணும் வாய்ப்பு பெற்றேன்.

    paris4

    பாரிஸ் க்ரனோபல் என்ற இரண்டு நகரங்களைப் பார்த்த எனக்கு ப்ரான்ஸை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட நானும் என் கணவருமாக 2009ம் ஆண்டில் 18 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாகனத்திலே பயணம் செய்தோம். இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு ஃப்ரைபுர்க் வந்து அங்கிருந்து பெசன்சோன் வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லியோன் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் மார்செல் வந்து அங்கே செய்ண்ட் ராஃபெல்லில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நைஸ் நகரம் வந்து  பின்னர் மோனாக்கோ சென்று பின்னர் மீண்டும் திரும்பி கான்ஸ் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் ஆவியோனில் சில நாட்கள் என இருந்து திரும்பினோம். ஏறக்குறைய 2300கிமீ தூரம் வாகனப் பயணம் நானும் என கணவருமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். ப்ரான்ஸின் ஒரு சில நகரங்களை மட்டுமே இந்த பயணத்தின் போது பார்க்க முடிந்தது. ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே சென்று அருங்காட்சியகங்கள் சென்று புதிய விஷயங்களை அறிந்து வர முடிந்தது.  மீண்டும் ஒரு முறை இதே போல ஆனால் இதுவரை செல்லாத ஏனைய நகரங்களையும் சென்று பார்த்து வர வேண்டும் என்ற என்ணமும் மனதில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது. இந்த பயணத்தின் போது நான் அறிந்து கொண்ட புதிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். அவையெல்லாம் வாய்ப்பு கிட்டும் போது தகுந்த பதிவுகளின் வழி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் மனதில் இருக்கவே செய்கின்றது. ப்ரான்ஸின் ஒவ்வொரு நகரமும் தனிச்சிறப்புடனும் பிரமாண்டத்துடனும் தனித்துவத்துடன் விளங்குவது உண்மை.

     paris2

    ஸ்பெயினில் உள்ள அருங்காட்சியகங்களின் என்ணிக்கையை விட ப்ரான்ஸில் மிக அதிகம் என்று நிச்சயம் கூறுவேன். பாரிஸ் நகரில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ஒன்று இங்கே 150 அருங்காட்சியகங்கள் இருப்பதாக பட்டிபலிட்டிருக்கின்றது (http://en.wikipedia.org/wiki/List_of_museums_in_Paris ).  இவை ஒவ்வொன்றையும் சென்று காண என் வாழ்க்கை நிலை இடம் அளிக்காது என்றாலும் சில பாரிஸிலுள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் சிலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதும் வாசகர்களாகிய உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

    எந்த அருங்காட்சியகம் செல்லப்போகின்றோம் என்பது அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் 🙂

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 17ம் பகுதி

    தஞ்​சை​ வெ​. கோபாலன்

    திருக்கைலாயம்.

    கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின் கழல் நம்பினேன்
    ஊன் சாயும் சென்மம் ஒழித்திடுவாய் கரவூரனுக்கா
    மான் சாயச் செங்கை மழுவலம் சாய வளைந்த கொன்றைத்
    தேன் சாய நல்ல திருமேனி சாய்ந்த சிவக் கொழுந்தே. 1.

    மணம் பரப்பும் (கான் = மணம்) பனிமலையாம் கயிலையங்கிரிக்கு அதிபதியே! (கரவூரன் = கரவூர் என வழங்கும் விரிஞ்சீபுரத்து அன்பன். அங்கு சிவனுக்குப் பூசை புரியும் அந்தணச் சிறுவனுக்கு அபிஷேகம் செய்ய எட்டவில்லை என்பதால் சிவன் தலை குனிந்து கொடுத்ததாகத் தல புராணம் கூறுகிறது) கரவூர் அன்பனான சிவசருமனுக்காக உன் திருக்கரங்கரங்களில் தாங்கியுள்ள மான் சாய்ந்திடவும், மற்றோர் கையிலுள்ள மழு வலப்புறமாகச் சாய்ந்திடவும், உன் கழுத்தில் அணிந்திருக்கும் கொன்றைமாலையிலிருந்து தேன் ஒழுக, இவை அனைத்தோடும் உன் திருமேனியும் சாய அமர்ந்திருக்கும் சிவக் கொழுந்தே உன் பாதங்களைப் பணிந்தேன், மாமிசப் பிண்டமான இப்பிறவியை ஒழித்து எனக்கு மோட்சமளிப்பாய்.

    குறிப்பு:- விரிஞ்சிபுரம் பற்றியும் அங்கு சிவனுக்கு பூசை செய்த அந்தணச் சிறுவன் சிவசருமன் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். விரிஞ்சிபுரத்து ஈசன் மார்க்கபந்தீச்வரர், அம்பாள் மரகதாம்பிகை. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருத்தலம் வேலூருக்கு அருகில் இருக்கிறது. இவ்வூரின் தலபுராணத்தின் படி படைப்புக் கடவுளான பிரம்மா இங்கு சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். சிவசர்மன் உபநயனம் செய்யப்படாத குழந்தையாக இருந்த போதே அவனுடைய தந்தையார் இறந்து போனார். விரிஞ்சிபுர ஆலயத்திலுள்ள சிவனுக்கு பூஜை செய்யும் கடமை இந்த சிறுவனுக்கு வந்தது. ஆனால் உபநயனம் (பூணூல் அணிதல்) நடந்தால்தான் பூஜை செய்ய முடியும். இறந்து போன சிவாச்சாரியாரின் உறவினர்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிற நிலம் மற்றும் பூஜை செய்யும் உரிமை அனைத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணம். அதனால் சிறுவன் சிவசர்மனிடம் உன் முறை வரும்போது நீ போய் பூஜை செய்யவில்லையானால் அந்த உரிமை எங்களுக்கு வந்துவிடும். நிலத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொள்வோம் என்றனர். சிவசர்மாவின் தாய் இறைவன் மார்க்கபந்தீச்வரரிடம் வேண்டிக் கொண்டார் வழிகாட்டு என்று. கார்த்திகை மாதத்தில் கடைசி சனிக்கிழமை இறைவன் அந்த அன்னையின் கனவில் தோன்றி சிறுவனை பூஜை செய்ய அனுப்பும்படி சொல்லி ஆசி வழங்கினார். மறு நாள் சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஒரு கிழவர் வேடத்தில் வந்து அவனுக்கு பூணூல் அணிவித்து உபநயனம் செய்வித்து பிரம்மோபதேசம் எனும் காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். அதோடு சிவனுக்கு பூஜை செய்யும் உரிமையுள்ள சிவதீட்சையையும் வழங்கினார். பின்னர் கிழவர் மறைந்து சென்றார். சிறுவன் பிரம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீரை குடத்தில் எடுத்துக் கொண்டு ஒரு யானை மீதேறி கோயிலுக்கு வர அங்கு கூடியிருந்தோர் அதிசயித்துப் போக, கோயில் கதவு தானாகத் திறந்து கொண்டது. ஏதோ காலம் காலமாக பூஜை செய்து வந்த அனுபவசாலியைப் போல அந்தச் சிறுவன் முதலில் சுவர்ண கணபதிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அடுத்து பூஜை செய்ய சிவனிடம் சென்றால் அவனால் சிவனுடைய தலையை எட்ட முடியவில்லை. இறைவா! உன் தலையில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய எனக்கு உயரம் எட்டவில்லையே என்ன செய்வேன் என்று வேண்ட, சிவன் தன் தலைமுடியைத் தாழ்த்தி குனிந்து கொடுத்து அவன் பூஜை செய்ய வசதியாக நின்றார். இன்றும் அங்கு சிவன் சற்று குனிந்த நிலையில் இருப்பார். இங்கு பட்டினத்தார் இதைக் குறிப்பிட்டு அன்று அந்தச் சிறுவனுக்காக உன் உடல், கை மழு, மான், கழுத்து மாலை அனைத்தும் தாழக் குனிந்தாயே என்கிறார்.

    இல்லம் துறந்து பசி வந்தபோது அங்கு இரந்து தின்று
    பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச்
    சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
    அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே. 2.

    வீடு, வாசல், மனைவி மக்கள் அனைத்தையும் நீங்கி வெளியேறி, பசி எடுத்தால் பிச்சை எடுத்து உண்டு, இல்லறத்தில் உணவு அருந்தியபின் தாம்பூலம் போட்டு பற்கள் கறையாகி விடுமே, அதுபோல அல்லாமல் கறையற்ற பல்லோடு வெளுத்த வாயோடும், எதிலும் பற்று இல்லாமலும், சொற்களை நீக்கி மவுன நிலை அடைந்து, எனக்கென பொருள் எதுவை இல்லாமல் சுகானந்த அனுபவத்தில் இரவு என்ன, பகல் என்ன என்று எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் நாள் என்றோ கயிலையில் அமர்ந்த கோவே.

    சினந்தனை அற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கை அற்று
    நினைந்தது அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த்
    தனந்தனியே இருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
    வனந்தனில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 3.

    இயல்பிலே உள்ளத்தில் அமைந்த கோபத்தை அறவே நீக்கி; ஆசையை அகற்றி; செய்கைகள் அனைத்தையும் துறந்து; இதுவரை மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு; மறந்து விடுதல் என்பதையும் மறந்துவிட்டு; வெறுமையான மனத்தினனாய்த் தன்னந்தனியானாய் அமர்ந்து சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே கயிலாயத்தமர்ந்த கோவே.

    கையார வேற்று நின்று அங்ஙனந் தின்று கரித்துணியைத்
    தையாது உடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
    மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
    ஐயாவென்று ஓலமிடுவதென்றோ கயிலாயத்தனே. 4.

    கை நிறைய பிச்சை ஏற்று, வாங்கிய இடத்திலேயே அதை உட்கொண்டு, கரிபடிந்த துணியைத் தைக்காமல் உடுத்துக் கொண்டு உன்னுடைய சந்நிதிக்கு வந்து சதாகாலமும் மனதில் உன்னை எண்ணிப் பணிந்து, உடலில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க ‘ஐயா’ என்று உரத்தக் குரலெடுத்து உன்னைப் பார்த்து ஓலமிடுவது என்னாளோ, கயிலையில் அமர்ந்த பெம்மானே.

    நீறார்ந்த மேனி உரோமஞ் சிலிர்த்து உளம் நெக்குநெக்கு
    சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி நின் சீரடிக்கே
    மாறாத் தியானம் முற்றானந்த மேற்கொண்டு மார்பில் கண்ணீர்
    ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே. 5.

    உடலெங்கும் திருநீறணிந்து, உன்னை எண்ணி மயிர்க்கால்கள் குத்திட்டு, உள்ளமோ உன்னை நினைந்து நெக்குருகி சேறு போல கனிந்து, உன் சேவடித் தாமரைகளை மனதில் எண்ணி எப்போதும் தியானம் செய்து, கண்களில் பெருகி வரும் கண்ணீரால் மார்பு நனையக் கிடப்பது என்னாளோ, கயிலைமலை வாழ் சிவபெருமானே.

    செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும்
    பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின்
    எல்லையில் புக்கிட ஏகாந்தமாயெனக் காமிடத்தே
    அல்லல் அற்று என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 6.

    செல்வம் படைத்த சீமான்களைத் தேடிப்போய் என் துயரங்களையெல்லாம் சொல்லி, பற்களைக் காட்டிக் கெஞ்சி பரிதவித்து நிற்காமல், பரானந்தமாம் சிவானந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று, ஏகாந்தமாகத் துன்பங்கள் எதையும் அண்டவிடாமல் இருக்க அருள் செய்திடுவாய் அத்தனே, கயிலாயம் அமர்ந்த பெருமானே.

    மந்திக் குருளை யொத்தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்
    சிந்திக்கும் சிந்தையை யான் என்செய்வேன் எனைத்தீது அகற்றி
    புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்
    எந்தைக்கு உரியவன் காணத்தனே கயிலாயத்தனே. 7.

    குட்டிபோட்ட குரங்கு தன் குட்டியை எடுப்பதில்லை, அந்த குட்டியே தாயின் வயிற்றைக் கவ்விக் கொள்ளும் (மர்க்கட நியாயம்) போல நான் உன்னைக் கவ்விக் கொள்ளவில்லை, நாயினும் கேவலமான நான் நிலைமைகளை அறிந்திருந்தும் உன்னைச் சிந்திக்காமல் இருக்கும் என்னுடைய சிந்தையை என்னவென்று சொல்வேன்; என் உள்ளம் புகுந்த கள்ளத்தை நீக்கி பூனை எப்படித் தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போகுமோ அதுபோல (மார்ச்சால நியாயப்படி) நீ என்னை கவ்விக் காத்திட வேண்டும் தந்தையே, கயிலை நாயகனே.

    வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழி போய்ப்
    பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில்
    இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் அஞ்செழுத்தாம்
    அருந்தேன் அருந்துவன் நின்னருளால் கயிலாயத்தனே. 8.

    திருக்கயிலாயம் அமர்ந்த சிவபெருமானே! இனி நான் பிறந்தும் பின் இறந்தும் இப்படி துன்பப்படமாட்டேன், ஐம்புலன்களின் மயக்கத்தால் அவை காட்டும் திசை நோக்கிப் போய் எச்செயலிலும் ஈடுபட்டுத் துன்புறமாட்டேன்; பாபக் குழியெனும் நரகத்தில் விழமாட்டேன், காரணம் நான் நின் அடியவர் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன், அந்த அடியார் திருக்கூட்டத்தை எந்த காரணத்தினாலும் விட்டு விலகமாட்டேன், இனிய தேனின் சுவையுடைய உன் ஐந்தெழுத்தாம் ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை அருந்திக் கிடப்பேன்.

    மதுரை:
    விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்
    திடப்படுமோ நின்னருள் இன்றியே தினமே அலையக்
    கடப்படுமோ அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
    படப்படுமோ சொக்கநாதா! சவுந்தரபாண்டியனே. 9.

    மதுரை வாழ் சோமசுந்தரா! சவுந்தரபாண்டியனே! இப்பூவுலக வாழ்க்கையில் காணுகின்ற அனைத்து இன்பங்களையும் விட்டு நீங்கிவிடமுடியுமா; அப்படி விட்டு விலகிவிட மனம்தான் துணிந்து திடப்படுமோ; அப்படியின்றி தினம்தினம் அதனைச் சாராமல் இருக்கத்தான் முடியுமா; மனம் சலனப்பட்டு அங்குமிங்குமா அலைக்கப்படுமோ; அற்பர்கள் வீட்டு வாயிலில் சென்று கண்களில் நீர் சோர நின்று மனவருத்தம் பட இயலுமோ, நின் அருள் கிடைக்காதவரை அவை இயலாது.

    (இன்னும் வரும்)

    Share
  • நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon)

    (September 18, 2013)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A

    (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission)

     

    நாமிருக்கும்
    பூமிக்கு ஒரு நிலவு என்றுதான்
    நாம் இதுவரை அறிந்தது !
    கவிஞர் புகழ்ந்தது ஒன்றைத்தான்.
    கலிலியோவின் கண்
    கூர்ந்து தொலை நோக்கியில்
    ஆராய்ந்தது  ஒரு நிலவைத் தான்!
    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்
    சிறு கோள் பூமிக்கு
    இரு நிலவுகள் இருந்ததாய்க்
    ஒரு கருத்து  யூகிப்பு !
    இரண்டாம் நிலவு மோதிப்
    பெருநிலவில் ஒட்டிக் கொண்டதாம் !
    பின்புறம் மறைவாகி
    முன்புறம் பொன்னொளி வீசும் !
    போதிய விண்ணுளவி
    ஆதாரம்  உள்ளது அதற்கு !
    புவிக் கோளுக்கு
    இரு நிலவுகள் என்பது
    நவயுகக் கணினியில் வடித்த
    பூத மோதல் ஒத்திகையின்
    போலி மாடல் !
    புனை கதை ஒன்றும் இல்லை !
    நாசா விண்ணுளவி கூறும்
    மெய் வாசகம் !

    +++++++++++++++++++

    Grail Mission -1

    [NASA’s Twin Space Probes Launch on September 10, 2011 ]

    “பூர்வீக மனிதன் வானத்தை நோக்கியது முதலாக, வெண்ணிலவு மீது மோக வியப்பு இருந்துள்ளது.   நாசாவின் கிரெயில் இரட்டை விண்ணுளவிகள் [GRAIL Twin Space Probes]  நிலவின் உட்தளத்தை ஆழ்ந்து உளவு செய்ய ஒரு புதிய மேம்பாட்டைக் கொண்டுள்ளது.   அந்த விஞ்ஞானத் தகவல், நிலவு எப்படி உருவானது, எவ்விதம் விருத்தியானது என்றொரு முற்பட்ட விஞ்ஞானப் புரிதலை எங்களுக்குத் தரும்.”

    மரியா ஸூபெர் [GRAIL Spacecraft Principal Investigator, M.I.T. , Cambridge, USA]

    “[பூமிக்கு இரு நிலவுகள் இருப்ப தென்பது] ஓர் உட்கிளர்ச்சிக் கருத்து.  அது மிகவும் சிக்கலான, திகைப்பூட்டும் ஓர் மகத்துவப்  பூமி-நிலவு அமைப்பு ஏற்பாடை விளக்கும்.  ஒரு முறைப்பாடு.    விந்தையாகச் சந்திரக் கோளின் வடிவமைப்பு  இயற்கையில் “சமச்சீர்மை அற்றது”  [Asymmetrical Nature].   முன்புறக் கோளமும், பின்புறக் கோளமும் திணிவு  அடர்த்தியில்  வேறு பட்டவை.”

    டேவிட் ஸ்மித் [கிரெயில் துணை ஆய்வுப் பிரதம விஞ்ஞானி, M.I.T.]

    Grail Mission Details -3

    “இப்போது எங்களுக்குத் தெரிந்தது :  நிலவில் காணப்படும் பெருங்கறைகள் மிகவும் பெரியவை;  எரிமலைக் குழம்பால் நிரம்பவை;  நான்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு முரண்கற்கள் [Asteroids] தாக்கிக் குழிந்தவை;    கிரெயில் விண்ணுளவிகள் அனுப்பும் தகவல், தெரியும் முன் முகமும், தெரியா பின் முகமும் அவ்விதமே விண்வெளிப் பெருங்கற்கலால் தாக்கப்பட்டுக் குழிந்தவையே.   ஆனால் அவ்விரு முன்-பின் பாதிக் கோளங்கள் வெவ்வேறு விதத்தில் தாக்குதலை எதிர்கொண்டன.”

    மரியா ஸூபெர்   [GRAIL Spacecraft Principal Investigator, M.I.T. , Cambridge, USA]

    “பொதுவாக அத்தகைய இரட்டை நிலவுகள் தோன்றியவுடனே மெதுவாய்ச் சிறு நிலவு  விழுந்து, பெருநிலவுடன் சேர்ந்து படிந்து கொள்ளும்.    ஆனால் இப்போது புதிய நியதிப்படி இரண்டாம் நிலவு, புவி-நிலவு ஏற்பாட்டின்படி”அடைப்புப் புள்ளிகள்”  அரங்கில்  [Lagrange Points of Earth-Moon System]  சிக்கிக் கொள்ளும் .”

    டேவிட் ஸ்மித்  [கிரெயில் துணைப் பிரதம ஆய்வாளர்]

    நாசாவின் இரட்டை விண்ணுளவிகள் முதன்முதல் நமது நிலவின் உட்புற அமைப்பை அனுப்பின 

    2011 செப்டம்பர் 10 இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்ட கிரெயில் இரட்டை விண்ணுளவிகள் [GRAIL Twin Space Probes] முதன் முதல் நிலவின் மர்மமாய்ப் புதைந்துள்ள  உட்புற அமைப்புத் தகவலைப் பூமிக்கு அனுப்பின.   மேலும் பூமியின் தற்போதைய நிலவின் மறைந்து போனத் துணையான இரண்டாம் நிலவின் இருப்பையும் மறைமுகமாகக் காட்டியுள்ளது.    நவீன விஞ்ஞானக் கருத்து யூகத்தின்படி பூமிக்கு ஆரம்ப காலத்தில் இரு நிலவுகள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  இக்கருத்து கணனிப் போலி மாடல் [Computer Simulation Model] மூலமும்  மெய்ப்படுத்தப் பட்டுள்ளது.

    Grail Mission Details -2

    பூமிக்கு இரு நிலவுகள் இருந்திருக்க வேண்டும் என்னும் கோட்பாடை முதன்முதல் அறிவித்தவர் இருவர்:  மார்டின் ஜுட்ஸி & எரிக் ஆஸ்ஃபாக் [Martin Jutzi & Erik Asphag].  அவர்கள் இருவரும் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். பூமிக்குக் காட்டும் நிலவின் முன்புற முகப்பு  பூர்வீக எரிமலைக் குழம்பு கடினமாய்ப் படிந்து, வழ வழப்பான குழித் தளக் கோளம்.  அதே சமயத்தில் பின்புறக் கோள முகப்பு கரடு முரடான குன்றுப் பிரதேசப் பீடங்கள்.  விஞ்ஞான ஆய்வாளர் இவ்வித வேறுபாடு எவ்விதம் நேர்ந்தது என்று அறிய முடியாமல் திக்குமுக்காடி வந்துள்ளார்.

    4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நமது பூமியில் செவ்வாய்க் கோள் அளவு அண்டம் ஒன்று மோதி விழுந்தது.   அது சிதறிய துண்டுத் துணுக்குகள் சேர்ந்துதான் ஓரிரு நிலவாக வடிவானது.   மார்டின் ஜுட்ஸியும், எரிக் ஆஸ்ஃபாகும்  பூர்வீகத்தில் மெய்யாக இரு நிலவுகள் உருவாயின என்று ஊகிக்கிறார்.   இரண்டாவது நிலவு முதல் நிலவை விடச் சிறியது என்றும், அதுவும் பெரு நிலவோடு இணைந்து பூமியைச் சுற்றி வந்தது என்றும் கருதப் படுகிறது.

    பொதுவாக அத்தகைய இரட்டை நிலவுகள் தோன்றியவுடனே ஒன்றாய்ப் பிணைந்து ஒட்டிக் கொள்ளும் என்று கிரெயில் துணைப் பிரதம ஆய்வாளர்,  டேவிட் ஸ்மித் கூறுகிறார்.  ஆனால் இப்போது புதிய நியதிப்படி இரண்டாம் நிலவு, புவி-நிலவி ஏற்பாட்டில் “அடைப்புப் புள்ளிகள்”  அரங்கில்  [Lagrange Points of Earth-Moon System (Lagrange Points : Five locations in Space where gravitational & Centrifugal Forces  of two bodies neutralize each other;  A third less massive body, located by any one of these points, will be held in equilibrium with respect to the other two.]  சிக்கிக் கொள்ளும் என்று ஸ்மித் கூறுகிறார்.   “அடைப்புப் புள்ளிகள்”  [Lagrange Points]  என்பவை ஒருவகை “ஈர்ப்பியல் வீச்சு அரண்கள்”  [Gravitational Fly Traps] என்று கருதப்படும்.  அந்த அரண்கள் ஓர் அண்டத்தை,  நீண்ட காலம் பிடித்து வைத்திருக்கலாம்;  ஆனால் நிரந்தரமாய் வைத்துக் கொள்ளாது.   அந்த ஏற்பாட்டில் அடைபட்ட இரண்டாம் நிலவு காலம் கடந்த பின் அரணிலிருந்து விடுபட்டு, அருகில் உள்ள பெரிய நிலவால் ஈர்க்கப்பட்டு முடிவில் மோதி இரண்டறக் கலந்து விட்டது என்பதே புதிய கோட்பாடு.  அவ்வித மோதல் மெது வேகத்தில் நிகழ்ந்ததால் சந்திரனில்  எந்தப் பெருங்குழியும் [Crater] உண்டாக வில்லை.  அதற்குப் பதிலாக சிறு நிலவு பெரு நிலவு  ஈர்ப்பால் மெதுவாக இழுக்கப்பட்டு, அதில் படிந்து கொள்கிறது.   அதாவது பெரு நிலவில் படிந்து மறைந்து போன மிச்சங்களே மேடு பள்ளக் குன்றுகளாய்ப் பின்புற நிலவில் காட்சி தருகின்றன.

    Grail Mission Details

    “நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.”

    எரிக் ஆஸ்ஃபாக் (Professor Eric Ashphaug, Planetary Science, University of California)

    “அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்தே ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது.  இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன”

    பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California)

    தோற்றக் காலத்தில் பூமிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம்

    4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பரிதி மண்டலம் தோன்றிய பிறகு பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்திருக்கக் கூடும் என்று இப்போது புதிதாக அண்டக் கோள் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  ஒரு நிலவு சிறிய நிலவை விட மூன்றரை மடங்கு அகலத்தில் பெரிதாக இருந்துள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு ஒரே வட்டப் பாதையில் இரண்டும் புவியையும் வலம் வந்திருப்பதாக கருதப்படுகிறது.  நாளடைவில் குட்டி நிலவு பெரு நிலவோடு மோதியதால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக் கொண்டு ஒற்றைப் பெரிய நிலவாய் உருவாகி விட்டது.  இரண்டு நிலவுகளின் மோதலே பெரு நிலவின் இருவித முக மாறுபாட்டுக்குக் காரணம் என்று அறியப் படுகிறது.  நாம் காணும் நிலவின் முகப்பாடுக்கும், நாம் காண முடியாத மறைவு முகப்பாடுக்கும் வேறுபாடுகள் தெரிகின்றன.  இரண்டு நிலவுகளும் புவியைச் சுற்றி வரும் போது இரு நிலவுக்கும் இடையே ‘மெது நகர்ச்சி மோதல்’ (Slow-Motion Collision) நேர்ந்து தற்போதையப் பெரு நிலவு உருவாகி யுள்ளது.  குட்டி நிலவு பெரு நிலவுக்கு 30 இல் ஒரு பாக நிறை.  குட்டி நிலவின் அகலம் 600 மைல்.  பெரு நிலவின் தற்போதைய விட்டம் : 2160 மைல்.

    புவிக்கு இரு நிலவுகள் இருந்திருக்கலாம் என்னும் புதிய கருத்தை முதல்முதல் வெளியிட்டவர் எரிக் ஆஸ்ஃபாக் & மார்டின் ஜுட்ஸி (Eric Asphaug & Martin Jutzi) என்னும் இரு பேராசியர்கள்.  எரிக் ஆஸ்ஃபாக் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் விண்கோள் விஞ்ஞானி (Planetary Scientist). மார்டின் ஜுட்ஸி பெர்ன் பல்கலைக் கழகத்தைச் (University of Berne) சேர்ந்தவர்.  இருவரும் புவியின் இரட்டை நிலவுக்களைப் பற்றி முதன்முதல் ஆகஸ்டு 3, 2011 தேதி ‘இயற்கை’ விஞ்ஞான இதழில் (Nature Journal) அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் பூமிக்குத் தெரியும் நிலவின் ஒருபுற முகத்தில் மித ஆழ்குழிகள் தட்டையாகவும், மறைந்துள்ள மறுபக்கத்தில் நீண்ட ஆழ்குழிகள் நிரம்பவும் கொண்ட பெரும் மேடு பள்ளங்களாகவும் ஏன் உள்ளன என்பதற்குக் காரணம் அறிய முடியாமல் இருந்தனர்.  நிலவின் மறைந்துள்ள முகப் பகுதியில் 3000 மீடர் (10,000 அடி) உயரத்துக்கு அதிகமான மலைப் பீடங்கள் பல இருப்பதாக அறியப்படு கின்றன.  மலை மடிப்புகள் முன் பகுதியை விட மறைவுப் பகுதியில் 50 கி.மீ (30 மைல்) தடிமனாக உள்ளன.  பெரு நிலவு குட்டி நிலவைப் போல் மூன்றரை மடங்கு அகலமும், 25 மடங்கு ஈர்ப்பு விசையும் கொண்டது.

    எரிக் ஆஸ்·பாக் இரு நிலவுகளின் இந்த மோதலை “பெரும் மோதல்” (Big Impact) என்றும் ‘மித வேக மோதல்’ (Low-Velocity Collision) என்றும் குறிப்பிடுகிறார்.  அந்த மோதலால் சிதறிய தட்டாகிப் பெரு நிலவு ஒருபுறத்தில் சப்பையாகப் போனது (Caking the Big Moon) என்றும் கூறுகிறார்.  இந்த இரட்டை நிலவுகள் தோற்ற சமயத்தில் 100 மில்லியன் ஆண்டுகள் கூடி இருந்தன வென்றும், மோதும் போது குட்டி நிலவின் வேகம் மணிக்கு 5000 மைல் இருந்திருக்க வேண்டும் என்றும் கணினி மாடல் படைத்துக் கணக்கிட்டிருக்கிறார்.

    மோதிய பிறகு குட்டி நிலவின் சிதறிய பாறைகள் பெரு நிலவில் படிந்து கொள்ள பல மணி நேரங்கள் எடுத்திருக்கும் என்று பேராசிரியர் ஆஸ்·பாக் விளக்குகிறார்.  இந்த அதிசய மோதல் பூமிக்கு 80,000 மைல் தூரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

    வானியல் கோட்பாடின்படி மோதல் எனப்படுவது நிலவின் ஒரு புறத்தில்தான் நிகழ்ந்துள்ளது.  அப்போது ‘மோதல் வெப்ப சக்தியால்’ பாறைகள் உருகிப் போகாதது வரை நிலவின் கூட்டுச் சேர்க்கையில் ‘செஞ்சீர்மை இழப்பு’ (Asymmetry) நேர்கிறது.  பெரு நிலவின் செஞ்சீர்மை இழப்புக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஒன்றும் உறுதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.  நாசா விஞ்ஞான இணை ஆணையாளர் அலன் ஸ்டெர்ன் “இரு நிலவு மோதல் கோட்பாடு உண்மை என்று நிரூபிக்க முடியாத ஒரு சிறந்த புதிய கருந்து என்று கூறியிருக்கிறார்.  நாசா எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி கோட்பாடை ஏற்றுக்  கொண்டுள்ளது.

    செவ்வாய் அளவு சிறிய கோள் பூமியோடு மோதிய போது

    பூமியின் பிள்ளைப் பருவத்தில் செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று மோதிய சமயத்தில் அந்தப் பெரும் மோதலில் ஒரு நிலவன்று இரு நிலவுகள் தோன்றின என்றுதான் புதிய விஞ்ஞானக் கோட்பாடு கூறுகிறது.  உருவான குட்டி நிலவு பெரு நிலவைச் சுற்றிக் கொண்டு இரண்டும் பூமியை ஒரே வட்டப் பாதையில் வலம் வந்துள்ளன.  பிறகு குட்டி நிலவு பெரு நிலவில் விழுந்து ஒரு முகத்தில் மலை அடுக்குத் தொடர் ஒன்றை ஆயிரக்கணக்கான கி.மீ. உயரம்வரை அப்பியது என்பதே புதிய கோட்பாடு.  அதுவே நிலவின் ‘செம்மை நிலைப்பாடு வடிவத்தைப்’ (Symmetric Shape) பாதித்தது என்றும் அறியப் படுகிறது.

    “நாங்கள் தயாரித்த புதிய இரு நிலவுப் போலிக் கணினி மாடல் (Simulated Computer Model) பூத மோதலில் நிலவு உருவான பழைய மாடலோடு செம்மையாய் இணைந்து செயல்படுகிறது.  அதனால் ஏராளமான மோதல் சிதறல்கள் பெரு நிலவோடு சேர்ந்து பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும்.  மேலும் அம்மாதிரி ஏற்பாட்டின் இயக்கச் சீர் நிலைப்புக்கும் (Dynamical Stability of a System), சேய் நிலவு குளிர்நிலை அடைந்ததற்கும், நிலவுப் பாறைகளின் வயதுக் கணிப்புக்கும் ஒத்து வருகிறது.” என்று விஞ்ஞானி எரிக் ஆஸ்·பாக் கூறுகிறார்.

    புதிய ஆய்வுக் கோட்பாடில் எரிக் ஆஸ்·பாக்கும் அவரது கூட்டாளி மார்டின் ஜுட்ஸியும் சேர்ந்து அமைத்த போலிக் கணினி மாடல்களில் (Computer Simulations) குட்டி நிலவுக்கும், பெரு நிலவுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் விளைவுகளை ஆராய முயன்றனர்.  அந்த முறையில் நிலவின் பரிணாம வளர்ச்சியும் (Evolution of the Moon), உண்டான நிலவுத் தாதுக் கனிமங்களின் அடுக்குப் படிவுகள் பற்றியும் (Distribution of Lunar Materials) ஆய்வு செய்ய முடிகிறது.

    பிள்ளைப் பிராயத்தில் இரு நிலவுகள் மோதலின் விளைவுகள்

    இரு நிலவுகளின் இந்த ஊகிப்பு மோதல் மெது வேகத்தில்தான் (Low-Velocity Collision) நேர்ந்திருக்க முடியும் என்று எரிக் ஆஸ்·பாக்கும், மார்டின் ஜுட்ஸியும் கூறுகிறார்.  இவ்வித மோதல் நிலவில் பெருங்குழிகளை (Craters) உண்டாக்க முடியாது.  மோதிய தளத்தில் கனிமங்கள் வெப்பம் மிகையாகிப் உருகிப் போகா.  அவ்வாறின்றி மோதல் பாறைகள் விழுந்த கோளப் பகுதியில் அடுக்கடுக்காய்ப் படிந்து மேடுகளாய் அப்பிக் கொள்கின்றன.

    அத்துடன் நிலவில் அப்பிய கோளப் பகுதி உயர்ந்த மேடு பள்ளங்களுடன் புவிக்கு எதிர்ப்புறமாய் திருப்பம் அடைந்தது.  நேர்புறத்தில் தெரியும் பொன் முகத்தை விட நிலவின் பின்புறப் புண் முகம் மாபெரும் மலைப் பிரதேச மாய் மாறிக் கண்ணுக்குப் புலப் படாமல் மறைந்து கொண்டது.

    “அண்டவெளி யுகத்தின் புலர்ச்சிக் காலத்திலிருந்து ஏன் நிலவின் முன்புறக் கோள்முகம், பின் புறத்தை விட வேறுபாடாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிராகவே இருந்து வ்ந்துள்ளது,” என்று பிரான்சிஸ் நிம்மோ (Professor Earth & Planetary Science, University of California) கூறுகிறார்.  இயான் காரிக்-பெத்தல் & பிரான்சிஸ் நிம்மோ இருவரும் எரிக் ஆஸ்·பாக் & மார்டின் ஜுட்ஸி ஆகியோர் காலத்தில் தனியாக ஆய்வுகள் செய்து நிலவின் வேறு பட்ட கோளப் பகுதிகளைப் பற்றிப் புதுக் கருத்துக்களை வெளியிட்டவர்.  அவர் வெளியிட்ட அறிக்கைப்படி  “இரு நிலவுகள் மோதிச் சேர்ந்ததால் நேரிடாது, மோதல் அலை அதிர்வுகளால் அவ்விதம் இரு முகப் பகுதிகள் வெவ்வேறாய் மாறி விட்டன” என்று நிம்மா தன் தனிப்பட்ட அறிக்கையில் கூறுகிறார்.

    எரிக் ஆஸ்ஃபாக்கின் அரிய வெளியீடு இரு புதிர்க் கோட்பாடுகளைச் சீராய் இணைக்கிறது.

    1.  செவ்வாய்க் கோள் போன்ற சிறிய முரண் கோள் பூமியைத் தாக்கிப் பூத மோதலில் தற்போதைய நிலவு உருவானது.

    2.  அந்த மோதலில் தெறித்த ஒரு குட்டி நிலவு பெரு நிலவோடு மோதி ஒரு முகம் தணிந்த தழும்புகள் கொண்டு பொன் முகமாகவும் மறு புறம் மலை மேடுகள் நிரம்பிய புண் முகமாகவும் மாறி விட்டன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய செவ்வாய் அளவு சிறிய கோள் ஒன்று முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப் படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக் கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது ! அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி•போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. Physics for Poets By : Robert March (1983)

    9. Atlas of the Skies (2005)

    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    12. The Associated Press : Earth Once Had Two Moons, Astronomers Theorize (August 3, 2011)

    13 Earth May Have Had Two Moons By : Steuart Gary ABC Science Online (Aug 4, 2011)

    14. Space Daily – Astrobiology Magazine – The Odds for Life on a Moonless Earth By Nola TaylorRedd (August 5, 2011)

    15. Daily Galaxy : Moon’s Mountainous Far Side – Created By a Collision with a Smaller Companion Moon (August 5, 2011)

    16.  http://www.nasa.gov/mission_pages/grail/main/index.html  [May 30, 2013]

    17.  http://moon.mit.edu/   [NASA Repot on GRAIL Twin Space Probes]

    18.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2013-322  [Noember 7, 2013]

    19.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Interior_Laboratory  [November 9, 2013]

    20.  http://www.space.com/topics/latest-news-grail-moon-gravity-mission/  [November 19, 2013]

    21.  http://www.nasa.gov/mission_pages/grail/main/index.html

    22.  http://solarsystem.nasa.gov/grail/themoon.cfm

    23.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/09/earths-lost-moon-nasas-grail-mission-may-reveal-a-long-vanished-companion-todays-most-popular.html  [September 18, 2013]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (November 23, 2013)
    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு

    பவள சங்கரி

    வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!

    நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

    எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.  தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இந்தப் போட்டிக்கு நாம் எதிர்பார்த்த அளவு மதிப்புரைகள் வரவில்லை என்பதால் ஆண்டு முழுவதும் இந்தப் போட்டியை நடத்துவது கடினம்; எனவே, இதனை மறுசீரமைக்கிறோம்.

    பரிசுத் தொகைகளையும் சற்றே உயர்த்தியுள்ளோம். வருடம் முழுவதும் என்று அறிவித்திருந்ததை ஒரே போட்டியாக மாற்றியமைத்திருக்கிறோம். சென்னையில் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, ஜனவரி 22 (2014) வரை நடக்கவிருக்கிற புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இப்போட்டிக்கான இறுதி நாளை ஜனவரி 30 என்று அறிவிக்கிறோம். (2014) ஜனவரி 30ம் தேதி வரை வருகிற படைப்புகள் அனைத்தும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அன்பர்களின் உற்சாகமான பங்கேற்பை வரவேற்கிறோம்.

    முதல் பரிசு ரூ.1000
    இரண்டாம் பரிசு ரூ.750
    மூன்றாம் பரிசு ரூ.500

    மேலும் 3 பேருக்குச் சிறப்புப் பரிசாகத் தலா ரூ.200

    போட்டிக்கான விதி முறைகள்:

    ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.

    மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 16ம் பகுதி

    தஞ்​சை ​வெ.​ கோபாலன்

    இனி சில தலங்களில் பாடிய தனிப் பாடல்கள்:

    1. திருச்செங்கோடு:

    நெருப்பான மேனியர் செங்காட்டிலாத்தி நிழலருகே
    இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை
    கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
    திருப்பாதமே தருமோ தெரியாது சிவன் செயலே.

    செக்கச் செவேலென்று சிவந்த வானத்தைப் போன்ற திருமேனியை உடையவரும், அத்திமர நிழலில் வீற்றிருப்பவருமான பரமேஸ்வரனது கருணை உள்ளம் என்ன நினைக்கின்றதோ? அடியவனான என்னை மீண்டும் தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யப் பணிக்கின்றாரோ; அப்படியின்றி அந்த மகாவிஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியாத அத்தனின் திருப்பாதங்களை அளித்து முக்தி தருமோ யார் கண்டார். எல்லாம் அந்த சிவபெருமான் செயல்.

    2. திருவொற்றியூர்.

    ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
    மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்
    செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறும் இட்டுக்
    கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.

    திருவொற்றியூர் தலமேவும் சிவபெருமானே! நெஞ்சில் (‘ஐயும்’ என்பதில் ‘ஐ’ எனும் எழுத்துக்கு கபம் அதாவது bronchial congestion என்பார்கள்) சளி கபம் அடைத்துக் கொண்டு, விழிகள் மேல்புறமாய்ச் செருகிக் கொண்டு, உணர்வுகள் அடங்கிப் போய், இதுகாறும் ஓடியாடிக் கொண்டிருந்த இந்த பூதவுடலானது ஜீவன் இழந்து பிணமாகி இனி இது இல்லையெனும் நிலைமைக்கு வரும்போது இறைவா, நான் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். அதனைக் கேட்டு நீயும் அங்ஙனே ஆகுக என வரமளித்திடுவாய் ஐயனே! எனக்கு நீ அருளும் வரம் என்னவென்றால், நான் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு, இரு கரங்களாலும் உன்னைத் தொழுது கொண்டு உன் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதவும் அருள் புரிய வேண்டும் என்பதே.

    3. சுடப்படுவார் அறியார் புரம் மூன்றையும் சுட்டபிரான்
    திடப்படு மாமதில் தென்னொற்றியூரன் தெருப்பரப்பின்
    நடப்பவர் பொற்பதம் நம் தலைமேல் பட நன்கு உருண்டு
    கிடப்பது காண் மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே.

    ஏ மனமே! நன்கு உணர்ந்து கொள்வாயாக. திரிபுரங்களைப் பெம்மான் சிவபெருமான் சுட்டெரிக்கும் தருணத்தில் சுடப்படுபவர்களான ஜீவன்கள் அறிந்து கொள்ளாத செய்தியொன்று உண்டு. வானுயர்ந்த நெடு மதில்கள் சூழ் எழில்வாய்ந்த திருவொற்றியூர் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பவனான தியாகராஜப் பெருமானுக்குரிய திருவீதிகளில் நடந்து செல்லும் மெய்யடியார்களின் திருவடிகள் நம் தலையில் படும்படி வீழ்ந்து கிடந்தால் மட்டுமே பிரம்ம தேவன் நமக்காக எழுதிய விதி எனும் ஏட்டைக் கிழித்தெறிய முடியும். இதனை அறிவீனர்கள் உணர்வதில்லையே.

    4. திருவிடைமருதூர்.

    காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
    ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவரோங்கி விண்ணோர்
    நாடே இடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
    வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.

    உள்ளத்தில் இறைவன் பால் உண்மையான அன்பு இல்லாதவர்கள் காட்டில் தனித்து இருந்தால்தான் என்ன? உணவை நீக்கி காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களாக இருந்தால்தான் என்ன? கந்தலாடை அணிந்து கொண்டு கையில் பிட்சாபாத்திரம் ஏந்திக் கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்தால் என்ன? இவற்றால் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஏதும் இல்லை. விண்ணோர் வாழும் தேவலோகமெனப் போற்றப்படும் திருவிடைமருதூர் ஈசர்பால் மெய்யன்பு பூண்டவர்கள் மேற்சொன்னவர்களைப் போல தவம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு உள்ளன்பு இல்லாமல் இருப்பதைக் காட்டிலும், இல்லறத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார் நிச்சயம் வீடுபேறு பெற்று மோட்சம் பெறுவர். (திருமூலரும் “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன், வேட நெறி நின்றார் வேடமெய் வேடமே” என்கிறார்.)

    5. தாயும் பகை கொண்ட பெண்டீரும் பகை தன்னுடைய
    சேயும் பகை உறவோரும் பகை இச்செகமும் பகை
    ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்
    தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்திரமே.

    இவ்வுலக வாழ்வை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்றபோதில், நமக்குரிய செல்வங்கள் எல்லாம் நம் கையைவிட்டுப் போய் வறியவனாக ஆனபோழ்தில், நமக்குப் பெற்ற தாயோ, மனைவி மக்கள் சுற்றமோ எவரும் உறவாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரும் உலகமும் நமக்குப் பகைதான். ஆகையால் என் நெஞ்சே திருவிடைமருதூரில் வதியும் பரமேசர் திருப்பாதங்களே நமக்கு அடைக்கலமே.

    6. திருக்கழுக்குன்றம்:
    காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த
    நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
    வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம்
    நீடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே.

    திருக்கழுக்குன்றத்தில் வானுயர நீண்ட மலையுச்சியில் அமர்ந்துள்ள எம்பிரானே! தனித்திருக்கும் அடியேனின் உடல் உயிரிழந்து வீழுகின்ற இடம் காடோ, மரத்தடியோ, கடற்கரையிலோ, வளம் கொழிக்கும் நாடோ, நகரமோ, நகரத்தின் நடுவிலோ, எல்லா நலன்களும் நிறைந்த வீடோ, வீட்டின் திண்ணையோ எதுவாகினும் அடியேனுக்கு நினது திருவடிகளே துணை.

    7. திருக்காளத்தி:
    பத்துப் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி
    முத்தும் பவளமும் பூண்டு ஓடியாடி முடிந்த பின்பு
    செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
    கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே.

    தென்கயிலை எனப்பெயர் பெற்ற திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவனே! அன்னையின் கர்ப்பத்தில் பத்துமாதங்கள் சிறையிருந்து, பின்னே இம்மண்ணில் வந்து பிறந்து, வளர்ந்து பட்டாடைகளை உடலில் அணிந்து கொண்டு, முத்திலும் பவளத்திலும் ஆன மணிகளை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு, ஓடி ஆடி விளையாடி முடித்தபின்பு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து ஓய்ந்த பின்பு உயிர் பிரிந்தபின் பிணமென்று பெயர் சூட்டிப் படுக்க வைத்து, அந்தப் பிணத்தைச் சுற்றி அமர்ந்து இனிச் சாகப்போகும் பிணங்கள் ஓசையிட்டு அழுவதும் ஏனோ ஐயனே!

    8. பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு, பொன்படைத்தோன்
    தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு, அத்தன்மையைப்போல்
    உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு உனைப்பணியும்
    என்னாற் பிரயோசனம் மேதுண்டு? காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி வாழ் பரமேச்வரனே! பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு, ஆனால் பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ? அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால் உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம், சொல்.

    9. வாளான் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாது சொன்ன
    சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்து
    நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
    ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே.

    சிவனடியாராக வந்து நீ கேட்டதற்காகச் சிறுத்தொண்டரைப் போல வாளால் தன் சொந்த மகவையே அரிந்து கறிசமைத்து உனக்கு ஊட்டும் வல்லமை சிறிதும் இல்லாதவன் நான்; ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை என்னை இனி தீண்டலாகாது’ என சூள் உரைத்த மாதின் சொல்லை ஏற்றுத் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியைத் தொடாமலே இளமைக் காலத்தைக் கடந்தாரே அதைப் போல தியாகம் செய்ய வல்லவன் அல்ல நான்; ஆறே நாட்கள் காளத்தியப்பனைக் காட்டில் கண்டு பக்திகொண்டு ஆறாம் நாள் அவர் கண்களில் உதிரம் கசியக் கண்டு தன் கண்ணை எடுத்து அவருக்கு அப்பிய அந்த நெஞ்சுரம் கொண்ட கண்ணப்பனைப் போல மனோதிடம் கொண்டவன் அல்லன்; அப்படிப்பட்ட நான் காளத்தி அப்பரே நான் உன்னை அடைக்கலமென்று அடைவதுதான் எப்படியோ?

    10. முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
    செப்போதிள முலையாருடன் சேரவும் சீவன் விடும்
    அப்போது கண்கலக்கப் படவும் அமைத்தாய் ஐயனே
    எப்போது காணவல்லேன் திருக்காளத்தி ஈசுரனே.

    திருக்காளத்தி ஈஸ்வரா! ஒவ்வொரு நாளும் மூன்று போழ்திலும் சோற்றைப் புசிக்கவும், பின்பு நன்கு உறங்கவும், மோகங்கொண்டு செம்புக் கிண்ணம் போன்ற இளம் தனங்களைக் கொண்ட மாதருடன் உறவாடவும், இவ்வுயிர் உடல்விட்டுப் போகுங்காலை மனம் வருந்தி கண்கலங்கி அழவும் வைத்தாயே ஐயனே! உன்னை எப்போதுதான் நான் காண்பேன்.

    (தலவரிசைப் பாடல்கள் இன்னும் உண்டு)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…84

    சக்தி சக்திதாசன்

     

    epickels immig1

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டிற்கு பல்வேறு காரணக்களினால் இடம் பெயர்கிறார்கள்.

    நானும் இத்தகிய ஒரு இடப்பெயற்சிக்கு உள்லானவன் எனும் காரணத்தினால் இப்பக்கத்தின் இன்னல்களை உணர்ந்தவன்.

    தாய், தந்தை , சுற்றம், சூழல் என நாம் வாழ்ந்த பாதுகாப்பான வலயத்தை விட்டு வெளியேறுவது என்பது சுலபமான செயல் அல்ல.

    புத்தம் ப்துச்சூழல், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறைகள் எவர்ரின் மத்தியில் வந்து விழும்போது தொட்டி மீன் ஆழிக்குள் விழுந்த கதை தான்.

    ஆனால் அதேசம்யம் என்ன காரணக்களுக்காக இவ்விடப்பெயர்வு நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே இவ்விடப் பெயர்விற்கு உள்ளானவர்களின் மனதின் உணர்வுகளும் அமைகிறது.

    உதாரணமாக ஈழத்து போர்ச்சூழலினால் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் மனநிலையில் அவர்கள் பாதுகாப்பான சூழலன்றி பாதுகாப்பின்மையை விட்டு வெளியேறியதால் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதலான உணர்வை வெளிப்படுத்தலாம்..

    ஆயினும் தாம் பிறந்து வழளர்ந்த தாய்மண்ணை விட்டு வெளியேறும் வேதனை மனதினை வாட்டுவதையும் சகிக்க முடியாது.

    அதேசமயம் தமது நாட்டில் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழியின்றி வசதி மிக்க நாடொன்றிற்கு இடம்பெயர்ந்து அதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் வழியைச் தேடிக் கொள்பவர்கள் மனதில் இவ்விடப்பெயர்ச்சி நிச்சயம் ஓரளவு மகிழ்ச்சியத் தோற்றுவிக்கத்தான் செய்யும்.

    ஆனால் அதேசமயம் இவ்விடப்பெயர்ச்சிக்குள்ளாகும் மக்களைத் தாங்கிக் கொள்ளும் அந்த மாற்ராந்தாய்மண்னைச் சார்ந்தவர்களை இவ்வெளிநாட்டு மக்களின் வருகை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆழ்ந்து கவனிக்கும் தேவையுள்ளது.

    நான் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த காலம் ஒரு மூன்று தாசாப்தங்களுக்கு மேலானது ஆனால் எனக்கு முன்னால் இங்கே வந்து கால்பதித்தவர்களில் ஏராளம்.

    நான் வந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமான இடைவெளியில் இங்கிலாந்து பலவிதமான சமூக மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது.

    இம்மாற்றங்க|ள் கொடுத்த தாக்கம் இந்நாட்டின் மக்களின் மனக்களில் வெளிநாட்டவரின் குடியேற்றங்களை நோக்கிய பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மையே !

    ஆனால் இவ்வாறு இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை நோக்கிக் கொண்டுள்ள கருத்து ஓரளவு இக்குடியேற்றங்களுக்கு எதிராகத் திரும்புவது சரியா ?

    இக்கேள்விக்கு விடை நாம் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளது.

    நான் வாழும் ஊரில் அடுத்தடுத்து பேரூந்துகளில் அடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் வந்து இறங்கும் போது எம் மனநிலை எப்படியிருக்கும் ?

    ஜயையோ ! இத்தனை பேர் எம்மூரில் வந்து தங்கி விட்டால் எனது வசதிகள் அனைத்தையும் இவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமே ! என்று எண்ணுவதுதான் அடிப்படை மனித இயல்பு. இதற்கு நானும் விதிவிலக்கானவல்ல.

    இப்படி ஒரே நாட்டிற்குள் இருந்தும் வேற்றூர் மக்களின் மீது நாம் வேறுபட்ட பார்வை கொண்டுள்ளோம் . பின் எப்படி வேறிரு நாட்டிலிருந்து தம் நாட்டிற்குள் இலட்சக் கணக்கில் வந்திறங்கும் வெளிநாட்டவர் மீது இந்நாட்டு மக்கள் அபிமானமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் ?

    சரி இது ஒருபுறமிருக்க இங்கே வந்து இறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இனிவரும் மக்களின் வருகைக்கு இந்நாட்டு மக்கள் ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறோமா?

    இல்லை என்பதே பொதுப்படையான வாதம்.

    அதற்காக அனைவருமே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்று கூற நான் விளையவில்லை.

    குறிப்பாக நாம் வாழும் சமுதாயத்துடன் எம்மை இணைத்துக் கொள்வதற்கான வழிமுறையில் மிகவும் அடிப்படையான மொழியையே நாம் கடைப்பிடிப்பதில்லை.

    இங்கு வந்திறங்கும் பல வேற்ரு நாட்டவர்கள் ஆங்கிலம் அறவே பேசத் தெரியாத்வர்களாக வந்திறங்குகிறார்கள் அதில் தவறொன்றுமில்லை ஆனால் இங்கு வாழத் தொடங்கியதும் இம்மொழியக் கர்ருக் கொள்வதர்கான முயற்சிகளில் இறங்குகிறார்களா?

    இல்லையானல் ஆங்கில மக்களுடன் சக நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிப்பழகி தமது ஆங்கில மொழித்திறனை விரிவாக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்களா ?

    பொதுவாக தமது சமூகத்தினிடையே தம்மைப் புதைத்துக் கொள்ளும் பலரைத்தான் காண்கிறோம்.

    இன்றைய காலத்தில் இங்கிலாந்தில் வேற்ரு நாட்டினர் பலர் வியாபார ஸ்தலங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள் தம்மை முடக்கி விஉவதனால் தாம் ஆங்கிலம் தெரியாமலும் பிழைப்பை நடத்தி விடக்கூடிய ஒரு நிலையில் தம்மைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

    இது அவர்களின் வாழ்வின் காலத்தை ஓட்டுவதர்கு ஏதுவாகலாம் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையின் வாழ்வைச் சிக்கலுக்குள் தள்ளத்தான் செய்கிறார்கள்.

    அதற்காக தமது சமூகத்தைச் சார்ந்த காலாச்சாரங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்பதல்ல எனது கருத்து. அக்காலாச்சார அடையாளங்களை தமது முகவரிகளாக வைத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது அவற்ரை தமது முன்னேற்றத்தைத் தடுக்கும் கால் விலங்காக மாற்றிக் கொள்ளக்கூடாது.

    இத்தகைய ஒரு முடக்கமே இந்நாட்டு மக்களின் அவர்கள் மீதான பார்வையில் ஒரு வித்தியாசத்தைத் தோற்றுவிக்கிறது.

    எரிக் பிக்கில்ஸ் எனும் சமூகங்களுக்கான மைச்சர் சமீபத்தில் ஒரு கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். .

    இங்கிலாந்தில் இயங்க்கும் பல்வேறு சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்ப்பொருள் அங்காடிகளுக்கு அரசாங்கம் நிதியளிப்பதன் மூலம் அந்நிலையங்களில் வேற்ரு நாட்டவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வதர்கான பயிற்றுனர்களின் சேவையை அந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அளிப்பது எனபதே இக்கொள்கை.

    இதன் பிரதிகூலங்கள் அனுகூலங்க:ளைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் எழுந்துள்ளன.

    இக்கொள்கை பயனுள்ளதா ? இல்லையா ? என்பதல்ல எனது கருத்து. ஒரு அடிப்படை உண்மையின் மீதான வாதத்தை சமூகத்தின் மத்த்கியில் அமைச்சரின் இந்த கொள்கைப்பிரகடனம் ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள விடயமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ‘ஏடிஎம் / ஃபோன் பேங்கிங்’ அபாயங்களும் தீர்வுகளும்

    அண்ணாகண்ணன்

    (‘ஏடிஎம் / போன் பேங்கிங்’ அபாயங்கள் என்ற தலைப்பில் 2009 ஜனவரி 30 தேதியிட்ட சென்னை டைஜஸ்ட் வார இதழில் இந்தக் கட்டுரை வெளியானது. அதன் திருத்திய, இற்றைப்படுத்திய வடிவம் இங்கே)

    பெங்களூருவில் 2013 நவம்பர் 19 அன்று கார்ப்பரேஷன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் 38 வயதுடைய ஜோதி என்ற பெண் தாக்கப்பட்டுள்ளார். ஜோதி உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், அதே மையத்தில் நுழைந்த மர்ம நபர், சுருள் கதவினை (ஷட்டரை) இறக்கி, அரிவாளால் அவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்தவற்றைப் பறித்துச் சென்றுள்ளார். அந்நேரத்தில் அங்கே காவலரும் இல்லை. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, ஏடிஎம் மையங்களில் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

    bangalore_atm_attack_650

    அதற்கு முன், வேறு சிலவற்றைக் கவனிக்கலாம்.

    இந்தியா முழுவதும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அது தொடர்பான புகார்களும் நீள்கின்றன. பண அட்டையாளரை மிரட்டிப் பணம் எடுத்துக் கொள்ளை; ஏடிஎம்மில் கள்ள நோட்டுகள்; பண அட்டைகள், எந்திரத்தில் மாட்டிக்கொள்ளுதல்; ஒரு முறை விவரங்களை உள்ளிட்டுப் பணம் வராததால் அடுத்த முறை மீண்டும் விவரங்களை உள்ளிட்டால் கணக்கில் இரு முறை பணம் கழிந்தது…. எனப் பல வகைப் புகார்கள். இவை அல்லாமல் வேறு பல சிக்கல்களும் உள்ளன.

    ஏடிஎம் வங்கிச் சேவையைத் தொடங்கியதிலிருந்தே வங்கிகள் ஒர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றன. உங்கள் தனி அடையாள எண்ணை (PIN – Personnel Identification No.) எவரிடமும் சொல்லக் கூடாது. எங்கும் எழுதி வைக்கக் கூடாது… எனப் பல அறிவுரைகள்; பத்திரிகைகளில் விளம்பரங்கள். ஆனால், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பு, அவர்களின் அறிவுரைகளுக்கு மாறாக உள்ளது.

    2008இல் ஐசிஐசிஐ வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றேன். இந்த வங்கியின் மையங்களில் தொலைபேசி வங்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. சுவரில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு தொலைபேசி நெடுக்குவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒரு சேவை தொடர்பாக அவர்களை அழைத்தேன். தானியங்கிக் கருவி என்னைச் சோதிக்கும் முகமாக, என் பண அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அடுத்து, என் தனி அடையாள எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அப்போது அந்த அறையில் உள்ள மூன்று பண எந்திரங்களிலும் பணம் எடுக்க ஆட்கள் நின்றிருந்தார்கள். காசோலை இடுகிறேன் என இன்னும் இருவரும் நின்றிருந்தார்கள். காவலர் ஒருவரும் வாயிலில் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே ஓர் இருபது பேருக்கும் மேலாக வரிசையாக நின்றிருந்தார்கள். கண்ணாடிக் கதவு. வெளியே நிற்பவரும் உள்ளே நடப்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியும்.

    சுவரில் எல்லோரும் பார்க்கும் படியாக அமைந்திருந்த தொலைபேசியில் என் தனி அடையாள எண்ணை உள்ளிட்டுள்ளேன். அந்தக் கணத்தில் உள்நின்றவர்களும் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்களும் என் தனி அடையாள எண்ணை எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதில் பார்த்திருக்க முடியும். அதன் பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

    தொலைபேசி வங்கிச் சேவையில் தானியங்கிக் கேள்விகளுக்கு இந்த 16 இலக்க எண்ணும் தனி அடையாள எண்ணும் போதுமானது. அடுத்து நான், வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரியிடம் பேச விரும்பினேன். அவர் தொடர்பில் வந்ததும் என்னைச் சோதிக்கும் முகமாக, என் பிறந்த நாள், என் விண்ணப்பத்தில் நான் அளித்த கமுக்கப் பதில்கள் சிலவற்றைக் கேட்டுப் பெற்றார். நான் கூறிய பதில்களை அந்நேரம் அங்கு இருந்த அனைவரும் கேட்டிருக்க முடியும். இதுவும் அபாயமானது.

    (இந்த ஆபத்து, ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. வீட்டில் நம் தனியறையில் இப்படி பேசலாம். அலுவலகத்திலோ, பொது தொலைபேசி மையங்களிலோ, இன்ன பிற பொது இடங்களிலோ தொலைபேசி வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் உண்டு. இந்தக் கோணத்தில் வங்கிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்).

    ஐசிஐசிஐ வங்கி, திடீரெனத் தன் ஏடிஎம் மையங்களில் உள்ள தொலைபேசி வசதியைத் திரும்பப் பெற்றுவிட்டது. இது குறித்து எந்தத் தகவலோ, விளக்கமோ இல்லை.

    ================================

    இது குறித்து ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு 28.9.2008 அன்று நான் எழுதிய மடல் இது:

    I want to know why u have disconnected all the telephone lines at ur ATMs?

    Why u didn’t informed about this to ur customers? Even ATM security person don’t know why it was disconnected?

    When u r going to give again?

    ================================

    இதற்கு 30.9.2008 அன்று Jagdish P., Customer Service Manager, ICICI Bank Limited அளித்த பதில் வருமாறு:

    Dear Mr. Kannan,

    We understand your concern.

    We are deeply concerned with the issues raised by you in your e-mail. We would like to assure you that all our customers are important to us and your feedback will aid us in introspection and improvements in our processes.

    Kindly note all the telephone lines are removed from ATM’s as the same is a business decision.

    Looking Forward to your co-operation in helping us to serve you better.

    ================================

    வேறு ஓர் ஆபத்தும் ஏடிஎம் மையங்களில் உள்ளது. அங்கு பணம் எடுக்க விரும்புவோர், வரிசையில் நிற்கிறார்கள். பெரும்பாலான மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண எந்திரங்கள் உள்ளன. வாயிற் காவலர், கண்ணாடி அறைக்குள் ஒரே ஒருவரை விடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நேரத்தில் ஒரு கண்ணாடி அறைக்குள் மூவர் பணம் எடுக்கிறார்கள். பண எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அமைப்பின்படி ஒருவர் தன் தனி அடையாள எண்ணை உள்ளிடுவதை அடுத்தவரால் எளிதில் பார்த்துவிட முடியும்; அவர் தன் உடலால் மறைத்துக்கொண்டாலும்கூட ஓரங்கள் மூலம் அதைக் காண முடியும். காசோலை இடுவதற்காக வருபவர், சர்வ சாதாரணமாக இதைப் பார்க்க முடியும்.

    நடப்பில் கண்ணாடி அறைக்குள் பணம் எடுப்பவரும் அவர் உடன் வந்தவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். கணவன் – மனைவி, அப்பா/அம்மா – மகன்/மகள், பெரியவர்களுக்கு உதவ இளையவர்கள், நண்பர்கள், காதலர்கள்… என இருவர் தாராளமாக அந்த அறைக்குள் செல்கிறார்கள். ஒருவர் பணம் எடுக்கையில் அடுத்தவர் என்ன கண்ணை மூடிக்கொண்டோ, வேறு பக்கம் பார்த்துக்கொண்டோவா இருக்கிறார்கள். ஆக, உள்ளே சென்ற இன்னொருவருக்கும் தனி அடையாள எண் தெரிந்துவிடும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரும் சற்று கூர்மையாகக் கவனித்தால் உள்ளே இருப்பவரின் விரலசைவுகளைக் கொண்டே அவரின் கமுக்க விவரங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லோரிடமும் செல்பேசி உள்ளது. பெரும்பாலான செல்பேசிகளில் புகைப்படக் கருவி உள்ளது. கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற விதி இருப்பினும் பல இடங்களில் இது மீறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசவே வேண்டாம். கையில் எடுத்துச் சென்றாலே போதும். உள்ளே செல்வதற்கு முன்பே செல்பேசியில் வீடியோவை ஆன் செய்துவிட்டுச் சென்று, உள்ளே சும்மா செல்பேசியைக் கையில் வைத்திருப்பது போலவோ, குழந்தையின் கையில் செல்பேசியைத் தந்தோ உள்ளே நடப்பதை, வாடிக்கையாளரின் பேச்சை, அவரின் விரலசைவுகளின் மூலமாக அவரின் கமுக்க எண்ணை எளிதில் பதிந்துவிட முடியும். கையில் செல்பேசி எடுத்துச் செல்வதைத் தடுத்தாலும் ஒருவர் தன் சட்டைப் பையில் செல்பேசியை வைத்தே இதைச் செய்ய முடியும்.

    இது சாதாரண செல்பேசியை மையப்படுத்திய அபாயம் மட்டுமே. Hidden camera எனப்படும் மறைவாக எடுத்துச் செல்லும் வீடியோ கருவிகளை ஓர் எழுதுகோல் வடிவத்திலோ, மூக்குக் கண்ணாடி வடிவத்திலோ எடுத்துச் சென்றும் பதிய முடியும். இந்த அளவுக்கு நம் குற்றவாளிகள் முன்னேறவில்லை என்றாலும் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏதும் பை, கைப்பை, பெட்டி… என எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் அதற்குள் மறைத்து எடுத்துச் சென்றும் இதைச் செய்ய முடியும்.

    கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரால் கூட, தன் அதிக சக்தி வாய்ந்த செல்பேசி வழியே உள்ளே நடப்பதைக் காட்சிகளாகப் பதிந்துவிட முடியும். ஏன், வரிசையில் கூட நிற்க வேண்டாம். தூரத்தில் நின்றபடியே கூட இதைச் செய்வது சாத்தியம்தான்.

    இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுடன் ஏடிஎம் மையங்கள் இருப்பது, எவ்வளவு பெரிய ஆபத்து!! இன்று போலி பண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், நம் தனி அடையாள எண்ணும் களவாடப்படுமானால் நாம் பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இழப்போம்.

    ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வரும் ஒருவரை மயக்கியோ, ஏமாற்றியோ, தாக்கியோ அவரின் பண அட்டையை ஒருவர் பறிக்கலாம். அவர் அறியாமலே அவரிடமிருந்து ஜேப்படி செய்துவிடவும் முடியுமே. அப்படி நடந்தால், ஏற்கெனவே கமுக்க எண்ணும் தெரிந்த நிலையில் பணத்தை எளிதில் கொள்ளையிட முடியுமே.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்கள், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாயிற் காவலர்களோ, பக்கத்தில் பணம் எடுத்துக்கொண்டிருக்கும் வேறு புதிய நபரோ தான் உதவுகிறார். அட்டையைச் செருகுவது, தனி அடையாள எண்ணை அழுத்துவது, எவ்வளவு பணம் தேவை என எண்களை அழுத்துவது… என ஒவ்வொரு கட்டத்தையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். சில நேரங்களில் பண அட்டையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் தங்கள் விவரத்தை அடுத்தவரிடம் இழக்கிறார்கள். ஏடிஎம் எந்திரத்தில் ஏதும் குறைபாடு எனில், மீண்டும் மீண்டும் தன் விவரங்களை இட்டுச் சோர்வடைபவர், அடுத்தவரின் உதவியை நாடுகிறார். அப்போது, சிக்கல் தீர்கிறதோ, இல்லையோ, நமது கமுக்கத் தகவல், அடுத்தவருக்குத் தெரிந்துவிடுகிறது. இதுவும் அபாயமே.

    வங்கிகள், உங்கள் தனி அடையாள எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள் என்று வேறு எச்சரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? எங்காவது எழுதி வைப்பதும் சிக்கலே.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கச் சில வழிமுறைகள் இங்கே-

    முதலாவதாக, பண எந்திரத்தின் முன் நிற்பவரின் விரலசைவுகளைப் பின்னாலும் அருகிலும் இருப்பவர் பார்க்க முடியாத வகையில் ஒரு கூடு அமைக்க வேண்டும். எண்களை உள்ளிட வேண்டிய பகுதிக்கு மட்டுமாவது ஒரு கூடு போன்ற மறைப்பு தேவை. ஒவ்வொருவரின் கையின் பருமனும் வெவ்வேறு அளவில் இருக்கலாம் என்பதால், அந்தக் கூடு நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். கைகள் மட்டும் உள்ளே செல்லும்படியாக, அதே நேரம் நாம் இடும் விவரங்களை நாம் மட்டுமே மேலிருந்து காணும் வகையில் ஒரு திறப்பும் இருக்க வேண்டும்.

    இது, தற்காலிமான தீர்வே. கமுக்க எண்ணை உள்ளிடுவது என்ற முறையையே மாற்றுவது அடுத்த தீர்வு. உலகின் பல பகுதிகளில் கைரேகைகளையே அவரின் கமுக்க அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டை விரலையோ, முழு உள்ளங்கையையோ இப்படிப் பயன்படுத்தும் விதத்தில் நம் ஏடிஎம் மையங்களை மாற்றியமைக்க வேண்டும். இது தொடர்பான ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, உடன் நடைமுறைக்குக் கொணர வேண்டும்.

    பெங்களூரு ஜோதி தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம்?

    ஏடிஎம் மையத்தின் சுருள் கதவைத் திறந்ததும் அது, மேலே சென்று அங்கே பூட்டிக்கொள்ள வேண்டும். மீண்டும் சாவி போட்டுத் திறந்தால் மட்டுமே இறக்கும் வண்ணம் திருத்தி அமைக்க வேண்டும். வங்கிகளின் பணப் பெட்டகங்களுக்கு இரட்டைச் சாவி உண்டு. வாடிக்கையாளரிடம் ஒன்றும் வங்கி மேலாளரிடம் ஒன்றும் இந்தச் சாவி இருக்கும். இதே போன்று, ஏடிஎம் மையங்களின் சுருள் கதவுகளுக்கும் காவலாளியிடம் ஒரு சாவியும் வங்கியிடம் இன்னொரு கடவு எண்ணும் இருக்க வேண்டும். கதவைத் திறகும் நேரத்திலும் மூடும் நேரத்திலும் காவலாளி விண்ணப்பித்தால், அவருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தகுந்த கடவு எண்ணை அனுப்பலாம். அந்தக் கடவு எண்ணை இட்டு, அதன் பிறகு சாவியையும் பயன்படுத்தினால் மட்டுமே கதவைத் திறக்க / மூட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். கதவுக்கு வெளியே ஒரு கண்காணிப்புத் தொலைக்காட்சியைப் பொருத்தி, கதவு திறக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் ஏடிஎம் மையத்தில் ஏதும் நடந்தால், தொலைவிலிருந்தே கதவை மூடிவிடுவதற்கும் ஒரு வாய்ப்பினை அமைக்க வேண்டும்.

    அத்துடன், ஏடிஎம் அறைக்குள் மயக்கமூட்டும் மருந்து ஒன்றை மறைவிடத்தில் வைக்க வேண்டும். சந்தேகத்துக்கு உரிய நிலையில், மயக்கும் புகையை / நறுமணத்தை அங்கே செலுத்தி, அறைக்குள் இருப்பவர்களை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டும். அத்தகைய சூழலில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் உடனடித் தகவல் அனுப்பி, அவசர உதவிகளைப் பெற வேண்டும்.

    ஏடிஎம் மையத்தின் வாசலிலும் உள்ளேயும் உள்ள கண்காணிப்புத் தொலைக்காட்சியை யாரும் சேதப்படுத்தினால், உடனடியாக ஒட்டுமொத்த மையமும் செயலிழந்திடும் வண்ணம் அமைக்க வேண்டும். அதாவது, கதவு தானாக மூடிக்கொள்ள வேண்டும். மின் இணைப்பு அறுந்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் உடனே தகவல் செல்ல வேண்டும்.

    மேலும், வாடிக்கையாளரின் பை, கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளானாலும் வெளியே வைக்கச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் செருப்புகளைப் பாதுகாப்பது போல் ஏடிஎம் மையங்களின் வெளியேயும் பொருட் பாதுகாப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும். அங்கு வைத்துவிட்டுச் செல்லுவோருக்குக் கட்டணம் விதிக்கலாம்.

    ஏடிஎம் மையங்களில் செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதிக்கக் கூடாது. விமான நிலையங்களில் மின்னணுப் பொருள்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனையிடுவது போல் இங்கும் சோதிக்க வேண்டும்.

    தொலைபேசி வங்கிச் சேவையை ஏடிஎம் மையங்களில் வழங்குவோர், அதற்கெனத் தனிக் கூண்டு வைப்பது நல்லது. பொது தொலைபேசி மையங்களில் (PCO) இருப்பது போல் தனி அறைகள் அமையலாம். அங்கும் அவரின் விரலசைவுகள் வெளியே தெரியாத வண்ணம் மறைப்பு இருக்க வேண்டும். மேலும் அவரின் குரலும் வெளியே கேட்கக் கூடாது.

    ஏடிஎம் மையங்களுக்கு வெளியிலும் பொதுவான செல்பேசி, தரை வழி தொலைபேசி ஆகியவற்றின் வழியே தொலைபேசி வழி வங்கிச் சேவை பெற முடிகிறது. இது குறித்தும், வங்கிகள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று தொலைபேசி வழியே பல்வகைக் கட்டணங்களைக் கட்டவும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வங்கிகள் வசதி அளித்து வருகின்றன. செல்பேசியை ரீசார்ஜ் செய்யவும் வசதி உண்டு. இந்நிலையில் அந்தத் தொலைபேசி உரியவரால்தான் இயக்கப்படுகிறது என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

    ஏடிஎம் மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராக, அந்நியோன்யம் கொண்டவராக இருந்தாலும் வாடிக்கையாளர்களும் சரி; காவலர்களும் சரி; இதில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

    பண அட்டை பயன்படுத்தும் புதியவர்களுக்காக, எல்லா ஏடிஎம்களிலும் ஒரு மாதிரிக்குப் பொம்மை எந்திரம் வைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கும் இதில் நேரடிப் பயிற்சி அளிக்கலாம். சரியாக விவரங்களை உள்ளிட்டால் ‘பாராட்டுகள்! நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்’ எனத் திரையில் வருமாறு செய்யலாம். தவறாக விவரங்களை உள்ளிட்டால் ‘மன்னியுங்கள். தவறான பயன்பாடு. மீண்டும் முயலுங்கள்’ எனத் திரையில் வரச் செய்யலாம். அந்த எந்திரத்தில் புதியவர் நேரடியாகச் செய்து பழகலாம். கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அவர்களையும் சேர்த்து நம் வங்கியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    இதை நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள், வங்கிகள் அனைத்தும் உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இதற்கென வல்லுநர் குழு அமைத்து மேலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் பணத்தை மட்டுமின்றி, அவரது உயிரையும் உடல்நலனையும் காப்பாற்றுவதிலும் வங்கிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    நன்றி: சென்னை டைஜஸ்ட்

    படத்திற்கு நன்றி :

    http://www.ndtv.com/article/cities/bangalore-woman-attacked-with-machete-inside-atm-suffers-severe-injuries-paralysis-448357

    Share
  • மௌவல் – “மல்லிகை மௌவலின் போதலர்த்தி” – மௌலி — மவுவா (MAHUA )

    மௌவல் மௌவல்
    நூ த லோ சு
    மயிலை

    ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களால் ஊடகம் வழி நன்கு அறியப்பட்ட முணுமுணுக்கப்பட்ட
    ஓர் திரைப்பட (சிவாஜி) பாடல் வரியில் பலரறிய வந்த நல்ல சங்கத்தமிழ் சொற்களில் ஒன்று
    மௌவல் மௌவல்

    கவிஞர் வைர முத்து என்னும் நல்ல கவிஞர் புனைந்த பாடல் அது என பலரும் அறிவர்

    ஆனால் இங்கு நாம் காட்ட நினைப்பது மௌவல் எனும் பூவினை குறிக்கும் சொல்லினைப் பற்றி
    ஐயம் எழுந்த மடல் ஒன்று நம் மடலாடலில் கண்டேன்

    வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
    கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே
    மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
    தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே

    என திருமங்கை மன்னன் தன் பெரிய திருமொழி (நா.தி.பி.- 5.3.1 / 1368 )
    பாசுரத்தில்பயன்கொண்ட இடத்து இதற்கு ஓர் பூ அல்லாத வேறு ஓர் பொருள் கொள்ள முடியுமா என்பதே அது

    மேலும் மடலிழையில் அறிஞர் பலர் இதற்கே மரமல்லிகை எனவும் பொருள் காட்டினர்

    இவ்வையங்களை களைய எழுந்ததே இக்கருத்துரை

    பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பேசும் கருத்து

    தென்றலானது (வீடு / பொது) மன்றிலிலும் மாமரப் பொழிலி நுழைந்து வந்த நிலை மல்லிகையின்
    மற்றும் மௌவல் மலர்களின் ‘போது’ களை விரியச் செய்ததால் அம் மணங்களை ஏந்தி வந்து நாறும்
    ‘வெள்ளறை’ எனும் தலத்தில் உறையும் நின்ற கோலம் காட்டும் திருமாலே
    போர்க்கருவியாம் மழுவினை ஏந்தி முன் ஒரு காலத்தில் ஏழேழ் தலைமுறையில் வந்த மன்னர்
    பலரை கொன்றொழித்த தேவனே உன்னுடைய கழலினைத் தொழும் வழியை காட்டமாட்டாயா

    ஈங்கு மௌவல் ஓர் மலர் என பொருள்கொள் நிலைதான் உள்ளது.

    ‘மல்லிகை’ யில் (யின்) எனும் வேற்றுமை தொக்கி நின்றுள்ளது

    மல்லிகையின் மௌவலின் (எனும் இரண் டின்) எனக்கொள்ளவேண்டும்

    தென்றல் – – – – – மல்லிகை மௌவல் எனும் இருவகை மலர்களின் போதுகளை அலர்த்தி
    தான் மண ம் நிறைத்துக் கொண்டு வீசியது எனக் கொளளல் வெண் டும்

    அரும்பு>>> போது >>> மலர் >>>> அலர் என்பது பொதுவாக
    ஓர் மலரின் பருவ வடிவ வளர்ச்சி என பலரும் அறிவர்

    காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும் இந் நோய் குறள் 1227
    அலர் என்பது மலர்ந்த நிலை கடந்து மேலும் சில நாள் வாடிவிடாமல் பூத் துக்கா ண் பது

    இங்கு மௌவல் என்பது மல்லிகையின் வெண்மை பருவம் வடிவம் என வேறு ஒர் பண்பு ஆகாது

    ஆகமுடியாது ஏனெனில் வெண்மை என பொருள் உள்ள ஓர் சொல் லுடன் யின் எனும்
    வேற்றுமை சேர அது போது எனும் சொல்லுடன் அமையாது

    ‘போது’ எனும் சொல் பின் உள்ளதால் வடிவமும் பருவமும் குறிக்கும் பண்பு முன் வரத் தேவையில்லை

    மௌவல் என்பது ஓர் மலர்தான் என்பதை
    கீழ் வரும் மேற் கோள் பாடல் அடிகள் ஐயம் ஏதும் இன்றி காட்டக் காண லாம்

    மேலும்
    மௌவல் ஓர் கொடி >>>>>>>>>>> தேவாரம் 1.101.3 பெரிய 12-1217 ; 12-2955 ; அகம் 23-12 ; நச்சி. உரைமேற்கோள் பாடல் ;

    மகளிர் தலை யில் அணியும் மலர் >>>>>>>>>> நா.தி.பி. 3.2.7 / 1164 ; சீவக சிந்தாமணி;

    நல்ல மண ம் வீசக்கூடியது >>>>>>>>>> நா.தி.பி. 9.1.3 / 1750 ; 9.10.2 / 1839 ; தேவா 1.14.7 ; 3.46.7; 3.59.1 ; 3.110.7 ; 3.119.5 ;
    கலி 14-3 ; கலி 27-4; கல்லாடம் 83-26 ;

    அஃதும் இரவில் பூத்து நாறும் பண்பினது >>>>>>> குறு 19

    வெண்மையான இதழ்களை உடையது >>>>>>>>>>> தேவா 1.136.3 ; அகம் 21-1 ;

    இதன் அரும்பு பல்லிற்கு உவமை >>>>>>>>>>>>> கலி 14-3 ; கலி 27-4 ;

    புதராக பல்வகை இனத்துடன் வளர்வது >>>>>>>>> தேவா 2.84.9

    வீட்டிலும் வளர்ப்பார் >>>>>>>> அகம் 21-1 ; கல்லாடம் 83-26 ; பெரிய 12.1217

    மரமல்லிகை அல்ல என்பது
    மேற்கண்டபடி
    ஓர் கொடியாவதாலும்
    புதராக முல்லை மல்லிகை என பலவகை இனத்து டன் படர்ந்து மிடைந்து வளர்வதாலும்
    பல்லிற்கு உவமை காட்டுவதாலும்

    மேலும்
    மௌவல் நீண்மலர் மேலுறைவானொடு
    பௌவ வண்ணனு மாய்ப் பணிவார்களே 5.97.13 அப்பரடிகளின் சித்தத் தொகை

    இதனில் நீண்மலர் (= நீள் மலர் நீண்ட காம்பினை உடைய து ) என்றது தாமரையை அதாவது பிரமன் அமர்ந்த மலர்

    எங்கனம் எனில்
    கடல் வண்ணனும் (பௌவ வண்ணன் = திருமால்) உடன்
    அடிமமுடி காணாத திரு விளையாடல் காட்டப்படுவதால்
    எனவே நீள் மலர் = நீண்ட காம்பினை உடைய மரமல்லி ஆகாது
    இங்கு மௌவல் எனும் சொல் எதுகை நோக்கி வெண்மைக்கு ஆகுபெயராக வந்தது

    அதான்று,
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் (குடமூக்கு தேவாரம் 3.59.1 )
    எனும் வரிகளில் காணும் மர எனும் சொல் மரவம் எனும் வேறு ஒரு மலரைக் குறி த்தது

    அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
    குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
    இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே

    இப்பாடலில் கோடல் மல்லிகை குரா முதலிய மலர்களைத்தான் பேசுகிறது காண்க

    ——————————————————————————

    மேற்கோள் வரிகள்

    மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து நா.தி.பி. 3.2.7 / 1164
    திருமங்கை பெரிய திருமொழி

    போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து நா.தி.பி. 9.1.3 / 1750
    திருமங்கை பெரிய திருமொழி

    மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து நா.தி.பி. 9.10.2 / 1839
    திருமங்கை பெரிய திருமொழி
    தேவாரம்
    மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட 1.14.7 கொடுங்குன்றம்

    கொல்லையின்முல்லை மல்லிகைமௌவல் கொடிபின்னி 1.101.3 கண்ணார்கோயில்

    தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் 1.136.3 தருமபுரம்

    புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை 2.84.9 நனிபள்ளி

    கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்எந்தை 3.46.7 கருகாவூர்

    மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் 3.59.1 குடமூக்கு

    நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி 3.110.7 வடகரை மாந்துறை

    வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்த 3.119.5 வீழிமிழலை

    விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி 3.123.5 கோணமாமலை

    மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 5.97.13

    துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் 12.240 பெரிய புராணம்

    நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் 12.1217

    மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்தி 12.2955

    சங்க நூல்கள்

    ஞாழன் மௌவல் நறுந்தண் கொகுடி குறிஞ்சி 81

    மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் அகம் 21-1-

    தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை அகம் 23-12

    மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்அளவு அகம் 117-1

    மணமௌவல் முகைஅன்ன மாவீழ்வார் நிரைவெண்பல் கலி 14-3

    மாதரார் முறுவல்போல் மணமௌவல் முகைஊழ்ப்ப கலி 27-4

    மல்லிகை மௌவல் மணம்கமழ் சண்பகம் பரிபாடல் 12

    மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் குறு 19

    மாக்குரல் நொச்சி மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ குறு. 115

    மெல்அவல் மருங்கின் மௌவலும் அரும்பின குறு. 122

    மலரில் மௌவல் நலம் வரக் காட்டி கயல் ஏர் உண்கண் குறு 316

    முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ கல்லாடம் 39-7

    மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய் முன்றிலும் கல்லாடம் 83-26

    பொறி வண்டு மூசிய மௌவல் முருகுயிர்ப்பத்-தேசிகப் 270 விக்கிரமசோழனுலா

    மாடுநின்ற கொன்றைஏறி மௌவல்பூத்த பாங்கெலாம் நச்சி. உரைமேற்கோள் பாடல்

    மௌவலம் குழலியை மன்னன் ஏயினான் சீவக சிந்தாமணி

    —————————-
    அதான்று
    மௌவல் >>>>>>>> மௌலி எனும் சொல்லுடன் பிணைத் த ஐயம் மும் கட்ட ப்பட்டது

    ஆனால்
    மௌவல் >>> மௌலி என்பன வேறுவேறு சொற்கள்

    மௌலி என்பது தலையில் அணியும் ஓர் அணிகலன் = முடி = கிரீடம்

    கீழ் காணும் பெரிய புராணப் பாடல் வரிகளைக் காண்க ஐயம் எதும் இன்றி மன்னர்களின் முடியைப் பே சுகின்றது

    ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி 3.126.2 (விடைவாய் தேவாரம் )

    சூடும் சடைமௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் 12.1015 பெரிய புராணம்

    சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டு 12.1022 பெரிய புராணம்

    பொன்னாரும் மணிமௌலிப் புரவலன்பால் அருளுடையார்12.1292 பெரிய புராணம்

    பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 12.3783 பெரிய புராணம்

    பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு 12.3793 பெரிய புராணம்

    கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு 199 குலோத்துங்கசோழனுலா
    ————————–

    நிற்க

    வாட இந்தியாவில் மவுவா (MAHUVA ) எனும் சொல்லால் விளிக்கப்படும் ஓர் மலர் உள்ளது

    அதுவோ தமிழில் இலுப்பை எனும் மரமாகும் இதன் மலர்களை இனிப்புச் சுவைகாகப் பயனகொள் வர்

    “ஆலை இல்லை ஊருக்கு இலுப்பைப்பூ சர்கரை ” எனும் முதுசொல்தான் அறிவோமே

    தலையில் அணியப் படாமல் வாணிப மல ராக க உள்ளமைக் காண்க இந்த ‘மவு வா’ பற்றி சில இணையச் சுட்டிகள்
    http://en.wikipedia.org/wiki/Madhuca_longifolia

    https://www.google.co.in/search?q=mahua+flower+in+english&espv=210&es_sm=93&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=bciLUpniK5GkiQejioHwAg&ved=0CE8QsAQ&biw=1920&bih=954

    Share
  • விபூதியின் மகிமை!…

    விசாலம்

    சூட்டும் டையும்மாக மிகவும் மிடுக்குடன் ஏரோப்பிளேனில் ஏறினார் கானடா நாட்டைச்சேர்ந்த பெரிய தொழிலதிபதி மிஸ்டர் பாட்டர்ஸன் .தன் தொழில் விஷயமாக இந்தியாவுக்கு பயணம் . இந்தியாவில் டாக்டர் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் அன்புடன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் இல்லத்திற்கு வருகை தந்தார் .அவரை மிக அன்புடன் தனது வரவேற்பு அறைக்கு டாக்டர் பாலகிருஷ்ணா அழைத்துப் போக மிஸ்டர் பாட்டர்ஸன் பிரமித்தபடியே தன் புருவத்தை மேலே தூக்கியபடி தன்னை மறந்து நின்றார். அந்த அறை முழுவதும் ஒரு விதமான தெய்வீக மணம் வீச ஏதோ ஒரு கோயிலுக்கு நுழைந்த மாதிரியான உணர்வு . விடே கோயில் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது உள்ளே ஒரு தனி அறையில் ஒரு அழகிய சிம்மாசனம் இருக்க அதன் மேல்சுவாமியின் அழகிய படம் வைக்கப்பட்டிருந்தது நான் சொல்லும் சுவாமி “பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா” அவர்கள் தான் . அவர் தன் இரு கைகளைத் தூக்கியபடி ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார் சுருண்ட முடியுடன் “புஸு புஸு என்ற தலையையும் பார்த்து கானடா அதிபர் வியந்து “இவர் யாரப்பா? என் மனதை அப்படியே அவர் பக்கம் இழுக்கிறார். அந்தப்படத்தைப்பார்த்துக் கொண்டே இருக்கும்படி தோன்றுகிறதே”, இவர் தான் பாபா புட்டப்பர்த்தியில் இருந்து கொண்டு பல நற்காரியங்களைச் செய்து வருகிறார்,அசாத்யமான காரியம் கூட அவரிடம் வர சாத்தியமாகி விடும்.அன்பின் மறு உருவம், சத்ய, தர்ம சாந்தி, பிரேமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர். பல கோடி மனிதர்களுக்கு வழிக்காட்டியாக இருந்து வருபவர். என்று ஆரம்பித்து அவரது பிறப்பு. அவரது தெய்வீக ஆற்றல். அவரது அன்பு என்று அவரைப்பற்றி மிக ஆர்வமாக கூறி முடித்தார். மிஸ்டர் பாட்டர்ஸன் தன்னை மறந்தார்.

    டாக்டர் பாலகிருஷ்ணா தேங்க் யூ. இந்த மகானின் ஞாபகமாக எனக்கு ஏதாவது கொடுக்கமுடியுமா?” என்னிடம் தற்சமயம் சிறிய படம் ஒன்றுமில்லை. ஆனால் அவரது விபூதியைத் தருகிறேன் ”
    வாட்? வாட் விபூட்டி? வாட் ஈஸ் தாட்? டாக்டரோ பாட்டர் சன்னுக்கு கொடுக்க தகுதியானது விபூதிதான் என்று நினைத்து விபூதி இருக்கும் சிறு பாக்கட்டை அவரிடம் அளித்தார் .அவரும் அதை மெள்ள திறந்து பார்த்தார்.
    வாட் டாக்டர் .? இது என்ன ஆஷ் ? சாம்பலை ஏன் தருகிறாய்? இந்தப்படத்தில் இருப்பவர் பெரிய மகான் என்று சொல்லிவிட்டு சாம்பலை அவர் ஞாபகமாக தருகிறாயே!”
    மை டியர் பிரண்ட்.இது வெறும் சாம்பல் இல்லை. விலை மதிக்க முடியாத தெய்வீக விபூதி .எந்த இடைஞ்சல் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றிவிடும் .முழு நம்பிக்கையுடன் இதை வாயில் போட்டுக்கொண்டாலும் ,நெற்றியில் தரித்து பிரார்த்தனை செய்தாலும் அந்த இடைஞ்சல் மறைந்து விடும் “அப்படியா ? இது அத்தனை உசத்தியா ?’என்றபடி தன் கோட்டு பாக்கட்டில் அதை நுழைத்துக்கொண்டார் . இந்தியாவில் வேலை முடித்துக்கொண்டு திரும்பவும் லண்டன் வழியாக நியூயார்க் போக தயாரானார். ஏர்போர்ட்டுக்கு வந்து பிளேனிலும் அமர்ந்தாகிவிட்டது. அவருக்கு கிடைத்த இடமோ பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் அமரும் நிலைமை .நிம்மதியாக சத்தமில்லாமல் சாய்ந்து படுக்கவும் முடியவில்லை.குழந்தைகள் போட்ட கும்மாளத்தில் அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. பெண்களாலும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. “எப்படாப்பா நல்ல சீட்டில் அமருவோம்” என்று எண்ணும் போது டாக்டர் பாலகிருஷ்ணா கொடுத்த விபூதி பாக்கட் ஞாபகம் வந்தது.அதன் மகிமையைப் பரீட்சித்து பார்க்க நல்ல சமயம் என்று நினைத்து தன் பாக்கட்டிலிருந்து அந்த வீபூதியை எடுத்து ஒரு சிட்டிகை தன் வாயில் போட்டுக்கொண்டார். பின் பிரார்த்தனையும் செய்தார் . “ஓ பாபா நியூயார்க் பயணமாவது எனக்கு நன்றாக அமைய வேண்டும்.வசதியான ஸீட் கிடைக்க வேண்டும். “ஓ சத்ய சாயி பாபா ஹெல்ப் மீ” லண்டனில் பிளேன் வந்து இறங்கியது. அப்போது ஒலிபெருக்கியில் “மிஸ்டர் பாட்டர்ஸன் பிளீஸ் கம் டு த் ஆபீஸ் அண்ட் மீட் அஸ் இமீடியட்லி ” என்ற குரல் கேட்டு வியப்படைந்து அவசர அவசரமாக அங்கு சென்றார். ஒரு பெண்மணி அவரிடம் “இந்தாருங்கள் உங்களுக்கு முதல் வகுப்பில் நியூயார்க் பயணத்திற்கு ஒரு இருக்கை.” என்றபடி ஒரு டிக்கட்டை நீட்டினாள். “தாங்க் யூ “என்றபடி அதிகபடியான தொகையை அடைக்க சில டாலரை நீட்டினார். அதற்கு அங்குள்ள அதிகாரி “நோ நோ நோ” இதற்கு தேவையான அதிக கட்டணம் உங்கள் பெயரில் கட்டப்பட்டு விட்டது என்றார். மிஸ்டர் பாட்டர்ஸன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். “பாபா விபூதிக்கு இத்தனை பவரா?பாபாவின் அன்புதான் என்ன! பாபாவின் கருணைதான் என்ன! பல மைல்களுக்கப்பால் இருந்தபடியே என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து என் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டார். கொஞ்சம் நம்பிக்கையுடன் வீபூதி வாயில் போட்டுக்கொண்ட பலன் இது, என்று நெஞ்சம் நெகிழ பலருக்கு இந்தச்சம்பவத்தை எடுத்துக்கூறினார்.

    “பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
    பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
    பரமார்த்த இஷ்டார்த்த மோட்ச பிரதாதம்
    பாபா விபூதிம் இதம் ஆஸ்ரயாமி”

    பாபா பஜன் முடிந்தவுடன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பின் விபூதி பிரசாதம் வழங்கப்படும். இந்த விபூதி புனிதமானது.வியாதியைப் போக்க வல்லது. பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். பக்தர்கள் அற்புதமான இதை தினமும் பயன்படுத்த வேண்டும்.

    Share
  • நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு

    ஒரு நூற்றாண்டுக் காலம், நம்முடன் வாழ்ந்து, தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வந்த கவிதாயினி பூரணி அவர்களின் மறைவுக்கு வல்லமை தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    “பூரணி”

    (தோற்றம் 17-10-1913 – மறைவு-17-11-2013)

    3

    கிருஷாங்கினி

    1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற, எழுத்தாளர் பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ்ப் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டுத் தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.

    ராமசாமி அய்யர் (1864இல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்தச் சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரிய விஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு’ என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல், இறைவனிடம் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துகளும் இதை ஒட்டியேதான் இருந்தன.

    1927இல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும் எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, எனப் பதிவு செய்துள்ளார். நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தன் மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதைப் பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக. நேர்ப் பேச்சும் உண்டு.

    ‘ஸ்பேரோ’ (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை’ நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை’ அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல், காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்.வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை’யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை, அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத் தொகுதி, காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90ஆவது வயதில் – 2003ஆம் ஆண்டு – “பூரணி கவிதைகள்” நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல், பரவலான கவனத்தையும் அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு’ மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறையப் பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும் என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.

    “பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலாறு), எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினால், மணிவாசகர் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதைத் தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும் பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ஆம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதிக் கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லாப் படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்’ இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரத ஜோதி’ இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

    அக்காலத் திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுகளாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தைக் கருப்பொருளாக்கினார். 1936-38களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை. எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாகச் செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதிக் கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புகளில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்தச் சொல்லைத் தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 4இல் தானும் கலந்துகொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.

    2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை’யிலும் பங்கு பெற்று, பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை’ இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

    நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை, நான் சொல்வது உண்மைதான்’ என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம். அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.

    2013 நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் 

    ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

    பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

    இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (http://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

    பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

    இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) – 14

    14. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) , மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மாப்பா முண்டியின் சிறப்புக்களை இத்தொடரின் சென்ற பதிவில் விளக்கினேன். இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய சிறப்புக்களையும் அறிவது அவசியம் என்பதால் உள்ளே சென்று ஏனைய காட்சிப் பொருட்களையும் காண்போமே.

    அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிப்பொருட்கள் 24 வெவ்வேறு அறைகளில், ஆண்டுகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு தொடக்கமாக இந்தக் காட்சிப்பொருட்களின் கண்காட்சி தொடங்குவதாக அமைந்திருக்கின்றது. முதல் அறையிலேயே அமெரிக்கா வந்த ஐரோப்பிய மாலுமிகள், உள்ளூரில் வாழும் குடிகளைப் பார்க்கும் வகையில் அமைந்த ஒரு காட்சியின் சித்திரம் உள்ளது. இது 18ம் நூற்றாண்டு சித்திரம். அக்காலகட்டத்தில் கடற்போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வாட்களும் இதே பகுதியில் உள்ளன. அதனை அடுத்து வருகின்ற அறைகளில் இதே போல ஸ்பெயின் அரசின் முயற்சியில் 15ம் நூற்றாண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பற்பல போர்கள் பற்றிய விளக்கங்கள் போர்கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தொகுப்புகள் இடம்பெறுகின்றன.

    navalm3

    ஸ்பெயின் கடந்த 600 ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு கடற்போர்களில் தான் கைப்பற்றிய தீவுகள் பல. ஆப்பிரிக்காவிற்கு வடக்குப் பகுதியில் இருக்கும் கெனரி தீவுகளான லா பல்மா, க்ரான் கனாரியா, லான்ஸ்ரோட்டெ, லா கொமேரா, தெனெரிஃபா, மயோர்க்கா, மெனோர்க்கா, இபீஸா போன்றவற்றின் குறிப்புக்களை உள்ளடக்கிய தகவல்கள் தனித்தனியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. போரை விவரிக்கும் ஓவியங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அப்போரின் தன்மையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. போர் என்றாலே உயிர்பலி, கொடூரமான தாக்குதல் என்பது ஒரு புறமிருக்க வெற்றி பெற்ற படைகள் தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பெருமையுடன் நிற்பதும் படைத்தலைவர் தன் வீரம் பொருந்திய முகத்துடன் கம்பீரமாக காட்சியளிப்பதும் போன்ற காட்சிகள் இந்த சித்திரங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே வேளை கடல் பயணம் எளிதானதல்ல என்பதை விளக்கும் சித்திரங்களும், கடலில் கப்பல்கள் தத்தளிக்கும் காட்சிகளும் கூட சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.

    அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)
    அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)

    ஸ்பெயின் கைப்பற்றிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் அடங்கும். பெர்டினண்ட் மெக்கேலன் 1521ம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் Homonhon Islandக்குள் பிரவேசித்து அங்கு ஸ்பெயின் நாட்டின் கொடியை நட்டு வைத்து இப்பகுதி பிலிப்பன்ஸுக்குச் சொந்தமானது என முதன் முதலில் பிரகடனப்படுத்தினார். படிப்படியாக உள்ளூர் குழுக்களின் ஆதரவை பெற்று பின்னர் முழு பிலிப்பினோ தீவுகளையும் ஸ்பெயின் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட நாடாக மாற்றி வெற்றி கண்டார். போர் உருவாகி பின்னர் படிப்படியாக பல உயிர் சேதங்களைச் சந்தித்து பின்னர் முழு தீவுகளும் ஸ்பெயின் ஆளுமைக்கு உள்ளானது. 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர் இங்கிலாந்து அரசின் காலணித்துவ ஆட்சிக்கு மாறியது பிலிப்பைன்ஸ். இந்த காலத்தில் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஸ்பேனிஷ் தாக்கத்தை இன்றும் நாம் காண்கின்றோம். அப்போது பரவிய கத்தோலிக்க மதம் இன்றளவும் பிலிப்பன்ஸின் 90% மக்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியோராக இருப்பதற்குக் காரணமாக உள்ளது. பலருக்குப் பெயர்கள் ஸ்பேனிஷ் மொழியிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, மைக்கல், ஹூவான், கார்லோஸ், ஹேஸூஸ், ராஃபாஏல், ஹோஸே என்பவை மிகப் பரவலாகக் காணப்படும் ஆண்களின் பெயர்கள். இவை ஸ்பேனிஷ் மொழி பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அருங்காட்சியகத்தின் மேலும் ஒரு மாபெரும் சிறப்பு என்னவென்றால் கடந்த 700 ஆண்டுகளில் கடலில் பயனித்த ஏறக்குறைய எல்லா ஸ்பேனிஷ் போர்த்துக்கீஸிய கப்பல்களின் மாடல்களும், ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சொந்தமான வரலாற்றில் இடம் பெறும் கப்பல்களின் மாடல்களும் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஒரு கப்பல் உருவாக்கப்படுவதற்கு முன்னர் பொதுவாக மாடல் கப்பலை உருவாக்குவது வழக்கமாம். இங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மாடல்களில் பெரும்பாலானவை அக்கப்பல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் மாடலாக தயாரிக்கப்பட்டவை. ஏறக்குறை 700லிருந்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களின் மாடல்கள் இங்கு நிறைந்திருப்பது அதிசயத்தைத் தருவதாகத் தான் அமைகின்றது.

    ஒரு கப்பலின் மாடல் (2013)
    ஒரு கப்பலின் மாடல் (2013)

    கப்பல்களின் மாடல்கள் மட்டுமன்று நீர்மூழ்கிக் கப்பல்களின் மாடல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. உதாரணமாக ஸ்பேனிஷ் விஞ்ஞானி Isaac Peral உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் மாடல் இந்த அருங்காட்சியகத்தில் தான் வீற்றிருக்கின்றது. 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாடல் இது. இதுவே முதன் முதல் அதி நவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.

    கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)
    கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)

    கடல் பயணங்க்ளின் போது பயன்படுத்தப்பட்ட போர் கருவிகள் அலமாரிகளில் ஆட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான வேல் போன்ற கூர் ஆயுதங்கள் ஒரு பக்கம். துப்பாக்கி, கேனன், என நவீன போர்க்கருவிகள் ஒரு பக்கம் என போரில் பயன்படுத்தப்பட்ட பல நூறு ஆயுதங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன. மிகச் சுவாரசியமாக 500 ஆண்டுகளின் இடைவெளியில் மாலுமிகள் உடுத்திய ஆடைகளும் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிக்கான அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி தனியாக ஒரு அறை, கப்பலுக்குள் வாசிப்பு அறை எப்படி இருக்குமோ அதையே பிரதிபலிப்பதுபோல உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள், சான்றிதழ்கள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள், ஆவணங்கள் என அருங்காட்சியகம் முழுதும் நூற்றுக்கணக்கான விலைமதிப்பு கூற முடியாத பல பொருட்களைத் தாங்கி இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது.

    கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)
    கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடன் நமக்கு ஏற்படும் வியப்பு ஏனைய அடுத்தடுத்த அறைகளுக்குச் செல்லும் போதும் குறைவதில்லை. ஸ்பெயின் வருபவர்கள், அதிலும் குறிப்பாக மட்ரிட் நகருக்கு வருபவர்கள் கட்டாயம் வந்து பார்த்துச் செல்ல வேண்டிய முக்கிய அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை.

    கடல்வழிப் பயணங்கள் பற்றி இந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம். அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகம் செல்வோமா?

    தொடரும்…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு! – 97

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்
    சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி

    கவுந்தியடிகள் கூறலானார்:
    “கோவலனே!
    நாம் செல்ல எண்ணியிருக்கும் வழியில்
    துனபங்கள் பல நேரக்கூடும்;
    அது பற்றிக் கேட்பாயாக!

    வெயிலைக்கூடப் பொறுக்காத
    மெல்லியல் கண்ணகி இவள்;
    இவளுடன் பூஞ்சோலை வழியில் செல்லலாம்..
    என்றாலோ..
    அங்கே நிலம் பெருக்கும்படி
    பெரியதாய் இருந்த வள்ளிக் கிழங்குகளைத்
    தோண்டி எடுத்த குழிகள் தென்படும்;
    அக்குழிகளை மூடுவதற்கென்று
    செண்பகத் தாதுகளைக் கொண்டு
    நிரப்பி வைத்திருப்பர்
    வழிப்போக்கர்கள் அறிந்திடாவண்ணம்.

     

    அதையறியாமல் நாம் அவற்றின்மீது
    கால்வைக்க நேர்ந்தால்
    குழிகளில் இடறி விழ நேரிடும்.
    உதிர்ந்த பூக்களால் மூடிய குழிகளைவிட்டு
    ஒதுங்கிச் சென்றாலோ
    தேனொழுகத் தொங்குகின்ற
    முதிர்ந்து பழுத்த பலாப்பழங்கள்
    தலையில் வந்து முட்டும்.

     

    மஞ்சள் செடியும் இஞ்சிச் செடியும்
    பின்னிப்பிணைந்து கிடக்கின்ற
    தோட்டத்துப் பாத்திகளில்
    பரந்துகிடக்கும் பலாச்சுளையின் கொட்டைகள்
    பரல்கற்கள் போல் காணப்படும்;
    நாம் நடக்கையில்
    அவை கால்களில் உறுத்தித் துன்பப்படவைக்கும்.”

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64- 65
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share