Category: Featured

Featured

  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 2

    புவனேஷ்வர் 

    பூரிசிரவஸ் வதம் – பகுதி 2 – பரம்பரைப்பகைவன்!

    வணக்கம், அன்பர்களே.

    சென்ற பதிவில், நாம் துரோணருக்கும் துச்சாதனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கண்டோம். பதினான்காம் நாள் யுத்தத்தில் சாத்யகியிடம் அடிபட்டு ஓடி வந்த துச்சாதனனின் நிலை கண்டு துரோணர், பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என்று அறிவுறுத்திய கட்டம் அது. இன்று, அதே பதினான்காம் நாள் யுத்தத்தில், அடுத்து சாத்யகி பண்ணின ஒரு முக்கியமான காரியத்தை பார்க்கலாம். அது தான் பூரிசிரவஸ் வதம்.

    பரம்பரை பகை, குடும்பப்பகை என்று எல்லாம் இன்றைக்கு சொல்கிறார்களே, அதெல்லாம் அன்றைக்கும் உண்டு. இன்றைக்கு இருப்பதை விட கொஞ்சம் தூக்கலாகவே அப்போதெல்லாம் உண்டு எனத்தான் தெரிகிறது. அப்படி ஒரு பரம்பரைப்பகை தான் சாத்யகி குடும்பத்துக்கும், பூரிசிரவஸ் குடும்பத்துக்கும்.

    முதலில் இது என்ன பகை என்று ஒரு முன் கதை சுருக்கம் பார்ப்போம்.

    கண்ணன், பாண்டவர்கள் எல்லாரும் பிறப்பதற்கு முன், கண்ணனின் தாயாரான தேவகி அம்மையாருக்கு சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது. அங்கே, யாதவர்களை சேர்ந்த சினி என்ற அரசன் வந்திருந்தான். அவன், அங்கிருந்த மற்ற ராஜாக்களை எல்லாம் போர் செய்து ஜெயித்து, தேவகியை வசுதேவருக்காக தனது தேரிலே ஏற்றிக்கொண்டு கிளம்பினான். இதை கண்ட மற்றொரு அரசனான சோமதத்தனுக்கு பொறுக்கவில்லை. ஆத்திரத்துடன் சினியை தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தான். சிறிது நேரம் மல்யுத்தம் நடந்தது. சோமதத்தன் தோற்றான். சினி, ஆத்திரத்தில் தனது வாளை உருவி உயர்த்தி, இடது கையால் சோமதத்தனின் தலை மயிரை பிடித்து இழுத்து, காலால் உதைத்து “பிழைத்துப்போ” என அவமானப்படுத்தி அனுப்பினான்.

    எல்லா அரசர்களுக்கும் முன்னால் சினியால் தான் அவமானப்படுத்தப்பட்டதை நினைந்து நினைந்து வெட்கி மாழ்கிய சோமதத்தன், மகாதேவரை குறித்து கடும் தவம் இயற்றினான். அவனது தவத்தால் மகிழ்ந்த மகாதேவரும் அவனுக்கு தரிசனம் தந்து, “உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என வரம் கேட்க சொன்னார். இவனும், தன்னை பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்திய சினியின் மகனை அதே போல பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்தக்கூடிய மகன் தனக்கு வேண்டும் என வரம் கேட்டாம். மகாதேவரும் “அங்ஙனமே ஆகுக” என வரம் தந்தருளி அந்தர்த்தானமானார்.

    சினியின் பேரன் சாத்யகி. சோமதத்தனின் மகன் பூரிசிரவஸ். பிள்ளைப்பருவத்தில் இருந்தே, இவர்களுக்குள் அந்த பரம்பரை பகை ஓதி ஓதி வளர்க்கப்பட்டது. எத்தனை தான் சிறப்புகள் இருப்பினும் கோபமும் க்ஷாத்ரமும் (பழிவாங்கும் பண்பு/வன்மம்) க்ஷத்ரியர்களுக்கு உண்டு. க்ஷத்ரியன் என்ற பெயரே அதில் இருந்து உண்டானதுதான். சரி.

    வாள் போரில் நிகரற்றவன் பூரிசிரவஸ். கத்திச்சண்டையில் பூரிசிரவசை யாரும் ஜெயிக்க முடியாது என்பது பிரசித்தம். முன்பு கூட ஒரு முறை சாத்யகியை கத்திச்சண்டைக்கு பூரிசிரவஸ் இழுத்த போது பீமசேனன் அவசர அவசரமாக வந்து சாத்யகியை விலக்கி தன் தேரில் அழைத்துப் போய் விட்டான். பூரிசிரவசின் வாள்வீரம் அவ்வளவு பிரசித்தம். அதே போல வில்வன்மையில் சாத்யகி அருச்சுனனை ஒத்தவன் என அனைவரும் சொல்லும் அளவுக்கு சாத்யகி விற்போரில் நிபுணன். அருச்சுனனின் சீடன். (அப்பொழுது கேட்கவா வேண்டும்?)

    சரி. துச்சாதனனை தோற்கடித்த பின், துச்சாதனன் துரோணரிடம் போனானா, சாத்யகி மற்ற வீரர்களை ஒரு கை பார்த்த வண்ணம், அருச்சுனனை நெருங்கினான்.

    இனிவியாசர்சொல்லுவதைப்பார்க்கலாம்!

    சாத்யகி, தூரத்தில் அருச்சுனனின் தேரை கண்டான். தன் உயிர் நண்பனும் ஆசாரியனுமான பல்குணனை கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாகம் மேலிட, எதிர்ப்பட்ட எல்லாரையும் துவம்சம் பண்ணிக்கொண்டு விஜயனுக்கு சகாயம் பண்ண போனான்.

    அப்போது திரிகர்த்தர்களின் விற்படை சாத்யகியை சூழ்ந்து கொண்டு தாக்கியது, தோள்தட்டும் ஓசையும், வாட்களும் ஈட்டிகளும் கதைகளும் நிறைந்த அந்த படையை தனி ஒருவனாக சாத்யகி விற்போரில் சிதறடித்தான். அருச்சுனனை கண்ட உற்சாகத்தால், அவன் வேகம் மேலும் கூடியது போல காணப்பட்டது. பகைவர்களும் அவன் வீரத்தை கண்டு அதிசயித்து வேடிக்கை பார்த்தனர். ஒரு கணம் மேற்கில் காணப்பட்ட சாத்யகி, அடுத்தகணம் கிழக்கிலும் பின் வடக்கிலும் பின் தெற்கிலுமாக தனது தேரிலே மிக்க வேகத்துடன் சஞ்சரித்து, நூறு வீரர்கள் ஒரே உருவில் போரிடுவதை போல போரிட்டான். திரிகர்த்தர்கள் படை கொஞ்ச நேரத்திலேயே ஓட ஆரம்பித்தது. இதைக்கண்டு பொறுக்காத கலிங்கர்கள் சாத்யகியை சூழ்ந்து கொண்டு, மதம் கொண்ட யானையை பாகர் கூட்டம் அங்குசத்தால் குத்துவது போல கணைகளால் துளைக்கப்பார்த்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு போரிட்டு, அவர்களை கடந்தான் சாத்யகி. கடலிலே கரை காணாமல் நீந்திக்களைத்த ஒருவன், தெங்கும் நுங்கும் தேன்கதலிகளும் நிறைந்த கரையை அருகில் கண்டால் களிப்பது போல களிப்புற்ற சாத்யகி சிம்மநாதம் செய்தான்.

    சாத்யகி வருவதைக்கண்ட வாசுதேவன், “பார்த்தனே, அதோ உன் வழியை பின்பற்றி வரும் சினியின் பேரனைப்பார்! எதிரிகளால் வெல்லப்படாதவனே, அவன் உனது சிஷ்யனும் நண்பனுமாவான். எதிர்த்து வந்த மாபெரும் வீரர்களை எல்லாம் துரும்பென மதித்து அந்த இளம் காளை உனக்காக வருகிறான்! எதிரிகளுக்கு பலத்த சேதம் உண்டாக்கி விட்டு, உனக்கு உயிரினும் பிரியமான நண்பன் சாத்யகி வருகிறான், அதோ பார்! துரோணரையும் போஜ ராஜனான க்ருதவர்மனையும் தனது பாணங்களால் நொறுக்கி விட்டு, இந்த சாத்யகி உன்னிடம் வருகிறான்! ஆயுதப்பயிற்சியில் குறையற்றவனும் தருமபுத்திரனுடைய நலனையே குறிக்கோளாக கொண்டவனுமான இந்த சாத்யகி, சிறந்த பல வீரர்களை கொன்று விட்டு உன்னிடம் வருவதைப்பார்! யுத்த அரங்கத்தில் ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்து விட்டு, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! துரோணரை தலைமையாக கொண்ட பல மகாரதர்களுடன் ஒரே தேரில் நின்று, வேறு துணையின்றி போரிட்டு ஜெயித்து, அதோ, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! தன் தோள்வலியால் கௌரவப்படையை துளைத்து, யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட சாத்யகி வருகிறான், அதோ பார்! கௌரவர்களிடையே தனக்கு ஈடான ஒரு வீரனும் இல்லாத சாத்யகி, எண்ணிறந்த வீரர்களை எமனுக்கு விருந்தாக்கி விட்டு உன்னை நாடி வருவதை காண்! பசுக்கூட்டங்களில் இருந்து ஒரு சிம்மம் வெளிப்படுவது போல கௌரவப்படைகளுக்குள் இருந்து வெளிப்படும் சாத்யகியைப்பார்! தாமரை போன்ற அழகிய முகங்களுடைய பல அரசர்களின் தலைகளை பூமியின் மேல் பரப்பி விட்டு உன்னிடம் வரும் சாத்யகியை பார்! துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் யுத்தத்தில் வென்று, ஜலாசந்தனை கொன்று விட்டு உன்னிடம் வரும் சாத்யகியைப்பார்! கௌரவர்களை துரும்பென மதித்து, ரத்த ஆற்றினை இன்று உண்டாக்கிய சாத்யகி, உன்னை நோக்கி களிப்புடன் வருவதைப்பார், அருச்சுனா!” என்று சொன்னான்.

    பார்த்தனோ, சாத்யகியைக்கண்டு மகிழ்ச்சி அடையாமல், பெருத்த அதிருப்தியே அடைந்தான். கண்ணனிடம் அவன், “திண்மை பொருந்திய அழகிய தோள்களை உடைய கண்ணா, சாத்யகியின் வருகை எனக்கு சிறிதும் திருப்தி அளிப்பதாக இல்லை. கேசவனே, தருமராஜரை தனியாக விட்டு விட்டு இவன் இங்கு வந்து விட்டானே, யுதிஷ்டிரரின் நலம் பற்றி எனக்கு கவலையாக உள்ளது. (அவரைப்பிடிக்க வேண்டும் என முனைப்புடன் உள்ள துரோணரின் சபதத்திலிருந்து அவரைக்காக்க சாத்யகியை நியமித்து விட்டு ஜயத்ரதனை முடிக்க நான் வந்தேன், இவனோ அவரை தனியாக விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய வருகிறானே) இவனை பிரிந்து அவர் அங்கே யுத்த களத்தில் உயிரோடு உள்ளாரா என சந்தேகமாக உள்ளது.

    இவன் அங்கு தருமரை பாதுகாத்துக்கொண்டல்லவோ இருந்திருக்க வேண்டும்? இவன் எதற்காக கேசவா, என்னைப்பின் தொடர்ந்து வருகிறான்? பாதுகாக்க ஆளின்றி தருமராஜர் துரோணர் வசம் அனாதையைப்போல விடப்பட்டு விட்டாரே!

    நானோ இன்னும் ஜயத்ரதனை கொன்று முடிக்கவில்லை. அதோ பார், பூரிசிரவஸ் சாத்யகியை போருக்கு அறைகூவி அழைக்கிறான்! நான் இப்போது ஜயத்ரதனை கொல்ல முனைவேனா இல்லை இந்த சாத்யகியை காப்பாற்ற முனைவேனா? சூரியன் வேறு அஸ்தமிக்கத் துவங்கி விட்டான்.

    சாத்யகியைப் பொறுத்த வரை, அவன் மகாவீரன் தான், ஆனாலும், என் உயிரை விடப்பிரியமான உண்மை நண்பனான அவன் எனக்காக நாள் முழுக்க போராடி மிகவும் களைத்துள்ளான்.  அவன் தேரில் உள்ள ஆயுதங்கள் குறைந்து உள்ளன, அவனது குதிரைகளும் சாரதிகளும் களைத்து உள்ளார்கள். பூரிசிரவசோ, நன்கு இளைப்பாறி, முழு பலத்துடனும் படைபலத்துடனும் உள்ளான். இந்த போரில் வெற்றி சாத்யகி பக்கம் இருக்குமா கேசவனே? எனக்கு சந்தேகமாக உள்ளது!

    கௌரவர் படை எனும் பெரும் சமுத்திரத்தினை அனாயாசமாக கடந்த எனது நண்பன், சினியின் பேரன் சாத்யகி, பூரிசிரவஸ் எனும்  ஒரு பசுவின் குளம்படிக்குட்டையில் மூழ்கி விடுவானோ என எனக்கு அச்சமாக உள்ளதே, ஜனார்த்தனா!

    குருகுலஸ்ரேஷ்டனும், ஆயுதங்களில் தேர்ந்தவனும் மகாத்மாவுமான பூரிசிரவசுடன் இப்போது செய்யப்போகும் போரில் சாத்யகி வெற்றியைத்தழுவுவானா?

    இவனை இங்கு எனக்காக அனுப்பியது தரும ராஜா யுதிஷ்டிரர் எடுத்த பிழையான முடிவு என நினைக்கிறேன், கண்ணா. த்ரோணரைப்பற்றிய எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், என் மீது கொண்ட அளவற்ற அன்பினால், இவனை எனக்கு சகாயமாக அனுப்பி இருக்கிறார் எனவே நினைக்கிறேன்.

    இறைச்சியையே விரும்பும் கழுகு வானத்தில் வட்டமிடுவது போல, யுதிஷ்டிரரையே பிடிக்க முனைந்து அங்கே துரோணர் முயற்சிக்கிறாரே! அரசர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற சந்தகம் எனக்குள் வந்துவிட்டது மாதவா!”, என்று அருச்சுனன், அதிருப்தியும் கவலையும் கலந்த தொனியில் வாசுதேவனிடம் கூறினான்.

    அதே சமயம், பரம்பரைப்பகையை நினைத்து மிக்க ஆத்திரத்துடன் பூரிசிரவஸ், களைத்து இருந்த சாத்யகியை நோக்கி போருக்கு அறைகூவி விரைந்தான்.

    அப்புறம் என்ன நடந்தது?

    அது அடுத்த பதிவில், அன்பர்களே.

    உபரித்தகவல்: பல்குணன் = அர்ஜுனன். அவன் பிறந்த உத்தர ஃபால்குணீ நக்ஷத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பெற்றான். இந்த நக்ஷத்திரத்தை தமிழில் உத்தரம் (கன்னி ராசி) என்கிறோம். இதை அவனே, உத்தர குமாரனிடம் விராடபர்வத்தில் கோஹரன சண்டையின் போது  சொல்கிறான். இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் மாசம் ஃபால்குணி மாசம். தமிழில் பங்குனி. பல்குணன் என்ற பெயர் அல்லாமல் அர்ஜுனனின் பிற பெயர்களாவன ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹணன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், சவ்யசாசி, தனஞ்சயன். குந்தியின் மைந்தனாதலால் கௌந்தேயன். பார்த்தன் என்னும் பெயரும் அதே அர்த்தம் தான். குந்தியின் இயற்பெயர் ப்ருதை. ஆக, அவள் மைந்தன் பார்த்தன். பாண்டு மைந்தன் ஆதலால் பாண்டவன். இவை இரண்டும் பாண்டவர் ஐவருக்கும் பொதுவான பெயர்கள். பாண்டவன் என்றால் ஐவர் நினைவும் வரினும் பார்த்தன் என்றால் அர்ஜுனன் நினைவு தான் வரும். இதிலிருந்து, கீர்த்தியும் புகழும் வாய்ந்த மைந்தன் தந்தையின் புகழைவிட, குறிப்பாக தனது தாயின் புகழை பெருக்குவான் என்பது தெள்ளென விளங்குகிறது. தாய்மை வாழ்க.

    (தொடரும்)

    Share
  • எங்கே போகிறது என் தேசம்?

    சூரியா

    எல்லையில் நமது வீரர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள்..! மீன் பிடிக்கப் போனவனை ஒரு நாட்டவன் பிடித்துச் செல்கிறான்..! இந்தியப் பொருளாதாரம் சரிகிறது..! நமது அரசிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை. இப்படியே போனால் என்னவாகும் என் தேசத்தின் நிலை.

    சில மாதம் முன்பு நம் வீரர்கள் இருவரின் தலையை வெட்டிச் சென்றனர். அதற்கு கண்டனம் தெரிவித்தார் நமது பிரதம மந்திரி. இப்போது ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர் இப்போதும் அதே கண்டனம். பாகிஸ்தானோ வருத்தம் தெரிவிக்கிறது. நமது வெளிவுறவுத் துறை அமைச்சரோ ஒரு படி மேலே போய் நம்மவர்களைச் சுட்டுக் கொன்றது பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் என்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் அவர் நமது நாட்டின் அமைச்சரா இல்லை பாகிஸ்தானுக்கா?.

    இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அதை ஏற்க மறுத்த ஒரு குடும்பம் ,இது வேண்டாம் அவர்களுக்குப் பதிலடி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். சாமானியனுக்கு வரும் கோபம் ஏன் பதவியில் இருப்பவர்களுக்கு வரவில்லை.

    எப்போதும் இராணுவத்திற்குத்தான் பட்ஜட்டில் அதிகப் பணம் ஒதுக்கப்படுகிறது எதற்கு அது. இத்தாலியில் ஹெலிஹாப்டர் வாங்குவதற்கு மட்டும் தான் அதைப் பயன் படுத்துவார்களோ என்னவோ?

    அடுத்ததாக சிங்கள அமைச்சர் பொது மேடையில் நாங்கள் பிடித்து சென்ற மீனவர்களுக்கு எங்கள் நாட்டு சட்டதிட்டத்தின் படி தான் தண்டணை தருவோம் என்கிறார். கட்சத்தீவைத் தர முடியாது என்கிறார். எல்லாம் கேட்டு விட்டு அவரிடம் பேச்சு வார்த்தையும் நடத்துகிறார் மன்மோகன் சிங். உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படி கிடையாது கடலில் என்ன கோடு போட்டா எல்லை வகுக்க முடியும்? சீக்கியர்களின் தலைமுடிக்காக ஃபிரான்ஸ் சென்ற மன்மோகன் சிங் தமிழனின் உயிருக்காக ஒரு முறைகூட வாய்திறந்து பேசவில்லையே. இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அமெரிக்க அதிபர் ஒபாமா , ரஷ்யா அதிபரின் சந்திப்பை தவிர்த்தார் காரணம் அவர்களது தகவல்களைப் பகிரங்கப்படுத்திய ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக. எல்லா விசயத்திலும் அமெரிக்காவைப் பின்பற்றும் காங்கிரஸ் அரசு ஏன் இதே போல் சிங்கள அமைச்சரைத் தவிர்க்கவில்லை?. அங்கே வெறும் தகவலுக்கே அப்படி நடந்து கொள்கிறார்கள் இங்கே உயிரே போகிறது கவனி்ப்பார் இல்லை.

    கடைசியாக நம்ம பொருளாதாரம், ஏன் இந்த நிலை டாலரை சார்ந்திருக்க முக்கிய காரணம் திரவ தங்கமான பெட்ரோல் தான் , இது போக நாம் ஒவ்வொருவரும் இதற்கு காரணம் தான். காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை இந்திய தயாரிப்புகள் இருக்கும் என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். ஒன்றோ இரண்டோ தான் இருக்கும். (நான் இப்போது தட்டச்சு செய்யும் மடிக்கணிணி கூட இந்திய தயாரிப்பு கிடையாது) இப்படி நாம் பயன் படுத்துவதிலும், உண்பதிலும் (Lays,KFC..),குடிப்பதிலும் (Pepsi, Coca cola..etc) இந்தியன் அல்லாத யாரோ இலாபம் அடைகிறார்கள். இதற்கு எல்லாரும் தான் காரணம். எல்லாரும் மாற வேண்டும். உடனே எப்படி மாற்றம் நிகழும் என்று நீங்கள் கேட்கலாம், எல்லாரும் நினைத்தால் முடியும் இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் முடிந்த வரை அன்னிய பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்போம் என்று.

    முன்பு மாவோ சீனாவை மறு கட்டமைப்பு செய்தது போல் இப்போது இந்தியாவை மாற்றுவோம்.

    Share
  • நம்பிக்கை….. அதானே எல்லாம்!

    சங்கர் ராமன்

    அசலாக இருங்கள்
    உங்களை யாரோடும்
    ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்…
    உங்கள் படைப்பின் நோக்கம்
    வேறாக இருக்கும்

    வித்தியாசமான மனிதர்களால் நிரம்பியது இந்த உலகம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும். “11 முட்டாள்கள் விளையாடுவத “ 11 ஆயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து ரசிக்கும் ஒரு சோம்பேறியான விளையாட்டு” என்று இன்று உலகமே கொண்டாடி வரும் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி விமர்சனம் செய்த ஒருவர்தான் பெர்னாட்ஷா. அவர் ஒரு தத்துவமேதை என்றே சொல்லலாம். சில தத்துவார்த்தமான பதில்களை அவரை விட வேறு யாரும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. அவரின் விமர்சனத்திற்காக பலரும் காத்துக்கிடந்த காலம் அது… அவரையே பலரும் விமர்சித்த காலமும் அதுதான். பெர்னாட்ஷாவிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்ததாகக் கூறுவர். நாமெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி எங்காவது வெளியிடங்களுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்கிறோம் என்றால் என்ன செய்வோம்?… வீட்டில் உள்ள விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு சன்னல்களைப் பூட்டி விட்டு உள்ளே இருக்கும் அத்தனை கதவுகளையும் பூட்டி விடுவோம். முடிந்தால் சரியாக பூட்டியிருக்கறதா ? என்ற சந்தேகத்தால் அந்த பூட்டை இழுத்தும் பார்த்து விடுவோம். பெர்னாடஷாவிடம் இருந்த வித்தியாசமான பழக்கம் இதுதான். அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது நாம் செய்வது போல எதையும் செய்யமாட்டாராம். மாறாக அனைத்து சன்னல் கதவுகளையும் திறந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவாராம். அவர் வீட்டிற்குள் இருந்தால் அத்தனை கதவுகளையும் உட்பக்கமாகப் பூட்டு போட்டு விட்டு யாராவது வந்து கதைவைத் தடடினால் மட்டுமே திறப்பாராம். வித்தியாசமான பழக்கம்தானே இது. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவிடம், “ஐயா நீங்கள் எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பூட்டாமலும் வீட்டுக்குள் இருக்கும் போது உள்ளுக்குள்ளே பூட்டிவிடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டவுடன் “நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஏன் வீட்டைப் பூட்டுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செய்தியாளரோ பூட்டவில்லை எனில் வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை யாராவது திருடிச் சென்று விடுவார்கள்” என்றார். பெர்னாட்ஷாவோ சிரித்துக் கொண்டே என்னை விட மதிப்புமிக்க பொருள் உயர்ந்த பொருள் என் வீட்டில் ஏதுமில்லை. அதனால்தான் நான் வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டுவதில்லை, என்னை திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே நான் இருக்கும் போது வீட்டை உள்ளே பூட்டி விடுகிறேன்” என்றார். திகைத்து நின்றனர் செய்தியாளர்கள். திகைத்தது செய்தியாளர்கள் மட்டுமல்ல நாமும் தானே…

    உங்களைவிட மதிப்புவாய்ந்தவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தவரை காப்பியடித்து அரைநிமிடம் கூட நம்மால் வாழ்ந்துவிட முடியாது. மாற்றங்களை உங்களிடமிருந்து தொடங்குங்கள்.

    உங்களைத் தவிர
    வேறு யாராலும்
    உங்களைப் போல வாழ்ந்திட முடியாது
    என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளைப் பாருங்கள்… எவ்வளவு மகிழ்ச்சியாக வளர்கிறது. அந்த குழந்தைகளுக்கும் பல்வேறு சாயங்களைப் பூசி அவர்களின் வண்ணங்களை மாற்றியது நாம்தான். அவர்களிடம் நாம் செய்ய ஆசைப்பட்டு இயலாமல் போனவற்றையெல்லாம் நம் குழந்தைகள் மீது திணித்து நம் நகலாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களின் அசல் தன்மையினை அழித்து விடுகிறோம்.

    உங்கள் குழந்தைகள்
    உங்களுக்காக வந்தவர்களில்லை
    உங்கள் வழியாக வந்தவர்கள்
    என்ற அற்புதமான வரிகளைச் சொன்னவரை மறந்து விட்டோம்… யார் சொன்னால் என்ன?.. நல்ல வரிகள்தானே… நாம் ஆசைப்பட்டதைத்தான் நம் குழந்தைகள்தான் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை பாரதி ஏற்றியிருந்தால் இன்று அவனது கவிதைகள் உலகப் புகழ் பெற்றிருக்காது. எங்கோ ஓர் மூலையில் தந்தை சொல்படி பொறியாளர் வேலை செய்திருப்பான். ரைட் சகோதரர்களோ சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டியே தனது காலத்தை கடத்தியிருப்பார்கள். பறக்கும் விமானம் அவர்களுக்கு சாத்தியமில்லாமலே போயிருக்கும்.

    “சமத்துக்கண்ணா.. இந்தா லட்டு சாப்பிடு… வெளியே கொண்டு போகாதே… இங்கேயே சாப்பிட்டுட்டு அப்புறமா விளையாடப் போகணும்..”. இந்த வசனத்தைக் கேட்டிருக்கிறீர்களா?.. நாம் எல்லோரும் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.. இனியும் கேட்கப்போகிறோம்… ஏனெனில் இது தொடரும் பாரம்பாரியம்தானே… என்ன கொடுக்கும் திண்பண்டத்தில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்… முறுக்கு, அதிரசம் அல்லது நவீன உலக பீட்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால் வார்த்தைகள் மாறுவதில்லை.

    இந்த வார்த்தைகள் 130 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கத்தாவில் ஒரு வீட்டிலும் ஒலித்தது. நரேந்திரா.. நீ சொல்லும் எதையும் கேட்கவே மாட்டாயா? நீ கொண்டு போகும் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கே கொடுத்து விட்டால் உனக்காக நீ எதை வைத்துக்கொள்ளப் போகிறாய்” என்று நரேந்திரனின் தாயார் சத்தமிட நரேந்திரனோ எனக்காக இந்த உலகமே இருக்கிறது” என்றானாம். அடுத்தவருக்காக அதிகமாக உதவி செய்கிறான் என்பதால் அவருடைய பெற்றோர் அவரை ஒருநாள் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். நரேந்திரன் அசராமல் சன்னல் வழியாக ஆடைகளை வீசி ஏழைகளுக்கு எறிந்தான். அந்த நரேந்திரன்தான் பின்னாளில் விஸ்வரூபம் எடுத்த விவேகானந்தர். சிறு வயதிலிருந்த அவரது குணமே அவரின் அடையாளமாக மாறியது. அவரது குருவான இராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வாழ்ந்தவர் விவேகானந்தர். இராம கிருஷ்ணரின் நகலாக வாழவில்லை. இதனாலே இன்று விவேகானந்தரை உலகம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். இராமகிருஷ்ணரின் ஒரே சீடர் விவேகானந்தர் அல்ல.. அவருக்குப் பின்னால் வந்த சீடர்கள் யாரும் ஏன் விவேகானந்தர் போல ஜொலிக்கவில்லை. அவர்கள் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுதிதிக் கொள்ளவில்லை. இன்னொரு இராமகிருஷ்ணராக முயற்சி செய்தார்கள்… விளைவு.. அவர்களால் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    உலகத்தில் எந்த ஜீவராசிகளும் மற்ற ஜீவராசிகள் போல காப்பியடித்து வாழ முயற்சிப்பதில்லை. மனிதனைத்தவிர… “உங்க வீட்ல கரண்ட் இருக்கா” நமது வீட்டில் மின்சாரம் தடைபட்டவுடன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து நாம் கேட்கும் கேள்வி. அவர்கள் வீட்டிலும் மின்சாரம் இலலையென்றால்தான் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி. தொலைக்காட்சி பெட்டிகள் பிரபலமாகாத காலத்திலேயே பக்கத்து வீட்டில் டி.வி. இருந்தால் நமது வீட்டில் ஆண்டணாவை மாட்டி அழகு பார்த்தவர்கள் நாம்… அந்த பழக்கம்தான் இன்று வளர்ந்து கணினியாகவோ செல்பேசிகளாகவோ வளர்ந்து நிற்கிறது எனலாம். உங்கள் மனதிற்குள் அடிக்கடி சொல்லி வாருங்கள். உலகின் மிகச்சிறந்த மனிதர் நீங்கள்தான் என்று…

    சாதனையாளர்களும் சிந்தனையாளர்களும் சொல்லிச்சென்ற வாசகம் ஒன்று உள்ளது
    “யாரையும் பின்பற்றி வாழலாம்
    எவரையும் காப்பியடிக்காதீர்கள்”

    தொடரும்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Pasupathy_1தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.

    உரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பதை இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.

    இத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக

    ‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது! அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்! ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!

    பேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.

    இவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    கடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.

    பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
    உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
    மற்றவர் நலனதுக் கெடாது – யாதும்
    அற்றவர் நிலை யிலாதுச் செய்
    கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

    Share
  • வாக்குமூலம்பற்றிய என் எழுத்துமூலம்

             

                     பிச்சினிக்காடு இளங்கோ

     

     அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய ‘சமஸ்காரா‘ என்ற புதினம், தமயந்தி எழுதிய ‘வாக்குமூலம்‘ என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது.

                          தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன்.

     பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ  ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான்

    அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன்.

                         சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம்.

     அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

                        கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.

                          ஆண்களின் சுயநலம் இழக்காத போலி கட்டமைப்பால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் உணர்ந்த உண்மை. அரிதாரம் பூசாமல் கடைவிரித்து ஏமாற்றத்தைத்தருவது இன்றைய ஆண்போலிகளின் ஏதார்த்தமாக நான் பார்க்கிறேன். அப்படியான சூழலில்

    தமயந்தியின் பெருமுச்சு அக்னியைச்சுமந்திருக்கிறது அல்லது அடைகாக்கிறது என்பதில் அய்யமில்லை. எந்தக்கதையை எடுத்துக்கொண்டாலும் அங்கங்கே கவிதையின் கண்ணடிப்புகள், தீர்க்கமான சொல்வெட்டுகள் பளீச்சிடுவதைப் பார்க்கமுடிகிறது.

    எடுத்துக்காட்டுக்கு இதோ….

     

    உன்

    ஒற்றை ஸ்பரிசம்

    இன்னமும் ஈரத்தோடு

    மனதின் மூலையில்

    ஒட்டியிருக்கிறது

     

     

    கண்சிமிட்டும்

    பறவைகளின் பயணம்

    காற்றின் அலைக்கழிப்பால்

    ரத்தாகும் தருணங்கள்

    காயமானவை

     

    விலகி நிற்கும்

    உறவுகளைத்

    தனிமைப்பிரதேசத்தில்

    கைசுட்ட நெருப்பாய்

    ஞாபகப்படுத்துகிறது

      

    சந்தர்ப்பங்களின் வலையில்

    எல்லோரும் சரிவதுண்டு

    அப்படித்தான்

    நானும் அவளும்

     

    வெளிச்சம்

    ஒரு பறவையைபோல்

    பறந்து

    அறையெங்கும் பரவிற்று

     

    வெயில்மெல்ல

    யானைத் துதிக்கையால்

    ஜன்னலுக்குள்

    எட்டிப்பார்த்தபடி இருந்தது

     

    ஜன்னல் வழியாக

    பளிச்சென்று வெயிலாகும் வானம்

    என்னை வெறிக்கிறது

     

    சின்னவயதில்

    மழைக்காட்டி எனக்குச்

    சோறூட்டின தருணங்கள்

    என் ஞாபகத்தில்

    அச்சிடப்பட்டிருக்கின்றன

     

    சுயலாபங்களுக்காக

    கைகளைவிட்டுச்செல்லும்

    யாருக்காகவும் வருத்தப்படக்கூடாது

     

    பயத்திலேயே

    ஆண்பெண் உறவு

    நிலவுகிறது

     

     

    மழைநாளில்

    எங்கள் வீட்டுவாசல்

    விரிக்கும் குடைகள்

    எனக்காக அழும்

     

    இதை ஒரு கவிதையென்று நான் சொல்லவேண்டுமா என்ன?

    சமுகத்தைப்புரட்டிப்போடும் ஆவேசம் தமயந்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாக ” ஆண்களின் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய் இந்தக்கட்டமைப்பு மனிதப்பண்புகளின்மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.”  என்ற வாக்குமூலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    நித்தியானந்தாவைவைத்து ஒரு கருத்தையும் இப்படி ” நாம் மறைக்கப்பட்டவற்றையே நிஜமென நம்புகிறோம்.நிர்வாணத்தை மறுக்கும்

    மனநிலை இருக்கும்வரை இதுபோன்றபோலிகளே உண்மையாகக்கருதப்படுவார்கள்” என்று பதிவுசெய்கிறார்.

     

                       எல்லா கதைகளையும் எடுத்துக்கொள்ளாமல் நூலின் தலைப்பாக இருக்கிற ‘வாக்குமூலம்‘ கதையைமட்டும் என் சொற்களால் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன். தொகுப்பில் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாக்குமூலம்தான். பொதுவாக எதையுமே வாக்குமூலமாகத்தானே அறிகிறோம்.. தமயந்தியின் வாக்குமூலம் நேர்மையானது; தூய்மையானது;

    தாய்மையானது; சோகமானது. சுதந்தரத்தோடு வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால் சுதந்திரம் கைகூடுகிறதோ இல்லையோ சோகம் எஞ்சிவிடுகிறது. அப்படிச்சோகம் சுமந்து சுதந்தரம்கைகூடித் ததும்பும் மனநிலையில்  சொல்லப்பட்டிருக்கிறது வாக்குமூலம்.  தன்மகனைப்பிரிந்து வாழவேண்டிய சூழல் .விவாகரத்துக்காக காலம் கழிக்கும் நிலை. அது கிடைத்துவிடத்தான் போகிறது. அதைமிக மிக நுட்பமாக “ நீதி மன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள்கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன்நினைவுகள் மட்டும்தான்“என தமயந்தி சொல்கிறார். சோகத்தின் தொய்வும் நீதிமன்றத்தீர்ப்பும் ஒருசேர இதயத்துடிப்பாகியிருப்பதை உணரமுடிகிறது. உணர உணர நமக்கும் வலி வலுவாகவே வந்துவிடுகிறது.

    பிள்ளைகளைப்பிரிதல் கொடுமை. பிரித்தல் அதனினும் கொடுமை. பிள்ளையைப்பிரிந்து எப்படியான வாழ்க்கை அமைந்தாலும் பிரிந்த பிள்ளையை நினைத்தால் எல்லாம் கரைந்த மணல்வீடாகும் என்பது உண்மை. அதற்காக ஒரு நரகத்தைச் சகிக்கவும் முடியாது. நரகத்தில் வாழ்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்கமுடியாது என்ற தெளிவான முடிவாக இருக்கலாம். பெற்றப்பிள்ளைகளை நினைத்து வாழவும்முடியாமல் சாகவும்முடியாமல் எத்துணைத் தாய்மார்கள் நரகத்தில் தம்மை அழித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை ஒருகணம் அசைபோடமுடிகிறது.

    மகனைப்பிரிந்ததாயின் வலி வலுவாகவும் சுயத்தின் துணையோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

     

     

    ” உன்கண்கள்

      மழைவரும் வானம் மாதிரி

       இருட்டுவது

       நீ பிறந்ததிலிருந்தே

        எனக்குப்பொறுக்காது.” “ என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன். என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என்மடியில் படுத்தபடியாய்சொன்னாய்” “ பால்கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன.

    ” அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு ‘ம்மா‘ என்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத்திருக்கிறது.”

    “உனக்காக இடது கையில் நான் ஹோம்வொர்க்க எழுத, அவித்த கடலை சப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத்திணிக்கும் உன் கைவிரல்களின்

    சூடு என் மனதை நிரப்புகிறது” “ அவ்வப்போது ரப்பரைவைத்து அழிக்கும்போது நெற்றிப்புருவத்தைத் தூக்கி என் உயிரை உருக்குவதுபோலொரு பார்வை பார்ப்பாய்.உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள்மட்டும்தான்“

    “உன் உள்ளங்கையில் என்னைப்பற்றின ரேகைகள் பதிந்திருக்கும்.என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திகொண்டே இருக்கும். உலகிலேயே மரணத்தண்டனையைக்காட்டிலும்கொடிய தண்டனை பிள்ளைகளைப்பிரிவதுதான்” என்ற வாக்குமூலங்களிலிருந்து எத்துணைச்சோகமானது என்பதை விளக்க என்னால் முடியவில்லை.

    ” எந்தக்குழைந்தையையும் பத்து விநாடிகளுக்குமேல் இப்போது என்னால் பார்க்கமுடியவில்லை” என்ற தமயந்தியின் கூற்று ரணமாக்கிவிடுகிறது என்னை. இது மட்டுமா?….இல்லை….இதோ ” ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும் உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்தமுகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வை சாகும் நேரமும் என் அடி வயிறு நினைத்திருக்கும்.” எப்படி நித்திரையைக்கலைக்கும் வரிகளைத்த ந்திருக்கிறார் தமயந்தி!

                               இப்படித் தாய்மையின் வருத்தத்தைப்பிழிந்து தந்திருக்கும் தமயந்தி திருமணமுறிவுக்கான காரணத்தை எங்கேயும் சொன்னதாகப்படவில்லை. ஆனாலும் ஓரிடத்தில் வரும் வாக்குமூலம் நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது ” நீ வளர்ந்தபிறகு உன்னிடம் சொல்லவேண்டுமென நான் சேமித்தவைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலதுகை நடுவிரல், தனித்தன்மைகளற்று மறத்திருந்த என் சுயம்” . கவிதை எழுதியும் சுயத்தோடு பேசியும் குடும்பவாழ்வில் ஈடுபட்டவருக்கு தனித்தன்மைகளென கருதியவைகளே கணவனுக்கு ஒவ்வாத தன்மைகளாகமாறி இல்லறத்தை இழக்க கரணங்களாகிவிட்டன என முடிவுசெய்யமுடிகிறது.

    தனித்தன்மையோடு வாழவிரும்பும் பலரின் வாழ்க்கை இப்படித்தடுமாறி சிதறும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இவர்களே துணையைத்தேடுகிறார்கள்.பின் இவர்களே முரண்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். துணையைத்தேடும்போழுது சிலவற்றை மறந்திவிட்டார்களா!. அல்லது விருப்பம்போல் நடந்து பின் ஆண்கள் ஏமாற்றி விட்டார்களா? என நினைக்க நிறைய இடமிருக்கிறது.

    ஆனாலும் தாய்க்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆசிரியர் ” கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத்தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன்” என்ற வாக்குமூலத்தை ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். கதை முழுவதும் மகனைப்பிரிந்ததாயின் துயர், தன்னிடமிருக்கும் சுயத்தின் துணையோடு வெளிப்படும் வெறுமையை ஆசிரியர் தமயந்தி சொல்லுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் மகனைப்பிரிந்த தோல்வியை அவர் அடைந்திருக்கிறார் என்பதில் நமக்கும் வலி. கதையின் வெற்றியை, கதாசிரியரின் வெற்றியை சமூகத்தின் தோல்வியாக கருதவேண்டியிருக்கிறது. சொல்லும் திறனாலும் சொல்வதிலுள்ள உண்மையாலும் சமூகத்தை உணரவைத்தலில், வாசிப்போரின் இதயத்தைக் கனக்கவைத்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

                          பிள்ளையைப்பிரியும் மனமுறிவு கூடாதென்பதை தானடைந்த மனமுறிவின்வழி வலியைக்கொடுத்து நம்மை உணரவைத்திருக்கிறார் தமயந்தி. ஒருமுறை தாயின் உடல்நலம் மோசமானபோதுமகனை பார்க்க விருபியபோது மகனைக்கடத்த தாய் தீர்மானித்ததாக எச்சரிக்கை நோட்டிசு அனுப்பப்படுகிறது. அப்போது தாய் சொல்லுகிறாள்.. “பெற்ற மகனைக்கடத்த விரும்பும் தாயாகப்பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்” என்று. தாய் பேருந்துகளில் வேலைக்குச்சென்றுவந்த பயணச்சீட்டுகளை மகன் சேகரித்து வைத்திருந்ததை நினைவுப்படுத்தித் தாய் கூறுகிறாள்  “இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்“. “நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்” திடீரென்று கனவு வருகிறது.கனவில் மரணம் வாவா என்றழைப்பதாகக்கூறும் தாய், “நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக்கடைசியாய் பார்க்கவேண்டும்” என உருக்கமாக,ஏக்கமிகு வாக்குமூலத்தை வழங்குகிறார். அன்புள்ள மகனுக்கு என்று தொடங்கி, கடிதத்தை முடிக்கும் கடைசிவரியில்  ” உன் முகம்தேடிவழியும் கண்ணோரத்துத்துளிகளுடன் அம்மா“. கண்ணீர் துளியின்றி கடந்துபோகமுடியாத கதை வாக்குமூலம் என்ற தமயந்தியின் கருத்தை முன்மொழிந்து முடிக்கிறேன்.

     

    Share
  • கென்யா பயணம் – 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நேஷனல் ஜியாகிரபிக் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆப்பிரிக்க சவானாவைப் (African Savannah) பார்த்திருக்கிறேன்.  இப்போது அதை நைரோபி நேஷனல் பார்க்கில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.  கென்யாவில் நிறைய நேஷனல் பார்க்குகள் இருக்கின்றன.  ஒரு பெரிய நகருக்கு அருகில் ஒரு வனவிலங்குகள் வாழும் காடு இருக்கிறது என்பது இந்தப் பார்க்கின் விஷேசம்.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்துவிரிந்திருக்கும், நீண்டு வளர்ந்த கோரைப் புல் மட்டுமே வளர்ந்திருக்கும் சவானாவின் ஊடே ஒரு வேனில் கச்சா ரோடுகளின் இடையே சென்றபோது பல வனவிலங்குகளைப் பார்க்க முடிந்தது.  ஆங்காங்கே சவானாவுக்கே உரிய குடை போல் வளர்ந்திருக்கும் அகேசியா (Acacia) என்னும் மரங்களையும் பார்க்க முடிந்தது.

    இந்த பார்க் நைரோபியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  இதன் ஆரம்பத்தில் அனாதை விலங்குகளின் புகலிடமாக ஒரு மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது.  பார்க்கிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் உள்ள ஒரு மிகப் பெரிய ஒற்றுமை தெளிவானது!  நாங்கள் வேனில் உள்ளே நுழைவதற்குரிய நுழைவுக் கட்டணம் வாங்கச் சென்றபோது ஏற்கனவே சிலர் அங்கு டிக்கெட் வாங்க முயன்றுகொண்டிருந்தனர்.  எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கு இருந்த இன்னொரு பார்ட்டியிடம் ஏதோ பேரம் பேசத் தொடங்கினார் டிக்கெட் கொடுப்பவர்.  உள்ளே செல்வதற்கு பெரிய வேன்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய கார்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கிறார்கள்.  மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு வாகனத்தில் செல்பவர்கள் இருந்தால் கட்டணம் அதிகம்.  கென்யாவில் எல்லா இடங்களிலுமே கென்யா நாட்டுப் பிரஜைகளுக்குக் குறைந்த ரேட்.  குழந்தைகளுக்கு இன்னும் குறைந்த ரேட்.  வெளிநாட்டுப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம்.  இன்னொரு பார்ட்டி ஆப்பிரிக்காவிலுள்ள  இன்னொரு நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள்.  இவர்களும் வெளிநாட்டுப் பயணிகள் போல்தான் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கென்று தனிச் சலுகை எதுவும் கிடையாது.  ஆனால் வெளியிலிருந்து வந்த அந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகள் ரேட்டில் டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் வினியோகிப்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாகப் பின்னால் எங்கள் ஓட்டுநர் எங்களிடம் கூறினார்.  மேலும் பெரிய காரில் வந்துவிட்டு சிறிய காருக்குரிய ரேட்டையும் கொடுத்ததாகச் சொன்னார்.

    வனவிலங்குகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த பார்க்கிற்குள் கட்டனம் செலுத்திச் செல்ல முடியும்.  ஆனால் தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது பார்க்கைச் சுற்றிக்கொண்டு செல்வதர்குப் பதில் இதன் வழியாகச் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுவாகக் குறையும் என்பதால் பார்க் காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து இதனூடே செல்கிறார்களாம்.  வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத சாபக்கேடு இருக்கிறது.

    சவானாவின் நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் சென்றதுமே ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.  ஒரு முறை யானகளைத் திருட்டுத்தனமாகக் கொன்று பல கோடி ரூபாய் பெறுமான தந்தங்களைக் கடத்திச் சென்ற ஒரு திருட்டுக் கும்பலைப் பிடித்து அவர்கள் திருடிச் சென்ற தந்தங்களை இந்த இடத்தில் வைத்து எரித்தார்களாம். அப்படி எரித்தால் தந்தத்திற்குப் பணம் கிடைக்காது என்று யானைகளைக் கொல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதன் நினைவாக மேடை போன்ற ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள்.  ஆயினும் தந்தங்கள் திருட்டுப் போவது குறையவில்லையாம்.  அதிலும் வளமடைந்து வரும் சீனாவில் தந்தத்தின் தேவை பெருகி வருவதால் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடுவதும் கூடிக்கொண்டுதான் போகிறதாம்.

    சவான்னாவின் நடுவே சில இடங்களில் தண்ணீர்க் குட்டைகள் இருக்கின்றன.  அவற்றில் தண்ணீர் குடிக்க மிருகங்கள் வருமாம்.  ஒரு குட்டையருகே ஏழெட்டு ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தோம்.  Gazelle என்னும் ஒரு வகை மான் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்தது.  கினி கோழிகள், காட்டெருமை, காண்டாமிருகம், தீக்கோழிகள்,  வரிக்குதிரை ஆகியவையும் காணக் கிடைத்தன.  சிறுத்தை, புலி போன்றவை இருட்டிய பிறகுதான் வெளியே வருமாம்.  கென்யாவின் சில பார்க்குகளில் இடம்பெயரும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலைச் சரிவிலிருந்து இறங்கியதும் ஓடும் நதிக்குள் புகுந்து கடப்பதையும் நதியில் வாழும் முதலைகளுக்கு ஒரு சில காட்டெருமைகள் இரையாவதையும் பர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்களாம்.  அங்கெல்லாம் போவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.

    ஒட்டகச் சிவிங்கிக்கென்று பார்க்கின் ஒரு மூலையில் ஒரு சரணாலாயம் இருக்கிறது. இதற்கு சிவிங்கி பார்க் (Giraffe Park) என்று பெயர். ஒட்டகச் சிவிங்கியில் இரண்டு இனங்கள் உண்டு.  ஒரு இனம் மறைந்துவருகிறது. இந்த இனத்தைக் காப்பாறுவதற்காக இந்தச் சரணாலயம் ஆரம்பிக்க்ப்பட்டது. இதை ஆரம்பித்தவரும் ஒரு ஐரோப்பியரே.  இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் வருகிறது. உள்ளே போகக் க்ட்டணம் உண்டு.  ஒரு சிறிய இடத்திற்குள்தான் நாம் போக முடியும். அதில் உயரமான ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் ஒட்டகச் சிவிங்கியின் தலை உயரத்தில் நிற்கலாம். நின்றுகொண்டு பக்கத்தில் வரும் ஒட்ட்கசிவிங்கிக்கு தீனி கொடுக்கலாம். கொடுப்பதற்கென்றே ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட உணவு உருண்டைகள் கிடைக்கின்றன.  ஒட்டகச்சிவிங்கியின் வாயைத் தொடும் அளவில் பக்கத்தில் நின்றுகொண்டு அதன் நாக்கில் உருண்டையை வைக்கலாம். அது நம் கையை நக்கும்.  ஒட்டகசிவிங்கியைப் பக்கத்தில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் யானைக் குட்டிகளின் காப்பகமும் ஒன்று (Elephant Orphange).  தந்தத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானையின் இளம் குட்டிகளை ரோந்துபோகும் வனஅதிகாரிகள் காப்பாற்றிக் இந்தக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். வியாதியால் இறந்துபோன தாயின் இளம் குட்டிகளையும் இப்படிக் காப்பாற்றுகிறார்கள்.  யானைக் கூட்டத்ததிலிருந்து பிரிந்த யானைக் குட்டி வழி தவறி, நீர் குடிக்கச் சென்று கிணற்றில் விழுந்துவிடுவதும் உண்டு. இந்தக் குட்டிகளையும் காப்பாற்றிக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் காப்பகத்தின் நோக்கம் ஐந்தாறு ஆண்டுகள் குட்டிகளைக் கண்ணும்கருத்துமாக வள்ர்த்துப் பின் காட்டில் விட்டுவிடுவது.  அங்கே அவை ஒரு யானைக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிழைத்துக்கொள்ளுமாம்.

    ஒரு ஐரோப்பிய தம்பதிக்ள் முதலில் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தார்களாம். யானை குட்டி நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் குடிக்குமாம்.  அனாதைக் குட்டிகளுக்க்கு மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதாம்.  அதனால் மனிதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் புட்டிப்பாலை பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கிறார்கள்.  இது தினமும் பதினொரு மணிக்கு நடக்கும்.  இதற்குக் குட்டிகளைக காட்டுக்குள்ளேயிருந்து கூட்டிவந்து ஒரு வளைவுக்குள் விடுவார்கள்.  இந்தக் காட்சியைப் பொதுமக்கள் சுற்றி நின்று பார்கக்லாம். இதற்குக் கட்டணம் உண்டு.  பல உல்லாசப் பயணிகள் இதைப் பார்க்கக் கூடுகிறார்கள்.  கென்யாவின் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.

    குட்டி யானைகள் வரிசையாக நடந்துவந்து பால் பாட்டில்களுக்கு முன்னால் வந்து நிற்கும் அழகு ரசிக்கத் தகுந்தது.  பாலைக் குடித்துவிட்டு ஒர் மணி நேரம் மண்ணை வாரி இறைத்தும் தண்ணீரில் இறங்கியும் விளையாடுகின்றன.  ஒவ்வொரு குட்டிக்கும் தனிப் பெயர் உண்டு; தனிக் காவலரும் உண்டு.  ஒரு யானைக் குட்டிக்கு வயது நான்கு மாதமே.  தாயை ஒரு நாளிலேயே பிரிந்துவிட்டது.  அன்றிலிருந்து அது காப்பகத்தில் வள்ர்கிறது.  தாயைப் பிரிந்த சோகம் அதன் முகத்தில் இன்னும் காணப்பட்டது.  இது பிழைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

    நாங்கள் காப்பகத்திற்குப் போன அன்று பல நாட்டுப் பயணிகள் வந்திருந்தனர். கென்யாவைச் சேர்ந்த வசதியான ஒரு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளும் பள்ளிச் சீருடை அணிந்து வந்திருந்தார்கள்.  ஒரு காவலர் ஒவ்வொரு குட்டியின் கதையையும் சொனன்னார்.  இந்தக் குட்டிகளின் பராமரிப்புச் செலவுக்கு உதவும் வகையில் யாரும் ஆண்டுக்கு ஐம்பது டாலர் செலுத்தித் தத்துஎடுத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு குட்டிக்கும் தத்துஎடுப்பவர்கள் பலர் இருப்பார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் தத்தெடுத்த குட்டியின் வளர்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.  குட்டியின் படத்தையும் அவ்வப்போது அனுப்புவார்கள்,  பார்க்க வந்த பலர் பணம் கொடுத்தார்கள்.

    இங்கு பல நினவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன.  யானைப் படம் போட்ட பைகள், T ஷர்ட்டுகள், யானை உருவங்கள் முதலியனவற்றைப் பலரும் வாங்கினார்கள்.  இந்தப் பணமும் காப்பகத்துக்குப் போகும்.

    மிருகங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.  அவற்றை மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பதை  விட அவற்றின் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது ஒரு தனி இன்பம்.  அந்த இன்பம் எனக்குக் கென்யாவில் நிறையவே கிடைத்தது.

    சரணாலயத்தின் படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/KenyaWildlife?authkey=Gv1sRgCJ67k97mpOaxQQ

    https://picasaweb.google.com/108173580006522327175/SheldrickElephantOrphanage?authkey=Gv1sRgCJn25YaJsOL3Cw

    படங்கள்: மெல்லியல்

    (தொடரும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 85 (19.08.13)

    மலர் சபாtemple

    புகார்க்காண்டம் – 09. கனாத்திறம் உரைத்த காதை

    மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல

    கொடி போன்ற இடையுடைய மகளிர்
    பகலவன் மறைந்திட்ட
    மாலைப் பொழுதினில்
    அகன்று விளங்கும் தம் வீடு எங்கிலும்
    அரும்பு அவிழ்ந்து ஒளிவீசும்
    முல்லை மலர்களை
    நெல்லுடன் தூவினர்.

    இல் உறை தெய்வத்தை வணங்குதற்பொருட்டு
    மணிவிளக்கையும் ஏற்றிவைத்தனர்.
    கணவனுடன் கூடி மகிழவென்று
    இரவுக்கென்று பொருத்தமாக
    ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டனர்.

    மாலதியின் வரலாறு

    மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்

    முன்னொரு நாளில் மாலதி எனும் ஒரு பெண்
    தன் மார்பில் சுரந்த பாலைச் சங்கில் எடுத்து
    தன் மாற்றாள் குழந்தைக்குப்  புகட்ட.
    பால் விக்கியதால் குழந்தை மரித்தது.
    இதனால் தன் கணவனும் மாற்றாளும்
    தன் மேல் அடாத பழியெல்லாம் கூறுவார்களே
    என்று எண்ணிய மாலதி தவித்தாள்.

    அக்குழந்தையை எடுத்துக்கொண்டு
    தேவ மரமாகிய கற்பகத்தரு நிற்கும் கோவில்,
    ஐராவதம் நிற்கும் கோவில்,
    அழகிய வெண்மையான மேனியுடைய தேவர் கோவில்,
    பகல் பொழுதுக்கு வாயிலான
    கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் கோவில்,
    ஊரின் காவலான தெய்வம் நிற்கும் கோவில்,
    முருகவேள் கோவில்,
    இந்திரன் படைக்கலமான வச்சிரம் நிற்கும் கோவில்,
    ஐயனார் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில்,
    இக்கோவில்கள் எங்கும் புகுந்து,

    “தெய்வங்களே! நான் உற்ற துயர் தீர்த்தருள்வீர்”
    என வேண்டி நின்றாள்.
    எந்த ஒரு தெய்வமும்
    அவளுக்காய் இரங்கவில்லை.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 22
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://www.himalayanacademy.com/media/books/danzando-con-siva_es/web/ops/xhtml/dws_spanish_r6_timeline.html

    Share
  • ரக்ஷா பந்தன்

     

    விசாலம்

    எங்கு மேடைப் பேச்சு இருந்தாலும் .சிறு கூட்டமாக இருந்தாலும் “என் அன்பு சகோதர சகோதரிகளே” என்று அழைக்கிறோம். ” India is my country .we r all brothers and sisters “என்று பள்ளி அசெம்பிளியில் சத்தியப் பிரமாணம் எடுக்கிறோம். ஆக சகோதர அன்பு என்பது அளவெடுக்க முடியாத ஒன்று. அப்படிப்பட்ட அன்பை மேலும் வெளிப்படுத்தும் நாளாக வருகிறது, ராக்கி பண்டிகை. வட நாடு முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை மிகவும் அர்த்தம் உள்ள பண்டிகை..நான் பலவருடங்களாக அங்கேயே இருந்ததால் நானும் இதைக் கொண்டாடுகிறேன் என் பாசமுள்ள சகோதரர்கள் எல்லோருக்கும் மானசீகமாக ரக்ஷைக் கட்டுகிறேன்.

    இந்த ராக்கி என்றால் என்ன? புராணக் கதை என்ன? பார்க்கலாம்…

    இது ஒரு அன்பு பந்தம் ..சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டுப் போடும் ஒரு அன்பு பாலம். இந்தப் பண்டிகை சிராவண பூர்ணிமாவில் வருகிறது இதற்கு, வயதோ, ஜாதி பேதமோ கிடையாது சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய சுபீட்சத்திற்குப் பிரார்த்தனையும் செய்கிறாள் ,பதிலுக்கு அவளுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கின்றன முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக் போகும் முன் இரத்த திலகமிட்டு,கையில் ரக்ஷையும் கட்டி “வெற்றியுடன் திரும்பி வா”என்று வழி அனுப்பி வைப்பார்கள்.இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு.மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் திருதராஷ்டிரருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்

    பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர்.விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்காக்க சத்தியம் செய்து கொடுத்ததால் வைக்குண்டத்தை விட்டு மஹாபலியிடம் வருகிறார்.சில நாட்கள் பொறுத்துப்பார்த்த மஹாலட்சுமி அந்தபிரிவைத் தாங்கமுடியாமல் மஹாவிஷ்ணுவிடம் இருக்கப்பிரியப்பட்டு தான் ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து பலியிடம் வந்தாள் . “மஹாராஜா என் கணவர் வரும் வரை நான் இங்கு தங்க அனுமதி வேண்டும் “என்று கூறியபடி அடைக்கலம் புகுந்தாள் நாட்கள் நகர்ந்தன.

    அன்று பௌர்ணமி தினம். அன்று மகாராஜாவிடம் சென்று அவரை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள்.ராக்கி கட்டிவிட்டால் அந்தச்சகோதரர் ஏதாவது வெகுமதி தருவது வழக்கம். ” சகோதரி உனக்கு என்ன வேண்டும் சொல் தருகிறேன்” ” நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும்.அது உங்கள் கையில் தான் இருக்கிறது என் கணவர் இங்கு தான் இருக்கிறார்” ‘யார் அவர் ? சொல் சகோதரி நான் உனக்கு உதவுகிறேன்.” “அவர்தான் வைகுந்ததிலிருந்து இங்கு வந்திருக்கும் மகாவிஷ்ணு. அவரை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் நான் இங்கு ஒரு சாதாரண பெண்மணிப்போல் வேஷம் தரித்து இங்கு வந்தேன் .தயவு செய்து அவரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ” மகாபலியும் இதைக்கேட்டு பரவசமாகி லட்சுமியை விஷ்ணுவுடன் சேர்த்து திரும்பவும் வைகுந்தத்திற்கு அனுப்பி வைத்தார் .அவருக்கு உதவிய திருமாலுக்காக அவர் தனது ராஜ்யத்தையே தியாகம் செய்தார்.லட்சுமி மஞ்சள் கயிறை அவர் கையில் கட்டியதால் “மஞ்சள் ராக்கி” என்ற பெயருடன் இது கொண்டாடப்படுகிறது . இது வடக்கில் நம்பும் புராணக் கதை. ராக்கி இரண்டு ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கமுடியும் சாதாரண வழவழப்பான நூலிலிருந்து ஆரம்பித்து நவரத்தினங்கள் பதித்த ராக்கி வரை விற்கப்படுகின்றன

    ஒரு சமயம் முகம்மதிய மன்னனுக்கு ராஜபுத் ராணி ராக்கி அனுப்பித்து வைத்தாள்..

    முகமதிய மன்னர் ஹுமாயூனுக்கும் சித்தூர் அரசியான ராணி கர்ணவதி ராக்கி அனுப்பித்து வைத்து அவரை சகோதரராக நினைப்பதாகவும் தனக்கு உதவும்படியும் கூறினாள்.அப்படி என்ன ஆபத்து அவளுக்கு வந்தது?குஜராத் சுல்தான் பஹதூர்ஷா சித்தூர் மேல் படையெடுத்தான்.ராணி விதவை என தெரிந்து அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் போர் தொடுத்தான்.ராணி மனமுடைந்துப்போனதால் அந்தப்போரை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லாமல் போயிற்று .அதனால் தான் தில்லியில் ஆண்டு வந்த ஹூமாயூனுக்கு ராக்கி அனுப்பித்து தன்னையும் தன் ராஜ்யத்தையும் காக்கும்படி வேண்டிக்கொண்டாள்.சக்கர்வர்த்தி ஹுமாயூனும் ராக்கியைப்பார்த்து மனம் நெகிழ்ந்து அவளுக்கு உதவ சைன்யத்தை அனுப்பி வைத்தான்.அதற்குள் பஹதூர்ஷாவின் சேனை கோட்டைக்குள் நுழைந்து விட்டது.ராணி கர்ணவதி தனக்கும் மற்றும் பல பெண்மணிகளுக்கும் அவமானம் ஏற்படகூடாது என நினைத்து தீயை வளர்த்து அதில் குதித்துவிட்டனர் .இதற்குள் ஹுமாயூன் அனுப்பிய சேனை கோட்டைக்குள் நுழைந்து பஹதூர் ஷாவின் சேனையை முறியடித்து ஷா வின் மேல் பல பெண்மணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்தனர் .பின் ஹுமாயூன் ராணி கர்ணவதியின் மகன் விக்ரமஜித் சிங்கிற்கு சித்தூர் ராஜ்ஜியத்தைக்கொடுத்து அவனை மன்னனாக்கி சகோதரி அனுப்பிய ராக்கிக்கு பரிசு கொடுத்துவிட்டார் .ராணி கர்ண்வதி சுவர்கத்திலிருந்து இதைப்பார்த்து மகிழ்ந்திருப்பாள் யமனின் தங்கை யமுனாவும் யமனுக்கு ராக்கி கட்டி விட்டாள் .யமனும் மன மகிழ்ந்து “யார் யார் சகோதரருக்கு ராக்கி கட்டி அவனது வாழ்க்கை வளத்திற்கு பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு நான் பாதுகாப்பு அளிப்பேன்” என்றானாம் இதுவும் வடக்கில் சொல்லும் கதை . மகாபாரதத்தில் ஒரு கதை . ஒரு தடவை கண்ணனின் கையில் அடிப்பட்டு இரத்தம் கசிந்தது .இதைப்பார்த்த பாஞ்சாலி ஓடி வந்து தன் தலைப்பைக்கிழித்து அடிப்பட்ட மணிக்கட்டில் கட்டிவிட்டாள்.கண்ணனும் மனம் நெகிழ்ந்து இன்று முதல் நீ என் தங்கையும் கூட .நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன்.” என்றாராம். அதே போல் பாஞ்சலியும் கண்ணனையே முழுவதும் நம்பினாள்.ராக்கிக்கு அத்தனை சக்தி .அத்தனை நம்பிக்கை . எப்போதும் ராக்கி பண்டிகையும் .பூணல் போட்டுக்கொள்ளும் ஆவணியாவட்டமும் ஒன்றாக வரும் என் இனிய வாழ்த்துகள்.

    படத்துக்கு நன்றி: http://astrobix.com/festivals_of_india/raksha_bandhan/default.aspx

     

    Share
  • தமிழ் இணையத்தில் புதிய அலை

    முனைவர் அண்ணாகண்ணன்

    (annakannan@gmail.com)

    (மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலையில் நடைபெற்ற 12ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பெற்றது)

    தமிழ் இணைய வெளியின் பரப்பும் அடர்த்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; ஆழம் கேள்விக் குறியே ஆயினும், இதன் முக்கியத்துவம் பெருகி வருகின்றது.

    இணைய இதழ்களின் பரிணாம வளர்ச்சி

    இணையப் பக்கங்கள், இணைய இதழ்களாக வளர்ந்தன; இணைய இதழ்கள், ஒற்றைத் தன்மையிலிருந்து, பன்முகத்தன்மை கொண்டவையாக மாறின. அத்துடன் நில்லாமல், வலைப்பதிவுகளும் நுண் வலைப்பதிவுகளும் பிறந்தன. இந்த நுண் வலைப்பதிவுகள் பின்னர், சமூக ஊடகங்கள் எனப் பெயர் பெற்றன. இவை, தனி மனித இதழ்கள் எனக் கருதத் தக்கவை. எழுத்து மட்டுமே பெரும்பான்மையாக இருந்த இணையத்தில், நிழற்படங்களும் ஒலி – ஒளித் தரவுகளும் பெருகத் தொடங்கி, பல்லூடக உள்ளடக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் இணைய இதழ்களை விரிவான கண்ணோட்டத்துடன் வரையறுத்தல் வேண்டும்.

    எவர் ஒருவர் உள்ளடக்கத்தை உருவாக்குகின்றாரோ, அவர் உள்ளடக்க உற்பத்தியாளர் எனக் கருதத் தக்கவர். இவற்றைப் பெறுவோர், பயனர் ஆவர். இந்த உள்ளடக்கம் வெளியாகும் இடங்கள், இணையத் தளங்களாகவோ, இணைய இதழ்களாகவோ, வலைப்பதிவுகளாகவோ, சமூக ஊடகங்களாகவோ அமைந்திருக்கலாம். பெயரளவுக்கு இவை வெவ்வேறாக இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் தொடர்ச்சியாக, இன்னொன்று தோன்றியவை. எனவே இவை அனைத்தையும் உள்ளடக்க வெளி எனக் குறிப்பிடுவது பொருந்தும்.

    தமிழ் இணையத்தில் புதிய அலை

    இந்தியாவில் உள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கை, 15 கோடியாக உள்ளது. இது, 2013 இறுதிக்குள் 18 கோடியாக வளரக் கூடும் (2013 India Internet outlook – http://techcircle.vccircle.com/2013/02/01/2013-india-internet-outlook/). மேலும், ஃபேஸ்புக் தளத்தின் இந்தியப் பயனர்களின் எண்ணிக்கை, 7.8 கோடியாக உயர்ந்துள்ளது (Facebook India Active Users Up 50% To 78M In Q1-2013 – http://www.medianama.com/2013/05/223-facebook-india-78-million-users/). இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல், ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இது, சமூக வலைத்தளங்களின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பினைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இதில் தமிழர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

    இணைய வெளியில் பல்வேறு தேசிய, அரசியல், சமூக, தொழில், கல்விப் பின்புலங்களைக் கொண்ட படைப்பாளர்களும் பயனர்களும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் உள்ளனர். இதன் நல்விளைவாக, தமிழுக்குப் புதிய புதிய ஆக்கங்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. இது வரை வெளிப்படாத புதிய பார்வைகளும் அனுபவங்களும் நுணுக்கமான கருத்துகளும் பதிவாகி வருகின்றன. அன்றாட உலக நடப்புகளும் செய்திகளும் அவற்றின் மீதான விமர்சனங்களும் உடனுக்குடன் பதிவாகின்றன.

    தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் புள்ளிகள் எனப் பலரும் இணையப் பரப்பிற்கு வந்துள்ளதோடு, தங்களுக்கெனத் தனித் தனி வலைப்பதிவுகளையும் இணையத்தளங்களையும் உருவாக்கி வருகின்றனர். இணையப் பரிச்சயம் இல்லாத மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்கள் சார்பில் யாரேனும் அவர்களின் ஆக்கங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இது, இணையத்தில் தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், தமிழ்ப் படைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

    பிரபலமானவர்கள் மட்டுமின்றி, இதுவரை வெளியுலகிற்கு வராத பெண்களும் மாணவர்களும் எளிய பணிகளில் இருப்போரும் இணைய வெளிக்கு வந்துள்ளனர். இந்த வகையில் தமிழ் இணையம், இது வரை காணாத புதிய பயனர்களையும் புதிய துறைகளையும் காணத் தொடங்கியுள்ளது. இது, பல்வகையான பரிமாணங்களுடன் நாளும் விரிந்து வருகிறது.

    இலவசம் என்னும் கவர்ச்சி

    தமிழ் இணையப் பயனர்களிடையே இவ்வளவு ஆர்வமும் துடிப்பும் எழுந்துள்ளதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, இணையத் தளங்களில் இலவசமாகக் கணக்குத் தொடங்கி, எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பு.

    வலைப்பதிவுகள் தோன்றிய காலத்தில் பயனர்கள் பலரும் அதில் தங்களுக்கெனத் தனி வலைப்பதிவுகளை உருவாக்கினர். ஒருவரே பல வலைப்பதிவுகளை உருவாக்கினார். அந்த அலை, இப்பொழுது அப்படியே சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. இணையத்திற்குப் புதிதாக அறிமுகமாகும் ஒருவர், மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவதோடு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்குத் தொடங்குகின்றனர். செல்பேசிகளில் படங்கள் எடுத்து, அவற்றை ஃபிளிக்கர் போன்ற புகைப்படத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விழியங்கள் எடுப்போர், அவற்றை யூடியூப் போன்ற விழியத் தளங்களில் வெளியிடுகின்றனர். இவ்வாறாக, எழுத்து, புகைப்படம், விழியம் ஆகிய கூறுகளில் பல்லூடக உள்ளடக்கம், இணையத்தில் பெரும் பாய்ச்சலைக் கண்டு வருகின்றது.

    புகழ் வேட்கை

    தமிழ் இணையப் பயனர்களைத் தொடர்ந்து உந்திச் செலுத்தும் முக்கிய விசைகளுள் ஒன்று,, அவர்களின் புகழ் வேட்கை. இணையத்தில் கிடைப்பது 15 நிமிடப் புகழ் என முன்பு எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டார். (“இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’ ‘இதோ பார் என் கருத்து’ ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்” – சுஜாதா – http://agaramuthala.blogspot.in/2004/08/blog-post_24.html) அது, இப்போது, ஓரிரு நிமிடங்கள் தாக்குப் பிடிப்பதே அரிதாக இருக்கிறது. ஏனெனில் நொடிக்கு நொடி, புதிய புதிய உள்ளடக்கங்கள் பெருகி வரும்போது, ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படிப்பதற்குப் பயனர்களுக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. எனவே, அந்தந்தப் படைப்பாளர்களின் புகழ் ஈட்டும் அவகாசம் குறைந்துவிடுகிறது.

    ஆயினும், தான் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே வலுப்பெறுகிறது. இதுவே, அவர்கள் இணையத்தில் மிக அதிகமான நேரத்தைச் செலவிடத் தூண்டுகிறது. நட்பையும் உறவையும் புதிய செய்திகளையும் வாய்ப்புகளையும் தேடி வருகின்ற பயனர்கள், இயல்பாகவே, புகழை விரும்புகின்றனர். தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம், நாளுக்கு நாள் உச்சமடைந்து, ஒரு கட்டத்தில் இணைய வெளிக்கு இவர்களை அடிமையாக்கிவிடுகிறது.

    பயனராகத் தன் பயணத்தைத் தொடங்கும் ஒவ்வொருவரும் தாங்களே படைப்பாளராகப் பரிணமிக்கின்றனர். இதன் மறுபக்கமாக, உள்ளடக்கம் தீர்ந்துவிடுகிற நேரத்திலும் எதையாவது வெளியிட வேண்டிய உந்துதல் இவர்களுக்குப் பிறக்கிறது. இது, ஆழமற்ற உள்ளடக்கத்துக்கு இட்டுச் செல்வதோடு, மொக்கைகளும் மரண மொக்கைகளும் பின்னூட்டக் கும்மிகளுமாக வளர்ச்சி அடைகிறது.

    இணையத்திலிருந்து அச்சுக்கு

    அச்சில் வெளியானவற்றை இணையத்தில் ஏற்றுவது, ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது. அதே நேரம், இணையத்தில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து, அச்சில் வெளியிடுவதும் பெருகி வருகிறது. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், பாக்யா உள்ளிட்ட பல்வேறு அச்சிதழ்களில் இந்தப் போக்கினைக் காணலாம். அத்துடன் இணையத்தில் எழுதத் தொடங்கிய பலரும், அச்சிதழ்களிலும் எழுதி வருகின்றனர். மேலும் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும் பலர் வெளியிடும் கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்துவதோடு, அச்சிதழ்களில் அவை செய்திகளாக இடம் பிடிக்கின்றன. இவை, இணையத்தளங்கள், சமுதாயத்தின் மீது செலுத்தும் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

    குறையும் நம்பகத்தன்மை

    இணையப் பரப்பில் வெளியாகும் ஆக்கங்கள், பெரும்பாலும் தாங்கள் முன்வைக்கும் செய்திக்கும் தகவலுக்கும் உரிய சான்றுகளை முன்வைப்பதில்லை. அந்தச் செய்தியை வழங்கிய செய்தியாளர் யார், முகாமை நிறுவனம் எது, தகவலைத் தெரிவித்தவர் யார்? போன்ற அடிப்படைத் தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே, யூகத்தின் பேரிலும் கற்பனையாகவும் செவிவழி அறிந்தவையாகவும் செய்திகள் வெளியாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை அணுகாமல், ஒரு செய்தியில் தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வதந்திகள் பரவிடவும் சமூக இயல்பு நிலை கெடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    அவதூறுகள் – தாக்குதல்கள்

    இணைய வெளியில் அவதூறுகளுக்கும் தாக்குதல்களுக்கும் அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கின்றனர். எனவே, பிரபலம் அடைய வேண்டும் என விரும்புவோரும் அடைந்த பிரபலத்தைத் தக்கவைக்க விரும்புவோரும் இவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இது, பல்வேறு குழுக்களை உருவாக்கி வருவதோடு, நேரத்தைப் பெருமளவு வீணடிப்பதாகவும் மன உளைச்சலைப் பெருக்குவதாகவும் அமைகின்றது.

    கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு

    இணையப் பரப்பில் வெளியாகும் பல்வகை ஆக்கங்களைப் பலரும் மவுனமாகத் துய்ப்பதோடு நின்றுவிடுவர். துய்த்த அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆயினும் பயனருள் சிலர், சற்று சுதந்திர உணர்வுடன் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்ச்சைக்கு உரிய ஆக்கங்களில் கார சாரமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கி, பின்னர் அது, பரவத் தொடங்குகிறது. இதன் நீட்சியாக, தரக் குறைவான, பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுமின்றி, எரித (ஸ்பாம்) மறுமொழிகளும் மிகுதியாக வருகின்றன. இதனால், இணைய வெளியில் பின்னூட்டங்கள் பெரும்பாலும் மட்டுறுத்தப் பெறுகின்றன. மேலும் பல இணையத்தளங்களில் மறுமொழி இடும் வாய்ப்பு, முடக்கப்பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், இணைய இதழ்களில் கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மை குறைந்து, வாசகர்களின் சுதந்திரம் குறைந்துவிடுகிறது. இணைய இதழ்கள், இருவழிப் பாதையாக இல்லாமல், ஒருவழிப் பாதையாகக் குறுகி வருகின்றன.

    பொதுவான இணைய இதழ்களிலும் பிறரின் வலைப்பதிவுகளிலும் பக்கங்களிலும் கருத்துகளைப் பதிவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் தளத்தில், வலைப்பதிவில், பக்கத்தில் தாம் விரும்புவதைப் பதிய முனைகின்றார். ஆனால், இங்கும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், பகிரலாம் என்ற நிலை இல்லை. பொய்யாகவும் அவதூறாகவும் அடுத்தவர் மனம் புண்படும் வகையிலும் பதிவாகின்ற உள்ளடக்கங்களை வெளியிடுவோர், வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கென இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் 66A என்ற திருத்தம் மேற்கொள்ளப்பெற்றது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து

    இணைய இதழ்களில் செய்திகள் தொடங்கி, பல்வகை படைப்பிலக்கியங்களும் புகைப்படங்களும் பல்லூடக உள்ளடக்கங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் துய்க்கும் பயனர்கள், தங்கள் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மூலத் தரவுகளை எங்கிருந்து பெற்றோம் என்ற அடிப்படைத் தகவலைக் கூட அறிவிக்காமல், அவரவர் விருப்பத்துக்கு வெளியிடுகின்றனர். சிலர், அவற்றைத் தங்கள் பெயரிலேயே வெளியிடுவதும் நிகழ்கிறது. இதனால், இணையப் படைப்பாளிகளின் அறிவுச் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    போலி அடையாளங்கள்

    இணையத்தில் பொய்யான பெயருடன், படத்துடன், போலி அடையாளத்துடன் வலம் வருவோர், அதிகரித்து வருகின்றனர். பெண்களின் பெயர்களில் / படங்களில் கணக்குத் தொடங்குவோர் பலர். திரை நட்சத்திரங்களின் பெயர்களில் உள்ள கணக்குகள் பலவும் அவர்களுடையவை அல்ல. இது தொடர்பாகப் பலரும் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பண மோசடி உள்பட பல்வேறு குற்றங்களும் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே, பயனர்கள், இத்தகைய விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் தனிப்பட்ட விவரங்களை அளிப்பதற்கு முன், அவர்கள் நம்பகமானவர்களா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    பயனர்களின் கவனத்திற்கு

    ஆண்டுதோறும் மாதம்தோறும் நாள்தோறும் பொழுதுதோறும் இணையப் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். முழு மக்கள் தொகையும் இணையத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் காலம், வெகு தூரத்தில் இல்லை. இலவச மடிக்கணினிகளும் இணையக் கட்டணங்கள் குறைப்பும் இணைய வேகம் அதிகரித்து வருவதும் சமூகத்தில் பெரும் மாற்றங்களை விரைவில் நிகழ்த்த உள்ளன.

    இந்தச் சூழ்நிலையில், இணையப் பயனர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. செய்யத் தக்கவை, செய்யத் தகாதவை ஆகியவற்றில் அவர்களுக்குத் தெளிவு தேவை. தங்கள் செயல்பாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை இணையப் பயனர்கள் அவசியம் உணர வேண்டும். இணையத்தில் தங்கள் நேரத்தை வீணடித்துவிடாமல், அதே இணையத்தைக் கொண்டு, தங்கள் நேரத்தைச் செம்மையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்க வேண்டும்.

    இத்தகைய பண்புகள் கொண்ட தமிழர்கள், தமிழ் இணையத்திற்கு அளப்பரிய பங்காற்றிட முடியும். அதன் மூலம், தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் புதிய உயரங்களை எட்ட முடியும். உலகம் முழுவதும் பெரும் மறுமலர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தோற்றுவிக்க முடியும். இவை அனைத்தும் அலை அலையாய்ப் புறப்படும் புதிய பயனர்களின் கைகளிலேயே உள்ளது.

    Share
  • ஆண்-பெண் நட்புறவு

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியைப் பிரபஞ்சன் அவர்களின் கட்டுரை (புதிய தலைமுறை (23.2.2012) யின் சில பகுதிகள் எழுப்புகின்றன. அந்தக் கேள்வியை மட்டுமே தொட்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

    ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம் காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்! ஆண்களது நட்பு உயர்வானது, நட்புக்கு ஆண்களே அதிகம் உரியவர்கள் என்பதே எனது கருத்து. நட்பைப் பொறுத்த வரையில், பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்த நண்பர்கள் என்பதாய், ‘இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்’ எனும் எனது நூல் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை ஒரு பத்திரிகை ஆசிரியர் எடுத்தெழுதியிருந்ததோடு அது பற்றிய தமது வியப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். கட்டுரையின் தொடக்கத்தில் இதைக் குறிப்பிட ஒரு பொருத்தமான காரணம் இருக்கிறது. பெண்ணுரிமைவாதி என்பதோடு, ஆண் எதிர்ப்பாளி என்பதாகவும் நான் அறியப்பட்டு வந்துள்ளதால், எப்போதும் அப்படி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பொருட்டே இது இங்கே குறிப்பிடப்படுகிறது!

    ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப் போகும் கருத்தை என்னைப்பற்றிய ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச் சொல்ல இந்தச் சுயத் தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

    ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை! விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படி யெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ‘எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்’ என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ‘ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்’ என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.

    ஒரு பெண்ணோடு பழகும் போது ‘இவள் ஒரு பெண்’ என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டு வர முடியும்!

    இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு. பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக்கொள்ளாத போதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள். தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப்பாலைச் (Opposite sex) சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக் கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது. ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும் போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும் போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்!)

    தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் – அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்து மீறல்கள் ஏற்படும் போதே, அதைப் புரிந்து கொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.

    ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்து மீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப் போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் பிரபஞ்சன் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப் போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன். தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய சிறு அத்து மீறல்களைஅவன் செய்ய மாட்டான்! தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

    எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா, அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (risk). ஆக, (100%) மிக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்! மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடே யானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

    காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் “வழிவது” பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் “வழிசல்கள்” உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

    பல்லாண்டுகள் எந்த விதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணே கூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள். சென்ற ஆண்டு “கல்கி” யில் வந்த துர்வாசரின் “உள்ளும் புறமும்” எனும் தொடர்கதை (நான் பாதியிலிருந்து முடிவுவரை படித்தது) இதைத்தான் மிக அழகாய், மிக இயல்பாய்ச் சொல்லுகிறது.

    ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன!

    பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய்! அபத்தத்திலும் அபத்தமான கருத்து!

    பெண்களோடு அவர்களைப் பழக விட்டாலும். பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான்! அதை மாற்றுவது மிக, மிக………மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி /கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்!

    நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

    வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆணகள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்து கொண்ட கொடுமையை என்ன சொல்ல! பொதுவாக இதுதான் ஆண்களின் ‘லச்சணம்’ ! இது போன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில் தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட பிரபஞ்சன் போன்ற சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

    எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர் போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும் கூட இதனை ஆதரிக்கிறார்கள் – ஆனால், வேறு உள் நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ! அதற்காக!

    நன்றி – தினமணி

    ……..

    jothigirija@live.com

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (23)

    பவள சங்கரி

    tumblr_lxsk8jNp831qfwg0ho1_500
    குணப்படுத்தும் வல்லமையாளராவோம்!

    பல நேரங்களில் நம்மை அனைவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மோடு பழகுபவர்கள் நமக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், அன்பைப் பொழிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஏங்குகிறோம். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். ஒன்று கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும். அந்த வகையில் ஒருவருக்குத் தேவையான நேரத்தில் நம் உதவிக்கரங்களை நீட்டவும் தயங்கக்கூடாது. எந்த அளவிற்கு அடுத்தவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள முடிகிறதோ, அந்த அளவிற்கே அவரும் நம்மீது நம்பிக்கை கொள்ள முடியும். இதற்காக நாம் பெரிய தியாகியாகவோ அல்லது அவரைவிட அறிவிலும், மனோவலிமையிலும் உயர்ந்து இருப்பவராகவோ அல்லது இருப்பதாக நடிப்பவராகவோ இருக்க வேண்டியத் தேவையோ இல்லை. ஆனால் அதற்காகச் சில குறுக்கு வழி முறைகளைப் பின்பற்றுவதுதான் மிகவும் சங்கடப்படுத்தக் கூடியதொரு செயலாகிவிடும். பொதுவாகவே, மனக்குழப்பத்திலோ அல்லது பிரச்சனைகளிலோ இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்வதைக்காட்டிலும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு பொறுமையுடன், சிறிது செவி கொடுத்தால் போதும். மனபாரம் குறைந்து ஆறுதல் பெற முடியும். அத்தோடு இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான நபராகவும் நினைக்கக்கூடும். தனக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் நிம்மதி கொள்ளமுடியும்.

    நம் மனதை அடக்கி வாசிக்கச் செய்யும் மற்றொரு வழி, தற்காலிகமாக நம் மனவோட்டத்தின் வேகத்தைக் குறைப்பதுதான். அதாவது அடுத்தவரைப் பற்றி அதிகமாக அலசி ஆராய்வதோ அல்லது அவரைப் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு வருவதோ என்று எதுவும் செய்யாமல் திறந்த மனதுடன் பழக ஆரம்பிக்கும்போது, நாம் உதவி செய்யும் வாய்ப்பிற்கும் தடையேற்பபடாது. அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்க முற்படும்போது, நமக்கு கால விரயம் ஆவதாக எழுகிற எண்ணம், நம்முடைய பொறுமையின்மையை வெளிக்காட்டி விடக்கூடும்.

    சுகமும், துக்கமும் புகட்டும் பாடங்கள்!

    திருமணம், குழந்தை பிறப்பு அல்லது வேறு எந்த விதமான கொண்டாட்டமோ – அல்லது பெருந்துக்கமோ, பேரிழப்போ, பெரும் விபத்தோ, நோய் அல்லது இறப்போ இப்படி எதுவாக இருந்தாலும் அதனைக் கூர்ந்து கவனித்தோமானால் உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதிலிருந்து நம் வாழ்வை வளப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு பாடம் புலப்படும்.

    சுனாமியில் சிக்கித் தவித்து எப்படியோ தப்பித்து ஒரு கூரையின் மீது அடைக்கலம் கிடைத்து, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று அறியாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த வேளையில் சட்டையின் உள்பகுதியில் இருந்த கைபேசி அதிசயமாக வேலை செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நேரத்தில் அவருக்கு என்ன பேசத் தோன்றும் என்று எண்ணிப்பாருங்கள்! அவர் தனக்கு பணம் கொடுக்க வேண்டியர்கள் பற்றியோ அல்லது பங்குச் சந்தையில் தான் செய்திருக்கும் முதலீடு பற்றியோ சிந்திப்பாரா? இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் முன்னால் நிற்க முடியும். அதுதான் ‘அன்பு’ என்பது. இதைத்தவிர வேறு எது நிற்க முடியும்? தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தோ, பணமோ, அண்டை வீட்டாரிடம் போட்ட சண்டையோ, இழந்ததோ, மீட்டதோ என எதுவும் தோன்றாது. அன்பு.. அன்பு.. என்ற இந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் ஒரு பொருட்டாகாது.

    இன்னும் ஐந்து நிமிடத்தில் உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தால் என்ன நடக்கும்? உலகில் உள்ள அத்தனை மனிதரும் உடனே போனை எடுத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அன்பைப் பொழிவதைத் தவிர வேறு என்ன செய்வார்கள். உண்மையான, கலப்படமில்லாத அந்த அன்பு வெளிப்படும் இல்லையா. திருமண நாளில் உள்ளப் பூரிப்புடன், கைகோர்த்து நடக்கும் சில தம்பதியரால் காலம் முழுவதும் அப்படியே ஏன் இருந்துவிட முடிவதில்லை . ஆரம்பத்தில் இருக்கும் நெருக்கம் போகப்போக குறைவதற்கான காரணம், அந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின் குறைபாடுதான் அல்லவா. உலகம் அழியப் போகிறது என்று தெரியவந்தால் நமக்குள் இருக்கும் அத்தனை மன வேறுபாடுகளும் நிமிடத்தில் மாறி, உண்மையான அன்பு வெளிப்பட முடியும்போது, மற்ற நேரங்களில் ஏன் அப்படி இருக்க முடிவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்தாலே கோபமெல்லாம் பறந்துவிடும் அல்லவா.

    தன் பெற்றோரின் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் அவளை சுத்தமாக விலக்கி வைத்திருந்தனர். சாலையில், வழியில் கண்டால்கூட முகம் திருப்பிச் செல்லும் அளவிற்கு கோபம் கொண்டிருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்கு மகப்பேறு உண்டானவுடன், அவளுடைய தாய்க்கு மகள் பாசம் வந்துவிட தந்தைக்குத் தெரியாமல் மகளுக்கு ஆதரவு கொடுத்தார். பேரன் பிறந்தவுடன் தாத்தாவிற்கும் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்தது. அவர்கள் இழந்தது ஐந்து ஆண்டுகால உறவை, பாசத்தை. இதை முன்பே யோசித்திருந்தால் அந்த தற்காலிக பிரிவு இருந்திருக்காதே. இதை ஏன் யோசிக்க முடியவில்லை அவர்களால்.. இதே போல கணவனைப் பிடிக்கவில்லை என்று பிரிந்துபோய் தாய் வீட்டோடு பத்து ஆண்டுகளாக இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் கேன்சர் வியாதியால் தனிமையில் கவனிக்கவும் ஆளில்லாமல் துன்பப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் அவனோடு சென்று சேர்ந்துவிட்டாள். வெகு எளிதாக இந்த இரு சம்பவங்களிலும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கோபம், வெறுப்பு, சகிக்க முடியாத தன்மை என அனைத்தும் அன்பு, பாசம் என்ற சொல்லில் அடிபட்டுப்போய்விட்டது. இவ்வளவு நாட்கள் இதெல்லாம் எங்கு ஒளிந்திருந்தது? இந்த உறவுகளின் அடிப்படையில் சாகாமல் இருந்த அந்த அன்பு விழித்துக் கொண்டிருந்தது. இதை முன்பே யோசித்திருந்தால் இந்த பிரிவு அவசியம் இல்லை என்பதுதானே உண்மை.

    ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பி வரும்போது கனமான நம் மனதில், நிலையில்லாத இந்த வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள் தோன்றுகின்றன. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒரு சகாப்தமே சில மணித்துளிகளில் கரைந்து போய்விடுகிறது. இதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் பலவிதமான சொற்களில் சொல்வதைக் கேட்க முடிகிறது. அப்படிப்பட்ட இந்த நிலையில்லாத வாழ்க்கையில், தேவையில்லாத சின்ன விசயங்களுக்கெல்லாம் காரணம் கற்பித்து, அப்போதைய மகிழ்ச்சியை, நிம்மதியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும் . அன்றைய வாழ்க்கையை ஏன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பார்க்கக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அங்கமும், நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசானாகவே இருக்கிறது. அதனை உணர்ந்து, திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு நம் அடுத்த உயரத்தை, நம் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க வேண்டியதுதான்!

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(70)

    சக்தி சக்திதாசன்

    images (2)

    old-couple-holding-hands

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகிறேன்

    திருமண பந்தம் என்பது இரு மனக்களின் தூய்மையான புரிந்துணர்தலின் வழி ஏற்படும் உறவு அவ்வுறவின் நெருக்கத்தினால் எதிர்பார்ப்பிலாத அன்பு ஒர் மகிழ்ச்சியான திருமண வாழ்விர்கு அடித்தளம் அமைக்கின்றது.

    முந்தைய காலங்களில் இத்திருமணம் என்பது பெற்றோரின் தேர்விற்கமைய உறவினர்களின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்டது.

    ஆனால் காலமாற்றத்திற்குட்பட்ட சமுதாய மாற்றம் தற்காலத்தில் பெரும்பான்மையான் திருமணங்கள் ஒரு ஆணாலும், பெண்ணாலும் “காதல்” எனும் சொல்லின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.

    இந்தக் காதல் எனும் உணர்வு ஏதோ இன்று நேற்று ஏற்பட்டதல்ல . இதிகாசங்களில் குறிப்பிட்டபடி “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” எனும் வரிகளின் அப்டி அக்காலங்களிலேயே இள நேஞ்சங்களில் உணர்வின் அடிப்படையில் எழுந்த உறவு என்பது தெட்டத் தெளிவு.

    அப்படியானல் அந்தக் காலத்துக் காதலுக்கும், இந்தக் காலக் காதலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தோமானல் காதல் எனும் பதத்தை பார்க்கும் சமுதாயத்தின் கண்ணோட்டமே என்பது தெளிவாகும்.

    சரி எதற்காக சக்தியின் இந்தக் காதல் ஆராய்ச்சி எனும் கெள்வி உங்கள் மனதை அரிக்கத் தொடங்கியிருக்குமோ ?

    கவலையை விடுங்கள் இதோ காரணத்தைக் கட்டவிழ்க்கிறேன்..

    இங்கிலாந்து ஊடகங்களில் நேற்ரைய தினம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின் தாக்கமே எனது இந்த மடலின் அடியிலுள்ள சாரம்.

    இங்கிலாந்து நாட்டில் 60 வயதுக்கும் மேலான தம்பதியினரிடையே நிகழும் விவாகரத்துக்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துள்லது என்பதுவே இந்தச் செய்தி.

    அட என்னடா இது 60 வயது என்பது ஒரு அனுபவ முதிர்ச்சி அடைந்த வயது அல்லவா ? இளவயதில் கண்டதும் காதல் எனும் மனப்பான்மையில் இருக்கும் இளவயதினர் தாக்கங்களை நன்கு பரிசீலிக்காமல் மணவாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்தி விட்டு பின்னால் அந்தத் தாக்கங்களின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மண்முறிவுக்குள்ளாகுகிறார்கள் என்பது ஓரளவிற்கு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம்.

    ஆனால் வாழ்க்கைப் பயண்த்தின் பெரும்பகுதியைக் கடந்து அனுபவம் எனும் புத்தகத்தில் பல அத்தியாயங்களைச் சேர்த்துக் கொண்ட னுதுமை எனும் படியினுள் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள் கூடவா மணமுறிவு எனும் நிகழ்வுக்கு தம்மை உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தியாகிறது.

    தாய், தந்தை, உடன் பிறந்தோர் எனும் சொந்தம் எம்மால் கேட்டு பெறப்படுவதல்ல. ஆனால் வாழ்க்கைத்துணை என்பதின் தெரிவில் நிச்சயம் எமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்தப்பந்தத்தின் பாதுகாப்பை காப்பார்றிக் கொள்வதன் கடமை ஒவ்வொருவருக்கும் அதிக அளவில் இருக்கிறது. பின் எப்படி இந்த 60 வயதில் மணமுறிவு விவகாரம் ? . . . . .

    இவ்வறிக்கையின் படி 2011இல் 60 வயதிர்கு மேலானவர்களில் விவாகரத்து செய்து கொண்டவர்களில் ஆண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 27.4 வருடங்கள் என்றும் பெண்களின் சராசரி மணவாழ்வின் நீளம் 31.9 என்றும் கணகிடப் பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுவாக விவாகரத்தின் வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டு வரும் வேளையில் இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் விவாகரத்தின் வீதம் ஆதீத வளர்ச்சியடைந்திருப்பது அதிசயமே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    இவ்வாய்வின் படி 2011இல் நடைபெற்ற 118000 விவாகரத்துக்களில் 9500 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது இது 1991 இலிருந்து 73% அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அதே சமயம் பெண்களை எடுத்துக் கொண்டால் 19991இல் 3200 , 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து 2011இல் 5800 ஆக உயர்ந்துள்ளது.

    இதன் காரணத்தை அராயும் ஆய்வாளர்கள் வாழும் காலம் மருத்துவ வசதிகளினால் நீடிக்கப்படுவது இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். 1991ம் ஆண்டில் தம்பதியரில் ஒருவர் மரணம் எய்தும் வீதம் 2011ஜ விட அதிகமாக இருப்பது அடஹ்ற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

    அது மட்டுமல்ல காலமாற்றத்தின் படி சமுதாயம் விவாகஎத்தை நோக்கிக் கொண்டிருக்கும் பார்வை மிகவும் மாறுபட்டிருப்பதனால் விவாகரத்து என்பது ஒரு பெரிய இழுக்கு அல்ல என்பதும் இதற்கு இன்னொரு காரணமாக் அமைகிறது.

    அது மட்டுமின்றி 16 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களின் வேலைவாய்ப்பு 1991ம் ஆண்டு 53% ஆக இருந்தது 2011ம் ஆண்டு 66% ஆக உயர்ந்துள்ளதினால் பெண்கல் திருமணம் எனும் பந்ததிற்கு வெளியே கணவனின் பாதுகாப்பின்றி தமது சொந்தக் காலில் நிற்கும் வசதியின் அதிகரிப்பும் இதற்கு மற்றொரு காரணம் என்கிறார்கள்.

    குழந்தைகள் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் தமது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுவதால் தம்பதியர் தம்கிடையில் இருக்கும் வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் பிள்ளைகள் வளர்ந்து தனியாக வசிக்கும் போது தம்பதியரிடையே காணப்படும் வேறுபாடுகளின் தாக்கம் அதிகரித்து அது பல இடங்களில் விவாகரத்தை நோக்கி அவர்களை இழுத்துச் செல்கிறது என்கிறார்கள் இதை ஆங்கிலத்தில் Empty nest syndrome என்கிறார்கள்.

    வாழ்வில் பெற்றோருடன் வாழும் காலத்தை விட ஒரு கணவனோடோ அன்றி மனையியோடோ வாழும் காலமே அதிகம். இவ்வாழில் மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லாது போனால் அவ்வாழ்வில் அர்த்தம் அற்றுப் போகிறது. அது தவிர பல சமயங்களில் கணவனோ அன்றி மனைவியோ மற்றவரை வாழ்வு முழுவதும் துன்புறுத்தும் செயல்களும் நடைபெறுகிறது.

    இப்படியான் சூழலில் விவாகரத்து என்பது ஓரளவு அவர்களின் அடிப்படையான மனித வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

    ஆனால் விவாகரத்து என்பதனை உள்வாங்கிக் கொள்வதில் உள்ள இலகுத்தன்மை என்னை கொஞ்சம் அசர வைக்கிரது. கருத்து வேர்றுமை, சிறு சிறு பிணக்குகள், சச்சரவு இல்லாத தம்பதியர் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். ஆனால் இதையும் தாண்டி அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையே அவர்களுக்கு வாழ்வில் ஒரு ஸ்திரமான உரவினைக் கொடுக்கிறது.

    அதனை மனதில் கொண்டு வித்தியாசங்களை ஏர்றுக் கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் வாழ்ந்தால் வெற்றிகரமான் தம்பத்தியத்தை நடத்தி முடிக்கலாம் .

    எல்லாவர்றிலும் மேலைநாடுகளின் நாகரீகத்தைப் பின்பற்றும் எமது பின்புல நாடுகள் இவ்விடயத்தில் அந்நடைமுறைய மாற்றிக் கொள்வார்களா? இல்லையானல் அவர்களும் இந்தச் சகதியினுள் சிக்கிக் கொள்வார்களா?

    விடை எதிர்காலத்தின் கைகளில் . . . .

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    07.08.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இந்துமதியுடன் சில பொன்னான மணித்துளிகள்!

    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!

    independence-day-44a

    பிரபல எழுத்தாளர் திருமதி இந்துமதி அவர்களின் சிறப்பு நேர்காணல்

    பவள சங்கரி

    ‘பெண் எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு’, என்று பலர் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்த காலங்களில், ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல், இவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், தொடர்கதைகளாகட்டும் அனைத்தையும் விருப்பத்துடன் காத்திருந்து வாசித்தவர்களும் உண்டு. இன்றும் இவருடைய படைப்புகளுக்கென்று தனிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். நல்ல சமுதாய அக்கறையுடனான சிந்தனைகளை ஊக்குவிக்கும் இவருடைய பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் இந்துமதி அவர்கள் சுதந்திர தினத்திற்காக நம் வல்லமை இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:

    indu

    1. 66 ஆண்டுகால சுதந்திர தின நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடும் பாரத தேசத்தின் மக்களுக்கு அவர்களின் உரிமையை எடுத்துச் சொல்லி அதன் வழியாகக் கிடைத்த வளர்ச்சி என்று எழுத்துத் துறை ஆற்றிய சாதனை என எதனைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

    எழுத்துத் துறையில் நான் ஆற்றிய சாதனை என்று நான் குறிப்பிட விரும்புவது அன்பு மற்றும் மனித நேயம்! அறிவு என்பது நிச்சயம் அவசியத்தேவை. அன்போடு சேர்ந்த அறிவு உடையவர்களாக இருந்தால் சமீபத்தில் தில்லியில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமை நிகழ்ந்திருக்காது. மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களையும் தம் உறவுகளைப் போன்று நேசிக்கும் மனோப்பக்குவம் இருந்திருக்குமேயானால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அறிவோட சேர்ந்த அன்பு இருந்தால் பெண் சிசுக்களுக்கு நெல் மணி போட்டு கொல்லும் நிலை வந்திருக்காது. நல்லதொரு பாரத சமுதாயம் என்றால் காந்தி கண்ட கனவு போல நடு இரவில் அத்துனை நகைகளையும் போட்டுக்கொண்டு ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் சுதந்திரம் வேண்டும் என்பதுதான். இன்று பாருங்கள் நகை கூட வேண்டாம், இரவு நேரங்களில் ஒரு பெண் தனியாக நடந்து போக முடியுமா…? அப்படி ஒரு சுதந்திரத்தைத்தாங்க நாம எதிர்பார்க்கிறோம். அன்பும், அறிவும் சேர்ந்த மனித நேயப் பண்புகள் வளர்ந்தால்தான் உண்மையான சுதந்திரத்தை நாம் அடைய முடியும்.

    2. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மொழி வளர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் தமிழ் மொழி இலக்கியங்கள் உறுதுணையாக இருந்தது என்ற காரணக்கூறுகளைப் பற்றி தாங்கள் கூற விரும்புவது:

    நிச்சயமாகங்க.. வெளி நாட்டில் வாழும் தமிழர்களும் சரி, ஈழத்தில் வாழும் சுத்தமான தமிழைச் சுவாசிக்கும், தமிழர்களும் சரி இன்றுவரை தமிழ் கூறும் நூல் வழியாகத்தான் தம் மொழியை வளர்த்துக்கொள்கிறார்கள். பத்திரிக்கைகள் அல்லது புத்தகங்கள் மூலமாகவோ தொலைக்காட்சி மூலமாகவோ மொழி சென்று அடைகிறதென்றால் அது எழுத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். ஒரு நாட்டின் மொழி வளர்ச்சிக்கு நல்ல எழுத்துக்கள் அவசியமாகிறது. கற்கால மனிதர்களிலிருந்து அத்தனை மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்கும் எழுத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. முதன் முதலில் காகிதம் கண்டுபிடித்து, எழுத்தைக் கண்டுபிடித்து எழுத ஆரம்பித்தபோதுதான் நாகரீகம் வளர ஆரம்பித்திருக்கிறது. உலகில் உள்ள அத்துனை மனிதர்களிடையேயும் மனித நேயத்தையும், அன்பையும், அறிவையும் கொண்டு சேர்ப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே. எழுத்தால்தான் பயனடைகிறார்கள், அதனால்தான் ஒருவருடன் ஒருவர் பின்னிப்பிணைகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

    3. நாட்டின் பல இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் மூலமாக பெருகிவரும் புத்தக வாசகர்களுக்கு தங்களின் செய்திகள் என்னவாக இருக்கும்?me indhu

    வாசியுங்கள். வாசிப்பதை நேசியுங்கள்! இப்ப எதுக்காகங்க என்னை வந்து பேட்டி காணறீங்க? நான் ஒரு எழுத்தாளர், என் எழுத்துக்களை நீங்க வாசித்திருப்பதாலும் என்னை இன்று சந்திக்க வருகிறீர்கள். அதற்கு காரணம் என்ன.. என்னுடைய நல்ல வாசிப்பு. என்னுடைய வாசிப்பு மட்டுமே என்னை நல்ல ஒரு எழுத்தாளராக பண்படுத்தியிருக்கிறது. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள். ஒரு ஆதி சங்கரர், ஒரு புத்தர் மட்டுமே தோன்றியிருக்கிறார்கள். நம் குழந்தைகளை டாக்டராக்க வேண்டும், தொலைத்தொடர்புத்துறை, பொறியியல் வல்லுநராக்க வேண்டும் என்று , ஆசைப்படுகிறோமே தவிர அவர்களுக்கு நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறோம். அன்று எங்கள் பள்ளிப்பருவ காலங்கள் நீதி போதனை வகுப்பு என்று இருந்தது. அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அத்துனைப் பெரிய எருமை மாடுகள் ஒரு பெண்ணிடம் அத்துனை மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காக நீதி போதனை வகுப்பில் நான்கு நல்ல செய்திகள் காதில் போட்டு வைத்தால், ஓரளவிற்காவது மனதை பக்குவப்படுத்தும். பள்ளியில் கற்றுத் தராத அந்த நல்லதொரு பாடத்தை பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். ஓடி, ஓடி சம்பாதித்து குழந்தைகளுக்கு பணத்தை மட்டும் சம்பாதித்து வைக்கும் பெற்றோர் அவர்களுக்கு நல்ல பண்பை ஊட்டி வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு குழந்தை பொறுமை உள்ளவனாக, அமைதி உள்ளவனாக, தைரியம் உள்ளவனாக வளர வேண்டும் என்றால் அவனுக்கு நல்ல போதனைகளை வழங்குங்கள்., மனப்பாடம் செய்து எழுதி மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் படிப்பு ஆகாது, அவன் சமுதாயத்தில் நல்லதொரு குடிமகனாக வளர நல்ல போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். சிந்தியுங்கள் பெற்றோர்களே.. அதற்கு நீங்கள் முதலில் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்.

    என்னோட வீட்டில் என் பையனுக்கு தீபாவளி, பொங்கல் என்றால் அவனுக்காக நாங்கள் ஒதுக்கும் பணத்தில் பெரும் பகுதியை அவன் புத்தகம் வாங்கத்தான் செலவு செய்வான். குழந்தைகளுக்குப் பிறந்தநாள் என்றால் கேக் வெட்டுகிறோம், தோரணம் கட்டுகிறோம். ஆனால் நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கத் தயங்குகிறோம். என் மகனுக்கு பண்டிகை என்றால் கொண்டாட்டமே புத்தகங்கள் வாங்குவதுதான். அதுதான் அவனுக்குப் பண்டிகை, பாயசம், பட்டாசு, புதுத்துணி என அனைத்துமே. சில காலம் முன்புகூட, தாத்தா, பாட்டிகள் குழந்தைகளுக்கு, இராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன் கதைகள் என பலதும் சொல்வார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அதுவும் குறைந்துவிட்டது. இப்போது எந்த வீட்டில் தாத்தா பாட்டிகள் இருக்காங்க.. இன்று உடைந்துபோன குடும்பங்கள்தான் அதிகமாக இருக்கிறது. நகரத்தில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு மாடு என்றால் என்னன்னு தெரிவதில்லை. பாக்கெட் பால் மட்டுமே தெரிகிறது. கடைக்குச் சென்று துணி வாங்க செலவிடும் நேரம்கூட குழந்தைகளுக்காக இன்று பல பெற்றோர் செலவிட முடிவதில்லை. இன்று அனைவரும் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் அன்பையும், பண்பையும் வளர்க்கத் தவறுகிறோம். பணம் சேர்த்து வைத்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறோம். நம் நாடு விவசாயத்திலும், ஆன்மீகத்திலும் செழித்த ஒரு நாடு. கத்தியைத் தூக்கும் நாடு அல்ல. ஆனால் இன்றைய குழந்தைகளின் போக்கு மிகவும் அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது. பகிர்தல் என்ற பண்பாடே சுத்தமாக இல்லாமல் போகிறது. நா. பார்த்தசாரதி மூலமாக என்னுள் விதைத்த விதைகள், ஒரு பூரணி மூலமாக, ஒரு அரவிந்தன் மூலமாக நல்ல பண்பாட்டை விதைத்தது. வண்ணதாசன் என்ற ஒரு மென்மையான எழுத்தாளர். பூவைக் காட்டிலும் மென்மையான எழுத்துக்கள் அவருடையது. இன்று குழந்தைகள் மற்றவர்களிடம் வம்பு செய்தால் அவர்களைக் கண்டிக்க வேண்டிய நாமே காப்பாற்ற நினைக்கிறோம். பின்பு எங்கிருந்து நல்ல பண்பாட்டை அவனுக்குள் விதைக்க முடியும்? ஒரு விசயத்தைப் பல கோணங்களில் நாம் பார்க்க முடியும். கண்ணாடியில் தெரியும் பிம்பம் போலத்தான் அது.

    4. தங்களைக் கவர்ந்த வரலாற்று நாயகியர்?

    எனக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலி நிரம்பப் பிடிக்கும். நந்தினி, குந்தவையைவிட அந்த பாத்திரப்படைப்பின் வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் ஒரு பெண்ணிற்கு அவசியம்.

    5. தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வாங்குவதிலை என்ற படைப்பாளிகளின் ஆதங்கத்துடன் தாங்கள் ஒத்துப் போகிறீர்களா?

    எனக்குத் தெரியாது. தெரியாத விசயம் பற்றி நான் பேச விரும்பவில்லை.

    6. படைப்புகளை வைத்து ஆண் எழுத்தாளர் அல்லது பெண் எழுத்தாளர் படைப்பு என்று வேறுபடுத்தி பார்க்க முடிவது நல்லதா, அது தேவையா, அல்லது அது தவிர்க்கப்பட வேண்டியதா?

    இந்த உங்களுடைய கேள்வியில் வேறுபடுகிறேன் நான். எழுத்தில் பாகுபாடு இல்லை. உதாரணமாக கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய ‘கருவாச்சி காவியத்தில்’ ஒரு பெண்ணின் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வடித்திருப்பார். குறிப்பாக பிரசவ வேதனையின் நுண்ணிய வலிகளைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார். நான் அதை வாசித்தபோது சந்தேகப்பட்டு இது வைரமுத்து எழுதியதா அல்லது பொன்மணி எழுதியதா என்று போன் செய்து கேட்டேன் என்றால் பாருங்கள். தில்லியில் எங்கேயோ ஒரு சீக்கிய இளைஞனுக்கு நேர்ந்த துன்பத்தை இந்து நாளிதழில் படித்து அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான், சிறந்த சிறுகதை என்று விருதைப் பெற்ற ‘குருத்து’. எந்த ஒரு விசயமும் நமக்கு நேரடி அனுபவம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி எழுத முடியும் என்பதில்லை. அதை நாம் உள் வாங்கும் திறமையில்தான் இருக்கிறது அந்த எழுத்து. இதில் ஆணெண்ன அல்லது பெண்ணென்ன? உடலுக்குள் இருக்கும் இருதயம், இரத்தம், மூளை, மனம் இவற்றிலெல்லாம் ஏது பேதம்? எழுத்திற்கு ஆண் உணர்ச்சி, பெண் உணர்ச்சி என்ற பேதமும் இல்லை. அவரவர்களை பாதித்த விசயங்கள் பற்றி அப்படியே எழுதுகிறோம். இதில் வேறு எந்த வேறுபாடும் எனக்குத் தோன்றவில்லை.

    நல்ல எழுத்துக்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், ஒன்று மட்டும் சத்தியம். அது பட்டுக்கோட்டையார் எழுதியது போல, ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!’ தி.ஜானகிராமன் ’அன்பே, ஆரமுதே’வில் சொல்வார், ‘மொடமொடன்னு கஞ்சி போட்டு நீ கட்டிக்கிட்டு வர காட்டன் சேலையிலேயே என்னை மருட்டறே’. இதில் உடையில் இல்லை விரைப்பு. அந்த பாத்திரப்படைப்பில் அல்லவா இருக்கிறது. இதுதான் ரோல் மாடல்! அதுதான் இன்றைய தேவையே தவிர, மற்றபடி எழுத்தில் பேதங்கள் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

    Share
  • மகான் ஸ்ரீ அரவிந்தர்

    ஷைலஜா
    —
    Aravindharஅரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது

    1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

    1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

    தந்தையின் விருப்பத்திற்காக லண்டனில் படித்தாலும் ஐசிஎஸ் தேவில் வெற்றிபெற்றால் ஆங்கிலேய்ரகளின் சம்பளத்தைவாங்கிக்கொண்டு உயர் அதிகாரியாக இருக்க விரும்பாததற்குக்காரணம் ந்ம் இந்தியாவை அடிமைப்படுத்திய. வெள்ளையர்மீது அவருக்கிருந்த கோபம் அவர்களிடமிருந்த பாரதமாதாவைக்காப்பற்றவே 1893ல் இந்தியா திரும்பினார்.

    இந்துபிரகாஷ் மற்றும் வந்தே மாதரம் என்ற பத்திரிகைகள்மூலம் விடுதலை எழுச்சியை ஏற்படுத்தினார்.

    மணமான சில நாட்களிலேயே அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பொய்கேசில் அரவிந்தரை உள்ளே தள்ளினர் பிறகு வழக்குப்பொய் என வெள்ளையர்களே விடுதலையும் செய்தனர்.

    சிறைவாசத்தில் அவருக்கு கிருஷ்ணதரிசனம் கிட்டியது. பூரண யோகத்திற்குவித்திடவே இச்சிறைவாசத்தை இறைவன் தமக்கு அமைத்ததை உணர்ந்தார்.

    மகாகவி பாரதியார் தான் புதுவையில் அரவிந்தரை வரவேற்ற முதல் தமிழர்.பகவான் அரவிந்தரின் திருப்பாதம் புதுவையில் தொட்ட நாள்DSC08198

    4 4 1910 ஆகும். அரவிந்தரின் தரிசனம் கிட்டியமாத்திரத்தில் பலகாலம் தாம் தேடிய தெய்வம் இவர்தான் என பிரான்சிலிருந்து வந்த மிர்ரா கூற , .இந்த உலகத்து அனைத்து ஈவராசிகளுக்கும் எனக்கும் தாய் மிர்ரா அல்பொன்சா ..அன்னைதான் அவரை வணங்குங்கள் வாழ்வு மேலோங்கும்” என்றார் அரவிந்தர்.

    இரண்டு மகா அவதாரப்புருஷர்கள் ஒரே இடத்திலேயேயோகம் செய்து ஒரே சமாதியிலேயே இருந்துகொண்டு உலகத்தை ரட்சித்து வருவது என்பது பாண்டிச்சேரியின் அரவிந்த ஆஸ்ரமத்தில்தான்.

    இறைவன் தனக்கென்று ஒருநாட்டைதேர்ந்தெடுத்துள்ளான் அது இந்தியத்திருநாடு என்றார் அரவிந்தர்

    சாவித்ரி என்ற மகா மந்திர நூலைப் படைத்த அரவிந்தர் 1950 டிசம்பர் 5ம்தேதி அதிகாலையில் தனது உயிரைத்தன் விருப்பத்தின்படி உடலிலிருந்து விலக்கிக்கொண்டார்.

    இதன் மூலம் சத்திய ஜீவ சக்தியை ஐந்துநாட்கள் அதாவது 111மணிநேரம் பொன்னொளியைத்தன் உடலில் வெளிப்படுத்தொக்கொண்டு இருந்தார்.

    இன்றும் சூட்சம உலகில் இருந்துகொண்டு அன்னையெனும் மகாசக்தியுடன் தனது அருளையும் அளிக்கும் மகான் அரவிந்தரின் பிறந்த நாளும் தாயகம் சுதந்திரம்பெற்ற திருநாளும் ஒன்றாக அமைந்து.ள்ளதில் வியப்பென்ன!!

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐம்பெரும் தேவியரின் அணிவகுப்பு!

    பவள சங்கரி

    DSC00600

    ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்று வழமையானதொரு நிகழ்வாக இராமல் ஒவ்வொரு ஆண்டும் அரங்க அமைப்பில் தொடங்கி, கூடுதலான எண்ணிக்கையிலான புத்தக விற்பனை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், பிரபலங்களின் சந்திப்பு என மென்மேலும் மெருகேறிக்கொண்டே போகும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் இந்த 2013ம் ஆண்டில் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாக, சென்ற 12-08-2013ல், அற்புதமான பெண் படைப்பாளிகள் ஐவர் ஒருங்கே அலங்கரிக்கும் அற்புத மேடையை அமைத்துக் கொடுத்திருக்கும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் மகத்தான சாதனை பாராட்டிற்குரியது. ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று நிரூபிக்கும் வகையில் இந்தப் பெண்கள் ஐவரும் தம் எண்ணற்ற படைப்புகள் மூலம் சமுதாயத்தில் பெரும் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர்கள். இப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தவர் மற்றொரு பெண் சாதனையாளரான, எம்.பி. என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளரும், மறைந்த மாபெரும் மனிதரான திரு சுத்தானந்தம் அவர்களின் துணைவியாருமான திருமதி வசந்தா சுத்தானந்தம் அவர்கள். தம்முடைய தலைமை உரையில் புத்தக வாசிப்பின் அருமை குறித்தும், புத்தகப்பிரியரான தம் கணவரின் நினைவுகள் குறித்தும் தங்கள் இல்லத்தில் அவர் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு இலக்கிய நூல்கள் நிறைந்த நூலகம் குறித்தும் சுவைபட விளக்கினார். ஐம்பெரும் தேவியரின் அறிமுகங்களை வெகு நேர்த்தியாக, மிகச் சிறப்பான முறையில் தமக்கே உரிய நாவன்மையுடன் நிகழ்த்தியிருந்தார், நிகழ்ச்சியின் அமைப்பாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து இரத்தினச் சுருக்கமாக, அழகாகச் சிறு உரை நிகழ்த்தியவர் யாழி நிறுவனங்களின் தலைவர், திருமதி.எழிலரசி மதிவாணன் அவர்கள்.

    jyothi

    முதலில் பேசிய மாபெரும் எழுத்தாளரான, அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தே தன் மூச்சு எனத்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது எழுத்து மட்டுமே என்று வாழ்பவர். காலங்கடந்து நிற்கும் அரியதொரு பொக்கிஷமான, சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்ற , 900 பக்கங்கள் கொண்ட சிறந்த சுதந்திர எண்ணங்களைச் சுமந்து வந்திருக்கும் ‘மணிக்கொடி‘ என்ற புதினத்தை தன் வாழ்நாளின் சாதனையாகக் கொண்டு படைத்தவர். வெகு அழகாக, நகைச்சுவை உணர்வுடன், எந்த மேடை அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் வெகு இயல்பாக நம் வீட்டுப் பெண்மணி போல, காலத்தின் அருமை கருதி மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்றார், நம் ஜோதிர்லதா கிரிஜா அம்மையார் அவர்கள்.

    அடுத்து பேசிய திருமதி விமலா ரமணி அவர்கள். இவருடைய படைப்புகளின் எண்ணிக்கைகளை திரு ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்ட போது இது எப்படி சாத்தியம் என்று மிக ஆச்சரியமாக இருந்தது. கற்பனை ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. சின்னச் சின்ன கதைகளுடன், பல மேற்கோள்களுடன் மிக அழகான மேடைப்பேச்சும் அளித்து சபையோரை வெகு எளிதாக தம் புறம் இழுத்துவிட்டார். இவருடைய பேச்சில் என்னை மிகவும் கவர்ந்தது, கவிஞர் அப்துல் ரகுமான் சொன்ன மேற்கோளான, “புத்தகம் வெறும் காகிதம்தான். ஆனால், அதைப் படிக்க படிக்க ஆயுதமாக மாறும்” என்பதும், ‘success’ என்ற ஆங்கில வார்த்தைக்கான விளக்கமும்.நல்ல சமுதாய சிந்தனைகள் வளர வேண்டுமென்றால் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். எழுத்து என்பது ஒரு அக்னி போல, ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆவது போலவும், வக்கீல் மகன் வக்கீல் ஆவது போலவும். ஒரு நடிகை மகள் நடிகை ஆவது போலவும்., ஒரு எழுத்தாளர் மகனோ அல்லது மகளோ எழுத்தாளராகி விட முடியாது. எழுத்தாளரின் வாரிசு என்பதாலேயே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிட முடியாது, அதற்கு சிந்தனை அவசியம். சிந்திக்கும் திறமை இருந்தால் மட்டுமே அவன் எழுத்தாளர் ஆக முடியும் என்றும் ஆணித்தரமாகக் கூறியதுதான்!

    அடுத்து வந்த அற்புதமான கவிஞர், இரா.மீனாட்சி அவர்கள், சாகித்ய அகாடமி விருதின் குழு உறுப்பினராக இருந்தவர், கவிக்கோ என்ற பட்டம் பெற்றவர், சிறந்த கவிஞர், படைப்பாளி என்பதையும் மீறி, தான் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதையும் நிரூபிக்கும் வகையில் பாண்டிச்சேரி ஆரோவில் குழந்தைகள் காப்பகத்தின் ‘அக்கா’ என்று போற்றப்படும் அன்பு நெஞ்சம் கொண்டவர். தம் உரை முழுவதையும் அழகான கவிதை நடையிலேயே வழங்கியவர். பழம்பெரும் படைப்பாளிகளின் கீர்த்தியை வெகு நேர்த்தியாக கவிச்சரமாகக் கோர்த்து, அற்புதமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ‘தரையில் இறங்கும் விமானம்’ தந்த தவப்புதல்வி எழுத்தாளர் திருமதி இந்துமதி இவர்தான் என்பது அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கையிலும் பிரதிபலித்தது. இயற்கையோடு ஒன்றிய எண்ணங்களைச் சுமந்து, வாழ்க்கையை மிக அழகாக இரசிக்கும் வல்லமை பெற்றவர் என்பதையும் அவர்தம் உரையின் மூலம் எளிதாக விளங்கிக் கொள்ள முடிந்தது. வாசிக்கும் வழமையே தம் மூச்சாகக் கொண்டு வாழ்பவர் என்பதைத் தம் பேச்சின் மூலம் வெகு இயல்பாக உணர்த்தியவர். ஒரு குழந்தைக்கு பாட்டி, தாத்தாவின் அருகண்மை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அற்புதமாகத் தம் பாட்டியின் நினைவலைகளுடன் பகிர்ந்து கொண்டார். தன்னைப்போலவே தன் மகனும் சிறந்த புத்தகப் பிரியர் என்பதை மிகப்பெருமையான ஒரு தாயாக தலை நிமிர்ந்து கொண்டாடிய விதம் அருமை. நல்ல சமுதாயச் சிந்தனையாளர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபித்தார், இந்த மிகச் சிறந்த படைப்பாளியான இந்துமதி அவர்கள்.

    DSC00566

    இறுதியாக அத்துனைப் பேரையும் பேச்சு மூச்சின்றி கட்டிப்போடச் செய்தவர், உலகறிந்த மிகப்பெரும் படைப்பாளியான திருமதி சிவசங்கரி அவர்கள். வ.உ.சி. பூங்கா மைதானத்தின் பிரம்மாண்ட கூட்டத்தைக் கண்ட சிவசங்கரி அவர்கள் மிகவும் பிரம்மித்துப் போனார்கள். இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு புத்தக விழாவிலும் பங்கேற்று இருந்தாலும், இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்போல இதுவரை எங்கும் பார்த்தது இல்லை என்றும் “உங்களை எழுத்தாளராகிய நான் தலைவணங்கி பாராட்டுகிறேன்” என்றும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் அவர்களின் பேச்சு பற்றியும் மிக வியந்து பாராட்டினார். இவருடைய மிக நீண்ட சாதனைப்பட்டியல் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்தம் வாழ்நாள் சாதனையாக எண்ணி, மகிழ்ந்திருப்பது, அவருடைய 16 ஆண்டுகால முழுமையான உழைப்பான, இந்திய மொழிகளின் பாலங்களாக அமைந்ததுதான். 47 நாட்கள் என்ற அவருடைய புதினம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவரே பேசியது சுவையாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய இந்த நாவலை , ஒரு கல்லூரிக் கருத்தரங்கில் வைத்து மாணவர்களின் மத்தியில் ஆய்வு செய்தது குறித்து அவர் சொன்ன தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றைய காலகட்டத்திலும் மிகப்பொருத்தமாக இருக்கக்கூடியது. அவருடைய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற புதினம் மனதை விட்டும் என்றும் அகலாத ஒரு சிறந்த சமுதாய அக்கறையுடனானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிகச் சிறந்த இந்த சமகால எழுத்தாளர்களுடன் கலந்து உரையாடியதில் உள்ளம் பூரித்ததும் உண்மை. எத்துனைப் பிரபலமாக இருந்தாலும், மிக எளிமையாகவும், அன்புடனும், மனித நேயத்துடனும் பழகுவதிலும் உள்ளம் நெகிழச் செய்தார்கள்.

    Share