பட்டினத்தடிகளின் பாடல்கள் – 16ம் பகுதி
தஞ்சை வெ. கோபாலன்
இனி சில தலங்களில் பாடிய தனிப் பாடல்கள்:
1. திருச்செங்கோடு:
நெருப்பான மேனியர் செங்காட்டிலாத்தி நிழலருகே
இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை
கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன் செயலே.
செக்கச் செவேலென்று சிவந்த வானத்தைப் போன்ற திருமேனியை உடையவரும், அத்திமர நிழலில் வீற்றிருப்பவருமான பரமேஸ்வரனது கருணை உள்ளம் என்ன நினைக்கின்றதோ? அடியவனான என்னை மீண்டும் தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யப் பணிக்கின்றாரோ; அப்படியின்றி அந்த மகாவிஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியாத அத்தனின் திருப்பாதங்களை அளித்து முக்தி தருமோ யார் கண்டார். எல்லாம் அந்த சிவபெருமான் செயல்.
2. திருவொற்றியூர்.
ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன் யான்
செய்யும் திருவொற்றியூருடையீர் திருநீறும் இட்டுக்
கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.
திருவொற்றியூர் தலமேவும் சிவபெருமானே! நெஞ்சில் (‘ஐயும்’ என்பதில் ‘ஐ’ எனும் எழுத்துக்கு கபம் அதாவது bronchial congestion என்பார்கள்) சளி கபம் அடைத்துக் கொண்டு, விழிகள் மேல்புறமாய்ச் செருகிக் கொண்டு, உணர்வுகள் அடங்கிப் போய், இதுகாறும் ஓடியாடிக் கொண்டிருந்த இந்த பூதவுடலானது ஜீவன் இழந்து பிணமாகி இனி இது இல்லையெனும் நிலைமைக்கு வரும்போது இறைவா, நான் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன். அதனைக் கேட்டு நீயும் அங்ஙனே ஆகுக என வரமளித்திடுவாய் ஐயனே! எனக்கு நீ அருளும் வரம் என்னவென்றால், நான் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டு, இரு கரங்களாலும் உன்னைத் தொழுது கொண்டு உன் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதவும் அருள் புரிய வேண்டும் என்பதே.
3. சுடப்படுவார் அறியார் புரம் மூன்றையும் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்னொற்றியூரன் தெருப்பரப்பின்
நடப்பவர் பொற்பதம் நம் தலைமேல் பட நன்கு உருண்டு
கிடப்பது காண் மனமே விதி ஏட்டைக் கிழிப்பதுவே.
ஏ மனமே! நன்கு உணர்ந்து கொள்வாயாக. திரிபுரங்களைப் பெம்மான் சிவபெருமான் சுட்டெரிக்கும் தருணத்தில் சுடப்படுபவர்களான ஜீவன்கள் அறிந்து கொள்ளாத செய்தியொன்று உண்டு. வானுயர்ந்த நெடு மதில்கள் சூழ் எழில்வாய்ந்த திருவொற்றியூர் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பவனான தியாகராஜப் பெருமானுக்குரிய திருவீதிகளில் நடந்து செல்லும் மெய்யடியார்களின் திருவடிகள் நம் தலையில் படும்படி வீழ்ந்து கிடந்தால் மட்டுமே பிரம்ம தேவன் நமக்காக எழுதிய விதி எனும் ஏட்டைக் கிழித்தெறிய முடியும். இதனை அறிவீனர்கள் உணர்வதில்லையே.
4. திருவிடைமருதூர்.
காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவரோங்கி விண்ணோர்
நாடே இடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.
உள்ளத்தில் இறைவன் பால் உண்மையான அன்பு இல்லாதவர்கள் காட்டில் தனித்து இருந்தால்தான் என்ன? உணவை நீக்கி காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களாக இருந்தால்தான் என்ன? கந்தலாடை அணிந்து கொண்டு கையில் பிட்சாபாத்திரம் ஏந்திக் கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்தால் என்ன? இவற்றால் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் ஏதும் இல்லை. விண்ணோர் வாழும் தேவலோகமெனப் போற்றப்படும் திருவிடைமருதூர் ஈசர்பால் மெய்யன்பு பூண்டவர்கள் மேற்சொன்னவர்களைப் போல தவம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு உள்ளன்பு இல்லாமல் இருப்பதைக் காட்டிலும், இல்லறத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார் நிச்சயம் வீடுபேறு பெற்று மோட்சம் பெறுவர். (திருமூலரும் “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன், வேட நெறி நின்றார் வேடமெய் வேடமே” என்கிறார்.)
5. தாயும் பகை கொண்ட பெண்டீரும் பகை தன்னுடைய
சேயும் பகை உறவோரும் பகை இச்செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்
தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்திரமே.
இவ்வுலக வாழ்வை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்றபோதில், நமக்குரிய செல்வங்கள் எல்லாம் நம் கையைவிட்டுப் போய் வறியவனாக ஆனபோழ்தில், நமக்குப் பெற்ற தாயோ, மனைவி மக்கள் சுற்றமோ எவரும் உறவாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த ஊரும் உலகமும் நமக்குப் பகைதான். ஆகையால் என் நெஞ்சே திருவிடைமருதூரில் வதியும் பரமேசர் திருப்பாதங்களே நமக்கு அடைக்கலமே.
6. திருக்கழுக்குன்றம்:
காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த
நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழுமிடம்
நீடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே.
திருக்கழுக்குன்றத்தில் வானுயர நீண்ட மலையுச்சியில் அமர்ந்துள்ள எம்பிரானே! தனித்திருக்கும் அடியேனின் உடல் உயிரிழந்து வீழுகின்ற இடம் காடோ, மரத்தடியோ, கடற்கரையிலோ, வளம் கொழிக்கும் நாடோ, நகரமோ, நகரத்தின் நடுவிலோ, எல்லா நலன்களும் நிறைந்த வீடோ, வீட்டின் திண்ணையோ எதுவாகினும் அடியேனுக்கு நினது திருவடிகளே துணை.
7. திருக்காளத்தி:
பத்துப் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி
முத்தும் பவளமும் பூண்டு ஓடியாடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே.
தென்கயிலை எனப்பெயர் பெற்ற திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவனே! அன்னையின் கர்ப்பத்தில் பத்துமாதங்கள் சிறையிருந்து, பின்னே இம்மண்ணில் வந்து பிறந்து, வளர்ந்து பட்டாடைகளை உடலில் அணிந்து கொண்டு, முத்திலும் பவளத்திலும் ஆன மணிகளை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு, ஓடி ஆடி விளையாடி முடித்தபின்பு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து ஓய்ந்த பின்பு உயிர் பிரிந்தபின் பிணமென்று பெயர் சூட்டிப் படுக்க வைத்து, அந்தப் பிணத்தைச் சுற்றி அமர்ந்து இனிச் சாகப்போகும் பிணங்கள் ஓசையிட்டு அழுவதும் ஏனோ ஐயனே!
8. பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தார்க்குண்டு, பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு, அத்தன்மையைப்போல்
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு உனைப்பணியும்
என்னாற் பிரயோசனம் மேதுண்டு? காளத்தி ஈசுரனே.
திருக்காளத்தி வாழ் பரமேச்வரனே! பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு, ஆனால் பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ? அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால் உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம், சொல்.
9. வாளான் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லன், மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், தொண்டு செய்து
நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே.
சிவனடியாராக வந்து நீ கேட்டதற்காகச் சிறுத்தொண்டரைப் போல வாளால் தன் சொந்த மகவையே அரிந்து கறிசமைத்து உனக்கு ஊட்டும் வல்லமை சிறிதும் இல்லாதவன் நான்; ‘திருநீலகண்டத்தின் மீது ஆணை என்னை இனி தீண்டலாகாது’ என சூள் உரைத்த மாதின் சொல்லை ஏற்றுத் திருநீலகண்ட நாயனார் தன் மனைவியைத் தொடாமலே இளமைக் காலத்தைக் கடந்தாரே அதைப் போல தியாகம் செய்ய வல்லவன் அல்ல நான்; ஆறே நாட்கள் காளத்தியப்பனைக் காட்டில் கண்டு பக்திகொண்டு ஆறாம் நாள் அவர் கண்களில் உதிரம் கசியக் கண்டு தன் கண்ணை எடுத்து அவருக்கு அப்பிய அந்த நெஞ்சுரம் கொண்ட கண்ணப்பனைப் போல மனோதிடம் கொண்டவன் அல்லன்; அப்படிப்பட்ட நான் காளத்தி அப்பரே நான் உன்னை அடைக்கலமென்று அடைவதுதான் எப்படியோ?
10. முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போதிள முலையாருடன் சேரவும் சீவன் விடும்
அப்போது கண்கலக்கப் படவும் அமைத்தாய் ஐயனே
எப்போது காணவல்லேன் திருக்காளத்தி ஈசுரனே.
திருக்காளத்தி ஈஸ்வரா! ஒவ்வொரு நாளும் மூன்று போழ்திலும் சோற்றைப் புசிக்கவும், பின்பு நன்கு உறங்கவும், மோகங்கொண்டு செம்புக் கிண்ணம் போன்ற இளம் தனங்களைக் கொண்ட மாதருடன் உறவாடவும், இவ்வுயிர் உடல்விட்டுப் போகுங்காலை மனம் வருந்தி கண்கலங்கி அழவும் வைத்தாயே ஐயனே! உன்னை எப்போதுதான் நான் காண்பேன்.
(தலவரிசைப் பாடல்கள் இன்னும் உண்டு)